கலைந்த ஓவியமே- 7

“உங்களுக்கு தெரியலைன்னா எனக்கு போன் பண்ணி கேளுங்கத்தை, கால் பண்ணி கேட்டா நான் என்ன சொல்லிட போறேன். இப்ப பாருங்க ரெண்டு வேலை,… அவங்களுக்கும் அலைச்சல், நமக்கும் இப்ப நேரம் இல்லை, பாதி காட்டுல விதை கிழங்கை ஊனிட்டாங்க,  இன்னும் மீதி காடு கொஞ்சம் தான் இருக்கு, அதுகுள்ள இந்த வேலை வந்துட்டா இவங்க எதை பாப்பாங்க.,எதை விடுவாங்க.. மாமா எங்க?? மருந்து போட்ட விதை கிழங்கு எங்க இருக்குன்னு அவருக்கு தெரியுமே, அவருகிட்ட கேட்டு இருந்தா சொல்லி இருப்பாரே…” என கண்களால் மூர்த்தியை தேடினான்.

“அவரு நம்ம மகியை ஈரோடு வரைக்கும் கொண்டு போயி விட்டுட்டு வரேன்னு போயிருக்காரு சரவணா, நீயும் வண்டியில போயிட்டு இருப்பன்னு தான் நான் உங்களுக்கு கால் பண்ணி கேட்கல, இப்ப மட்டும் என்னக் கெட்டுப் போச்சு, மூட்டை எல்லாத்தையும் மாடியில கொண்டு போயி வைக்க சொல்லு, நான் போயி காய போடறேன்… அப்பறம் இவங்களை இங்க இருக்கற விதை கிழங்கை எடுத்துட்டு போக சொல்லு…” என வேணி கூறியதும் வேலையாட்களை பார்த்தான் சரவணன்.

“அப்ப லாரியில இருக்கற எல்லா கிழங்கையும் கொண்டு வந்து இறக்கிடவா தம்பி…” என துரை கேட்க

“என்னது லாரியா., பாவிபய சமயம் பார்த்து பழி வாங்கறான்.,..” என்பதைப் போல் பார்த்தார் வேணி, அவரின் பார்வையை உணர்ந்தாலும் அதை துளியும் கண்டுகொள்ளாமல்

“ஆமா அண்ணா, எல்லாத்தையும் மாடியில கொண்டு போயி போட்டுட்டு, சட்டுன்னு இங்க இருக்கறத அள்ளி எடுத்துட்டு போங்க…வேலை இல்லாம யாரும் இருக்கக் கூடாது பார்த்துக்கோங்க.. ஒருத்தர் அள்ளி கொடுங்க இன்னொருத்தர் கொண்டு போயி காட்டுல கொடுத்துட்டு வரட்டும்… லாரில இருக்கற மூட்டை எல்லாத்தையும் இறக்கிட்டு லாரியை செட்ல நிறுத்திடுங்க… வண்டிக்கு ஆகற பெட்ரோல் காசை தனியா என்கிட்ட வாங்கிகோங்க, சட்டுன்னு வேலையை பாருங்க…” என வேலையாட்களிடம் கூறியவன் தன் அருகில் நின்ற வேணியிடம் திரும்பி

“அத்தை அவங்க மூட்டையை இறக்கி வைச்சதும் மாடியில எல்லாத்தையும் காயை போட்ருங்க,உங்க கூட ஒரு நாலு பேரை வர சொல்றேன்…” என சரவணன் கூறியதும்  வேலையாட்களின்  பார்வை வேணியின் மேல் ஏளனமாக படிந்தது., அவர்களின் பார்வையே கூறியது

“உன் வெட்டி அதட்டல் எல்லாம் எங்களிடம் மட்டும் தானா…” என்பது போல் இருந்தது…

‘ இவன் இல்லாத சமயத்துல பேசிக்கற உங்களை…’ என அவர்களின் பார்வைக்கு  பதில் பார்வை பார்த்தவர் “சரி சரவணா…” என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்…

சரவணனும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு வேணியிடம் எதுவும் கேட்காது உடுப்பை மாத்திவிட்டு காட்டிற்கு சென்றுவிட்டான்…

*********

அந்த ஏ. சி அறையிலும் நவினுக்கு வியர்த்துக் கொட்டியது… முகத்தில் மெல்லிய அரும்புகளாய் வியர்வை பூக்க, அதை தன் தோள்பட்டை

வளைவில் துடைத்தபடி தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தவளை பார்த்தான்… 

அவள் நெருங்கி வர வர இதயம் இன்னுமின்னும்  மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது…

‘இப்படி இதயம் துடிக்கிற அந்தளவிற்கா அவள், உன்னை பாதித்து விட்டாள்..” என மதி கேள்வி எழுப்ப, சட்டென ‘ இல்லை…” என முனகல் போல் சொன்னான்.

“உண்மையாகவே அவள் உன்னை பாதிக்கவில்லையா…” என மனம் ஒரு புறம் கேள்வி எழுப்பியது.

மனதின் கேள்விக்கு அவனால் பதில் கூற முடியாமல் தன்னை நோக்கி வருபவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் அழகாய் தெரிந்தாள் மகி, படர்ந்த நெற்றியில் சிறு கீற்றாய் குங்குமம், கண்ணுக்கே தெரியாத அளவிற்கு கண்மையால் தீட்டிய பொட்டு, அதற்கு கீழ் ஆளைக் கொள்ளையிடும் கண்கள், ரோஜா நிற இதழ்கள், சின்ன மூக்கு, கொழு கொழு கன்னங்கள், அவளின் பின்னலுக்கு அடங்காத கேசம், என ஒவ்வொன்றாய் பார்த்தவனின் கண்கள் அவளின் செவியோரம் நார்த்தனமாடிய கார்கூந்தலின் மீது நிலைத்தது… நொடிக்கு ஒருமுறை அவளின் செவியோரத்தை முத்தமிட்டு செல்லும் கூந்தலாக பிறந்திருக்க கூடாதா என்று தோன்றியது அவனுக்கு…

‘அடேய் உனக்காக நான் சண்டை போட்டுட்டு இருக்கேன், நீ என்ன டா இந்த கூறுக் கெட்ட மனசு சொல்ற பேச்சைக் கேட்டுட்டு ஆடிட்டு இருக்க, எனக்கென்ன அன்னைக்கு மாதிரி அந்த பொண்ணுக்கிட்ட அசிங்கப்பட்டுட்டு வா…” என மதி  அன்று அவள் பேசியதை சுட்டிக்காட்டிட, சட்டென அவளின் மேலிருந்த பார்வையை விலக்கியப்படி  கணினியைப் பார்க்க ஆரம்பித்தான்.

“எக்ஸுமீ சார் (excuse me)…” என்ற குரலில் கண் கண்ணாடியை சரி செய்துக் கொண்டே உள்ள வாங்க என தலையாட்டி  அழைத்தவன்   மீண்டும் கணினியில் தலையை புகுத்திக் கொண்டான்…

அவள் தன்னை கண்டதும் நிச்சியம் ஷாக் அடித்தது போல் நிற்பாள். கண்டிப்பா வேலைக்கு வரமாட்டேன் எனக் கூறிவிட்டு சென்றுவிடுவாள் என நினைத்தவனுக்கு அவள் மின்சார விளக்கை (பல்பை)பரிசாக அளித்தாள்…  

தன்னை உள்ளே அழைத்ததும் கணிணியில் வேலை பார்ப்பது போல் பாவ்லா காட்டியவனின் செய்கை சற்றே கடுப்பைக் கிளப்பியது மகிக்கு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“சார் ஏதோ இம்போர்டன்ட் ஒர்க்  இருக்குன்னு ஆபிஸ்ல இருந்து கால் பண்ணாங்க, அண்ட் உங்கக் கிட்ட மத்த டீடைல்ஸ் வாங்கிக்க சொன்னாங்க…” என நேராக விசயத்திற்கு வந்தாள், அவனின் செய்கையில் கடுப்பாகி அவளை பற்றியோ, மற்ற விவரங்கள் பற்றியோ அவனிடம்,அவள் துளியும் கூறவில்லை, அவனும் அவளை பற்றி கேட்டுகொள்ளவில்லை, இருந்தும் அவன் மனதின் ஓரத்தில் அன்று அவள் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வருந்துவாள் என நினைத்தான். ஆனால் மகியோ அவனை புதியதாக பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா… பாரு கொஞ்சம் கூட முகத்தில அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை, ஆனா நீ அட்டக் வர லெவலுக்கு உட்கார்ந்துட்டு இருக்க, இங்க பாரு டா நவினு பொண்ணுங்களை பொறுத்தவரைக்கும் நல்லா சம்பாதிக்கற பையனும் வேணும், பாக்க அழகா இருக்கற பையனும் வேணும், இந்த இரண்டுல ஒன்னு சரியா இல்லைன்னாலும் ரிஜெக்ட் தான், அந்த புள்ளை,உன்னை எப்போவோ மறந்துட்டா, நீ தான் என்னவோ அவளுக்காக உருகிட்டு இருக்க, இந்த மானங்கெட்ட மனசு எப்பவும் இப்படி தான் அலைபாயும், அதெல்லாம் அடக்கி வெளிய வரவன் தான் லைப்ல முன்னேறி போவான், கண்டிப்பா உனக்கே உனக்குண்ணு ஒருத்தி வருவா, இவளை மாதிரி ஆள் எல்லா உனக்கு வேண்டாம்டா, அவ முகத்தைப் பாரு கொஞ்சம் கூட ஒருத்தனை காயப்படுத்தி பேசிட்டோமுன்னு வருத்தம் இருக்கா…’ என வழமை போலவே அவனின் மதி ஊசிபேத்தி  பேசியதும் முகத்தில் கடுமைக் குடிக்கொள்ள  “ம்ம், சிட்…” என்றான். மறந்தும் அவளை ஏறெடுத்து பார்க்கவில்லை. (பார்த்திருந்தால் அறிந்து இருப்பானோ)

அவன் செய்கை அவளை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல அமர்ந்து கொண்டாள். (வெளி பார்வைக்கு)

அவனின் எதிரில் அமர்ந்திருந்தவளுக்கு

அன்று அந்த பெண்கள் பேசியது தான் நினைவிற்கு வந்தது.

அவர்கள் கூறியது போல் அவனின் கண்கள் மாறு கண்ணாக இருக்கிறாதா என பார்க்க ஓர் ஆர்வம் அவளை அறியாமலேயே தோன்ற அவனையே பார்த்தாள்.

‘கண்ணு இரண்டும் நல்லா தானே இருக்கு, இவரும் பாக்க நல்லா தானே இருக்காரு, ஸ்பெக்ஸ் போட்டுட்டு ஸ்மார்ட்டா தான் இருக்காரு, ஒரு வேளை அந்த பொண்ணுங்களுக்கு ரசனை இல்லையோ…’ என நினைத்தபடி அவனையே பார்த்தாள். ஆனால் அவனோ தன்னை ஒருத்தி விடாது பார்ப்பதைக் கூட அறியாமல் அவனின்  வலது புறத்திலிருந்த ட்ராவில் ஓர் டைரியை கையில் எடுத்து இருவருக்கும் பொதுவாக அந்த டைரியை வைத்தவன்

“லிசன் மேம், கிளையண்ட் நேம் மொதீன், கிளையண்ட் முஸ்லீம் தான் சோ வாஸ்து தேவைப்படாது. டோட்டல் பில்ட் அப் ஏரியா  டூ தௌசெண்ட் ஸ்கொயர் பீட் (total builtup area 2000 square feet) இருக்கணும், கிரவுண்ட் ப்ளோர்ல (ground floor), ரூம் அண்ட் அட்டச்டு டாய்லெட்,  இன்டீரியர் ஸ்டேர்கேஸ் (படிகட்டு) பார்க்கிங் ஏரியா ஒரு கார், பைக் நிக்கற போல வேணும், அதுவே ஃபர்ஸ்ட் ப்ளோர்ல இரண்டு ரூம் அண்ட் அட்டச் டாய்லெட் இருக்கணும் இந்த சைஸ் எல்லாம் கிளையண்ட் (requirements) ரெகூர்மெண்டஸ்,…” என்றவன்

“இதுதான் உங்க டேபிள்…” என அவனுக்கு முன்னால் இருந்த டேபிளை கைகாட்டி விட்டு மீண்டும் கணினியில் பார்வையை பதித்தான்…

அவனின் செய்கை அனைத்தும் மகிக்கு அவன் (attitude) அக்டிடுயுட் காட்டுவதாக தோன்ற, அதை பெரியதாக அலட்டிக்

கொள்ளாமல் அவன் கைகாட்டியா டேபிளில் அமர்ந்து சிஸ்டத்தை ஆன் செய்தாள்.

 அது பாஸ்வேர்டு கேட்டது மீண்டும் அவனைக் கேட்க வெண்டுமா என மானசீகமாக சலித்துக் கொண்டவள் “சார் சிஸ்டம் பாஸ்வேர்ட் என்ன??…” எனக் கேட்டாள்…

“சாரி முன்னாடியே சொல்லி இருக்கணும்,நம்ம கம்பெனி நேம் தான் ஃபர்ஸ்ட் லெட்டர் மட்டும் ஃகேப்ஸ்…” எனக் கூறினான்.

“தேங்க்ஸ் சார்…” என்றவள்   கணினியில் கண் பதித்தாள்..

அவள் என்னவோ வேலையில் மூழ்கி விட்டாள் ஆனால் இவனுக்கு தான் அத்தனை குழப்பமாக இருந்தது. ‘நிஜமாவே அவளுக்கு நம்மளை தெரியலயா, இல்லை மறந்து விட்டாளா., அவள் என்னை பாதித்தளவிற்கு நான் அவளை பாதிக்கவில்லயா..

என மனம் கூப்பாடு போட்டுக் கத்த நாற்காலியில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.

நவின் வெளியே சென்றதும் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள் மகி… அனைத்திற்கும் காரணம் அண்ணன் பார்த்த மாப்பிள்ளை தான், அவனின் குரல் இவளை இந்தளவிற்கு பாதிக்கும் என துளியும் நினைக்கவில்லை,

ஆம் புராஜக்ட் மேனேஜரின் குரலைக் கேட்டதும் இவளின் இதயம் துடியாய் துடித்து தன்னாலயே அவனை (வீட்டில் பார்த்த மாப்பிள்ளை) நினைவு கூர்ந்தது. இனி அவன் உனக்கு இல்லை என்றாகிவிட்ட பிறகு என்ன நினைப்பு என மனம் அதட்ட,சட்டென தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் மேனேஜர் கூறியதை கவனிக்கவும் அவள் கவனத்தை திசை திருப்பவும் முயற்சித்தாள்.

புராஜக்ட் மேனேஜரின் குரலும், அவனின் குரலும் ஒருபோல இருக்கிறது என நினைத்தாளே தவிர (மாப்பிள்ளை) அவன், இவனாக் இருக்க கூடும் என நினைக்கவில்லை… இங்கு அறையை விட்டு வெளியில் வந்த நவினின் மனமோ நிலைக் கொள்ளாமல் தவித்தது.. ஒரு மனம் அவளைக் கண்டுகொள்ளாமல் இரு என உரக்க கத்த, மற்றொரு மனமோ அவள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என ஏங்கிக் கத்தியது

‘இவ தான் உனக்கு பாத்த பொண்ணு தம்பி, அவங்க வீட்டில இருக்கறவங்களுக்கு உன்னை பிடிச்சு போச்சு,பொண்ணொட போட்டைவை அனுப்பி இருக்கேன் பாரு, பொண்ணைப் புடிச்சு இருக்கா…’ என புலனத்தில் குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார் சிவகாமி. மகியின் புகைப்படத்தை பார்த்ததுமே நவினுக்குப் பிடித்து விட்டது.

என்னதான் பெண் வீட்டில் சரியென கூறிவிட்டார்கள் என்றாலும் பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட எண்ணியே சிவகாமியிடம் மகியின் வீட்டில் பேசி, அவளின் அலைபேசி எண்ணை வாங்கி தரக் கூறினான். அலைபேசி எண்ணை சிவகாமி கொடுத்ததுமே உடனே அவளுக்கு அழைத்தான். அவள் அதிகம் பேசவில்லை என்றாலும் அவளின் சரியென்ற பதிலே மனதை இறக்கை இல்லாமல் பறக்க வைத்தது…

அவள் சரியென கூறியதுமே மகியின் அலைபேசி எண்ணை தன் தொலைபேசியில் பதிவு செய்து விட்டான். அவளிடம் பேச புலனத்திற்கு செல்பவன் அவளின் புலனத்தின் டி. பியிலும், அபௌட்டிலும்”ஹேட் மீ ஆர் லவ் மீ டோண்ட் பிளே வித் மீ…” என்ற வாக்கியத்தை படித்துவிட்டு வெளியில் வந்துவிடுவான்.

ஏனோ மனம் எதற்கும் அவளை நேரில் பார்த்து பேசிவிட்டு அவளிடம் உரிமையாக பேசு எனக் கட்டளையிட்டது. அதனாலயே அந்த ஒரு வாரமும் அவளிடம் பேசவில்லை, ஆனால் அடுத்து வந்த வாரத்தின் முதல் நாளே பெண் வீட்டில் வேண்டாமென கூறிவிட்டார்கள் என்ற செய்தியே வந்தது. மனம் கேளாமல் தான் அவளுக்கு அழைத்தான்.

ஆனால் அவளின் உதாசீன பேச்சு இவனுக்கு கோபத்தைக் கொடுத்தது… அப்போதைய கோபத்தில் மகி என்பவளை பாஸிங் கிளவுட்டாக நினைத்து கடந்து செல்ல தான் நினைத்தான். ஆனால் அது அவளைப் பார்க்கும் வரையில் தான் நிலைத்திருக்கும் என நவின் நினைக்கவே இல்லை.

தலையை அழுத்தி கோதிக் கொண்டவன் ‘இங்க பாரு பிரசாத், அவ உனக்கு ஜஸ்ட் பாசிங் கிளவுட் தான். வீட்டுல பார்த்த பொண்ணுன்னு அவ மேல உனக்கு ஒரு ஈர்ப்பு தான் வந்து இருக்கு, அவ உன்னைப் பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தானே பயந்த, நீ நினைச்சது போல ஒன்னும் நடக்கல, பொண்ணு அவளே சாதரணமா இருக்கா, உனக்கு என்னடா??? எத்தனையோ பார்த்துட்ட இதெல்லாம் ஒரு கணக்கா டேக் இட் ஈஸி டா ..” என தனக்கு தானே பலமுறைக் கூறிகொண்டவன் கேபினிற்குள் நுழையவும் அவளுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது…