காதல் கஃபே – 3

3

‘அம்மா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவாங்களே… ஹாம்… பாத்திரக்காரியா.. சை. இல்ல.. ஆத்திரக்காரி… ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டுன்னு… ம்ம்… உண்மை தான்.. ஆத்திரக்காரி, அவசரக்காரின்னு எல்லாக்காரியும் நான் தான்…’

மனசாட்சி கொஞ்சமும் கருணை இல்லாமல் காட்டு காட்டென்று காட்டுவதில் சுத்தமாய்த் தூக்கம் வரவில்லை ஜெனிக்கு. தூக்கம் வராதது மட்டுமல்ல. இரண்டு நாள் முன்பு சீஸ் பாக்டரிக்கு சென்று வந்ததில் இருந்து இதயம் கூட ஒருவித படபடப்பிலேயே துடித்துக் கொண்டு இருக்கிறது,

அன்று மியம் சென்று விட்டு கலவையான உணர்வுகளுடன் வீடு வந்து சேர்ந்தவளுக்கு ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்த பின்னால் தான் கொஞ்சம் நிதான மனநிலை வாய்த்தது.

யோசித்துப் பார்க்கையில் தன் சிறு குழந்தையை ஒத்த முகந்திருப்பல் கொஞ்சம் அல்ல, ரொம்பவே அதீதமாகத் தோன்ற, நங் நங்கென்று தலையில் குட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது..

தான் சித்தார்த்தை கண்டவுடன் காரணமேயில்லாத லூஸுத்தனத்துடன் நடந்து கொண்டதும், அவன் தடுத்து என்னவென்று கேட்டபோது ஒன்றும் சொல்லமுடியாமல் ‘பே’வென விழித்ததும்…

என்னவென்று சொல்வாள் இவள்? ‘நீ ஏன் என்னை பெர்சனலா கூப்பிடல…’ என்றா?

இவர்களின் பேச்சுக்கு இடையே ஆய்வுக் குழு அதற்குள் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்திருக்க, அங்குச் சென்று அவர்களுடன் இணைய வேண்டிய கட்டாயத்தில் அவள் மேலிருந்த தன் கரத்தை விலக்கிக் கொண்டவன், “நீ பாட்டுக்கும் கிளம்பிடாதே… என் சர்டிபிகேஷனே உன்னை நம்பித்தான் இருக்கு…” என்றபடி விரைந்து விட….

அவன் அப்பட்டமாக நக்கலடித்து நகர்ந்து சென்றதில் தன்னையும் மீறிய சிரிப்பு வந்தது ஜெனிக்கு. ‘கொழுப்பைப் பாரேன்’

அந்தச் சிரிப்புடனே மற்றவர்களைத் தொடர்ந்தாள். தொழிற்சாலையின் முகப்பு ஹாலில் அனைவரும் நிற்க, நிறுவனத்தின் தர மேலாளர் அங்கு நடக்கும் வேலைகள் பற்றிக் குட்டி அறிமுகம் செய்து வைத்தார்.

பாலில் இருந்து எத்தனையோ உப பொருட்கள் கிடைத்தாலும், மற்ற கிளைகளுக்குள் செல்லாமல் அதில் இருந்து விதவிதமான பாலாடைக் கட்டிகளை மட்டும் தயாரிக்கிறது இந்த ‘மியம்’ தொழிற்சாலை.

இங்கு முப்பத்தெட்டு வகையான சீஸ் வகைகளைப் பசு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு என வேறுபட்ட பால் வகைகளிருந்து தயாரிப்பதை, ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு மாதிரி கல்ச்சர் சேர்ப்பதை அவர் சுவைப்பட விளக்கினார்.

ஒவ்வொரு நிலையாக மெஷினரிகள் செயல்படுவதைக் காட்டி அவர் விளக்கிச் செல்ல, அவரைப் பின்பற்றி அனைவரும் உற்பத்தி வளாகத்திற்குள் நடந்தார்கள்.

பாலை விவசாய சொசைட்டியிலிருந்து வாங்குவது, தரம் பிரித்து உள்ளெடுப்பது, பாக்டீரியா நீக்கி பேஸ்டுரைஸ் செய்வது – இவை எல்லாப் பால் நிறுவனங்களிலும் செய்யப்படும் தொடக்கநிலை பணிகள் தான். அந்தப் பகுதிகளை அதிகம் தேங்கி நிற்காமல் சீக்கிரம் கடந்தார்கள்.

தரமான பாலை பகுதி பகுதியாகப் பிரித்து அந்தந்த சீஸ் வகைக்குரிய கல்ச்சர் சேர்த்து பெரிய பெரிய தொட்டிகளில் கலக்கி, திரிதிரியாகப் பிரியும் தயிரை மஸ்லின் துணி போன்ற மெல்லிய விரிப்பில் கட்டி, ராட்சச கொக்கிகளில் அவற்றை மாட்டி, உயரத் தூக்கி நீர் போக வடித்து…

வடிப்பட்ட பாலாடைகளை அரவையில் அரைத்து ஒரே பதத்திற்குக் கொண்டு வந்து, நடுவில் உப்பு தெளித்து, க்யுரிங்(Curing) நேரம் தேவைப்படும் சீஸ் வகைகளை அதற்குரிய பெட்டிகளில் அடைத்து என…

செடார், பார்மீசன் போன்ற வகைகள் ஆறு மாதம், பத்து மாதம் என க்யுரிங்கில் இருக்கவேண்டுமாம். இதை சீஸ் ரைபினிங்(ripening) என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு காய் பழமாகி வருவது போல.

அந்த மாதிரி வகைகளை ஆறு ஏழு டிகிரி வெப்பநிலையில் குளிர் சேமிப்பு அறையில் பதப்படுத்திப் பிறகு ப்ராசஸ் செய்கிறார்கள்.

மொஸரெல்லா, ஜேக் மாதிரியான இனங்களை உடனடியாக ப்ராசஸிங் செய்ய முடியும் என்பதால் அவற்றை சீஸ் கட்டிகளாக, துருவல்களாக, சீஸ் க்ரீமாக என ஒவ்வொன்றிலும் பல விதம்… பிறகு அவற்றிற்கான பிரத்யேக பேக்கிங் என…

ஒவ்வொரு படியிலும் பல்வேறு நுட்பங்கள், தரப் பரிசோதனைகள், நிரூபணங்கள் எனப் பார்த்து பார்த்து நகர்ந்து….

பெரிய ஆர்வமில்லாமல் சற்றே சுணங்கிய மனதுடன் உள்ளே வந்தாலும் அங்குள்ள நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஜெனி தன்னையும் அறியாமல் மூழ்கித் தான் போனாள். தன் படிப்பின் ஒரு பகுதியாக எப்போதோ படித்த விஷயங்கள் தான்.

மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வதில் ஒரு சந்தோஷம் வந்திருந்தது. கூடவே பிரமிப்பும். ஒரு பங்கு சீஸ் செய்யக் குத்துமதிப்பாக எட்டிலிருந்து பத்து மடங்கு பால் தேவைப்படும் செலவு பிடித்த சமாச்சாரம்.

கடைக்குப் போய்க் காசு கொடுத்தால் எவ்வளவு வேண்டும் என்றாலும் கிடைக்கும் பொருள் தான். குளிர்பதனியில் வைத்துத் தேவைப்படும்போது அலட்சியமாக எடுத்து உபயோகிப்பதற்குப் பின்னால் எவ்வளவு வேலைகள், நுணுக்கங்கள், எண்ணற்றவர்களின் உழைப்பு உள்ளது…!!!??

தொழிற்நுட்பம் தாண்டி அங்கு வேலை செய்யும் பணியாளர்களின் கரம், சிரம், புறம் என அனைத்தும் மறைத்த சேனிடைஸ்ட் செய்யப்பட்ட சீரான ஆடைகள், தொப்பி, கையுறைகள்…

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தரையை, உற்பத்தி இடத்தைச் சுத்தம் செய்யும் நேர்த்தி, வே (whey) நீரை கூட வீணாக்காமல் சுத்திகரிக்கப் பயன்படுத்தும் சுழற்சிநுட்பம் என… இப்படி நிறைய விஷயங்கள் ‘வாவ்’ சொல்ல வைத்தன.

தன்னுடைய ஏழைக்கேத்த எள்ளுருண்டை கஃபேயில் என்னவெல்லாம் மேம்படுத்தலாம் எனச் சில விஷயங்களை மனதில் குறித்துக் கொண்டாள்.

ஏற்கனவே விரிவான ஆய்வுகள் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று விட்டதால் கலெக்டிவ் ப்ரெசென்டேஷன் போல அவர் சுருக்கமாக விளக்கிச் சென்றதில் ஒன்றரை மணி நேரத்தில் மொத்த ஆலையையும் சுற்றி வந்து விட்டார்கள்.

மாதவன் ஆளையே காணவில்லை. கண்ணில் படும் சமயங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தான். சித்தார்த் அங்கங்கே தென்பட்டான். அவன் குழு தடுமாறிய, சிந்தித்த சில கேள்விகளுக்கு மட்டும் தான் முன் வந்து பதில் சொன்னான்.

மற்றபடி அவனது மேலாண்மை குழுவே மொத்த நிகழ்வையும் நடத்திச் சென்றது ஒருவகையில் நேர்த்தியாக அழகாக இருந்தது. இது ஒரு கடைசிக்கட்ட ஃபார்மாலிட்டி போல என்பதால் தான் அவனும் ரிலாக்ஸ்டாகத் தெரிந்தானோ, என்னவோ!!?

வெளியே வந்தவர்கள் வரவேற்பு கூடத்தில் மீண்டும் குழுமி நிற்க, ஆய்வுக் குழுவின் தலைவர் முன்னால் வந்து பேசினார்.

“எங்க ஆய்வு இதோட முடியுது. சாயங்காலம் இறுதி அறிக்கையை நிறுவன நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம். வி ஆர் வெரி மச் இம்ப்ரெஸ்ட். கங்கிராட்ஸ், எங்கள் தரச்சான்றிதழை இன்னும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கிறோம்…” என்று அவர் அறிவிக்க, பலத்த கரகோஷம் அங்கே.

“தேங்க் யூ..” சித்தார்த் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கை குலுக்கினான். அவனும் தன் பங்குக்குக் குட்டி நன்றியுரையை நிகழ்த்தினான்.

ஆய்வுக் குழுவிற்கும், பயனாளிகள் தரப்பிலிருந்து வந்திருக்கும் இவர்கள் மூவருக்கும் தனித்தனியே நன்றி சொல்லி, தன் நிறுவன ஊழியர்களை மெச்சி, எல்லோரையும் தட்டிக் கொடுத்து…

“வந்த எல்லோருக்கும் நன்றி. லஞ்ச் ரெடியா இருக்கு. அடுத்த செஷன் இரண்டு மணிக்குத் தொடரும்…” அவன் பேசி முடித்ததைத் தொடர்ந்து முக்கிய நபர்கள் முன் நகர்ந்து விட…

‘இதுக்கு மேல என்ன? நாமும் கிளம்பலாம்… இப்ப யார்கிட்ட சொல்லிட்டு போறது?’

அந்த ஐந்து நட்சத்திர செஃப்பும், கேக் கம்பெனி மேலாளரும் கூடக் கிளம்புவது தெரிய, தனக்கு முன் சென்ற கல்லூரிக் கும்பலுக்குள் நுழைய விரும்பாமல் முன்பு நின்ற அதே வரவேற்பு முகப்புப் பகுதியில் சற்றே தேங்கினாள் ஜெனி.

அவள் ஓரந்தங்கிய இடத்தின் சுவரில் கண்ணாடிப் பேழைக்குள் ஷோகேஸாக வைக்கப்பட்டு இருந்த கலைப்பொருட்கள் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்ததில் சற்று நேரம் வேடிக்கை பார்த்து நின்றாள்.

ஆதிகாலத்தில் பாலாடைக் கட்டிகளை மனிதன் எப்படி எதேச்சையாகக் கண்டறிந்தான் என்ற வரலாற்றை ஒட்டிய கதை நிகழ்வுகள் குட்டிக் குட்டிச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு இருந்தன.

பழங்காலத்தில் கறந்த பாலை ஆடு அல்லது மாட்டுத் தோல் குடுவைகளில் சேமிக்கும் வழக்கமும், கால்நடைகளின் வயிற்றுத் தோலில் இயற்கையாக உள்ள லாக்டிக் அமிலம் பாலோடு உறவாடி திரிவதும்…

குடுவைகள் காற்றில் ஆடி பாலாடையும் தண்ணீரும் தனித்தனியே பிரிவதும், ஆதிமனிதன் அது என்னவென்று புரியாமல் பால் வீணாகி விட்டது எனக் கவலைக் கொண்டு கலங்குவதும், பிறகு சுவைத்துப் பார்த்து மகிழ்ச்சியில் கூத்தாடுவதும்…

நேரில் பார்ப்பது போன்ற உணர்வு தந்த மிகச் சிறிய நுட்பமான மினியேச்சர் சிற்பங்கள்…

தன்னையும் அறியாமல் ரசித்து நின்றவள், கூடம் மெல்ல மெல்ல காலியாகி விட்டதை உணர்ந்து ‘மாதவனுக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டுக் கிளம்பலாம்’ நடந்தபடியே அவள் தன் மொபைலை எடுத்த நிமிடம்…

“ஜென்னி… எங்க கிளம்புற…?” மாதவன் பின்னால் வந்து அழைத்தான்.

“வா.. வா.. சாப்பிடப் போகலாம்… பசி உயிர் போகுது…”

“வேணாம் மாதவா, நான் கிளம்புறேன். வேலை இருக்கு…”

“என்ன வேலை கெடக்கு உனக்கு, அதுவும் இன்னிக்கு? கஃபே லீவு தானே? வா பேசாம…” அவன் அதட்டி வற்புறுத்த, ஜெனிக்கு அதற்கு மேல் எப்படி மறுக்க எனத் தெரியவில்லை. மேலும் பிகு செய்து அவன் நேரத்தை வீணாக்க விரும்பாமல் உடன் நடந்தாள்.

“செட்யூல் எல்லாம் தள்ளித் தள்ளி இப்பப் பாரு மத்தியானமும் இழுக்குது. காலைல ஆரம்பிச்சதே லேட். லஞ்ச் முடிச்சு ஆசிரமம் போய்ட்டு வரலாம்னு ஒரு குரூப் கிளம்பி நிக்குது. இன்னொரு குரூப் ஆரோவில் போகணும்ங்குது. ஒன்னும் சொல்லவும் முடியாம சார் தான் திணறிட்டு இருக்காரு….”

புலம்பிக் கொண்டே மாதவன் நடக்க, சிரித்தபடி ஜெனியும் ஆமோதித்தாள்.

“நம்ம ஊர்ல இது ஒரு தொல்லைப்பா. நினைச்சவுடனே அப்படிலாம் அங்க போக முடியாதுனு சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க… பாண்டில இருந்தாவே நமக்கு எல்லா இடத்துலயும் இன்ப்ளூயன்ஸ் இருக்கும்னு ஒரு தப்பான அபிப்பிராயம்”

அலைபேசி அழைக்க எடுத்து காது கொடுத்த மாதவன், “சொல்லுங்க சார்… இல்லல்ல கிளம்பல. புடிச்சுட்டேன். ஹ்ம்… கூட்டிட்டு தான் போறேன்…” என்றவன், “சார் தான்..” என்றான் அவள் கேட்காமலேயே.

“இந்தா…” அவன் கொடுக்க, இவள் விழித்தாள். “உங்கிட்ட கொடுக்கச் சொன்னாரு…”

“ஜெனி…” அவன் அழைத்த விதத்தில் ஒரு நொடி அவள் தயங்கி நின்று விட்டாள்.

“இங்க டெலிகேட்ஸோட இருக்கேன். ஸாரி… சரியா கவனிக்க முடியல. தப்பா எடுத்துக்க வேணாம். சாப்பிடு.. சாப்டுட்டு கிளம்பு…”

“இட்ஸ் ஆல்ரைட் சித்தார்த்.. நோ பார்மாலிட்டிஸ்…” இவள் சம்பிரதாய வார்த்தைகளுடன் பேசி மாதவனிடம் கொடுத்தபோது தான் தோன்றியது.

‘இவன் எப்போல இருந்து என்னை வா, போ ன்னு கூப்பிட ஆரம்பிச்சான்?’

உணவு விடுதியை அடைந்து பப்பே உணவு எடுத்துக் கொண்டு இவளும் மாதவனும் அமர்ந்தார்கள். நிறைய வகைகள் எனினும் நிதானமாகச் சாப்பிடத்தான் முடியவில்லை. சாப்பாடு நன்றாகவே இருந்தது, ருசியும் தரமுமாக.

மாதவன் இருந்த பரபரப்புக்குத் தன்னால் ஏன் அவன் தாமதிக்க வேண்டும் என்று வேகமாகக் கொறித்து எழுந்தாள்.

“பை மாதவா… சீ யூ…”

“தேங்க்ஸ் ஜென்னி, நீ வந்ததுக்கு…”

“ஹலோ, ரொம்ப சீன் போடாதே… இந்தா.. கூப்பிட்டு சாப்பாடு வேற போட்டுருக்க, வச்சுக்கோ…”

விளையாட்டாக ரிப்பன் கட்டிய குட்டி சாக்லேட் டப்பாவுடன் அந்நிகழ்விற்கான வாழ்த்து அட்டையையும் கைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்தவள் அங்கிருந்தே விடைபெற்றுக் கொள்ள…

“பை ஜென்னி…” மாதவனும் பேசியில் வந்த ஏதோ ஒரு அழைப்பின் அவசரத்திற்கு அவளுக்கு எதிர் திசையில் விரைந்தான்.

அங்குச் சென்று வந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டது. எனினும் இந்த லூஸு புத்தி மட்டும் ஏன் அன்றைய நிகழ்வையே நினைத்துக் கொண்டிருக்கிறது? புரியவில்லை அவளுக்கு.

வேலை பாட்டுக்கு வேலை நடந்தாலும் பேக்கிரவுண்ட் மியூசிக் போலச் சித்தார்த் தன்னைப் பிரத்யேகமாகக் கவனிக்கவில்லையோ என அவ்வப்போது முனங்கும் மனதை கிள்ளி தரையில் போட்டு நச்சென்று நாலு மிதி மிதித்தால் தான் என்ன?

அன்றைய பரபரப்புக்கு இடையே இவளை மதித்து அவன் நான்கு வார்த்தைகள் பேசியதே அதிகம். அதுவும் பார்க்கும் இரண்டாம் சந்திப்பில்.

‘ரொம்ப ஓவரா தான் போற.. அடங்கு… உனக்கென்ன டீன் ஏஜ் பொண்ணுன்னு நினைப்போ?’

அது தானே, அன்று பார்த்தாளே அந்தக் கல்லூரி சிட்டுகளை. அந்தப் பெண்கள் அவர்களுக்குள்ளேயே ஒன்பது, எட்டு, பத்து என விரல்கள் காட்டியபடி கிளுகிளுத்து சிரிக்க, ஜெனியும் நமுட்டாய் சிரித்துக் கொண்டாள்.

‘மார்க் போடுதுங்களா !!!? ஹ ஹா’ பாம்பின் கால் பாம்பறிந்தது.

இளமைத்துள்ளல் பொங்கி வழிந்த அந்தக் கும்பலில் இரு இளம் சிட்டுக்குருவிகள் மட்டும் ரொம்பவே டூ மச்.

அவர்கள் இருவரும் மாய்ந்து மாய்ந்து சித்தார்த்தை சைட் அடிப்பதும், எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் எனப் போட்டிப் போட்டு பாய்ந்து பாய்ந்து அவனிடம் சந்தேகம் கேட்பதும்…

இது புரியாத அந்த மக்கு வெகு தீவிரமாகப் பதில் சொல்வதும், அந்தப் பெண்கள் இரண்டும் திரும்பி ‘கெக்கே பிக்கே’ என்று தங்களுக்குள் கள்ளச்சிரிப்புச் சிரிப்பதும் எனத் தனி சினிமா தான் ஓடியது அங்கே.

‘முடியலைடா சாமி…’

“ஏய்… அது என் கேப்(cap). நீ ஏன்டி பேசுற…?” அந்த ஒல்லிப்பிச்சான் முறைக்க, “கொன்னுடுவேன். உனக்கு முன்னாடி நான் கேப் போட்டுட்டேன். உனக்கு இனி அண்ணன், புரியுதா?” பதிலுக்கு அந்த பாப் கூந்தல் எகிற… இடையே அவர்களுக்குள் செல்லச் சண்டை வேறு.

இவள் பின்னால் நின்றதில் நன்றாகவே காதில் விழ, ஜெனி தன் சிரிப்பை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டாள்.

‘இன்னுமா இந்த கேப் போடுறது புழக்கத்துல இருக்கு…?’ தான் இங்கு வந்து கல்லூரி சேர்ந்த புதிதில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தது நினைவில் வந்தது.

வேண்டுமென்றே ‘அந்த கேப் போட்டுக்கோ, இந்த கேப் போட்டுக்கோ’ என்று வேறு வேறு அர்த்தங்கள் சொல்லி வெகு நாட்கள் தோழிகள் ஏமாற்ற, அர்த்தம் புரிந்த அன்று அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தாள்.

“லையர்ஸ், என்னன்னு தெரிஞ்சுருந்தா நானே நல்லதா செலக்ட் பண்ணியிருப்பேனே… உங்களுக்கு வேண்டாததை எல்லாம் ஏன்டி என் தலைல கட்டுனீங்க…?” எல்லோரும் வேடிக்கை பார்ப்பதை எல்லாம் கண்டு கொள்ளாமல் காம்பஸை சுற்றி சுற்றி துரத்தி….

“என்ன சிரிப்பு? சொன்னா நாங்களும் சிரிப்போம்ல…”

‘இவன் எப்ப பின்னாடி வந்தான் ?’

“ஒண்ணுமில்ல சித்தார்த்… தரையெல்லாம் அங்கங்க வழுக்கிற மாதிரி இல்ல. அதுவும் நீங்க போற இடமெல்லாம்…”

கவலையாக ஷூ கால்களால் தரையைத் தேய்த்துப் பார்த்தவன், அவள் கடைசியாய் சொன்னதைக் கவனித்துப் புரியாமல் விழிக்க…. அவள் பார்வை கிண்டலாக அந்தப் பெண்களைச் சுட்டுவதில் தாமதமாகப் புரிந்து கொண்டு சிரிப்புடன் முறைத்தான்.

“பாவம்.. சின்னப் புள்ளைங்க… விட்டுடு..”

“எல்லாம் வயசுக் கோளாறு” அவன் குறும்பாய் கண்சிமிட்ட….

“நானும் அதையே தான் சொல்றேன். பச்சைப் புள்ளைங்களா இருக்கீங்க… வேணாம், இது அங்கிள், வேற பாருங்கன்னு… சொன்னா கேட்க மாட்டேங்குதுங்களே….”

“ஓய்…. இப்ப என்ன என்னை ஓட்டுறியா நீ?” வாய் விட்டு சிரித்தவன் ஒற்றை விரல் பத்திரம் காட்டி அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றைய நிகழ்வை புன்னகையுடன் புரட்டினாலும் முன்பின் அறியாத ஒருவனிடம், அதுவும் இரண்டாம் முறை சந்திப்பவனிடம் இத்தனை வாய் கூடாது தான். அவளுக்குப் புரியத்தான் செய்தது.

‘அவன் ஸ்போர்டிவா எடுத்துருக்கலாம்…. இருந்தாலும்…’

‘அங்கெல்லாம் டக்குன்னு வேற மாதிரி எடுத்துப்பாங்க… உன் ஓட்டை வாயை எப்பயும் கார்க் போட்டு அடைச்சு வைச்சுக்கோ… ஈஈ ன்னு எப்பயும் லூஸு மாதிரி சிரிச்சிட்டு இல்லாம கொஞ்சம் மெசூர்டா நடந்துக்கோ” சமயம் கிடைக்கும்போதெல்லாம் அட்வைஸ் மழை பொழியும் டேனி இதைக் கேட்டால் தொலைந்தது கதை.

‘இன்னிக்குப் பேசினா கண்டிப்பா உளறிடுவேன். அது வச்சு செய்யும், நாளைக்குப் பேசலாம்…’

காதில் ரத்தம் வருவதை இன்னும் ஒரு நாள் தள்ளிப் போட்டவள், அன்றைய வேலையின் களைப்பில் மெல்ல உறங்கிப் போனாள், உதடுகளில் உறைந்த மென்முறுவலுடன் .