கண்கள் தேடுது தஞ்சம் – 14

அத்தியாயம் – 14
பைந்தமிழரசன் குடும்பமும், பவளநங்கையின் குடும்பமும் இவ்வளவு ஒற்றுமையாக இருக்க மூலக்காரணம் நட்பு. அந்த நட்புக்குச் சொந்தகாரர்கள் தேவநாயகம், மருதவாணன் இருவரும் தான்!

தேவநாயகம், மருதவாணன் இருவருமே பால்ய வயதில் இருந்தே உற்ற நண்பர்கள். அவர்கள் இருவரும் உறவினர்கள் இல்லை என்றாலும் உறவை விடச் சிறந்த நட்பு அவர்களுக்குள் வலுவாக இருந்தது.

தேவநாயகமும், மருதவாணனும் அவரவர் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளைகள். இருவரின் தந்தையரும் விவசாயிகள். இருவரின் விவசாய நிலமும் அருகருகே இருந்தது. அதனால் சிறுவர்களாக இருந்த பொழுது பள்ளியில் மட்டும் இல்லாது அந்த நிலத்தின் மூலமாகவும் அவர்களின் நட்பு இறுகியது.

தேவநாயகத்தின் தந்தை சற்று வசதி வாய்ந்தவர். அதற்கேற்றாற் போல நிலமும், வசதி வாய்ப்புகளும் சற்று அவருக்கு அதிகமாகவே இருந்தது. நிலத்தில் வரும் வருமானம் மட்டும் இல்லாமல் பால்பண்ணையும் வைத்து நடத்தி வந்தார். அதனால் வருமானத்திற்கு எந்தக் குறைவில்லாமல் இருந்தது.
மருதவாணனின் தந்தை சிறிதளவு நிலமே வைத்திருந்தார். பருவ கால விளைச்சலில் நல்ல நிலையும், பருவம் தப்பிய காலத்தில் வறுமையும் என்று தான் அவர்களின் நிலையாக இருந்தது.

மருதவாணன் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாக இருந்தாலும் வசதி வாய்ப்பு அவர்களின் இல்லத்தில் குறைவே. ஒரு சிறுநில விவசாயக் குடும்பம் அவருடையது.

ஆனால் தேவநாயகம் வீட்டில் அப்படியில்லை. தந்தை காலத்தில் இருந்தே நல்ல வளமையான குடும்பம். தேவாவின் தந்தைக்குக் கொஞ்சம் பணச்செருக்கு உண்டு. தன்னை விட வசதி குறைந்தவர்களை மதிக்க மாட்டார்.

‘மருதனுடன் பழகாதே…!’ என்று அவர் தடுத்தும் தன் பள்ளிக் காலத்தில் இருந்து அவரின் நட்பை விடாமல் பற்றிக் கொண்டார் தேவநாயகம்.

வசதி, ஏற்ற தாழ்வுகள் கூட இருவரின் நட்பிற்கும் பங்கம் விளைவிக்காமல் இருக்குமாறு தேவநாயகம் பார்த்துக் கொண்டார்.

ஆனாலும் மருதன் தன் மகனுடன் சேர்ந்து சுற்றுவதைச் சில நேரம் பார்த்துவிட்டு “இவன் கூட எல்லாம் ஏண்டா சுத்துற? தராதரம் பார்த்துப் பழகக் கத்துக்கோடா!” என்று மருதன் காதுப்படவே சொல்லியிருக்கிறார்.

மருதனுக்குத் தேவாவின் தந்தையின் குணம் தெரியும் என்பதால் ஓரளவு அவர்கள் குடும்பத்துடன் ஒட்டாமல் விலகியே இருப்பார். ஆனாலும் இது போல அவர் பேசுவதைக் கேட்க நேரும் போது தன்னிரக்கம் வந்து அவரை ஆட்டிப்படைக்கும்.

அதனால் தேவநாயகத்தை விடத் தாங்கள் கீழ் இருப்பவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை எண்ணம் மருதனுக்குள் சிறு வயதில் இருந்தே உள்ளுக்குள் நுழைய ஆரம்பித்தது.

ஆனாலும் தேவா அவரிடம் காட்டும் தன்னலம் இல்லாத நட்பு மட்டுமே அவரின் தாழ்வு மனப்பான்மையை வெளியே வராமல் அவருக்குள்ளேயே அடங்கி வைத்து இருந்தது.

தந்தைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தன்னுடன் நாயகம் காட்டும் நட்பின் உன்னதத்தை உயிராய் மதித்துத் தனக்குள் இருக்கும் தன்னிரக்கத்தை மறைத்துக் கொண்டார்.

அவர்களின் நட்பு ஏற்ற தாழ்வை தாண்டி மனம் வீசிக் கொண்டிருந்தது.

தேவநாயகம் தன் பள்ளிப் படிப்பை மட்டும் முடித்துவிட்டு, விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தால் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

ஆனால் அதற்கு முன்பே மருதவாணின் தந்தைக்கு உடல் நல குறைவு வர, அவருக்கு உதவி செய்யும் நிலை ஏற்படத் தன் படிப்பை பாதியில் நிறுத்தி அவருக்கு உதவியாக நிலத்தில் கால் வைத்தார் மருதவாணன்.

நண்பர்கள் இருவரும் விவசாயத்தில் காலூன்றினர். இதில் தேவநாயகம் உயிராகப் பாவித்து விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஆனால் மருதவாணன் தந்தையுடன் வறுமையுடன் போராடியவர், இப்போது தானும் அதே நிலைக்கு வந்ததில் அவருக்கு நிறைய வருத்தம் இருந்தது. வேறு வேலைக்குச் செல்ல அவர்கள் குடும்ப நிலையும் ஒத்துழைக்காததால் வேறு வழி இல்லாமல் விவசாயத்தில் நுழைந்தார்.

விவசாயத்தில் கால் வைத்த பிறகு அதில் ஆர்வமாக இல்லையென்றாலும் தன் வேலையைத் தன் உழைப்பை சரியாகச் செய்து வந்தார் மருதன்.

அது தான் இனி தன் தொழில் என்று ஆன பிறகு அதற்கேற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆனால் நல்ல உழைப்பை போட்டும் சில நேரங்களில் இயற்கையின் சோதனையில் பாதிக்கப்படும் போது விரக்தியில் மூழ்குவார். அவரின் அந்தக் குணம் மட்டும் நாயகம் எவ்வளவு எடுத்து சொல்லியும் மாறவே இல்லை.

இருக்க ஒரு சிறு வீடும், உழைக்கச் சிறு நிலமும் மட்டுமே என்ற நிலையில் இருந்து மாறி தான் இன்னும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரை காலம் சோதிக்கும் போது தோல்வியைத் தாங்காது மனம் தடுமாறுவார்.

அவரின் வருத்ததை உணர்ந்த தேவாவும், மருதனை தேற்றி “உன்னால முடியும் மருதா. இன்னும் நாம வயல்ல நம்ம உழைப்பை போட்டா நல்ல நிலைக்கு வர முடியும். என்னைக்கும் தளர்ந்து போகாதே! நாம விவசாயத்தில் பேரு எடுத்துக் காட்டுவோம். இப்ப இயற்கை நமக்குக் கை கொடுக்கலைனாலும், இயற்கை தாய் நமக்கும் ஒரு நாள் அள்ளிக் கொடுப்பா. நாம நம்ம வேலையை சரியா செய்வோம்” என்று அவரைத் தேற்றுவார்.

தேவா சமாதானம் செய்த போதெல்லாம் தேறும் மருதன், விவசாயத்தில் மகசூல் கிடைக்காமல் போகும் போது சோர்ந்து போவார்.

அந்த நேரத்தில் தேவா பண உதவி செய்ய வந்தாலும் மருதன் அதை ஏற்பதை கௌரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்வார்.

அதையும் புரிந்து அதன் பிறகு தேவநாயகம் நேரடியாக உதவுவதாகச் சொல்லாமல் மருதனே உணராத வகையில் அவருக்கு மறைமுகமாகச் சிறுசிறு உதவிகள் செய்ய ஆரம்பித்தார்.

திருமண வயது வந்ததும் தேவநாயகத்திற்கு முதலில் அம்சவேணியுடன் திருமணம் நடந்தது.

அம்சவேணி ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். சாந்தமான குணம் கொண்டவர். உற்றார், உறவினரை அரவணைத்துச் செல்லும் பாங்கு அவருக்கு இருந்தது.

அவர்களுக்குக் கனிமொழி பிறந்து மூன்று வருடங்கள் கழித்து மருதவாணனுக்கும், ஈஸ்வரிக்கும் திருமணம் ஆனது.

ஈஸ்வரி ஒரு சாதாரணமான குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகளில் மூத்த பெண்ணாகப் பிறந்தவர்.

திருமணத்திற்குப் பிறகு நாயகத்திற்கும், மருதனுக்கும் இருந்த நட்பை பார்த்து அம்சவேணிக்கும், ஈஸ்வரிக்கும் இயல்பாக நட்பு மலர்ந்தது.

பெண்களிடம் ஒற்றுமை வந்த பிறகு இரு குடும்பமும் உறவினர்கள் போல இன்னும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அண்ணா, மதினி என உறவின் முறை வைத்து பழக ஆரம்பித்தார்கள். கனிமொழிக்கு ஈஸ்வரி ‘அத்தை’ ஆனார்.

கிராமத்தில் சட்டென உறவு முறை சொல்லி அழைத்துச் சொந்தம் பாராட்டுவது இயல்பாக நடந்தேறும். அந்த இயல்புடன் அவர்களின் நட்பு பாராட்டுதலும் துணை இருக்க… அங்கே தங்கு தடையின்றி நட்போடு உறவும் வளர்ந்தது.

தேவநாயகத்தின் பெற்றோரும், மருதவாணன் பெற்றோரும் அடுத்தடுத்துக் காலமாகியிருந்தார்கள்.

கனிக்கு அடுத்து வேணி, நாயகம் தம்பதிக்கு பைந்தமிழரசன் பிறந்தான். அவன் பிறக்கும் வரையிலும் மருதன், ஈஸ்வரி தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளி போயிருந்தது.

தமிழரசன் பிறந்தபோது ஈஸ்வரிக்கு ஒரு குழந்தை உருவாகி கலைந்திருக்க, வேணியும் அந்தப் பிரசவத்தில் மிகவும் தளர்ந்திருக்க, அவனை ஈஸ்வரி கவனித்துக் கொண்டார்.

அம்சவேணியின் பிறந்த வீட்டினர் சில நாட்கள் மட்டும் மகளுடன் இருந்து கவனித்து விட்டுச் சென்றிருக்க… நாயகத்தின் வீட்டருகிலேயே இருந்த ஈஸ்வரி தன் குழந்தை இல்லா மன வருத்தத்தைத் தமிழரசனை கவனித்துத் தணித்துக் கொண்டார்.

வேணியும் அவர் வருத்தத்தைத் தன் மகன் மூலம் போக்க முடிந்ததில் சந்தோஷம் கொண்டார். அதிகம் ஈஸ்வரியின் பராமரிப்பில் இருந்த தமிழரசன் மீது அவருக்கு அலாதி பிரியம் உண்டு.

அதன் பிறகு ஈஸ்வரி, மருதன் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அரசு பிறந்து ஆறு வருடங்கள் கழித்துத் தான் கிடைத்தது.

வருடங்கள் காத்திருக்க வைத்துப் பவளமாய்க் கைகளில் தவழ்ந்த தன் மகளுக்குப் பவளநங்கை என்று பெயர் வைத்து அழகு பார்த்தார்கள்.

அவர்களுக்கு நங்கைக்குப் பிறகு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட ஒற்றைப் பிள்ளையாய் வலம் வந்த நங்கைக்குக் கனிமொழியும், பைந்தமிழரசனும் மட்டுமே உற்ற உறவினர்கள் போல ஆனார்கள்.

அவள் பேச ஆரம்பிக்கும் போதே அவளுக்கு அத்தை, மாமா, மதினி என உறவு முறை வைத்து அழைத்துப் பழக்க அதன் படியே அழைத்து வந்தாள்.

கனி, நங்கையை விட மிகவும் மூத்தவள் என்பதால் அவளை விட அரசுவிடம் அவளுக்குக் கூடுதல் ஒட்டுதல் ஏற்பட்டது.

மாமா, மாமா என்று அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்க, அவனும் குட்டி தேவதையாகத் தனக்கு மாமன் அந்தஸ்து குடுத்து அழைத்தவளை பாசமாய்ச் சீராட்டினான். இருவரும் விளையாட்டுத் தோழர்கள் ஆனார்கள்.

அப்படி விளையாட செல்லும் போது யாராவது தன்னைச் சீண்டினால் தன் மாமாவான தமிழரசனிடம் சொல்லி அடிக்கப் போவதாக மிரட்டியே அவனின் பின் ஒளிந்துக் கொள்வாள்.

அன்றும் அப்படிதான் சொல்ல, அதை ராதா என்ற சிறு பெண் அவன் உன் மாமாவே இல்லை என்று சொல்லிவிட வீட்டில் வந்து அழுது கரைந்தாள்.

பாசம் வைத்துவிட்டால் அதில் ஸ்திரமாய் இருக்கும் நங்கையின் குணம் அது.

ஏன்? எப்படி? எதனால்? என்று காரணம் அறியாமல் சில உறவுகள் பின்னிபிணைந்து வலுபெற்றுவிடுகின்றன.

வெறும் வாய் வார்த்தையாய் உறவு சொல்லி அழைத்துக் கொள்ளும் முறைமை கிராமங்களில் சர்வ சாதாரணமான ஒன்று.

அதுவே இங்கே பைந்தமிழ், நங்கை குடும்பங்களுக்கிடையே நடந்திருந்தாலும், இங்கே வெறும் அழைப்பைத் தாண்டிய உறவாக வலுவாக அவர்களின் உறவு மாறிப் போனது. அந்த உறவில் அதிகம் தன்னைப் பிணைத்துக் கொண்டவள் நங்கை.

அவளின் பாசத்திற்குத் தாங்களும் குறைவில்லை என்று காட்டியவர்கள் கனிமொழியும், பைந்தமிழரசனும்.

ஆம்…! தங்களையே சுற்றி வரும் நங்கை மீது அவர்களும் அலாதி பாசம் வைத்திருந்தார்கள். தேவநாயகத்தின் வாரிசு நாங்கள் என்று நிரூபிக்கும் வகையில் தான் அவர்களும் வளர்ந்தார்கள்.

இரத்த உறவற்ற இந்த உறவு இன்னும் இறுகுமா? இல்லை நொறுங்குமா? என்ற கேள்வியுடன் நாட்கள் சென்று கொண்டிருந்தன.


அன்று மாலை வயலில் வேலையை முடித்து விட்டு வாய்க்கால் ஓரம் இருந்த அந்தப் பெரிய மரத்தடியில் அமர்ந்திருந்தார் மருதவாணன்.

அப்போது தன் வயலிலும் வேலையை முடித்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார் தேவநாயகம்.

“என்னப்பா மருதா… ஏதோ யோசனையா இருக்குற மாதிரி இருக்கு?” என்று கேட்ட படி அவர் அருகில் அமர்ந்தார் நாயகம்.

அதுவரை எதையோ யோசித்தப்படி இருந்த மருதன் “வாப்பா… உன் வயல்ல வேலை முடிஞ்சிருச்சா?” என்று கேட்டார்.

“இப்பதான்பா முடிஞ்சு வயலு வேலைக்கு வந்தவங்களைக் கூலி கொடுத்து அனுப்பிட்டு வர்றேன். அது இருக்கட்டும். என்ன யோசனை? அதைச் சொல்லு!” என்று கேட்டார்.

“அது ஒண்ணுமில்லைப்பா. ரொம்ப வருசமா எங்க அப்பா காலத்தில் இருந்து இப்ப இருக்குற சின்ன வீட்டுலையே இப்ப வரை நாட்களை ஓட்டிட்டேன். இப்ப எனக்குன்னு ஒரு பொம்பள புள்ள வந்துட்டா. இன்னும் கொஞ்ச வருஷத்தில் பெரிய மனுஷி ஆகிருவா. அதுக்குள்ளே கொஞ்சம் பெரிய வீடா கட்டிப்புடலாம்னு பார்க்குறேன் நாயகம். அதான் என்ன செய்றது எப்ப வேலையை ஆரம்பிக்கிறதுன்னு யோசிக்கிட்டு இருக்கேன்” என்று மருதன் தன் யோசனையின் காரணத்தைச் சொன்னார்.

அதைக் கேட்டதும் முகம் மலர்ந்த நாயகம் “ரொம்ப நல்ல விஷயம் தானே மருதா. இந்த வருஷமும் நல்ல விளைச்சல் வந்துருக்கு. அதில் எப்படியும் நல்ல லாபம் வரும். அப்புறம் என்ன நல்லபடியா ஆரம்பி!” என்று உற்சாகமாகச் சொன்னவர், “சரி… இப்ப இருக்குற வீட்டையா இடிச்சுட்டு கட்டப் போற?” என்று கேட்டார்.

“இல்ல நாயகம் அந்த வீடு எங்கப்பா ஞாபகமா அப்படியே இருக்கட்டும்னு பார்க்குறேன். இரண்டு வருஷத்துக்கு முன்ன அந்த வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு நிலம் வாங்கிப் போட்டேன்ல? அது இப்ப சும்மாதானே கிடக்கு. அதுல கட்டலாம்னு இருக்கேன். நீ சொன்ன மாதிரி இந்த வருஷ விளைச்சலை வச்சு வேலையை ஆரம்பிக்கணும். ஆனா அந்தப் பணத்தை வச்சு வேலையை ஆரம்பிக்கத் தான் முடியும். வீட்டை முழுசா முடிக்க அந்தப் பணம் பத்தாது. ஏன்னா… என் கடைசி மச்சினிச்சிக்கு இந்த வருஷம் கல்யாணம் வச்சுருக்காங்க.

இரண்டாவது சகலை கொஞ்சம் வசதியானவரா இருக்குறதுனால அவர் எப்படியும் இந்தக் கல்யாணத்துக்கு நல்லா செய்வார். அதே அளவுக்கு இல்லனாலும் மூத்த மாப்பிள்ளையா நானும் நிறைவா செஞ்சா தானே எனக்கு மரியாதை. அதான் அதுக்குக் கொஞ்ச பணம் போயிரும். அதோட என் பெரியப்பா மவன் என்னோட நடராஜன் அண்ணே அவர் கல்யாணம் முடிஞ்ச கையோட மதுரைல துணிக்கடை வைக்கப் போறேன்னு சொல்லி அங்க செட்டில் ஆகிட்டாருல? அவரோட நிலத்தை இத்தனை நாளா நான் குத்தகைக்குத் தானே பார்த்துட்டு இருந்தேன்.

ஆனா இந்த வருஷம் அவர் கடையை விரிவு படுத்த பணம் தேவை படுதாம். இங்க இருக்குற நிலத்தை வித்து அதை வியாபாரத்தில் போட போறேன். நீ இத்தனை நாளா குத்தகைக்குப் பார்த்துக்கிட்ட நிலம் தானே. அதை நீயே விலைக்கு வாங்கிக்கோ. என் அப்பா இருந்திருந்தா நிலத்தை விக்க விட்டிருக்க மாட்டார். எனக்கும் விக்கக் கஷ்டமா தான் இருக்கு. ஆனா உன்கிட்டனா என் தம்பி கிட்ட தானே நிலத்தை வித்துருக்கேன்னு நிம்மதியா இருக்கும்.

உன் பேர்ல பத்திரத்தை மாத்திறலாம்னு சொல்லிருக்கார். எனக்கு என் வழில நெருங்கின சொந்தம்னு இருக்குறது நடராஜ அண்ணே மட்டும் தானே. அதான் அவர் ஆசையை ஏன் கெடுக்கணும்னு வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன். அதுக்குக் கொஞ்ச பணம் செலவாகிரும். இத்தனை செலவு இருந்தாலும் வீட்டை கட்டுறதை தள்ளிப் போடவும் மனசு வரலை. தள்ளி போட்டா அப்படியே வீடு கட்ட முடியாம தள்ளிப் போயிருமோன்னு தோணுது. அதான் அடுத்து எப்படி என்ன செய்யலாம்னு யோசனையிலேயே அப்படியே உட்கார்ந்துட்டேன்” என்றார்.

“சரிதான்பா… மூத்த மாப்பிள்ளை நல்லா தானே முறை செய்தாகணும். அதோட உன் நடராஜன் அண்ணே நல்ல மனுஷன். அப்பா காலத்து நிலத்தை வேத்தாளுக்குக் கொடுக்க மனசில்லாம தம்பிக்கே வித்துட விரும்புறார். அவர் விருப்பமும் நியாயந்தேன். உன் நிலைமை புரியுது. அவசரப்பட்டு முடிவெடுக்காம நல்லா யோசிச்சே செய் மருதா. நான் எதுவும் உதவி செய்ய நினைச்சாலும் நீ ஏத்துக்க மாட்ட. இது ஒன்னு தான் உன்கிட்ட எனக்குப் பிடிக்க மாட்டிங்குது” என்று நண்பன் தன் உதவியை ஏற்க மாட்டானே என்ற வருத்தத்துடன் பேசினார்.

“அட…! என்ன நாயகம் இது? இதுக்கேன் நீ வருத்தப்படுற? நான் இப்படியே இருந்து பழகிட்டேன் விட்டுடு. நான் வீட்டு வேலையை அறுவடை முடிஞ்சதும் ஆரம்பிக்கிறேன். அப்புறம் மீதி வேலையை அடுத்த அறுவடைல தொடர வேண்டிதான். இதில் என்ன இருக்கு. கடன் வாங்கிக் கட்டினாலும் என் மனசுக்குத் திருப்தி இருக்காது” என்று முடித்தார் மருதவாணன்.

அவர் நினைத்தப்படி வீட்டை கட்ட முடியாமல் போகும் என்று அப்பொழுது அவரே அறியவில்லை. மருதவாணன் ஒரு கணக்கு போட காலம் ஒரு கணக்கு போட்டது.