கண்கள் தேடுது தஞ்சம் – 16

அத்தியாயம் – 16

ஒரு மாதம் கடந்திருந்தது. வயலில் அறுவடை முடிந்திருக்க ஈஸ்வரியின் தங்கை திருமணமும் முடிந்திருந்தது. அடுத்து அண்ணனிடம் இருந்து நிலமும் மருதனின் பெயருக்கு மாற்றி எழுதப்பட்டது.

வயலில் அந்த வருடம் நல்ல விளைச்சலுடன், நல்ல விலைக்கும் விற்பனை ஆகியதால் கையில் பணம் அந்த முறை அதிகமாகச் சேர்ந்திருந்தது. விளைச்சலில் வந்த பாதிப் பணம் கல்யாணத்திற்கும், நிலம் வாங்கவும் காலி ஆகிருந்தது.

அதோடு வீட்டு கட்ட ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த பணத்தையும் போட்டு வீடு கட்ட அஸ்திவாரம் போட்டார்.

ஒரு வரவேற்பறையும், ஒரு சமயலறையும், இரண்டு படுக்கை அறையும் கட்ட முடிவு செய்து வானக்கால் தோண்டப்பட்டது

ஒரு நாள் வேலை நடந்து கொண்டிருக்கக் காலை உணவு வேலையை முடித்துக் கொண்டு வேலையாட்களுக்குப் பதினோரு மணி அளவில் காபி போட்டு எடுத்து வந்த ஈஸ்வரி அங்கே நடந்து கொண்டிருந்த வேலையைப் பார்த்து திகைத்தார்.

ஏன்னென்றால் அங்கே வீட்டின் பின்புறம் கொஞ்சம் இடம் விட்டு வைக்க நினைத்திருந்த இடத்தில் இப்போது குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

வேலை சொன்ன படி நடக்காமல் மாறி நடந்து கொண்டிருக்க ஈஸ்வரி பதறி போய் அருகில் வந்தார்.

அன்று மருதன் வெளியூர் சென்றிருந்ததால் வேலை செய்பவர்கள் ஏதோ தவறுதலாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களிடம் விசாரிக்க, அவர்கள் காலையில் மருதன் ஊருக்கு கிளம்பும் போது அப்படித் தோண்ட சொல்லிவிட்டுச் சென்றதாகத் தகவல் சொல்ல திகைத்துப் போனார்.

மருதனே சொல்லி சென்ற வேலை என்பதால் நிறுத்த சொல்ல முடியாமல் அவர்களுக்குக் காபியை ஊற்றிக் கொடுத்தவருக்கு மனதில் தன் கணவன் செயலில் எரிச்சல் மூண்டது.

‘இந்த மனுஷன் என்ன நினைச்சுக்கிட்டு இப்படிக் கொஞ்சம் கூட இடத்தை மிச்சம் வைக்காமல் அங்கேயும் ரூம் கட்ட முடிவெடுத்திருக்கார். இருக்குற காசை வச்சு முழுசா வீடு கட்ட முடியாதுன்னு தெரிஞ்சும் இவர் ஏன் வேண்டாத வேலை பார்க்கிறார்?’ என்று மனதிற்குள் திட்டிய படி மாலை மருதன் வரவிற்காகக் காத்திருந்தார்.

மாலை வீட்டிற்கு வந்த மருதனிடம் அன்றைய வேலையைப் பற்றிக் கேள்வி கேட்டார்.

“ஏங்க இப்ப எதுக்கு அகலக்கால் வைக்கிறீங்க? கையில் இருக்குற பணமே பாதிச் சுவர் எடுக்கத் தான் வரும். இதில் இப்ப எதுக்கு இன்னும் அதிகமாக வானக்கால் தோண்ட சொல்லிருக்கீங்க? நமக்கு இரண்டு ரூம் மட்டும் பபோதாத? ஏன் நம்ம நினைச்சதை விட இப்ப இன்னொரு ரூம் எடுக்குறீங்க?” என்று கேட்டார்.

மருதன் அமைதியாக மனைவியைப் பார்த்து, “உன் தங்கச்சி கல்யாணத்துல நடந்ததை மறந்துட்டியா? உன் பெரிய தங்கச்சி புகுந்த வீடும், உன் சின்னத் தங்கச்சி புகுந்த வீடும் ஓரளவு நல்ல வசதியான வீடு. ஆனா நம்ம மட்டும் இன்னும் இந்த ஓட்டு வீட்டுல தான் இருக்கோம். இனி கட்ட போற வீடாவது இன்னும் கொஞ்சம் பெருசா கட்ட நினைக்கிறேன். அதுக்குக் காரணம் உன் சொந்தகாரங்க பேச்சு. பெரிய மாப்பிள்ளையான என் வீடு மட்டும் மட்டம்கிறது போல அன்னைக்கு என் காது படவே பேசுறாங்க. அப்ப எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதான் இன்னும் கொஞ்சம் பெரிசா கட்ட இடம் மிச்சம் வைக்காம தோண்ட சொன்னேன். அதையும் சேர்த்து கட்டிட்டா நம்ம வீடு தான் மத்த சகலைங்க வீட்டை விடப் பெரிசா இருக்கும் பாரு. உனக்கும் அவங்ககிட்ட இன்னும் மரியாதை கிடைக்கும். அதை மட்டும் யோசிச்சுக்கிட்டு பேசாம இரு. அடுத்த அறுவடையை வச்சு வீட்டை ஜாம், ஜாம்னு கட்டிரலாம்” என்றார் மருதவாணன்.

அவர் பேச்சை கேட்டு அசந்து நின்ற ஈஸ்வரி அவர் முடித்ததும் “ஏங்க அடுத்தவங்க பேசுறாங்கன்னு ஒரு விஷயத்தைச் செய்யக் கூடாதுங்க. நம்மனால என்ன முடியுமோ அது தாங்க செய்யணும். சொந்தகாரவுங்க இன்னைக்குப் பேசுவாங்க. அப்புறம் வேற வேலையைப் பார்க்க போய்ருவாங்க.

ஆனா கஷ்டப்படப் போறது நாம தான். வீடு கட்டுறது ஏதோ சர்வ சாதாரணமா நம்மனால முடியும்கிறது போலத் திடீர்ன்னு முடிவெடுக்குறீங்க. எனக்கு என்னமோ நீங்க செய்றது சரியா படலை. அவ்வளவு தான் சொல்லுவேன்” என்றார்.

“அதெல்லாம் சரியா வரும். தேவையில்லாம பொழம்பாம போய் வேலையைப் பாரு” என்று பதிலுக்கு அவர் வாயை அடைத்தார் மருதன்.

ஈஸ்வரி கேட்டதையே நடந்ததைக் கேள்விப்பட்ட தேவநாயகமும் கேட்டார்.

“இல்ல நாயகம்… என்னால முடியும். நான் எப்படியும் வீட்டை கட்டிருவேன். எனக்கு எங்க சொந்தக்காரங்க முன்னாடி தலை நிமிர்ந்து நிக்கணும். இனி இதைப் பத்தி பேச வேண்டாம்ப்பா” என்று சொல்லி அவர் வாயையும் அடைத்தார்.

நண்பனாக இருந்தாலும் அதற்கு மேல் அவர் சொந்த விஷயத்தில் பேச முடியாமல் போக வேறு வழி இல்லாமல் அமைதியானார் நாயகம்.

நண்பனின் பேச்சையும், மனைவியின் பேச்சையும் காதில் வாங்காமல் தன் முடிவே சரியென வீட்டு வேலையை அவர் நினைத்த படி ஆரம்பித்துக் கட்டிடம் சுத்து சுவர் பாதி உயரம் வரும் வரை கட்டிவிட்டார். அதற்கு மேல் கட்ட பணம் பற்றாக்குறையாகப் போக, அத்துடன் கட்டிட வேலையை நிறுத்த வேண்டியதாகிற்று.

அடுத்த அறுவடை வரைக்கும் வீட்டு செலவிற்குத் தேவையான பணம் மட்டும் வைத்திருந்ததால் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாட்கள் ஓடின.

ஆனால் அடுத்த நடவு நட்டு பயிர் வளர ஆரம்பிக்கும் போதே பிரச்சனைகளும் தேடி வந்தன.

அந்த வருடம் பல ஊர்களில் எப்போதும் இல்லாத வகையில் கடும் புயல் காற்று வீசியது. அந்தக் காற்று தாங்க முடியாமல் பயிர்கள் சேதமடைந்தன.

அப்படிச் சேதமடைந்ததில் பாதிக்கப்பட்டது அந்த ஊர் விவசாயிகள் தான். விவசாயிகளுக்கு அது போறாத காலமாக இருந்தது.

அதில் பாதிக்கப்பட்ட மருதன் மனம் உடைந்தார். தன் வீட்டுக் கனவு தள்ளிப்போனதில் வருத்தத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு நாள் நாயகத்தைப் பார்க்க அவரின் வயலுக்குச் செல்ல, அங்கே வரப்பின் ஓரமாக அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த தமிழரசனை பார்த்து “என்னய்யா மருமகனே…! என்ன செய்றீங்க?” என்று கேட்டார்.

குனிந்து மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த தமிழ் நிமிர்ந்து அவரைப் பார்த்து “அப்பா எனக்கு விதை வாங்கிட்டு வந்தாங்க மாமா. இதை நானே விதை விதைச்சு நானே அது வளர்க்கணுமாம். இதுல கத்திரிகாய் விதையும், வெண்டைக்காய் விதையும் இருக்கு. நானே விளைய வைக்கப் போறேன். இந்த இடம் எல்லாம் நான் மட்டும் பார்த்துக்கணுமாம்” என்று சொல்லி அவனுக்கு என்று நாயகம் ஒதுக்கி தந்திருந்த சிறிய இடத்தைச் சுட்டிகாட்டி சந்தோசத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டு முகத்தைச் சுளித்தார் மருதன். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த நாயகத்திடம் “ஏன்ப்பா நாயகம்… இது என்ன என் மருமகனுக்கு எதுக்கு நீ இந்த வேலையைக் கொடுத்திருக்க?” என்று என்று அதே சுளிப்புடன் கேட்டார்.

“என்ன மருதா… இப்படிக் கேட்டுட்ட? விவசாயியோட மகன் அவன். அவனுக்கு இதெல்லாம் எப்ப தெரியுறது? பிள்ளைகளுக்குச் சின்ன வயசில் இருந்தே இது போல நம்ம விவசாயத்தோட அருமையைத் தெரிய வச்சு வளர்க்கணும்பா. அப்பத்தான் இந்த மண்ணோட மகிமையும் விவசாயம் எவ்வளவு முக்கியமான விஷயம்னு நல்லா மனசில் பதியும். நம்ம தமிழ்க்கும் தெரியட்டும்னு தான் அவனை இந்த வேலையைச் செய்யச் சொல்லிருக்கேன்” என்றார் மகன் தான் செய்யச் சொன்னதை உடனே செய்வதைப் பார்த்து வந்த பூரிப்புடன்.

“என்னப்பா நீ… நாமதான் இந்த வயலோட மல்லுகட்டிகிட்டு உட்கார்ந்து இருக்கோம். இப்ப எதுக்கு நீ அவனையும் இந்த வயல்ல இழுத்து விடுற? அவன் நல்லா படிச்சு நல்ல பெரிய உத்யோகம் பார்க்கணும்னு நினைக்காம மண்ணு, விதைனு சொல்லிட்டு இருக்குற” என்றார் மருதன்.

மருதனுக்கு ஏற்கனவே தான் படித்து வேலைக்குப் போக முடியாமல் விவசாயம் செய்வதில் இருந்த வருத்ததுடன், தற்போது புயல் காற்றால் ஏற்பட்ட நஷ்டமும் சேர்ந்து அவரை அப்படிப் பேசத் துண்டியது.

நண்பனின் பேச்சிற்கான காரணமும், அவரின் வருத்தமும் புரிந்த நாயகம், “அப்படிச் சொல்லாதே மருதா. விவசாயியா இருந்துகிட்டு நீயே இப்படிப் பேசாதே! ஊருக்கே சோறு போடுற தொழில் ஒன்னும் மோசமானது இல்லை. அவன் படிச்சு வேற உத்யோகம் பார்க்க போனாலும் நான் தடுக்க மாட்டேன். அதே சமயம் அவனுக்கு ஒரு விவசாயியோட கஷ்ட நஷ்டம் தெரிஞ்சு தான் வளர்ப்பேன்” என்று கறாராகவே பதில் சொன்னார் தேவநாயகம்.

“என்னமோ போ. அவனாவது நம்ம மாதிரி கஷ்டம் இல்லாம வேலைக்குப் போகட்டும்னு நினைச்சேன். ஆனா நீதான் உனக்குத் தப்பாத பிள்ளையைப் பெத்து வச்சுருக்கியே” என்று அலுத்துக் கொண்டார் மருதன்.

தன் அப்பாவும், மாமாவும் கோபமாகப் பேசிக் கொள்கிறார்களோ என்று அவர்கள் முகத்தைக் கூர்ந்து பார்த்த தன் மகனை பார்த்து சிரித்த நாயகம் “நானும், மாமாவும் அப்படிப் போய்ப் பேசிட்டு இருக்கோம்ய்யா. நீ இந்த விதையைத் தூவிட்டு வா!” என்ற நாயகம் மருதனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

தனியே பேச சென்ற நண்பர்கள் இருவரும் புயல் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.


இயற்கை அன்னை மனது வைத்தால் தான் விவசாயம் செழிக்கும். அந்த அன்னை மட்டும் கோபம் கொண்டு தன் உக்கிரத்தை காட்டினால் என்ன ஆகும் என்பதை அடுத்து வந்த சில வருடங்கள் நன்கு உணரும் வகையில் இருந்தது கால நிலை.

அடுத்தடுத்து விவசாயம் பாதிக்கும் வகையில் ஒரு வருடம் புயல் என்றால், அடுத்து வந்த வருடங்கள் கடும் வறட்சியைக் கொண்டு வந்தது.

அந்த வறட்சியால் அனைத்து விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

மருதனின் வீட்டு ஆசை கானலாகத் தான் போகுமோ என்று நினைக்கும் வகையில் பாதியாக நின்ற கட்டிடம் அப்படியே நின்று போனது.

மருதனுக்கு விவசாயத்தின் மீது இன்னும் வெறுப்பு வர அங்கே அஸ்திவாரம் போடபட்டது.


நாட்கள் வேகமாக ஓடி ஒரு வருடம் கடந்திருந்தது.

“மாமா…. மாமா…. எங்க போன?” என்று கத்திக் கொண்டே அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் பவளநங்கை.

அவள் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த கனிமொழி “என்ன பவளம் வீட்டுக்குள்ள வரும் போதே உன் மாமனை ஏலம் போட்டுக்கிட்டு வர்ற? அவன் இங்க இல்ல அப்பயே வெளியே விளையாட போய்ட்டான்”

அவள் அப்படிச் சொன்னதும் நங்கையின் சின்ன உதடுகள் அழுகைக்கு ஆயத்தம் ஆவது போலப் பிதுங்கின.

நங்கையின் முகம் போன போக்கை பார்த்து “ஹேய்…! ஹேய்…! அழுதுறாதடி! அப்புறம் நான் தான் உன்னை எதுவும் சொல்லிட்டேன்னு நினைச்சு எங்க அம்மா என்னைத்தான் திட்டும். ஆமா இப்ப எதுக்கு அழப்போறவ?” என்று பதறி போய்க் கேட்டாள்.

“இந்த மாமா வர, வர சரியில்லை கனி மதினி. பாரு என்னை விட்டுட்டு விளையாட போய்ருச்சு. இப்ப எல்லாம் என்னைத் தேடவே மாட்டிங்குது” என்று கண்கள் கலங்க தன் வருத்ததைச் சொன்னாள் நங்கை.

“ஏய் இதுக்குப் போய் எதுக்குடி அழுகுற? நீ சின்னப் பிள்ளை. ஆனா அவன் பெரியவனா ஆகுறான் தானே. அதான் அவன் தனியா விளையாட போய்ருக்கான். நீ போய் வாணியோட விளையாடு” என்று பெரியவளாய் கனி அவளைச் சமாதானப் படுத்தினாள்.

ஆனால் அதில் சமாதானம் அடைய மறுத்த நங்கையின் மனம் சுணங்கி போனது.

இருவரும் விளையாட்டு தோழர்களாக வலம் வந்த காலம் குறைந்து கொண்டே வந்ததில் நங்கை தனிமையாக உணர்ந்தாள்.

குறிப்பிட்ட வயது வரை மட்டுமே சேர்ந்து சுற்றிய தமிழரசன் இருவரும் வளர, வளர ஆறுவயது மூத்தவனானவன் வயதுக்கேற்ற வளர்ச்சியின் விளைவாக நங்கையிடம் இருந்து சிறிது விலக ஆரம்பித்தான். அது ஆண் பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்ததும் தன்னைப் பெரியவனாக நினைத்து வரும் இயல்பான உணர்வு.

ஆனால் நங்கை சிறுமிதான் என்பதால் அவனின் விலகல் அவளுக்கு எதையோ இழந்தது போல இருந்தது.

தனக்கு இத்தனை நாளும் விளையாட்டு தோழனாக இருந்தவன் இப்போது விலகி சென்றதில் அந்தப் பிள்ளை மனம் வேதனை கொண்டது.

அதனால் வீட்டில் ஏதாவது சேட்டை செய்து விட்டு அவன் வீட்டில் போய் நிற்க ஆரம்பித்தாள். அவனும் அவளுக்குப் பெரியவன் என்ற முறையில் நங்கைக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க ஆரம்பிக்க… அதுவே அவளுக்கு ஒரு விளையாட்டு போல ஆனது.

அந்த விளையாட்டு அவளுக்குப் பிடித்துப் போக அதைத் தன் வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

அதுவே குறும்புத்தனம் நிறைந்தவளாக மற்றவர்களுக்கு அவளை அடையாளம் காட்டியது. ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்தவளுக்கு அந்தக் குறும்புத்தனமே தோழன் போலானது.


ஒருபக்கம் நங்கையின் விளையாட்டுக் குணம் வளர… இன்னொரு பக்கம் அவளின் தந்தையின் மனதிற்குள் ஒருவித சலிப்புத் தன்மை உருவாக ஆரம்பித்தது.

அதற்கு வலுவூட்டும் வகையில் நிலத்தில் வரும் வருமானம் குறைந்து கொண்டே போனது.

நல்ல விளைச்சல் இருக்கும் போது அடிமட்ட விலையில் விலைபோக அதன் காரணமாக விளைச்சல் கை நிறைய இருந்தும் வருமானம் இல்லாமல் போனது.

வீட்டுச் செலவிற்கே அரையும், குறையுமாகச் செலவழிக்க வேண்டிய நிலையில் எங்கிருந்து வீடு கட்டுவது?

பாதியாக நிற்கும் கட்டிடத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் வரும் வேதனையை உள்ளுக்குள் வைத்து அடைத்துக் கொண்டு வந்தார்.

தேவநாயகத்தின் சமாதானம் எல்லாம் எடுபடாமல் போனது.

நாயகத்திற்குத் தந்தை நடத்தி வந்த பால்பண்ணை இருந்ததால் அவரால் சமாளிக்க முடிந்தது.

ஆனால் விவசாயம் மட்டும் செய்யும் மருதனால் அப்படிச் சமாளிக்க முடியாததால் தேவையில்லாத சிந்தனைகளுக்கு வழிவகுத்தது.

அவரின் தேவையில்லாத சிந்தனைக்குத் தூபம் போடவும் ஒருவன் வந்தான்.