காற்று 20

இன்று தான் முதல் நாள் கல்லூரிக்கு வந்தது போல இருந்தாலும், ஒரு மாதம் முடிந்ததை நினைத்தால்,  நாட்கள் தன் வேகத்தை கூட்டிச் செல்வதை எண்ணி வியப்பாகத் தான் இருக்கிறது. 

இந்த ஒரு மாதத்தில், சாகரன் நிழலியின் நட்பு கொஞ்சம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது ‘ ங்க’ என்ற மரியாதையில் இருந்து பெயர் சொல்லி அழைக்க பழகி இருந்தான் சாகரன். அவள் தான்  அவனுக்கு அதை வழமையாக்கினாள்.

என்ன தான் நண்பர்களென ஆனாலும் எல்லாவற்றையும் பகிரும் அளவிற்கு இன்னும்  நெருக்கம் அவர்களிடத்தில் இல்லை. இன்னும் தன் காதலைக் கூட சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறாள். சாகரனும்  ஆதர்ஷன், அவனது நண்பர்களும் நிழலியின் நண்பர்கள் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறான்.

அந்த எண்ணம் தவறென சுட்டிக் காட்ட, அந்த நாளும் வந்தது. அன்று கல்லூரியில் முக்கிய பங்காளர் ஒருவர் இறந்து போனாரென்று அரைநாளிலே மாணர்வகளை கல்லூரியிலிருந்து அனுப்பிவிட்டனர்.

பாதியில் கல்லூரி முடிந்ததை
எண்ணி மகிழ்ந்தவர்கள்,  வெளியே செல்ல திட்ட மிட்டனர். ஆதர்ஷனின் நண்பர்களும் படத்திற்கு செல்ல முடிவு செய்தவர்கள், முதலில் வைஷ்ணவியிடம் கேட்க,  அவளும் வருவதாக சொல்ல, ஆதர்ஷன் நிழலியை அழைக்க , அவளோ வர மறுத்தாள். அன்று அவளுக்கு தலைவலி வேற அவளை படுத்த, தந்தைக்கு அழைத்தும் அவளது அழைப்பை ஏற்க வில்லை.

தலைவலியையும் தந்தை அழைப்பு எடுக்காததை சொல்லியும் அவன் கேட்க வில்லை. ” என்ன நிழலி முதல் தடவை கூப்பிடுறேன் எனக்காக வர கூடாதா? ப்ளீஸ் டி ” எனக் கெஞ்ச,

“தர்ஷ், ப்ளீஸ் எனக்கு தலை ரொம்ப வலிக்குது, அண்ட் அப்பா போனை எடுக்க மாட்றார், நான் என்ன பண்ணட்டும் சொல்லு?அப்பா கிட்ட சொல்லாம நான் வர  மாட்டேன். நீ உன் பிரண்ட்ஸ் கூட போயிட்டுவா !” என்றாள்.

“அங்கில் கிட்ட நான் பேசிக்கிறேன் டி, நீ வா, மாத்திரை கூட வாங்கி தரேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வா. நீயும் என் கூட வரணும்  நான் ஆசைப்படுறேன் வா டி” என்று  கெஞ்ச,

“ப்ளீஸ் தர்ஷ் ஐ காண்ட். என்னால் முடியாது தலையில பாரம் வச்சது போல இருக்கு. போய் தூங்கினாத்தான் சரியாகும்.தலைவலியோட ஏசில என்னால் உட்கார முடியாது. இன்னும் கொஞ்சம் அதிகமாகும். புருஞ்சுக்கோடா !” அவள் தன் பக்கமிருக்கும் காரணங்களை சொல்லியும் கேட்காதவன், மீண்டும் மீண்டும் அவளை வற்புறுத்தினான்.

நிழலிக்கு தெரியும் ஆதர்ஷன் வற்புறுத்தும் ஆள் இல்லை என்று, அவன் இவ்வாறு வற்புறுத்த,  நிச்சயம் இதற்கு  பின்னால் யாரோ இருந்து தூண்டி விட்டிருக்க வேண்டும் என்றெண்ணினாள். அவள் எண்ணியப்படி,  வைஷு தான் அவனை தூண்டி விட்டாள்.

‘நம்ம மட்டும் போவோம் ஆதர்ஷ், உன் லவ்வர கூப்பிடாத, அவ  எப்படியும் வர மாட்டாள். நீ கூப்டு,  அசிங்கப்பட்டுக்காத, அவளுக்கு தான் நம்ம கேங்க் பிடிக்காதே !” எனஅலுத்து கொள்ள,
“எனக்காக வருவா வைஷு !” என்றான்.

” பார்ப்போம் ” என்றாள் நக்கலாக, ஆனால் அவள் எண்ணிய படியே நிழலியும் வர மறுக்க, வைஷு விடம் தோற்க கூடாது என்று முடிவோடு இருந்தவன், அவளது வலியை கூட  புரிந்து கொள்ளாமல் அவளிடம் வீம்பு பண்ணி சம்மதிக்க வைக்க முயற்சி செய்தான்.

அவளோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, ஆதர்ஷனிடம் பிடிக்காத ஒன்று இது தான். நண்பர்கள் அவனை தூண்டி விட்டு குளிர்காய எண்ணுவதை கூட அறியாமல் அவர்களிடம் தன்னை நிரூபிக்க  எண்ணி இவ்வாறு செய்வான். இதை மாற்ற  இரண்டு முறை சொல்லி பார்த்து விட்டாள், அதெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதுவதை போல தான் அவன் அதை  கேட்டு கொள்ளவில்லை . இது  தான் அவனழிவுக்கு காரணமாக போகிறது என்று அவனும் அறிந்திருக்க வில்லை.

அவள் கைகளை பற்றி வம்பு செய்ய ஆரம்பித்தான்.”  முதல் தடவை கூப்பிடுறேன் வந்தா தான் என்ன டி ? ரொம்ப தான் பண்ற? எனக்கு தெரியாது நீ என் கூட வர?”என்று அவளை எப்படியாவது வர வைக்க  தனது எல்லையை மீற, கடுப்பான சாகரன், ” ஹலோ  மிஸ்டர் ஆதர்ஷன், முதல்ல அவ கையை விடுங்கோ ” என்றான் கோபமாக

“ஏய் யார் நீ ? நீ ஏன் எங்களுக்குள்ள வர? இது எனக்கும் அவளுக்கும் உள்ள பிரச்சினை. நீ தலையிடாத போயிடு !” என்றான் கோபத்தில்.

“சாரி, இது உங்க ரெண்டு போரோடு பிரச்சினையா இருக்கலாம். ஆனா,  நீங்க பொது இடத்துல நின்னுண்டு பேசுறேள்னு மறந்திடாதேள். நிழலிக்கு ஹெல்த் இஸூ, அதான் அவா வரமாட்டேன் சொல்றா,  அதை கூட புருஞ்சுக்காம, அவா கிட்ட வம்பு பண்றேள். முதல் அவா கைய  விடுங்கோ ! இல்ல பிரின்சி கிட்ட போவேன். விடுங்கோ கைய” என்றான் சன்னமாக,

சாதுவும் காடு கொள்ளாத அளவுக்கு கோபம் கொள்ளும் தனக்கென நேரும் போது. அதுபோல தான் சாகரனும். தன்னை அவமானம் படுத்திய போது அமைதியாக இருந்தவன், இன்று நிழலிக்காக சீரும் சாகரனை முதன் முறையாக அதிர்ச்சியாக பார்த்தாள்.

அவளது கையை பற்றி, ” வா நிழலி போலாம்”  அங்கிருந்து அழைத்து சென்று விட்டான். ஆதர்ஷனுக்கு தான் நண்பர்களின் முன்னிலையில் அவமானமாக போனது.தன் காதலியை எவனோ  ஒருவன் கைபிடித்து அழைத்து  செல்வதை கண்டால்  குளிர்ந்தா போகும்,  தகதகவென உள்ளே பற்றி எரிய மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாக வைஷுவோ,”ஆதர்ஷ், எனக்கென்னமோ உன் காதல் இந்த வருஷத்துகுள்ள ஊத்திக்கும், ஆள் வேற அழகா இருக்கான் பார்த்துக்க?” என்றளை தீப்பார்வை பார்க்க,  அங்கிருந்து சென்று விட்டாள்.

கோபமாக கல்லூரி வாகனமருகே நிழலியை இழுத்து வந்தவன், ” நோக்கு என்னா தான் ஆச்சு நிழலி? அவா உன் கையை பிடிச்சி வம்பு பண்றா. நீயும் அவா கிட்ட கெஞ்சிட்டு இருக்க? ஒரு அடி குடுக்க வேணாமா? இடியட், தலைவலிக்கிது சொல்ற, அதுகூட கேட்காமல் பிடித்த பிடிலே இருக்கா. இவா எல்லாம் மனுஷன் தானா?” பல்லை கடித்து கொண்டு  கோபப்பட, 

‘ஐயோ, அவன் என் லவ்வர்னு, எப்படி சொல்வேன் இவன் கிட்ட?’ என உள்ளுக்குள்ளே  புலம்பியவள், அவனிடம் சொல்ல வாயெடுக்க, சரியாக
அவளது அலைபேசி அடித்தது.

அவளது தந்தைதான் ‘ வாசலில் காத்திருப்பதாக’ சொல்லி வைத்துவிட, “சாகரா, அப்பா வந்துட்டாராம்,  நாளைக்கு பார்க்கலாம் நீ பார்த்து போ !” என்றவள் கல்லூரி வாசலை நோக்கி சென்றாள்.

ஆதர்ஷனுக்கும் ” அப்பா வந்துட்டார்,நான் வீட்டுக்கு போறேன்”  என்ற குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காரில் அமர்ந்து இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

“என்னடா ஆச்சு?”

“தலைவலிக்கிது ப்பா”என்றாள்.
“வீட்டுக்கு போனதும் டேபிளட் போட்டு தூங்குமா எல்லாம் சரியாகிடும்” என்றவர் காரை எடுத்தார்.

கல்லூரியிலிருந்து வினோதனுக்கு குறுஞ்செய்தி வந்திருக்க, அவரும் வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துவிட்டார். சாகரனோ கல்லூரி வாகனத்தில் செல்ல. ஆதர்ஷனோ கோபமாக வீட்டிற்கு சென்றான்.

தலைவலி என்றதும் மகளை உடனிருந்து பார்த்துக் கொண்ட வினோதன், அவள் உறங்கிய பின்பே அறையை விட்டு வெளியே வந்தார். மாலை வரை உறங்கியவள், ஆறு மணி போல தான் கண் விழித்தாள். விழித்ததும் அலறி அணைந்த  அலைபேசியை எடுத்து பார்க்க, ஆதர்ஷன் தான் அழைத்திருந்தான்.

மீண்டும் போன் அலற எடுத்து காதில் வைத்தவள், “சொல்லு” என்றாள். அங்கே அமைதி மட்டுமே நிலவ, அவன் தவறை உணர்ந்து தான்அழைத்திருகிறான்  என்று புரிந்தது.

“ஏன் டா என் நிலமைய புருஞ்சிக்கவே மாட்டியா?  தலைவலினு சொல்றேன்,  வந்தே ஆகணும் அடம்பிடிக்கற? மாத்திரை போட்டு இப்போ வரைக்கும் தூங்கிட்டு தான் இருந்தேன். இப்போ தான் எழுந்தேன். அங்க வந்திருந்தா, மேலும் எனக்கு தலைவலி தான் வந்திருக்கும். போதாத குறைக்கு எங்க அம்மா தலைவலில ஏன் போனனு கேட்டு திட்டிருப்பாங்க. இதுக்கு பெட்டர் வீட்டுல இருக்கலாம் நினைச்சேன் இது தப்பா?” எனக் கேட்க, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன்,  “சாரி” என்றான்.

“இங்க புரிஞ்சுக்காம பேசிட்டு அப்பறம் சாரி வந்து நிக்காத சொல்லிருக்கேன் உன்கிட்ட,  உன் பிரண்ட்ஸ்க்காக என்னை எப்பயும் கஷ்டப்படுத்தனும் நினைக்காத ! என் சூழ்நிலைய புருஞ்சுக்கோ தர்ஷ்” என்றாள் அதற்கும் அமைதியாக இருந்தான்.

“ஏன் அமைதியா இருக்க?”

“சாரி நிழு,  உன்னை ஃபோர்ஸ்  பண்ணது தப்பு தான். வைஷு உன்னை கூப்பிடாத சொன்னாள். கூப்பிட்டாலும் அவ வர மாட்டாள். நீ அசிங்க பட்டு நிக்காத சொன்னாள். அதான் நான் கூப்பிட்டா நீ வருவன்னு அவளுக்கு காட்டத்தான் உன்னை ஃபோர்ஸ் பண்ணேன்” என்றவன் இழுவையிலே அவன் தவறை புரிந்திருக்கிறான் என்று புரிந்தாலும், அவளால் ஏற்க முடியவில்லை,

‘அவர்கள் தூண்டி விட, இப்படி தான் என்னிடம் நடந்து கொள்வாயா? ‘ என வாய் வரை வந்த அக்கேள்வியை அடக்கி கொண்டவள், அமைதியாக இருந்தாள்.

“நிழலி” என்றான்.

“ம்ம்…”

“எனக்கு சாகரனை பிடிக்கல, ஏன் நான் உன் கையை பிடிக்க கூடாதா?  எகிர்றான், என் முன்னாடி உன் கைய வேற பிடிச்சுட்டு கூட்டிட்டு போறான். நீயும் அமைதியா, அவன் கூட போற, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? ப்ளீஸ் நிழு அவன் பிரண்ட்ஷிப்  உனக்கு வேணாம் 
நான் இருக்கும் போது உனக்கேன் அவன்? அவனால நமக்குள்ள சண்டை வரும் . ப்ளீஸ் அவன் கிட்ட நீ பேசாத,  நான் இருக்கேன், நாம லவ்வர்ஸாகறத்துக்கு முன்னாடி நல்ல பிரண்ட்ஸா தான இருந்தோம், அதே போல ஏன் இருக்கக் கூடாது?” ஆத்திரத்தில் ஆரம்பித்து கெஞ்சலாக  கேட்க,

“சரி”  என்று அவளும் பட்டென்று ஒத்துக் கொள்ள, ஆதர்ஷனோ இன்ப அதிர்ச்சியில்”நிழு” என்றான். “என்ன தர்ஷ்?”

“நீ ஒத்துக் கிட்டீயா?”

“ம்ம்” என்றாள்.

“ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.இனி நீ எங்கிட்ட மட்டும் தான் பேசணும்.நாம காலேஜ்லையும் சேர்ந்து இருக்கலாம் சேர்ந்து படிக்கலாம், சாப்பிடலாம்.. பஸ் ல போக வேணாம்,  நான் உன்னை ட்ராப் பண்றேன் நிழு” என்று தன் பேச்சை  கேட்ட  சந்தோஷத்தில் அவன் சிறகை விரித்து பறக்க, அவன் இறகை பிய்த்து தரையில் எறிவது போல  அடுத்த கேள்வியை  கேட்டுவைத்தாள்.

“அப்போ, நீ என் கூட மட்டும் தான இருப்ப ! என் கூட மட்டும் தான சாப்பிடுவ , பேசுவ, படிப்ப, உன் பிரண்ட் வைஷு கிட்ட கூட நீ பேச மாட்ட தான?” எனக் கேட்டு ஒரு நிமிடம் அவனை ஜெர்காக்கினாள்.

“நிழு நீ சொல்றது புரியல!” என்றான்.

“ம்ம், எனக்கு நீ இருக்கும் போது சாகரனோட  பிரண்ட்ஷிப் எதுக்கு சொன்னேல,  அதுபோல நான் இருக்கும் போது எதுக்கு வைஷுவும் உன் பிரண்ட்ஸும்? அவங்க வேணாம் உனக்கு நானே போதும். என்கிட்ட மட்டும் பேசு , என் கூட மட்டும் சாப்பிடு , என் கூட படி , என்னை வீட்ல ட்ராப் பண்ணு எனக்கு ஓ.கே தான் உனக்கு ஓகே தான?” அங்கு கோபம் சுர்ரென ஏறுவது அவன் விடும் மூச்சு காற்றில் அறிந்து கொண்டாள்.

“என்ன விளையாடுறீயா நிழு?என் பிரண்ட்ஸ் கூட நான் பேச கூடாதா? நானும் வைஷு சைலட் குட் பிரண்ட்ஸ் தெரியும் தான உனக்கு இப்ப வந்து பேசக் கூடாதுனு சொல்ற ?அவ கிட்ட எப்படி பேசாம இருக்க முடியும்?”

“இப்போ நான்  உன் கூட இருக்கும் போது அவ எதுக்கு உனக்கு? அவளால நமக்குள்ள சண்டை தான் வருது. நாம லவ்வர்ஸ் ஆகறத்துக்கு முன்னாடி நல்ல பிரண்ட்ஸ்ஸா தான இருந்தோம் இப்பையும் இருப்போம். அவங்க  எதுக்கு நான் இருக்கும் போது?” அவன் பேசிய வார்த்தைகளை அப்படியே பேச ,அவள் ஒத்துக்கொண்டதற்கு காரணம் இப்போது தான் அவனுக்கு விளங்கியது.

“என்ன டி சாகரனோட பிரண்ட்ஸிப் வேணாம் சொன்னதுக்கு பழி வாங்குறீயா? எத்தனை வருஷ நட்ப உனக்காக இழக்க சொல்றீயா?என்னால அவங்க கிட்ட பேசாம இருக்க முடியாது?” என்றான் வீராப்பாக,

“இல்ல உன்னால்  உன் பிரண்ட்ஸ் விட்டு  இருக்க முடியாது அவங்க கூட பேசாம இருக்க முடியாது . ஆனா, நான் மட்டும் உன்கூட தான் பேசனும், உன்கூட தான் சாப்பிடனும் , உன்கூட படிக்கனும். நீ உன் பிரண்ட்ஸ் கூட இருக்கும் போது நான் தனியா இருக்கணும் அப்படி தான? நான் சாகரனோட பிரண்ட்ஸிப் கட் பண்ணனும்மா நீயூம் உன் பிரண்ட்ஸிப் கட் பண்ணனும். பொண்ணுங்க  எங்களுக்கு பாய் பிரண்ட்ஸ் இருக்க கூடாது,  லவ்வர் தான் அவளுக்கு எல்லாம்.

ஆனா, உங்களுக்கு காதலி இருந்தும் கேர்ள் பிரண்ட்ஸ் கூட  பேசலாம், நான் இளிச்சுட்டு நிக்கணும் ல. சாரி அந்த மாதிரி  கேரக்டர் நான் இல்ல. உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். நீ  உன் பிரண்ட்ஸ் கூட பேசக் கூடாது முக்கியமா வைஷு கிட்ட பேசவே கூடாது.  டீல்ன்னா சொல்லு நான் சாகரனோட பேசல. அண்ட் ஒன் மோர் தீங். என்னை ஏமாத்தனும் நினைச்ச, நானும் ஏமாத்துவேன் மைண்ட்”

‘ரெண்டு நாள் தான இருந்திடலாம் ‘ என  நிழலியை பற்றி தெரியாமல் ” டீலுக்கு  ஓ.கே” என்றான்.

“தர்ஷ், ரெண்டு நாள் அப்புறம் நான் சாகரனோட எப்பையும் பேச மாட்டேன். அண்ட் நீயும் ரெண்டு நாள் கழிச்சி அப்படியே மெயின்டெயின் பண்ற?” என்றவள் அழுத்தி சொல்லி வைத்து விட்டாள்.

தன்னை இப்படி மடக்குவாள் என்று அவன் அறிந்திருக்க வில்லை. எல்லாம் கொஞ்ச காலம் தான் காதலை காட்டி அவளை மாற்றிடலாம் என்று மீண்டும் தப்பு கணக்கை போட்டான் ஆதர்ஷன்.ஆனால் அதெல்லாம் ஒரு நாளிலே தவிடு பொடியாகும் என்றவன் அறிந்திருக்க வில்லை.

மறுநாள் நண்பர்கள் எவ்வளவு அழைத்தும் தனியாக சென்றமர்ந்தான் ஆதர்ஷன் . வழக்கமாக ராக்கேஷ் , அனிருத் , ஆதர்ஷன் மூவருமாக தான் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள். இன்று ஆதர்ஷன் மட்டும் வேற பெஞ்சில் அமர அவர்கள் இருவரும் குழம்பினார்கள்.  இருவரும் அவனிடம்  சென்று கேட்டும் பதில் சொல்லாமல் அமைதியாக  அமர்ந்திருந்தான் ஆதர்ஷன்.

ஆசிரியர் வராத நேரம் நிழலியோடு அமர்ந்திடுவான், அவர்கள் அழைத்தும் தவிப்போடு அவளருகில் அமர்ந்திருந்தான். அவனது தவிப்பு அவளுக்கு புரியாமல் இல்லை  அவளும் அதே தவிப்போடு தான் இருக்கிறாள் சாகரனின் ஏக்கப்பார்வை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . கொஞ்ச நாட்களே ஆனாலும் அவர்களது நட்பு ஆழமாக வேர் விட்டிருந்தது. அதை பிரித்து களைய நினைத்தாலே வலிக்கத்தானே செய்யும், அவனும் கேட்டு கெஞ்சி ஓய்ந்து போய்விட்டான்.

அவளை மறித்து அவளிடம் கேட்டும் விட்டான், ” நான் என்ன தப்பு பண்ணினேன் சொல்லுங்கோ திருத்திக்கிறேன். இப்படி பேசாம இருந்து கொல்லாதீங்கோ வலிக்கறது. நேத்து அவா கிட்ட  பேசினது தான் உங்களுக்கு பிடிக்கலையா? நான் வேணாம் அவா கிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா? அப்பவாது  பேசுவேளா?”அவன் கேட்க, எங்கே அழுது விடுவோமா என்றிருந்தது அவளுக்கு.

“சாகரன் என் கிட்ட எதுவும் கேட்காத? என் கிட்ட பேசாத ப்ளீஸ்” என்று அவனை பார்க்க திறனற்று எங்கோ வெறித்து சொல்லிவிட்டு சென்றாள்.

அவனுக்கு இதயத்தில் இருக்கும் சிறு சிறு எலும்புகளும் குத்தி கிழித்து குருதி வழிய வழிய  இதயத்தை பிசைவது போல ஒரு வலி. அன்றைய நாள் இருவரும் யாரிடமும் பேசாமல்  இருவருமாக கல்லூரியில் வலம் வர, வைஷூவும்  அனி, ராக்கேஷ் கொதித்து போனார்கள். மறுநாளும் அதே தொடர, வைஷு  நிழலியிடம் சண்டையிட வந்தாள். இதெல்லாம் காண சக்தி இல்லாமல் கல்லூரிக்கு வராமல் இருந்து விட்டான் சாகரன்.

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க நீ? அவன எங்கிட்ட பேச கூடாது சொல்றதுக்கு  நீ யாரு டி?” என நிழலியிடம் சண்டையிட , அவள் அமைதியாக ஆதர்ஷனை பார்த்தாள். அவன் தான்  திண்டாடித் தான் போனான். வைஷுவை அவனால் சமாளிக்க முடியவில்லை.

“நான் ஒண்ணே ஒண்ணு கேக்குறேன்  வைஷு. சப்போஸ் உனக்கு லவ்வர் இருந்து அவன் தர்ஷ் கூட பேச கூடாது சொன்னா என்ன பண்ணுவ?” என்றதும் வாயடைத்து போனாள் வைஷ்ணவி.

“பதில் இல்லேல, உன் பிரண்டும் அதான் சொன்னான்.ஒரு பொண்ணா, என் நிலமையைப்பத்தி  யோசிப்பீயா? இல்ல அவனோட தோழியா யோசிப்பீயா?” என தீர்வை அவளிடமே விட,  ஆதர்ஷனும் இறங்கி வந்து விட்டான்.

” நீ சாகரனோடு பேசு , பழகு,  நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதே நேரம் நமக்கான முக்கியத்துவத்தையும் மறந்திடாத  நிழலி ! ” என்று  முடித்து வைத்தான். அவளும் புன்னகை என்று சொல்ல முடியாத சிரிப்பை உதிர்த்தாள்.

மறுநாள், சாகரன் அவளிடம் இருந்து ஒதுங்கி போனோன். அவள் பேச, பேசாது அவன் அனுப்பவித்த வலியை அவளுக்கு கொடுத்தான். மாலை கல்லூரியில் விட  தனியாக சென்று கொண்டிருந்தவனை வழி மறித்தவள்,

” காரணமே சொல்லாம ஒதுக்கி வச்சத்துக்கு, எனக்கு தண்டனை குடுத்துட்டு போறீயா சாகரா?” என்றதும் அவளை பாராமல் தரையை பார்த்து நின்றான்  நானும் தர்ஸும் காதலிக்கிறோம் சாகரா !” என்றவள் அனைத்தையும் கூற, நேத்து யாரோ பிசைந்த இதயத்தை, இன்று உடலோடு பிய்த்து எறிந்தது போலிருந்தது அந்த வலி,  கனவில் அவளோடு வாழ்ந்த நாட்கள் எல்லாம் கானல் நீரானது போல மறைய, அவளால் விலகிய தனிமை அவனை பார்த்து கேலி செய்தது.

“உனக்கு நான் தான்” என்று சொல்லிச் சொல்லி சிரிக்க, அவமானமாய் காதல் மனம் தலை குனிந்து நின்றது.

“என்னால உங்க ரெண்டு பேருக்குள்ளையும் எந்த பிரச்சினைனும் வர வேணாம். அவா தான் கடைசி வர நோக்கு துணையா வர போற வா ! அவாளுக்கு பிடிக்காதத செய்யாதீங்கோ ! நான் தனியாவே இருந்துடுறேன். நேக்கு அது புதுசு இல்ல !” என வலி நிறைந்த புன்னகையோடு கடந்தவனை தடுத்தது அவளது குரல்.

“கடைசி வரை ஒரு பொண்ணுக்கு புருஷன் தான் கூட வரணும் இல்ல. நண்பர்களும் கடைசி வரைக்கும் கூட வரலாம். ஆனால் எனக்கு தான் அப்படி கொடுத்து வைக்கல. உன் விருப்பத்துக்கு மறுப்பேதும் சொல்லல  சாகரா,  பாய்” என்று அவள் சென்று விட்டாள். அவனுக்கு  தான் அவளது வார்த்தைகள் சுர்கென்று தைத்தன.

‘ வெறும் காதலுக்காக தான் அவாகிட்ட பழகுனியா ? அவா உன்னை காதலிக்கலனு தெரிஞ்சதும் விலகறது சரியா? புருஷனா இல்லேன்னாலும் நண்பனா, அவாக்கூட கடைசி வரைக்கும் இருக்க .முடியாதா என்ன?”மனசாட்சி அவனிடம் கேட்க, அவளுக்கும் 
தன் மனசாட்சிக்கும் மறுநாளே பதில் சொன்னான்.

சக்கரை பொங்கலை அவளிடம் நீட்டி, “அம்மா செஞ்சு கொடுத்து விட்டா, என்னால கடைசி வரைக்கும் உன்கூட  நண்பனா வர முடியும், வருவேன். எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு போக மாட்டேன் ” அவள் கைப்பற்றி சத்தியம் செய்ய, கண்கள் கலங்க அவனை பார்த்திருந்தாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டவன், அவளுக்கு அப்பொங்கலை ஊட்டிவிட்டான். மீண்டும் துளிர் விட்டது அவர்களது  நட்பு.

“நான் பாடுறேன்” என்று சாகரன் கையை உயர்த்த, விழி விரித்த நிழலி, ” சாகரா நோக்கு பட தெரியுமா?”

“ம்ம்… நான்  நன்னா பாடுவேன். கோவில்ல நிறைய சாமி பாட்டு பாடிருக்கேன். பக்கத்தாத்து மாமி, எதிர்த்த வீட்டு மாமி எல்லாரும் உன் குரல் ஏதோ இருக்குனு சொல்வா மயக்கறடானு கூட சொல்வா ! நீ வேணா பாரு நான் எப்படி பாடுறேன்” அவன் செல்ல தடுத்தவள் , “யோவ் ஐயங்கார்  பஜகோவிந்தம்னு சொல்லி சாமி பாட்டு பாடிட மாட்டியே?” எனவும் அவளை முறைத்தவன், மேடையேற அவனது  தோற்றத்தை கண்டு சிரித்தவர்கள் வாயடைத்து போனார்கள் அவன் பாடிய இரண்டு வரிகளில்.

“அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே !”

காற்று வீசும்