கண்கள் தேடுது தஞ்சம் – 13

அத்தியாயம் – 13
“நங்கா… ஏய் நங்கா…! எங்க இருக்க? வெளியே வா…!” என்று அழைத்துக் கொண்டே அந்தச் சிறிய ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தான் பதிமூன்று வயதில் இருந்த பைந்தமிழரசன்.

அந்த வீடு பெரிய கூடத்தையும், அதன் ஒரு ஓரத்தில் தடுப்பு போல் வைத்து அந்தப் பக்கம் சமயலறையும், வாசல் கதவிற்கு நேரெதிராக இன்னொரு சின்ன வாசலும், அதன் வெளியே குளிக்கும் அறையும் மட்டுமே கொண்ட அந்த வீடு தான் மருதவாணனின் தந்தை காலத்தில் இருந்து இருக்கும் வீடு.

அந்த வீட்டின் கூடத்தில் இருந்து அரசு நங்கையை அழைக்க, அவளுக்குப் பதிலாகச் சமையல் செய்து கொண்டிருந்த ஈஸ்வரி “என்னய்யா தமிழு! பவளம் உன் கூடத் தானே விளையாட வந்தா? இப்ப நீ இங்க வந்து கூப்பிட்டுகிட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டே தடுப்பை தாண்டி வெளியே வந்து கேட்டார்.

“ஆமா அத்த! என் பக்கத்தில் தான் விளையாடிட்டு இருந்தா. நான் பசங்க வரவும் கோலிகுண்டு விளையாட போய்ட்டேன். விளையாண்டுட்டு வந்து பார்த்தா நங்காவ காணோம். அங்க இருந்த வாணி தான் இவ வீட்டுக்கு போய்டான்னு சொன்னா. அதுவும் அழுதுகிட்டே வந்தாளாம். என்னாச்சுனு தெரியலை? நங்கா இங்க வந்தாளா?” என்று கேட்டான்.

“அழுதுகிட்டே வந்தாளா? என்னய்யா சொல்ற? எதுக்கு அழுதுருப்பா? நான் இங்கன தானே இருக்கேன். பார்க்கலையே!” என்ற ஈஸ்வரி “பவளம்…! எங்கடி இருக்க?” என்று குரல் கொடுத்தார்.

அவர் குரலுக்குப் பதில் எதுவும் வராமல் போக, மீண்டும் அழைக்க வாயை திறக்கப் போனவரை “அத்த ஸ்ஸ்!” என்று தன் வாயின் மீது விரல் வைத்துக் காட்டி அவரை அமைதியாக்கிய அரசு, பூனை போல மெதுவாக நடந்து அங்கே இருந்த ஒரு மர பீரோவின் பின் பக்கம் எட்டிப் பார்த்தான்.

அவன் நினைத்தது போலவே அங்கே பீரோவை ஒட்டி கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலையைச் சாய்த்து ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் ஏழு வயதான பவளநங்கை.

“ஹேய்…! சில்வண்டு…! வா… இந்தப் பக்கம்! உனக்கு என்ன கோபம்னு இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்று அழைத்தப்படி அவள் எதிரே நின்றான்.

ஆனால் அவன் குரலுக்குக் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அதனால் அவளின் எதிரே அமர்ந்து குனிந்திருந்த நங்கையின் தலையைக் கட்டாயமாக நிமிர்த்தினான்.

நிமிர்ந்தவளின் கண்ணில் இருந்து கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்து கொண்டிருந்தது. அவளைத் திடுக்கிட்டு பார்த்த சிறுவன் “அத்த நங்கா அழுகுறா. இங்க வாயேன்!” என்று கத்தினான்.

அவனை அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி, அவனின் கத்தலில் அருகில் சென்றார்.

அங்கே கண்ணீர் கழுத்து வரை வடிந்து, முகம் கசங்கி அழுது கொண்டிருந்த மகளைப் பார்த்து “என்னடி பவளம்! எதுக்கு இப்படி உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க? எங்கேயும் கீழ விழுந்துட்டியா? அதான் இங்க வந்து உட்கார்ந்து அழுவுறியா? இல்ல யாரும் அடிச்சாங்களா?” என்று கேட்டவருக்கு ஒரு பதிலும் சொல்லாமல் அழுதப் படியே இருந்தாள் நங்கை.

அவள் அழுவது பொறுக்க முடியாமல், அவள் அருகில் தானும் அமர்ந்த அரசு அவள் கண்ணைத் துடைத்து விட்டு “இப்ப எதுக்கு இப்படி அழுதுட்டே இருக்க? அடி பட்டுருச்சா? எங்க காட்டு…!” என்று கேட்டான்.

அவன் கையைத் தன்னிடம் இருந்து தட்டி விட்ட குட்டி நங்கை “போ…!” என்று மூக்கு விடைக்கச் சொன்னாள்.

அவள் ஒன்றும் சொல்லாமல் அழுதது மட்டும் இல்லாமல் தமிழின் கையையும் தட்டி விடவும் ஈஸ்வரிக்குக் கோபம் வந்தது.

“அடியே… குட்டி கழுதை! என்னனு சொல்லிட்டு அழுடி! இப்ப எதுக்கு அந்தப் புள்ள கையைத் தட்டி விடுற? செல்லம் கொடுத்து, கொடுத்துக் கொழுப்பு ஏறிப் போய்ருச்சு உனக்கு. இப்ப என்னனு சொல்லைனா முதுகுலேயே இரண்டு போட போறேன் பாரு” என்று திட்டினார்.

“அத்த, நங்கா என்னைத்தானே சொன்னா. இப்ப எதுக்கு அவள திட்டுறீக?” என்று நங்கை திட்டு வாங்குவது பொறுக்காமல் அரசு அவளுக்கு ஆதரவாக பேசினான்.

அவன் தனக்காகப் பேசியதில் அவனை ஒட்டி அமர்ந்துக் கொண்டாள் நங்கை. ஆனாலும் அவள் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.

“இப்ப நங்கா எதுக்கு அழுகுறான்னு சொல்லுவாளாம். நான் அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போய்க் கடல மிட்டாய் வாங்கித் தருவேனாம்” என்றான் பெரிய மனுஷன் தோரணையில்.

சிறுவனின் பாவனையில் ஈஸ்வரிக்குச் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு அவர்களை அமைதியாகப் பார்த்தார்.

அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள், இப்போது தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே “அந்த ராதா அக்கா தான் என்னை அழ வைச்சா” என்று மெல்ல தேம்பிய படி வாயை திறந்தாள் நங்கை.

“எதுக்கு நங்கா? நீ எதுவும் சேட்டை செய்தியா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

“ஹ்கும்… இல்ல… நான் விளையாடும் போது அந்த அக்கா இது நாங்க விளையாடுற இடம். நீங்க அந்தப் பக்கம் போய் விளையாடுங்கன்னு என்னையும், வாணியையும் விரட்டினா. அதுக்கு நான் நீ சும்மா என்னை விரட்டினா என் மாமாட்ட சொல்லி அடிக்கச் சொல்லுவேன்னு சொன்னேன்” என்றாள்.

‘எந்த மாமாட்ட?’ என்று சிறுவன் முதலில் புரியாமல் முழித்தான்.

அதைக் கவனிக்காத நங்கை தொடர்ந்து “தமிழரசு உன் மாமாவே இல்லை. அப்படி இருக்கும் போது அவன்கிட்ட சொல்லி என்னை அடிக்கச் சொல்லுவியாக்கும்னு சொன்னா” என்று பேசிக் கொண்டே போனாள்.

தன்னைத் தான் சொல்கிறாள் என்று புரிந்த அரசு பெருமையாக அவள் சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“ஏன் மாமா… அப்படியா…? நிஜமாவே நீ என் மாமா இல்லையா? ராதாக்கா அம்மா அவகிட்ட அப்படித் தான் சொன்னாங்களாம். நாம சொந்தகாரங்களே இல்லை. அப்புறம் எப்படி அவனை மாமான்னு சொல்றனு கேட்டா. நீ என் மாமா இல்லையா? ஏன்மா நாம இவங்க சொந்தகாரங்க இல்லையா?” என்று அரசுவிடமும், தன் அம்மாவிடமும் மாறி, மாறி கேள்வி கேட்டாள் நங்கை.

சிறியவளின் கேள்வியில் ஈஸ்வரி என்ன விளக்கம் சொல்ல? என்று புரியாமல் முழித்தார். யாரோ சொந்தம் இல்லை என்று சொல்லிவிட்டதற்கே இப்படி அழுபவளிடம், அவர்கள் சொன்னது உண்மை தான் என்று சொன்னால் இன்னும் எவ்வளவு அழுவாளோ? என்று நினைத்து அவர் அமைதியாகி போனார்.

“அப்படி எல்லாம் இல்லை நங்கா. நீ என்னையும், எங்க அப்பாவையும் மாமானு தானே கூப்பிடுவ? அதுனால நாம சொந்தகாரங்க தான். அவங்க தான் பொய் சொல்றாங்க” என்று சிறுவன் தமிழரசன் அந்த வயதில் தனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லி அவளைச் சமாதானப் படுத்தினான்.

அவனின் பேச்சில் பாதி மட்டுமே சமாதானம் அடைந்த நங்கை நிமிர்ந்து தன் அன்னையைப் பார்த்தாள். மகள் தன்னிடம் உறுதி படுத்திக் கொள்ளக் கேட்கிறாள் என்று புரிந்த ஈஸ்வரி, தான் இல்லை என்று சொன்னால் எங்கே திரும்ப அழுக ஆரம்பித்து விடுவாளோ என்று நினைத்து ‘ஆமா’ என்பது போலத் தலையாட்டினார்.

ஆனாலும் அப்புறம் பொறுமையாக உண்மை நிலையை அவளுக்குப் புரியவைக்க வேண்டும் என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அன்னையின் தலையாட்டலில் முழுமையாகத் திருப்தி அடைந்த நங்கை தன் அழுகையை முழுமையாக நிறுத்தி “வா மாமா! நாம விளையாட போகலாம்…” என்று எழுந்து தமிழின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் பவளநங்கை.

நாடி நரம்புகளில் ஊடுருவி
உதிரத்தில் உறைந்து
அன்பு கொள்ள
உறவெதுவும் வேண்டுமோ??

அவர்கள் சென்றதும் ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுக் கொண்டே தானும் தன் வேலையைப் பார்க்க சென்றார் ஈஸ்வரி.

தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு பின்பக்க வாசலில் அமைதியாக அமர்ந்திருந்த ஈஸ்வரி “மதினி…” என்ற அழைப்புக் கேட்டு எழுந்து கூடத்திற்குள் வந்தார்.

“வாங்க மதினி! உட்காருங்க…!” என்று ஒரு பாயை எடுத்துக் கூடத்தில் விரித்தப்படி அங்கே வந்த அம்சவேணியை வரவேற்றார் ஈஸ்வரி.

“என்ன மதினி வேலையை எல்லாம் முடிச்சுட்டிங்களா? பின்னாடி போய் உட்கார்ந்துட்டீக?” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பாயில் அமர்ந்த வேணி தன் கையில் இருந்த ஒரு தூக்குவாளியை ஈஸ்வரியிடம் நீட்டினார்.

“என்ன மதினி பலகாரமா?” என்று கேட்டபடி கையில் வாங்கி அதைத் திறந்து பார்த்தார்.

“ஆமா கொழக்கட்டை அவிச்சேன் மதினி. என் மருமகளுக்குப் பிடிக்குமேன்னு சூடா இங்க கொண்டு வர்றேன். எங்க ஆளை காணோம்” எனக் கேட்டார்.

“அவ நம்ம தமிழு கூடத்தான் விளையாட போனா. கோவில்கிட்ட விளையாடுவாக. பக்கத்தில் வீட்டை வச்சுகிட்டு மெனக்கெட்டு இதை எடுத்துட்டு வராட்டி என்ன? ஒரு குரல் கொடுத்தா அவளே அங்க வந்திருக்கப் போறா” என்றார் ஈஸ்வரி.

“ஆமாமா… பிள்ளைக விளையாட போனதையே வேலைல மறந்துட்டேன். கொழக்கட்டை வீட்டிலேயே இருந்தா வர்றவக, போறவகன்னு எடுத்துக் கொடுத்து காலியாகிடும். அதான் பிள்ளைக்குத் தனியா கொடுத்துட்டா திருப்தியா சாப்பிட்டுப்பான்னு தான் செஞ்சதும் இங்க தூக்கிட்டு வர்றேன்” என்றார் வேணி.

அம்சவேணிக்கு எப்போதும் நங்கையின் மீது ஒரு தனிப் பிரியம் உண்டு என்பது ஈஸ்வரிக்கு நன்றாகவே தெரியும். இப்படி எது செய்தாலும் அவளுக்குத் தனியாக ஒரு பங்கை எடுத்து வந்து கொடுத்து விடுவார்.

வேணியின் இந்தப் பாசத்தையும் சிறிது நேரத்திற்கு முன் தன் மகள் அழுத காரணத்தையும் நினைத்துப் பார்த்தவருக்குத் தன்னால் பெருமூச்சு ஒன்று வந்தது.

அதைக் கவனித்த வேணி “என்ன மதினி? பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு. என்னத்தை நினைச்சு இந்தப் பெருமூச்சு?” என்று கேட்டார்.

அவர் கேட்டதும் சற்றுமுன் நடந்ததை ஈஸ்வரி சொன்னார்.

“ஓ…!” என்று கேட்டுக் கொண்ட வேணி “இதுக்கேன் பெருமூச்சு மதினி? அந்த ராதாம்மாவுக்கு யாரை பார்த்தாலும் சும்மாவே பொறாமை வரும். அதான் சின்னப் பிள்ளைக்கிட்ட கூட இப்படிச் சொல்லி வச்சுருக்கு போல. உறவு என்ன பெரிய உறவு மதினி. உறவு கூடச் சில நேரம் பொய்த்து போய்ரும். ஆனா நம்ம மனசுல இருக்குற அன்பு என்னைக்கும் மாறாது. நாம உறவே இல்லாம இப்படி அண்ணே, மதினினு கூப்பிட்டு நாம ஒத்துமையா இருக்குறது அந்தம்மாவுக்கு உறுத்துது போல. விட்டு தள்ளுங்க! உங்க அண்ணே இப்ப வந்துருவாரு… நான் போய்க் காபி போட்டு கொடுக்கணும். வர்றேன் மதினி. புள்ள வந்ததும் மறக்காம கொழக்கட்டையைக் கொடுங்க” என்ற வேணி எழுந்து பக்கத்திலேயே இரண்டு வீடு தள்ளி இருந்த அவரின் வீட்டிற்குச் சென்றார்.

உறவில்லா உறவதுவை
பற்றிப் பிணைக்க
அன்பென்னும் ஆயுதம் போதும்!!

ஆம்…! பைந்தமிழரசனின் குடும்பமும், பவளநங்கையின் குடும்பமும் உறவினர்கள் இல்லை. உறவை தாண்டிய நட்பு தான் இரு குடும்பத்திலும் பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது.

இன்று யாரோ ஒருவர் தமிழரசனை தன் மாமா இல்லை என்று சொன்னதிற்காக அழுது கரைந்த நங்கை, இன்னும் சில வருடங்களில் தன் வாயாலேயே அவனை மாமா என்று சொல்லமாட்டேன் என்று உறுதி எடுப்பாள் என்பதை அவள் அப்பொழுது அறியவில்லை.