கண்கள் தேடுது தஞ்சம் – 7

அத்தியாயம் – 7
பவளநங்கையும், வாணியும் திருச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் இருவரும் படிப்பு முடிந்த பிறகு வீட்டில் பொழுது போகாமல் வயலுக்குச் செல்லும் நேரம் தவிர மீதம் இருந்த நேரத்தைப் போக்க இரண்டு வாரத்திற்கு ஒருமுறை திருச்சியில் இருக்கும் நூலகத்திற்குச் சென்று சில புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது அவர்களின் வாடிக்கை ஆனது.

அதே போல் இப்பொழுது இரண்டு வாரத்திற்கு முன் எடுத்து வந்த புத்தகங்களைத் திருப்பி வைத்துவிட்டு வேறு புத்தகங்கள் எடுத்துவர சென்று கொண்டிருந்தார்கள்.

பேருந்தில் சென்று கொண்டிருந்த தோழிகள் இருவரும் அவர்களுக்குள் சலசலத்துப் பேசிக் கொண்டிருக்க, கடந்து சென்ற பேருந்து நிறுத்தத்தில் ஏறிய ஒருவன் அவர்களையே தன் பார்வையால் தொடர்ந்ததை அறியவில்லை.

அப்படி யாரோ பார்ப்பது போலத் தோன்றி பெண்கள் திரும்பி பார்க்கும் போது தன் பார்வையை உடனே மாற்றிக் கொண்டு அவர்கள் கவனத்தைக் கவராமல் சாதுர்யமாக நடந்து கொண்டான் அவன். வாணி, நங்கை இருவரும் தன்போக்கில் அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள்.

திருச்சி வந்ததும் இறங்கி நூலகம் சென்று அங்கே நிறைய நேரம் செலவழித்து வேறு புத்தகங்கள் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே வரும் வரை நூலகத்திற்கு வெளியிலேயே அங்கும், இங்கும் அலைந்து கொண்டு நூலக வாசலையே பார்த்தப் படி சுற்றிக் கொண்டிருந்தவன் அவர்கள் வெளியே வரவும், அவர்கள் கண்ணில் படாமல் இருந்து கொண்டான்.

தோழிகள் எப்பொழுதும் மாலை வரை திருச்சியில் கழித்துவிட்டு தான் ஊருக்குத் திரும்புவார்கள். மாதத்தில் இரு முறை மட்டுமே இப்படி வெளியே வருவதால் அவர்களின் பெற்றோரும் அனுமதி தந்திருக்க, இப்பொழுது மதியம் தான் ஆகி இருந்ததால், ஒரு உணவகம் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு, அடுத்து மலைக்கோட்டை செல்ல திட்டமிட்டனர்.

அப்படித் திட்டமிடும் பொழுது நங்கை தன் அருகில் இருந்த வாணியின் கையை மெதுவாகச் சுரண்டினாள்.

‘என்னடா இவ. நல்லா தானே பேசிக்கிட்டு வந்தா. இப்ப எதுக்கு இப்படிச் சுரண்டுறா?’ என்பது போலப் பார்த்த வாணியின் காதருகில் “பஸ்ல வரும் போது சொன்னேன்ல வாணி? யாரோ நம்மள பார்க்கிற மாதிரி இருக்குனு. இப்ப இங்கயும் அப்படித் தோணுதுடி” என்று சொல்லி விட்டு கழுத்தை திருப்பாமல் விழிகளை மட்டும் சுழற்றி பார்த்தாள்.

“என்ன நங்கை சொல்ற? யாரா இருக்கும்? பஸ்ஸில் இருந்து அப்படித் தோணுதுனா அப்ப நம்ம கற்பனையா இருக்காது. பஸ்ஸில் இருந்தே வர்றாங்கனா நம்ம ஊர் பக்க ஆளா தான் இருக்கணும். பேசாம கோவிலுக்குப் போகாம வீட்டுக்குத் திரும்பிடலாம்டி” என்று சிறு பயத்துடன் சொன்ன வாணியை முறைத்தாள் நங்கை.

அவளின் முறைப்பை பார்த்து “என்னடி இப்படி முறைக்கிற? கிளம்புவோம்னு சொன்னது ஒரு குத்தமா?” என்று வாணி கேட்டாள்.

“பின்ன என்ன வாணி? நாம காலேஜ் முடிச்ச பிறகு இப்படி வெளியே வர்றதே மாசத்துல இரண்டு நாள் தான். அதுவும் நம்ம பெத்தவங்கிட்ட எப்படி எல்லாம் கெஞ்சி இந்த அனுமதியை வாங்கியிருப்போம். நீ ஈஸியா கிளம்பு போகலாம்னு சொல்ற? இன்னைக்குச் சீக்கரம் வீட்டுக்குப் போய்ட்டா இனி இப்படியே எப்பயும் திரும்பி வந்திருங்கன்னு நம்ம பெத்தவங்க சொல்லிட்டா என்ன பண்ணுவ? எவனுக்கோ பயந்து நாம எதுக்கு ஓடணும்?” என்று சொன்னவள் “அவன் மட்டும் யாருன்னு தெரியட்டும். இன்னைக்கு அவனைச் சும்மா விடுறதா இல்ல” என்றாள்.

“சரிதான்… நீ நடத்துடி ஆத்தா…!” என்றாள் வாணி.

“சரி…சரி…! வா…! சீக்கிரம் கோவிலுக்குப் போவோம். மலைல ஏறி இறங்கி ஊருக்கு கிளம்ப நேரம் சரியா இருக்கும்” என்ற நங்கை, வாணியை இழுத்துக் கொண்டு மலைக்கோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மலையில் ஏறி தரிசனம் முடித்து விட்டு திரும்ப நாலு மணி அளவில் மலையை விட்டு இறங்க ஆரம்பித்தார்கள்.

அது வரையிலும் அவர்கள் பின் சுற்றிக் கொண்டிருந்தவன் அவர்கள் இறங்கி தாயுமானவர் சந்நிதி அருகில் சென்று கொண்டிருந்த போது அவர்களைத் தாண்டி சென்றவன் வேகமாக அவர்களை வழி மறைத்து நின்றான்.

‘எவன் அவன் நம்ம வழியை மறைக்கிறது?’ என்பது போல எதிரே நின்றவனைப் பார்த்த நங்கையின் முகம் சுருங்கியது.

அவன் நங்கை, வாணி இருவரும் படித்த கல்லூரியில் வேறு ஒரு பிரிவில் படித்த கதிர்வேல். அவன் ஊர் வேறாக இருந்தாலும் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் ஒரே பேருந்தில் அவர்கள் பயணம் செய்தவர்கள். படிக்கும் காலத்திலேயே நங்கையிடம் ஓரிரு முறை பேச வர, அதனைப் புரிந்து கொள்ளும் நங்கை அவன் பேச்சை ஆரம்பிக்கும் முன் அவனைப் பேசவிடாமல் அவனிடம் இருந்து நழுவி விடுவாள். படிப்பு முடிந்த பிறகு நங்கைக்கு அவனைப் பார்க்கும் படி நேரவில்லை.

இன்று கதிர்வேலை பார்த்தவள் ‘நீ தானா காலையில் இருந்து எங்க பின்னாடி வர்றவன்? இன்னும் என் பின்னால சுத்துற வேலையை நீ விடலையா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தவள் “வாணி வா போகலாம்!” என்று அவள் கையை இழுத்துக் கொண்டு அடுத்தப் படியில் கால் எடுத்து வைத்தாள்.

அவர்கள் செல்ல முடியாமல் வழி மறைத்து நின்றவன் “நங்கை ப்ளீஸ்! உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நில்லேன்” என்றான்.

அவனை முறைத்து பார்த்த நங்கை “இங்க பாரு! இப்படிப் பேரை சுருக்கி கூப்பிடுற வேலை எல்லாம் வேண்டாம். என்கிட்ட பேசுற அளவுக்கு என்ன இருக்கு உனக்கு? இப்படி வழிமறிச்சு நிக்கமா வழி விடு நாங்க போகணும்” என்றாள்.

” ப்ளீஸ்… ப்ளீஸ் பவளநங்கை நான் சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல்லிடுறேன். ஒரு அஞ்சு நிமிஷம் நில்லேன்” என்று இன்னும் வழி விடாமல் கெஞ்ச ஆரம்பித்தான்.

‘இன்றோடு இவன் விஷயத்திற்கு முடிவு கட்டுவோம்’ என்று நினைத்த நங்கையும் “என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லு! எனக்கு நேரம் ஆகுது” என்றாள்.

அவன் கொஞ்சம் தயங்கிய படியே வாணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “தனியா பேசணும்” என்றான்.

அதில் கடுப்படைந்த நங்கை “நீ இங்கேயே நின்னு தனியா பேசு! உன்னை யாரு வேணாம்னு சொன்னா?” என்று அவனிடம் கோபமாகச் சொல்லி விட்டு “வாடி…! தனியா பேசணுமாம் தனியா. ஆளை பாரு” என்று முனங்கியவள் அங்கிருந்து செல்ல தயாரானாள்.

“சரி… சரி…! அவங்களும் இருக்கட்டும். நான் இப்படியே பேசுறேன்” என்றவன், “அது வந்து… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு நங்கை. அப்ப காலேஜ் படிக்கும் போதே சொல்ல நினைப்பேன். ஆனா சொல்ல முடியாம போய்ருச்சு. நாம பக்கத்து, பக்கத்து ஊர்காரவங்க. நீயும் உங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. நீ கல்யாணம் முடிஞ்சு எங்க ஊருக்கு வந்தாலும் பக்கத்து ஊர்கிறதால உங்க அப்பா, அம்மாவை நீயே பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறது போலப் பார்த்துக்கலாம்.

அப்புறம் உங்க அப்பாவுக்குச் சொந்தமா நிலம் இருக்குறதால எங்க அப்பாவும் உடனே நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிருவார். அதுனால கவலை இல்லை. நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கிலாம்?” எங்கே பேச்சை நிறுத்தினால் தன்னால் சொல்ல முடியாமல் போகுமோ என்று நினைத்தவன் படபடவென எழுதி வைத்து ஒப்பிப்பதை போலச் சொன்னான் கதிர்வேல்.

அவன் ‘பிடிச்சிருக்கு’ என்று சொன்ன வார்த்தையில் சிறிது அதிர்ந்த நங்கை தொடர்ந்து அவன் பேச, பேச முகத்தில் ஏறிய அனலுடன் அவனை முறைத்து பார்த்து விட்டு, ஒரு இகழ்ச்சி சிரிப்பை ஒன்றை உதிர்த்து “ஓ… அப்படியா…! சரிங்க உங்க விருப்பத்தை நீங்க சொல்லிட்டீங்க. என் விருப்பத்தை நான் சொல்லலாமா?” என்று பணிவுடன் கேட்டாள்.

“ம்ம்… சொல்லு நங்கை” என்றான் கதிர்வேல் ஆவலாக.

“எனக்கு உன்னைப் பிடிக்கலை கதிர்வேல்” என்று அமைதியான குரலில் சொன்னாள் நங்கை.

அவள் பதிலில் அதிர்ந்தவன் “என்ன இப்படிப் பட்டுன்னு சொல்லிட்ட? நல்லா யோசிச்சு சொல்லு!” என்றான்.

“எத்தனை நாள், எத்தனை மாசம், இல்லை வருஷம் யோசிச்சாலும் என் பதில் இது தான். அதுனால இப்ப வழி விடுறயா? பேசி முடிச்சாச்சு” என்றாள்.

“இல்லை நங்கை. நான் அப்படி எல்லாம் விட மாட்டேன். எங்க அப்பாகிட்ட பேச போறேன். உன்னை எங்க வீட்டில் பெண் கேட்க சொல்ல போறேன். பார்த்துக்கிட்டே இரு! சீக்கரம் நடக்குதா இல்லையான்னு” என்றான் தான் செய்து காட்டுவேன் என்ற தீர்மானத்துடன்.

‘அய்யோ…! இவன் சரியான லூசு விடாக் கண்டனா இருக்கானே’ என்று மனதில் சலித்தவள், வெளியே “ஓகோ…! அப்படியா…? அது நடக்கும் போது பார்க்கலாம்” என்று கடுப்புடன் சொன்னவள், இவன்கிட்ட எல்லாம் வாயால் பேசுறது எல்லாம் வீண். நாம நம்ம செயல்ல காட்டவேண்டியது தான், என்று நினைத்த படி ‘உங்க வீட்டுல இருந்து பொண்ணு மட்டும் கேட்டு வரட்டும். ஓட, ஓட விரட்டுறேனா இல்லையா பாரு’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவனைத் தாண்டி நடக்க ஆர்மபித்தாள்.

கதிர்வேலும் தன் அப்பாவை வைத்துப் பேசிக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் அவள் போவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் ஒரு நாலு படிகள் இறங்கி இருக்க, எதிரே படி ஏறி அவர்கள் நின்ற படிக்கு நாலு படி கீழே வந்து நின்று கொண்டிருந்தான் பைந்தமிழரசன்.

அவனைப் பார்த்தும் ‘இவன் எங்கே இங்கே?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தவள் அவனைக் கண்டு கொள்ளாமல் கீழே செல்ல இறங்கினாள்.

அன்று திருச்சிக்கு ஒரு வேலை விஷயமாக வந்திருந்த அரசு, தன் வேலையெல்லாம் முடித்து விட்டு மலைக்கோட்டை சென்று வரலாம் என்ற எண்ணத்துடன் வர, அங்கே படியில் தூரத்தில் வரும் போதே ஒருவன் நங்கையை வழி மறைப்பதை பார்த்த அரசு கண்ணில் கேள்வி தோன்றினாலும் கண்டு கொள்ளாமல் ஏறி வந்தவன் காதில் அவர்கள் பேசியது எல்லாம் விழுந்தது.

இப்போது நங்கை தன்னைப் பார்த்ததும், கதிர்வேலையும், நங்கையையும் மாறி, மாறி பார்த்து விட்டு நங்கையிடம் தன் பார்வையை நிறுத்தி கண்களிலும், உதட்டிலும் நக்கல் சிரிப்பு ஒன்றை வெளியிட்டான்.

அவன் பார்வையை எல்லாம் கவனித்த நங்கை அவன் நக்கல் புன்னகையைக் கண்டதும், உள்ளுக்குள் கொதித்துப் போய்க் கோபத்துடன் வேகமாகப் படி இறங்க ஆரம்பித்தாள்.

“கொஞ்சம் மெதுவா போ நங்கை!” என்று வாணி சொல்லியும் கேளாமல் தன் வேகத்தைக் குறைக்காத நங்கை தங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தப் பிறகு தான் அமைதியானாள்.

இருக்கையில் அவள் அருகில் அமர்ந்து வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்ட வாணி “எருமை…! எருமை…! என்னா வேகம்? மூச்சே விட முடியாம பண்ணிருவ போல? கொழுப்பாடி உனக்கு? நீ எதுக்கு இவ்வளவு வேகமாக ஓடிவந்த கழுதை?” என்று சொல்லி அவள் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.

தானும் மூச்சை கொஞ்சம் நிதானப் படுத்திக் கொண்ட நங்கை வாணி திட்டியதைக் கேட்டு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தன் பையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்கப் போனாள்.

அவளில் செயலில் கடுப்பான வாணி அவள் கையில் இருந்த தண்ணீரை வெடுக்கெனப் பிடிங்கி தன் வாயில் ஊற்றி விட்டு மீதியை அவளிடம் நீட்டினாள்.

தண்ணீரை குடித்து முடித்த நங்கையிடம் “எதுக்குடி இப்படி ஓடிவந்த?” என்று கேட்டாள் வாணி.

“பின்ன…? அந்த இரண்டு முகரக்கட்டையையும் பார்த்துட்டு அங்கேயே இருக்கச் சொல்றீயா?” என்று எரிச்சலுடன் கேட்ட நங்கை “அந்தக் கதிர் பயலுக்கு என்னா தெனாவட்டு பாரேன். என்னமோ அவன் எனக்கு வாழ்க்கை குடுக்கப் போறவன் மாதிரி ஈஸியா கல்யாணத்துக்கு வீட்டில் சம்மதம் வாங்குவானம். அதுவும் எங்க நிலத்தைப் பார்த்ததும் உடனே கல்யாணம்கிற மாதிரி பேசுறான் மடப்பய.

அதுவும் எங்க அம்மா, அப்பாவை நான் பார்த்துக்க இவன் அனுமதி தர்றது போலப் பேச்சை பாரு. எனக்கு அப்படியே இரண்டு அடி போடணும் போல இருந்துச்சு. என்னைக் கட்டுப் படுத்திக்கிட்டு கிளம்பினா அந்தக் குடமிளகா வந்து நிக்குது” என்று கோபமாகப் பொரிந்து தள்ளினாள்.

“அடியே…! அந்தக் கதிர்வேலை திட்டு நியாயம். உன் மாமனை பார்த்து ஏன் அப்படிச் சொல்ற? அவங்க இப்ப என்ன செய்தாங்க உன்னை?” என்று வாணி புரியாமல் கேட்டாள்.

“உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன்? அந்த மிளகாயை என் மாமன்னு சொல்லாதன்னு” என்று கடிந்து விட்டு “அந்தக் குடமிளகா என்னைப் பார்த்து நக்கலா சிரிச்சா அதைப் பார்த்து அங்கேயே நிற்கணுமாக்கும்” என்று சொன்னவள் ‘மவனே நக்கலாவா சிரிக்கிற? நாளைக்கு நான் என்ன செய்றேன் பாரு’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் பவளநங்கை.