கண்கள் தேடுது தஞ்சம் – 19

அத்தியாயம் – 19

“யாகாவராயினும் நாகாக்க” என்று வள்ளுவர் சும்மா சொல்லி வைக்க வில்லை என்று நிரூபணம் ஆனது மருதன் மூலமாக…

மனிதனின் முதல் எதிரியே நாவு தான் என்பதற்குப் பல சான்றுகளில் ஒரு சான்றாக மாறிப் போனது நாயகத்தின் பேச்சினால்.

நண்பன் தானே என்று கோபத்தில் முட்டாள் என்று வார்த்தையை நாயகம் விட…. தன்னிரக்கமும், தாழ்வு மனப்பான்மையுடனும் இருந்த மருதனை அந்த வார்த்தை காயப்படுத்த அந்தக் கோபத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை கோபத்தில் உபயோகிக்க… அங்கே நட்பு பிளவு பட்டு நின்றது.

இவர்களின் இந்தச் சண்டை வீட்டுப் பெண்களுக்குத் தெரிய வர, அவர்கள் என்ன சொல்லி இவர்களைச் சமாதானம் செய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.

வேணி நாயகத்திடம் பேச “என்னை யாரோன்னு சொல்லிட்டான் அம்சா! அவன்கிட்ட போய் என்னை வழிய பேச சொல்றீயா? என்னால முடியாது” என்று நாயகமும்.

ஈஸ்வரி தன் வீட்டில் முயற்சி எடுக்க “ஒரு பொடி பைய என்னை அடிக்க வந்துட்டான்! நீ அவங்க கூட உறவு வச்சுக்கச் சொல்றீயா? போடி அந்தப் பக்கம்!” என்று மருதனும்,

அந்த நேர கோபத்தில் கொதித்துப் போய் வீட்டுப் பெண்களை அவர்கள் அடக்க, அவர்களால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.

அரசுவும் “அம்மா அவர் நம்ம அப்பாவை அசிங்கமா பேசிட்டார். அப்புறம் எப்படி இனி அவர் முகத்தில் விழிக்க? முடியாது போங்க!” என்று இளவட்ட துடிப்பில் அவன் ஒரு பக்கம் திமிறினான்.

கனிமொழிக்கு தந்தை தானே முக்கியம் அவரை ஒருவர் அவமானப் படுத்தியதை எப்படித் தாங்க முடியும்? அதனால் அவளும் அமைதியாகி போனாள்.

ஆளாளுக்கு ஒரு காரணத்தால் விலகி செல்ல வழி தேட, ஒரு பிஞ்சு மனதை யாரும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. இவர்களின் சண்டையில் அதிகம் பாதிக்கப் பட்டது பதிமூன்று வயதான பவளநங்கை தான்.

ஏற்கனவே அரசுவின் மீதும் அந்த வீட்டினர் அனைவரின் மீதும் உயிராக இருப்பவளை இனி நீ அவர்களுடன் பேசக் கூடாது. இனி அவர்களை உறவாக எண்ணக்கூடாது என்றால் அவளால் எப்படிச் சரி என்று சொல்ல முடியும்?

மருதன் அவளிடம் சொன்னதையும் மீறி “இல்ல நான் மாமாகிட்ட பேசுவேன். நான் அங்க போவேன்” என்று சிறுபிள்ளையின் பிடிவாதத்துடன் சொல்ல…

தன் பேச்சை கேட்காத கோபத்தில் என்றைக்கும் அவளை அடிக்காத மருதன் அடி அடி என்று அடித்து விட்டார்.

தன் தந்தையா தன்னை அடித்தார் என்று அரண்டு போன குழந்தை பவளம் “இல்லப்பா நான் மாமா சொல்லலைப்பா. நான் இனி அங்க போக மாட்டேன்பா” என்று சொல்லி சொல்லியே அழுது கரைந்தாள்.

ஈஸ்வரி தான் நடுவில் புகுந்து மகளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டார்.

அடுத்த இரண்டு நாட்களும் நங்கை அழுது கொண்டு வீட்டினுள் அடைந்துக் கிடைக்க, அழுததில் காய்ச்சலும் வந்து சேர்ந்தது.

அதோடு உறக்கத்தில் கூட மாமா, அத்தை, மதினி என்று ஏதேதோ அனத்தினாள்.

மூன்றாம் நாள் மெல்ல தெளிந்து எழுந்தவள் ஈஸ்வரியிடம் போய் நின்றாள்.

“அம்மா நிஜமாவே இனி மாமா கூட நான் பேசவும், பார்க்கவும் கூடாதாம்மா?” என்று சோர்வாகக் கேட்டாள்.

இரண்டு நாளும் கண் விழிக்காத மகள் இன்று எழுந்து வந்து இப்படிக் கேட்கவும் அவளை இழுத்து அணைத்துக் கொண்ட ஈஸ்வரி “பவளம் இங்க பாரு அம்மா சொல்றதை பொறுமையா கேட்கணும்!” என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டவர் “மாமாகிட்ட பேசக் கூடாதுனு தானே அப்பா சொன்னார் பார்க்க கூடாதுன்னு சொல்லலைலே?” என்று கேட்டார்.

“ஹ்ம்ம்…!” என்று யோசித்தவள் “ஆனா அவங்க வீட்டுக்குப் போகக் கூடாதுன்னு சொன்னாரேம்மா?” என்று பரிதாபமாகக் கேட்டாள்.

“ஆமா…! ஆனா வீட்டுல போய்த் தான் பார்க்கணும்னு இல்லையே? வெளியே வாசலில எல்லாம் பார்க்கலாம்ல?” என்று சொன்னார்.

உடனே சந்தோசம் நிறைந்த முகத்துடன் “ஹை… சூப்பர் ஐடியாமா! அப்ப நான் அப்படியே பார்த்துக்கிறேன்” என்று குதூகலித்தாள்.

மூன்று நாட்களாக வாடிப் போய் இருந்த மகளின் முகத்தில் சிறு சந்தோஷத்தை பார்க்கவும் நிம்மதி அடைந்தார் ஈஸ்வரி.

இரண்டு நாளும் ஏக்கத்தில் மகளுக்கு என்னவும் ஆகி விடுமோ என்று பதறி துடித்தவர் ஆகிற்றே.

இப்போது மகளின் தெளிவு ஈஸ்வரியை நிம்மதியாக உணர வைத்தது.

அடுத்து வந்து நாட்களில் ஊர் முழுவதும் தொழிற்சாலை பற்றிய செய்தியால் ஊரே பரபரப்பாகச் சுற்றியது.

அந்தப் பரபரப்பை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டுக் கோவிலில் ஊர் கூட்டம் கூடியது.

அதில் தான் இப்போது நாயகனும், மருதனும் முறைத்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் ஆளுக்காளுக்கு ஒன்று பேச, கோவில் சலசலப்பாக இருந்தது.

அந்தச் சத்தத்தை அடக்கத் தன் சத்தத்தைக் கூட்டிய ஒரு பெரியவர் “போதும் நிறுத்துங்கப்பா! நம்ம ஊர்ல ஊர் பிரச்சனையைக் கவனிக்கனு தனியா யாரும் நாட்டாமைனு இல்லைனு உங்களுக்கே தெரியும். எப்பயும் நம்ம ஊர் பிரச்சனையை நாம எப்படிப் பேசி முடிவெடுப்போமோ அப்படியே இந்தப் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டுவோம். அதன் படி நம்ம ஊர் மக்கள் கட்டுப்படணும். நீங்க என்னய்யா சொல்றீங்க?” என்று பொதுவாகக் கேட்டார்.

எல்லாருக்கும் வேறு வழி இல்லாததால் எல்லாரும் சரி என்று சொல்ல அதன் படியே முடிவெடுக்கப்பட்டது.

ஊரில் அனைவரும் பதினெட்டு வயதிற்கு மேலுள்ளவர்களில் இருந்து, வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரிடமிருந்தும் ஒட்டு போல எடுக்கப்படும் என்றும் அதில் அதிக எண்ணிக்கை எந்த முடிவுக்கு வருகிறதோ அதற்குக் கட்டுப் பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

தொழிற்சாலை வேண்டாம், வேண்டும் என்று அவர்களுக்கு விருப்பமாதை எழுதி கோவிலில் வைத்திருக்கும் பெட்டியில் போட வேண்டும். அனைவரும் போட்டதும் அந்தச் சீட்டு எண்ணப்பட்டு அந்த முடிவின் படி நடந்து கொள்ள வேண்டும்.

மறுநாள் காலையிலேயே ஓட்டு முறை நடந்தது. எல்லா ஊர் மக்கள் முன்நிலையில் தான் சீட்டை போட வேண்டும் என்பதால் யாரும் அங்கே ஏமாத்த முடியாது.

அனைவரும் ஓட்டு சீட்டு போட்டு முடிக்கவும் பெரியவர்கள் சிலர் சேர்ந்து கணக்கு எடுத்தார்கள்.

வேண்டும் எவ்வளவு? வேண்டாம் எவ்வளவு? என்று எண்ணி முடிக்கவும், ஒருவர் பேச ஆரம்பித்தார்.

“நம்ம ஊருல பேக்டரி கட்ட போறாங்கன்னு சொல்லவும் எனக்கு வருத்தமா இருந்துச்சு. இப்பனாலும் தண்ணி இல்லாம தான் காஞ்சு கிடக்கு. ஆனா பேக்டரி மட்டும் நம்ம ஊருக்குள் வந்திருந்தா நம்ம ஆயுள் புல்லா நம்ம ஊரு பசுமையையே கண்ணால பார்க்க முடியாதோன்னு நினைச்சு எனக்குத் தூக்கமே வரல. என்னைப் போலத் தான் பலரும் நினைச்சுருக்கீங்கன்னு இன்னைக்குத் தெரிஞ்சுகிட்டேன். இப்ப ஓட்டு எண்ணினதுல நம்ம ஊருக்கு பேக்டரி வேண்டாம்னு நிறையப் பேர் சொல்லிருக்கிங்க. ரொம்பச் சந்தோஷமா இருக்குய்யா” என்று மீசையை முறுக்கி பெருமையுடன் சொன்னார்.

அதுவரை மனதுக்குள் என்ன முடிவு வருமோ என்று பதறிக் கொண்டிருந்த தேவநாயகம் லேசாகக் கண் கலங்க துண்டால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டவர். மருதத்தைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தார். அதில் மருதனின் முகம் கருத்தது.

“இப்ப பேக்டரி வேண்டாம்னு வந்திருக்கிறது தான் முடிவு. இனி யாரும் பேக்டரி கட்டவோ… பிளாட் போடவோ நிலத்தை விக்கக் கூடாது. அப்படி யாரும் மீறி வித்தா அவங்களை ஊருக்கு எதிரானவங்கன்னு சொல்லி ஊர் சம்பந்தமான எதுலயும் கலந்துக்க விட மாட்டோம். ஊரை விட்டு ஒதுக்கி வச்சது போலத் தான். இதான் இந்த ஊரின் முடிவு. அடுத்துச் சுந்தரம்…” என்று சொல்ல கூட்டத்தில் இருந்த சுந்தரம் முன்னால் வந்து நின்றான்.

“உனக்கு இது தான் கடைசி எச்சரிக்கை சுந்தரம். இனி கமிஷனுக்கு ஆசைப் பட்டு பேக்டரி கட்ட வந்தான்னு சொல்லி ஏதாவது பண்ணினா உன்னை இனி இந்த ஊருக்குள் இருக்க விட மாட்டோம்” என்று மிரட்ட… சுந்தரம் ‘இதோட விட்டாங்களே’ என்ற எண்ணத்தில் ‘சரி’ என்று வேகமாகத் தலையாட்டினான்.

ஊர் தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டு அனைவரும் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள் .

ஆனால் மருதன், நாயகத்தை முறைத்துக் கொண்டே நின்றார். முக்கால் வாசி மக்கள் அங்கிருந்து சென்றிருக்க… இன்னும் சிலர் மட்டுமே இருந்தார்கள்.

தமிழரசன் மீண்டும் கல்லூரிக்கு சென்று விட்டதால் அவன் கூட்டத்திற்கு வந்திருக்க வில்லை.

மருதனின் முறைப்பை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து “என்ன மருதா! என்ன முறைக்கிற? பாரு தீர்ப்பை பாரு! எப்படி வந்திருக்குன்னு. நிலத்தை மக்கள் அவ்வளவு ஈஸியா விட்டுக்கொடுக்க மாட்டாங்கன்னு எப்படி நிரூப்பிச்சுருக்காங்கனு பாரு. ஆனா நீ இருக்கியே கையாலாகாத பைய!” என்று இளக்காரமாகச் சாடினார் நாயகம்.

அவர் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் கோபத்தில் கொதித்த மருதன் “ஏய்…! என்னடா! யாரை பார்த்து கையாலாகாதவனு சொல்ற?” என்று நாயகத்தின் சட்டையைப் பிடிக்க வந்தார்.

அவரின் கையை அசால்ட்டாக விலக்கிய நாயகம் “ஆமாம்! இருக்குறது இத்துனுண்டு நிலம். ஆனா அதைக் கூட உன்னால பொறுப்பா பார்த்து விவசாயம் பண்ண வக்கில்லை. நிலத்தை வித்து அடுத்தவன் கிட்ட கைகட்டி வேலை பார்க்க துடிச்சவன் தானே நீ! அப்ப உன்னைக் கையாலாகாதவன்னு தானே சொல்ல முடியும்” என்று நிதானமாகச் சொல்ல…

ஊர்க்காரர்கள் ஒன்றிரண்டு பேர் அவர்கள் சண்டையைச் சுவாரசியமாக வேடிக்கை பார்த்தார்கள்.

அவர்கள் முன்னிலையில் அவமானமாக உணர்ந்த மருதன் “ஏய் நாயகம்! ரொம்பப் பேசுற! நானா? நானா கையாலாகாதவன்? உன் பணத்திமிரை காட்டுறீயா? என்னாலும் விவசாயம் செய்ய முடியும்டா. என்னைக் கையாலாகாதவனு சொன்ன உன் முன்னாலேயே இன்னும் நிலம் வாங்கிப் போட்டு விவசாயம் செய்து காட்டுறேனா இல்லையான்னு பாரு” என்று சவால் விட்டார்.

“நீ வெறும் வாயால் வேட்டு போடுற வெத்து வேட்டு பைய. நாளைக்கே எதுவும் பிரச்சனைனா திரும்ப நிலத்தை விக்கத் தான் ஓடுவேன்னு எனக்குத் தெரியாதா என்ன?” என்று நாயகம் இன்னும் சீண்டினார்‌.

“காட்டுறேண்டா காட்டுறேன். நான் வெத்து வேட்டா இல்லை வெடிக்கிற வேட்டான்னு உனக்குக் காட்டாம நான் ஓயப் போறது இல்லை” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றார்.

அவர் போவதையே பார்த்த நாயகம் வெற்றி சிரிப்பு ஒன்றை உதடுகளில் தவழவிட்டார்.

ஊர் மக்களின் முடிவில் பூமி தாய் மகிழ்ந்து போனாளோ? அடுத்து வந்த மாதத்தில் வானம் அடித்து ஊற்றியது.

அடுத்தச் சில வருடங்களுக்கு வற்றாத நீர் கிடைத்து ஊரே செழித்து வளர்ந்தது.

நாயகத்தின் சீண்டலில் விவசாயத்தில் அயராது உழைத்து தான் கையாலாகாதவன் இல்லை என்று காட்டினார் மருதன்.

உழைப்பின் பலன் வீண் போவதில்லை என்பது போல மருதன் தொட்டது துலங்க, வீட்டை கட்டி முடித்து அங்கே குடியேறினார்.

அவரின் பழைய வீட்டை பூட்டி அவ்வப்போது சுத்தம் மட்டும் செய்து கொண்டார்கள்.

அடுத்து வந்த வருமானத்தில் இரண்டு நிலமும் வாங்கிப் போட்டார்.

இப்போது முழுதாகப் பத்து வருடங்கள் கடந்து விட்டன. இன்னும் நண்பர்கள் இருவரும் பார்க்க நேரும் போது அவ்வப்போது முறைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

நங்கை அருகில் வீடு இருந்த போது நாயகம் குடும்பத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டவள் இரண்டு தெரு தள்ளியிருக்கும் புது வீட்டுக்கு சென்ற பிறகு அடிக்கடி பார்க்க முடியாமல் போனது. அதுவும் அரசு கல்லூரியில் படிக்க விடுதியில் இருந்ததால் அவனைப் பார்க்க முடியாமலே போனது.

விடுமுறையில் வருபவனும் அதிகம் அவர்கள் நிலத்தில் நேரத்தை செலவழிக்க அவனைக் காணவே தங்கள் நிலத்திற்கு அவ்வப்போது செல்ல ஆரம்பித்தாள்.

அவன் படிப்பை முடித்து வந்த பிறகு அவ்வப்போது என்பது தினமும் என்று மாறிப் போனது.

அப்படி ஒரு நாள் பார்க்க நேரும் போது சிறுவயத்திற்கே உரிய துறுதுறுப்புடன் அவனிடம் நங்கை பேச செல்ல… அப்போது மருதனின் மீது இருந்த கோபத்தில் அவள் பேச வருவதைக் கண்டு கொள்ளாமல் விலகி சென்றான்.

அதில் நங்கையின் மனம் துவழ்ந்தது. அதனால் அதன் பிறகு அவனிடம் திரும்பப் பேச முயற்சிக்கவே இல்லை.

வருடங்கள் சில செல்லவும் அரசுவின் கோபம் குறைந்ததோ என்னவோ, நங்கையை ஒரு நாள் சந்தித்தபோது ஏதோ அவன் பேச வர, நான் பேச வரும் போது ஒதுங்கி சென்றவன் தானே நீ? என்ற கோபம் அவள் மனதை ஆக்ரமித்ததால் இப்போது அவள் முறுக்கிக் கொண்டாள்.

ஆனால் சிறிய வயதில் இருந்த பாசம் மட்டும் மனதில் இன்னும் குறையவேயில்லை. கனிமொழி திருமணம் ஆன பிறகு அவளையும் பார்க்க முடியாமல் போனது. ஆனால் அவள் பிறந்த வீடு வரும் போது அவ்வப்போது கோவில் செல்லும் போது பார்த்துவிட்டு வருவாள். அந்தப் பழக்கத்தையும் இன்னும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் நங்கை.

அவள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போன அவர்களின் மீதான பாசம் அவளே நினைத்தாலும், அவளை விலக விடாமல் இறுக்கி பிடித்து அந்த அன்புக்குள் கட்டிப் போட்டு வைத்திருந்தது.

அவள் உறவாக நினைத்த உறவுகள் நிஜத்தில் விலகி இருந்தாலும் மனதில் இன்னும் அவர்களைத் தன் உறவுகளாகத் தான் நினைக்கிறாள். ஆனாலும் அவர்கள் மீது அவளுக்கு அளவுக்கு அதிகமாகக் கோபமும் இருக்கத்தான் செய்தது.

நங்கை வெளியே முறுக்கி கொண்டாலும், அவள் உள்ளுக்குள் புதைந்திருந்த அன்பு மட்டும் சிறிதும் மாறவே இல்லை. ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது போலப் பிறந்ததில் இருந்து கொண்ட பாசம், சில தடைகள் வரும் போது வெறுப்பு என்னும் வளையத்திற்குள் புதைந்துக் கொள்ளுமே தவிர, முற்றிலும் மறைந்து போகாது என்பதே உண்மை. உண்மையான அன்பு கொண்ட நெஞ்சத்திற்குள் அந்த வெறுப்பு, ஒரு நாள் விருப்புக்கு மாறியே தீரும்.

வெறுப்பு என்னும் வளையத்திற்குள் இருந்த நங்கை சிறுவயதில் இவள் வழிய சென்று பார்க்க செல்லும் போதெல்லாம் கனியும் அரசுவும் மருதனின் மீது இருந்த கோபத்தில் அவளிடம் இருந்தும் விலகி செல்ல… அந்தக் கோபத்தில் அவர்களிடம் ஏதாவது சேட்டை செய்ய ஆரம்பித்தாள்.

அதில் கனிமொழி பல நேரங்களில் அவளிடம் மாட்டிக் கொள்வாள். அரசு சில நேரங்களில் தப்பித்து விடுவான். ஒரு பக்கம் நங்கையின் குறும்புத்தனம் கூட மறுபக்கம் அரசு படிப்பை முடித்துவிட்டு வந்தவன் விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கினான். அதுவும் ரசாயண உரம் மட்டுமே பயன்படுத்தி வந்த தந்தையின் நிலத்தில் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் படிக்கும் போது செய்திருந்தவன், படிப்பு முடிந்து வந்ததும், அவன் வயதில் இருந்த இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து இயற்கை உரத்தை ஊரில் உள்ள அனைத்து விவசாயிகளையும் செய்ய வைத்தான். இவர்களின் முயற்சியைப் பார்த்து மற்ற ஊர்களிலும் மெல்ல மெல்ல மாற்றம் வர ஆரம்பித்தது. அரசுவிற்கு இதனால் ஊரில் நல்ல பெயர் கிடைக்க, ஊர்காரர் மத்தியிலே மதிப்பு மிக்க இளைஞனாக வளர்ந்து நின்றான். அவன் முயற்சி எப்போதும் ஊருக்கு நல்லதே தருவதால் அவனின் முடிவுக்கு ஊர் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

அரசு வளர்ச்சி தொழிலில் இருக்க, நங்கையின் வளர்ச்சி வேறுவிதமாக இருந்தது. அது…?

சிறுவயதில் தன் தந்தையிடம் அரசுவை மாமா என்று சொல்ல மாட்டேன் என்று சொன்னதுடன் சேர்ந்து அவனின் விலகலின் காரணமாக என்னிடம் இருந்து விலகி செய்கிறாய் தானே நானே இனி உன்னை மாமா என்று அழைக்க மாட்டேன் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அந்த உறுதியை இன்று வரை தொடரவும் செய்தாள்.

அதுவும் பல நேரம் அவன் தன்னை முறைத்த படி இருந்ததால் ஒருவேளை தன் மீது அவனுக்குப் பாசம் சிறிதும் இல்லையோ என்றும் நினைத்திருக்கின்றாள்.

ஆனால் இன்று பேருந்தில் தன் கண்ணீரை பொறுக்க முடியாமல் உதவ வந்த அவனின் செயல் அவளை ஆனந்தத்தில் மிதக்க வைத்தது. அதோடு அவனின் ‘நங்கா’ என்ற அழைப்பு அவனின் பாசம் மறையவில்லை என்று எடுத்துக் காட்டுவதாகவே அவளுக்குத் தோன்றியது.

அதோடு குழந்தை நங்கைக்கு அவனின் பாசம் மட்டும் போதும் தான். ஆனால் இந்தக் குமரி நங்கைக்கு வெறும் பாசம் போதுமா என்ன? என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் பைந்தமிழரசனை நேசிக்கத் தொடங்கிவிட்ட பவளநங்கை.

ஆம்…! ஏன் வந்தது? எப்போது வந்தது? என்று தெரியாமல் நங்கையவள் மனதில் காதல் புகுந்திருந்தது.