கண்கள் தேடுது தஞ்சம் – 20

அத்தியாயம் – 20

சுக நினைவுகளையும், வலி சுகித்த நினைவுகளையும் இரவு முழுவதும் சுமந்து அதன் மீதம் இன்னும் மனதிற்குள் சுழன்று கொண்டிருக்க, மறுநாள் யாருக்கு எப்படி நாளாக இருக்கும் என்று தெரியாமலேயே அந்த நாள் விடிந்தது.

நேற்று பேருந்தில் அரசுவை மாமா என்று அழைத்து விட்டாலும், எப்போதும் போல இன்றும் அவனின் எதிரே போய் நிற்க முடியாது என்றே நங்கைக்குத் தோன்றியது.

இத்தனை நாளும் கோபம் என்னும் திரைக்குள் ஒளிந்து கொண்டு அவனைச் சந்தித்தாள். ஆனால் இன்று அந்தக் கோபத்தைக் கூடக் காட்ட முடியாமல் அவனைச் சந்திப்பது என்பது முடியாத காரியமாகவே தோன்றியது.

அதனால் இன்று வயலுக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்து வீட்டிலேயே சுற்றிக் கொண்டு இருந்தாள்.

மாலை அளவில் நங்கை இன்று வயலுக்குச் செல்ல வர காணோமே என்று நினைத்து வீட்டிற்குத் தேடி வந்தாள் வாணி.

“என்னடி நங்கை வயலுக்குப் போகலையா?” என்று வாணி கேட்க… அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்ற நங்கை நேற்று நடந்ததைச் சொன்னாள்.

அவள் சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ந்த வாணி “என்னடி சொல்ற? நேத்து ஒரு நாள்ல இத்தனை நடந்துருச்சா? ஆமா எப்படிடி மாமான்னு கூப்பிட? நிஜமாவே நீ தான் கூப்பிடியா? உன் நங்கை சபதம் என்னாச்சு?” என்று வாணி அவளைக் கேலி செய்து ஓட்டி எடுத்தாள்.

“ஹே… என்ன ஓவரா ஓட்டுற? அடி பிச்சிருவேன். போடி அந்தப் பக்கம்” என்று கோபமாக ஆரம்பித்து மெல்லிய சிரிப்புடன் நங்கை வாணியை அடக்கினாள்.

“நேத்து நான் வராம இருந்தது நல்லதா தான் போச்சு! இல்லைனா நீங்க இரண்டு பேரும் பேச இன்னும் எத்தனை வருசம் ஆகிருக்குமோ?” என்று வாணி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள்.

“சரி…சரி…! வா…! இன்னே
இன்னைக்கு உன்னைப் பார்த்ததும் உன் மாமன் ரியாக்ஷன் என்னனு நான் பார்க்கணும்” என்று வாணி நங்கையை வயலுக்கு அழைக்க… அவள் ‘வர முடியாது’ என்று மறுத்தாள்.

“ஏண்டி…?”

“இல்லை வாணி எனக்குக் கண்டிப்பா நேரா பார்க்குற தைரியம் இல்லை. என்னை விடு! நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்று நங்கை சோர்வாகச் சொன்னாள்.

அவள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து வாணி அமைதியானாள்.

அன்று மாலை தமிழரசனின் கண்கள் நங்கையைத் தேட தான் செய்தது.

அவள் வரவில்லை என்று உறுதியானதும் அதற்கு மேல் அதைப் பெரிய விஷயமாக அவன் கருதவில்லை.

அன்று வயல் வேலை, உரப் பண்ணை, தந்தை வயல் என்று சுற்றி விட்டு அரசு களைப்புடன் வீடு வந்து சேர்ந்தான்.

அவன் தூரத்தில் வரும் போதே அவனிடம் ஏதோ பேச துடிப்பது போல நின்று கொண்டிருந்த அம்சவேணி அவன் வீட்டுக்குள் கால் எடுத்து வைத்ததும் வேகமாக அவனின் அருகில் வந்து “எய்யா…?” என்று சொல்லி அவனின் கையைப் பிடித்துத் தன் கைகளால் இறுக பிடித்துக் கொண்டவர் பேச வேறு வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிய படி நின்றவரை புரியாமல் பார்த்த அரசு “என்னமா? எதுக்கு இப்படி உணர்ச்சி வசப்பட்டு நிக்கிறீங்க? என்னாச்சு…?” என்று கேட்டான்.

“அதுய்யா… நம்ம கனி போன் செய்தா” என்றவரின் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பிக்க, “ஸ்ஸ்… ம்மா…! இப்ப என்னாச்சுனு இப்படிக் கலங்குறீங்க? கனி என்ன சொன்னா? அவளுக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டவன் அப்பா எங்கே என்பது போலப் பார்வையைச் சுழல விட்டான்.

அவர் அங்கிருந்த சேரில் மனைவியின் மனநிலையை அறிந்தவர் போல அம்சவேணியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னப்பா அமைதியா இருக்கீங்க? நீங்களாவது சொல்லுங்க. என்னாச்சு…?” என்று அவரைப் பார்த்து கேட்டான்.

“உங்க அம்மா வாயாலேயே சொல்லட்டும்ய்யா. அப்பத்தான் அவ நிம்மதியா இருப்பா. நீ பதறாம பொறுமையா கேளு. அவ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருக்கா. நிதானமாயிட்டு சொல்லுவா” என்றார்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னை நிதானபடுத்திக் கொண்ட வேணி “நம்ம கனி போன் பண்ணினாய்யா. நல்ல சேதி சொன்னா” என்றார்.

“என்னம்மா? என்ன நல்ல சேதி?” என்று அரசு முதலில் புரியாமல் முழித்தவன், பின்பு விஷயம் விளங்க “அம்மா நிஜமாவா? எப்போ…?” என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தான்.

“ம்ம்… ஆமாய்யா! உண்டாகியிருக்காளாம்” என்று கண் கலங்கியவர் “முழுசா ஐஞ்சு வருஷம். என் பொண்ணு என்ன பாடு பட்டா. இப்ப தான் அவளுக்கு விடிவு வந்துருக்கு” என்று குரல் கமற சொன்னார் அம்சவேணி.

“ஆமாம்மா… குழந்தை இல்லைனு எப்படியெல்லாம் அழுதிருக்கா அக்கா. இப்பவாவது அவள் கேட்ட வரம் கிடைச்சுதே!” என்று அரசுவும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினான்.

“ஆமா… இப்ப சந்தோசப் படு! அவ மதியத்தில் இருந்து உனக்குப் போன் போட்டு பார்த்துருக்கா. நீ எடுக்கவே இல்லைனு என்கிட்ட புலம்பினா. முத அவளுக்குப் போன் போட்டு இரண்டு வார்த்தை பேசு. அப்பதான் நிம்மதியா தூங்கப் போவா” என்று அம்சா சொல்ல…

தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்ட அரசு “இன்னைக்கு வேலை அதிகமா இருந்துச்சுன்னு போனை சைலெண்ட்ல போட்டிருந்தேன்மா. அப்புறமும் மறந்துட்டேன். இதோ இப்பவே போன் போடுறேன்” என்றவன் கனிமொழிக்கு அழைத்தான்.

இவன் இந்நேரம் போன் செய்வான் என எதிர்பார்த்து இருந்தது போல உடனே போனை எடுத்த கனிமொழி “தமிழு…!” என்று மட்டும் அழைத்தவள் வேறு பேச முடியாமல் மௌனமானாள்.

அரசுவிற்குத் தன் தமைக்கையின் உணர்வு புரிந்தது. அக்கா, தம்பி என்ற உறவை விட அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு நட்புணர்வு இருக்கும். அந்த உணர்வு தந்த உரிமையில் தோழர்களாகச் சண்டை போட்ட நாட்கள் அதிகம்.

திருமணம் முடிந்து அவள் சென்ற பிறகும் கூட அவர்களின் நட்புணர்வு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கத் தாமதம் ஆக ஆகத் தன் தமைக்கையின் கண்ணீரை ஒரு தோழனாய் இருந்து தேற்றியிருக்கிறான்.

இப்போது அவளுக்குக் கிடைத்த இந்தக் குழந்தை வரம் அவளை எவ்வளவு உணர்ச்சி வசப்பட வைத்திருக்கும் எனப் புரிந்தது.

அவளின் அந்த அழைப்பில் தன் குரலை அடைத்த கமறலை தொண்டையைச் செருமி சரி செய்தவன் “அக்கா! ரொம்பச் சந்தோசம்” என்றான் மனமும் குரலும் நெகிழ…

“ம்ம்… எனக்கும்டா. அந்தச் சந்தோஷத்தோட உங்க எல்லோரையும் இப்பவே பார்க்கணும் போல இருக்கு. ஆனா நான் வர முடியாது. நீங்க எல்லாம் வாரீங்களா?” என்றாள்.

“சரிக்கா…. அம்மாவையும், அப்பாவையும் நாளைக்கு வர சொல்றேன். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் இரண்டு நாள் கழிச்சு வந்து உன்னைப் பார்க்குறேன். சரியா?” என்றான்.

முக்கியமான வேலையாக இல்லை என்றால் அவனும் உடனே வருபவன் தான் எனப் புரிந்ததால் “இப்ப தான் உனக்கு முக்கியமான வேலை வரணுமா?” என அலுத்தது போலச் சொல்லியவள் “சரி அம்மா, அப்பாவையாவது அனுப்பி வை!” என்றாள்.

“சரிக்கா…!” என்றவன் மேலும் அவள் உடல்நிலையைப் பற்றி விசாரித்து விட்டு தன் மாமாவின் சுகத்தையும் அறிந்து விட்டுப் போனை வைத்தான்.

போனை வைத்துவிட்டு தன் தந்தையின் புறம் திரும்பியவன் “நீங்களும், அம்மாவும் நாளைக்குக் கிளம்புங்கப்பா. நான் இங்க பார்த்துக்கிறேன்” என்றான்.

“நாளைக்கு நமக்குக் கூட்டம் இருக்கேய்யா? திருச்சிக்கு போகணுமே?” என்று யோசனையுடன் சொன்னார்.

“நான் மட்டும் போறேன்ப்பா. நீங்க மொத போய்க் கனியை பாருங்க. ரொம்ப ஆசையா கூப்பிடுறா” என்றான்.

“சரிய்யா…. நாங்க போய்ட்டு வாறோம். நீ போய்க் கூட்டத்தில கலந்துக்க. அப்படியே நாம முன்னாடி பேசி வைச்ச சில விஷயம் எல்லாம் சொல்லிட்டு வா. மத்தவங்களுக்கும் உபயோகப்படும்” என்றார்.

“சரிப்பா!” என்றவன் தன் அம்மாவின் புறம் திரும்பி “நான் காலைல வெள்ளனயே திருச்சி கிளம்புவேன்மா. நீங்க இப்பயே ஊருக்குக் கொண்டு போகத் தேவையானதை எடுத்து வைங்க. நானும் உங்களையோட வந்து மதுரைக்குப் போகப் பஸ் ஏத்தி விடுறேன்” என்றான்.

“இதோ இப்பயே எடுத்து வைக்கிறேன்” என்று அம்சவேணி சந்தோஷமாகப் போகத் தன் அன்னையின் வேகத்தைக் கண்டு மகிழ்ச்சியாய் சிரித்தான்.

“பாரு உங்கம்மா பாட்டியாகப் போற சந்தோஷத்துல வெளியே போய்ட்டு வந்த மகன கவனிக்கணுமேனு கூட மறந்துட்டா” என்று கேலி செய்தார் தேவநாயகம்.

“ஹா…ஹா… விடுங்கப்பா. இன்னைக்கு ஒரு நாள் நேரங்கழிச்சுச் சாப்பிட்டா பரவாயில்லை” என்ற அரசு சந்தோசமாகச் சிரித்தான்.

மறுநாள் காலையில் காரில் மூவரும் கிளம்பி திருச்சி சென்றார்கள்.

கார் இருந்தாலும் அரசு உடன் செல்லாத நாட்களில் அவர்களின் பயணம் பேருந்தில் தான் என்பதால் அவர்களை மதுரை பேருந்தில் அனுப்பி வைத்தான்.

அடுத்ததாகத் தன் காலை உணவை ஒரு உணவகத்தில் முடித்து விட்டு விவசாயக் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

கூட்டம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால் அங்கே ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

அங்கே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் இன்று கூட்டத்தில் தான் பேசவேண்டியதை கோர்வையாக ஒரு முறை மனதில் ஓட்டிப் பார்த்தான்.

கூட்டம் ஆரம்பிக்கச் சிறிது நேரமே இருக்க, ஒவ்வொருவராக ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் நங்கையின் தந்தையும் வந்து இவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர் கண்டுக்கொள்ளாமல் அவனுக்கு எதிர் திசையில் சென்று அமர்ந்து கொண்டார்.

அரசு யாரையும் கவனிக்காமல் தன் கையில் இருந்த கையடக்க நோட்பேட்டில் ஏதோ குறித்துக் கொண்டிருந்தான்.

அப்படி எழுதிக் கொண்டிருந்தவன் தோளில் ஒரு கை விழ ‘யார்?’ என்று நிமிர்ந்து பார்த்தான்.

மாறன் நின்று கொண்டிருந்தான்.

“என்னடா தமிழரசா… சீக்கிரமே வந்துட்ட போல?” என்று கேட்டுக் கொண்டே அவனின் அருகில் அமர்ந்தான்.

“ஆமாடா” என்றவன் தான் சீக்கிரம் வந்ததற்கான காரணத்தைச் சொல்ல “ஏய் சூப்பர்டா! தாய்மாமன் ஆகிட்ட. வாழ்த்துக்கள்டா!” என்று சத்தமாக ஆர்ப்பரித்தான் மாறன்.

அவனின் சத்தத்தில் ஓரிருவர் இவர்கள் பக்கம் திரும்பி பார்க்க, நங்கையின் தந்தையும் திரும்பி பார்த்தார். அப்படிப் பார்த்தவரின் பார்வை என்ன பாவனையைக் காட்டியது என்பது அவர் மட்டுமே அறிந்ததாக இருந்தது. உடனே தன் பார்வையையும் திருப்பிக்கொண்டார்.

“ஸ்ஸ்… மெதுவாடா! எதுக்கு இப்படிக் கத்துற?” என்று அரசு, மாறனை அடக்க, தன்னைச் சுற்றி ஒரு முறை பார்த்த மாறன் “ஹி…ஹி… ஸாரிடா! சந்தோஷத்துல கத்திட்டேன். அக்கா உனக்குப் போன் பண்ணும் போது என் வாழ்த்துக்களைச் சொல்லிருடா” என்றான்.

“சரிடா… சொல்றேன்” என்றான் அரசு‌

“என்னடா அரசு… உன் மாமன் என்ன அப்பப்ப உன்னைப் பாசமா பார்த்து வைக்கிறார்” என்றான் நங்கையின் தந்தையைக் கண்ட மாறன்.

‘எங்க?’ என்பது போலப் பார்த்தவனிடம் அவர் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டினான்.

அவரைப் பார்த்த அரசு அவர் தன் பார்வையை வேகமாகத் திரும்புவதைப் பார்த்து தன் தோளை குலுக்கி கொண்டவன், பார்வை அவருக்கு நேராக முன்னால் அமர்ந்திருந்த ஒருவரை பார்த்து அரசுவின் முகம் லேசான யோசனையில் சுருங்கியது.

அவன் பார்வையைப் பார்த்த மாறன் “என்னடா யாரை அப்படிப் பார்க்குற?” என்று கேட்டான்.

“அந்த முன்னால உட்கார்ந்து இருக்காரே? அவரை” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கக் கூட்டம் ஆரம்பித்து ஒருவர் எழுந்து பேச ஆரம்பித்தார்.

“டேய் மாறா! அவரைக் கொஞ்சம் உன் கண் பார்வையிலேயே வச்சுக்கோ. கூட்டம் முடிஞ்சதும் அவர்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. நான் இங்கே பேசணும். கூட்டம் முடிஞ்சதும் அவர் போயிராம பார்த்துக்க!” என்று அவசர அவசரமாகச் சொன்னான்.

‘அவன் ஏன் அப்படிச் சொல்கிறான்?’ என்று புரியாவிட்டாலும் ‘சரி’ என்பதாக மாறன் தலையாட்டும் போதே அரசுவை பேச அழைத்தார்கள். அவன் எழுந்து சென்றான்.

“எல்லாருக்கும் வணக்கம்!” என்று தன் பேச்சை ஆரம்பித்தான்.

“இன்னைக்கு நெற்பயிரு நல்ல மகசூல் தர உதவும் ஒரு முறையைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இது இங்குள்ள பெரியவங்க சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். இந்த முறையை எனக்குத் தெரிந்த ஒரு வேளாண் அதிகாரியிடம் உறுதி படுத்திக் கொண்டும் நானே ஒரு முறை நடை முறை படுத்திவிட்டும் தான் சொல்கிறேன். நீங்களும் பயன்படுத்திப் பாருங்க” என்று தன் பேச்சை ஆரம்பித்தவன் தொடர்ந்து…

“இப்ப நான் சொல்ல போறது அசோலா என்னும் முறை பற்றி. தமிழில இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என நாம சொல்லுவோம் இல்லையா…? அது தான் நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றான்.

“ஏன் தம்பி அதை நாம மாடு மற்றும் கோழிக்கு தீவனமால போடுவோம். அதையா சொல்றீங்க?” என்று ஒருவர் கேட்டார்.

“ஆமாங்கய்யா… அது தான்!” என்றான்.

“அதை எப்படிய்யா பயிருக்குப் பயன்படுத்துறது? சொல்லுங்க கேட்போம்” என்றார் அவர்.

“நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், மகசூல் கூடக் கிடைக்கும். அது நெல் விளைச்சலில் இயற்கை உரமாகச் செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது” என்று தன் பேச்சை ஆரம்பித்துப் பயன் படுத்தும் முறையையும், அதனால் ஏற்படும் பலன்களையும், அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி தன் பேச்சை முடித்தான்.

“அவன் முடித்ததும் நீ சொல்றது நல்ல விஷயமா தான் இருக்கு தம்பி. நாங்க பயன்படுத்திப் பார்க்குறோம்” என்றார் ஒருவர்.

“ரொம்பச் சந்தோசம் ஐயா. கட்டாயம் முயற்சி செய்து பாருங்க. நல்ல பலன் கிடைக்கும்” என்றான்.

“தேவநாயகம் மகன்னா சும்மாவா?” என்று அவனை இன்னும் ஒருவர் பாராட்ட அவரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.

கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பிக்க, மாறனிடம் குறிப்பிட்டு சொன்னவரும் கிளம்ப அவரை நிறுத்த வேகமாக அவரின் அருகில் செல்ல போனான்.

அதற்கு முன் வேறு ஒருவர் அரசுவை வழி மறைத்து பேச வர இந்த மாறன் எங்க என்பது போல அவரிடம் பேசிக் கொண்டே அவனைத் தேடினான்.

அங்கே வாசல் அருகில் மாறன் அந்த மனிதரை நிறுத்தி ஏதோ பேசிக் கொண்டிருந்தது தெரிய, நிம்மதி மூச்சு விட்டவன் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு முடிந்தவரை அவரை விரைவாக அனுப்பி வைத்தவன் மாறன் இருந்த இடத்திற்குப் போனான்.

அரசு அருகில் வரவும் தான் பேசிக் கொண்டிருந்தவரிடம் “இவன் என் பிரண்டு உங்ககிட்ட ஏதோ பேசணும்னு சொன்னான். பேசுங்க…” என்றான்.

“என்ன தம்பி மொத நீ என்கிட்ட என்னமோ பேசணும்னு சொன்ன? இப்ப உன் பிரண்டு பேசபோறான்னு சொல்ற. அப்படி என்கிட்டே என்ன பேசணும்?” என்றார்.

“அதுவா…?” என்ற பைந்தமிழரசன் மாறனை பார்த்தான். அவன் அவரிடம் தனியாகப் பேச விரும்புவதை அறிந்து மாறன் நகர்ந்து போக, அரசு அவரிடம் பேச ஆரம்பித்தான்.

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பின்பு அவர் என்னமோ சொல்லி விட்டு அங்கிருந்த கிளம்ப, அரசுவிடம் வந்த மாறன் “யாருடா அவர்? நம்பப் பக்கத்து ஊர்காரர் போல அவரு. ஆனா எனக்கு அவரைச் சரியா தெரியலை” என்றான்.

“அவரா…? அவர் கொஞ்சம் எனக்குத் தெரிஞ்சவர் தான்?” என்றான் அரசு.

“ஓ… அப்படியா!” என்ற மாறன் அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று தன் முகத்தில் கேள்வியைக் காட்டினான்.

அதைப் புரிந்த அரசு “இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கே தெரிஞ்சுரும்டா. நானே உன்கிட்ட எல்லாம் சொல்றேன்” என்று மாறனிடம் சொன்னவனிடம் இருந்து ரகசிய முறுவல் ஒன்று வந்து போனது.