என்னுள் யாவும் நீயாக! – 9

அத்தியாயம் – 9

பரபரப்பு, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, பூரிப்பு, நெகிழ்வு, ஆரவாரம், என எல்லாம் கலந்த மனித உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு கலகலத்துக் கொண்டிருந்தது அந்தத் திருமண மண்டபம்.

சூரியன் முழுவதும் மறையாத அந்த மாலை வேளையில் மண்டபக் கட்டிடத்தின் மீதும், மண்டபத்தில் இருந்து தெருவில் சிறிது தூரம் வரையிலும் வண்ண விளக்குகள் ஜொலித்து இங்கே தான் திருமணம் என்று விருந்தினர்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருந்தன.

மண்டபத்தின் முகப்பில் பெரிதாக வைத்திருந்த பெயர் பலகையில் ‘பிரசன்னா வெட்ஸ் வசுந்தரா’ என்று பூக்களால் எழுதப்பட்டு, சுற்றிலும் வண்ண விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தன.

மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே வந்திருக்க, பெண் வீட்டார் வரக் காத்திருந்தார்கள்.

பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டார் சார்பில் தீபாவும், சரணும் சென்றிருந்தனர்.

மணப்பெண் வந்ததும் சற்று நேரத்தில் நிச்சயதார்த்தம் நடக்க விருப்பதால் மணமகன் அறையில் பிரசன்னா தயாராகிக் கொண்டிருந்தான்.

கருநீலக் கால்சட்டையும், வெள்ளைச் சட்டையும் அணிந்து கருநீலக் கோட்டை மேலே போட்டிருந்தான். கழுத்தை இறுக்கிய டையைச் சரி செய்த படி கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திருப்திப் பட்டுக்கொண்டான்.

“புது மாப்பிள்ளைக்குப் பப்பப்பரே…
நல்ல யோகமடா பப்பப்பரே…
அந்த மணமகள்தான் பப்பப்பரே…
வந்த நேரமடா பப்பப்பரே…”

என்று பாட்டுப் பாடிக் கொண்டே பிரசன்னாவின் நண்பன் சஞ்சீவ் நுழைய அவனுடன் சேர்ந்து அவர்களின் கல்லூரிக் காலத் தோழர்கள் நால்வர் நுழைந்தனர்.

அவர்களின் பாட்டைக் கேட்டு உற்சாகமாகத் திரும்பியவன், “ஹேய்! வாங்கடா. என்ன வரும் போதே என்னைக் கலாட்டா பண்ண ஆரம்பிச்சாச்சா?” என்று கலகலப்பாகக் கேட்டுக் கொண்டே நண்பர்களை வரவேற்றான் பிரசன்னா.

“பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா…
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா…
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பப்பரே…”

அவனுக்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து அவர்கள் பாட, “அட! போதும்டா ரொம்ப ஓட்டாதீங்க. ஆமா நீங்க இன்னும் பொண்ணையே பார்க்கலையே. அப்புறம் என்ன பொண்ணைப் பார்த்தது போல அவள் எப்படி இருப்பாள்னு பாட்டு?” என்று கேலியாகக் கேட்டான்.

“காதல் மோதிரம் உன் கைகளில் போடுவாள்…
அவள் தான் உனக்கெனப் பிறந்தாளே…
உன்னை நெனைச்சு பரிதவிப்பா… துடிதுடிப்பா…”

பிரசன்னாவின் பேச்சைக் கண்டு கொள்ளாமல் அடுத்த வரிகளைச் சிறிது மாற்றிப் போட்டு பாடி நண்பனைத் தொடர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கலாய்ப்பைப் பாராட்டு போல ஏற்றுக் கொண்டவன், ‘நீங்க என்னவும் செய்ங்கடா’ என்பது போலப் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.

பிரசன்னாவைச் சுற்றி வட்டமாக நின்றவர்கள்,

“பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே…”

என்று கோரஸாகப் பாடி ஒருவர் கையுடன் ஒருவர் கோர்த்து அவனைச் சுற்றிக் கொண்டே வந்தவர்கள், “பப்பப்பரே….” என்று கடைசியாக ஒன்று போல் கைகளை மேலே தூக்கிச் சத்தமாகக் கத்தினர்.

அவர்கள் செய்யும் கலாட்டாவைச் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தவன் அவர்கள் சப்தமாகக் கத்தவும் தன் காதுகளை மூடி, “அடேய்! நிறுத்துங்கடா. காது செவுடா போய்ட போகுது…” என்று அவர்களுக்கு மேல் கத்தினான்.

“அட! அண்ணாக்களா… என்ன இது பாட்டும், சவுண்டும்? அதுவும் பழைய பாட்டா பாடி இன்னும் நீங்க அப்டேட் ஆகலைன்னு காட்டிக்கிட்டு இருக்கீங்க. உங்களை எல்லாம் பார்த்தால் யாரும் பெரிய டாக்டர்ஸ்னு சொல்ல மாட்டாங்க போங்க…” இவர்களின் சப்தம் கேட்டுக் கல்யாண வேலையில் மும்முரமாக இருந்த யாதவ் வந்து நின்றான்.

“வாடே வக்கீலு! எங்க ப்ரண்டு கல்யாணம். அதைக் களைகட்ட வைக்க வேண்டாமா? பழைய பாட்டா இருந்தால் என்னடா? பொருத்தமான பாட்டு தானே! இது மட்டுமா? இன்னும் இன்னைக்கு நிறைய ஐட்டம் வச்சுருக்கோம். நீ ஓரமா ஒத்திக்கோ…” என்றான் பிரசன்னாவின் நெருங்கிய நண்பன் சஞ்சீவ்.

“இன்னுமா? இதுக்கே மண்டபத்தில் இருக்குறவங்க எல்லாம் மாப்பிள்ளை ரூமைத் தான் என்னவோ ஏதோனு பார்த்துட்டு இருக்காங்க. அண்ணா நீங்க எல்லாம் பெயர் பெற்ற டாக்டர்ஸ். அது ஞாபகம் இருக்கா இல்லையா?” சிரித்துக்கொண்டே கேட்டான் யாதவ்.

பிரசன்னாவின் நண்பர்கள் ஐவரும் பெயர் பெற்ற மருத்துவர்களாக இருந்தனர்.

MBBS படிக்கும் போது பிரசன்னாவின் நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள். அதன் பிறகு வெவ்வேறு உடல் நலப் பிரிவுகளில் படிக்கச் சென்று பிரிந்திருந்தாலும், அவர்களின் நட்பிற்குப் பிரிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

சஞ்சீவ் குழந்தைகள் நல மருத்துவராக இருந்தான். ராமும் அதே பிரிவில் இருக்க, விக்னேஷ் நரம்பியல் பிரிவில் இருந்தான். ராஜீவ் மற்றும் சிவா கேன்சர் பிரிவில் இருந்தார்கள்.

சஞ்சீவ் மட்டும் பிரசன்னா வேலை பார்க்கும் மருத்துவமனையில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

மற்ற நால்வரும் வேறு, வேறு மருத்துவமனைகளில் வேலையில் இருந்தனர்.

“அடேய் வக்கீலு! டாக்டர்ஸ் கலாட்டா பண்ண கூடாதுனு உன்னோட ஈபிகோ சட்டம் ஏதாவது சொல்லுதாடா?” என்று நக்கலுடன் கேட்டான் இன்னொரு நண்பன் விக்னேஷ்.

“சொல்லலை அண்ணா, சொல்லலை. தாராளமா கலாட்டா பண்ணுங்க. ஆமா, வேறென்ன பண்ண போறீங்க? சொல்லுங்க, நானும் கலந்துகிறேன்…” என்றான் ஆர்வமாக.

“அடேய்! நீயுமா டா? இவனுங்க கலாட்டாவே தாங்க முடியாது. இதில் நீயும் சேர்ந்தால் நான் இன்னைக்கு அவ்வளவு தான்!” பயந்தவன் போல் அலறினான் பிரசன்னா.

“நீ கவலைப்படாதே டா பிரசன்னா. நாங்க பார்த்துக்கிறோம்…” என்று அவனிடம் சொன்ன சஞ்சீவ், யாதவ்வின் புறம் திரும்பி, “தம்பி, இது ஒன்லி நண்பர்ஸ் நக்கல்ஸ் மட்டும் தான் அலோவ்ட். தம்பிக்கு எல்லாம் தடா போட்டாச்சு. போ! போய் மாப்பிள்ளை வீட்டுக்காரனா லட்சணமா கல்யாண வேலையைப் பார். மாப்பிள்ளையை நாங்க பார்த்துக்கிறோம்…” என்றான்.

“அண்ணா, இதெல்லாம் டூ மச்!” யாதவ் காலை உதைத்தவன், வெளியே கேட்ட ஆரவாரமான சப்தத்தில் முகம் மலர்ந்து “அண்ணா, அண்ணி வந்தாச்சுப் போல…” என்றான் பிரசன்னாவிடம்.

அதில் பிரசன்னாவின் முகம் பிரகாசமாக ஜொலித்தது.

“ஹேய்! வா… வா பிரசன்னா! நாமளும் போய்ப் பொண்ணை வரவேற்கலாம்…” என்று ஆர்ப்பாட்டமாக நண்பனை அழைத்தான் சஞ்சீவ்.

“டேய்! உங்க கலாட்டாவை எல்லாம் என்னோட நிறுத்திக்கோங்க. என் பொண்டாட்டிக்கிட்ட வேண்டாம். இப்பயே சொல்லிட்டேன்…” என்று உஷாராகச் சொன்னான் பிரசன்னா.

“ஓய்! நாளைக்கு நீ தாலிக் கட்டிய பிறகு தான் உனக்குப் பொண்டாட்டி. அதுக்குள்ள இப்பயே சப்போர்ட்டா?” சஞ்சீவ் கேட்க,

“அட! நீங்க வேறண்ணா. பொண்ணு பார்க்கப் போன அன்னைக்கே பொண்டாட்டினு தான் சொன்னார் அண்ணா…” என்று கனகச்சிதமாகப் போட்டுக் கொடுத்தான் யாதவ்.

“ஹேய்! இது வேறயா? அப்போ பொண்ணு பார்த்ததுமே ப்ளாட்னு சொல்லு…” என்று கிண்டல் செய்தான் விக்னேஷ்.

“டேய்! அப்புறம் நம்ம மாப்பிள்ளையைக் கிண்டல் பண்ணலாம். இப்போ பொண்ணைப் பார்க்கப் போவோம் வாங்க…” என்று அனைவரையும் அழைத்தான் சஞ்சீவ்.

“நீங்க போங்கடா நான் அப்புறம் வர்றேன்…” என்று அவர்களை அனுப்பப் பார்த்தான் பிரசன்னா.

“அதெல்லாம் முடியாது. நீயும் வா! உன்னை வச்சு தானே நாங்க அடுத்தக் கலாட்டாவை ஃபிக்ஸ் பண்ணிருக்கோம்…” என்றான் இன்னொரு நண்பன் ராம்.

“டேய்! சொன்னா கேளுங்க. வெளியே எல்லாரும் பார்ப்பாங்க. வேண்டாம்…” என்றான் பிரசன்னா.

“இரண்டு நாளைக்கு எல்லாரும் உங்களைத் தான் பார்ப்பாங்க. அதில் இருந்து தப்பிக்க முடியாது. நீ வா! பெருசா ஒன்னும் செய்ய மாட்டோம். எல்லாரும் ரசிக்கிறது போலத் தான். இது எல்லாம் ஸ்வீட் மெமரிஸ்ல நினைச்சுப் பார்த்து நீயே சந்தோஷப்படுவ. அதனால் வேற எதுவும் யோசிக்காம வா!” என்றான் சஞ்சீவ்.

லேசாகத் தயக்கம் இருந்தாலும் வசுந்தராவைப் பார்க்கும் ஆர்வம் உந்தித் தள்ள, நண்பர்களுடன் சென்றான் பிரசன்னா.

காரில் இருந்து இறங்கி மேளதாளத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் வசுந்தரா. அவளின் கையில் குத்துவிளக்கு இருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தவள், லேசாகத் தலையைக் குனிந்திருந்தாள்.

அவளின் அருகில் ஒரு பக்கம் தீபா வர, இன்னொரு பக்கம் காஞ்சனா வந்தாள். மற்ற சொந்தங்கள் எல்லாம் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

பதினொன்று வகையான ஆரத்தித் தட்டுகள் புது விதமாக வடிவமைத்துப் பிரசன்னாவின் நெருங்கிய உறவுப் பெண்கள் ஆரத்தி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலில் நாத்தனார் முறைக்குத் தீபா முன்னே வந்து ஆரத்திச் சுற்ற, அதன் பிறகு மற்ற பெண்கள் ஆரத்தி எடுக்க ஆரம்பித்தனர்.

அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளி நண்பர்களுடன் நின்றிருந்த பிரசன்னா, வசுந்தராவைப் பார்வையால் காதலுடன் வருடினான்.

அன்றைக்கு மருத்துவமனையில் பார்த்த பிறகு அவளை இன்று தான் பார்க்கிறான். அன்று இரவு பேசிய பிறகு அவளுடன் பேச நேரம் இல்லாமல் போனது.

வசுந்தராவும் அதன் பிறகு அவனை அழைக்காமல் போக, அலைபேசி உரையாடல் அவர்களுக்குள் நடந்து கொள்ளவில்லை.

அன்று மருத்துவமனையில் அவள் செய்து கொண்ட பரிசோதனையை நினைத்து வருத்தம் இருந்தாலும், முடிந்த விஷயத்தை மேலும், மேலும் பேசிப் பெரிதுபடுத்த விரும்பாமல் அத்தோடு அவ்விஷயத்தை விட்டிருந்தான்.

மறுநாள் செவிலி கொண்டு வந்து கொடுத்த பரிசோதனையின் முடிவுகள் இன்னும் அவனிடம் தான் இருந்தன. ஆனால் அவன் அதைப் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை.

இப்போது இலகுவாக ஒப்பனை செய்திருந்தாலும், அழகுப் பதுமையாக ஜொலித்த தன் நாளைய மணவாட்டியைக் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரசன்னா.

அவனின் பார்வையைப் பார்த்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

ஆரத்தி எடுத்து முடித்ததும் பெண்ணை உள்ளே அழைத்து வர, பிரசன்னாவின் நண்பர்கள் அவனின் தோளில் இடித்துக் கவனத்தைக் கலைத்தனர்.

“என்னடா?” வசுந்தராவிடம் இருந்து பார்வையை விலக்காமல் கேட்டான்.

“இந்தா, இதைப் பிடி!” என்றான் சஞ்சீவ்.

அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே “என்னது?” என்று கேட்டான்.

“நல்லா திரும்பிப் பார்! என்னன்னு தெரியும்…” என்று ராம் சொல்ல, ‘வசுந்தராவைப் பார்க்க விடாமல் தொந்தரவு செய்கின்றார்களே!’ என்ற கடுப்பு தோன்ற, சலிப்புடன் திரும்பி நண்பர்களைப் பார்த்தான்.

அவனின் முன் ஒரு ரோஜாவை நீட்டிக் கொண்டு நின்றிருந்தான் சஞ்சீவ்.

“எதுக்குடா ரோஸ் கொடுக்குற?” புரியாமல் கேட்டான்.

“இந்த ரோஸ் உனக்கு இல்லை. சிஸ்டருக்கு…”

“என்ன தாராவுக்கா? என்னடா சொல்ற?”

“அட! சிஸ்டருக்கு அதுக்குள்ள ஸ்பெஷல் பேரு வச்சாச்சா?
ரொம்ப வேகம் தான். இந்தா அதே வேகத்தோட போய்ச் சிஸ்டர் ரூமுக்குள்ள போறதுக்குள்ள இந்த ரோஸை அவங்களுக்குக் கொடுத்து ஃபாரின் ஸ்டைலில் ப்ரொபோஸ் பண்ணு…” என்றான்.

“டேய்! என்ன விளையாடுறீங்களா? இத்தனை பேர் முன்னாடி எப்படி ப்ரொபோஸ் பண்ண முடியும்? இந்தக் கலாட்டா எல்லாம் வேண்டாம்…” வேகமாக மெல்லிய குரலில் அலறினான் பிரசன்னா.

“எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீ ப்ரொபோஸ் பண்ற! அவ்வளவுதான்!” என்று நண்பர்கள் எல்லோரும் கோரசாகச் சொன்னார்கள்.

“கத்தாதீங்கடா!”

“கத்தக்கூடாதுனா போய் ப்ரொபோஸ் பண்ணு. சீக்கிரம் போ! சிஸ்டர் ரூம் பக்கத்தில் போய்ட்டாங்க பார்…” என்று விரட்டினான் சஞ்சீவ்.

வேறு வழியில்லாதவன் போல் ரோஜாவை வாங்கிக் கொண்டு நடையை எட்டிப் போட்டு வசுந்தராவின் முன் போய் நின்றான்.

ஏற்கனவே பெண்ணின் மீது அனைவரின் பார்வையும் இருக்க, அதனுடன் மாப்பிள்ளையும் பெண் முன் வந்து நிற்க, இப்போது அங்கிருந்த அனைவரின் பார்வைகளும் இருவரின் மீதும் சுவாரசியமாகப் படிந்தன.

பிரசன்னா வழியில் வந்து நிற்கவும் லேசாகத் தலைக் குனிந்து நடந்து கொண்டிருந்த வசுந்தரா ‘யார் அது வழி மறைப்பது?’ என்று விழிகளை மலர்த்திப் பார்த்தாள்.

எதிரில் நின்றவனைக் கண்டு வியந்தவள் ‘ஏன்?’ என்பது போல் விழிகளை விரிக்க, அவளின் அருகில் இருந்த தீபாவோ, “என்ன அண்ணா?” என்று விசாரித்தாள்.

தங்கைக்குப் பதில் சொல்லாமல் வசுந்தராவைப் புன்னகையுடன் பார்த்தவன், தன் கையில் வைத்திருந்த ரோஜாவை நீட்டி, “வெல்கம் தாரா…” என்றான்.

“ஹேய்! செல்லாது… செல்லாது… ப்ரொபோஸ் பண்ணு…” பிரசன்னாவை விட்டுச் சற்றுத் தள்ளி நின்றிருந்த அவனின் நண்பர்கள் கத்த, பெண்கள் சிரிக்க, அங்கிருந்த பெரியவர்கள் சிறியவர்களின் கலாட்டாவைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அதெல்லாம் முடியாது போங்கடா…” என்ற பிரசன்னா, தன்னையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவிடம் ரோஜாவை வாங்கும் படி ஜாடை காட்டினான்.

“அண்ணா, கலக்குற போ…” என்று தீபா கிண்டல் அடித்தாள்.

இப்படி ஒரு கலாட்டாவை எதிர்பார்க்காத வசுந்தரா சற்றுத் தடுமாறினாலும், அனைவரின் பார்வையும் இப்போது தன் மீதே இருப்பதை உணர்ந்து இரண்டு கைகளாலும் பிடித்திருந்த குத்துவிளக்கை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையினால் பிரசன்னா கொடுத்த ரோஜாவை வாங்கினாள்.

மணமகன் ரோஜாவைக் கொடுப்பதும், மணப்பெண் அதை வாங்கியதும், புகைப்படக்கருவிக்குள் நுழைந்து அழகான புகைப்படமானது.

வசுந்தரா ரோஜாவை வாங்கியதும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பிரசன்னா.

“டேய்! உன்னை ப்ரொபோஸ் பண்ண சொன்னா வெல்கம் பண்ணிட்டு வர்ற…” நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள, “என்னை உங்க ஆட்டத்தில் சேர்த்துக்கலை இல்ல. அதான் ஊத்திக்கிச்சு…” யாதவ் நக்கலாகச் சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றான்.

“இங்க பார் பொடிப் பயல் எல்லாம் கேலி பண்றான்…” சஞ்சீவ் கோபம் போலச் சொல்ல, “விடுங்கடா… விடுங்கடா பார்த்துக்கலாம்…” சிரித்தபடி நண்பர்களைச் சமாளித்தான் பிரசன்னா.

“இன்னும் என்னடா பார்க்கப் போற? அதான் எங்க கலாட்டாவை உடைச்சுட்டியே…” சலித்துக் கொண்டான் விக்னேஷ்.

“பொறுமையா இருங்க டா…” அலட்டாமல் சொல்லிவிட்டு மணமகன் அறைக்குள் சென்றான் பிரசன்னா.

அவன் பொறுமையாக இருக்கச் சொன்னதின் காரணம் சற்று நேரத்திலேயே நண்பர்களுக்குத் தெரிய வந்தது.

மேடையில் உறவுகள் சூழ இரண்டு வீட்டுப் பெரியவர்களும் தட்டு மாற்றிக் கொண்டனர்.

பின்பு மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து நிச்சயதார்த்தப் புடவையைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு சென்றாள் வசுந்தரா.

சேலையை மாற்றி அலங்கரித்து வசுந்தராவை மேடைக்கு அழைத்து வர, பிரசன்னாவும் மேடைக்கு அழைக்கப்பட்டான்.

இருவரின் கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரம் வழங்கப்பட்டது.

மோதிரத்தைக் கையில் வாங்கிய வசுந்தரா பதுமையென உதட்டில் செயற்கையாக ஒட்ட வைத்த புன்னகையுடன் நின்றிருந்தாள்.

பிரசன்னா மோதிரத்தை வாங்கி, வசுந்தராவைப் பார்த்து மலர்ந்த சிரிப்பைச் சிந்தி விட்டு, யாரும் எதிர்பாரா வண்ணம் சட்டென்று அவளின் முன் ஒரு காலை மடக்கி மண்டியிட்டவன் அவளின் கை விரலைப் பற்றி மோதிரத்தை அணிவித்து, அவ்விரலில் மென்மையாக இதழ் பதித்து நிமிர்ந்து அவளின் முகம் பார்த்து “ஐ லவ் யூ தாரா!” என்றான்.

நிமிடத்தில் அனைத்தும் நடந்து விட, இளைஞர் பட்டாளமும், அவனின் நண்பர்களும் “ஹேய்… ஓ…ஹோய்…” என்று ஆரவாரமாகக் கத்தினார்கள்.

அவர்களின் சப்தத்தில் அந்த அரங்கமே அதிர்ந்தது போல் இருந்தது.

உறவினர்கள் ‘ஆ!’ என்று பார்த்துக் கொண்டிருக்க, காஞ்சனாவின் கணவனும், தீபாவின் கணவனும் ‘கில்லாடி தான்!’ என்று நினைக்க, தீபாவும், யாதவ்வும் ‘நம்ம அண்ணனா இது?’ என்று ஆச்சரியமாக விழிகளை விரிக்க, பிரசன்னாவின் பெற்றோர் ‘அட மகனே!’ என்று பார்க்க, காஞ்சனா ‘ஆஹா!’ என்று வாயைப் பிளந்த படி நிற்க, வசுந்தராவின் பெற்றோர் மாப்பிள்ளையின் செயலை எதிர்பாராமல் சந்தோஷத்துடன் பார்க்க என்று ஆளாளுக்கு ஒரு பாவனைப் பார்த்து நின்றார்கள்.

அனைவரும் அவ்வாறு இருக்க, பிரசன்னாவின் செயலுக்கு உரிமைக்காரியோ அனைவரின் உணர்வுகளையும் உள்வாங்கியவள் போல் நின்றிருந்தாள்.

முதலில் அதிர்ச்சி, ஆச்சரியம், மற்றவர்களின் ஆரவாரத்தால் உண்டான வெட்கம், என்ன இது என்ற தவிப்பு, வீட்டுப் பெரியவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சங்கடம் என்று விதவிதமாகத் தோன்றிய உணர்வுகள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவளின் மனதில் இறுதியாக வந்து அமர்ந்து கொண்டது குற்றவுணர்வு மட்டுமே!