காதல் கஃபே – 10

10

“ஹே ஜெனி, நீ என்னடா இங்க…?”

ரோட்டோர கடையில் நின்று காதணி தேடிக் கொண்டிருந்தவள் தெரிந்த குரலில் திரும்பினாள். தன்னை அழைத்தவரைக் கண்டு அவள் முகம் மலர்ந்தது.

“என்ன ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க?” ஜோல்னா பை ஒன்றை குறுக்காக மாட்டியபடி அருகே வந்த கௌரி ஆசையாக இவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“நான் நல்லா இருக்கேன் மேடம்… நீ எப்படி இருக்க? ஹாஸ்பிட்டலோட இந்த ஆன்ட்டியை மறந்துட்ட பார்த்தியா?”

“இல்ல… கொஞ்சம் வேலை ஆன்ட்டி..” ஜெனி சிரித்து மழுப்பினாள்.

இவரை டிஸ்சார்ஜ் செய்யும் அன்று காலை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தது தான். அதற்குமேல் வீட்டுக்குப் போய்ப் பார்த்து நெருக்கம் வளர்த்திக் கொள்ள அவளுக்கு என்னவோ மாதிரி இருந்ததால் போனில் மட்டும் ஓரிருமுறை அழைத்துப் பேசியிருந்தாள்.

“உங்க உடம்பு எப்படி இருக்கு?” நலம் விசாரித்தாள்.

“ம்ம்.. தேவலைமா. மூனு மாசம் லீவ் போட்டுருக்கேன். வீட்டுலயும் சமைக்க ஆள் போட்டாச்சு. வேலை ஒன்னுமில்ல. சரி, நடந்த மாதிரி இருக்கட்டுமேனு இங்க வந்தேன்”

‘யார் கூட வந்தீங்க?’ இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்து ‘ரொம்ப அவசியமா தெரிஞ்சே ஆகணுமா?’ புத்தி இடக்கியதில் வேறு பேசியபடி தான் வாங்கிய பொருட்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு அவருடன் நடந்தாள்.

“அடடே யாரு இது? எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே!!!?” நான்கு கடை தள்ளி நின்று இளநீர் குடித்துக் கொண்டிருந்தார் சதானந்த். இவளைப் பார்த்ததும் அவர் கிண்டல் செய்ய, “ஓ… நீங்களும் வந்தீங்களா அங்கிள்?”

“அதை ஏன் கேக்குற? மாட்டேன்னவனை இழுத்துட்டு வந்துட்டா…” மனைவியை ஊடலடித்தவர், “இன்னிக்கு கஃபே லீவாமா?” என்று கேட்டார்.

”இல்ல அங்கிள். இருக்கு. கொஞ்சம் காய்கறி வாங்க வேண்டி இருந்துச்சு. லிஸ்ட் கொடுத்துட்டு சண்டே மார்க்கெட்டை சுத்தி ரொம்ப நாளாச்சேன்னு அப்படியே பராக்கு பார்த்துட்டு நடந்துட்டு இருக்கேன்…”

அவரிடம் சிரித்தபடி சொன்னாலும், ‘உங்க பையனால செம மூட் ஆஃப்ல இருக்கேன், அதுதான் இப்படி பேக்கான் மாதிரி தெரு தெருவா சுத்திட்டு இருக்கேன்’ என மனதில் நினைத்துக் கொண்டாள்.

“உடனே போகணுமா ஜெனி..?” கௌரி கேட்டார்.

“இல்ல ஆன்ட்டி… வேலை செய்றவங்க பார்த்துப்பாங்க… அம்மாவுக்குக் கொஞ்சம் காட்டன் சேரிஸ் வாங்கணும், ஒரு பிரண்ட் ஊர்ல இருந்து வந்திருக்கான். இந்த வாரம் கிளம்புறான். அவன்கிட்ட கொடுத்தனுப்பணும்…”

“பாருடா… உங்க வீட்டுலயும் அதே கதை தானா? இந்தப் பொம்பளைங்களுக்குப் பிறந்த ஊர் பொருளை வாங்கிச் சேர்க்குறதுல அப்படி என்ன இஷ்டமோ தெரியல, போ… இந்த மேடமும் அப்படித்தான்” சதானந்த் கேலி செய்ய,

“ஏன், அப்படி என்ன கஷ்டப்பட்டு நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்துட்டீங்க?” கௌரி முறைத்தார்.

“நீயா, நீ ஏன் சொல்ல மாட்ட?”

“இந்தம்மா தலைக்குப் போடுற எண்ணெய் முதற்கொண்டு எல்லாமே இம்போர்டட் தான்மா. கடம் சோப்னு முன்னாடி பிரான்ஸ்ல இருந்து வரும். நடுவுல அது வர்றது நின்னு போச்சுன்னு எத்தனை கடை என்னை ஏறி இறங்க வைச்சிருக்கா, தெரியுமா? நல்லவேளை இப்பல்லாம் எல்லாப் பொருளும் எல்லா இடத்திலயும் கிடைக்குது, நான் தப்பிச்சேன்…” அவர் ஓட்ட…

“பாரு ஜெனி, எப்படிச் சொல்றாருன்னு…” கௌரி குறைபட்டுக் கொண்டார்.

“அது என்னமோ அவங்களுக்கு ஒரு சந்தோஷம் அங்கிள். எங்கம்மாவும் இதே மாதிரி தான். காதி ஊதுபத்தி, மைசூர் சாண்டல் சோப் முதற்கொண்டு பெரிய லிஸ்ட்டே வந்துருக்கு… இதெல்லாம் கேர்ள்லி கேர்ள்லி திங்ஸ் அங்கிள்…. உங்களுக்குப் புரியாது” என அவள் கண்ணடிக்க….

“அப்படிச் சொல்லு” கௌரி ஆனந்தமாய் அவளுக்கு ஹைஃபைவ் கொடுத்தார்.

“இரண்டு பேரும் சேர்ந்துட்டீங்க, ஒரே ஊர்க்காரங்க வேற, கேட்கணுமா?” சிரித்த சதானந்த் கெளரியிடம் “கிளம்பலாமா?” என்றார்.

“ம்ம்….” என்ற கௌரி சில வினாடிகள் கண்கள் சுருக்கி யோசித்துக் கணவரிடம் திரும்பினார்.

“நானும் ஜெனி கூட ஷாப்பிங் போறேனே… துணிக் கடைக்குப் போய் ரொம்ப நாளாச்சு. நீங்க வேணா வீட்டுக்கு கிளம்புறீங்களா?”

”அப்ப இப்போதைக்கு வரமாட்ட… சரி, என்னை ஆளை விடு… நான் வீட்டுக்குப் போய் இதை வைச்சிட்டு கம்பன் கழகத்துல ஒரு சொற்பொழிவு இருக்கு, பதினோரு மணிக்கு மேல அங்க போய்ட்டு வரேன்”

“சரி, நான் ஆட்டோ பிடிச்சு வந்துடுறேன். இல்ல சித்து லஞ்ச்க்கு கிளம்பும்போது இந்தப் பக்கம் வர சொல்லி அவன் கூட வந்துடுறேன்” கௌரி விடை கொடுக்க, ஜெனியிடம் விடைப்பெற்று காய்கறி கூடையுடன் நடந்தார் சதானந்த்.

அவர் சென்றதும், இவர்கள் இருவரும் பாதையில் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்தவாறு, தேவையான ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டு நடந்தார்கள்.

உழவர்கள் இங்கு நேரடியாகக் கடை போடுவதால் பச்பச்சென்று சல்லிசாக இருந்த காய்கறிகள் கண்ணைக் கவர்ந்ததில் பையில் இருந்த இன்னொரு துணிப்பை விரித்து வாங்கிக் கொண்டார் கௌரி.

“இரண்டு நிமிஷம் ஆன்ட்டி.. வந்துடுறேன்.”

வழியிலிருந்த பெரிய கறிகாய் கடையில் அவரை நிற்க சொல்லி உள்ளே போன ஜெனி ஏற்கனவே சொல்லி தயாராகக் கட்டி வைத்திருந்த லீக், லெட்யூஸ், செலரி, பார்ஸ்லி, ருபார்ப் என்று கஃபேவுக்குத் தேவைப்படும் பிரத்யேக காய்கறிகளைக் கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தாள்.

“இங்க எல்லாம் முடிச்சாச்சு. இனி துணிக்கடைக்குப் போலாமா ஆன்ட்டி…?” கௌரி ஆமோதிக்க அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

“எப்பயும் இங்க தான் வாங்குவேன், பிடிச்சா பாருங்க, இல்ல வேற கடை பார்க்கலாம்” என்றவாறு கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு கடைக்கு அவள் அழைத்துச் செல்ல, ஜெனி சொன்ன மாதிரியே அது சிறிய கடை தான்.

ஆனால், நிறைய வகைகள் இருந்தன. அங்கிருந்த விற்பனையாளர்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று விசாரித்துப் புடவைகளைப் பரப்ப, சும்மா காமா, சோமா என்று இல்லாமல் எடுத்துக் காட்டும் எல்லாமே மனசுக்குப் பிடிக்கிற மாதிரி இருக்க…

ஜெனி ஆறு புடவைகளைத் தேர்ந்தெடுத்து, கூடவே தனக்கு, தங்கைக்கு எனச் சில குர்திகளையும் மடமடவென எடுத்து விட, “பரவாயில்லையே, சட்டுன்னு முடிச்சிட்ட…” கடைக்குள் நுழைந்து அரைமணி நேரம் தான் ஆகியிருந்ததில் வியந்த கௌரி தனக்கும் புடவைகளைக் காட்ட சொன்னார்.

“ஏன் ஆன்ட்டி, எப்பயுமே லைட் கலர்ஸ்லயே எடுக்குறீங்க? நான் பார்க்கறச்ச எல்லாம் ரொம்ப பிளைனாவே போடுறீங்க… அப்படியொன்னும் உங்களுக்கு வயசாகல…. கொஞ்சம் டார்க்கா, டிசைன் பண்ணதை எடுங்களேன்… உங்க ஹைட்டுக்கு நல்லா இருக்கும்…”

“அப்படியா சொல்ற?” இதுவரை தன் உடைத் தேர்வு பற்றிக் கணவரோ, மகனோ ஒன்றுமே சொன்னதில்லை. கடைக்குக் கூட வரவும் மாட்டார்கள். வந்தாலும் பரத்தி எடுப்பார்கள்.

ஆண்கள் இருவருக்கும் எப்போதும் ஸ்டீரியோ டைப்பாய் இரண்டு பேண்ட், நான்கு சட்டை எடுத்துவிட்டு அலுப்பாய் தனக்குத் தேடுவதில் இவருக்கும் உடைத்தேர்வில் பெரிய நாட்டம் இல்லை.

புகுந்த வீட்டில் புடவை தவிர வேறு எந்த உடைக்கும் அனுமதி இல்லை என்பதால் திருமணமான புதிதில் மாமியாரைப் பின்பற்றி அதே வித கனத்த காட்டன் புடவைகள் அணிந்து அதுவே நாளடைவில் பழகிப் போயிருந்தது கௌரிக்கு.

“இப்பல்லாம் சித்து அவனே போய் அவனுக்கு வேண்டியதை வாங்கிக்கிறான். உங்க அங்கிள் நான் எதை எடுத்துக் கொடுத்தாலும், ஒன்னும் சொல்லாம வாங்கிப் போட்டுப்பாரு… அப்புறம் எனக்கு மட்டும் எப்படி ஆசை வரும் சொல்லு…?”

லேசாய் சடைத்தபடி ஜெனியின் தேர்வுக்கே விட்டவர், அவள் தேர்ந்தெடுத்த நான்கு புடவைகளை பில்லுக்கு அனுப்பிவிட்டு உள்ளாடைகள், துண்டு, கர்சீப், பர்முடா, லுங்கி, மேசை விரிப்பு, கர்டன் துணி என என்னென்னமோ எடுத்தார்.

 ‘பாவம், கம்பெனி இல்லாம நொந்து போயிருக்காங்க போல…’ உள்ளுக்குள் கேலி செய்த ஜெனி பொறுமையாய் அவருடன் நின்றாள்.

மூன்று மணி நேரம் கழித்து வெளியே வந்தவர்கள், “ஏதாச்சும் குடிக்கலாமா?” எதிரில் பான்லே பால் உணவகம் தெரிய, அங்குச் சென்று பாதாம்கீரும், குல்பி ஐஸும் சாப்பிட்டார்கள்.

பொதுவான பேச்சுகளுடன் மேங்கோ ஐஸை சப்பியவளை கௌரி ஒவ்வொரு முறையும் கேட்கலாமா, வேணாமா என்று நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தார்.

உண்மையில் அவர் ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற மன நிலையில் இருந்தார். தான் பெற்ற பையனின் இயல்பு அவரை அவ்வளவு தூரம் குழப்பியிருந்தது.

‘பார்த்த கொஞ்ச நாளைக்குள்ள அதையும் இதையும் பொய் சொல்லி எங்களை கஃபே வரைக்கும் கூட்டிட்டுப் போய்க் காண்பிச்சது என்ன? அதுக்கு அடுத்த நாளே கோவில் வரைக்கும் போய் ராத்திரி ரொம்பநேரம் ஊர் சுத்திட்டு வந்ததென்ன? நான் கேட்டவுடனே ‘ஆமா, எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு’ன்னு பட்டுன்னு சொன்னவன் தானே.’

’அவ்வளவு ஏன்? எனக்கு முடியலடான்னு அன்னிக்கு ராத்திரி போன் பண்ணப்ப கூட ‘இங்கதான் ஜெனி வீட்ல இருக்கேன்’னு எந்தத் தயக்கமோ, மறைக்குற எண்ணமோ இல்லாமல் பளிச்சுன்னு சொன்னானே…”

“இப்ப எதுக்குக் கிணத்துல போட்ட கல்லு மாதிரி மூஞ்சை ‘உம்’னு வச்சிட்டு சுத்திட்டு இருக்கான்…? எனக்கு உடம்புக்கு வந்ததைப் பத்தின கவலைன்னா நானே தேறி வந்துட்டனே’

மகனின் இயல்பில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘லவ் பண்ணினா அடுத்துக் கல்யாணம்ங்கிறது எங்க காலம். இந்தக் காலத்து பிள்ளைங்க நடவடிக்கை எதுவுமே நமக்குப் புரிய மாட்டேங்குதே… பழகிப் பார்க்கணும், புரிஞ்சு பார்க்கணும்னு ஏதாவது நினைச்சுருக்குங்களோ?”

எதையெதையோ யோசித்து அவருக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம்.

ஆரம்பத்தில் தன் புகுந்த வீடு, உறவுச் சிக்கல்கள், தான் கடந்த பாதையை இந்தப் பெண்ணும் கடக்க வேண்டுமா என்று தேவையில்லாதை எல்லாம் எடுத்துக் குழம்பி உணர்ச்சிவசப்பட்டவர் தான்.

ஓரிருமுறை நெருக்கமாய் ஜெனியுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்ததும் அவருக்கு அவருடைய அனுமானங்களே துச்சமாய்த் தெரிந்தன.

ஹாஸ்பிடல் வாசத்தில் அனுதினமும் வந்து நலம் விசாரித்தவளின் மீது பெற்ற பெண் போல வாஞ்சை ஊறியது எனில், இந்த இரண்டு மூன்று மணி நேரமாய்க் கண்கூடாய் பார்க்கும் அவள் சுவாதீனத்தில் ஜெனியை ரொம்ப ரொம்பவே பிடித்துப் போயிருந்தது கெளரிக்கு.

எதேச்சையாக இவளை இன்று சந்திக்க நேர்ந்ததும் நல்லது தான் என்று நினைத்தவர், தன் தயக்கம் விலக்கி “ரீசன்டா சித்துவை பார்த்தியாம்மா ?” பொதுவாகக் கேட்பது போலக் கேட்டார்.

“இல்ல ஆன்ட்டி…” அதற்கு மேல் பேசாமல் அவள் தன் கையிலிருப்பதில் கவனமாக,

“அவனுக்கு ரொம்ப வேலை ஜாஸ்தியா இருக்கும்மா. ராத்திரி லேட்டா தான் வரான். விடிகாலைல எந்திருச்சு ஓடிடுறான். உன்கிட்ட போன்ல சொல்லியிருப்பான், இல்ல….” என்று லேசாகக் கொக்கிப் போட்டார்.

‘இல்ல ஆன்ட்டி, அப்படிலாம் அடிக்கடி நாங்க பேசிக்கிறது இல்ல… இன்ஃபாக்ட் இப்ப நாங்க பேசிக்கிறதே இல்ல…’ வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளைச் சொல்லி ஆவலோடு தன் முகம் பார்ப்பவரின் மகிழ்ச்சியைக் குலைக்க வேண்டுமா? ஜெனி தயங்கினாள்.

“ஐ ஹேட் யூ… நீ யாரு என்னைப் பத்தி விசாரிக்க?” அன்று தான் காட்டுக் கத்தலாகக் கத்த…

“நான் யாரா உனக்கு? நான் உன் வருங்காலப் புருஷன், போதுமா?” நடைமுறையை உணர்ந்து கொள்ளாமல் சினிமா கதாநாயகன் போல டயலாக் அடித்தானே.

இதை மேலும் மேலும் வளர்க்கத்தான் வேண்டுமா?

‘இதுல இந்த ஆன்ட்டி வேற இப்படிக் கேட்குறாங்களே…?’

‘முதல் நாளே ‘நோ, ஐ’யம் நாட் இன்ட்ரெஸ்டட்’ன்னு சொல்லி புள்ளி வைக்காம இந்தளவுக்கு அவன் மனசுல ஆசையை வளர்த்தது என் தப்பு. அந்தத் தப்பை இவங்க வரைக்கும் தொடர்ந்துட்டே போகணுமா?’

இரு வினாடிகள் அமைதியாக யோசித்தவள் நிமிர்ந்தாள்.

“ஆன்ட்டி… உங்க கூடப் கொஞ்சம் பேசணுமே. இங்க வேணாம், கூட்டமா இருக்கு, எதிர்த்தாப்பல பொடானிகல் கார்டன் போயிடலாம்”

கண்கள் சுருங்க கேள்வியாகத் தன்னைப் பார்ப்பவரை குரல் பிசிறாமல் இயல்பாக அழைத்த ஜெனி பணம் கொடுக்க எழுந்து சென்றாள்.

**********************

“நில்லுடா… உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க.. எல்லாமே உன் முடிவுன்னா பெத்தவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்?”

கணவரும் மகனும் சாப்பிடும் வரை பொறுத்திருந்த கௌரியால் அதற்குமேல் அமைதியாக இருக்க இயலவில்லை. உள்ளே உணர்வுகள் கொந்தளித்தன.

‘இதென்ன சாதாரண விஷயமா?’ ரத்தம் சூடேறி மேலும் கீழும் பாய்வதில் காய்ச்சல் வந்ததைப் போல உடலெங்கும் நடுங்கியது.

 “என்னம்மா ஆச்சு…?” சாப்பிட்ட கையைத் துடைத்தபடி தன் அறைக்குள் செல்லத் திரும்பிய சித்தார்த் திடீரென உயர்ந்த அம்மாவின் குரலில் ஆச்சரியமாக அப்பாவைப் பார்த்தான்.

‘நோ ஐடியா’ என்கிறமாதிரி அவர் உதடு பிதுக்கினார்.

சென்ற இடத்தில் ஒரு பழைய நண்பரை சந்தித்த குஷியில் கொஞ்சம் முன்பாகத்தான் சதானந்த்தும் வீடு திரும்பி இருந்தார்.

அவன் வந்ததில் இருந்தே அம்மாவின் முகம் சரியில்லை. வழக்கம் போலப் பெரியம்மா, அத்தை என ஏதாவது உட்பூசல் போல என்று நினைத்திருந்தவன், அடுத்து அவர் சொன்னதைக் கேட்டு “ஓ” என்றான்.

“நான் இன்னிக்கு ஜெனியை பார்த்தேன்…”

மகனை முறைத்துக்கொண்டே கௌரி சொல்ல, ‘இதுதான் எனக்குத் தெரியுமே’ என்கிற மாதிரி அதை அசட்டையாகக் கவனித்த சதானந்த், மனைவி மேற்கொண்டு சொன்ன விஷயங்களைக் கேட்டு அதிர்ந்து போனார்.

“அடக்கடவுளே, அந்தச் சின்னப் பொண்ணுக்கா இந்த மாதிரி ஒரு நிலைமை?”

“எனக்கும் அதே துடிப்பு தாங்க… கேட்டதுல இருந்து பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கேன். பதுமை மாதிரி இருக்கிற அழகு பொண்ணுக்குப் போய் இப்படி…? கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையான்னே தெரியல.”

“அதை விட உங்க பையன் பண்ற கூத்து….? சித்துப்பா, எனக்கு அடி வயிறே கலங்குது….” கௌரியின் கண்கள் சொல்லும்போதே கலங்கின.

‘வில்லிடி நீ… அம்மாகிட்ட டைரக்டா சொல்லி இந்த சேப்டரை க்ளோஸ் பண்ண மாஸ்டர் ப்ளான் போடுறியா??? ஹ்ம்.. இதுவும் நல்லதுக்குத் தான். நானா சொல்ல வேண்டிய வேலை மிச்சம்…’ உள்ளுக்குள் ஜெனியை நக்கல் அடித்தவன் முறுவல் மாறாமல் அம்மா அருகில் வந்து அமர…

“டேய்…” கெளரிக்கு அந்தச் சிரிப்பைப் பார்க்க கோபமாய் வந்தது. உள்ளுக்குள் பயமாகவும் இருந்தது.

“இதெல்லாம் என்னடா? சினிமாவுக்கு வேணும்னா சரிப்படும், வாழ்க்கைக்குச் சரிப்படுமாடா தம்பி ?” அவர் விசும்ப,

“அம்மா… தயவு செஞ்சு இப்படி அழுது என்னை எம்ப்ராஸ் பண்ணாதீங்க…” அவர் தோளை அணைத்தபடி அவன் அமைதியாகப் பேசினாலும் அழுத்தமாய் இருந்தது அந்தத் தொனி.

“நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கம்மா. அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்”

‘புதிதாக என்ன புதிர் போட போகிறாய் ?’ அவர் ஆற்றாமையுடன் மகனைப் பார்க்க… 

“ஒரு பேச்சுக்கு ஜெனி வேணாம்னே வச்சுக்கலாம். உங்க பையனுக்குத் தேடித் தேடி வேற எந்தப் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணி வைச்சாலும் கண்டிப்பா எங்களுக்குக் குழந்தை பொறந்தே தீரும்னு ஏதாவது கேரண்டி இருக்காம்மா?”

இதற்கு என்ன பதில் சொல்ல, கௌரி வாயடைத்துப் போனார்.

“கல்யாணம் பண்ணிக்கிற எல்லோருக்கும் குழந்தை பொறந்துடும்னு எந்த ஸுரிட்டியும் இல்லம்மா… அப்படி இருந்தா எதுக்கு இத்தனை பெர்டிலிட்டி சென்டர்ஸ் தெருவுக்கு ஒன்னு நிக்குது?”

“எல்லாமே ஒரு நம்பிக்கை தான். தூங்கினா காலைல நாம உயிரோட எழுந்திருப்போம்னு நம்புறமாதிரி கல்யாணம் பண்ணினா குழந்தை பொறக்கும்னு ஒரு நம்பிக்கை.”

“எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லன்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு.. அது மட்டும் தான் வித்தியாசம். மத்தபடி நாங்க நல்லா இருப்போம், சந்தோஷமா இருப்போம்னு நான் திடமா நம்புறேன்.”

“அவளுக்குத்தான் அந்த நம்பிக்கை இல்ல. அதுதான் அவளும் குழம்பி, உங்களையும் கலக்கி விட்டுருக்கா… நான் தெளிவா இருக்கேன்மா… நீங்களும் நிதானமா யோசிங்க…”

தலைகுனிந்து தன் முகம் பார்க்க மறுக்கும் அம்மாவை கவலையுடன் பார்த்த சித்தார்த், ‘நீங்களாச்சும் என்னைப் புரிஞ்சுக்குங்களேன்’ என்பது போல அப்பாவிடம் தலையாட்டிவிட்டு எழுந்து மேலே சென்று விட, கௌரி ஸ்தம்பித்து அமர்ந்திருந்தார்.

“எழுந்து வா கௌரி…” மனைவியின் தோளைத் தட்டிய சதானந்த் தளர்வாக எழுந்து செல்ல, கெளரிக்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கியது.

‘வாரிசற்று போய் விடுமா தன் அடுத்தத் தலைமுறைக்கு…?’ பயத்தில் நெஞ்சு தடதடக்க மூச்சு முட்டுவது போல உணர்ந்தார்.

 தான் பெற்ற ஒற்றைப் பிள்ளைக்கு ஒரு குழந்தை வர வேண்டும் என நான் ஆசைப்படுவது ஒரு குற்றமா? வம்சத்திற்கு வாரிசு வேண்டும், திரண்டு நிற்கும் இவ்வளவு சொத்தை ஆள ஒரு பிள்ளை வேண்டும் என்று எந்தப் பெரியத்தனமான எண்ணங்களும் அந்த ஆசையில் இல்லையே.

“குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்கள் …………”

எப்போதோ மனதில் ஏறியிருந்த புறநானூற்று வரிகள் நினைவில் வர, அவர் கண்கள் கசிந்தன.

வீட்டில் துள்ளி விளையாட ஒரு மழலை, நாங்கள் இருவரும் கண் திறந்து பார்க்கப் போவது அந்தப் பிள்ளையைத் தானே. கொஞ்சி, தடவி, மார்பில் அணைத்து மகிழ்ந்து, ஆசை தீர முத்தமிட்டு, எச்சில் தெறிக்க அது சிரிப்பதை முகத்தில் வாங்கி…

இந்தக் கொடுப்பினை எதுவும் எங்களுக்கு இல்லையா?

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாரோ, கடிகார மணி அடிப்பதில் உணர்வு பெற்று எழுந்து குழல் விளக்குகளை அணைத்துவிட்டு அறைக்குள் சென்றார். போர்வையைக் கழுத்து வரை போர்த்திக் கண்கள் மூடி சதானந்த் படுத்திருந்தார்.

“பொம்பளைகளுக்கு மட்டும் தான் இந்த உலகத்துல இருக்கிற எல்லாக் குழப்பமும் போல. ஆம்பிளைங்க தெளிவா தான் இருக்கீங்க…” எரிச்சலுடன் முணுமுணுத்த கௌரி தன் விரிப்பை உதறி மேலே போட்டுக் கொண்டு படுத்தார்.

‘அங்கே அந்தப் பொண்ணு இது சரி வராதுன்னு யோசிச்சுத் தெளிவா பேசுறா. இவன் முரட்டுப் பிடிவாதம் பிடிக்குறான். மதியம் கேட்டதுல இருந்து நான் நிலைகொள்ளாம தவிக்கிறேன். இவரு தூங்குறாரு…’ அலுத்தவரின் கண்களில் தன்னிச்சையாகக் கண்ணீர் சேர்ந்தது.

மகனின் பிடிவாத குணம் தெரியும் என்றாலும் இந்த விஷயத்தில் அவன் மனம் மாறாமல் அழுத்தமாகவே இருந்து விட்டால்….? கடவுளே, இது என்ன சோதனை?

மனதில் சூழ்ந்த ஆதங்கத்தின் வேகத்தில் மூக்கை உறுஞ்சி சத்தம் போடாமல் இவர் விசும்ப, “ப்ச்.. அழாத…” கணவரின் கை நீண்டு இவருடைய கண்களைத் துடைத்தது.

“இன்னும் தூங்கலையா நீங்க?” கௌரி திரும்பிப் பார்த்தார்.

“எப்படித் தூக்கம் வரும் சொல்லு… என் பையனோட வாழ்க்கையைப் பத்தி எனக்கும் கவலை இருக்காதா?” வலதுகையை நெற்றியில் குறுக்காக வைத்தபடி கவலையுடன் மனைவி பக்கம் திரும்பிப் படுத்தார்.

“இவன் பிடிவாதம் பிடிச்சவனாச்சேங்க… என்ன பண்ணி இவன் மனசை மாத்துறது…?”

“ம்ஹ்ம்…” பெருமூச்சு விட்டவர், “அவன் மனசை எப்படி மாத்துறதுன்னு யோசிக்கறதை விட, நம்ம மனசை எப்படிச் சரி செஞ்சுக்கணும்ன்னு நாம கத்துக்கணும் கௌரி” என்றார் அவர் ஆழமான குரலில்.

“என்னங்க… நீங்களே இப்படிச் சொல்றீங்க?” கௌரி அதிர்ச்சியாகக் கணவரைப் பார்த்தார்.

“அவன் எவ்வளவு தெளிவா பேசினான்னு நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு. சித்து சொல்றதும் கரெக்ட் தானேம்மா… நாமளே இரண்டாவது குழந்தைக்கு எவ்ளோ ஆசைப்பட்டோம், நடந்ததா? இதெல்லாம் நம்ம கைல இல்ல கௌரி…”

உண்மை தான். சித்துவுக்கு அடுத்துப் பெண் குழந்தை ஒன்று வேண்டும் என்று எத்தனையோ முயற்சித்தார்கள். இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவம் நம்பிக்கை கொடுத்தாலும், கடைசிவரை கைகூடவே இல்லையே.

மகன் பத்தாவது வந்த பின் இதற்குமேல் அடுத்தக் குழந்தை வந்தால் சிரமம் என்று மனமே இல்லாமல் அந்த ஆசையைக் கௌரி கைவிட்டார். ஒருவேளை முதற்குழந்தைக்கே அந்த நிகழ்தகவு அமையாமல் பொய்த்துப் போயிருந்தால்…

சுளீரென்றது கெளரிக்கு.

ஒற்றைப் பையனை பெற்று விட்டதால் அந்தப் பெண்ணை விடத் தான் உசத்தி என்ற எண்ணமா எனக்கு? தனக்கும் அவளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?

சரியாய் ஒருமாதம் முன்னால் கருப்பையில் இருந்த ஏதோ ஒரு கட்டி உடைந்ததில் அடிவயிற்றில் தீயாக வலி பரவ, சிறுநீரும் கழிக்க முடியாமல் தான் துடித்துப்போனதில் அடித்துப் பிடித்து மருத்துவமனை போக…

தொடர் பரிசோதனைகளில் பித்தப்பையில் ஏதோ இன்பெக்ஷன், ஒட்டுக்குடல் வளர்ந்து சிறுநீர் பையை அழுத்துகிறது என ஒவ்வொன்றாய் சொல்லி கடைசியில் மூன்றையும் ஒன்றாய் அகற்றி இருந்தார்களே.

தன் வயிற்றைத் தடவிப் பார்த்தார்.

விரல்களின் அழுத்தத்தில் குழையும் தசைக் கோளங்களில் எங்கிருந்தது தன் கருப்பை? வெட்டி எடுத்த ஒட்டுக்குடலும் பித்தப்பையும் எங்கிருந்தன? சினைப்பையும், சிறுகுடலும், கணையமும், கல்லீரலும் இப்போது எங்குள்ளன?

அவரவர் உடலை சோதித்துப் பார்க்கும்வரை எல்லாமே இருப்பது போலத் தோன்றுவது கூட ஒரு பிரமை தானோ?

இந்த விஷயம் தெரியாமலே போயிருந்தால் இரு கை நீட்டி ஜெனியை வரவேற்று இருக்க மாட்டேனா? ஏன், இன்று மதியம் வரை அப்படித்தானே இருந்தேன் ?

‘எனக்கும் இப்ப கர்ப்பப்பை இல்ல, அப்ப இவருக்கு நான் பொண்டாட்டி இல்ல, என் பையனுக்கு நான் அம்மா இல்லேன்னு ஆகிடுமா?’ கெளரிக்கு நெஞ்சு பிசைந்தது.

அவன் சொன்ன மாதிரி கல்யாணம் செய்து வைத்து விட்டாலே ஆண் ஒன்று பிறக்கும், பெண் ஒன்று பிறக்கும் என்று எழுதி கையெழுத்து போட்டுத் தர முடியுமா? இயற்கையின் கொடையாக, இறைவனின் அருளாக அமைவது அல்லவா மழலைச் செல்வம்!!?

எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்று குரல் மாறாமல் தன்னிடம் கொட்டினாலும் சித்தார்த்தின் பெயரை குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் வந்து சென்ற பரிதவிப்பு….

அந்தச் சின்னப்பெண்ணின் மனதை தெரிந்தே நான் கசக்க வேண்டுமா?

அவள் வயதுக்கு அவள் மிகக் கௌரவமாக நடந்து கொண்டாள், தன் வயதிற்குத் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

பேசிக் கொண்டிருந்த கணவர் எப்போதோ உறங்கியிருக்க, எண்ணங்களின் அயர்ச்சியில் சொட்டுத் தூக்கம் இல்லாமல் வெறுமனே கண்கள் மூடி படுத்திருந்தார் கௌரி.