கண்கள் தேடுது தஞ்சம் – 17

அத்தியாயம் – 17

தன் வீட்டிலிருந்து அரசுவின் வீட்டிற்குத் துள்ளிக் கொண்டு ஓடி வந்தாள் பத்து வயதான பவளநங்கை.

திறந்து இருந்த வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் யார், யார் இருக்கிறார்கள் என்று பார்வையைச் சுழற்றிப் பார்த்தது அந்தச் சுட்டியின் கண்கள்.

முற்றம் வெறிச்சோடி இருக்கச் சமயலறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது. ‘ஓ…! அத்தை அங்க இருக்காங்களா?’ என்று நினைத்தவள் பூனை நடை நடந்து மெல்ல சமயலறை வாயிலில் நின்று எட்டிப் பார்த்தாள்.

அங்கே அம்சவேணி கீழே அமர்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருந்தது கண்ணில் பட மெதுவாக உள்ளே சென்று அமர்ந்திருந்தவரின் கழுத்தை பின்னால் இருந்து அணைத்து கட்டிக் கெண்டாள்.

திடீரெனத் தன்னை அணைக்கவும் யாரோ என லேசாகத் திடுக்கிட்ட வேணி தன் முன்னால் நீண்டிருந்த குட்டிக் கைகளைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்து “பவளக் குட்டி என்ன இன்னைக்கு காலம்பரையே இங்க வந்துட்டா…! என்ன விசேஷம்?” என்று அவளின் கைகளைப் பிடித்துத் தன் கழுத்தில் முகம் புதைத்திருந்தவளை கொஞ்சிக் கொண்டே கேட்டார்.

“அதுவா அத்தை. அது வந்து அம்மா திட்டினாங்களா? நான் இங்க ஓடியே வந்துட்டேன்” என்று கொஞ்சலாகப் பதில் சொன்னாள்.

“அதானே பார்த்தேன். அம்மா திட்டலைனா நீ இந்நேரம் வருவியா? பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வாறேன்னு டாட்டா காட்ட தானே வருவ” என்றவர் அவளின் கையைப் பிடித்துத் தன் முன்னால் நிறுத்தி “நீ என்ன தப்பு செய்த? எதுக்கு அம்மா திட்டினா? என்று கேட்டார்.

அவர் கேட்டதும் தன் முகத்தைச் சுருக்கி லேசாகச் சிணுங்கிய படி “அம்மா பள்ளிக்கூடம் போகச் சொன்னாங்களா…. நான் போக மாட்டேன்னு சொன்னேன் அதுக்குத் திட்டுறாங்க” என்றாள்.

“பள்ளிக்கூடம் போக மாட்டீயா? எதுக்கு?” என்று வேணி கேட்க…

“எதுக்கு…? எல்லாம் கொழுப்பு” என்றபடி அங்கே வந்தான் பதினாறு வயதான பைந்தமிழரசன். சிறுவன் என்ற பருவத்திலிருந்து இளைஞன் என்ற பருவத்திற்கு மாறும் தோற்றத்தில் இருந்தவன் ஒல்லியாக, உயரமாக இருந்தான்.

பத்தாவது படித்துக் கொண்டிருந்ததால் அவனின் நடமாட்டம் அவ்வளவாக வெளியே இருப்பதில்லை. பள்ளி பாடத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அவனைப் பார்க்க தினமும் ஏதாவது வம்பை இழுத்துக் கொண்டு ஓடி வருவாள்.

அப்படித் தான் இன்றும் அது போல வந்திருக்க, ஒன்றும் தெரியாதவள் போல அப்பாவி பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையைப் பார்த்தவன் “ஹோய்… சில்வண்டு! என்ன உன் முழியே சரியில்லையே. இங்க வா!” என்று மிரட்டலாகத் தன் அருகில் அழைத்தான்.

அவனின் மிரட்டலில் நங்கையின் கை தானாக அவள் உச்சந்தலையை மூடியது.

அவளின் செயலை பார்த்து அரசுவிற்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதனை வெளியே காட்டினால் அவள் தன்னை ஏய்த்துவிட்டு ஓடிவிடுவாள் என்று அறிந்ததால் வெளியே முறைத்துக் கொண்டு நின்றான்.

அவனின் முறைப்பில் தலை தானாகத் தழைய வேணியின் அருகிலேயே நின்றாள்.

அவள் இன்னும் வராமல் இருக்கவும் “இங்க வான்னு சொன்னேன். வாறியா, இல்ல நான் வரவா?” எனக் கேட்டு ஒரு எட்டு முன்னால் எடுத்து வைக்க நங்கையின் முகத்தில் பய பாவனைத் தெரிந்தது.

“டேய் தம்பி…! எதுக்கு இப்ப நீ அவளை இப்படி மிரட்டுற? பாரு எப்படிப் பயப்படுறானு. சும்மா அவளை மிரட்டாம போ அங்கிட்டு!” என்று வேணி அவளுக்கு ஆதரவாகப் பேச …

”அம்மா அவளுக்குச் சப்போர்ட் பண்ணாதீங்க. தப்பு எதுவும் செய்யலைன்னா ஏன் பயப்படணும்? நான் பார்த்துக்கிறேன் அவளை இங்க வரச்சொல்லுங்க” என்றான்.

“பயப்படாம போ கண்ணு. உன் மாமா தான கூப்பிடுறான். உன்ன ஒன்னும் செய்ய மாட்டான். நான் இங்கன தானே இருக்கேன். பயப்படாம பேசு” என்று வேணி சொல்லவும் தயங்கி, தயங்கி அடியெடுத்து வைத்து அரசுவின் எதிரில் போய் நின்றாள்.

இப்பொழுதும் நங்கையின் ஒரு கை அவளின் உச்சந்தலையில் இருந்தது. அதைக் கவனித்தவன் “அந்தக் கையைக் கீழே போடு!” என்று அதட்டினான்.

‘மாட்டேன்’ என்பது போலத் தலையசைத்தாள். .

ஏன்? என்பது போல அவன் முறைக்க…

“நான் கையை எடுத்தா நீ என்னைக் கொட்டுவ. எனக்கு வலிக்கும் மாமா” என்று சிணுங்கினாள்.

அவளின் சிணுங்களைக் கண்டுக்கொள்ளாமல் “இப்ப நீ கையை எடுக்கலைனா தான் அடிக்கப் போறேன்” என்று அவன் அதட்ட… வேகமாகத் தலையில் இருந்து கையை எடுத்தாள் நங்கை.

“ஹ்ம்ம்… இப்ப சொல்லு! என்ன செய்த? எதுக்கு ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு இங்க ஓடியாந்துட்ட?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் தலையைக் குனிந்துக் கொண்டவள் “கணக்கு டீச்சர் கணக்கு செய்துட்டு வர சொன்னாங்களா. எனக்குச் செய்ய முடியல. அதான் செய்யாம ஸ்கூல் போனா டீச்சர் அடிப்பாங்க. அதான் போக மாட்டேன்னு சொன்னேன்” என்றாள் தயக்கத்துடன்.

“என்ன? கணக்குப் பாடம் செய்யலைன்னு போகலையா? இது எல்லாம் ஒரு சாக்கா? ஏன் செய்ய வேண்டியது தானே? நேத்து எல்லாம் செய்யாம என்ன செய்த?” என்று கேட்டான்.

“ம்ச்ச்…! போ மாமா. செய்து பார்த்தேன். எனக்கு வரவே இல்லை” என்றாள்.

“வரலைனா என்கிட்டே கேட்க வேண்டியது தானே? நான் சொல்லி தந்துருப்பேனே”

“ஹ்ம்ம்…! நீ டென்த் படிக்கிறியாம் உன்னை நான் தொந்தரவு பண்ணக் கூடாதாம் அம்மா சொல்லிருச்சு” என்று மூக்கை சுருக்கிக் கொண்டு சொன்னாள்.

அவளின் அந்த அழகு முகத்தைப் பார்த்து சிரித்த அரசு “இன்னும் அரைமணி நேரம் இருக்குல? போ… போய் நோட்டு, புக் எடுத்துட்டு ஓடிவா! நான் சொல்லித் தர்றேன்” என்றான்.

அவனிடம் கற்றுக்கொள்ளப் பிடிக்கும் என்பதால் வேகமாகச் சரி எனத் தலையாட்டியவள் துள்ளிக் கொண்டு ஓடினாள்.

புத்தகத்தை எடுத்து வந்தவளுக்குச் சொல்லிக்கொடுக்கச் சமர்த்தாய்க் கற்றுக்கொண்டு விட்டு பள்ளிக்குச் சென்றாள்.

அவள் தன்னிடம் காட்டும் அதீத பாசம் புரிந்திருந்தாலும், தான் ஒரு பெரியவன் என்ற நிலையில் இருந்து இறங்கி போய் அவளுக்குச் சமமாக இருக்க முடியாததால், இதுபோலச் சந்தர்ப்பங்களில் அவளிடம் நன்றாகப் பேசி அவளை அனுப்பி வைப்பான்.

அதீத பாசம் கொண்டு சேட்டை செய்துவிட்டாவது அவனிடம் பேச நினைக்கும் நங்கை பின்னாளில் பிரச்சனை வந்து பிரிய நேரும் போது என்ன ஆவாளோ?


மருதநாயகம் வீடு கட்ட ஆரம்பத்ததிலிருந்து சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு….

“என்னய்யா…? காரியத்தை சரியா செய்திருவியா? இல்ல நான் வேற ஆளை பார்த்துக்கட்டுமா?” என்று தன் எதிரே நின்றிருந்த ஆளை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார் பார்வையிலேயே பணச் செழுமையைக் காட்டும் அந்த மனிதர்.

அவ்வளவு பெரிய பணக்காரர் தன்னிடம் பேசியதில் பெருமை அடைந்தது போல வளைந்து குலைந்து நின்றிருந்த சுந்தரம் அவர் பேச்சை கேட்டு “அய்யோ… அய்யா…! நா நல்ல படியா நீங்க சொன்ன வேலையை முடிச்சு தர்றேன். நீங்க வேற ஆளை போட்டுறாதீங்க” என்று பதறி போய்ச் சொன்னான்.

கை நிறையப் பணம் கிடைக்கப் போகும் காரியம். அதை மட்டும் வெற்றிகரமாக முடித்துவிட்டால் தன்னிடம் நன்றாகப் பணம் புரளும் என்ற ஆசையில் இருந்த சுந்தரத்திற்கு அவர் வேறு ஆளை பார்ப்பதாகச் சொன்னதும் பதறித்தான் போனது.

“சரி…சரி…! போ…! போய் வேலையைச் சீக்கரம் ஆரம்பி. அப்புறம் தான் நான் என் வேலையைச் சீக்கிரம் தொடங்க முடியும்” என்று விரட்டினார் அந்தப் பெரிய மனிதர்.

அவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு வந்த சுந்தரம் அடுத்து என்ன செய்யலாம்? எப்படித் தன் காரியத்தை முடிக்கலாம் என்று யோசித்த படி அந்த ஊரின் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது அவர் கண்ட காட்சி அவருக்கு ‘ஆஹா…!’ என்று எண்ண வைத்தது.

‘சும்மா சொல்லக் கூடாது. கடவுள் நம்ம பக்கம் நல்லா திரும்பி பார்க்கிறார்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

அவர் கண்டது மருதவாணனின் கவலை நிறைந்த முகத்தைத் தான்.

ஐந்து வருடங்கள் ஆகியும் தன்னால் ஒரு வீட்டைக் கூடக் கட்ட முடியவில்லையே என்ற கவலையுடன் அந்தப் பாதிக் கட்டியிருந்த வீட்டுச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த மருதனை கண்டு தான் சுந்தரத்திற்குக் கொண்டாட்டமாகப் போனது.

‘சின்ன மீனை போட்டாதான் பெரிய மீனை தன்னால் பிடிக்க முடியும். இவரை வைத்தே தன் காரியத்தை ஆரம்பிப்போம்’ என்று நினைத்த சுந்தரம் மருதன் அருகில் வந்து அமர்ந்தான்.

“என்னப்பா மருதா! இங்கே வந்து இப்படி உட்கார்ந்துட்ட?” என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

ஏதோ யோசித்த படி அமர்ந்திருந்த மருதன், சுந்தரம் கேட்ட கேள்வியில் அவரைத் திரும்பி பார்த்தார்.

“ஒன்னும் இல்லப்பா… சும்மா அப்படியே வந்து உட்கார்ந்துட்டேன். ஆமா… நீ எங்கே இந்தப் பக்கம்?” என்று மருதன் கேள்வி எழுப்ப…

“அது ஒன்னும் இல்லை மருதா. ஒரு வேலையா இந்தப் பக்கம் நடந்து போய்ட்டு இருந்தேன். நீ இங்க இப்படி வருத்தமா இருக்குறதை பார்த்து என்னனு கேட்டு போகலாம்னு வந்தேன்” என்று நைச்சியமாக பேசினார் சுந்தரம்.

“எனக்கென்ன வருத்தம்? அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று மருதன் சமாளிக்க…

“என்ன மருதா! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாப்பா? நாம ஒரே ஊருக்காரவுக. நீ படுற கஷ்டத்தை நான் பார்த்துட்டு தானே இருக்கேன். இந்த வீட்டை முழுசா கட்டிப்புடலாம்ன்னு நீயும் ஐஞ்சு வருஷமா பார்க்குற. ஆனா உனக்கு ஏதாவது தடங்கல் வந்துட்டே இருக்கு. உன் நிலைமையை நினைச்சா பாவமா இருக்குப்பா. இப்படி விவசாயியா இருக்குற உங்க பாடு கஷ்டம் தான் போ. எப்படி எல்லாம் நீங்க போராட வேண்டி இருக்கு. மழை பேஞ்சு ஒரேடியா ஊத்தினாலும் பிரச்சனை. மழையே பேயாம காஞ்சு போனாலும் பிரச்சனை. இதுக்குத் தான் நான் எனக்கு நிலம் இருந்தாலும் அதைக் கட்டிகிட்டு அழாம எடம் வாங்கி விக்கிற வேலையில இறங்கினேன். ஒரு எடத்தை வித்துக் கொடுத்தா கூடக் கை நிறையக் காசு கிடைக்குது” என்று மனம் முழுவதும் சூது கொண்டு பேசின சுந்தரத்தின் பேச்சை அமைதியாகக் கேட்டப்படி அமர்ந்திருந்தார் மருதன்.

ஏற்கனவே மனம் முழுவதும் ஆரம்பத்தில் இருந்தே விவசாயத்தின் மீது சிறு விருப்பமின்மையுடன் சுற்றிக் கொண்டிருந்த மருதனுக்குச் சுந்தரத்தில் தொழில் கூடப் பெரியதாகத் தோன்றியது.

நியாயமாகத் தன் தொழிலை ஒருவர் குறைத்தும், அவர்கள் தொழிலை உயர்வாகவும் பேசும் போது அப்படித் தன் தொழில் மட்டும் என்ன மட்டம் என்று கோபம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே மருதனுக்கு இருந்த விரக்தி மனப்பான்மையில் சுந்தரம் சொல்வது கூடச் சரி தான் என்று தோன்றியது.

ஒரே ஊர் என்பதால் மருதனின் மனநிலை என்ன என்பதை ஓரளவு ஊகித்த சுந்தரத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுதே எல்லாத்தையும் சொல்ல வேண்டாம் கொஞ்ச கொஞ்சமாகப் பேசி காரியத்தைச் சாதிப்போம் என்று நினைத்த சுந்தரம் பின்பு பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அதன் பிறகு அடிக்கடி மருதன் கண்ணில் பட்டு தற்செயல் போலப் பேச ஆரம்பித்த சுந்தரம் ஒரு நாள் விஷயத்திற்கு வந்தான்.

“அப்புறம் மருதா! அடுத்து என்ன செய்றதா இருக்க? ஒரு பக்கம் மழை இல்லாம விவசாயமும் சரியா நடக்கலை. இன்னொரு பக்கம் உன்னோட வீட்டையும் கட்ட முடியாம சோர்ந்து போய்ச் சுத்திட்டு இருக்க…. பேசாம நாம ஒன்னு செய்வோமா? அது உனக்கு ஒத்து வருதானு பாரு. உனக்குப் பிடிச்சா மட்டும் செய்வோம்” என்று அவருக்கு நல்லது செய்யப் போவது போலப் பேச்சை ஆரம்பித்தான்.

“அப்படி என்னய்யா சொல்ல போற? பீடிகை எல்லாம் பலமா இருக்கு… என்னனு சொல்லு கேட்போம்” என்று மருதன் கேட்க…

சுந்தரம் சந்தோசமாக விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

நம்ம ஊருக்கு புதுசா ஒரு பேக்டரி வர போகுதுய்யா. திருச்சில பெரிய பணக்காரர் ஒருத்தர். இரண்டு மூனு பேக்டரி வச்சு நடத்திட்டு இருக்கார். இப்ப நாலாவதா நம்ம ஊரில் ஒன்னு ஆரம்பிக்க ஆசைப்படுறார். நம்ம ஊர் மக்கள் மழை இல்லாம காய்ஞ்சு போன நிலத்தை வச்சுக்கிட்டு கஷ்டப்படுறதை பார்த்துட்டு ரொம்ப வருத்தப்பட்டார்.

அதனால இங்க ஒரு பேக்டரி கட்டி நம்ம ஊர் மக்களுக்கும், பக்கத்துல சுத்தி உள்ள ஊர் மக்களுக்கும் வேலை போட்டுக் கொடுக்கப் போறதா முடிவு பண்ணிருக்கார். எல்லாருக்கும் வேலைங்கிறது சும்மா இல்லை… நிரந்தர வேலை. வயசாகி நம்மளால முடியற வரை அங்கே வேலை பார்க்கலாம். அதுக்கடுத்து அவங்கவங்க வாரிசையும் அங்க தொடர்ந்து வேலையில் கஷ்டமே இல்லாம சேர்த்து விட்டுரலாம். அதுவும் கை நிறையச் சம்பளம். எந்தப் பிரச்சனையும் இல்லாத வேலை. வேலைக்குப் போனோமா, சம்பாதிச்சோமா, கையில் கிடைக்கிற காசை வச்சு நினைச்சதை செய்தோமா, சந்தோஷமா வாழ்ந்தோமான்னு வாழ்க்கை சாகுற வரை ஒரு பிரச்சனையும் இல்லாம ஓடும்” என்று பெருமையாகச் சொன்னார் சுந்தரம்.

சுந்தரம் சொன்னதை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த மருதனுக்கு ஏனோ அந்த விஷயம் பிடித்துப் போனது.

உள்ளுரில் வேலை, கை நிறையக் காசு. மழை இல்ல. அதனால் கையில் காசு இல்லைன்னு திண்டாட வேண்டிய நிலை இல்லை என்பது அவர் மனதிற்குப் பிடித்தமானதாகத் தோன்றியது.

மருதன் ஆர்வமாகத் தன் பேச்சை கவனித்ததில் இனி காரியம் வெற்றி தான் என்று குதூகலித்த சுந்தரம் மேலும் தொடர்ந்தார்.

“அதை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?” என்று இழுத்து நிறுத்தினார்.

“அதையும் சொல்லுப்பா! இன்னும் என்ன?” என்று மருதன் கேட்க…

“பேக்டரி கட்ட யார் எல்லாம் நிலம் தர்றாங்களோ… அவங்களுக்கு எல்லாம் இரண்டு மடங்கு சம்பளம். அதோட நிலம் எல்லாம் வழக்கமா இந்தப் பக்கம் விக்கிற விலையில் இல்லாம கூடுதலா குடுத்து வாங்கப் போறாங்க” என்றார்.

சுந்தரம் அப்படிச் சொன்னதும் அவரை யோசனையாகப் பார்த்த மருதன் “என்னய்யா சொல்ற? நிலம் கொடுக்கணுமா?” என்று தயக்கமாகக் கேட்டார்.

அவரின் தயக்கத்தைப் பார்த்துச் சுதாரித்த சுந்தரம் “விருப்பம் இருக்குறவங்க விக்கலாம் மருதா. உன் நிலத்தைக் கொடுக்குறதும் கொடுக்காம இருக்குறதும் உன் விருப்பம் தான். ஆனா உன் வயலை சுத்தி இருக்குற இரண்டு வயல்காரவுக சரின்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கப் போறோம். நீயும் சம்மதம் சொன்னா… உனக்கும் டோக்கன் இப்பயே கொடுக்கச் சொல்றேன். என்ன சொல்ற?” என்று மெதுவாக விஷயத்தைப் போட்டுடைத்தார்.

அவர் சொல்லி முடித்ததும் சில நொடிகள் அமைதியாக இருந்த மருதன் “ஹ்ம்ம்‌…! நான் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்றேன் சுந்தரம்” என்றார்.

“நீ யோசிச்சே முடிவு பண்ணுப்பா. ஆனா அவங்க சீக்கிரம் பேக்டரி கட்ட ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு முன்னாடி கொஞ்சம் வேலை நடக்க வேண்டி இருக்கு. அது முடிஞ்சா தான் சீக்கரம் பேக்டரி கட்டி மக்களுக்கு நல்லது பண்ண முடியும்?” என்றார் சுந்தரம்.

“சரிதான்பா! ஆனாலும் நான் கொஞ்சம் யோசிச்சே முடிவு சொல்றேன். நாம அப்புறம் பேசலாம்” என்று மருதன் அங்கிருந்து நகர்ந்தார்.

உண்மையில் வேறு யாரும் சுந்தரம் கேட்டதற்கு சம்மதிக்கவில்லை அவர்களும் யோசிப்போம், பார்ப்போம் என்று தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்தத் தொழிலில் அவர் கற்றுக் கொண்டது இதைதான். சிலருக்கு அவர்கள் செய்கிறார்கள் நாமும் செய்தால் என்ன எண்ணமே அதிகம் இருக்கும். அப்படி மக்கள் நினைக்கும் எண்ணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் சுந்தரம்.

அவர்கள் சரி சொல்லிவிட்டார்கள் நீ தான் இன்னும் சொல்லவில்லை என்பது போலப் பேசினால் காரியம் சரியாக நடக்கும் என்று அறிந்திருந்தவர் மருதனிடமும் அதையே பயன்படுத்திருந்தார்.

சுந்தரத்திடம் பேசிவிட்டு சென்ற மருதன் அதையே யோசித்துக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே மனதில் விரக்தியுடன் இருந்தவருக்குச் சுந்தரத்தின் பேச்சு தடுமாற்றத்தை தர ஆரம்பித்திருந்தது.

மனிதனின் மனம் விரக்தியில் இருக்கும் போது நிலையான ஒரு முடிவெடுக்க முடியாமல் தடமாறுவது இயல்பே!

மருதனும் அதற்கு விதிவிலக்கில்லை என்றானார்.

ஏற்கனவே விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த சிறிது பிடிப்பின்மை, ஒரு வீடு கூடக் கட்டமுடியாத அவரின் வறுமை, தன் சகலைகள் சற்று வசதியான நிலையில் இருக்க, மூத்த மாப்பிள்ளையான தான் மட்டும் அவர்களை விட தாழ்ந்த இடத்தில் இருப்பதால் தோன்றிய தன்னிரக்கம். எல்லாம் சேர்ந்து அவரை ஆட்டிப் படைக்கச் செய்து அவரைத் தவறான முடிவிற்குத் தள்ளியது.

அதையும் விட முக்கியமான காரணம் ஒன்றும் அவரின் முடிவிற்கு வலு சேர்த்தது. அது நண்பர்களுக்குள் பிளவையும் கொண்டு வந்தது.


நாயகம், மருதன் இருவரும் விவசாயச் சங்கத்தில் அறிமுகமான நண்பர் ஒருவரின் இல்ல திருமண விழாவிற்குச் சென்றார்கள்.

நண்பர்கள் இருவரும் சேர்ந்தே கிளம்பி சென்று திருமண வீட்டாரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார்கள்.

இருவரும் முன்னிருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… அப்பொழுது நாயகத்தின் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார் மணமகனின் தந்தையான அவர்களின் நண்பர் ராஜன்.

இருவரையும் வரவேற்று பொதுவாக இரண்டு வார்த்தைகள் பேசியவர் பின்பு மெதுவாக நாயகத்தின் காதில் ஏதோ முணுமுணுத்தார்.

அவர் சொல்லி முடித்த போது நாயகம் அருகில் அமர்ந்திருந்த மருதன் அவமானம் தாங்கிய முகத்துடன் சட்டென எழுந்தார்.

அந்த நண்பர் பேச ஆரம்பித்த உடனேயே அவரை முறைக்க ஆரம்பித்த நாயகம், மருதன் தன் அருகில் இருந்து எழவும் அதிர்ந்து போய்த் திரும்பி பார்த்தார்.

அந்த நபர் சொன்னது மருதன் காதிலும் விழுந்து விட்டது என்று அவர் முகத்தைப் பார்த்தே அறிந்துக் கொண்டவர் தானும் எழுந்து “அப்ப நாங்க கிளம்புறோம். நீங்க உங்க கல்யாண வேலையைப் பாருங்க!” என்று மணமகனின் தந்தையிடம் சொல்ல… அவர் பதறினார். “என்ன நாயகம்! நான் உங்களை ஒன்னும் சொல்லலை! நீங்க உட்காருங்க!” என்று அவர் பதற… “என்னைச் சொன்னா என்ன? என் நண்பனை சொன்னா என்ன? இரண்டும் ஒண்ணுதான்” என்ற நாயகம் “வா மருதா! நாம போகலாம்!” அவர்கள் யாரின் கவனத்தையும் கவராத வகையில் மெதுவாகத்தான் பேசிக் கொண்டதால் யாரும் இங்கே நடந்ததைக் கவனிக்க வில்லை.

சுற்றிலும் ஒரு பார்வை பார்த்த மருதன் “நீ உட்காரு நாயகம்! நான் அங்க உட்கார்ந்துருக்கேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றார் தன் அவமானத்தை மறைத்துக் கொண்டு.

“இல்ல மருதா… உனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நானும் இருக்க மாட்டேன். வா…! நானும் அங்கேயே வர்றேன்” என்றார் நாயகம்.

ராஜனின் முகம் பதட்டத்தைத் தத்தெடுத்தது. அவர் ஏதோ சொல்ல போக… இப்போது இவர்கள் இப்படி வழக்காடுவதைப் பார்த்து கல்யாண வீட்டில் பிரச்சனை வந்துவிடுமோ என்று பதறினார்.

அருகில் இன்னும் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மருதன் “நாயகம் சொல்றேன்ல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்ப நம்மள யாரும் கவனிக்கலை. கவனிச்சா அவமானமா போகும். நீ பேசாம உட்காரு!” என்று அதட்டிய மருதன் பின்பக்க இருக்கையில் போய் அமர்ந்தார்.

நண்பன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாயகம் திரும்ப அமர்ந்தார். ராஜனின் புறம் கூடத் திரும்பவில்லை. அவர் ‘ஹப்பா…! பெரிய பிரச்சனை எதுவும் வரலை’ என்று நிம்மதி அடைந்தவர் ஒன்றுமே நடவாது போல “நீங்க இருந்து சாப்புட்டு தான் போகணும்!” என்று நாயகத்திடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் போவதையே முறைத்து பார்த்த நாயகம் ‘பணத்துக்குப் பிறந்தவன்’ என்று தனக்குள் திட்டிக் கொண்டவர் திரும்பி பார்த்தார் மருதன் பின்பக்கம் அமர்ந்திருப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார். நாயகம் நினைத்தால் அந்த இடத்தை விட்டு எழுந்து போயிருக்க முடியும். ஆனால் நிமிடத்தில் கல்யாணவீட்டில் பிரச்சனையாக அது பரவி விடும். அதில் மருதனின் மானம் தான் சீண்டப் படும் என்பதால் அமைதியாக இருந்தார்.

அங்கே பின்பக்கம் சென்று அமர்ந்த மருதன் வெளிப்பார்வைக்கு அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவமானத்தால் சுருண்டு போனார். ராஜன் சொன்னதே இன்னும் அவர் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

நாயகம் அருகில் வந்து அமர்ந்த ராஜன் “அந்த மருதனை பின்னாடி போய் உட்கார சொல்லுய்யா நாயகம்! அவனும் என்னமோ ரொம்பப் பெரியமனுஷன் போல முன்னாடி வந்து உட்கார்ந்துட்டான். நான் நிறையப் பெரிய மனுஷன்களைக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டுருக்கேன் அவங்க எல்லாம் இப்ப வந்துருவாங்க. நல்ல செய்முறையும் செய்வாங்க. நான் அவங்களை முன்னாடி உட்கார வச்சு மரியாதை கொடுக்க வேண்டாமா? மருதன் வந்து இப்படி முன்னாடி உட்கார்ந்துட்டா அவனுக்குச் சமமா மத்த பெரிய மனுஷங்க எப்படி உட்காருவாங்க? பத்து ரூபா மொய் எழுத போற பைய… பகுமானமா முன்னாடி வந்து உட்கார்ந்துட்டான்” என்று இளக்காரமாகச் சொன்னார்.

அவர் அப்படிப் பேச பேச அதிர்ந்துப் அவரை முறைத்த நாயகத்தைக் கண்டு கொள்ளாமல் மருதனை ஓரக்கண்ணால் இளகாரமாகப் பார்த்துக் கொண்டே தான் சொன்னார். அதுவும் நாயகம் தானாக மருதனிடம் எழுந்து போகச் சொல்லமாட்டார் என்பதை அறிந்தோ என்னவோ மருதன் காதிலும் விழும்படியாகச் சத்தமாகவே சொன்னார்.

ராஜனின் பேச்சு மருதனை அவமானமாக உணர வைத்தது.

தான் அவமான பட்ட இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் அப்படிச் சென்றால் நாயகமும் கிளம்புவார். அவர் கிளம்பினால் திருமணம் முடியும் முன்பே ஏன் கிளம்புகிறார் என்று கேள்வி எழும். நாயகம் பதில் சொல்ல தடுமாறுவார் என்று நினைத்தே நண்பனுக்காகத் தனக்கு ஒன்னும் இல்லை என்று காட்டிக் கொண்டு பின்னால் போய் அமர்ந்தார்.

ஆனால் அவர் உள்ளம் அவமானத்தால் கொதித்துக் கொண்டிருந்தது.

மணமகன் தாலி கட்டும் வரை அடிக்கடி நாயகம் மருதனை திரும்பி பார்த்தவர். தாலி கட்டும் போது மேடையில் கவனம் வைக்க… அந்த நேரத்தில் மருதன் எழுந்து மண்டபத்தை விட்டு வெளியேறி விட்டார்.

சிறிது நேரத்தில் மருதன் இல்லாததைக் கவனித்த நாயகம் நண்பனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று உணர்ந்தவர், தான் சற்று வசதி வாய்ந்தவனாக இருப்பதற்கு மனதார வருந்தினார்.

அவரும் எழுந்து செல்ல மனம் துடித்தது. தாலி கட்டியவுடன் கொஞ்சம் அங்கே பரபரப்பாக மக்கள் மணமக்களுடன் போட்டோ எடுக்கச் செல்ல அந்த நேரத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவரும் கிளம்பி விட்டார்.

அன்று நாயகம் மருதனை சமாதானப்படித்திருந்தாலும் மருதன் மனதில் அது ஆறாத வடுவாக மாறி விட்டது.

வானம் பார்த்து அது மனது வைத்தால் தான் தனக்கு வருமானம் என்று விரக்தியில் சுற்றியவருக்கு இப்பொழுது வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான வருமானம் கிடைக்கும் என்பது அவருக்கு நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது.

சொந்தமாக வசதியான வீடும், வற்றாத வருமானமும் தனக்கு ஒரு அந்தஸ்தை தரும் என்று எண்ணம் அவருக்கு வலுபெற்றது.

அந்த எண்ணத்தின் பலனாக அவரின் நிலத்தைத் தொழிற்சாலை கட்டுவதற்காக விற்க முடிவெடுத்தார் மருதவாணன்.