கண்கள் தேடுது தஞ்சம் – 23

அத்தியாயம் – 23

தன் காதில் விழுந்த வார்த்தைகள் நிஜம் தானா என்பது போல அதிர்ந்து நின்றிருந்தாள் பவளநங்கை.

“என்…என்ன சொல்ற? நிஜமாவா?” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது.

அவள் அதிர்வை பற்றிக் கொஞ்சமும் கவலை படாமல் “நிஜமா தான் சொல்றேன் நங்கை! அன்னைக்கு மலைக்கோட்டைல உன்கிட்ட வந்து பேசினப்ப அந்த அண்ணா பார்த்துட்டு போனாங்கல? அதுக்கு மறுநாள் எங்க ஊருக்கு என்னைப் பார்க்க வந்தாங்க. வந்து நீ உண்மையாவே நங்கையை லவ் பண்றியா இல்ல சும்மா பொழுதுபோக்கா சுத்துறயானு கேட்டாங்க. நான் உண்மையா தான் லவ் பண்றேன்னு சொல்லவும், அப்ப உங்க வீட்டில் போய்ப் பேசு.

உங்க அப்பாகிட்ட சொல்லி பொண்ணு கேட்க சொல்லுன்னு சொன்னாங்க! நீங்க யாரு உங்களுக்கு எதுக்கு நங்கை மேல இவ்வளவு அக்கறைனு கேட்டேன். அதுக்கு அண்ணா தான் நங்கைக்கு நான் மாமா. இப்ப குடும்பப் பிரச்சனைல பேசாம இருக்கோம். ஆனா அவ எப்படியும் போகட்டும்ன்னு என்னால விட முடியாது. அதனால தான் உன்னைப் பார்க்க வந்தேன்னு சொன்னாங்க.

அப்புறம் உங்க குடும்ப விவரம் சொல்லிட்டு, என்னைப் பத்தியும் விசாரிச்சுட்டு போனாங்க. எங்கப்பா கொஞ்சம் வசதி, வாய்ப்பு எல்லாம் பார்ப்பார். அதுனால உன்னைப் பத்தி வீட்டில் எப்படிச் சொல்றதுன்னு பயந்து போய் இருந்தேன். அப்புறம் அந்த அண்ணா வந்து பேசின பிறகு எனக்குச் சப்போர்ட்க்கு ஆள் இருக்குனு தைரியம் வந்திருச்சு. பிறகு வீட்டில் போய்ச் சொன்னேன். முதல எங்க அப்பா சம்மதிக்க மாட்டேன்னு சொன்னார்.

அப்புறம் இரண்டு நாள் முன்ன விவசாயக் கூட்டத்தில் எங்க அப்பாவை பார்த்து அந்த அண்ணன் என்ன சொன்னார்னு தெரியல. எங்கப்பா வீட்டுக்கு வந்த உடனே சரின்னு சொல்லிட்டார். அப்புறம்தான் நாளைக்குப் பொண்ணு பார்க்க வர்றதா முடிவாச்சு. நானும் இன்னைக்கு உன்கிட்ட சொல்ல ஓடி வந்துட்டேன்” என்று இதுவரை நடந்ததை மூச்சு விடாமல் சொல்லிவிட்டு நங்கையின் பதிலுக்காக அவளின் முகத்தையே பார்த்தான்.

அவன் பேச பேச ‘மனம் உடைதல் என்றால் இது தானா?’ என்பது போல் உள்ளுக்குள் உடைந்து போய் நின்றிருந்தாள் நங்கை.

மனதின் வலி கண்ணீரை வெளிப்படுத்த தயாராக இருந்தது.

ஆனால் இவனின் முன் தான் அழுது விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்களை விரிய திறந்து வைத்து கண்ணீரை அடக்கப் போராடியப்படி “எல்லாம் சொல்லி முடிச்சுட்டியா? இல்ல இன்னும் இருக்கா?” என்று நிதானத்தை இழுத்து பிடித்தப்படி கேட்டாள்.

அவள் மனநிலை பற்றி ஒன்றும் அறியாமல் “சொல்ல ஒன்னும் இல்லை… ஆனா கேட்க இருக்கு” என்றான்.

“என்ன…?”

“அந்த அண்ணே உன்னைப் பொண்ணு பார்க்க போகச் சொல்லுது! ஆனா நீ அந்த அண்ணன் பேரை சொல்லி என்னை விரட்டி விடப் பார்க்குற! என்னை என்ன கேனைனு நினைச்சியா? நீ பொய் சொல்லி விரட்டினதும் போறதுக்கு?” என்று திமிராகக் கேட்டான்.

கதிர்வேல் சிறிதும் யோசிக்க வில்லை. அரசு தான் அவனிடம் பேசினான் என்றாலும், நங்கைக்கும் மனது இருக்கும். அவளுக்கும் சொல்லப்படாத காதல் இருக்கும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிதும் இல்லை.

அவனின் குணம் அவனை அப்படி நடக்க வைத்தது.

வீட்டிற்கு ஒரே பிள்ளை! கேட்டதும் கிடைக்கும் சுழல், தான் நினைத்தது தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற குணம், தான் மட்டுமே பெரிது, அடுத்தவர்கள் எண்ணம் பற்றி எனக்குக் கவலை இல்லை என்ற எண்ணம்! எல்லாம் சேர்ந்து தான் அவனை அப்படிப் பேச துண்டியது.

நான் காதலிக்கிறேன்! நீ என்னைக் காதலித்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்ற எண்ணத்தில் தான் அவனின் நடவடிக்கை இருந்தது.

முதலில் அவனின் காதல் உண்மையானதா என்றே அவனுக்குத் தெரியாது.

ஏதோ ஒரு அசட்டுத் தைரியம்! கல்லூரியில் படித்தாலே காதலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் போலும். அவனின் எண்ணத்திற்கு வலுக் கூட்டுவது போலக் கல்லூரியில் அவனைச் சுற்றி நிறையப் பேர் காதல் என்று சுற்றி திரிய அவனுக்கும் காதலிக்கும் ஆசை வந்தது.

அவன் அப்படி ஆசைப் பட்ட போது கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் அவனின் கண்ணில் பட்டவள் தான் பவளநங்கை.

பல ஆண்களை முதலில் கவர்வது பெண்களின் அழகு தானே? கதிர்வேலையும் கவர்ந்தது நங்கையின் அழகு தான்.

அவளின் அழகு அவனுக்குப் பிடித்திருந்தது. அதோடு தினமும் அவளைப் பேருந்தில் பார்த்துக் கொண்டு வந்ததால் அவனின் நண்பர்களிடம் அவளைக் காட்டி அவன் ஆள் என்று பேசிக் கொள்ள நங்கையை அவள் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்திக் கொண்டான்.

அவன் தன்னைப் பார்ப்பது புரிந்த நங்கையும் முடிந்தவரை அவனிடம் இருந்து விலகி போய் விடுவாள்.

அவன் தன்னைப் பார்க்கின்றான் என்பதற்காக என்னை ஏன் பார்க்கின்றாய்? என்று கேட்க போக, அதையே அவன் பெரிதாக எடுத்துக் கொண்டு தன்னிடம் பேச ஏன் இடம் தர வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்ததால் நீ யாரோ? நீ என்னைப் பார்ப்பதால் எனக்கு ஒன்றும் இல்லை! என்பது போலக் காட்டிக் கொள்வாள்.

அவளின் அந்த அலட்சியமே படிக்கும் காலத்தில் அவனை அவளிடம் காதல் சொல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தது.

நங்கை இளநிலை படிப்பின் இறுதியில் இருந்த போது கதிர்வேல் முதுநிலை இறுதியில் இருந்ததால் கல்லூரி படிப்பை அதே வருடம் ஒன்றாக முடித்தார்கள்.

நங்கை இளநிலையுடன் நின்று விட முதுநிலை படித்துவிட்டு உடனே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் அவனுக்கு இல்லாததால் ஊரில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு கல்லூரி நண்பர்கள் எல்லாம் சந்தித்துப் பேசும் போது கல்லூரி நாட்களும் காதலை பற்றிப் பேசிய நாட்களும் அவர்கள் பேச்சில் வர, அப்போது கதிர்வேலில் காதலை பற்றி விசாரித்தார்கள்.

ஒரு நண்பன் காதலை சொல்லிவிட்டாயா? எனக் கேட்க… இவன் இல்லை என்று பதில் சொல்ல… எல்லோரும் சேர்ந்து கதிர்வேல் காதலை சொல்லாதை தெரிந்துக் கொண்டவர்கள் காதலை சொல்லக்கூடத் தைரியம் இல்லையா? என்று கேலி பண்ண… நண்பர்களின் கேலியில் கதிர்வேலுக்குப் புதிதாக வீரம் விலைவாசி போல ஏற… ‘காதல் சொல்வது என்ன கல்யாணமே செய்து காட்டுகிறேன்’ என்று நண்பர்களிடம் சவால் விட்டுக் கொண்டான்.

பெண்கள் விஷயத்தில் சர்வ சாதாரணமாகச் சவால் விடுவதுதான் சில ஆண்களுக்குக் கை வந்த கலையாயிற்றே!!

முக்கியமான விஷயத்தில் வராத வீரம் எல்லாம் பெண் விஷயத்தில் பொங்கிக் கொண்டு சிலருக்கு எழுமே?? அதே போல் கதிருக்கும் வந்த வீரம் நங்கையின் பின் சுற்ற வைத்தது.

அவள் திருச்சி செல்வதை அறிந்து கொண்டு பின்னாலேயே சுற்றி காதலையும் சொல்லி விட்டான்.

அவள் மறுப்பை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை.

அவளை எப்படியும் கல்யாணம் செய்து அவன் சவாலில் ஜெயிக்க வேண்டும் அது மட்டுமே அவனின் குறிக்கோளாக இருந்தது.

அவன் குறிக்கோள் நிறைவேற நங்கையின் மனம் நொந்தால் அவனுக்கென்ன? அவனுக்கா வலிக்கப் போகின்றது?

நங்கை துடித்தாலும் அவனுக்குத் தெரியவா போகின்றது?

இதில் அரசு வேறு உதவ முன் வரவும் கதிருக்குக் கண்மண் தெரியாத கொண்டாட்டம் தான்.

அரசு தனக்கு உதவிக்கு வருவான் என மிதப்பில் தான் அன்று கோவிலுக்கே வந்து அவளை விடாமல் பார்த்து விட்டுச் சென்றான்.

இப்போதும் நங்கை தனக்கே கிடைக்கப் போகும் தைரியத்தில் எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தான்.

நங்கை கதிர்வேலை அமைதியாகப் பார்த்தாள். இனி இவனிடம் தன் காதல் பற்றியெல்லாம் எடுத்து சொல்ல தேவை இல்லை என்று நினைத்தவள், அவன் கேட்ட கேள்விக்குப் பதிலாக “நீ கேனை எல்லாம் இல்லை கதிர்வேலா! ரொம்பப் புத்திசாலி தான்! உண்மைதான்!

உன்னை விரட்டத்தான் உன் அந்த அண்ணா பேரை சொன்னேன்! இப்ப நீயே கண்டுபிடிச்சுட்ட! உன் கெட்டிக்காரதனத்தை மெச்சுறேன். ஆனா பாரு! நீ என்ன தான் நான் பொய் சொன்னேன்னு கண்டு பிடிச்சுட்டாலும் நீ நினைக்கிற பொண்ணு பார்க்குற நிகழ்ச்சி மட்டும் நடக்கப் போறது இல்லை” என்றாள் அழுத்தமாக.

“ஏன்…? ஏன் நடக்கப் போறது இல்ல?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டான்.

“ஹ்ம்ம்…! அதுவா? பொண்ணு இல்லைனா எப்படிக் கல்யாணம் நடக்கும் கதிர்வேலா?” என்று நிதானமாகக் கேட்டாள்.

“என்ன சொல்ற நங்கை? நீ இங்க தானே இருப்ப? நாளைக்கு எங்கேயும் போகப் போறியா என்ன?” என்று அவள் சொல்ல வருவது புரியாமல் கேட்டான்.

“ஆமா… போகத்தான் போறேன்!”

“எங்கே…?”

“ஹ்ம்ம்…! நீ என் வீட்டுக்குள் பொண்ணு கேட்டு காலடி எடுத்து வைக்கிற நேரம் நான் பரலோகம் போய்ருப்பேன்” என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்து நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் நங்கை.

“நங்கை?” என்று அதிர்ந்து அழைத்த கதிர் வாயடைத்து போய் நின்றான்.

“என்ன…? என்ன நீ இப்படிப் பேசுற?” என்று பயந்து போனவனாகத் திணறிப் போய்க் கேட்டான்.

“உண்மையைச் சொல்றேன்!”

“ஏய்…! விளையாடாதே!”

“டேய்…! உனக்கு என்னைப் பார்த்தா நக்கலா இருக்கா? இன்னொருத்தன லவ் பண்றேன்னு சொன்னாலும் உண்மை இல்லைனு சொல்ற? சாகப் போறேன்னு சொன்னாலும் விளையாடுறேன்னு சொல்ற? நான் சாகுறது உனக்கு விளையாட்டு காரியமா இருக்கா?” என்று கடுமையுடன் கேட்டாள்.

அவள் கடுமையில் நிஜமா தான் சொல்றா போல என்று நினைத்த கதிர்வேலுக்கு உடல் வேர்த்துக் கொட்டியது.

‘இவ என்ன கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு கூப்பிட்டா? கருமாதி பண்ணி வைக்க வான்னு கூப்பிடுறா?’ என்று மனதிற்குள் அலறியவன்,

“ஏன் நங்கை? எனக்கு என்ன குறை? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சாகுறதுக்குச் சமமா என்ன?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

‘என் மனசை பத்தி கொஞ்சம் கூடக் கவலைப் படாத நீ. உனக்குன்னு ஒன்னுனா மட்டும் உனக்கு வருத்தம் பொங்குதாக்கும்? சரியான சுயநலவாதி!’ என்று மனதிற்குள் கடுப்பானவள் முகத்தில் இன்னும் கடுமையைக் காட்டினாள். இவனிடம் போய் இப்படித் தான் கோழை போலப் பேசுவதா? என்று அவளுக்கு உள்ளுக்குள் தோன்றத்தான் செய்தது. ஆனால் இந்தச் சுயநல கோழைக்கு இதுவே போதும் என்று நினைத்து தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

“நீ சொன்னதுல ஒரு சின்னத் திருத்தம்! கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்லை! என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சாலே நான் சாகுறதுக்குச் சமம் தான்” என்றாள்

கதிர்வேலின் முகம் இன்னும் வெளுத்தது. நங்கையைப் பேருந்தில் செல்லும் போது அமைதியான ஆளாகத்தான் பார்த்திருக்கின்றான். இரண்டு முறை மாட்டேன் என்று சொல்பவள் பின்பு சரி என்று சொல்லிவிடுவாள் என்று தான் நினைத்தான்.

ஆனால் அவனுக்கு எப்படித் தெரியும்? தனக்கு உரிமையானவர்களிடம் மட்டுமே அவள் இல்லாத சேட்டை எல்லாம் செய்வாள் என்று?

அதிலும் அவள் சாவு வரை செல்வாள் என்று எண்ணவே இல்லை. கல்லூரியில் படிக்கும் போது காதல் சொல்லவே தைரியம் இல்லாமல் ஒதுங்கி சென்றவன் ஏனோ விராப்பில், அசட்டுத் தைரியத்தில் மட்டுமே நங்கையைத் தொல்லை செய்தவனுக்கு அவள் சாவு அது, இது எனச் சொல்லவும் பயந்து தான் போனான்.

அதோடு இவள் தன்னை மிரட்ட தான் கேட்டுக் கொண்டிருப்பதா என்று அந்தக் கோழைக்குத் துடிப்பு வர, இவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு என்ன வேண்டுதலா என்ன? எனக்கு இவளை விட அழகான வசதியான பெண் கிடைக்கத்தானே செய்யும் என்று எண்ணிக் கொண்டான்.

இருந்தாலும் நண்பர்களுடன் செய்த சவாலில் தான் தோற்பதா என்றும் தோன்ற… ஏதோ சொல்ல வாயை திறந்தான்.

ஆனால் அதற்கு முன் தன் வாயை திறந்த நங்கை “அப்புறம் இன்னொரு விஷயம்!” என்றாள்.

‘இன்னும் என்ன?’ என்பது போல அவன் பார்த்தான்.

“இப்ப நான் சொன்னதையும் மீறி ஒருவேளை என்னைப் பொண்ணு பார்க்க வந்தா….” என்று சொல்லி இழுத்து நிறுத்தினாள்.

இன்னும் என்ன குண்டு போட போறாளோ என்பது போலக் கதிர் அவளைத் திகைத்து பார்க்க…

“என்னைக் கட்டாயக் கல்யாணத்துக்குக் கதிர்வேலும் அவங்க அப்பா அம்மாவும் நிற்பந்திக்கிறாங்க. என்னைத் தற்கொலை பண்ணற அவளுக்குத் தூண்டினது அவங்க தான்னு மரண வாக்கு மூலம் எழுதி வச்சுட்டுத்தான் சாவேன். அப்புறம் என்ன நடக்கும்னு நீயே யோசிக்கோ” என்று அசால்ட்டாகச் சொன்னவளை பார்த்துக் கதிருக்கு குளிர் ஜொரமே வந்தது போல நடுங்கியது.

‘அடிப்பாவி…! இவ சாகப் போறேன்னு சொல்லிட்டு என்னைச் சாகடிக்க இல்ல வழி தேடுறா? இவ சொன்னதெல்லாம் நடந்தா என் அப்பன் என்னை முதலில் கொன்னுட்டுத்தானே அவர் ஜெயிலுக்குள்ளயே போவாரு!’ என்று மனதிற்குள் அலறினான்.

‘ஏதோ சவால்ல ஜெயிப்போம்னு இவகிட்ட பேச வந்தா? எனக்குச் சாவு மணி அடிக்கப் பார்க்குறா பாதகத்தி! இவ சங்காத்தமே எனக்கு வேண்டாம்டா சாமி!’ என்று நினைத்தபடி அவளை விட்டு விலகி ஓடும் எண்ணம் வர அது தந்த தைரியத்துடன் பேச ஆரம்பித்தான்.

“என்ன நங்கை ஓவரா பேசுற? இந்த உலகத்தில் நீ ஒருத்தி தான் பொண்ணா? உன்னை விட அழகான, பணக்கார வீட்டுப் பொண்ணையே என் அப்பா எனக்குக் கட்டி வைப்பார். என்னமோ நீ பெரிய இவ மாதிரியும், உன்னைக் கட்டிக்கத் தவம் இருக்குற மாதிரியும் இல்ல பேசுற? நீ சாகணும்னா சாகு! அதுக்கேன் எங்கள மாட்டி விடப் பார்க்குற? பெரிய உலக அழகினு நினைப்பு! சரியான வாயாடியா இருக்க!

உன்னைக் கட்டிகிட்டா என் நிம்மதி தான் போகும் போல? சரிதான் போடி… உன் சங்காத்தாமே எனக்கு வேண்டாம். பொண்ணா இவ? சரியான பஜாரி!” என்று வாய்க்கு வந்ததை நிறுத்தாமல் பேசி படப்படத்தவன் “நான் போறேன் தாயே! இனி உன் பக்கமே திரும்ப மாட்டேன்” என்று நங்கையைப் பார்த்து சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு எதுவும் பேசும் முன் அங்கிருந்து விட்டால் போதும் என்று நடையைக் கட்டினான்.

‘இப்படிப் பேசி தான் வீரன். அவள் தான் பஜாரி என்று காட்டிக் கொண்டானாம். போடா டேய்! கோழைப்பய! வந்துட்டான் காதல் கழிசடைன்னு, இவன் வந்து பொண்ணு கேட்டதும் அப்படியே இவன் முன்னாடி அலங்கரிச்சு நிக்கப் போறது போலச் சவிடாலை பாரு! நாளைக்கு மட்டும் நீ உன் குடும்பத்தைக் கூட்டிட்டு வந்திருக்கணும்.

இப்ப கொடுத்ததை விடப் பல மடங்கு கொடுத்துருப்பேன். எதுக்கு வம்புன்னு விலகி விலகி போனா பொண்ணு கேட்க வாறானாம் பொண்ணு. இனி நீ என் பக்கம் வருவ?’ என்று நினைத்தப்படி சென்றுகொண்டிருந்தவனையே பார்த்த நங்கையின் முகத்தில் இகழ்ச்சி புன்னகை ஒன்று தவழ்ந்தது.

அதை விட இன்னொருவனின் மீது கொலை வெறியே வந்தது.

‘வரேன்டா… வரேன் குடமிளகா! மாப்பிள்ளையா பார்த்து அனுப்புற? உன்னை…!’ என்று பல்லை கடித்தாள் பவளநங்கை.