என்னுள் யாவும் நீயாக! – 8

அத்தியாயம் – 8

“நான் சொல்லிப் பார்த்து விட்டேன் டாக்டர். அவங்க கேட்க மாட்டிங்கிறாங்க. நீங்க விர்ஜினிட்டி டெஸ்ட் (கன்னித்தன்மை பரிசோதனை) எல்லாம் எடுக்கச் சொல்லலைனு சொல்லியும் பிடிவாதமா இருக்காங்க…” என்று செவிலி அந்தப் பக்கம் இருந்து சொன்னச் செய்தியில் உச்சக்கட்ட அதிர்ச்சியை உள் வாங்கினான் பிரசன்னா.

உடல் நலனில் அக்கறை கொண்ட மருத்துவன் அவன்!

மருத்துவம் படிக்க ஆரம்பித்ததில் இருந்து, தன்னுடைய உடல் நலனில் மட்டும் இல்லாமல் தன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நலனிலும் மிகுந்த அக்கறை செலுத்துவான்.

தாய், தந்தையை அடிக்கடி செக்கப் செய்து கொள்ள வைப்பது அவன் வழமையாகக் கடைப்பிடித்து வரும் பழக்கம்.

தங்கை, தம்பி மட்டுமில்லாது, தங்கையின் கணவனையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை முழுச் செக்கப் செய்து கொள்ளச் செய்வான்.

வியாதி வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று இல்லாமல் ‘வருமுன் காப்போம்’ என்ற கொள்கை கொண்டவன்.

அதனால் தான் பரிசோதனை செய்து தன் குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளச் செய்வான்.

இப்போது வசுந்தராவும் தன் குடும்பத்துடன் வரப் போகின்றாள் என்று தான் அவளின் நலனிலும் அக்கறை கொண்டு மாஸ்டர் செக்கப் செய்து கொள்ளச் சொன்னான்.

ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, ஈசிஜி, உடல்உறுப்புகளின் இயக்கம் எவ்வாறு உள்ளது என்று பார்க்கும் பரிசோதனை தான் அது.

தன்னிடம் வரும் நோயாளிகளுக்கே அந்தப் பரிசோதனை செய்து கொள்ளப் பரிந்துரை செய்பவன் அவன்.

அப்படிப் பரிசோதனை செய்யும் போது ஏதாவது உடல் பிரச்சனை இருந்தால் அதை அப்போதே கண்டுபிடித்துச் சரி செய்துவிடலாம் என்பது அவனின் எண்ணம்.

அப்படித்தான் வசுந்தராவையும் பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னானே தவிர, அவள் கன்னிப்பெண் தானா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவனின் கனவில் கூட நினைத்தது இல்லை.

ஆனால் இப்போது தோன்றியது அவளைத் திருமணத்திற்கு முன்னால் தன் வழக்கமான பரிசோதனையைச் செய்யச் சொன்னது தவறு என்று!

தான் ஒன்று நினைத்துச் சொல்ல, அதை வசுந்தரா வேறு விதமாகப் புரிந்து கொண்டாளோ என்று நினைத்தவனுக்குப் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

“நான் இங்கே வர சொன்னேன்னு வசுந்தராவைக் கூட்டிட்டு வாங்க சிஸ்டர்…” என்று குறையாத பதட்டத்துடன் சொன்னான்.

“அவங்க டாக்டர்கிட்ட பேசும் போது தான் எனக்கே எதுக்கு அந்த டாக்டர்கிட்ட போகணும்னு சொன்னாங்கனு தெரியும் டாக்டர். அப்பவும் நான் அங்கே அவங்ககிட்ட மெதுவா பேசிக் கூப்பிட்டுக் கொண்டு வர ட்ரை பண்ணினேன். ஆனா என்னைப் பேசவிடாம செய்துட்டாங்க. இப்போ டெஸ்டுக்கு உள்ளே போய்ட்டாங்க டாக்டர். ஏற்கனவே டாக்டரோட அசிஸ்டெண்ட் சிஸ்டர் உள்ளே இருப்பதால் என்னை வெளியே வெயிட் பண்ண சொல்லிட்டாங்க. நான் இப்போ வெளியே நிற்கிறேன்…” என்று தயக்கத்துடன் செவிலி சொல்ல,

பிரசன்னாவிற்கு ‘அய்யோ!’ என்று இருந்தது.

எதிரில் நோயாளியை வைத்துக் கொண்டு அதற்கு மேலும் அவனால் செவிலியிடம் விரிவாகப் பேசவும் முடியவில்லை.

“சரி, நீங்க வைங்க. நான் வசுந்தரா போனில் கூப்பிட்டுப் பார்க்கிறேன்…” என்று தொடர்பைத் துண்டித்தவன், அதே வேகத்தில் வசுந்தரா எண்ணிற்கு அழைத்தான்.

அவளோ அங்கே கைபேசியை ஊமையாக்கிப் (சைலண்டில்) போட்டிருந்தாள்.

மணி அடித்தும் அவள் எடுக்கவில்லை என்றதும் கைபேசி ஊமையாக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டவனுக்கு மேலும் தான் பதட்டம் வந்தது.

விஷயம் கை மீறிப் போய் விட்டதைப் போல் உணர்ந்தான். பேசாமல் நேரிலேயே சென்று விடுவோமா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவசரமாக உள்ளே வந்த ஒரு செவிலி, “டாக்டர் ஒரு எமர்ஜென்சி. ஹார்ட் அட்டாக் போலத் தெரியுது…” என்று வந்து சொல்ல, துரிதமாகச் செயல்பட்டான்.

தான் பார்த்துக் கொண்டிருந்த நோயாளியைப் பார்த்து முடித்து விட்டதால் அவரை அனுப்பி விட்டு, விரைந்து அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் சென்றான்.

அந்த அவசரத்திலும் வசுந்தரா மனதில் வந்து போக, நடந்து கொண்டே மீண்டும் அந்தச் செவிலிக்கு அழைத்தவன், “வசுந்தரா வெளியே வந்ததும் வீட்டுக்குப் போகச் சொன்னேன்னு சொல்லுங்க. அப்புறமா நான் அவங்ககிட்ட பேசுறேன்னு சொல்லி அனுப்பி வச்சுருங்க. மீதி எந்த டெஸ்ட் இருந்தாலும் இனி எடுக்க வேண்டாம்…” என்று வேகமாக விஷயத்தைச் சொல்லி முடிக்கும் போது அவசரச் சிகிச்சைப் பிரிவு வர, தன் கைபேசியை அணைத்துப் போட்டான்.

அதன் பிறகு பிரசன்னாவிற்கு நேரம் அவன் கையில் இல்லை. அன்று முழுவதும் மாற்றி மாற்றி ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்க, இரவு பத்து மணி போல் தான் வசுந்தராவிடம் பேச முடிந்தது.

அவள் அப்போதுதான் படுக்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

பிரசன்னாவின் பெயரைப் பார்த்ததும் நிதானமாக அழைப்பை ஏற்க, “ஏன் அப்படிப் பண்ணின தாரா?” என்ற கேள்வி வேகமாகக் காதில் வந்து விழுந்தது.

அவனின் நேரடிக் கேள்வியில் ஒரு நொடி மௌனம் சாதிக்க, “சொல்லு தாரா…” அழுத்தமாகக் கேட்டு அவளின் மௌனத்தைக் கலைத்தான்.

“நீங்க ஏன் அப்படிப் பண்ணுனீங்க?” என்று பதிலுக்குக் கேட்டாள்.

“எப்படி?” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவனின் எப்படிக்கு உடனே பதில் சொல்லாமல் மீண்டும் அவள் மௌனம் சாதிக்க, “நான் பொறுமையானவன் தான் தாரா. ஆனா ரொம்பப் பொறுமையானவன் இல்லை. ஏற்கனவே காலையில் நீ செய்து வச்ச வேலையில் ரொம்ப டென்ஷனா இருக்கேன். மேலும் என் டென்ஷனை ஏத்தாதே!” என்றான் பொறுமை அற்றக் குரலில்.

“நான் உன்னை நார்மல் செக்கப் தான் பண்ணிக்கச் சொன்னேன்னு உனக்குத் தெரியுமா? தெரியாதா?” அவள் பதில் சொல்லும் முன் அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

“தெரியும்…” என்று இதற்கு உடனே பதில் சொன்னாள்.

“தெரிஞ்சும் ஏன் விர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்தாய்? எனக்கு உடனே பதில் வேணும்…”

“நீங்க ஏன் அப்படி ஒரு டெஸ்ட் எடுத்தீங்கன்னு சொல்லுங்க. நானும் இதுக்குப் பதில் சொல்றேன்…” என்ற வசுந்தரா சிறிதும் அவனளவு படபடப்பு இல்லாமல் நிதானமாகவே பேசினாள்.

“நீ எந்த டெஸ்ட்டை சொல்ற?”

“மேரேஜ் லைஃப்பிற்கு ஏற்றவர் தானான்னு ஏன் டெஸ்ட் எடுத்தீங்க? அது நார்மல் செக்கப்பில் வராத ஒன்னு தானே?” முதல் கேள்வியை மென்று முழுங்கித் தயங்கிக் கொண்டே கேட்டவள், இரண்டாவது கேள்வியைத் தயங்காமல் கேட்டாள்.

அவளின் கேள்வியில் இப்போது மௌனம் சாதிப்பது அவனின் முறை ஆனது.

அவனைப் போல் அவசரப்படாமல் அவனின் பதிலுக்குப் பொறுமையாகக் காத்திருந்தாள் வசுந்தரா.

அந்தப் பக்கம் அவன் லேசாகத் தொண்டையைச் செருமிக் கொள்ளும் சப்தம் கேட்டது.

“இன்றைய சூழ்நிலையில் அந்த டெஸ்ட் அவசியமான ஒன்னு தாரா…” என்றான் அமைதியான குரலில்.

“ஏன்?”

“நான் ஒரு விஷயம் முன்னாடியே சொல்லிடுறேன் தாரா. நான் ஒரு டாக்டர் என்பதால் சில டைம் டாக்டராகத் தான் சிந்திப்பேன். அதன் விளைவில் தான் என் வருங்கால மனைவியும் ஃபுல் பாடி செக்கப் செய்து கொள்வது தப்பில்லைன்னு நினைச்சேன். எங்க வீட்டில் சரண் மாப்பிள்ளை வரை ரெகுலரா செய்து கொள்கின்ற டெஸ்ட் அது. அதைத் தாண்டி உன் செக்கப் இருக்கணும்னு நான் நினைச்சது இல்லை.

நான் அந்த டெஸ்ட் எடுத்தேனா, அதுக்குக் காரணம் இப்போ உள்ள சூழ்நிலை. சர்வசாதாரணமா ஆண்கள் மீது அந்த மாதிரி புகார் வந்து அவங்க டிவோர்ஸ் வரை போவதைப் பார்த்திருக்கேன். அப்படி டிவோர்ஸ் போகும் போது கோர்ட்டே அந்த ஜெண்ட்ஸை டெஸ்ட் எடுத்துட்டு வரச் சொல்லுது. அப்படி எங்க ஹாஸ்பிட்டலில் வந்து எடுத்துட்டும் போறாங்க.

அதனால் என் கல்யாணம்னு வரும் போது நான் முன் கூட்டியே அந்த டெஸ்ட் எடுக்கணும்னு முடிவு பண்ணிருந்தேன். என் முடிவு படி பண்ணவும் செய்தேன். அவ்வளவுதான்! அப்படி எடுத்துக்கிறது எனக்குத் தப்பாவும் தெரியலை…” என்று நீண்ட விளக்கமாகவே சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டு அமைதியாக இருந்தவள், “நீங்க டெஸ்ட் பண்ணியது தப்பு இல்லைனா, நான் பண்ணியதும் தப்பு இல்லை தானே? நீங்க உங்களை நிரூபிக்க முயன்றீங்க. நானும் என்னை நிரூபிக்க முயன்றேன்…” என்றாள் பொறுமையாக.

“ம்ப்ச்… நீ நிரூபிக்க முயன்றதில் அர்த்தமே மாறிப் போகுதே, அதை நீ கவனிச்சீயா இல்லையா தாரா?” சலிப்புடன் கேட்டான்.

“என்ன அர்த்தம் மாறுது?” என்றவளுக்கு அவன் சொல்ல வந்தது புரியவில்லை.

அவன் முறையாகப் பரிசோதனை செய்து தன்னை நிரூபிக்க முயன்றது போல், நானும் பதிலுக்குச் செய்தேன் என்ற நிலைப்பாடு தான் அவளுக்கு இருந்தது.

அதைத் தாண்டி அவள் சிந்திக்கவில்லை. அவள் பரிசோதனை செய்து கொண்டதற்கு அவளைப் பொறுத்தவரை இன்னொரு முக்கியக் காரணம் இருந்தது.

அதைப்பற்றி ஏனோ இப்போது அவளால் பேச முடியவில்லை.

“நீ சுத்தமான பொண்ணா இல்லையானு நான் சந்தேகப்படுவதா அர்த்தம் வருது…” என்றான் பட்டென்று.

“ஓ!” என்றவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று விளங்கவில்லை.

“அது மட்டுமில்லை. நான் வேலை செய்ற இடத்தில் என் கேரக்டருக்குக் கேள்விகுறியை உருவாக்கும் வேலையைச் செய்துட்டு வந்துருக்க…” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.

“என்ன சொல்றீங்க?” அவ்வளவு நேரம் இருந்த நிதானம் மறைந்து அவளிடம் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

“உனக்கு டெஸ்ட் எடுத்த டாக்டரும், நான் உன் கூட அனுப்பிய நர்ஸும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? டாக்டர் பிரசன்னா தான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கன்னிப் பெண்ணா இல்லையானு தெரிஞ்சுக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டார்னு என்னைத் தவறா நினைக்க மாட்டாங்களா?”

அவன் சொல்லவும் தான் அவளின் தவறு புரிந்தது. தான் பதிலுக்குப் பதில் செய்கின்றோம் என்று நன்றாகவே சொதப்பி விட்டது உறைத்தது.

ஆனாலும் ஒன்று தோன்ற, “அந்த நர்ஸுக்கு நீங்க அந்த டெஸ்ட் எடுக்கச் சொல்லலைனு தெரியும் தானே? அப்புறம் எப்படித் தப்பா நினைப்பாங்க? டாக்டர்கிட்டயும் நான் உங்களைப் பத்தி ஒன்னும் சொல்லலை. நானா வந்ததாகத் தான் அவங்க கிட்ட சொன்னேன்…” என்றாள் அவனுக்குத் தலைகுனிவை வர வைக்கும் வேலையைத் தான் செய்யவில்லை என்று விளக்கி விடும் வேகத்தில்.

“ம்ப்ச்… நர்ஸை விடு. அந்த டாக்டரை நான் கல்யாணத்துக்குக் கூப்பிடுவேன். அவங்களும் வருவாங்க. நம்ம கல்யாணத்தில் உன்னையும், என்னையும் சேர்த்து வச்சு தான் பார்ப்பாங்க…” சிறுபிள்ளைக்கு விளக்குவது போல் சொன்னான்.

அவன் கொடுத்த விளக்கம் உச்சந்தலை வரை சுரீர் என்று ஏற, அப்போது தான், தான் செய்த தவறின் வீரியம் புரிந்தது.

அவனிடம் மேலும் என்ன பேசுவது என்று கூடப் புரியாமல் உதட்டைக் கடித்து மௌனத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.

அவனும் அந்தப் பக்கம் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டான்.

சில நொடிகளில் தானே அந்த மௌனத்தைக் கலைந்தவள், “ஸாரி…” என்றாள் கலங்கிய குரலில்.

அவளின் கலங்கிய குரல் அவனை இளக வைக்க, “பரவாயில்ல விடு…” என்றான்.

அவனால் வேறு என்ன சொல்ல முடியும்? நடந்ததை மாற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் போய் விளக்கம் சொல்லிக் கொண்டும் இருக்க முடியாது.

ஆனால் இனி நடப்பதைக் கவனத்தில் கொள்ளலாம் என்று நினைத்தவன், “இனி நீ செய்ற ஒவ்வொரு செயலும் என்னையும் சாரும் தாரா. அதே போல் தான் நான் என்ன செய்தாலும் அது உன்னையும் சாரும். நீயும், நானும் இனி வேறில்லை. அதை மனதில் வச்சுக்கிட்டு எதுவும் செய்!” என்றான்.

‘நீயும், நானும் வேறில்லை!’ என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டவள், ‘அப்படியா?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ளவும் செய்தாள்.

அவள் பேசவில்லை என்றதும், “தாரா…” என்று அழைத்து அவளை நடப்பிற்கு இழுத்து வந்தான்.

“ம்ம்ம்… ஸாரி…” என்றாள் மீண்டும்.

அப்போது தான் பிரசன்னாவிற்கு ஒன்று உறைத்தது.

அவள் அவனை ஒரு முறை கூடப் பெயர் சொல்லியும் அழைக்கவில்லை. ஏங்க, என்னங்க என்பது போலும் பேசவில்லை.

மொட்டையாக, யாரோ மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் பேசினாள்.

‘ஏன்?’ என்ற கேள்விப் பிரசன்னாவின் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.

“ஸாரி, நான் இப்படி யோசிக்கலை…” அவனின் மௌனத்தால் வருந்தியவள் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.

அதை உணர்ந்து சிந்தனையில் இருந்து வெளியே வந்தவன், “விட்டுவிடு தாரா! நடந்த எதுவும் பேக்ல(back) போயிடாது…” என்றான் முடிவாக.

‘நடந்தவை அனைத்தும் பின்னால் போயிருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்த நிமிடம் வசுந்தராவிற்குத் தோன்றியது.

அந்த எண்ணம் பரிசோதனைக்காக மட்டும் தோன்றவில்லை என்பது அவள் அறிந்த உண்மை!

“ஓகே தாரா, இன்னைக்குக் ஹெவி வொர்க். மார்னிங் ஒரு பைபாஸ் சர்ஜரி வேற இருக்கு. இப்போ தூங்கினால் தான் காலையில் ஃபிரஸா இருக்கும். பை அன்ட் குட் நைட்…” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

அவளைப் பற்றித் தோன்றிய ‘ஏன்?’ என்ற கேள்வியைப் பற்றி அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.

காலையில் அறுவைசிகிச்சையை வைத்துக் கொண்டு வேறு சிந்தனையில் மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவன், நித்திரையைத் தழுவ போனான்.

இனி தாரா அவனுடைவள்! அவளைப் பற்றி மெல்ல மெல்ல தான் அறிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தாலும் அவன் வசுந்தரா விஷயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை.

அழைப்பு மட்டும் இல்லை அவன் இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ளவில்லை.

அவளிடம் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உரிமை இருந்தது.

ஆனால் அவள் பேச்சில் கடமை மட்டுமே இருந்தது.

அவளின் முன்னால் காதல் அவளைக் கடமையை மட்டுமே ஆற்ற வைத்துக் கொண்டிருந்ததை உணராமல் போனான் அந்த மருத்துவன்.

அதை அவன் உணரும் நாளும் அதிவேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் இப்போது நித்திரையின் வசத்தில் ஆட்பட்டிருந்தான் பிரசன்னா.