காதல் கஃபே – 9

9

“எப்ப வந்தே?” ஜெனியைப் பார்த்து இயல்பாக விசாரித்த சித்தார்த், “அப்பா வெளில தான் நின்னு பேசிட்டு இருக்காரும்மா…” என்று தன் தாயிடம் சொல்லிவிட்டு அவரிடம் ஏதோ மருந்துகளைப் பற்றி விசாரித்தான்.

கெளரி அருகே படுக்கையில் அமர்ந்து இருந்த ஜெனி மொபைலுக்கு வெளிச்சம் பாய்ச்சி மணி என்ன என்று கவனித்தாள். நேரம் ஆவதை உணர்ந்து ‘சரி, நாம கிளம்பலாம்’ என்று தான் கொண்டு வந்த பைகளை எடுத்துக் கொண்டவள்,

“நான் கிளம்பறேன் ஆன்ட்டி…” இவள் சொல்வதற்குள்..

“ஜெனி வர்றியா, கீழ போய்ட்டு வரலாம்” ஏதோ பார்மசி பில்களை கோப்பில் வைத்தபடி சித்தார்த் இவளைக் கேட்க “கூட்டிட்டுப் போய்ச் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுடா” கௌரி மகனிடம் சொன்னார்.

மறுத்து சூடாகப் பேச எண்ணியவள் கௌரியின் முகமலர்வை கெடுக்க விரும்பாமல் அவனுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

“அப்புறம் எப்படி இருக்க?” லிஃப்ட்டில் எண்ணை அழுத்தியவன் இவளை திரும்பிப் பார்க்க, ‘வராத ஸ்மைலை எதுக்கு வலிய வர வைக்குற?’ ஜெனிக்கு எரிச்சலாக இருந்தது.

“ஏன், ‘எதுக்கு வந்த ? கிளம்பு’ன்னு நேரடியா சொல்லாம ‘வா, கீழ போய்ட்டு வரலாமா’ன்னு நேக்கா சொல்றியா? நீ சொல்லவே வேணாம், நானே கிளம்பிட்டேன்” தோளில் தொங்கிய கைப்பையின் வாரை இழுத்துப் பிடித்துக் காரமாய்ப் பொரிந்தாள் அவள்.

“ஏய்.. லூஸு ஏன் இப்படிப் பேசுற?”

“ரொம்ப நடிக்காத சித்தார்த். அம்மாவுக்கு இவ்ளோ தூரம் ஆகியிருக்கு. ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லணும்னு உனக்குத் தோணல இல்ல… அதுக்கும் அன்னிக்கு ராத்திரி அங்கிருந்து தான் நீ கிளம்புற… இந்த மாதிரி வெட்டி விட்ட மாதிரி நீ நடந்துப்பன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..”

“ஓஓ… அதுவா?”

“எனக்கிருந்த டென்ஷன் அப்படி ஜெனி. அம்மாவுக்குத் திடீர்னு முடியல. நேரா ஐசியூல கொண்டு போய் வச்சிட்டு அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்னு… டாக்டர்ஸ் எங்ககிட்ட எந்தப் பதிலும் சரியா சொல்லாம… அந்த இரண்டு நாளும் நரகம். என்ன பிரச்சனைனு தெரியுறதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துச்சு, தெரியுமா…?”

“இன்னொரு பக்கம் பாக்டரில இந்த நேரம் பார்த்து அவ்வளவு பிரச்னை. நீ இங்க வந்துட்டு போனன்னு தெரியும். அதனால விஷயம் உனக்குத் தெரியுமேன்னு பேசாம விட்டுட்டேன். எனி ஹவ் இன்னிக்கு நைட் கண்டிப்பா உன்கிட்ட பேசணும்னு நினைச்சுட்டே இருந்தேன், நீயே இங்க இருக்க…”

“நல்லா சமாளிக்குற சித்தார்த்…” ஆதங்கமாய்ச் சொன்னவள், “சரி, நான் கிளம்புறேன்” மின்தூக்கி அருகே நின்றபடி அவர்கள் பேசியதால் அவள் அப்படியே கிளம்பினாள்.

“ப்ச்.. கோச்சுக்காதே வா… லேப் வரைக்கும் போய்ட்டு வரலாம்” அவள் கைப்பற்றித் தடுத்தவன், அவள் மேலும் மறுப்பதற்கு முன்னால் அவசரமாகச் சொன்னான்.

“இன்னிக்கு தான் பயாப்சி ரிபோர்ட் வருது…” சொல்லும்போதே அவன் முகம் வெளிறியதில் ஜெனி கவலையாய் நிமிர்ந்து பார்த்தாள்.

பிடித்திருந்த அவன் விரல்களின் நடுக்கம் அவளுக்கும் புரிய, “அதெல்லாம் ஒன்னும் இருக்காது, பயப்படாதே…” கையை அழுத்திக் கொடுத்தாள். பயாப்சி என்றதும் அவன் பயப்படுவது புரிந்தது.

“இதெல்லாம் ரொட்டீனா பண்ற டெஸ்ட் தானே… டென்ஷன் ஆகாதே..”

“இங்கேயே டெஸ்ட் பண்ணியிருந்தா பயப்பட மாட்டேன். ஏதோ ஒரு டெஸ்ட்டை சென்னை ஸ்டான்லில போய்க் கொடுத்துட்டு வர சொன்னாங்க.. அது தான் பயமாயிருக்கு…”

“இப்பல்லாம் அந்த மாதிரி ரொம்ப காமனா போச்சே ஜெனி, அவங்க இரண்டு பேருக்கும் தெரியாது. தெரிஞ்சா அப்பா அப்படியே உடைஞ்சு போயிடுவாரு…”

“ப்ச்… நீயே ஏன் எக்ஸ்ட்ரீமா நினைக்குற? வா…. போய்ட்டு வந்துடலாம்” ஜெனி லேப் எங்கே என்று அங்கிருந்த அம்பு பலகைகளில் ஆராய்ந்தாள்.

இருவரும் சோதனைக்கூடம் இருக்கும் தளத்திற்குச் சென்று விவரம் சொல்லி, தன்னிடம் இருந்த தாளை சித்தார்த் கொடுக்க, கணினியில் ஏதோ தட்டிய அந்தப் பெண் எழுந்து சென்று ரிப்போர்ட்டை எடுத்து வந்தாள்.

கையில் வாங்கியவனால் அதைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. பயம் தேளாய்க் கொட்ட, விரல்கள் தடதடத்தன.

“இங்க கொடு.” ஜெனி அவனிடமிருந்து வாங்கித் திறந்தாள்.

“ஒன்னும் இல்ல சித்தார்த். ‘பினைன்’னு தான் இருக்கு. அது சாதாரணக்கட்டி தான், இங்க பாரு..” கண்கள் கலங்க, அவள் காட்டியதைப் படித்துப் பார்த்தான்.

“இது ஒன்னும் பயம் இல்ல சார். மேலிக்னன்ட்னு இருந்தா தான் அந்த மாதிரி. உங்க டாக்டர் தெளிவா சொல்லுவாரு.” அந்தப் பெண்ணிடம் காட்ட, அவளும் அதையே உறுதி செய்தாள்.

“ஹப்பா… இப்ப தான் பெரிய பாரம் இறங்கினமாதிரி இருக்கு” பெருமூச்சிட்டவனின் கையைப் பற்றி ஒருமுறை குலுக்கினாள் ஜெனி.

“நான் தான் சொன்னேன்ல.. ரிலாக்ஸ்… சரி… போய்ச் சாப்பிடு போ.. நான் இப்படியே கிளம்புறேன்…” புரிதலான புன்னகையால் தட்டிக் கொடுத்தபடி அவள் தலையசைக்க…

“நீயும் வா… இங்கயே சாப்ட்டுட்டு போ…” சித்தார்த் அவள் விரல்களில் லேசான அழுத்தம் கூட்டி அழைத்தான்.

“இல்ல சித்தார்த், இப்பயே நேரமாகிடுச்சு… நான் போய்க் கதிர் தாத்தாகிட்ட இருந்து சாவி வாங்கணும்….”

“ப்ளீஸ்… வா… சாப்ட்டுட்டு அவரு வீட்டுக்கே போய் வாங்கிக்கலாம்” சின்னப்பையன் போலக் கண்கள் சுருக்கி அவன் கெஞ்சியதில் அவள் கன்னங்குழிய சிரித்தாள்.

“ஹே.. என்ன பார்மாலிட்டி நமக்குள்ள…? ஒன்னு இரண்டு வேலை இருக்குயா. முடிச்சிட்டு நான் வீட்டுக்கு போகணும், அதுதான்… சரியா? ம்ம்.. பை…”

அவன் வற்புறுத்தலை நாசுக்காகத் தவிர்த்த ஜெனி முறுவலுடன் விடைபெற்றாள்.

அவ்வளவு நேரம் கோர்த்தே இருந்தே விரல்களை விலக்கி காரிடாரில் நடந்தவளுக்கு இங்கு வரும்போது அவன் மேல் இருந்த வருத்தம் எல்லாம் போன இடம் தெரியவில்லை.

அவன் நட்பாகப் பேசினால், தன்னை ஒரு நல்ல தோழியாக நினைத்தால் அதுவே போதும் என்பது தான் அவளுடைய ஆதங்கம். அதற்குமேல் எந்தப் பந்தமும் வேண்டாம், அது சாத்தியமும் இல்லை என்பதில் அவள் மிகத் தெளிவாக இருந்தாள்.

********************

“யக்கா… ஜெனி அக்கோவ்.. உன்னைத் தான் கூப்டுறேன்…. எங்க இருக்க நீ?” எதிரில் நின்று கண்கள் முன் கை ஆட்டிய யமுனாவை, “ஏன் இப்படிக் கத்துற? என்னடி வேணும் உனக்கு?” அப்போது தான் காதில் விழுந்த மாதிரி ஏறிட்டுப் பார்த்தாள் ஜெனி.

“ஒரு கஸ்டமரு வந்து நிக்குறாரு.. ஏதோ கம்ப்யூட்டர்ல ஆர்டர் கொடுத்திருந்தாராம்…. வா”

“என்ன ஆர்டர் பண்ணியிருந்தாராம்…?”

“அது வாய்ல நுழைஞ்சா நான் சொல்ல மாட்டேனா?” எழுந்து கொள்ள மனமே இல்லாவிட்டாலும் கடமை அழைத்ததில் ஜெனி எழுந்து சென்றாள்.

சற்றுமுன் காதில் விழுந்த செய்தியில் மனசு குலைந்து போயிருந்தது.

‘யூ டூ?’ இதயத்தில் பாலம் பாலமாக விரிசல் விட்டதில் வந்தவர் என்ன சொன்னார், தான் என்ன எடுத்துக் கொடுத்தோம் என ஒன்றுமே நினைவடுக்குகளில் சேரவில்லை.

“யமுனா, மாஸ்டர் கூட இருந்து என்ன வேணும்னு பார்த்துக்கோ. மணி நீ கொஞ்சம் முன்னாடி கண்ணு வை…“

மாஸ்டர் ஒரியாக்காரர், அதிகமாகப் பேசமாட்டார், சொன்னதைச் சொன்ன அளவில் செய்து விட்டு கிளம்பிவிடுவார். அவரிடம் நாளைக்கு என்ன வேண்டும் என்ற பட்டியல் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

“தாத்தாகாரு…. நான் வீட்டுக்கு போறேன். சாயங்காலம் வரமாட்டேன். நீங்க தான் தனியா மேனேஜ் பண்ணணும். ராத்திரி பூட்டிட்டு சாவியை நீங்களே வச்சுக்கோங்க.”

ஒரு நாளும் இல்லாத திருநாளாகக் காலை வேளையில் அவள் கஃபேவில் இருந்து கிளம்புவது மூவருக்கும் ஆச்சரியம் தான்.

“மாத்திரை ஏதாச்சும் வேணுமா ஜெனிம்மா?” சுரத்தில்லாமல் இருந்த அவள் முகத்தைப் பார்த்துவிட்டு கதிர் கேட்டார்.

“இல்ல தாத்தா, வேணாம்…“

கலங்கியிருந்த அவள் கண்களைக் கவனித்து அதற்குமேல் எந்த அனாவசிய கேள்வியும் கேட்காமல் அவரவர் வேலையை அவரவர் பார்க்க, ஜெனி சோர்வாக மிதிவண்டியை மிதித்து வீடு வந்து சேர்ந்தாள்.

செருப்பை உதறிவிட்டுப் படுக்கையில் குப்புற விழுந்த நொடி கண்களில் நீர் நிரம்பியது.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி…?’ பச்சாதாபத்தைத் தூண்டும் இந்த நான்கு வார்த்தைகள் எத்தனையோ வருடங்கள் கழித்து மேலெழும்பியதில் தேம்பி தேம்பி அழுதாள்.

சில உணர்வுகள் மிக நுண்ணியமானவை. மறைத்து வைக்கலாம், ‘எனக்கொன்றுமில்லை, முழுமையாக வெளியே வந்து விட்டேன்’ என்று வெளி உலகிற்காக நடிக்கலாம். அதுவே தான் மட்டுமே உணர்ந்த நிதர்சனத்தில்….??

மறக்க நினைப்பதை முற்றிலுமாக மறந்து விட முடியாத இயலாமை உயிரின் ஏதோ ஒரு புள்ளியில் ஒளிந்திருக்கும் போலும். சில நேரங்களில் கூடவே இருந்து கொல்லும் விஷம் தான் இந்த ஞாபகங்கள்.

அவளுக்கும் மிகச் சரியாக அந்த நாள் நினைவில் இருந்தது. தேதி, கிழமை, அன்று காலை என்ன சாப்பிட்டோம், என்ன உடுத்தியிருந்தோம் என்பது உட்பட….

அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தாள். பதினேழு வயது இளம்பெண்ணுக்கு உரிய துறுதுறுப்பும், இயற்கையாக அமைந்து விட்ட குறும்பும் என, “சேட்டர் பாக்ஸ்” இதுதான் அவளது செல்லப்பெயர் பள்ளியிலும், நண்பர்கள் வட்டத்திலும்.

வெள்ளை வெளேரென்ற மைதா மாவுகளுக்கு இடையே இந்திய முகத்தின் தீர்க்கமான கண்களும், கூரான நாசியும், சிரிக்கும்போது பளிச்சென்று மலரும் கன்னங்களும் எனக் கொஞ்சம் வித்தியாசமாய், வசீகரமாய் இருந்தவள் பின்னால் திரிய பெரிய ஃபேன் கிளப்பும் உண்டு.

கிண்டல், கேலி, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஒருவரையொருவர் ஓட்டுவது என வெகு ஜாலியான நாட்கள் அவை. சுவையான சோற்றுக்குள் நறுக்கென்று கடிபடும் நெருங்கல் போல அந்த நாள் எதிர்ப்படும் வரை.

அன்று காலை எழுந்த போதே அசவுகரியம் தோன்றியதில் ஜெனி வயிற்றைப் பிடித்தபடி எழுந்தாள். தேதியைப் பார்க்க அவள் எண்ணம் சரிதான் என்றது.

‘போச்சுடா வந்துடுச்சா…’ ஒவ்வொரு மாதமும் இந்த மூன்று நாட்களைக் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அவளுக்கு.

பூப்படைந்ததிலிருந்தே வலியும், வேதனையும் அதிகம் தான். எனினும் இந்த ஒரு வருடமாக ரொம்பவே படுத்தி வைக்கிறது, பள்ளிக்குச் செல்ல முடியாமல் சில நாட்கள் மட்டம் போடும் அளவுக்கு.

வாந்தி, உமட்டல், அடிவயிற்று வலி என்று படுத்துவதில், கட்டில் போதாமல் தரையில் ஒரு மூலைக்கு மறுமூலை உருண்டு இவள் அலறுவதைக் கண்டு வீடே அல்லோகலப்படும்.

அம்மா சீரகத்தண்ணீர் வைக்க, பாட்டி சுடுநீர் பை ஒத்தடம் கொடுக்க, தங்கை லெமன் சோடா கலக்குவாள். இவர்களுக்கு இடையே அப்பா ஒன்றும் புரியாமல் மிரண்டு நிற்பார், ‘ஏதாச்சும் பண்ணேன், ஏதாச்சும் பண்ணேன்’ என்று மனைவியை விரட்டியபடி.

மருத்துவரிடமும் போய் வந்தாயிற்று. கொஞ்ச வருடங்கள் போனால் சரியாகிவிடும் என்று ஏதோ விட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார் எனினும் பெரிதாகத் தீர்வொன்றும் இல்லை.

“ம்மா… எனக்குச் சாப்பாடு வேணாம்மா…” என்றபடி அறையை விட்டு வெளியே வந்தவளை பார்த்தபோதே அம்மா புரிந்து கொண்டார்.

“என்னடி, வந்து தொலைச்சுடுச்சா…?”

அவரும் கை வைத்தியமாய் என்னென்னவோ செய்து தான் பார்க்கிறார். எதற்கும் கட்டுப்பட மாட்டேன் என்கிறதே. அதுவே சிறியவளுக்கு நார்மலான வலியும், வேதனையும் தான். இதற்கு என்ன தீர்வு என்றே அவருக்குப் புரியவில்லை.

‘டாக்டர் சொன்னமாதிரி கல்யாணமானா சரியா போயிடுமோ… எனக்குக் கூட சின்ன வயசுல அப்படித் தானே இருந்துச்சு’ தனக்குள் எண்ணியவர், “பேசாம லீவு போட்டுடேன்டி” என்றார் மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரண மருந்துகளை எடுத்து வைத்தபடி.

“இல்லம்மா, இன்னிக்கு கெமிஸ்ட்ரி லேப் இருக்கு. மிஸ்டர். லியோ மிஸ்ஸிங் அசைன்மென்ட்லாம் அப்புறமா செய்ய விட மாட்டாரு. சரியான சிடுமூஞ்சி…”

பிடிவாதமாய்க் கிளம்பும் பெண்ணுக்கு காலை உணவை வற்புறுத்தி ஊட்டி, எப்படியும் மதியம் சாப்பிட மாட்டாள் என்று தெரியுமென்பதால் மாதுளை பழரசத்தை பாட்டிலில் அடைத்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

காலை முதல் இரு வகுப்புகளில் எப்படியோ சிரமப்பட்டு அமர்ந்திருந்தவள் நேரம் ஆக ஆகத் துடிக்க ஆரம்பித்தாள். ரத்தப்போக்கின் அளவும் வழக்கத்திற்கு மீறி மிக அதிகமாக இருக்க, வகுப்புக்கு இடையே எழுந்து எல்லோர் முன்னாலும் வெளியே செல்ல முடியாத நிலை.

அழுகையை மென்றபடி பக்கத்தில் இருந்த தோழியிடம் முணுமுணுக்க, அவள் மற்றவர்களுக்குச் சொல்ல, அந்த வகுப்பு முடிந்ததும் நான்கு பேராய் இவளை மறைத்தபடி ஒன்றாய் நடந்து, இன்னொரு தோழியின் காரில் ஏற்றி வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

மதிய உணவுக்காக வந்திருந்த அப்பாவும், அவருக்குச் சாப்பாடு பரிமாறியபடி இருந்த அம்மாவும் அழுகையும், அவமானமும் சேர கதறிக் கொண்டே உள்ளே நுழைந்த மகளின் நிலையைக் கண்டு துடித்துப் போனார்கள்.

கொஞ்சமும் தாமதிக்காமல் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல….

 முதலுதவி செய்து, ஒன்று மாற்றி ஒன்று பரிசோதனை என ஆரம்பித்தவர்கள் தவித்து நின்ற பெற்றோர்களின் நெஞ்சில் பெரிய இரும்புக் குண்டை தூக்கிப் போட, ‘கடவுளே’ ஜெனியின் தாய் சிறு கூவலுடன் அப்படியே மடிந்து அமர்ந்து விட்டார்.

ஜெனியின் கருப்பையிலும், சினைப்பையிலும் கட்டிகள் இருப்பதும், அவை வயிற்றுப்பகுதியில் பரவும் அபாயம் உள்ளதும், அப்படிப் பரவினால் அது உயிருக்கே ஆபத்து என்றும் அவர்கள் மருத்துவ வார்த்தைகளில் விளக்க…..

“என்னென்னமோ சொல்றீங்களே..? இப்ப இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் இருக்கு, அதைச் சொல்லுங்க…” தவித்தனர் பெற்றவர்கள்.

நல்லவேளையாக அவை வேறு வகையான கட்டிகள் அல்ல என்பதே பெரிய ஆறுதலாக இருக்க, மருத்துவர் பரிந்துரைத்த ஃபைப்ராய்டுகள் நீக்கும் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டார்கள்.

இத்தோடு முடிந்தது என ஆசுவாசம் அடைவதற்குள் சில மாதங்களில் மீண்டும் அதே பிரச்சனை. குறுகிய கால இடைவெளிகளில் மூன்று முறை ஆபரேஷன் தியேட்டருக்கு சென்ற வந்த பின்னரும் கட்டிகள் திரும்பத் திரும்பத் தோன்றத் துவங்க, மருத்துவர்கள் கைவிரித்து உதடு பிதுக்கினர்.

“ரிஅகரிங் ஃபைப்ராய்ட்ஸ்… இனி நீங்க தான் சொல்லணும். கடைசித் தீர்வு இது தான், ஹிஸ்டரக்டமி….”

கர்ப்பப்பையையும், சினைப்பைகளையும் மொத்தமாக அகற்றி எறிய வேண்டிய வழிமுறை.

கேட்டவுடன் அம்மா அழுது தீர்த்தாள். அப்பா ஊரில் இருந்த அத்தனை மருத்துவர்களிடம் இரண்டாவது கருத்து கேட்டு அலைந்தார். தங்கை தேவாலயங்களுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்ற, பாட்டி விரக்தியுடன் மோட்டுவளையை வெறித்தாள்.

பெண்ணின் உயிரா, இல்லை பிற்காலத்தில் அவள் அடையும் தாய்மை நிலையா? மகளின் உயிரைக் காப்பது தான் தங்கள் முன்னால் இருக்கும் ஒற்றை வழி என்று புரிந்த பின்னால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? கையறு நிலையில் கையெழுத்திட்டார் அப்பா.

மருத்துவர்கள் குறித்த நன்னாள் ஒன்றில் இவளது தாய்மை உறுப்புகள் வெட்டி அகற்றப்பட்டன, சட்டைத் துணியில் கைகள் அளந்து வெட்டுவதை விடவும் குறைவான நேரத்தில்.

வெறும் ஒரு மணி நேரத்தில் ஓ.டியில் இருந்து மயங்கிய நிலையில் வெளியே வந்த மகளைக் கண்டு அம்மா கதறினாள்.

‘வாழ்க்கைனா என்னன்னே தெரியுறதுக்கு முன்னாடி என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா?’

மறைந்து விடியும் பொழுதுகளின் வேகத்தில் மெல்ல மெல்ல அந்தக் குடும்பம் தேறியது. அல்லது தேறியதாய் ஒருவருக்கொருவர் நடித்துக் கொண்டது.

ஜெனியை பொறுத்தவரை முதல் ஒரு வருடம் மிகக் கொடுமையானது.

மாதமொரு முறை எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று சோதிக்கும் மருத்துவப் பரிசோதனைகள், கிட்டத்தட்ட மெனோபாஸ் நிலை போல என்பதால் ஹார்மோன்களின் இழப்பை ஈடு செய்ய அதற்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வது என மனதிலும் உடலிலும் வலி, வலி மட்டுமே நிறைந்த நாட்கள் அவை.

விஷயம் பள்ளியில், நட்பு வட்டத்தில் பரவ, தேவதை போலத் தன்னைப் பார்த்த கண்கள் இன்று அனுதாபத்தில் வெறிப்பதை அவளால் கொஞ்சமும் தாங்க முடியவில்லை.

ஏற்கனவே தொடர் சிகிச்சையில் அந்த வருட படிப்பு வீணாகி இருக்க, ஹோம் ஸ்கூல் முறையில் பள்ளியிறுதி தேர்வெழுத இருந்தாள். எப்போதுமே பெரிதாய் படிப்பவள் இல்லை அவள். சுமாராய் படிக்கும் கூட்டத்தில் ஒருத்தி ரகம்.

இப்போது சுத்தமாய்ப் படிப்பு மனதில் ஏறவில்லை. யாரைப் பார்த்தாலும் அழுகையும் ஆத்திரமும் மண்டியது.

உணர்வு ரீதியாக ‘நான் ஒரு யூஸ்லெஸ்’ என்று சதா மனதைக் கீறும் தாழ்வுணர்வில் தொட்டதற்கெல்லாம் தங்கையிடம் சண்டை, காரணம் இல்லாமல் அம்மாவிடம் முகம் திருப்புவது, எதிர்த்து கத்துவது, கண்டித்தால் ‘ஓ’வெனக் கதறி அழுவது எனத் தன்னியல்பில் இருந்து முற்றிலும் மாறி அவளுக்கு அவளே புதிதாகத் தெரிந்தாள்.

வீட்டில் இருப்பவர்களும் இவளைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து நடக்க, எப்படியோ தேர்வெழுதி தானும் ‘பாஸ்’ என்று பெயர் வாங்கினாளே தவிர அதற்கு மேல் கல்லூரி போகும் உத்தேசமெல்லாம் அவளுக்குச் சுத்தமாய் இல்லை. அவளை அழுத்த மனமில்லாமல் பெற்றவர்களும் வலிந்து வற்புறுத்தவில்லை.

வீட்டிலேயே சும்மா இருந்தவள், ஒருகட்டத்தில் தான் நடந்து கொள்ளும் விதம் எவ்வளவு அபத்தம் என அவளுக்கே புரியத் துவங்கியதில் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்வதும், பாட்டியுடன் வாக் போவதும் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கூட்டில் இருந்து வெளிவர ஆரம்பித்தாள்.

ஒரு மதிய நேரம் பொழுது போகாமல் தங்கையின் வகுப்பில் கொடுத்திருந்த துண்டறிக்கைகளைப் புரட்டிக் கொண்டிருந்தவள், எதேச்சையாக அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் ப்ரோக்ராம் பற்றிய குறிப்பைப் படித்துப் புருவம் உயர்த்தினாள்.

‘ஓ.. இப்படில்லாம் கூட இருக்கா?’ லேசான வியப்பிற்கு மேல் அதைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை. எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிட்டு பிறகு மறந்தும் போனாள்.

“இனி என்ன பண்றதா இருக்க, என் கூட கம்பெனிக்கு வாயேன்…” மரங்கள் அறுக்கும் டிம்பர் கம்பெனி வைத்திருந்தார் தந்தை. அவள் வீட்டிலேயே இருந்த முதல் ஆறு மாதங்கள் வரை அமைதி காத்த அப்பா, மெல்ல மெல்ல வற்புறுத்த துவங்க…

உண்மையில் அவளுக்கு அந்த ஊரில் இருந்த யார் முகத்தையும் பார்க்க பிடிக்கவில்லை. சிறிய டவுன் என்பதால் அங்கே எந்த ரகசியங்களும் இல்லை. எல்லாமே பட்டவர்த்தனம் தான்.

தெரிந்த முகங்களுக்கு இடையே, பரிதாபமான பார்வைகளுக்கு நடுவே இயல்பாய்க் காட்டிக் கொண்டு வலம் வரும் சங்கடம்…

‘ஓ நோ… நான் மாட்டேன்’

“இல்லப்பா.. நான் படிக்கப் போறேன்.” அவரை மறுப்பதற்கென அவசரமாகச் சொன்ன வார்த்தைகள் தான்.

“ஹ்ம்.. தாராளமா படி.. என்ன வேணும்னாலும் படிடா… வா.. இன்னிக்கே போய் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வரலாம்” அவர் ஆர்வமாய்ப் பரபரக்க, “இங்க இல்ல பப்பா.. நான் இந்தியா போய்ப் படிக்கிறேன்…” என்றாள் தான் என்றோ பார்த்த தகவலை ஞாபகத்தில் கொண்டு வந்து.

“இங்க இல்லாத படிப்பை அங்க தனியா இருந்து என்ன படிக்கப் போற? எதா இருந்தாலும் இங்கேயே படி”

ஆரம்பத்தில் தடைப் போட்டவர்கள், இவளது முரட்டுப் பிடிவாதத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ‘சரி, அப்படியேனும் இவளது மனதுக்கு ஒரு மாற்றம் வந்தால் நல்லது தானே’ என ஒருகட்டத்தில் இறங்கி வந்தார்கள்.

கடல் கடந்து தனியாய் பெண்ணை அனுப்பத் தயங்கினாலும் தன் சொந்த ஊருக்குத் தானே செல்கிறாள் என்று ஒருவகையில் அம்மாவும் மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அப்படித்தான் பாண்டிச்சேரி வந்து சேர்ந்தாள்.

அம்மம்மா, தாத்தாவுடன் சிறு வயதில் ஓரிருமுறை வந்து போன ஊர் தான். அந்த நாள் ஞாபகங்கள் எதுவும் பெரிதாக நினைவில் இல்லை என்றாலும் அம்மண்ணின் காற்றும், கடலும், எங்கும் கவிழ்ந்திருந்த அமைதியும், பரபரப்பற்ற நிதானத்தன்மையும் ஒருவித ‘சென்ஸ் ஆஃப் பிளாங்கிங்’கை கொடுத்தது சத்தியம்.

பாட்டியுடன் சேர்ந்து செய்யும் பேக்கிங் வேலைகளின் போது மட்டுமே தான் தானாக இருப்பது போல உணர்ந்ததில் உணவு தொழில்நுட்பத்தில் இளநிலை படிப்பைத் தேர்ந்தெடுத்து இருந்தாள்.

தன் கசந்த மனநிலையை மாற்ற நண்பர்களிடம் கிண்டல், கேலி என ஆரம்ப நாட்களில் ஜெனி வலிந்து ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் நாளடைவில் அவள் இயல்பாகவே மாறிப் போனதில் அவளைச் சுற்றிப் பெருகிய நண்பர்கள் கூட்டம் மறந்திருந்த அவளது துறுதுறுப்பை மீட்க உதவியது.

கூடவே பொழுதுபோக்காய் கல்லூரித் தோழிகளுடன் ஆரோவில் கிராமத்திற்குச் சென்று வாலண்டியர் வேலைகள் செய்ய, அங்குப் பயின்ற யோகா மற்றும் சில மனநல பயிற்சிகள் மனதில் இருந்த கசடுகளை நீக்கி நேர்மறையான எண்ணங்களை விதைத்ததில் இயல்பாகக் கை கூடின எதிலும் நல்லதை தேடும் சுபாவமும், பாஸிடிவ் அவுட்லுக் –ம்.

யுஜி முடித்ததும் பிரான்ஸ் திரும்ப மனமில்லாமல் சில பிஜி டிப்ளமோ படிப்புகள் படித்தாள். மிஞ்சிய நேரத்தில் அதுநாள் வரை வழக்கு மொழியாக மட்டுமே அறிந்திருந்த தாய்மொழி தமிழை ஸ்பஷ்டமாய்ப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டாள்.

நாட்களின் வேகத்தில் பிறந்த இடத்து அடையாளங்கள் பின்னால் போக, தமிழ் மண் தன்னை முழுமையாகத் தத்தெடுத்துக் கொண்டதில் பொருள் பொதிந்த ஒரு அமைதியை தனக்குள் உணரத் துவங்கினாள்.

அந்த நேரம் தான் இந்த கஃபே இருக்கும் இடம் லீஸுக்கு வந்தது. எப்போது வருகிறாய் எனத் தொணத்திக் கொண்டே இருக்கும் பெற்றோரை சமாளிக்க இதை விட நல்ல பதில் இருக்கமுடியாது எனத் தன் இந்திய விசாவில் தேவையான மாற்றங்கள் செய்து, துணிந்து அந்த இடத்தை லீஸ் எடுத்தாள்.

அப்படி விளையாட்டாய் ஆரம்பித்த தொழில் இன்று அவள் உயிர் மூச்சாக மாறி இருக்க…

‘எனக்கு இது மட்டும் போதும்னு நானே எதையும் நினைக்காம இருக்கேன். இவன் யாரு திடீர்னு உள்ள நுழைஞ்சு எல்லாத்தையும் நோண்டுறதுக்கு…?’

தன்னுடைய ரகசியங்களை, தனக்கு மட்டும் தெரியவேண்டிய அந்தரங்கங்களைத் தன் அனுமதி இல்லாமல் ஒருவன், அதுவும் தான் ஆழமாக நேசிக்கும் ஒருவன் தோண்டிப் பார்ப்பது எவ்வளவு பெரிய துயரம்?

யாரோ தன் ஆடையைத் தொட்டு இழுத்து விட்டது போல அவளுக்குக் கூசியது.

இன்று காலை தொலைபேசி வழி வந்த தகவலின் உபயத்தால் எப்போதோ விடுபட்டதாய் நினைத்திருந்த கழிவிரக்கம் மனதின் அடியில் இருந்து எழும்பியதில் எவ்வளவு நேரம் சென்றதோ….

அழுகை கறைகள் கன்னத்தில் படிந்திருக்க அசையாமல் அப்படியே படுத்துக் கிடந்தாள்.

“ஹேய்… எப்படி இருக்க? இன்னிக்கு ஈவினிங் ப்ரீயா?” சொல்லி வைத்தது போல அன்று இரவு சித்தார்த் அவளை அழைத்தான்.

அவன் குரல் காதில் விழுந்ததும் அடைத்த தொண்டையை ஒருமுறை செருமி மூக்குறுஞ்சிக் கொண்டாள் ஜெனி.

“நீ டாக்டர் தீப்தி ஷர்மாவை போய்ப் பார்த்தியா?” துப்பாக்கியில் இருந்து வெளியேறும் தோட்டாவின் வேகத்தில் இவள் கேட்க…

“ஆமா…” தயக்கமே இல்லாமல் வந்தது அவன் பதில்.

“அவங்ககிட்ட என்னைப் பத்தி விசாரிச்சியா…?”

“ஜெனி அது வந்து…”

“சே யெஸ் ஆர் நோ…”

“….ஹ… யெஸ்… ஆனா “

“ஷட்டப் சித்தார்த். மேல ஒரு வார்த்தை பேசாதே…” ஜெனி சீறினாள்.

“உன் மேல நான் நிறைய மதிப்பு வச்சிருந்தேன். யூ ப்ரூவ்ட் தட் ஐ’யம் வ்ராங்… என் தனிப்பட்ட அந்தரங்கத்துல மூக்கை நுழைச்சு… உனக்கு என்ன தெரியணுமோ, அதை நானே சொல்லிட்டேன். அதையும் தாண்டி என்னைப் பத்தி அவங்ககிட்ட விசாரிக்கிறதுக்கு நீ யாரு…?”

 “ஐ ஹேட் யூ… ஐ ஹேட் யூ ப்ரம் தி பாட்டம் ஆஃப் மை ஹார்ட்”