கண்கள் தேடுது தஞ்சம் – 6

அத்தியாயம் – 6
அன்று இரவு வேகமாக வீட்டிற்குள் நுழைந்த தேவநாயகம் முகத்தில் சினம் தாண்டவமாடியது.

கோபத்துடன் கூடத்தில் அங்கும், இங்கும் நடமாடியவர், அருகில் வந்து நின்ற அம்சவேணி “என்னங்க! எதுக்கு இப்ப இவ்வளவு கோபம்? யாரு மேல?” என்று கேட்டார்.

வேணியைக் கோபத்துடன் முறைத்த நாயகம் கண்ணில் கனலுடன் “ஹ்ம்ம்… தமிழரசு வரட்டும் சொல்றேன்” என்றார்.

அவரின் கோபத்தில் அதற்கு மேல் எதையும் கேட்காமல் வேணி ஒரு ஓரமாகப் போய் நிற்க, நாயகம் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

ஒரு அரைமணி நேரம் அதே நிலைமை தொடர்ந்தது.

தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் பைந்தமிழரசன்.

அவன் வீட்டிற்குள் நுழையும் போதே அவனைக் கோபமாக முறைத்துப் பார்த்த நாயகத்தைப் பார்த்து அவரின் முறைப்பின் காரணம் புரியாமல் “என்னப்பா… என்னாச்சு? எதுக்கு இப்படிப் பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.

“உன்னை யாரு தமிழு, மருதன் விஷயத்தில் தலையிட சொன்னா? அவன் நிலத்தை அவன் விக்கிறான். விக்காம போறான். அதுல உனக்கு என்ன பிரச்சனை வந்துச்சு? தேவையில்லாம இப்ப எதுக்குப் புதுப் பிரச்சனையைக் கிளப்பி விடுற?” என்று எடுத்தவுடன் கோபமாகக் கேட்டார்.

அவர் கோபத்தில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், இந்தக் கேள்வி வரும் என்று முன்பே அறிந்தவன் போல் “ஒரு முக்கியமான காரணமாத்தான்பா அதை விற்க முடியாமல் செய்தேன்” என்று அமைதியான குரலில் சொன்னான்.

அவனின் நிதானமான பதிலில் அவனை உறுத்துப் பார்த்த நாயகம் “அப்படி என்ன முக்கியமான காரணம்?” என்று விடாமல் கேட்டார்.

“அப்பா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. உங்களுக்கே அதுக்கான காரணம் சீக்கிரம் தெரியவரும். இப்ப நான் எதுவும் சொல்றதா இல்லை” என்று தன்மையாக அரசு பதில் சொன்னான்.

“டேய் தம்பி…! அந்த மருதன் விவகாரம் நமக்கு வேண்டாம்டா. அவன் இன்னைக்கு அந்த டீ கடைல நான் நிக்கும் போது, சாடையா அத்தனை பேச்சுப் பேசுறான். நமக்கும், அவனுக்கும் ஆகாதுன்னு ஆகிருச்சுல அப்புறம் அவன் விவகாரம் நமக்கு எதுக்குச் சொல்லு?” என்று நாயகமும் பொறுமையாக எடுத்து சொன்னார்.

அவர் சொன்னதில் மருதவாணன் திட்டியதை மட்டும் கருத்தில் கொண்ட அரசு “என்னப்பா… என்ன பேசினார்? அந்தப் பெரிய மனுஷன்! நான் தானே விக்க விடாம செய்தேன். என்கிட்ட வந்து பேச வேண்டியது தானே? உங்களை எதுக்குச் சாடையா பேசணும்?” என்று பல்லை கடித்துக் கொண்டு கோபமாகக் கேட்டான்.

“டேய்…! நீ எதுக்கு இப்ப பல்லை கடிக்கிற? அவன் விசயத்தில் தலையிட்டா பேச தான் செய்வான். அதுவும் அவனுக்குக் கோபம் வந்தா வார்த்தைகளைக் கண்ணுமண்ணு தெரியாம விடுவான். இப்ப கேட்கவா வேணும்? நீ மொத அவன் விசயத்தில் தலையிடாம ஒதுங்கிப் போற வழியைப் பாரு. இதுக்கும் மேலே நீ ஏதாவது செய்தா நானே சும்மா இருக்கமாட்டேன்” என்று அவரும் தன் கோபத்தைக் காட்டினார்.

சிறிது நேரம் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வழக்காடிக் கொண்டிருக்க… அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அம்சவேணி “ஏன் தம்பி அந்தப் பொண்ணு பவளத்துக்காக எதுவும் இப்படிச் செய்றியா?” என்று மெதுவாகக் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்கவும் நாயகமும் ‘அப்படி இருக்குமோ?’ என்பது போல மகனை கூர்ந்து பார்த்தார்.

ஆனால் அன்னை அப்படிக் கேட்டதும் “சே…சே…! என்னமா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? போயும், போயும் அவளை வச்சு என்கூட இப்படிப் பேசுறீங்க?” என்று கேட்டவன் முகம் சுளித்தது.

அவனின் முகச் சுளிப்பில் அத்துடன் அந்தப் பேச்சை விட்ட வேணி, அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் சாப்பாடு எடுத்து வைக்கச் சென்றார்.

அவன் பதிலில் சிறிது நேரம் அமைதியாக அரசுவை பார்த்த நாயகம் “நீ என்ன நினைச்சுகிட்டு இப்படிச் செய்யுறன்னு தெரியல அரசா. ஆனா இனி என்ன செய்றதா இருந்தாலும் பார்த்து செய்!” என்று சொன்னவர் தானும் அங்கிருந்து நகர்ந்தார்.

அவர்கள் செல்லவும் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து “அப்பனும், மகளும் பின் விளைவுகளைப் பத்தி எதுவும் யோசிக்கிறது இல்லை. இரண்டும் ஒன்னும் போலச் சாடை பேசிகிட்டு” என்று புலம்பி கொண்டான் பைந்தமிழரசன்.


 சில நாட்கள் கடந்த நிலையில் பவளநங்கை அன்று வீட்டிற்குள் நுழைந்த போது வீடு வெகு அமைதியாக இருந்தது. 

‘என்னடா இது? இந்த அம்மா வழக்கமா இந்த நேரம் சீரியல் பார்க்குமே! எங்கே காணும்?’ என்று நினைத்த நங்கை தன் பார்வையைச் சூழல விட, அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த ஈஸ்வரியை கண்டாள்.

அவர் அப்படி இருக்கவும் தன் நெற்றியை சுருக்கியப் படி அவர் அருகில் சென்ற நங்கை மெதுவாக “எம்மா என்னாச்சு?” என்று கேட்டாள்.

அவளின் அந்தக் குரலில் சிறிது கூட அசையாமல் இருந்தவரை தோளை பிடித்து அசைத்து “எம்மா… என்னாச்சுன்னு கேட்டேன். எதுக்கு இப்படி உட்கார்ந்துருக்க? அப்பா எதுவும் சொன்னாரா?” என்று மீண்டும் கேட்டாள்.

அவளின் உலுக்கலில் கலைந்தவர் அவள் கடைசியாகக் கேட்டது காதில் விழவும், “ப்ச்ச்…!” என்று சலிப்பாக உச்சுக் கொட்டினார்.

“என்னம்மா இது? என்னாச்சுன்னு கேட்டா ரொம்பவும் சலிச்சுக்குற? என்னனு சொன்னாத் தானே எனக்குத் தெரியும்?” என்று நங்கை விடாமல் கேட்டாள்.

“உங்க அப்பா எதுவும் சொன்னா நான் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கப் போறேன்? அவர் எதுவும் சொல்ல மாட்டேங்குறார்ன்னு தானே இப்படி இருக்கேன்” என்று வருத்தமாகச் சொன்ன தன் அம்மாவை வினோதமாகப் பார்த்த நங்கை,

“எம்மா… உனக்குத் தலையில எங்கயும் அடி கிடி பட்டுருச்சா? எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்க? அப்பாகிட்ட திட்டு வாங்கலைன்னு சந்தோஷப்படுவியா? அதை விட்டு வருத்தப்பட்டுகிட்டு உட்கார்ந்திருக்க?” என்று கேலியாகக் கேட்டாள்.

அவள் கேலியில் எரிச்சல் அடைந்த ஈஸ்வரி, “கொஞ்சமாவது வளர்ந்த பொண்ணு போல நடந்துக்கப் பவளம்! எப்பவும் விளையாட்டு புத்தியா இருக்காதே!” என்று அதட்டினார்.

அவரின் கோபத்தில் அவரை வியப்பாகப் பார்த்த நங்கை “என்னம்மா? எதுக்கு இவ்வளவு கோபம்? சரி விடு… விளையாடாமயே கேட்குறேன். சொல்லு…! எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க? எதுவும் பிரச்சனையா?” என்று அவள் ஆறுதலாகக் கேட்டதும், ஈஷ்வரியின் கண்களில் இருந்து லேசாகக் கண்ணீர் கசிந்தது.

அவரின் கண்ணீரைப் பார்த்துப் பதறிய நங்கை “ம்மா…! இப்ப எதுக்குக் கண்ணைக் கசக்குற? என்னனு சொல்லு! கண்ணைக் கசக்கி என்னை வேற பயமுறுத்தாதே!” என்றாள்.

தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு “என்னனே தெரியலடி… உங்க அப்பா ஒரு மாசமா எதையோ மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்கார் போல. ஏதோ யோசனையாவே சுத்துறார். என்னனு கேட்டா சொல்ல மாட்டீங்கிறார். இன்னைக்கும் ஏதோ சோர்வா யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்தார். நான் என்னாச்சு என்னனு விசாரிச்சுப் பார்த்தேன். ஆனா பதில் சொல்லாம கொஞ்ச நேரம் ஏதோ யோசிக்கிட்டே இருந்தார்.

அப்புறம் ஒன்னும் இல்ல. நான் வயலு வரை போறேன்னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டார். நானும் அப்ப இருந்து எதுக்கு அப்படி இருந்தார்னு தெரியாம குழப்பி போய் இருக்கேன். ஒன்னும் புரியலை. இனி மேலும் நான் கேட்டாலும் வாயத் திறந்து சொல்ல மாட்டார். என்ன பிரச்சனைன்னு புரியலையே?” என்று ஈஸ்வரி தன் மனதில் உள்ளதை எல்லாம் சொன்னார்.

அவர் சொன்னதை எல்லாம் கேட்ட நங்கை “ஏம்மா பணம் எதுவும் பிரச்சனையா இருக்குமோ?”

“பணம் இருக்காதுடி. பணம்னா இந்நேரம் எனக்கு எப்படியும் தெரிஞ்சிருக்குமே. அதோட இந்த வருஷம் தான் விளைச்சல் நல்லா இருந்ததே? அதுனால பணம் புழக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்றார் ஈஸ்வரி.

“வேற என்னமா இருக்கும்?” என்று நங்கையும் யோசிக்க ஆரம்பிக்க ஈஸ்வரிக்கு உள்ளுக்குள் ஏதோ பயம் வந்தது ‘ஒருவேளை எடம் விக்க முடியாம போனதுல நாயகம் அண்ணன் கூடத் திரும்பவும் சண்டை போட்டிருப்பாரோ? அய்யோ…! அப்படி எதுவும் நடக்கக் கூடாது கடவுளே’ என்று வேண்டுதலுடன் மனதிற்குள்ளேயே புலம்ப ஆரம்பித்தார்.

தன்னுடன் பேசிக் கொண்டிருந்த அம்மா திடீரென மீண்டும் யோசனைக்குள் மூழ்கவும் “அம்மோய்…!” என்று கத்தினாள்.

அவளின் கத்தலில் திடுக்கிட்ட ஈஸ்வரி “அடி கழுதை…! என்னா கத்து கத்துற? உன்னை…!” என்றபடி அடிக்கக் கை ஓங்க, அவர் அருகில் அமர்ந்திருந்தவள் எழுந்து சிட்டாகப் பறந்து தன் அறைக்குள் புகுந்தாள்.

“நீ ராவைக்கு(இரவுக்கு) கொட்டிக்க வெளியே தானே வந்தாகணும்? வாடி உன்னைப் பார்த்துக்கிறேன்” என்று அறைக்கு வெளியே ஈஸ்வரி கத்தினார்.

உள்ளே சென்ற நங்கை ஈஸ்வரியின் கத்தலை கண்டு கொள்ளாமல் ‘அப்பாவுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்? ஒருவேளை அந்தக் குடமிளகா எதுவும் அவருக்கு டென்ஷன் கொடுப்பானோ? அப்படி மட்டும் இருந்தது மகனே அன்னைக்கு விழாம தப்பிச்சுட்ட, இன்னொரு நாள் என் கையில் மாட்டாமையா போவே? அப்ப இருக்க உனக்கு!’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள்.

அவளின் அப்பாவின் நிலைக்குத் அவள் தான் காரணம் என்று நங்கை அறிய நேர்ந்தால்…?