காதல் சிநேகன் – 3

அத்தியாயம்- 03

பல வகைப் பூக்களின் நறுமணம் நாசியைத் தொட்டுச் சென்றது. அங்கிருக்கும் அத்தனை பூக்கடைகளுமே ஜரூராக இயங்கிக்கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் மன்னார்.

மினி லாரிகளில் லோடு வந்து இறங்க, ஒரு பக்கம் அவை வகைவாரியாகப் பிரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

மற்றொரு பக்கம் வித விதமான பூக்கள் வெவ்வேறு அளவுகளில் அளக்கப்பட்டு விற்பனை பூக்கூடைகளில் புலம் பெயர்ந்துகொண்டிருந்தன.

வியாபாரம் துரிதமாக நடப்பதையும் தோரணங்கள் அநாயசமாகத் தொடுக்கப்படுவதையும் வேடிக்கை பார்த்தான். பெண்கள் ஆண்களெனப் பலரும் தங்கள் வியாபாரத்துடன் ஐக்கியமாகியிருக்க…

சிலர் வாயும் பேசத்தான் செய்தார்கள். அம்மக்களின் வழக்காடுதல் கேட்கவும் மன்னாருக்குச் சுவாரசியமாக இருக்கச் செய்தது.

அவனைக் கலைக்கவென அந்த ஹாரன் ஒலிக்க… மன்னார் சட்டென திரும்பிப் பார்த்தான்.

“மன்னார்!”

காரில் இருந்தபடியே சிநேகன் இவனைப் பார்த்துக் கையசைக்க அருகே விரைந்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்னு கேட்டியா?”

பிசிரற்ற குரல், சலனமில்லாத கண்கள், மனதை வெளிக்காட்டாத முகப்பாவனையைக் கொண்டிருப்பவனைக் காணும் போதெல்லாம் ஏற்படும் அதே சந்தேகம் மன்னாருக்கு இப்போதும் வந்தது.

‘கஞ்சிப் போட்டிருப்பது இவர் சட்டைக்கா இல்லை இவர் குரலுக்கா?’ என்று நினைத்து அவன் குழம்பிப் போனான்.

அவன் முழிப்பதைப் பார்த்த சிநேகன் மன்னாரிடம் தன் கேள்விக்குப் பதில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான். இதைக் கேட்காமல் இவ்வளவு நேரம் என்னத்தைச் செய்தான்?

ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு வாய்ந்தது என்று எண்ணமிடுபவனுக்கு இப்படிக் காரிய விரயம் என்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், அப்படித்தான் உலகில் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படி நேரத்தை மதிக்காமல் நடக்கும் ஒவ்வொன்றையும் காணும் போது கோபம் வந்தாலும் சகிப்புத்தன்மை என்ற ஒன்றை வரவழைக்கும் கட்டாயத்தை என்ன சொல்வது?

சிநேகனுக்கு இன்னும் முக்கியமான விசயங்கள் வரிசையில் இடம் பிடித்திருக்க, மன்னாரின் இச்செயல் அடிபட்டுவிட்டது. அதனால் மன்னார் சிநேகனிடமிருந்து தப்பித்தான்.

நல்லவேளையாக அதே நொடியில் சிநேகனின் கைபேசியும் ஒலித்தது.

அதைப் பார்த்துக்கொண்டே, “இப்ப போய்க் கேட்டுட்டு வா.” என்றான் மன்னாரிடம்.

அவனின் சலனமற்ற முகத்தைப் பார்த்தபடி தலையசைத்து விட்டு, மன்னார் தான் வந்த வழியே வேகமாகப் போய்க் கேட்டுவிட்டு வந்தான்.

சிநேகன் இன்னும் அழைப்பில் இருக்க, மன்னார் சற்றுத் தள்ளிப் போனவன் அவனின் இயல்பான பராக்கு பார்த்தலைச் செய்துகொண்டு நின்றிருந்தான்.

எளியவனுக்குக் காண்பதெல்லாம் அழகு. வாழ்க்கையை வந்தபடி ஏற்பவனுக்கு எல்லாமும் சுவாரசியம் தருவதாகின்றன.

மன்னார் மிக எளியவன். அலட்டல் இல்லாத வாழ்க்கை முறையைக்கொண்டு வாழ்பவன். அவனுக்கு எந்தவிதமான பர பரப்பும் உண்டாவதில்லை. சொல்லப் போனால் நம்மில் பலரைவிட அவன் கொடுத்து வைத்தவன்.

இரசனையுடன் அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்க, சில நிமிடங்கள் விரைந்து கரைந்திருந்தன.

“என்ன?”

திடீரென காதருகே இடித்த குரல் மன்னாரைத் துள்ளி விழ வைத்தது.

“ஆ…”

“எதுக்கு இப்படி வாயைப் பிளக்குற? வா வா காரில் ஏறு சீக்கிரம்!”

சிநேகன் சிநேகமில்லாத குரலில் பேசி மன்னாரைத் துரிதப்படுத்தினான்.

“பூப் பூ… பூக்கூடைக…”

மன்னாருக்கு வாய் வார்த்தைகள் திக்கி திக்கிக் குதித்து வெளி வந்துகொண்டிருந்தன.

“கடைக்காரங்க வந்து காரில் ஏத்தி வச்சிட்டுப் போய் ஐஞ்சு நிமிசமாச்சு மன்னார். நீ சீக்கிரமா வந்து உள்ளார உட்காரு.”

அந்தப் பழைய வண்டி உறுமலுடன் கிளம்பிப் போக ஆயத்தமாகியது. அவசரமாக ஒரு ஓட்டத்துடனே வந்து அதன் உள்ளே தொற்றிக்கொண்டான் மன்னார்.

இன்னும் வியப்பில் வாயை மூடாமல் தன்னைப் பார்ப்பதும் பூக்கூடைகளைத் திரும்பிப் பார்ப்பதுமாக வரும் மன்னாரின் செயல் சிநேகனைக் கவர்ந்தது.

அந்நேரம் அவனிடம் ஒரு மெல்லியப் புன்னகை கூட ஒற்றை மல்லியாய் வெளிப்பட்டது.

“வெளியில வேலையா வந்தா நம்ம வேலை மேல கண்ணு இருக்கணும். வேடிக்கை பார்க்கிறதையே வேலையா செய்யக்கூடாது. கண்ணு அங்க இங்க மேஞ்சாலும் நம்ம காரியத்துல கவனம் இருக்கணும். புரியுதா?

கடைக்காரன் வந்து பூக்கூடைகளை வச்சதைக் கூடக் கவனிக்கலை நீ. உன்னை வேலைக்கு வச்சிட்டு வீட்ல இருக்கிறவங்க, என்னென்ன அனுபவிக்கிறாங்கன்னு தெரியலை.” என்றான்.

தலையைத் தலையை ஆட்டி, “சரிங்கண்ணே. இனிக் கவனமா இருப்பேன்.” என்று பதில் கூறிய மன்னார் சிறிதும் முகத்தைச் சுறுக்கவில்லை.

மாறாக சிநேகன் இவ்வளவு நீளமாகத் தன்னிடம் பேசியதைப் பெருமையாகக் கருதினான்.

அதிசயத்தில் அதிசயம். இவன் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து முதல் முறை. முதலாளி நல்ல மனநிலையில் இருக்கிறார். இதனை யாரிடமாவது உடனே சொல்ல வேண்டும் என அவனது மனம் பரபரத்தது.

“என்னை அண்ணேன்னு கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் மன்னார்?”

அடுத்து வந்த சிநேகனின் உறுமலில் புஸ்வானமாகிப் போனது மன்னாரின் மனது. ஆனாலும் அவன் வருத்தத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை.

கவலையற்று இருப்பவனின் முகத்தை ஒரு முறை பார்த்தான் சிநேகன். அவனைப் பார்த்துவிட்டுத் தலையை முன்னால் திருப்பிப் பாதையில் கண் வைத்தான்.

சிநேகனின் கண் என்னமோ பாதையில் தான் இருந்தது. அவன் மனது அங்கில்லை. அப்படியே வேறு யோசனைக்குள் போயிருந்தது.

“இன்னும் எத்தனை வருசம் கல்யாணத்தைத் தள்ளிப் போடுவ அப்பு? அதது அந்தந்தக் காலத்துக்குள்ள நடந்தேறணும்.

உன் வயசுல இரண்டு மடங்கு என் அனுபவம். நான் சொல்றதை ஏத்துக்குவன்னு நினைக்கிறேன். இந்தத் தடவை ஏமாத்திற மாட்டியே!”

காதுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது அவன் தாத்தா ரவீந்தரின் குரல். வேறு வழியில்லை. எத்தனை வருசங்களை வேலையைக் காரணங்காட்டியே நகர்த்துவது? வயதும் முப்பதாகிவிட்டது.

தான் வேலையில் மூழ்கினால் உலகமே மறந்து விடும். ஆனால் தாத்தா? தன்னை நினைத்தே உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாரே?

மனதளவில் நிறையவே அனுபவித்துவிட்டார். தன்னால் அவருக்கு ஒரு சின்னச் சந்தோஷத்தைத் தர முடியுமானால்…

ஆகிறது ஆகட்டும். எல்லாம் நன்மையாக அமைந்தால் சந்தோசம் தானே? தன்னுடைய திருமணம் அவருடைய உடல் நலத்தைத் திரும்ப பெற்றுத் தரட்டும்.

இதுவரை சிநேகன் தான் பார்க்கப் போகும் பெண்ணைப் பற்றி ஏதும் அறிந்து வைத்துக்கொள்ளவில்லை. அவனிடம் முன்னமே தகவல்கள் பறிமாறப்பட்டது தான். அந்தப் பெண்ணின் புகைப்படமும் வந்திருந்தது.

ஆனால் அவன் மனதில் எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் இருக்க… என்னவென்று அவற்றைக் கவனிக்க? அவற்றைப் பார்க்கும் எண்ணமே அவனுக்கு இது வரையிலும் எழவில்லை.

அவனுக்கு இந்தப் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபாடு கிடையாது. உடன்பாடும் இருக்கவில்லை.

யூ. எஸ்ஸில் இருந்து வந்ததே புதன் அதிகாலையில். அவன் வந்திறங்கி ஒரு தூக்கம் போட்டுவிட்டு எழுந்ததிலிருந்து இதே பேச்சுத்தான். தாத்தாவின் சோர்ந்த தோற்றம் வேறு உறுத்தலாயிற்று!

நேரில் வந்து பார்க்கும் போது திடீரென மூப்பு அதிகமாகத் தெரிந்தது. இத்தனைக்கும் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் ஒரு பத்து நாளைக்கென ஊருக்கு வந்து சென்றிருந்தான்.

அதன் பின்னர் ஒரு ப்ராஜெக்டில் மூழ்கிப் போக, அவனுக்கு இருந்த வேலைப்பளுவில் வேறு சிந்திக்க நேரமில்லாமல் போனது!

அவனுக்கான அவரின் ஏக்கத்தை இப்பொழுது கண்கூடாகப் பார்த்ததும் நெஞ்சம் நெகிழ்ந்தது. அவன் தன் அம்மம்மாவைப் பார்த்ததே இல்லை. வெறும் மாலையிட்ட சட்டம் தான் பாட்டியின் நினைவு.

ஆனால், தாத்தாவுக்கும் இவனுக்கும் எத்தனை அழகான உறவு? இவன் தான் அவரின் உயிர்! இவனுக்கு ஓர் ஆதாரமாகத் திகழ்ந்தவரும் கூட!

ரவீந்தரின் தளர்வைக் கண்டு உணர்வுக்குவியலாகி உருகாவிட்டாலும் அவனுள் ஒரு பிறழல்!

அதன் விளைவு வெள்ளியன்று தான் அவரின் ஆசைக்கு உடன்படுவது என முடிவெடுத்திருந்தான். அவன் சம்மதம் சொன்னதுமே மூத்தவரின் முகத்தில் அத்தனை சிரிப்பு!

அதன் பின்னரே மள மளவெனப் பேச்சு வார்த்தை ஆரம்பமானது.
அந்த வாரத்தில் ஞாயிறு முகூர்த்தநாளாய் இருக்க, பெண் வீட்டிலும் அவர்களுக்கும் அன்று சௌகரியப்படும் என்று சொல்லிவிட… ஞாயிற்றுக்கிழமை மாலையே பெண் பார்க்கப் போவது என்று முடிவானது.

இதோ இன்று ஞாயிறும் வந்துவிட இராகு காலம் முடிந்து இவர்கள் பெண் வீடு செல்வதாகப் பேச்சு.

இன்னும் சற்று நேரத்தில் தனக்கான துணையைக் காணப் போகிறான். இது என்ன விதமான அரங்கேற்றம்? தானா இப்படியொரு படலத்தில் சிக்கவிருப்பது?

சிநேகனுக்குத் தன்னை நினைத்தே புதுமையாக இருந்தது. வாழ்வில் எதார்த்தமாகப் பார்த்து; பேசி; பழகி என்று வளரும் உறவு தான் அவன் வகை.

தன் இணையாகப் போகிறவளை இப்படிப்பட்டப் பழமையில் ஊறிய நிகழ்வு வழியே காண அவன் பிரியப்படவே இல்லை!

ஆனால், என்ன செய்வான்?

அவனுக்குக் கிடைத்திருந்ததே இரு வார விடுமுறை. அதில் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பிரயாணத்துக்கே சரியாய்ப் போய்விடும். தாத்தா அவனை இக்கட்டில் வைத்துவிட, இனி பிரியங்கள் அவனுக்குக் கிடைப்பது தற்பொழுது நிகழுமா என்ன?

தாத்தாவிற்காகச் செய்யப் போகும் திருமணம் எந்தளவு தனக்கு ஒத்து வரும்? சிநேகனுக்குக் குழப்பம் மட்டுமல்ல; இத்திருமணத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற பலத்த சிந்தனையும் எழுந்தது.

சத்தமாக ஒலித்த எதிர்சாரி வாகனம் ஒன்றினால் நினைவுகளை நிகழுக்குத் திருப்பினான்.

சில நிமிடங்களில் அவன் வீடிருக்கும் தெருவுக்குள் கார் நுழைந்தது. உள் நுழைந்த அம்முனையிலேயே தெருவை அடைத்துக்கொண்டு நின்றிருந்த வாகனங்கள் சிநேகனின் கண்ணுக்குத் தப்பவில்லை.

அவன் அந்த பங்களாவை சமீபிக்கையில் அந்தக் குறிப்பிட்ட வாகனம் பள பளப்பாக நின்றுகொண்டிருந்தது. அதன் பள பளப்பு அவன் கண்களை உருத்த… உடனே அதன் எண் பலகையில் பார்வையைப் பதித்தான்.

அது ஏ. பி நம்பர் பிளேட்!

அப்படியே இறுக்கமாக மாறியது அவன் முகம். என்ன முயன்றும் தன் உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தாத்தா செய்த காரியம் என்று புரிந்தது. அவரிடம் பாய வேண்டுமென வெறியே வந்தது. அந்த நிமிடம் இவன் கண்களின் எதிரே அவர் வரவில்லை. அப்பொழுது மட்டுமல்ல அதன் பின்னர் வந்த நிமிடங்களில் கூட அவர் இவனுக்குத் தட்டுப்படவில்லை.

அந்தப் பள பளப்பான வாகனத்துடன் இன்னும் இரண்டு ஆந்திரா பிரதேஷ் வாகனங்கள் கூட வந்திருக்க… தன் பார்வையால் கூர்மையாக அவற்றை அலசினான்.

‘அந்த கார் இல்ல. வரலையா?’

ஒரே நேரத்தில் நிம்மதியையும் உணர்ந்தான். ஏமாற்றமும் அவனைச் சூழ்ந்தது. அந்த ஏமாற்றம் தன்னால் தானே!

ஒரு பெருமூச்சுடன் காரை வாயிலருகே கொண்டு வர முயன்றான். அதற்குள் மன்னார் கீழே இறங்கி ஓடினான்.

அந்தப் பெரிய காரின் பின் பக்கம் அதன் ஓட்டுநர் ஃபோன் பேசிக்கொண்டு நின்றிருந்தான். அவன் ஓட்டுநரா என்றும் தெரியவில்லை. ஆள் வேறு சபாரி சூட் அணிந்திருந்தான்.

மன்னார் இங்கே வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இத்தனை வாகனங்கள் வரிசை கட்டி நிற்க என்றும் பார்த்ததில்லை. ஏற்கெனவே அவனை மீறிய ஆர்வம் பொங்க… அவனிடம் யார் எவர் என்று விசாரித்தான். தயங்கி தயங்கி தான்.

அவனோ இவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. திரும்ப சிநேகன் ஹாரன் அடிக்கவும் தன் எஜமானின் காத்திருப்பு முன்னுக்கு வரச் செய்ய…

மன்னார், “உங்க காரை கொஞ்சம் அந்தப்பக்கமா நிறுத்தி வைங்க. எங்க காரு உள்ளார போகணும்” பணிவாகத்தான் வாகனத்தை நகர்த்தி வைக்கச் சொன்னான்.

ஆனால், அவன் மன்னாரை அலட்சியம் செய்துவிட்டு, “புஜ்ஜி” என்று யாரையோ கொஞ்சிக்கொண்டிருந்தான்.

தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சிநேகனுக்குப் பொறுமை பறந்தது. காரிலிருந்து வேகமாக இறங்கினான். இடது காலால் அணிந்திருந்த வேட்டியை உந்தி மடித்துக் கட்டியபடி,

“*** கொடுக்கா!” கெட்டை வார்த்தையால் வைதான்.

“எவரு அதி கார்னு தெச்சி இ ஜாகல மஜ்ஜுல நிழிப்பிந்தி?”
(“எவன்டா அது இப்படிப் பாதைய அடைச்சி காரை நிப்பாட்டி வச்சிருக்கிறது?”) என்று தெலுங்கில் உறும…

காதில் விழுந்த கெட்ட வார்த்தையில் அந்த வாகன ஓட்டுநரின் கவனம் கலைந்தது. தன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவசரமாக நான்கு எட்டுக்கள் எடுத்து வைத்து முன்னே வந்தான்.

அதற்குள் சிநேகன் தொடர்ந்து சத்தம் போட்டிருந்தான்.

வந்தவன் யார் சத்தம் போட்டது எனப் பார்க்க… அங்கே சிநேகன் நின்றிருக்க… அவனின் முகவெட்டு அந்தத் தோற்றம்… சிநேகனைப் பார்த்து அப்படியே அதிர்ந்து போனான்!

ருத்ரமூர்த்தியாகத் தன் முன்னால் நின்றுகொண்டிருப்பது யாரென்று புரிந்து போனது. உடனே காரை நகர்த்தி வேறிடத்தில் நிறுத்த விளைய… பாக்கெட்டிலிருந்து கார் சாவியை எடுத்தவன் பதட்டத்தில் அதனைக் கீழே நழுவ விட்டான்.

சிநேகன் அவனைப் பார்த்த பார்வையில் உடனே உச்சா வரும் போல் உணர்ந்தான் அந்த ஓட்டுநர்.

சிநேகன் பொறுமையானவன் தான். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஏதோ ஒரு ட்ரிகர் கோபத்தைக் கிளப்பிவிட்டால் இதோ இந்த நிலைமை தான்.

இன்று இந்தச் சூழலில் அவன் இப்படிக் கிளம்பவில்லை என்றால் தான் அதிசயம்.

அதற்குள் மற்ற இரண்டு காரோட்டிகளும் சத்தம் கேட்டு வெளியே வந்திருந்தனர். அதில் ஒருவர் ஐம்பது வயதைத் தாண்டிய மனிதர்.

“மித்ர பாபு!” என விளித்துக்கொண்டு முகத்தில் பரவசம்… உடல்மொழியில் பர பரப்புமாக ஓட்டமும் நடையுமாக அவனருகில் வந்து நிற்க…

“வீர்… மேரா பிரேம (என் பிரிய) வீர்!” என அவரை மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக அணைத்து; அவர் முதுகில் தட்டிவிட்டு விலகினான் சிநேகன்.

“பாபூ” அந்தக் காரோட்டி தன்வீருக்கு நாத்தழு தழுத்தது.

“ஏன்டி இது கல்லுல நீலு? எல்ல உன்னாவு வீர்… எப்புடு வச்சாரு?” (என்ன இது கண்ணீர் விட்டிட்டு? எப்படி இருக்க வீர்… எப்ப வந்தீங்க?) என்று கனிவுடன் கேட்டான் சிநேகன்.

சற்று முன்னர் வர பிரசாத் சௌத்ரி – துர்கேஷ்வரி சௌத்ரி அவர்களின் பேரனாக அதட்டலுடன் ஓங்கி நின்றவனும் அவனே!

தற்பொழுது சம்யுக்தா ரவீந்திர சௌத்ரியின் மைந்தனாக இனிமையுடன் பேசி நிற்பவனும் அவனே!

சிநேகமித்ர சௌத்ரி!

‘சங்கீத ராஜூ’ (music king) என்றழைக்கப்படும் தி கிரேட் சிங்கர் பிரதாப் சௌத்ரியின் கொடுக்கு (மகன்).

தன் கார் சாவியை தன்வீரிடம் தந்தான் சிநேகன். அவன் சொல்லாமலேயே தன்வீருக்குத் தெரியும் தான் என்ன செய்ய வேண்டும் என்று. சிநேகன் கண் குறிப்பும் கூட காட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கிடையே இல்லை.

பின் மன்னாரிடம் திரும்பினான் சிநேகன்.

“வாங்கிட்டு வந்த ஜாமான்களை எங்க வைக்கிறதுன்னு தாத்தாட்ட கேட்டிட்டு வை. அதுக்கும் முன்னாடி ஓடிப் போயி பக்கவாட்டி மாடிக்கதவைத் திறந்து வை!” என்றுவிட்டு பங்களா வாசலுக்குள் நுழைந்தான்.

ஆனால், வீட்டின் தலைவாசல் வழியே உள்ளே செல்லாமல், வீட்டின் இடது பக்கம் போகும் பாதையின் வழியே விறு விறுவென நடந்து போனான்.

அவனுக்கு வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர்களை இப்பொழுது எதிர்கொள்ள வேண்டாம்!

அவர்களைத் தற்காலிகமாகத் தவிர்க்கும் பொருட்டே நேரே வீட்டினுள் நுழையவில்லை. பூட்டிக் கிடக்கும் பக்கவாட்டு மாடிப்படிகளின் வழியே தன் பகுதிக்குப் போய்க்கொண்டிருந்தான்.

அந்தப் பொலிவிழந்த பழைய பங்களாவைக் கண்டு அங்கு வசிப்பவர்களையும், பகட்டில்லாத அவ்வூரையும் சாதாரணமாக எடை போட்டிருந்தான் அந்த முதலாம் ஓட்டுனர் விவேக்.

அவனைப் பிடித்து வாங்கு வாங்கென வாங்கினான் தன்வீர். அக்குடும்பத்தினருக்குப் பல வருடங்களாக கார் ஓட்டுநராகப் பணி புரிபவன்.

தன்வீர் சொன்னதை மற்ற ஓட்டுநர் ராஜேஷும் கேட்டுக் கொண்டான். தானாக அந்த இரண்டு இளைய ஓட்டுநர்களின் உடல்மொழியில் மாற்றம் வந்தது. கண்களில் ஒரு பயம் கூட.

தவறு செய்துவிட்ட பயம்! எப்படியும் ஒரு ஒன்குயரி வரும். ஒழுங்கு நடவடிக்கையென ஏதாவது வழங்கப்படும்!

பின்னர் தன் மித்ர பாபு ஓட்டி வந்த அந்தப் பழைய காரை பயபக்தியுடன் தானே பங்களா கார் தடத்தில் கொண்டு பதமாக நிறுத்தினான் சம்யுக்தாவின் சாரதி தன்வீர்.

மன்னார் வந்து சேரும் முன்னர் கார் டிக்கியில் இருந்த சாமான்களும் இறக்கப்பட்டிருந்தன.