காற்று 19

நண்பகலென சூரியன் உச்சிக்கு வந்ததை உரைக்க, உணவு நேரம் என்பதால், மாணவர்கள் ஆங்காங்கே மரத்தடி  நிழலில் தனது  நண்பர்களுடன் கூடி அமர்ந்து பேசி சிரித்து உண்ட படி இருந்தனர் .

முதல் நாள் வகுப்பிற்கு வந்த ஆசிரியர்கள்  அனைவரும் அறிமுகமும் அறிவுரையும் வழங்கி விட்டுச் செல்ல , அதற்கே மாணவர்கள் நொந்து போனார்கள். இந்த இடைவேளை, அவர்களுக்கு தேவையாக இருந்தது. மாணவர்கள் அனைவரும் வகுப்பை விட்டு செல்ல, ஆதர்ஷன் நிழலியிடம் கண்ணை கட்டிவிட்டு சென்றான். அவளும் தனது பையை எடுத்துக் கொண்டு சாகரனை பார்த்து” போலாமா ?” என்றாள்.

அவனும் “போலாம்” என்று எழுந்ததும் இருவரும் வெளியே வந்தனர். “நான் உங்க கிட்ட ஒன்னும் கேட்கட்டுமா?” என அவன் தயங்க, “என்ன?” என்றாள் தன் கூட்டத்தை  தேடிய படி.

“இல்ல, காத்தால அவாள அடிச்சேளே ! அவா எதுவும் உங்கள பண்ணிட மாட்டாளா? நோக்கு அதைக் நினைச்சி கொஞ்சம் கூட பயமில்லையா? எனக்காக பேச வந்து, அவாகிட்ட வம்பு வச்சுண்டேள், அவா எதுவும் மனசுல வச்சுண்டு  பின்னாடி எதுவும்  உங்களை பண்ணிட போறாளோன்னு மனசு கிடந்து அடிச்சுகிது ! ஆனால் நீங்க எந்த பயமும் இல்லாம இருக்கேள். அவா கூட்டத்தை பார்க்கும் போது நேக்கு அப்படித்தான் தோன்றது !” என்றவன் பேச்சில் எட்டிப்பார்த்த அந்தக் குட்டி அக்கறையும் அவளுக்கு பிடித்திருக்க, அவனும் அவனது பாஷையும் அவளை கவராமல்  இல்லை.

‘ம்ம்… பயபுள்ள கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம், அந்த கமர்கட்ட காதலிச்சிருக்கவே மாட்டேன். பச்’ என சலித்து பெருமூச்சு விட்டவள், ” பயமில்லாம தட்டி கேட்ட நான், அவன் ஏதாவது செஞ்சிடுவானோ ஏன் பயப்படனும்? எல்லாத்துக்கும் துணிஞ்சு நின்னு தானே தட்டி கேக்குறோம். அப்றம் வர போற விளைவுகளுக்கு ஏன் பயப்படணும் சொல்லு? எனக்கு அவன மேல துளி கூட பயமில்ல, தப்பு எங்க நடக்குதோ தட்டி கேட்கனும், தட்டி கேட்பா இந்த நிழலி” திமிரும் கர்வமும் தைரியமும் அவள் கண்களில் போட்டி போட்ட படி,  தலை நிமிர்த்தி கூற,  தன் மனதில் அவளை மெச்சிக் கொண்டான்.

“சரி, அப்படியே எதாவது அவனால் ஏதாவது பிரச்சனை வந்தால்,  நீ என்னை காப்பாத்த மாட்டியா?  எனக்காக வர மாட்டியா? இல்ல நமக்கு எதுக்குனு சொல்லி ஒதுங்கிடுவியா?” அவனிடம்  நக்கலாக  கேட்டாலும் உள்ளே எழுந்த  ஆர்வத்தோடு கேட்க, ஒரு நிமிடம் அவளை கூர்ந்தவன்,
“எனக்காக அவா கிட்ட  சண்டை போட்டு இருக்கேள், அதனால நோக்கு எந்தப் பிரச்சினை  யாரால வந்தாலும் என்னால தாங்கிக்க முடியாது, என் மூச்சு இருக்கற வரைக்கும் உங்களுக்காக போராடி உங்களை காப்பாத்துவேன். இது நான் வணங்கும் பெருமாள்  மீது சத்தியம்”என அவளுக்கு தீவிரமாக பதில் சொல்ல ஒரு  நொடி இருவரது கண்களும் அகலாமல்  ஒருவரை ஒருவர் பார்த்து  நின்றன.

காற்று தீண்டி இலைகள் சிணுங்க , அந்த அரவம் காதை தீண்டி மூளையை சென்றடைய இருவரின் பார்வை  வீச்சிலிருந்து மீண்டனர்.

“ஹேய் ஐயங்கார் என்ன சீரியஸா பேசுற? நான்  சும்மா விளையாடுக்கு தான் கேட்டேன். அவனால எனக்கு  எந்தப் பிரச்சினையும் வராது. ஏன்னா அவன் என்னோட பிரண்ட். என்னை பத்தி அவனுக்கு தெரியும், அதுனால அவன் எதுவும் நினைக்க மாட்டான்” அவனை சமாதானம் செய்தாள்.

“பிரண்டா?”

“ம்ம்… அந்த கேங்க் முழுக்க , என் பிரண்ட்ஸ் தான். என்னோட எல்லாரும் ஸ்கூல்ல படிச்சவங்க ! சிலர் வேற டிப்பாட்மெண்ட் எடுத்துகிட்டாங்க. ஆனால லஞ்சு டைம் ஒண்ணா  தான் சாப்பிடணும் கூடியிருக்காங்க . நீயும் வா, உன்னை அவங்களுக்கு இன்றோ குடுக்கறேன். நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”என்று அவனை அழைக்க,

” இல்ல நேக்கு இதுல இஷ்டம் இல்ல, நீங்க அவாளோடு போய் சாப்பிடுங்க. நான் எப்பயும் தனியா தான் சாப்புடுவேன்.நேக்கு அது ஒன்னும்  புதுசு இல்ல. நீங்க போங்கோ” என்றான் சிரித்த படி.

“ஏன், நீயும் எங்க பிரண்ட்ஸ் கேங்குல சேர்ந்துகோ, சேர்ந்தே சாப்பிடலாம் ” என்றழைக்க, புன்னகை மாறா முகத்தில் சிறு இறுக்கம் இருந்தது. அவன் முகத்தை ஆராய்ந்தாள் ” என்னை கேலி செய்தவா முன்னாடி எப்படி நிக்க? வேணாம் நீங்க போங்கோ” என்றான்.

“நான் வேணாம் அவங்கள மன்னிப்பு கேட்க சொல்லட்டுமா?” அதற்கும் புன்னகையை உதிர்த்தவன், ” சங்கட்டம் அது. நான் தனியா சாப்பிட்டுக்கிறேன்” என்றான்.
அவனை தனியாக விட  மனமில்லை, அவனை வற்புறுத்தவும் முடியவில்லை மெல்ல நகர்ந்தாள். அவள் சென்ற திசையை பார்த்து நின்றவனுக்கு பழக்க பட்ட தனிமையும்  புதிதாக வலித்தது.

பள்ளியிலிருந்து பல விசேஷங்கள் வரைக்கும் யாரிடமும்  ஒன்றிட மாட்டான். தனிமையை  மட்டுமே எடுத்துக் கொள்வான். உறவினர்களிடம் கூட ஒட்டாத தன்மையோடு தான் பழகுவான். அவனுக்கு தனிமை மிகவும் பிடித்தமான  ஒன்று. ஆனால்  இன்று மட்டுமல்ல, தனக்கு பிடித்த தனிமையை மறக்குமளவிற்கு அவள் செய்து விட்டு போன மாயங்கள்  மனதை மகிழ்வித்தாலும் மறைந்து போன  மாயங்களுக்கு பின்னிருந்த தனிமை அவனை கண்டு இளிக்க’ உன்கூட தானா?’ என்று எண்ணி  நொந்தான்.

“ஹேய் ஏன் லேட் நிழு, எல்லாரும் உனக்காக தான் வெயிட்டிங் வா சாப்பிடலாம்” என்றான் ஆதர்ஷன். “இல்ல தர்ஷ், அங்க சாகரன் தனியா சாப்பிட போறான். பார்க்க ஒரு மாதிரி இருக்கு , நம்ம கேங்க் கூட வா சாப்பிடலாம் கூப்பிட்டேன், அவன் மார்னிங்  நடந்த விஷயத்துனால சாப்பிட வரலனு சொல்லிட்டான். அவன் தனியா சாப்பிடுறனால நான்அவன் கூட சாப்பிடட்டுமா?” என தயக்கத்தோடு கேட்க, கண்கள் இடுங்க அவளை பார்த்தவன்,”இது என்ன புதுசா இருக்கு நிழு ?யாரவன்?  அவனுக்காக நீ ஏன் ஃபில்  பண்ற? அவன் எப்படி போன என்ன? நம்ம பிரண்ட்ஸ் இருக்கும் போது நீயே எவன் கூடயோ சாப்பிடணும் நினைக்கற ?” என அவன் கோபமாக கேட்க,

உள்ளுக்குள், ” அவங்க  எல்லாம் உன் பிரண்டஸ்” என்று முணங்கி கொண்டவள், ” இல்ல அவனும் என் பிரண்டு தான். இங்க நீங்க எல்லாரும் கேங்கா இருக்கீங்க அங்க அவன் தனியாக இருக்கான். அதான் கேட்டேன்” என்று விளக்கம் கொடுக்க, வந்த கோபத்தை பின்னந்தலையை  கோதிக் கொண்டு அடங்கினான்.

அவனது இறுகிய முகத்தை காண முடியாதவள்,  அவனை மாற்றும் பொருட்டு, ” சரி வா சாப்பிடலாம் ” என்றாள். அவனும் ” ம்ம்” கொட்டியப்படி  தன்னிடத்தில் அமர, அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

எல்லாரும் பேசிய படியே சாப்பிட, நிழலி மட்டும் இன்னும்  டிஃபன் பாக்ஸை திறக்காமல் அமர்ந்திருந்தாள். பள்ளியில், இவளது நண்பர்கள் கூட்டம் வேறு, ஆதர்ஷனின் நண்பர்கள் கூட்டம் வேறு, நிழலியின் நண்பர்கள் அனைவரும் சென்னை  பெங்களூர் என படிக்கச் சென்று விட்டனர் இவள் மட்டும் மதுரையிலே குப்பை கொட்டினாள். ஆனால் ஆதர்ஷன் நண்பர்கள் அனைவரும் ஒரே கல்லூரி, ஆனால் சிலர் வேற பாடப் பிரிவும்
சிலர் ஒரே பாடப்பிரிவு எடுத்துக் கொண்டவர்கள், உண்ணும் போது மட்டும் ஒன்றாக தான் உண்ண வேண்டும் என்ற அன்பு கட்டளை போட்டுக் கொண்டனர்.  ஆதர்ஷனின் ஆருயிர் தோழி  தான் வைஷ்ணவி. அவர்கள் இருவரும் சிறு வயது நண்பர்கள். வைஷ்ணவிக்கும்  நிழலிக்கும் பள்ளி தொட்ட நாளிலிருந்தே ஆகாது ஆதர்ஷனுக்காக இருவரும் அமைதியாகவும் அதே முறைத்து கொண்டு இருப்பார்கள். ஆனால் மறைமுக போர் இருவருக்கும் உண்டு..

வைஷ்ணவியும் ஆதர்ஷனும் தீவிரமாக பேசிக் கொண்டே சாப்பிட்டனர். மற்றவர்களும் அவ்வாறே பேச, நிழலி மட்டும் தனித்து  அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“என்ன நிழலி சாப்பிடலையா?” ராக்கேஷ் கேட்க, அப்போது தான் ஆதர்ஷனும் அவளை கவனித்தான்.  “ஏன் இன்னும் பாக்ஸ் கூட ஓபன் பண்ணாம இருக்க? “எனக் கேட்க, “இல்ல எனக்கு பிடிக்காத சாப்பாடு அதான்” என்று பொய் சொல்லி சமாளிக்க, மற்றவர்கள் அதை நம்பினாலும் ஆதர்ஷன் நம்பவில்லை , அவனுக்கு அவளைப் பற்றி நன்கு தெரியும், தன் நண்பர்கள் கூட்டத்தில் தன்னை தவிர அவளுக்கு யாரையும் பிடிக்காதென்று. அவளை வற்புறுத்தினால் சாப்பிடவே மாட்டாள் என்றறிந்தவன்,

“சரி நிழலி நீ கிளாஸ்க்கு போ !” என்று கண்ணைக் காட்ட, அவளுக்கு புரிந்தது போல வேகமாக எழுந்து சென்றாள்.

“நீ இப்படியே பண்ணிட்டே இரு ! அப்றம் அவ நம்ம பிரண்டஸ் கூட ஒட்டவே  மாட்டா !  உனக்கு தான் கஷ்டம் பார்த்துக்க?” என அவனை ஏத்தி விட,  ” எனக்கென்ன கஷ்டம் வர போகுது வைஷு. அவளை நான் புரிஞ்சுகிறது போல, என்னையும் அவள் புரிஞ்சுப்பா ! அவளுக்கு நம்ம கேங்க் பிடிக்கலைன்னாலும் இது வரைக்கும் உன் பிரண்டஸ் கூட பேசாதன்னு சொன்னதே இல்ல ! அது போல அவளோடு விருப்பத்தையும் நான் மதிக்கணும், அவ இப்போ இங்க இருந்தால் சாப்பிடவே மாட்டா, அதுனால போக சொன்னேன் நீ சாப்பிடு !”அவளுக்காக பேச, வைஷ்ணவிக்கு புகைந்து உள்ளுக்குள்.

இங்கே சாகரனும் டிஃபன்  பாக்ஸை வெறித்தவன்  திறக்க மனமில்லாமல் அமர்ந்திருந்தான். தொண்டை குழியில் உணவு இறங்கும் என்று நம்பிக்கை இல்லை  அவனுக்கு. அதனாலே அதை வெறித்து கொண்டிருக்க, “ஐயங்கார் அதுக்குள்ள சாப்டியா?” என மூச்சிரைக்க ஓடிவந்தாள்.
அவளை பார்த்ததும் இதழ்கள் சட்டென  விரிந்தது மூரலாய்.

“இன்னும் இல்ல நீங்க சாப்பிட்டேளா?”
அவளும் உதட்டை பிதுக்கி இல்லை என்று மறுத்தவள், டிஃபன் பாக்ஸை எடுத்து வைத்தாள். அவளை புரியாமல் பார்த்தான், “ஏன் சாப்பிடல? அவா ஏதுவும் சொன்னாளா?”

“அதெல்லாம்  இல்ல, ஆக்சுவலி, அவங்க என் க்லோஸ் பிரண்ட்ஸ் எல்லாம் இல்லை, கிளாஸ் மேட்ஸ் தான். அவங்களை எனக்கு பிடிக்காது. ஏதோ இங்க தனியாக இருக்கறேன், அவங்க கூட சாப்பிடலாம் நினைச்சேன். அப்றம் தான் நீ எனக்கு பிரண்டான. உங்கூட சாப்பிட்டு தப்பிக்கலாம் பார்த்தால், அவங்க கூப்பிட்டாங்க, அதான்  உன்னைய சொல்லி தப்புச்சு வந்துட்டேன். வா வா பசிக்குது” என்று பறந்தாள்.

‘அப்ப எனக்காக வரல?’ என்று நொடித்து கொண்டவன்,  தனது டிஃபன் பாக்ஸை திறந்தான், அவளும் வேகமாக திறந்தவள், அவனுக்கு பகிர போக முதலில் தடுத்தான். ” என்ன ? ” என்பது போல அவனை பார்த்தாள்.

“இல்ல,நாங்க கொஞ்சம் ஆச்சாரம் அதான்” என்றான். “நாங்க ஐயர் இல்ல தான். ஆனா ப்யூர் வெஜ். எங்க வீட்லே என்னை தவிர  எல்லாரும் வெஜ் தான் அதுனால் நாங்க சுத்தப்பத்தமா தான் இருப்போம், ஏன் எக் கூட சாப்பிட மாட்டாங்க, அந்தளவு அவங்க ப்யூர் வெஜ்”என்றாள்.

“ஓ ஏன் உங்களை தவிர எல்லாரும் வெஜ்?”

“சின்ன வயசுல, நான்  மட்டன் சாப்பிடும் போது, என் தொண்டைக்குள்ள எலும்பு மாடிக்கிடுச்சு, அதை எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம், உயிருக்கே ஆபத்து ஆகுற  நிலமையில இருந்ததாம், அதான் அப்பா , அம்மா, மாமா, அத்தை, சித்தி சித்தப்பானு கடவுள் கிட்ட, இனி அசைவமே சாப்பிட மாட்டோம் பொண்ணை காப்பாத்தி குடு வேண்டினாங்களாம், எலும்பு வெளிய வந்திடுச்சாம் நானும் உயிர் பிழைச்சேனாம். அன்னையிலருந்து அவங்க நான்வெஜ் எடுக்கறது இல்ல, ஆனால் எனக்கு என் பிரண்ட்ஸ் பழகி விட்டாங்க, அப்பா என்னை மட்டும்  வெளிய கூட்டிட்டு போய் சாப்பிட வைப்பார். இதான் ரீசன்” என்று ஒரு பிளாஷ் பேக்கை சொல்லி முடிக்க, அவள் கதை சொல்லும் போது  தென் பட்ட குழந்தையின் குறும்பு குணமும் பிடித்திருக்க, அதே குணமும் குறும்பும் நிறைந்த பெண் குழந்தை வேணும் என்று தனக்குள்ளே அவளிடம் மானாசிகமாக  கேட்டுக் கொண்டான்.

“நல்ல தோப்பனார் , உங்க அம்மா, உங்கள  திட்ட மாட்டாளா, உங்களுக்காக அவா சாப்பிடாம இருக்க, நீங்க மட்டும் சாப்பிடுறேளே, உங்க குடும்பத்துல யாரும் கோவப்படல?”

“அம்மாவ தவிர மத்தவங்க எல்லாருக்கும் நான் செல்லம். நான் தான் வீட்லே மூத்த பொண்ணு ஸோ கொஞ்சம் பாசம் அதிகம். என் சந்தோஷம் தான் அவங்களுக்கு முக்கியம். ஆனா அம்மா தான் திட்டுவாங்க! உனக்கெல்லாம் ஐயர்  மாப்பிள்ளையை தான் கட்டிவைக்கணும் அப்பதான் நீ நான்வெஜ்ஜை விடுவ சொல்வாங்க, நான் அவனையும் மாத்திடுவேன் சொல்வேன் ! “என்றதும் அவனுக்கு தொண்டை அடைத்து புரையேறியது.

“ஏய்  ! என்னாச்சு ?” என தண்ணீர் பொத்தலை நீட்டினாள். வாங்கி குடித்தவன், அவனை மிரண்டு விழிக்க,” ஐயங்கார், பயப்படாத , நான் எனக்கு வர போற  புருசனை தான் மாத்துவேன் சொன்னேன் உன்னை இல்ல” என்றாள்.

அதற்கு அவனோ, ‘ பெருமாளே இன் ஃபியூட்சர் அப்படி  எதுவும்  நேராம பார்த்துக்கோ ! ‘ பயத்தில் வேண்டிக் கொண்டான். அவளோ அவனது சாப்பாடை எடுத்து உண்ண, அப்படியே உறைந்தாள்.

“என்னங்க என்னாச்சு? சாப்பாடு நல்லா  இல்லையா?” எனக் கேட்க, “எதே நல்லா இல்லையா வா? இந்த உலகத்திலே என் அம்மா தான் நல்லா சமைப்பாங்க கர்வம் இருக்கும் எனக்கு ,ஆனா அது பொய்னு சொல்ற படி ஆண்ட்டி சமையல் இருக்க, ப்பா..” என் சப்பு கொட்டி கொட்டியவள், மீண்டும் ருசிக்க, சாப்பிட மறந்து அவளை பார்த்திருந்தான்.

“யோவ் ஐயங்கார் பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கறீயா?” என மீண்டும் கேட்க, மீண்டும் புரையேற
“என்ன?” எனக் கேட்டு தலையில் தட்டிக்  கொண்டான்.

“இல்ல ஐயங்கார் இப்படி  பட்ட சாப்பாட்டை வாழ்நாள் முழுக்க மிஸ்  பண்ண வேணாமுன்னு  தான் கேட்டேன்” என்றவள் விளையாட்டாய் கேட்க, ‘ இவ விளையாட்டா  கேட்டு என் வாழ்க்கையும் என்னை வி(ப)னையம்  வைக்கறா !’ என உள்ளே நொந்தவன் வெளிய முறைத்து வைத்தான். அவளது பொய்யான முறைப்பை கண்டு வாய்விட்டே சிரித்தாள்.

இருவரும் பேசி சிரிப்பதை கண்ட, ஆதர்ஷனுக்கு ஏனோ பொறாமை கோபமும் உள்ளுக்குள் எழுந்தன.  என்ன தான் வைஷணவவி நிழலியை பத்தி குற்றம் சாடிக் கொண்டு, அவனை ஏத்திவிட்டாலும், நிழலிக்கு சாதகமா தான் பேசுவான். அவளை யார் முன்னிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டான். ஆனாலும் நிழலி செய்வது சில நேரம் அவனுக்கு பிடிக்காமல் போகும் அந்த நொடியே கோபத்தை  காட்டிடுவான். வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக வரும், ஆனால் அதற்கெல்லாம் அசருபவள் நிழலி அல்ல,’ நீ என்ன வேணா சொல்லிக் கொள்,  நான் எனக்கு பிடிச்சதை தான் செய்வேன்,  எந்த விளைவுகள் வந்தாலும் நானே பார்த்து  கொள்வேன்’  என்று  சற்று இறங்காமல்  நிற்பது அவனுக்கு பிடிக்காது. சொன்னாலும்  அவள் கேட்க  மாட்டாள், அதை வைத்து பல முறை சண்டைகளும் சமாதனங்களும் வந்திருக்கு..

இதோ அடுத்த சண்டைக்கு தயாராகினர் இருவரும். ஆதர்ஷனுக்கு நிழலி சாகரனுடன் பேசுவது   பிடிக்கவில்லை , காதலில் பொஸ்ஸஸிவ் வருவது இயல்பு  தானே. ஆதர்ஷனுக்கும் அந்த பொஸ்ஸஸிவ் வர,  அவனுடன்  பழக வேண்டாம் என்ற கோரிக்கை  முதலில் அவனது விருப்பமாக இருந்தது.  பின் கட்டளையாக மாற இருவருக்கும் சண்டைபிடித்தது.

அன்றைய நாளிலிருந்து சாகரனுமும் நிழலியும் நண்பர்களானர்கள். கல்லூரி முழுவதும் அவனோடு தான் வலம் வந்தாள். சேர்ந்து படிக்க , உண்ண, கதை பேச, கல்லூரி வாகனத்தில் செல்வதுமாக இருக்க, இரவு ஆதர்ஷனுடன் காதல் சண்டைகள் நிகழும்.

சாகரனிடம் போன் இல்லாததால் தனது எண்ணை மட்டும் பகிர்ந்து கொண்டனர் ஆனால் பேசிக் கொள்ளவில்லை. சாகரனின் நட்பை பற்றி வீட்டில் தன் தந்தையிடம் சொல்லி வைத்திருக்கிறாள். அவரிடம் எதையும் மறைக்க மாட்டாள் காதல் உட்பட, பன்னிரெண்டாம் தேர்வு முடியும் தருணம் ஆதர்ஷனின் காதலை ஏற்றாள் அதுவும் தந்தையின் உதவியோடு, படித்து முடித்ததும் வீட்டில் பேசி இருவரையும் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார் அந்த  மாடர்ன் தந்தை. இருவரும் பேசி வைத்த படியே ஒரே கல்லூரியில் ஒரே பாடப்பிரிவு எடுத்துக்  கொண்டனர்.

சீராக சென்ற இவர்கள் காதலில் சாகரனின் வருகை இருவருக்கும் சுனாமி போல மடையை உடைத்த வெள்ளம் போல காதலை அழிக்க வருமா?  அவர்களின் காதலை தெரிந்த சாகரனின் நிலைமை என்னவாக இருக்குமோ?

காற்று வீசும்