காற்று 13

தேனி மாவட்டம் ******  ஊரில் மொத்தம் இருபத்தியொரு வார்டுகள் உள்ளன. 

இந்த 21 வார்டுகளுக்கு நகராட்சி தூய்மைப் பணியாளர்களை குழுக்களாக பிரித்து, அந்தக் குழுக்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று வீடு மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவர். 

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாகக் கிடந்த  சுற்றுப்பகுதி குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளது. பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் இங்கு மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

எனவே குப்பை கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் செய்ததால் நகராட்சி அதிகாரிகள் அருகே கோவில் புலம் பகுதியில் குப்பை கொட்டும் வகையில் 5 ஏக்கர் தரிசுநிலத்தை தேர்வு செய்தனர். ஆனால் இப்பகுதியில் குப்பை கொட்டினால் விளைநிலங்கள் மாசுபடும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பை கழிவுகள்*** நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழைபெய்து வருவதால் குப்பை கிடங்கிற்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால ஊரிலிருந்து கொண்டுவந்த குப்பைகள் கொட்ட **** நகராட்சி அனுமதி மறுத்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக  நகர் பகுதியில் உள்ள குப்பைக்கழிவுகளை எல்லாம்அருகே இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டிவிடுவதோடு ,   மருத்துவ கழிவுகளையும்  முறையாக சுத்திக்கரிக்கப்படாமல் அப்பகுதிகளில் கொட்ட,  துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டள்ளது.

மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்தெடுத்து சுத்தகரிக்கப்பட்டு ஆழ புதைக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள்.

ஆனால் அங்குள்ள சில தனியார் மருத்துவமனைகள்  அதை மீறி, மருத்துவ கழிவுகளை அப்படியே கொட்டி விட்டு செல்வதால், அந்தக்கிடங்கு மிக  அருகிலுள்ள கிராமத்திலும் துர்நாற்றம் வீசுவத்தோடு, குடி நீர் மாசடைவதும் நோய் தொற்று பரவலும் ஏற்பட்டு வருகிறது.

இதை கலெக்ட்டரிடமும் காவல் அதிகாரியிடமும் புகார் அளித்தும் பயனின்றி  போனது. அதிகாரிகள் அலட்சியம் கவனக்குறைவே, அக்கிராமம் அழிவுக்கு உள்ளாகி வருகிறது.

அந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் சத்திய மூர்த்தி, அவர் மதுரையில்****பொறியியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் கிராமத்தில் கடைசிக் காலத்தை கழித்துக் கொள்ள அங்கே தங்கிருக்க, கிராமம் படும் சிரமத்தை கண்டு கொதித்து போனவர், கலெட்டரிடம்  மனுவைகுடுக்க, அது குப்பை தொட்டிக்கு போனது. காவல் அதிகாரிடமும் அக்கோரிக்கை  எடுபட வில்லை

மக்கள் சிலர் நோய் தொற்று காரணமாக இறந்து போயிருக்கிறார்கள், குப்பை கிடங்கு வழியே சென்றாலே  துர்நாற்றம் வீசுகின்றன, குடிநீரும், விளை நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற கோரிக்கை வைத்தவர்களுக்கு இப்போது மருத்துவ கழிவுகளும் சேர்ந்து அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

இதனால் சத்திய மூர்த்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்தவருக்கு அங்கிருக்கும் மக்களிடம் புகார் மனுவில் கையெழுத்து வாங்கி, ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி, அவ்வூர் தலைவரிடம் நிழலியை பார்க்குமாறு அனுப்பி வைத்தார். அவளும் இரண்டு நாளில் முடிவு சொல்வதாக, கால அவகாசம் கேட்டு கொண்டவள், கேஸை நடத்த முடிவு செய்து, அக்கிடங்கையும்  அக்கிராமத்தையும் ஆய்வு செய்ய சாகரனோடு சென்றாள்.

ஊர்மக்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் வரவேற்றனர். சத்திய மூர்த்தி தன் மாணவர்கள் இருவரையும் பெருமையாக பார்த்தார். அவ்வூர் மக்களின் கண்களில் நன்றி உணர்வே தெரிந்தன.

“நீங்க வருவீங்கன்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  எப்படியாவது இந்த கிராமத்திற்கு ஒரு நல்ல வழிய காட்டுங்கம்மா.  நான் பிறந்து வளர்ந்த கிராமம் என் கண்ணு முன்னாடி அழியறத நினைச்சா மனசுல பயம் வருது. நீங்க என் கிராமத்துக்கு  நியாயத்தை வாங்கி குடுக்கணும்…” அவர் கையெடுத்து கும்பிட,

“சார், நீங்க போய் கும்டுட்டு.  என்னை தேடி வர்றவங்களுக்கு  நியாயம் வாங்கி கொடுக்க  வேண்டியது  என்னோட கடமை சார் . அதை கண்டிப்பா செய்தே தீருவேன். நீங்க கவலை படாதீங்க, உங்க கிராமத்துக்கு நியாயம் கிடைக்கும் சார்” என்றவள் அக்கிராம  மக்களிடம் அவ்வாறே நம்பிக்கை ஊட்டினாள்.

அந்தக் கிராமத்தை ஆராய்ந்தவள், நகராட்சி குப்பை கிடங்கிற்கும் செல்ல, அங்கு வந்த துர்நாற்றம் குடலை பிரட்ட, சாகரனுக்கு வாந்தியே வந்தது, ஓரமாக சென்று வாந்தி எடுத்தான்.

அவனை காரில் இருக்க சொல்லியவள், இரண்டு மாஸ்க் அணிந்து, அங்கே கிடந்த மருத்துவ கழிவுகளை புகைப்படமாக எடுத்தாள்.

அது மட்டுமின்றி, ***** செய்தி சேனிலில் வேலை செய்யும் தனது தோழியை அழைத்திருந்தாள்,  அவளும் வந்து பார்த்து வீடியோ எடுத்தவள், மக்கள் ஒவ்வொருவரிடமும் குறைகளை கேட்டு அதையும் பதிவு செய்தாள்.

பின் அவளும்  செல்ல , நிழலி, மக்களிடம்,  “நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து, குப்பை கிடங்கை அகற்றவும் மருத்துவ கழிவுகளை  முறையாக சுத்திகரிக்கப்படாத மருத்துவமனைகளின் மேல் வழக்கு பதிவு செய்வதாக” கூறி நம்பிக்கை அளித்துவிட்டு அங்கிருந்து விடைப் பெற்றாள்.அம்மக்களும் விடியல் கிடைக்க காத்திருக்கின்றனர்.

காரில் ஏறியவள், சாகரனை பார்க்க, அவனோ சீட்டில் சாய்ந்து வலதுகையால் கண்களை மறைத்து உறங்கிக்

கொண்டிருந்தான்.

அவனால் கொஞ்சம் நேரம் கூட நிற்க முடியவில்லை, குடலை பிரட்ட காலை உணவெல்லாம் வெளியே வந்து விட்டது. காருக்குள் வந்து, தண்ணீரை குடித்து கொப்பளித்து விட்டு அப்படியே சீட்டில் சாய்ந்தவன் தான்.

காய்ச்சல் எதுவும் இருக்கிறதா என்று அவனது நெற்றியை தொட்டு பார்த்தாள் அவளது தொடுகையில் விழி திறந்து அவளைப் பார்த்தான்.  அவனை வம்பிழுக்கும் எண்ணத்தில், “முதல் கேஸுலே சாருக்கு மயக்கம் வந்திடுச்சு…  இனி அடுத்தடுத்த எண்ணெல்லாம் வருமோ? பேசாம நீ இன்ஜீயராவே இருந்திருக்கலாம் தேவையா ஐயங்கார் உனக்கு இதெல்லாம்?” என்றவளை பற்களை கடித்தவாறே முறைத்தவன்.

“என்னமோ இந்தக் கேஸ் எடுத்ததுனால தான் நான் மயங்கின மாதிரி பேசற ! அங்க என்னால் நிக்க முடியல டி. குடலை பிரட்டிண்டு வந்தது, பிரேக் பாஸ்ட் எல்லாம் வெளிய வந்திடுத்து, என்னால்  இந்த இயற்கை உபாதைகளை  தடுக்க முடியாது. இட்ஸ நேசர்…” எனவும் அவள் இதழ் மடித்து சிரிப்பை அடக்கினாள்.

“என்னடி?”

“நந்திங்,  அண்ணா வண்டியை எடுங்க” என்றாள். “போன காரியம் என்னாச்சு?” அவன் கேட்கவும், “திவ்யா கிட்ட நியூஸை டெலிகேஸ்ட்  பண்ண சொல்லிருக்கேன், கோர்ட்ல கேஸ் அபீல் பண்ணனும், நம்மளாலே இருக்க முடியல பாவம் இந்த மக்கள் எப்படி  இருப்பாங்க, அவங்களுக்கு நியாயம் கிடைக்கனும்” என்றவள் சாளரத்தின் வழியே வெறித்தாள்.

“ம்ம்… கண்டிப்பா அவங்களும் நியாயம் கிடைக்கும் நிழலி” என்றான்.மீண்டும் இருவரும் மதுரைக்கே பயணிக்க, அவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, அவனோ தூங்கி வழிந்தான்… சீட்டில் அவனது தலை நிற்காமல் தூங்கி வழிய, அவனை ஒழுங்காக படுக்க சொல்ல, உலுப்பினாள். அவனோ சட்டென்று அவளது மடியில் தலையை வைத்து உறக்கத்தை தொடர, அவளுக்கோ பக்கென்றானாது.

ஆழ்

ந்த உறக்கத்தில் அவனிருக்க, அவனை எழுப்ப மனவரவில்லை அவளுக்கு. டிரைவரை பார்த்தாள், அவரோ ஓட்டுவதில் கவனம் செலுத்த, பெருமூச்சை விட்டவள்,  மீண்டும் வெளியே கண்களை பதித்தாள். ஆனால் அவளது கைகளோ அவனது தலையை கோதின.

நேரம், மாலையை நோக்கிச் செல்ல, இன்னும் மதுரைக்கு செல்ல அதிகம் நேரம் இருப்பதால், வழியில்  உண்டு விடலாம் என்று எண்ணினாள். காலையில் உண்ட உணவை  வாந்தி எடுத்தவன், வெறும் வயிற்றில்  உறங்கி கொண்டு வருவதை பார்த்தவளுக்கு பாவமாக இருக்க, வழியில் நல்ல ஹோட்டலாக பார்த்து நிறுத்தும் படி ஓட்டுனரிடம் சொன்னாள்.

வரும் வழியில் சைவ உணவகத்தின் முன் வண்டி நின்றது. “சாகரா ! சாகரா !” அவனை எழுப்ப, மடியில் கிடந்தவாறே அவள் முகம் பார்த்தவன், தனது செவ்விதழ்களை விரித்து அவளை பார்த்து முறுவலித்தான்.

அவளுக்கு அவனது செய்கை விளங்க வில்லை, “என்ன டா ! எழுந்திரி” என்றாள். “ம்ம்ம், பேபி… ஆமா இது கனவா ? நிஜமா? ” என உதட்டை பிதுக்கி கேட்க, ‘மடியில் படுத்துக் கொண்டு கேட்டுக்கும் கேள்வியை பார்’ என எண்ணியவள், “அப்படியே சப்புனு கன்னத்தில ஒரு அறை விட்டால் கனவா? நிஜமா? தெரிஞ்சிடும், பார்க்கறீயா? ” என பல்லை கடிக்க, பட்டென எழுந்தான்.

“நான் எப்போ உன் மடியில் படுத்தேன்? பெருமாளே ! இது என்ன எனக்கு வந்த சோதனை. என்  வருங்கால ஆம்படையாளுக்கு நான் துரோகம் செய்றேனே ! அபச்சாரம் அபச்சாரம்.  இங்க பாரு நிழலி. நான் உன் மடியில் படுத்தேன்றனால  நீ எதுவும் தப்பா  நினைச்சுக்காத என்ன? பெருமாளே என்னை மன்னிச்சிடு…”  கன்னத்தில் போட்டுக் கொள்ள,

‘பெரிய ராமனாட்டம், துள்ளறான். நியாய படி பார்த்தால்,  இவன் என் மடியில் படுத்ததுக்கு, நான் தானே கத்தனும்? பாவமே உடம்பு முடியல ஒன்னும் சொல்லாம விட்டால், என்னை என்னென்னமோல நினைக்க வைக்கறான். என்ன சொன்னான் தப்பா

நினைச்சுக்காதன்னா என்ன மீன் பண்றான்?’  என எண்ணியவள், அவனை பார்க்க, விட்டால் இங்கே பாவம் செய்ததற்கு  ஸ்தானம் பண்ணி பரிகாரம் பண்ணிவிடுவான் போல இருந்தது அவனது செய்கை.

“சாகரா !” அவள் அழைக்க, கை நீட்டி தடுத்தவன், “நீ எந்தக் காரணமும் சொல்ல வேண்டாம் நிழலி. ஏதோ தூக்க கலக்கத்துல உன் மடியில் படுத்துண்டேன் அதுக்காக, நீ அப்படியே விட்டிருவீயா? என்னை எழுப்பி இருக்க வேண்டாமா? ” எனக் கத்தியவனை  ” பே” வென பார்த்தாள்.

‘ஏதோ நான் தப்பு  பண்ணது போல பேசுறான் இவன்… என்னமோ நானே வான்டட் மடியில படுக்க வச்சது போல குற்றம் சொல்றானே பாவி !’ என நொடித்துக் கொண்டவள்,

“இங்க பாரு ஐயங்கார். நான்…” என்னும் போதே நிறுத்தியவன், “நீ எதுவும் சொல்ல வேணாம் நிழலி. இதை இதோட மறந்திடு அதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்ன? இப்போ வா போய் சாப்பிடலாம்” கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் அவளது குழப்பமான முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டான்.


அவளோ அதே ரீதியில் அமர்ந்திருக்க

“நிழலி, நான் தான் எதுவும் நினைக்காத சொன்னேல… அதை ஏன் யோசிக்கற? இறங்கி வா பசிக்கிது” என்றான்.  அந்த சஸ்பீசியஸ் அணிமலோ, அதையே

எண்ணிக் கொண்டு வந்தது.

அவன் இன்றும் அவளை பழைய நிழலியாக தான் பார்க்கிறான். ஆனால் அவளோ அவனை பழைய சாகரனாக பார்க்க வில்லை என்பதே  உண்மை . அவளது பார்வை  எல்லாம் சந்தேகம் கொண்டு ஸ்கேன்  செய்வது போலவே இருக்க, அதை  மாற்ற,  அவன் அவளது வழியிலே செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவன்  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன் படுத்திக் கொண்டு படுத்தி எடுக்கப் போகிறான். இவ்விளையாட்டில் அவன் ஜெயிப்பானா?

இருவரும் கைகழுவிக் கொண்டு வந்தமர்ந்தனர்.  வெய்ட்ர் வரவும், “எனக்கு ஒரு தயிர் சாதம், இவங்களுக்கு மஸ்ரூம் பிரியாணி” என்றான். அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“என்ன பார்க்கற? உன் பேவரைட் அதானே, நேக்கு  தெரியாதா? ” என்று அங்கிருந்து  தண்ணீரை பருக, அமைதியாக முறுவலித்துக் கொண்டாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினார்கள், தன்னை எம்.ஜீ. ஆர்    பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட சொன்னான்.

வண்டி நிற்க இறங்கியவன் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “சாகரா !” என்று அழைத்தாள்.

“என்ன நிழலி?”

“நீ தனியா போயிடுவீயா? வேணும்ன்னா  கார்ல போ,  உன்னை ட்ராப் பண்ண சொல்றேன்…” என்றவளை கண்டு  மென்னகை சிந்தியவன், “இப்போ நல்லா இருக்கேன் நிழலி, நான் போயிப்பேன் நீ போயிட்டு வா ” என்று கையை அசைத்து விட்டுச் சென்றான்.
அவன் செல்வதை பார்த்திருந்தாள்.

மறுநாள்,  தன் காரில் இருந்தவாறே, ஜோடியாக பைக்கில் செல்லும் சாகரனையும் நிழலியையும்  கண்டு கண்கள் சிவக்க கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.


காற்று வீசும்