காற்று 3

வளியானவள்

தென்றலாய்

வீசுகிறாள்

புயலடித்தோய்ந்த

என்

மனத்தோட்டத்தில்…

வரதராஜனின் தாய்மாமன், தன் தங்கையின் கல்யாணத்திற்கு சீரோடு சீராக திருமோகூரில் ஒரு விளை நிலத்தை எழுதிக் கொடுத்திருந்தார்.

ஆனால்,  அந்நிலத்தை அவர்கள் பராமரிக்காமல்  அப்படியே போட்டு விட்டனர். அந்த நிலத்தை பத்தின விவரம்  கூட அவர்களுக்கு துளியுமில்லை.  அந்நிலத்துக்கு பக்கத்து நிலத்துக்காரர், வரதராஜனின் அப்பா வழிச் சொந்தமான ரெங்கராஜன்,  அவரது நிலத்திற்கு மட்டுமில்லாது வரதராஜனின் நிலத்திற்கும் சேர்த்தே வரிக் கட்டி வந்தார்.

வரதராஜனின் தாயார் பேரும் தான், ரெங்கராஜனின் தாயார் பேரும் ஒன்றாக இருக்க,  அந்த நிலமும் தங்களுடையது என்றே அவரும் பராமரிப்பதிலிருந்து வரியையும் சேர்த்து கட்டும் வேலை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டிருந்தார். இதை அறியாமலே விட்டு விட்டனர் வரதராஜனின் குடும்பம்

வரதராஜன் தாய்மாமன் இறக்கும் தருவாயில் தான் இவ்விசயத்தை  அவரிடம் கூற, அதன் பின்னரே, வீட்டில் பழைய ட்ரங்க் பெட்டிக்களை அலசி, கண்டறிந்தனர் எழுதிக் கொடுத்த அந்நிலத்தின் பட்டாவை.

அதை எடுத்துக் கொண்டு வரதராஜன், ரெங்கராஜனிடம் காட்டி நிலத்தில்  உரிமை கேட்க, ரெங்கராஜன் கொதித்து போனார்.

“என்ன பேசுறேள்ண்ணா,  இந்த நிலத்தை உங்க நிலங்கறேள், இத்தனை வருசமா நான் தானே பராமரிச்சி-ண்டும் வரியும் கட்டி-ண்டும் வந்திருக்கேன். இப்போ வந்து இது எங்க நிலங்கறேளே! எப்படி தூக்கிக் குடுக்கிறத்துண்ணா ஒரு நியாயம் வேண்டாமா? ” என கோபமாக கேட்கவும்,

“இல்ல ரெங்கா, இத்தன நாளா எனக்குமே இப்படி ஒரு நிலம், அம்மா பேருல இருக்கறது தெரியாது. என் மாமா, இறக்கறச்ச சொல்லிண்டு செத்தார்… அதுக்கு அப்பறம் தான் தேடி கண்டுபிடிச்சு பட்டாவை எடுத்தேன், கோச்சுக்காத ரெங்கா, நேக்கு என்ன பண்றதுனே தெரியல…? ”  என பொறுமையாக பேசினார்.

“அண்ணா, நிலத்த எல்லாம் தர முடியாது, பேசாம,  நீங்க நிலத்த என் பேருக்கு எழுதி கொடுத்துட்டு போயிடுங்கோ…!” எனவும் இப்போது கொத்தித்து போவது வரதராஜனின் முறையானது.

“நீ பராமரிச்சுண்டு வந்தேன்ற ஒரே காரணத்துக்காக, தான் உம்ம கிட்ட அமைதியா பேசுறேன்… வரிக்கட்டி பராமரிச்சதுனால உமக்கே என் நிலத்தை தூக்கிக் கொடுக்க முடியாதமோய்…! நீ கட்டுன வரி பணத்தை வேணும்ன்னா கேட்டு வாங்கிக்கோ, அதுக்காக நிலத்தை எழுதிக் கேட்டால் எப்படிமோய்…!”  அவரும் பேச, வாய்கலப்பானது இருவருக்கும்

வீட்டிற்கு வந்து தன் மூத்த மகனிடமும் மாப்பிள்ளைகளிடம் சொல்லி வேதனைப்பட்டார், “அவா, வரி கட்டிண்டு வந்ததுக்காக எல்லாம் நம்ம நிலத்தை தூக்கி கொடுக்க முடியாது மாமா. அவாளுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து உங்க பேருல எழுதி வாங்கிடுவோம்.. ஒரு நல்ல வக்கீலா பார்த்து பேசி, அவரை வச்சு எழுதி வாங்கிடுவோம் மாமா. நீங்க கவலை படாதேள், நாங்க இருக்கோம்…” ரகுராம் ஆதரவாக பேச,

“மாமா, என் பிரண்டு மதுரை கோர்ட்ல வக்கீலாத்தான் இருக்கான்.  அவன்கிட்ட நான் பேசுறேன் மாமா. விவரமா பேசி வேலைய முடிச்சிடுவோம்…” பார்த்தசாரதியும்  தன் பக்கம் ஒத்துழைப்பு கொடுக்க,

“அப்புறம் என்னப்பா, நாளைக்கே சாரதியும் கண்ணனும் சாகரன்) போய் பேசிட்டு வரட்டும்ப்பா…! நீங்க கவலை படாதீங்க. நாங்க பார்த்துக்கிறோம். அவா கிட்ட இருந்து நிலத்தை வாங்கிறது எங்க பொறுப்பு…” சங்கரன் சொல்ல, தனது தெம்பே  தனது குடும்பமென்று  மெச்சிக் கொண்டார் வரதராஜன்.

மறுநாள் காலை விடிய, கண்ணம்மா கையாலான நெய் தோசையை உள்ளே இறக்கிக் கொண்டு இருந்தான் சாகரன்.

“கண்ணம்மா, பேஸ் பேஸ்… உன் கையால

வெஷம் கொடுத்தாலும் அமிர்தம்  என்பேன்… என்ன ருசி !என்ன ருசி! ” என்று இட்லிப் பொடியை தொட்டு  திண்ண, தோசையோடு வந்தவர் தட்டில் வைத்து விட்டு அவனது தலையில்  ஒரு குட்டு வைத்தார்.

“காத்தாலே பேசற பேச்சை பாரு! ஒழுங்கா சாப்பிடு டா”என்றவர் குட்டிய தலையையும்  தடவி விட்டு போனார்.

“கண்ணம்மா, கேனடா ல சாப்பாடு கூட நேக்கு வெஷமா தான் தெரிஞ்சது. இப்போ உன் கைப்பட்ட எல்லாமே நேக்கு அமிர்தமா தெரியுது.  செத்து போன நாக்குக்கு ஜீவன் கொடுத்த ஜீவத்தாயே போற்றி!! போற்றி!!” கண்ணம்மாவின்  கை வண்ணத்திலுருவான உணவிற்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தான் சாகரன்.

“என்ன சாகரா, நோக்கு அத்த வைச்ச இட்லிப் பொடி தான் அமிர்தமா தெரியுதா?  நான் வச்ச மல்லி சட்னியை பத்தி

மூச்சு விட மாட்டேன்றளே, நன்னா இல்லையோ…!” வெண்ணிலா சற்று முகம் வாட்டத்துடன் கேட்க, ” ஐயோ!! மன்னி அப்படி இல்ல, உங்க மல்லி சட்னி என் வாய அடைத்திருத்து. இட்லிப் பொடிக்கு ஒரு படி மேலே ” விரல்களை எல்லாம் நக்கிக் கொண்டு சாப்பிட்டவன்.

“நான் ரொம்ப கொடுத்து வச்சவன் மன்னி… அமிர்தம்  செய்றவா கையிலே தினமும் சாப்பிட்டுண்டு இருக்கேன்!”

“ஆமா சாகர நீ  ரொம்ப குடுத்து வச்சவன் தான். சந்தான லட்சுமியும் நன்னா சமைப்பாளாம். எஸ்பெஸலி நோக்கு பிடித்த வத்த குழம்பு, அமோகமா பண்ணிடுவாளாம். பொண்டாட்டி கையால சாப்பிட்டதும் எங்க சமயலை பெரும பேசுறேளானு பார்ப்போம்…” அலுத்துகொண்டு அங்கிருந்து செல்ல, சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு அதைக் கேட்டு புரையேற, சாரதி  வந்து தலையை தட்டி விட்டு தண்ணீரை கொடுத்தான்.

“தேங்க்ஸ் அத்தி…!” மடக்கென்று குடித்து சமாளித்தான்.

” ஏன் அவாள பத்தி பேசும் போது நோக்கு ஏன் புரையேறுதுடா அம்பி…?” எனக் கேட்க,  வீட்டை சுத்தி பார்த்தவன் அருகே யாருமில்லாததால். ” அத்தி, எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமே இல்ல,  ரகு அத்திம்பேர்னால, இப்பவே  வர வேண்டிய காலனை (கல்யாணம்) கொஞ்சம் தள்ளி போயிருக்கு. இதுல இருந்து  முழுசா தப்பிக்க  ஒரு வழி சொல்லுங்கோ…!”

“இதோ இருக்கே முன் பக்கம் வழி , அதோ பின் பக்கம் வழியும் இருக்கு. நேக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலேன்னு கடிதம் எழுதி வச்சிண்டு ஓடிடு!”

“விளையாடதேள் அத்தி!  நான் சீரியஸ்ஸா கேட்டுண்டு இருக்கேன்…!”

“நானும் சீரியஸ்ஸா தான் சொல்லிண்டு இருக்கேன். மிஸ்டர் மாமனார் இருக்கற  வரைக்கும் இந்த வீட்ல நோ காதல் நோ கத்தரிக்கா., புருஞ்சுகோடா அம்பி!” கண்கூடான உண்மையை கூற, அவனுக்கோ கசந்தது.

“நீ யாரையும்…” என இழுக்கும் போதே கண்ணம்மா  வெளியே வர, “வாங்க மாப்பிள்ளை, சாப்பிடுறேளா?” பணிவாக கேட்டார் ” இல்ல அத்தை சாப்பிட்டு தான் வந்தேன்…” என்றான்.

“என்ன மாப்பிள்ளை செஞ்சா என் பொண்ணு…?” சிரித்து கொண்டே கேட்க, “என்னத்த செஞ்சா உங்க பொண்ணு?!” என்று வாய்க்குள்ளே புலம்பினான்.

“என்ன மாப்பிள்ளை சொல்றேள்…?” எனவும். “ஆங்…ஒன்னில அத்தை உப்புமா செஞ்சா…!” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை…” முடித்துக் கொள்ள, வரதராஜனும் சங்கரனும் பூஜையை முடித்துக் கொண்டு  உள்ளே வந்தனர். மரியாதை நிமித்தமாக சாரதியும் சாகரனும் எழுந்து நின்றனர்.

“வாங்க மாப்பிள்ளை!” என்றவர் கண்ணம்மாவிடம் தான் கொண்டு வந்த பொருட்களை குடுத்து விட்டு அவர் கொடுத்த நீரை குடித்தார்.

“என் பிரண்ட கிட்ட பேசிட்டேன் மாமா இன்னக்கே வரச் சொன்னான். நானும் சாகரனும் போயிட்டு வந்திடுறோம் மாமா…!” எனவும்.

“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை போயிட்டு வாங்கோ…!” என்றார்.

“ஆங்… சாரதி. நம்ம பட்டாவோட நகலை தரேன்.. அதை வச்சிகோங்கோ தேவைப்படும். இருங்கோ எடுத்துட்டு வரேன்” என்று சங்கரன் உள்ளே சென்றான். ” சாகரா, மாப்பிள்ளை கூட போயி என்ன ஏதுன்னு தெளிவா பேசிடு!” என்றார்  விஷயத்தை சொல்லாமலே. அவனும் சாரதியிடம் கேட்டிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

நகலை வாங்கி கொண்டு இருவரும் மதுரை கிளை நீதி மன்றதுக்கு சென்றனர், வரும் வழியில் சாரதி நடந்ததைச் சொல்ல, தானும் சட்டக் கல்லூரிக்கு  மூன்றாண்டு சென்று வந்ததால், தெரிந்ததை சொல்லிக்

கொண்டே வந்தான் .

கோர்ட்டுக்கு வந்ததும், தன் நண்பனை அழைக்க, அவனோ வேலையில் மாட்டிக்கொண்டதாக  தன் சூழ்நிலையை எடுத்து கூறியவன், அங்கே சில வக்கீல் இருப்பதாகவும் அவர்களிடம் கேட்கும் படி சொன்னான். அருகே இருந்த போலீஸிடம் அவர்களும் விசாரிக்க, அவர் காட்டிய  திசையிலுள்ள அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கே கோப்புகளை  பார்த்தவாறு  நிழலி அமர்ந்திருந்தாள்.

கல்யாண பேச்சை ஆரம்பித்தலிருந்து அவனுக்குள் பயபந்து எம்பி மேலே வருவதை பல முறை  உணர்ந்திருக்கிறான். அதையே எண்ணி வந்தவனுக்கு அவன் வணங்கும் கடவுள் ” உன்னை கைவிட மாட்டேன் …!” என்பது போல அவளை காமித்தார்,

வறண்டு

போன

பாலைவனக்

கண்களுக்கு

பாலைவனச்

சோலைய டீ நீ !

மன தேசத்தில்

மார்கழி

பனிய டீ நீ!

கண்கள் ஒரு நிமிடம் கலங்கிப் போனது, வெகு நாட்களுக்கு பின், அவன் தன்  தேவதையைக் கண்டதும்..

அதற்கு மாறாக, அவளோ  அவனை கண்டு ஏதும் பேசாது இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு, “என்ன வேணும் உங்களுக்கு?”  எனக் அவனை தெரியாதது போல கேட்கவும்

அவனுக்கு கோபம் வந்து கத்தி விட்டான்.

“யோவ் ஐயங்கார் நிறுத்துறீயா!!! ” என்றதும் ஜன்னி வந்தாலும் ஆச்சரியத்துக்கு இல்லை. “ஐயங்கார்” அவள் மட்டுமே அழைக்கும் சிறப்பு பெயர், அதைக் மறக்காமல் அழைக்கும் போதே, மேலும் பனி மழையின் அறிகுறி!

“விட்டா பேசிட்டே போறீங்க? யாரு நீங்க? உங்ககிட்ட நான் ஏன் நடிக்கணும்…? வந்த விசயத்தை  சொல்லிட்டு சீக்கிரமா கிளம்புங்க” எனக் கத்தவும்

” ‘ ஐயங்கார் ‘ னு கூப்பிட தெரிஞ்ச உங்களுக்கு  நான் யாருனு தெரியலயா மேடம்…” நக்கலாக கேட்க,  எரிச்சல் வந்தது அவளுக்கு.

“என்ன பண்றது மறக்கணும் நினைக்கற சில விஷயங்களை மறக்க முடியல, என் நாக்குக்கு நியாபகம் சக்தி அதிகம் போல, அதான்  சொரணை பார்க்காம உங்க பேர சொல்லிடுச்சு, இனி கண்டவங்களை கூப்பிடாதேனு சொல்லி வைக்கணும்…” என்றாள்.

“நான் நோக்கு கண்டவனா?”  மூக்கு  விடைக்க, கோபமாக கேட்டான்.

“அஃப் கோர்ஸ்,  சொல்லாம கொள்ளாம  ஊர விட்டு போனவங்க எல்லாரும் எனக்கு கண்டவங்க தான்” என்றாள்.

“நிழலி, ப்ளீஸ் அதுக்கு என்கிட்ட ரீசன் இருக்கு… கொஞ்சம் காதுகொடுத்து  கேளேன்!” என இறங்கி வர, “சாரி மிஸ்டர், எனக்கு அதை எல்லாம் கேட்க டைமில்ல, வந்த விஷயத்தை சொல்லுறீங்களா? இல்ல கிளம்பிறீங்களா?” எனக் காட்டமாக கேட்டாள்.

‘சும்மா வெட்டியா பைலை பொறட்டி உக்காந்துண்டு டைமில்லையாம்…! கேஸ் வந்து கொட்டி இவ  பார்த்து கிழிச்சிடுற மாதிரி தான் வக்கனையா பேசறது!’ உள்ளுக்குள்ளே அவளை கறுவினான். இருவரையும் டாம் அண்ட் ஜெரி  பார்ப்பது போல சுவாரஸ்யமாக பார்த்தான் சாரதி.

“அத்தி, வந்த விஷயத்தை சொல்லுங்க…!” கடுகடுவென பொறிந்தான். ” சாரதியும் சொல்லி முடித்து விட்டு, நகலை கொடுக்க, அதை வாங்கி படித்தாள்.

சற்று முன் முகத்தில் கடுகு வெடிக்க  இருந்தவனின் முகம் சட்டென கனிந்து ரசனையில் இறங்கியது. வெகுநாட்களுக்கு பின் அந்த வெண்ணெய் முகத்தை ரசித்து பருகலானான். அவனது மாற்றத்தை குறித்துக் கொண்டான் சாரதி.

“ஒன்னும் பிராபலம் இல்லை.ரெண்டு தரப்பினரை வச்சு பேசினா, பிரச்சனை முடிஞ்சிடும். நான் எனக்கு தெரிஞ்ச லாயரை  ரெக்கமெண்ட் பண்றேன். அவர் வந்து  பேசி சால்வ் பண்ணிடுவார் ” என்று போன் ரிசிவரை கையிலெடுக்க, இருவரும் ஒரு வரை பார்த்துக் கொண்டு,

“அப்போ நீ நல்ல லாயர் இல்லையா? ஏன் நீ இந்தக் கேஸ் எடுத்தா தான் என்ன? ”  என மீண்டும் அவன் கோபத்தில் கேட்க,


அவளோ சாரதியை,

“சார், நான் ஆல்ரெடி ஒரு கேஸ்ல ஆஜர் ஆகிருக்கேன். அதுனால தான் வேற லாயர் பார்க்க சொல்றேன்” என்று  பொய்யுரைத்தாள்.

“பொய் சொல்லாத டீ,  என் மேல் உள்ள கோபத்துல தானே  இப்படி சொல்ற? “

“நீ என்ன வேணா நின்னச்சிக்கோ, ஆனா, என்னால் இந்தக் கேஸ் எடுக்க முடியாது…  சார் ப்ளீஸ்!” என்றாள். பல்லை கடித்தவன் ஏதோ சொல்ல  வாயெடுக்க, அவனை தடுத்த சாரதி,

“எனக்கு இங்க யாரையும் தெரியாது, உங்களை பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. ஆல்ரெடி பிரண்ட நம்பி வந்து ஏமாந்து போயிருக்கோம், நீங்களும் திரும்ப் அதையே பண்ணாதேள்… இங்க எல்லாரும் வேலைக்கு போறாவா, லீவ் எத்தனை நாளைக்கு எடுக்க, நல்ல வக்கீல் கிடைக்கலன்னா, நிலம் எங்க கைக்கு வாரது மாமா மனசொடிஞ்சு போயிருவா! கொஞ்சம் பார்த்து பண்ணுங்கோ மா”சாரதி பொறுமையா  எடுத்து சொல்ல,

அவளுக்கு தான் தர்மம் சங்கடமாக இருந்தது… நெற்றியை நீவிக் கொண்டவள் ,வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள, இருவரது முகமும் பிரகாசித்தன.

“அப்போ, எங்காத்துக்கு எப்போ வர்றேள்…!” சாகரன் கேட்க, “எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்…? பொதுவாக  ரெண்டுபெரும் வரது போல ஒரு இடம் சொல்லுங்க, இல்லேன்னா இங்க  வரதுனாலும் எனக்கு ஓ.கே  தான்” என்றாள்.

“ஏன் எங்காத்துக் வரதுக்கு நோக்கு என்ன பிரச்சனைங்கறேன்…?”சற்று  அவனது குரலெழும்ப, அவளது முறைப்பில் மீண்டும் அடங்கியது.

சாரதி, மைத்துனனின் நடவடிக்கைகளில் வித்யாசத்தை கண்டு கொஞ்சம் குழம்பி தான் போனான். ‘ இதுங்க ரெண்டு அடிச்சிகிறத பார்த்தால், ரெண்டுக்கும் ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும் போல. பலமான எஃப்பி(fb) இருக்கு, கேட்டு தெரிஞ்சுப்போம்…’ எனஎண்ணிக் கொண்டு,

“மாமாக்கு இந்த மாதிரி இடமெல்லாம் செட் ஆகாது. அப்றம் அவா, கொஞ்சம் ஆச்சாரம் பார்ப்பா! நீங்க கொஞ்சம் வீட்டுக்கு வந்தேள்ன்னா நன்னா இருக்கும்…” சாரதி கவனிவாக சொல்ல, “இல்லை ” மூன்று முறை மறுத்தவள் பின் சங்கடத்துடன்” சரி” என்று ஒப்புக் கொண்டாள்.

“நெக்ஸ்ட் பார்ட்டியும் வரணும். அவங்களும் உங்க வீட்டுக்கு வருவாங்க தானே? அவங்க கிட்ட பேசி சில விஷயங்களை க்ளாரிஃபை பண்ணனும்”எனவும் இருவரும் ஒத்துக்கொண்டனர்.

“எங்க வீடு…” என சாரதி இழுக்க,  அவளும், “தெரியும், அதே வீடு தானே  வேற வீடு மாறலையே ?” சந்தேகமாக கேட்டவளை குறும்புடன் பார்த்த சாகரன்” இல்லை. பட், பரவாயில்லை என்னை யாருன்னு கேட்டாலும் என் வீட்டை மறக்கல நீங்க!” உதட்டின் ஓரம் துளிர்ந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு  கேட்டான்.

“வந்த வேலை முடிஞ்சது  நீங்க கிளம்புறீங்களா?” கடுப்புடன் சொன்னாள்.

” உங்க ஃபீஸ்?” சாரதி இழுக்க, ” கேஸ் முடியட்டும் நீங்க என்ன பார்த்து கொடுக்கறத குடுங்க …!” என்று புன்னகைத்தாள்.

“நன்றி மா”  என்றவன் வணக்கம் வைத்து விடைப்பெற, அவளும் வணக்கம் வைத்தாள். தன் கண்ணிரண்டையும் சூழல விட்டவன், யோசனையுடன் ” அத்தி, இங்க ஏதோ பிரண்ட பார்க்கணும்  சொன்னேளே, நீங்க பார்த்துண்டு  கிளம்புங்கோ நான் இவா கிட்ட பேசணும், பேசிண்டு வந்திடுறேன் …!”என்றான்.

“அத்திம்பேர், இவன் கிட்ட  பேச, எனக்கு எதுவுமில்லை இவன கூட்டுட்டு போங்க…!” என்று அவளும் கத்த, ‘உனக்குமா நான் அத்திம்பேர்…?’ எனக் எண்ணிக் கொண்டவன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு நேக்கு எதுவும் தெரியாது  என்னை ஆள விடுங்கோ…!” என்று அவன் சென்று விட, சாரதி செல்வதை பார்த்தவன், தன்  பணியை செய்யலானான்.வேற என்ன கெஞ்சுவது தான்.

“நிழலி, ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்றதையும் கேளேன். நான் ஏன் சொல்லாம போனேன்னு வேலிட் ரீசன் இருக்கு. நான் சொல்லாம போனது  தப்புதான். என்னோட சிட்டுவேஷனை கேட்டு கோபப்படுறதுனா படு! ஆனா, ப்ளீஸ் பேசாம போகாத,  ஐ மிஸ் மை கேரள். மிஸ் மை பிரண்ட்…” உணர்ச்சி வசத்தில் தொண்டை அடைக்க பேசி அவள் மனதை கனிய வைத்தான்.

” ஓகே வா,  காஃபி சாப் போலாம்”என்றாள். “தேங்கியூ நிழலி!!” எனக் கூறி சிரிக்க, அவள் முறைப்பில் வாய்க்கு ஜிப் போட்டான்.

இருவரும் அருகே உள்ள உணவகத்திற்குள்  சென்று “ரெண்டு காஃபி” என சொல்லிவிட்டு அமர்ந்தனர்.

“எனக்கு கேனடா போக இஷ்டம் இல்லை, என் தோப்பனார் தான் அவசர அவசரமா என்னை அனுப்பி வைத்தார். இதுவரைக்கும் எனக்கு காரணம் புரியவே இல்ல… அன்னைக்கு கடைசியா உன்கிட்ட பேசிட்டு போன பிறகு, அப்பாக்கு முடியல அண்ணா சொல்லி வர சொன்னா, நானும் போனேன். நீ வெளிநாட்டுக்கு  போயே ஆகணும் வற்புறுத்தின்னா,  என்னால தட்ட முடியலை … உன்கிட்ட எப்படியாவது நான் ஊருக்கு போறதை கன்வே பண்ணணும் முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல,  எக்ஸாம் மட்டும் தான் நான் எழுதி பாஸ் பண்ணினேன். மத்த எல்லாம் வேலையும் அவாளே பார்த்து ரெண்டு நாள்ல அனுப்பி வச்சிட்டா…!

நானும் கேனடா வந்து செட்டில் ஆனதும்  உனக்கு தான் போன் பண்ணினேன். சுவிட்ச் ஆப் வந்தது. வீட்ல இருக்கறவங்களுக்கு அடிச்சு பார்த்தேன் ரெஸ்பான்ஸ் இல்ல பிரண்ட்ஸ் மூலமா கேட்டு பார்த்தேன் அவங்களுக்கு தெரியலனு சொல்லிட்டாங்க.நானும் சோசியல் மீடியா முழுக்க  உன்னை தேடிப் பார்த்துட்டேன் நோ யூஸ்…  என்னாச்சு உனக்கு ?எனி பிரபலம்…?”

அவளிடன் அமைதியே பதிலாக இருக்க, அவளது அமைதி அவனுக்குப் பயத்தை தந்தது “ஏன் அமைதியா இருக்க நிழலி,. சொல்லு என்ன நடந்தது…?”

அவளும் சொல்ல வாயெடுக்க, அவளது அலைபேசி அலறியது, எடுத்து பேசியவள் “இதோ வரேன்” என்று போனை வைத்து விட்டு எழுந்தவள், ” சாகரா,  எனக்கு  முக்கியமான வேலை இருக்கு… நாளைக்கு பார்க்கலாம். இது என்னோட விசிட்டிங் கார்ட் அதுலே  என்னோட ஆபீஸியல் நம்பருக்கு கான்டெக் பண்ணு” மேசையில் வைத்து கையெடுக்கும் முன் அவளது கையைப் பற்றி இருந்தான்.

அவன் கைப்பற்றியதும் வெடுக்கென இழுத்து கொள்ள, அவமானத்தில்  அவன் முகம் கூம்பி போக “சாரி” என்றான்.

அவளுக்கும் ஏதோ போல இருந்தது… நிலமையை மாற்ற எண்ணி, ” நான் ஸ்கூலுக்குப் போகணும், நாளைக்கு பேசலாம்” என்று செல்ல எத்தனித்தவளை தடுத்து, “நானும் வரேன்” என்றான்.

அவனையும் அழைத்துக் கொண்டு  பள்ளிக்குச் சென்றாள். வரும் வழியெல்லாம்  இருவரும் அமைதியை மட்டுமே கடைப்பிடித்தனர்.

‘அவள் என் நிழலி தான் மாறவில்லை… ஆனால் மாறிவிட்டாள்…!” அந்த மாற்றத்தை ஏற்க முயன்றான்.

பள்ளி வளாகத்தில் இருவரும் நடக்க, ” இங்க எதுக்கு வந்திருக்கோம்?”

“என் பொண்ணு இங்க தான் படிக்கறா?” என்றதும் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்திப் பின் இயங்கியது இதயம்.

“வாட் உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?”முற்றிலும் குரல் உடைந்து உள்ளே போயிருந்தது.

“இல்ல…” என்றவள் முன்னே நடக்க, அவளை தொடர்ந்தவன், ” அப்போ இங்க படிக்கறது யாரு…? “

“என் பொண்ணு நான் பெத்த பொண்ணு…” என்றவள், ‘அவன் என்ன நினைப்பான் என்றெல்லாம் நினைக்காமல்”என் பொண்ணு” ‘ என்று தலை நிமிர்ந்து மொழிந்து விட்டு முன்னே செல்பவளைத் தொடர்ந்தவன் அதிதியை கண்டு மேலும் குழம்பிப் போய் நின்றான்.

காற்று வீசும்.