கண்கள் தேடுது தஞ்சம் – 33 (Final)

அத்தியாயம் – 33

தமிழரசன் சொன்ன வார்த்தையில் ஒரு நொடி அதிர்ந்த பவளநங்கை அதன் பிறகு வேறெந்த பாவனையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

அவளின் அமைதியை அதிசயமாகப் பார்த்தவன் “என்னடா ரொம்ப அமைதியாகிட்ட? அப்படி நான் சொன்னதுக்குக் கோபப்படுவன்னு நினைச்சேன்” என்று கேட்டான்.

“ஆமா… போ மாமா…! நீ எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருக்க… அந்தக் காரணம் எல்லாம் சரியாவும் இருந்திருக்கு. அப்படி இருக்கும் போது நான் கோபப்பட்டு என்ன ஆகப் போகுது? நீயே சொல்லிரு! நான் ஒன்னும் கேட்கலை” என்று சடைத்துக் கொண்டாள்.

“ஹா…ஹா…! என் நங்கா விவரம் ஆகிட்டாளே” என்று கொஞ்சலாகச் சொன்னவன் “நான் ஏன் அப்படிச் சொன்னேன் தெரியுமா? ஏன்னா இந்தக் குறும்புக்கார நங்கா பொண்ணு என் மனசுக்குள்ள அப்ப வந்துட்டா அதான்” என்று அரசு நிறுத்த…

நங்கை அவனைத் திகைப்புடன் புரியாத பார்வை பார்த்தாள்.

“என்….என்ன சொல்ற மாமா? அப்பயேவா? ஆனா விரும்பினா பேசத்தானே தோணும்? ஆனா விரும்புறவங்களை விட்டு விலகிப் போக எப்படித் தோணும்?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்…! தோணும்டா…! முக்கியமான காரணம் இருந்தா வேற வழியே இல்லாம விலகி போய்த் தான் ஆகணும்” என்று சொன்னவனின் பேச்சுப் புரியாமல் நங்கை பார்த்தாள்.

“உனக்குப் புரியுற மாதிரியே சொல்றேன். ஆண்களுக்குன்னு ஒரு குணம் இருக்குடா” என்று சொல்லி அவன் நிறுத்த…

“என்ன?” என்றாள்.

“மனசுக்கு விரும்பின பொண்ணு அருகில் இருந்தா எந்த ஆணுக்கும் கட்டுப்பாடா இருக்குறது ரொம்பக் கஷ்டம்டா!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நங்கையின் முகம் கோணியது.

அவள் முகத்தைப் பார்த்துப் பேச்சை நிறுத்தியவன் அவள் தலையில் லேசாகக் கொட்டி “போகுது பார் புத்தி! ஓவரா கற்பனை பண்ணாதமா! ஆனா நீ கற்பனை பண்ணின மாதிரியும் சிலர் நடக்கலாம். ஆனா நான் அந்த அளவுக்கு எல்லாம் போயிருக்க மாட்டேன். என்ன அதிகப் பட்சம் இந்தா இதை ஒரு வழி ஆக்கிருப்பேன்” என்று சொல்லி அவளின் உதட்டை லேசாகச் சுண்டி விட்டான்.

அவன் சொன்ன விஷயத்தில் நங்கை முகம் நாணம் கொள்ள “ச்சு… போ மாமா…!” என்று அவன் கையைத் தட்டி விட்டாள்.

“உன் வெட்கத்தைப் பார்க்க, பார்க்க எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” என்று கேட்டப்படி அவள் முகத்தை நோக்கி அவன் குனிய, சட்டெனத் தன் கையை வைத்து அவன் முகத்தைப் பிடித்தவள் முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

அவள் முகத்தில் தன் அதரங்களைப் பதிக்கப் போனவனைத் தடுத்து முகத்தை ஆராய்ச்சி செய்வது போலப் பார்த்தவள் செய்கை புரியாமல் “என்ன நங்கா?” என்று கேட்டான்.

“இல்ல மாமா! இந்த முகத்துல நான் பார்க்குறப்ப எல்லாம் கடுகடுன்னு ஒரு முசுட்டு பையன் தெரிவான். ஆனா இப்ப அவனைக் காணோம். புதுசா ஒரு ரொமான்ஸ் மன்னன் தெரியிறான். அதான் அந்த முசுட்டு பையன் எங்க போனான்னு தேடிட்டு இருக்கேன்” என்று சீரியசாகச் சொல்ல…

அவள் என்னமோ சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளின் கிண்டலில் “உனக்கு நக்கல் ஜாஸ்தி தான்டி!” என்று சொல்லி அவள் சுதாரிக்கும் முன் தன்னைக் கேலி செய்த இதழ்களுக்குத் தண்டனை கொடுத்தே விட்டான்.

இன்ப தண்டனை கசக்குமா என்ன? அங்கே ஒரு சுகமான தண்டனை சிறிது நேரம் அரங்கேற்றம் நடத்தின.

சிறிது நேரத்தில் நங்கை விலக, அவளைத் தானும் விலக்கி இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். தன்னவன் கொடுத்த அச்சாரத்தில் நங்கையின் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. அதை உணர்ந்து தன்னுள் புதைந்திருந்தவளை மெல்ல முதுகில் தடவி ஆசுவாசப் படுத்தியன், “இப்ப நான் உன் கணவனா உன்கிட்ட உரிமை எடுத்துக்கும் போதே உனக்கு இப்படி நடுங்குதேடா!

நீ காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயம் உன் மாமனோட மனசுக்குள்ள நீ வந்துட்ட. அப்ப எல்லாம் உன்னைத் தினமும் பார்க்கும் போது இதோ இப்படி என் கைக்குள்ளேயே வச்சுக்கணும்னு ரொம்ப, ரொம்பத் தோனிருக்கு. ஆனா அப்ப அது சரி இல்லையேடா? தனக்கு உரிமையானவளிடம் மட்டும் ஆணுக்குக் கண்ணியம் காணாம போயிரும்டா. அதனால் தான் நீ படிச்சு முடிக்கிற வரை அமைதியா இருந்தேன்” என்று அவள் காதோரம் கிசுகிசுப்பாய்ச் சொன்னான்.

அவனின் கிசுகிசுப்பான குரலும், பேச்சின் சாராம்சமும் நங்கையவளை கூசி சிலிர்க்க வைத்தது.

தன்னவன் தன்னிடம் மட்டுமே அதிக உரிமை எடுத்துக் கொள்வது பெண்ணவளுக்கு மனம் மகிழ வைத்தது.

அவன் அந்தச் சமயத்தில் காதல் சொல்லி தன்னுடன் அவன் சொன்னது போல் இதழ் தீண்ட மட்டுமே உரிமை எடுக்க நினைத்திருந்தாலும் அவளால் அதை அனுமதிருக்க முடியாது தான். அதுவும் பெண்ணான தானே அவன் அருகில் இருக்கும் போது மனம் நெகிழும் போது ஆணான அவன் மனநிலையும் புரியத்தான் செய்தது. அவன் அப்படி ஒதுங்கி இருந்ததே நல்லது தான் என்று எண்ணிக் கொண்டாள்.

நங்கை தன் மனதிற்குள் அவனுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்க அரசு மேலும் பேச ஆரம்பித்தான். “அதுவும் உன்னைத் தாவணியில் பார்க்கும் போதெல்லாம்…” என்று சொல்லிவிட்டு வார்த்தையை முடிக்காமல் நிறுத்தியவன் தன் கையை அவளின் சேலை மறைக்காத இடையில் வைத்து லேசாக அழுத்தினான்.

“ஹா…!” என்று அதிர்ந்த நங்கை அவனிடம் இருந்து துள்ளி விலகி கணவனை விழி விரிய மலங்க, மலங்க பார்த்தாள்.

அவளின் அதிர்வை மாயகாரன் போலக் குறும்பு புன்னகையுடன் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி புருவத்தை ஏற்றி இறக்கி ஒரு பார்வை பார்க்க… நங்கை மயக்கம் போடாத குறையாக அவனை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நங்கைக்கு அவனின் இந்த முகம் புதிதாக வித்தியாசமாகத் தெரிந்தது.

நங்கை பார்க்கும் போதெல்லாம் வேட்டி, சட்டையில் தன் எதிரே கோப முகத்துடன் நடந்து சென்றும், விவசாயத்தில் இன்னும் என்னவெல்லாம் கத்துக் கொள்ள முடியும் என்று அதைப் பற்றித் தேடுதல் நடத்துபவனையும், பள்ளி குழந்தைகளிடம் சிறிது கம்பீரமாய் அவனின் விவசாயத் தொழிலை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்து சொல்பவனையும், ஊருக்கு ஏதாவது நல்ல திட்டங்கள் செய்து வைக்கத் தன் பங்கை தாராளமாகத் தருபவனையும் தான்.

ஆனால் அப்போது எல்லாம் அவனிடம் ஒரு நிமிர்வு, எதையும் நான் செய்து முடிப்பேன் என்ற கம்பீரம் இருக்கும். ஆனால் இப்போது தன் முன் இருக்கும் பைந்தமிழரசன் தன்னிடம் உருகி குழைந்து, கிசுகிசுக் குரலில் கொஞ்சும் அவனை வியப்பாகப் பார்த்தாள்.

நங்கையவளுக்கு ஒன்று புரியவேயில்லை. ஆண்மகனின் நிமிர்வும், கம்பீரமும் வெளி உலகத்திற்கு மட்டும் தான். தன் மனம் கவர்ந்தவளிடம் கண்ணில் காதலை தேக்கி மனம் நிறையத் தன்னவளை நிரப்பி, கொஞ்சி, கெஞ்சி பேசுவது எல்லாம் தனக்கு உரிமையானவளிடம் மட்டும் தான் என்று.

தன்னை அதிசயமாகப் பார்க்கும் மனைவியைக் கேள்வியாகப் பார்த்த அரசு “என்னடா? ஏன் இப்படிப் பார்க்குற?” என்று புரியாமல் கேட்டான்.

“ஹா…! இது நிஜமாவே நீ தானா மாமா! ஊருக்குள்ள பெரிய சண்டியர் கணக்கா சுத்துவியே! இப்ப என்னன்னா…!!” என்று மேலும் சொல்ல முடியாமல் நங்கை நிறுத்த….

அவள் சொல்ல வந்தது புரிந்து “ஹா…ஹா…ஹா…!” என்று சத்தமாகச் சிரித்தப்படி “நாட்டுக்கே ராஜாவா இருந்தாலும், தன் மனசுக்கு பிடிச்சவகிட்ட மண்டியிட்டு தான்டா ஆகும். அதில் இருந்து மட்டும் எந்தக் கொம்பனாலும் தப்பிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

அவனின் சிரிப்புச் சத்தம் அதிகமாக ஒலிக்க வேகமாக அவனின் வாயை கையை வைத்து மூடினாள்.

மூடிய கையில் அவன் இதழ் பதித்துக் கையை விலக்கியவன் மீண்டும் அவளைத் தன் கைவளைவில் கொண்டு வந்து “சீக்கிரம் பேசி முடிச்சுருவோம்!” என்றான்.

“உன்னை விட்டு விலகி போனதுக்கு அடுத்தக் காரணம் உன் மன அமைதிக்கு” என்றான்.

‘என்ன?’ என்பது போல நங்கை புரியாமல் முழிக்க…

“ஹ்ம்ம்! ஆமாடா! நீ படிச்சு முடிச்சப்பவே நான் என் காதலை சொல்லிருந்தா, நீ என்கிட்ட சேட்டை பண்ணிட்டு சுத்திட்டு இருந்தியே அதை நிறுத்திருப்ப. அதோட உன்னோட அந்த விளையாட்டுத் தனம் போய் நம்ம அடுத்து எப்படிச் சேர்றது.

நம்ம குடும்பம் எப்ப பேசி எப்ப நம்ம வாழ்க்கை சரி ஆகும்னு அதையே நினைச்சு கவலைல சுத்த ஆரம்பிச்சுருப்ப. நீ அப்படி விளையாட்டு தனத்தோடயே இருக்கட்டும். உன்னை எதுவும் கவலை அரிக்க ஆரம்பிக்க வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.

“உண்மை தான் மாமா. கவலை ரொம்பப்பட்டுருப்பேன். ஆனா அதுக்கு முன்னையும் நான் எப்ப நம்ம குடும்பம் பேசிப்பாங்கன்னு கவலையா தான் இருந்தேன். அதோட நீ நிலத்தை விக்க விடாம செய்யவும் அப்பா உன்னைத் திட்டினாரா?

அதை என்னால தாங்கவே முடியலை. நானே எப்ப நாம எல்லாம் பேசிப்போம்னு காத்திருந்தா நீ அதைக் கெடுக்குற மாதிரி திரும்பச் சண்டை வர வச்சிருவியோனு பயந்து போய் அந்தக் கோபத்தில் தான் கண்மாய்க் கரையிலே உன்னைத் தள்ளிவிட வந்தேன். அதுவும் நீ விழுந்துற கூடாதுனு மெதுவா மோதினேன். ஆனா நீ அந்த நிலத்தை விக்க விடாம பண்ணினது எவ்வளவு நல்லதுனு இப்ப தான் புரியது.

ஒரு வேளை அந்த நிலத்தை வித்து அது ரியல் எஸ்டேட் காரன் கைக்குப் போயிருந்துச்சுனா தான் திரும்பத் தேவா மாமாக்குக் கோபம் வந்திருக்கும். அப்புறம் இரண்டு பேரும் கொஞ்சம் மனசு மாறி இருந்தவங்களும் மறுபடி முறுக்கிட்டு இருந்திருப்பாங்க” என்றாள்.

“ஆமா நங்கா! அப்படி எதுவும் நடந்திற கூடாது நம்ம சேர்ற நாள் இன்னும் தள்ளி போயிற கூடாதுனு தான் மொத வேலையா மாமா நிலம் விலை போறதை தடுத்து அப்பா காதுக்கு விஷயம் போக விடாம பார்த்துகிட்டு அதுக்குப் பிறகு மத்த நில விஷயத்துக்குப் போனேன்.

அதைச் சரி பண்ணிட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம்னு பார்த்தா அதுக்குள்ள நடுவில் அந்தக் கதிர் பய வந்து குட்டையைக் குழப்பி, அவனை விலக வச்சு, எல்லாம் பண்றதுக்குள்ள உனக்குக் கோபம் வந்துருச்சு” என்று சொல்லி அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

அவன் விரல்களைத் தன்னிடம் இருந்து பிரித்தவள் “ஆனா ஏன் மாமா நம்ம குடும்பத்தைச் சேர்த்து வைக்க நீ எந்த முயற்சியும் எடுக்கலை?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் சிறிது நேரம் மௌனமாக இருந்த அரசு பின்பு “முயற்சி எடுத்துட்டு தான் இருந்தேன் நங்கா!” என்று அமைதியாகச் சொன்னான்.

“என்ன முயற்சி மாமா?” என்று நங்கை ஆச்சரியமாகக் கேட்க…

“ரியல் எஸ்டேட் காரனை அப்புறப் படுத்திட்டு அதன் பிறகு மாமாவையும், அப்பாவையும் நம்ம இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயமா இல்லாம பேச வைக்க நான் சில ஏற்பாடுகள் செய்து வச்சிருந்தேன். அதுக்கு முன்னாடி மாமாகிட்ட அவரை அடிக்கக் கை ஓங்கினதுக்கு அவர்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுட்டு, அவரைச் சமாதானம் படுத்திட்டு, அப்பாகிட்டயும் பேசி பிரச்சனையைச் சரி பண்ண இருந்தேன்.

எல்லாமே ஒரே நாளில் நடக்காதே? நில விஷயத்தை முடிச்சுட்டு இரண்டு பேரையும் பேச வைக்கணும்னு ஏற்பாடு செய்ய இருந்தேன். ஆனா…?” என்று சொல்லி நிறுத்த, “என்ன ஆனா?” என்று கேட்டு நங்கை அவனைப் பேச தூண்டினாள்.

“ஆனா எந்தச் செயலையும் நாம நல்லப்படியா செய்து முடிக்கக் கடவுள் அருள் வேணும்னு சொல்லுவாங்களே? அது போல அவங்க இரண்டு பேரும் திரும்பச் சேர்றது முழுக்க முழுக்க அவங்களோட நட்பால மட்டும் தான் இருக்கணும்னு கடவுள் போட்ட முடிச்சு போல.

நான் நில விஷயத்தை முடிச்சுட்டு இரண்டு பேரையும் பேச வைக்கணும்னு முடிவு பண்ணிருந்தப்ப இயற்கை தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுருச்சு. தொடர்ந்து மழை. அதனால பயிர் நாசம்னு ஆரம்பிச்சு ஆறுல மாமா மாட்டினு எல்லாம் அடுத்தடுத்து நடந்து, அப்பாவே மாமாவை பார்க்க வந்ததில் எல்லாமே சுமூகமா முடிஞ்சது” என்றான்.

அவன் சொல்லி முடித்ததும் “அய்யோ மாமா!” என்று மெல்லிய குரலில் கத்தினாள் நங்கை.

அவள் கத்தில் பயந்து போன அரசு “என்ன நங்கா?” என்று பதறிப் போய்க் கேட்டான்.

“அதுவே நடந்துச்சுனா… அப்போ உன்னால ஹீரோ கெத்து காட்ட முடியாம போய்ருச்சே மாமா?” என்று வருத்தத்துடன் முகத்தைச் சுருக்கி அவனுக்காகப் பரிதாபப்படுவது போல உச்சு கொட்டினாள்.

அவள் குரலில் கிண்டல் இழைந்தோடுவதைக் கவனித்தவன் “சில்வண்டுக்கு நக்கல் ஜாஸ்தியாகிட்டே போகுதே? என்ன பண்ணலாம் திரும்பத் தண்டனை தந்துறலாமா?” எனக் கேட்டதும், “ஒன்னும் வேணாம் போ!” என்று சிணுங்களாகச் சொன்னாள்.

“ஹான்… அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று போலியாக மிரட்டியவன் “நான் ஒரு சராசரி மனுஷன் தான் நங்கா! ரியல் லைப்ல கெத்து காட்டிட்டே திரிய நான் ஒன்னும் சினிமா ஹீரோ இல்ல. வாழ்க்கை நம்மளை எந்தத் திசையில் இழுத்துட்டு போகுதோ அதோட ஓட்டத்தில் நாமளும் ஓட தான் முடியும். நாம என்ன தான் நம்ம இஷ்டப்படி காரியத்தைச் சாதிச்சுக்கலாம்னு நினைச்சாலும், நம்மையும் மீறி பல விஷயங்கள் நடக்கும்.

நான் அவங்களைச் சேர்த்து வைக்க எதுவுமே செய்யலைன்னு நீ என்னைக் குறைவா நினைச்சாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் என் வழியில் சில முயற்சி எடுத்தும் அந்த வழியில் அவங்க சேராம இயற்கையே அவங்க நட்பை சேர்த்து வச்சு, மனஸ்தாபம் வந்து பிரிந்தாலும் உள்ளுக்குள் புதைத்து போன நட்புக்கு என்னைக்கும் பிரிவில்லைனு அங்கே நட்பு பிரதானமா நின்றது பாரு!! அது தான்டி பொண்டாட்டி ரியல் கெத்து!” என்று சொன்னவனின் குரலில் பெரியவர்களின் நட்பை குறித்த பெருமிதம் மிளிர்ந்தது.

தானும் அந்தப் பெருமையில் பங்கு கொண்ட நங்கை “அப்பாவும், மாமாவும் சூப்பர்ல மாமா? பிரிஞ்சு இருந்தப்பயும் அவங்க சேர்றதுக்குக் கனி மதினி கல்யாணம் மூலமா அடி எடுத்து வச்சது, எனக்கு இன்னும் ஆச்சரியம் தான் மாமா!” என்றாள்.

“ஹ்ம்ம்…! ஆமாடா அவங்க இரண்டு பேரு மனசும் அப்படி ஒத்துமையா யோசிச்சுருக்கு. அது போல ஒரு நட்பு கிடைக்கப் புண்ணியம் பண்ணிருக்கணும்” என்றவன் “சரி எல்லாம் பேசி முடிச்சாச்சுல. அடுத்ததைப் பார்ப்போமா?” என்று கேட்டுக் கொண்டே அவள் மேனியில் தன் கைகளை உலாவ விட்டான்.

“ஹான்…! அதெல்லாம் இல்லை. இன்னும் ரொம்ப ரொம்ப முக்கியமானது இருக்கு” என்ற நங்கை அவனின் கையை நகர விடாமல் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

“கனி மதினிட்ட ஏன் என்னைக் கட்டிக்க முடியாதுன்னு சொன்ன?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“ஓஹோ…! அதுக்குத்தான் காலைல கனிக்கா சொன்னப்ப முறைச்சுட்டு இருந்தியோ?” எனக் கேட்டான்.

“ஆமாம்…! ஏன் மாட்டேன்னு சொன்ன?” என்று இப்போதும் அதே முறைப்புடன் கேட்டாள்.

“ஹப்பா…! பயமா இருக்கே!” என்று அவளின் முறைப்பை கேலி செய்தவன் “நான் முன்பே சொன்னது போல அப்பாவுக்கு என் விருப்பம் தெரிஞ்சா என் ஆசையை நிறைவேத்தணும் மாமாகிட்ட பொண்ணு கேட்டு கிளம்புவார். அடுத்து அக்கா கேட்கும் போது நான் சம்மதம் சொல்லிருந்தா அவ உடனே உன் கிட்ட தான் சொல்லிருப்பா. நானே என் மனசை உன்கிட்ட இதோ இப்படிச் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.

அதுக்குத் தான் அக்காகிட்ட மறுத்தேன். அதோட மாறனுக்கும் என் மனசு தெரிஞ்சா வாணி மூலமா உனக்கு வந்திரும்னு தெரியும். மத்தவங்க மூலமா என் மனசு உனக்குத் தெரிய வர வேண்டாம்னு நினைச்சேன். என் நேசத்தை நீயே நேரடியா தெரிஞ்சுக்க எனக்கு வேற வழி தெரியலை” என்றான்.

“ம்ம்… சரிதான் மாமா! ஆனா என்னை ரொம்பத்தான் தவிக்க விட்டுட்ட. உனக்கு என்னைப் பிடிக்கும்னு நீ எந்த வழியிலேயேயும் எனக்குக் காட்டலை. நான் தினமும் தாவணியில வரும் போது என்னைக் கோபமா பார்ப்பியா? அப்படியாவது என்னை நீ பார்க்குறியேனு நினைச்சு தான் தாவணி கட்டிட்டு வருவேன். ஆனா நீ அதுக்கு வேற காரணம் சொல்ற” என்று கடைசி வார்த்தையைச் சிணுங்களாகச் சொன்னாள்.

அவளின் சிணுங்கல் மீண்டும் அவளைத் தீண்ட தூண்ட நங்கையிடம் சிறைப் பட்டிருந்த கைகளை மெல்ல விடிவித்துக் கொண்டவன் தன் ஒற்றை விரலால் அவளின் இடையை வருடினான். அதில் கூசி சிலிர்த்தவள் அவன் மார்பிலேயே புதைந்துக் கொண்டாள்.

அவளின் முகத்தை மட்டும் நிமிர்த்தியவன் அவள் கண்களைப் பார்த்தான். அது இறுக மூடியிருக்க, “கண்ணைத் திறடா நங்கா!” என்று மெல்ல முணுமுணுத்தான்.

கூச்சத்துடன் மெதுவாக நங்கை கண்ணைத் திறந்ததும், “நீ தாவணியில் வர்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா. அந்த உடையில் உன்னைப் பார்க்க, பார்க்க உடனே உன்னை என் மனைவியா என்கிட்ட கொண்டு வந்திரணும்னு அவ்வளவு ஆசை வரும் எனக்கு. ஆனா அதுக்கு சரியா நேரம் அமைய நாள் ஆகுமே? அப்படி இருக்கும் போது இவ வேற தாவணியைக் கட்டிட்டு வந்து கடுப்பேத்துறாளேன்னு தான் கோபமா பார்த்துட்டு போவேன். என் பார்வை தான் கோபமா இருக்குமே தவிர உள்ளுக்குள்ள உன் மீது எனக்கு இருந்த நேசம் அளவிட முடியாதது. அதுவும் அன்னைக்கு நீ கண்மாய்க் கரையிலே என்னைத் தள்ளிட்டு நீ விழ போனியே?

அப்ப உன் கையைப் பிடிச்சதுக்கே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? என் கை எல்லாம் இன்னும் உன்னை தொடுன்னு துறுதுறுன்னு என்னை தூண்டுச்சு. அந்தத் துறுதுறுப்பை போக்கிகணும்னு தான் என் வேட்டியில் கையைத் துடைச்சுக்கிட்டேன்.

அதோட அன்னைக்குப் பஸ்ல அழுதுட்டு இருந்ததைப் பார்த்தும் நான் உடனே உன் பக்கத்துல வராதத்துக்குக் காரணம், நான் அவசரப்பட்டு வந்திருந்தா நிச்சயம் உன் கண்ணீரை பார்க்க முடியாம கண்டிப்பா அணைச்சிருப்பேன். அது போல நடந்திருந்தா நல்லா இருக்குமா சொல்லு?

இப்படி நான் பேசுறது தப்பா கூடத் தோணலாம். எத்தனை தெனாவெட்டான ஆணா இருந்தாலும், மனசுக்கு பிடிச்ச பொண்ணு முன்னாடி ஆண் பலவீனம் நிறைந்தவன் தான்டா! அதற்கு நானும் விதிவிலக்கு இல்லை. நமக்குள்ள அப்படி எதுவும் தீண்டல் நடந்துற கூடாதுனு தான் விலகி போனேனே தவிர, உன் மேல அன்பு இல்லாம விலகி போகலை.

நான் எவ்வளவு உன் மேல நேசம் வச்சிருக்கேன்னு இனி வரும் ஒவ்வொரு நாளிலும் அதை நீயே புரிஞ்சிப்ப” என்றவன் தன்னை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னம் தீண்டி நாண வைத்தான்.

சிறிது நேரம் நகர “உன் மேல எனக்கு எப்ப விருப்பம் வந்துச்சுன்னு நீ கேட்கவே இல்லையே மாமா?” என்று நங்கை கேட்டாள்.

“அது நீ சொல்லவே வேண்டாம்டா. சின்ன வயசில் இருந்து உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் என்னால அர்த்தம் உணர முடியும், என்னோட பதினெம் பருவத்துள்ள அப்ப உள்ள மனநிலைக்கு ஏற்ப நானும் பெரிய மனுஷனா ஆகப் போற பருவத்தில் உன்கிட்ட லேசா விலகி போனேனே தவிர மனதில் எப்பவும் நீ என் அன்பான நங்காதான். நமக்குள்ள இருந்த பாலின பாகுபாடு அப்ப நாம கொஞ்சம் விலகி போக வச்சுது.

ஆனா என் அன்பு குறையாம தான் இருந்துச்சு. உடலால விலகி இருந்தாலும் உன்னோட ஒவ்வொரு அசைவையும் கவனித்துட்டு தான் இருந்தேன். அதுனால உன்னோட உணர்வெல்லாம் எனக்கு அத்துப்படி தான். அதில் இருந்தே உனக்கு என் மேல நீ காலேஜ் படிக்கறப்பவே நேசம் வந்திருச்சுன்னு புரிஞ்சது. அதை மறைக்க என்னைக் கனலா பார்க்குறதையும் புரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னவனைப் பெருமை பொங்க பார்த்தாள்.

கனல் விழிகளால் காதல் சொல்லும்
கள்ளியவளின் மனமறிய
கள்வனாய் தான் மாறுவேனடி!!

“நான் வாணிகிட்ட சொல்லுவேன் மாமா. என் மாமன் என் மனசை புரிச்சு வைச்சிருக்கும்னு. அது போலவே நீ என்னை நல்லா புரிஞ்சு வச்சுருக்க” என்றவள் தொடர்ந்து….

“காலேஜ் படிக்கிறப்ப தினமும் உன்னைப் பார்க்க வர்றப்ப வாணி கேட்டா, உன் மாமனுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகிருச்சுன்னா எப்படி இப்படி வந்து பார்ப்ப? அவருக்குன்னு ஒருத்தி வந்திருவா , அப்போ நீ இப்படி வந்து பார்த்தா அது தப்பா படும்னு சொன்னா. அப்போ தான் எனக்கும் ஒன்னு உறைச்சிது. உன்னை என்னால பார்க்காம இருக்க முடியுமானு யோசிச்சுப் பார்த்தேன். கண்டிப்பா என்னால அது முடியாதே மாமா. நான் எப்படி உன்னைப் பார்க்காம இருப்பேன். நீயே சொல்லுன்னு உன் கிட்ட கேட்க என் மனசு துடிக்கும்.

அந்தத் துடிப்புக்கு அர்த்தத்தை அப்ப தான் உணர்ந்தேன். நாள் போகப் போக என் மனசுல நீ புகுந்த மாதிரி உன்கிட்டயும் எதுவும் மாற்றம் வந்திருக்கான்னு தேடி, தேடி பார்த்து என்னைத் தவிக்க விட்டுட்டே. அதுவும் கதிர்வேல் விஷயத்தில் உன் அணுகுமுறை என்னை ரொம்பவே உடைய வச்சிருச்சு. எல்லாத்தையும் தாண்டி இப்ப நான் உன் கைக்குள்ள இருக்குறதே ஏதோ கனவு போல இருக்கு” என்று தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டியவள் குரல் கலங்க ஆரம்பித்தது.

கலங்கியவளை இறுக்கி அணைத்து அவள் முகத்தைத் தன் மார்பில் அழுத்தியவன், “உன்னைத் தவிக்க விட்டதுக்குச் சாரிடா. இதோ இப்ப நடக்குறது கனவு இல்லைடா. நீ தேடிய தஞ்சம் இதோ இருக்கு. இனி விளையாட்டுக்கு கூட உன்னைத் தவிக்க விடமாட்டேன். உன் மாமன் இனி உன் கைக்குள் மட்டுமே” என்றவன் குரலும் கரகரத்தது.

அவனின் நெஞ்சத்தில் தஞ்சமடைந்திருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். கண்ணில் காதல் பொங்க தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையுடன் தன் பார்வையைக் கலக்க விட்டவள் “நான் தேடிய தஞ்சம் கிடைச்சுருச்சு மாமா” என்று மனம் நிறைவுடன் சொன்னாள் பவளநங்கை.

அவள் இமைகளில் இதழ் பதித்தவன் அவளுக்குக் குறையாத காதலுடன் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டான் பைந்தமிழரசன்.


“இதோ இப்படி விதையைத் தூவனும் ய்யா. இப்படித் தண்ணி ஊத்தணும். இது எல்லாம் என் பேராண்டி இடம். இதில் எல்லாம் தங்கம் போல நெல் விளைஞ்சு நிக்கப் போகுது பாரு!” என்று பெருமையுடன் மீசையை முறுக்கி சொல்லிக் கொண்டிருந்தார் மருதவாணன்.

“ஹய்…! சூப்பரு தாத்தா…!” என்று கை தட்டி சந்தோஷமாகச் சிரித்தான் ஐந்து வயதான நிலவரசன்.

பைந்தமிழரசன், பவளநங்கை வரைந்த காதல் ஓவியத்தில் உதித்தவன் தான் நிலவரசன்.

“என் வேலையை நீ செய்தா நான் என்ன பண்றது மருதா? என் பேரனுக்கு நான் தான் விவசாயத்தின் அருமை பெருமையெல்லாம் சொல்லித்தருவேன்” என்று நண்பனிடம் செல்ல சண்டை இட்டுக் கொண்டிருந்தார் தேவநாயகம்.

“அதெல்லாம் முடியாது நாயகம். என் பேரனுக்கு நான் தான் சொல்லித்தருவேன். நீ வேணும்னா அடுத்து வர போற இன்னொரு குட்டி இளவரசனுக்குச் சொல்லிக் கொடு” என்று தூரத்தில் பள்ளி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த மகள் பவளநங்கையைக் காட்டி சொன்னார்.

“ஹா… அதெல்லாம் இல்லைங்க அடுத்து வரப் போறது இளவரசி தான். என்ன மதினி சரிதானே?” என்று போர்க் கொடி தூக்கிய ஈஸ்வரி தனக்குச் சப்போர்ட்டாக அம்சவேணியும் பேச்சில் இழுத்தார்.

“ஆமா மதினி. அடுத்து இளவரசி தான் வேணும். என் பேத்திக்கு நான் விதவிதமா போட்டு அழகு பார்க்க வேண்டாம்” என்று அவருக்கு ஒத்து ஓதினார் வேணி.

இவர்களின் உரிமையான சண்டையைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே அங்கே வந்த தமிழரசன் “எனக்கு இளவரசி தான் வருவா! அதனால நீங்க எல்லாம் சண்டை போட்டுக்காம அவங்க அவங்க வேலையைப் பாருங்க” என்றவனின் குரலில் மகள் வரவை குறித்த ஆர்வம் இருந்தது.

“இளவரசனோ, இளவரசியோ எந்தப் பிள்ளையா இருந்தாலும் நம்ம மண்ணோட பெருமையையும், நம்ம விவசாயத்தின் அருமையையும் சொல்லத்தரத் தான் செய்வேன்” என்று நாயகம் சொல்ல… “அதில் என் பங்கும் இருக்கும் நாயகம்” என்று தானும் அவருடன் இணைந்து கொண்டார் மருதன்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கப் பள்ளி குழந்தைகளை அனுப்பி விட்டு இவர்களிடம் வந்தாள் நங்கை. கணவன் காரியம் யாவிலும் கை கொடுத்து என்பது போல, அவனின் வேலைகளில் தானும் இப்போது இணைந்துக் கொண்டாள்.

பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு இப்போது நங்கையுடையது. அது போல இன்னும் விழிப்புணர்வு ஏற்பாடுகள் சிலதும் செய்து கொண்டிருக்கும் அரசுவிற்கு அவர்களின் குடும்பமே தன்னால் ஆன உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

சோர்ந்து வந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்து, அவளின் கையைப் பிடித்து அங்கே மரத்தடியில் போட பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர வைத்தவன் அவளுக்காகத் தயாராக வைத்திருந்த இளநீரை வெட்டிக் கொடுத்தான்.

அதை வாங்கிக் குடித்த நங்கை கணவனைப் பார்த்து மலர்ந்த சிரிப்பொன்றை வெளியிட்டு விட்டு தன் அருகில் ஓடிவந்த மகனை தூக்கி தன் மடியில் இறுத்திக் கொண்டாள்.

“இன்னைக்கு என் நிலவன் குட்டி என்ன கத்துக்கிட்டிங்க?” என்று மகனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“ஹான்…! நான் விதை போட்டே மா தாத்தா சொல்லி தந்தார்” என்று கைகளை விரித்துக் கதை சொன்ன மகனின் பேச்சை கவனித்துக் கேட்டு விட்டு கணவனின் புறம் பார்வை திருப்பினாள்.

அவன் முகத்தில் ஏதோ யோசனை தெரிய “என்ன மாமா? என்ன யோசனையாவே இருக்க?” என்று கேட்டாள்

அவள் கேள்வியில் அதுவரை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் அரசுவை கேள்வியாகப் பார்த்தார்கள்.

எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவன் “இன்னும் இரண்டு நாளில் விவசாயிகள் எல்லாம் சேர்ந்து போராட்டம் போறோம்ல அதைத் தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்று சொல்ல சின்னவன் தவிர அனைவரின் முகமும் சோகத்தைத் தத்தெடுத்தது போல் ஆனது.

“ஹ்ம்ம்… என்னத்தைச் சொல்றதுய்யா? நாம எல்லாம் கடந்த காலத்தில் பேக்டரிகாரங்கிட்டயும், ரியல் எஸ்டேட்காரங்கிட்ட இருந்தும் நிலத்தைக் காப்பாத்திக்கப் போராடினோம். ஆனா இப்ப தினம் தினம் காதில் விழுகிற செய்தியை எல்லாம் கேட்கும் போது நெஞ்சு கொதிச்சு துடிக்குது. மாநிலம் முழுவதும் தினமும் ஒரு திட்டம், அதனால் ஒவ்வொரு நாளும் நம்ம கண்ணு முன்னாடி பார்த்துக்கிட்டு இருக்குற அழிவுனு எல்லாத்தையும் பார்க்கும் போது விவசாயம்னு ஒன்னு இருக்கிறதா பேப்பரில் எழுதி வச்சு மட்டும் தான் பார்க்க முடியும் போல.

ஊருக்கே சோறு போடுற ஒவ்வொரு விவசாயி மனசும் கொந்தளிச்சு போய் இருக்கு. ஆனா அந்தக் கொந்தளிப்பை குறைக்க வழி தேடாம கொதிக்கிறவனை அடியோட அழிச்சுப் போடதான் வேலை நடக்குது. இதுக்கு என்னைக்கு விடிவு வர போகுதோ தெரியலை?” என்று தன் வேதனையைக் கொட்டினார் நாயகம்.

“ம்ம்… ஆமா நாயகம் ஒரு காலத்தில் விவசாயத்தை வெறுத்த என்னாலேயே இந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க முடியாம மனசு தவிக்குது. இப்படியே நிலைமை போனா என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. விவசாயிகளையும் விவசாய நிலத்தையும் அழிச்சுட்டு மேலிடத்தில் இருக்குறவங்க எல்லாம் கல்லையும், மண்ணையும் தின்ன முடிவு பண்ணிட்டாங்க போல என்னமோ போ! இப்படிப் புலம்பியே விவசாயி சாகுறது தான் வழி போல இருக்கு?” என்று புலம்பினார் மருதன்.

“அப்படி இல்லை. மாமா நாம ஒவ்வொரு விவசாயி மட்டும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நினைச்சா கண்டிப்பா இந்த அழிவை நாம தடுக்கலாம். அதுக்கு நமக்குள்ள ஒற்றுமை வேணும். ஊர் கூடி இழுத்தா தான் தேர் நகரும். நாம அங்க அங்க தனித்தனியா நம்ம எதிர்ப்பை தெரிவிச்சா ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.

சோசியல் மீடியால பக்கம் பக்கமா நியாயம் அநியாயத்தைப் பேசாம, இப்படி நமக்குள்ள அழிவை நினைச்சு புலம்பி தள்ளாம, எங்கோ விழிப்புணர்வு கூட்டம் சின்னதா போட்டு போராடி நாம எதையும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு போராட்டம் ஆரம்பிச்சா ஒவ்வொரு குடிமகனும் அதில் கைகோர்த்து இணைந்து போராட தயாராகணும். அது மட்டும் நடந்தா நம்ம போராட்டத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கத் தான் செய்யும்.

வெறும் பேச்சில் நேரத்தை போக்காம செயலில் நம்ம எதிர்ப்பை அழுத்தமா பதிய வைக்கணும். இப்ப கூடப் பாருங்க நம்ம எதிர்ப்பை காட்ட போராட்டம் ஏற்பாடு பண்ணினா கொஞ்ச பேர் தான் வர போறதா சொல்லிருக்காங்க. இப்படி இருந்தா நாம எப்படி வெற்றி அடைய முடியும்? அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு” என்றான்.

அவனின் தோளில் கை வைத்து அழுத்திய நங்கை “கவலை படாதே மாமா! எல்லாம் நல்லதே நடக்கும். நம்ம பக்க முயற்சியை நாம தளராம செய்வோம்” என்று கணவனை ஊக்கப் படுத்தினாள்.

அவளைப் பார்த்து தன் கவலையை ஒதுக்கி வைத்து விட்டுச் சிரித்தான் தமிழரசன்.


இரவு தன் அறைக்குள் நுழைந்த தமிழரசன் மனைவியைத் தேடினான். அவள் அவன் கண்களுக்குச் சிக்காமல் போகத் திரும்பக் கூடத்திற்கு வந்து பார்த்தான்.

நங்கை மாமியார் அறையில் இருந்து மெல்ல நடந்து வந்துக்கொண்டு இருந்தாள்.

அவள் தன் அருகில் வரும் வரை அவளையே ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தாய்மையைத் தாங்கி இருந்த பெண்ணவளின் அழகு அவனை மனம் மயங்க வைத்தது. “என் நங்கா…!” என்று தனக்குள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

கணவனின் அருகில் வந்த நங்கை ஒரு நொடி அவனின் முகத்தைக் கவனித்து விட்டு எதுவும் பேசாமல் அவனைத் தாண்டி தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.

அவளைப் புரியாமல் பார்த்தவன் தானும் அவள் பின் சென்று கதவை மூடிவிட்டுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் அருகில் போய் அமர்ந்தான்.

“என்ன நங்கா… நான் உன்னை எவ்வளவு ஆசையா பார்த்தேன். நீ என்னன்னா கண்டுக்காம உள்ள வந்து உட்கார்ந்துட்ட?” என்று கேட்டான்.

“ஹான்…! நீ மட்டும் நான் முன்னாடி இப்படிப் பார்க்கும் போது கண்டுக்காம விலகி போன தானே?” என்று முன்பு நடந்ததைச் சொல்லி சீண்டினாள்.

“ஆமா… இந்தம்மா அப்படியே ஆர்வமா பார்த்தாங்க? அதை நான் கண்டுக்காம போய்ட்டேன். நான் உன்னைப் பார்க்காம இருக்கும் போதெல்லாம் காதலா பார்த்திட்டு நான் உன் முகத்தைப் பார்த்ததும் கோபமா முறைப்ப. அதைப் போய்ப் பெரிய விஷயமா சொல்ல வந்துட்டா” என்று அவனும் பதிலுக்கு வாரினான்.

அவன் அப்படிச் சொன்னதில் உண்மையாகவே முறைத்தவள் “போடா குடமிளகா!” என்றுவிட்டுப் படுக்கையில் போய் அவனுக்கு முதுகு காட்டி ஓரமாய்ப் படுத்துக் கொண்டாள்.

“ஆமா… கோபம் வந்துச்சுனா மாமான்னு கூப்பிடுறதை விட்டுட்டு குடமிளகானு சொல்லிரு. இந்தக் குடமிளகானு நீ கூப்பிடுறதை என்னைக்குத் தான் விடப் போறியோ?” என்று சலிப்பாகக் கேட்டவனுக்குப் பதில் வராமல் போக…

அவளைத் தன் பக்கம் திருப்பி அவள் மேட்டிட்டிருந்த வயிற்றில் கை வைத்து மெல்ல வருடி “இருடி! என் இளவரசி வெளியே வந்ததும் உன்னை உதைக்கச் சொல்றேன்” என்று மிரட்டினான்.

“ஆமா… நம்ம பையன் வந்தப்பயும் இப்படித் தான் சொன்ன. ஆனா பாரு என் செல்லக் குட்டி என்னைப் போலவே வந்து பிறந்திருக்கு. இந்தக் குட்டியையும் என் கைக்குள்ள போட்டுக்கிட்டு நாங்க மூணு பேரும் சேர்ந்து தான் உன்னை உதைப்போம்” என்று சொல்லி தலையைச் சிலுப்பினாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல் நங்கையையே குறுகுறுப்பாகப் பார்த்தான். அவன் பார்வையை எதிர் கொண்ட நங்கை “ச்சு…! என்ன மாமா? எதுக்கு இப்படிப் பார்க்குற?” என்று சிணுங்களாகக் கேட்டவளை பார்த்துச் சத்தமாகச் சிரித்தான்.

சிரித்தவன் வாயை பொத்த அவனைத் தன்னருகில் படுத்த படியே இழுக்க, அவள் அருகில் தானும் சரிந்து விழுந்தான்.

தன் முகத்திற்கு நேராக இருந்த அவன் முகத்தைப் பார்த்தவள் பின் தன் இரு விரல் கொண்டு அவனின் மூக்கை பிடித்து இழுத்து “உன்னோட புடைப்பா இருக்குற மூக்கை பார்க்க, பார்க்க எனக்குக் குடமிளகா ஞாபகம் தான் வருது. எனக்குக் கோபம் வந்தா அப்படித் தான் கூப்பிடுவேன். நீ கேட்டு தான் ஆகணும். வேற வழி இல்லை” என்று அலட்சியமாகச் சொல்ல…

அவள் விரல்களைப் பிடித்து இழுத்தவன் “சேட்டை…! சேட்டை…! இந்தச் சேட்டை மட்டும் கொஞ்சமும் குறைய மாட்டிங்குது” என்றுவிட்டு அவள் தலையில் லேசாகக் கொட்டினான்.

“சேட்டையைக் குறைக்கணும்னு சொல்றியா என்ன?” என்று நங்கை கேட்க…

“ஒன்னும் வேண்டாம். என் நங்காவுக்குச் சேட்டை தான் அழகு!” என்றவன், ‘குட்டி தூங்கிட்டானா?’ என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.

அவன் குரலில் வெட்கியவள் “ஹ்ம்ம்…! வழக்கம் போல அத்தை, மாமா கூடத் தூங்கிட்டான். பார்த்துட்டுத்தான் வர்றேன்” என்று முனங்களாகச் சொன்னவளின் முகம் அருகே நெருங்கி “அப்ப பிரச்சனை இல்லை. சேட்டை பண்ணின என் நங்காவுக்கு ரொம்ப நேரம் தண்டனை தரலாம். என்ன தயாரா?” என்று கேட்டப் படி அவளின் இதழை நோக்கி குனிந்தான். “ம்ம்…!” என்று முனங்கி தன் சம்மதத்தைத் தந்து இன்ப தண்டனையில் மூழ்க தயாரானாள்.

சிறிது நேரத்தில் தன் மாமனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி தஞ்சமடைந்திருந்தாள் பவளநங்கை.

தன் நங்கா தேடிய தஞ்சத்தைக் கொடுத்த நிறைவில் அவளை இதமாக அணைத்து மனம் நிறைந்தான் பைந்தமிழரசன்.

சுபம்