என்னுள் யாவும் நீயாக! – 7

அத்தியாயம் – 7

அந்தக் கோப்பில் மருத்துவமனையில் கொடுத்த உடல் நல பரிசோதனை முடிவுகள் இருந்தன.

‘யாருடையது?’ என்று பெயரைப் பார்க்க, அதில் பிரசன்னாவின் பெயர் இருக்க, “உடம்புக்கு முடியலையா?” என்று இயல்பாகத் தோன்றியப் பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே ஃபைலை பார்த்தாள்.

“நீயே ஃபுல்லா படிச்சு பார் தாரா…” என்றான்.

அவள் படித்துப் பார்க்க, அதில் அவனின் ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது என்பது முதல் எய்ட்ஸ் சோதனை வரை, உடல் ரீதியான அனைத்துச் சோதனை அறிக்கையின் முடிவுகளும் இருந்தன.

அதிலும் குறிப்பாக ‘மணவாழ்க்கை நடத்த தகுதியான ஆண்மகன் தானா?’ என்ற சோதனையும் அடங்கியிருக்க, இப்படி ஒரு ரிப்போர்ட்டை கொண்டு வந்து கொடுப்பான் என்று அவள் சிறிதும் நினைத்துப் பார்த்தாள் இல்லை.

“என்ன இதெல்லாம்? எதுக்கு இப்படி எல்லாம் டெஸ்ட் எடுத்துருக்கீங்க? யார் எடுக்கச் சொன்னா?” என்று பதட்டத்துடன் கேள்விகளாக அடுக்கினாள்.

“யாரும் சொல்லலை. நானா தான் எடுத்தேன்…”

“ஏன்?”

“அஸ் எ டாக்டரா மணவாழ்க்கைக்கு ஜாதகம் பொருத்தமாக இருக்கான்னு பார்க்கிறதை விட, இப்படி மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்துக் காட்டுவது நல்லதுன்னு என் எண்ணம். அதான் செய்தேன்…” என்றான் சாதாரணமாக.

“ஓ! அப்போ நானும் மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்துக் காட்டணுமா?”

“ஒரு ஃபுல் மாஸ்டர் செக்கப் எடுத்துக் காட்டினால் கண்டிப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டேன். அதே நேரம் வேணும்னு கட்டாயமும் படுத்த மாட்டேன்…” பெரிதாக அலட்டிக் கொள்ளாமலேயே சொன்னான் பிரசன்னா.

‘இப்படிச் சொன்னால் நான் என்ன செய்யணும்னு அர்த்தம்?’ என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கண்டவன், “உன் விருப்பம் தான் தாரா. உனக்குச் சரின்னு தோன்றினால் செக்கப் செய்துக்கோ. பிடிக்கலைனா விட்டுவிடு…” என்றான் இலகுவாக.

“ஆனா நீங்க எடுத்துக் கொடுத்திருக்கீங்களே? நான் மட்டும் எப்படி விருப்பம் இல்லைனு எடுக்காம இருக்க முடியும்?”

“நான் செய்தேன்னு பதிலுக்கு நீயும் செய்யணும்னு கட்டாயம் எதுவும் இல்லை தாரா. அதே நேரம் நீ எடுத்தா நல்லதுன்னும் சொல்லுவேன்…”

“ஓ! நோ! தெளிவா சொல்லுங்க. எடுக்கட்டுமா? வேண்டாமா?”

“அதை நீயே முடிவு பண்ணு தாரா…” என்றவனை ‘என்ன செய்யலாம்?’ என்பது போல் பார்த்தாள்.

‘உன் விருப்பம் என்று சொல்லிவிட்டு, எடுத்தால் நல்லது என்றும் சொல்லி எடுக்கத் தூண்டுவது போலவும் சொன்னால் நான் என்ன முடிவு எடுப்பதாம்?’ என்று குழம்பித்தான் போனாள்.

“மாஸ்டர் செக்கப் செய்தால் நல்லதுனு ஏன் சொல்றேன்னா, இந்தக் காலத்தில் எப்போ? எப்படி? எந்த மாதிரியான வியாதி வரும்னு யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால் கல்யாணத்துக்காக மட்டுமில்லாம அப்பப்போ நம்ம ஹெல்த்தை செக் பண்ணிக்கிறது நல்லது…” என்று மருத்துவனாகச் சொன்னான்.

‘புரிந்தது’ என்னும் விதமாகத் தலையை அசைத்து விட்டு, மேலும் அவனிடம் எதுவும் பேசாமல் சில நொடிகள் கண்களை மூடி அமர்ந்தவள், “சரி, நான் டெஸ்ட் பண்றேன். நாளைக்கு உங்க ஹாஸ்பிட்டலுக்கே வர்றேன்…” என்று சொல்லிக் கொண்டே கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

அந்தப் பதிலில் அவனின் முகத்தில் மலர்ச்சி வந்தது போல் இருந்தது.

அதைப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவள், “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று கேட்டாள்.

காரை எடுத்தவன் உணவகம் நோக்கி வண்டியைச் செலுத்திக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்து, “கேளு தாரா…” என்றான்.

“ஒருவேளை ரிப்போர்ட்ல எனக்கு ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம்னு வந்தா இந்தக் கல்யாணம் நடக்குமா?” என்று கேட்டாள்.

அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் பூத்தவன், ஸ்டேரிங்கில் இருந்த ஒரு கையை எடுத்து அவளின் மடியில் இருந்த அவள் கையை மென்மையாகப் பற்றினான்.

“ஹே… என்ன செய்றீங்க?” அவனின் செய்கையை எதிர்பார்க்காமல் தன் கையை இழுத்துக் கொள்ளப் பார்த்தாள்.

“ரிலாக்ஸ் தாரா. ஒன்னும் செய்யலை…” என்று இன்னும் வாகாகக் கையைப் பற்றிக் கொண்டவன், தன் கை விரல்களுக்குள் அவளின் விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.

“இந்தக் கையைக் காலமெல்லாம் பிடித்துக் கொண்டே இருக்கணும்னு முடிவு பண்ணிய பிறகு தான் உன்னை நான் பொண்ணு பார்க்கவே வந்தேன் தாரா. அதனால் என்ன காரணம் கொண்டும் இந்தக் கையை நான் விடுவதாக இல்லை. ஒருவேளை ரிப்போர்ட்டில் எதுனாலும் கோளாறுனு வந்தால், அதை எப்படிச் சரி பண்ணலாம்னு பார்ப்பேனே தவிர, கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம்னு யோசிக்க மாட்டேன்…” என்றான்.

தன் விரல்களை நெறித்தபடி இருந்தவனின் கையிலிருந்து தன் கையைப் பிரித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தவள் அவனின் பேச்சில் அசைவற்றுப் போனாள்.

‘அப்படியா?’ என்பது போல் அவளின் கண்கள் அவனின் முகத்தை ஆராய்ந்தன.

“உண்மைதான் தாரா. என்னை நீ நம்பலாம்…” என்றான் உறுதியான குரலில்.

அவனின் பேச்சும், உறுதியான குரலும் வசுந்தராவிற்கு ஆச்சரியத்தைத் தந்தன.

‘பரிசோதனை செய்து கொள்கிறேன்’ என்று சொன்னதும் அவன் முகம் மலர்ந்ததை வைத்து, ‘வெறும் மருத்துவராக மட்டும் சிந்திக்கின்றாரோ?’ என்று நினைத்திருந்தாள்.

ஆனால் மருத்துவராக மட்டுமில்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் சிந்திக்கின்றான் என்பதை அவனின் பதில் எடுத்துக்காட்டியது.

மருத்துவராக மட்டும் என்றால் ‘உனக்கு வைத்தியம் வேண்டுமானால் பார்க்கிறேன்’ என்று மட்டும் சொல்லியிருப்பான்.

ஆனால் அவனோ ‘உன்னைப் பிடித்திருப்பதால் குறையை நிவர்த்திச் செய்யப் பார்ப்பேனே தவிர, குறையைக் கண்டு உன்னை விலக்கி வைக்க மாட்டேன்’ என்று பதில் சொல்லவும் அவனின் உணர்வுகளும் அதில் அடங்கி இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

அதில் தெளிந்தவள் “ஓகே நம்புறேன். கையை விடுங்க…” என்று தன் கையை உருவி கொள்ள முயன்றாள்.

“ஏன் இப்படி அவசரப்படுற தாரா? நான் எப்பவும் பிடிக்கப் போற கை தானே! அதை இப்பவே பிடிச்சா என்ன?” என்று கேட்டவனின் கண்கள் குறும்பில் மின்னின.

அவனின் உதட்டோரம் குறும்புப் புன்னகையும் பூத்திருந்தது.

அதைக் கண்டு சட்டென்று தன் கையைப் பிரித்து இழுத்துக் கொண்டவள் “காலமெல்லாம் பிடிக்கலாம். ஆனா இப்ப இல்ல. கல்யாணத்துக்குப் பிறகு…” என்று வெடுக்கென்று சொல்லி முகத்தை லேசாகத் திருப்பிக் கொண்டவளுக்கும் உதட்டோரம் புன்னகைப் பூத்திருந்தது.

அவளின் வெடுக்கென்ற பதிலில் கோபமோ என்று ஆராய்ச்சியாகப் பார்த்தவனுக்குக் கண்ணாடியின் வழியே தெரிந்த அவள் முகத்தில் புன்னகைத் தெரிய, “ஹா…ஹா…!” என்று வாய் விட்டே சிரித்தான்.

“எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு?” என்று தன் புன்னகையை மறைத்துக் கொண்டு அவனின் புறம் திரும்பிக் கேட்டாள்.

“இல்லை, கல்யாணத்துக்குப் பிறகு வெறும் கையை மட்டுமானு நினைச்சேன்னா, சிரிப்பு வந்துடுச்சு…” குறும்பாகக் கண்களைச் சிமிட்டியபடி சொன்னான்.

அவன் அப்படிப் பேசுவான் என்று எதிர்பார்க்காதவள் சங்கடமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அதைக் கண்டுகொண்டவன் “ஹேய்! சும்மா ஸ்வீட் நத்திங்க்ஸா பேசியதுமா. சோ, டோன்ட் மிஸ்டேக் மீ…” என்றான்.

“அதுவுமில்லாம உன்னைத் தவிர வேற யார்கிட்ட இப்படிப் பேச முடியும்? சொல்லு…” என்று வேறு கேட்டான்.

‘அடப்பாவி! ரொம்பப் பேசுறானே…’ என்பது போல் திருதிருத்துக் கொண்டாள்.

ஆனாலும் தன் குற்றவுணர்வின் அளவு கூடிக்கொண்டே போவது போல் உணர்ந்தாள்.

அவன் கையைப் பிடித்தது பிடிக்காமல் வெடுக்கென்று தான் உண்மையாகவே சொன்னாள்.

ஆனால் அவன் தன் முகத்தை ஆராய்ந்தது போல் இருக்க, உடனே முகத்தில் புன்னகையை வழிய கொண்டு வந்தாள்.

அவளுக்கு இந்தத் திருமணத்தைக் குறித்து இன்னும் மனதிற்குள் தடுமாற்றம் இருந்து கொண்டே தான் இருந்தது.

முழு மனதுடன் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லாததாலோ என்னவோ ஓர் உறுத்தல் மனதின் ஓரம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அந்த உறுத்தலை அவனிடம் வெளிப்படையாகவும் காட்ட முடியாமல் தடுமாறினாள்.

இன்னுமொன்று அவளே ஏனென்று அறியாதது! பிரசன்னாவிடம் பேசும் போது தானாகவே அவளால் சகஜமாகப் பேச முடிந்தது.

ஆனால் அப்படிப் பேசி விட்டு ஏற்கனவே ஒருவனைக் காதலித்து விட்டு எப்படித் தன்னால் இவனிடமும் இப்படிப் பேச முடிகிறது என்று நினைத்துத் தன்னைத் தானே மனதிற்குள் திட்டிக்கொண்டும் இருந்தாள்.

வசுந்தரா பழைய காதலை மறந்து விட்டேன் என்று சொன்னாலும் அது ஒரு வடுவாக அவளின் மனதில் நிலைத்துப் போனது தான் பிரசன்னாவிடம் அவளை அதிகம் அண்டவிடாமல் குற்றவுணர்வு வந்து தடுக்கிறது என்று அவளே அறியாமல் போனாள்.

காதலனை வேண்டுமானால் இப்போது இன்னொருத்தியின் கணவன் என்று ஒதுக்கித் தள்ள முடியும். ஆனால் காதல் உணர்வை அப்படித் தள்ள முடியுமா என்ன?

உணர்வுகளுக்கு உயிர் உள்ள வரை உயிர் உண்டல்லவா!

முதல் காதல் அவளின் உணர்வுகளுடன் கலந்து ஒரு வடுவாக மாறிப் போயிற்று!

அந்த வடுவாக மாறி விட்ட காதல் அவளை இன்னும் சோதிக்கப் போவதை அறியாமல் பெற்றவர்களுக்காகத் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

இப்போதும் அவனின் உரிமையான பேச்சை நினைத்து அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளை மேலும் சங்கடத்தில் ஆழ்த்த விடாமல் உணவகம் வர, முதல் ஆளாக இறங்கிப் பெற்றவர்களிடம் ஓடினாள்.

அவளின் சங்கடத்தை இப்போதும் வெட்கமாக நினைத்துக் கொண்ட பிரசன்னாவும் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே பின்னால் சென்றான்.

மறுநாள் சொன்னது போலவே பிரசன்னா வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் வசுந்தரா.

அவன் ஏற்கனவே எங்கே வர வேண்டும். எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று எல்லா விவரமும் நேற்று இரவு போனில் அழைத்துச் சொல்லியிருந்தான்.

மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தவள் நேராகப் பிரசன்னா அறைக்கு வந்து அங்கிருந்த செவிலியிடம் விவரத்தைச் சொல்ல, “நீங்க வருவீங்கன்னு டாக்டர் சொல்லியிருந்தாங்க மேடம். ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. ஒரு பேஷண்ட் உள்ளே இருக்காங்க. அவங்க போனதும் உள்ளே போகலாம்…” என்றார் அவர்.

காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தக் காத்திருப்பு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

எப்போதும் மருத்துவமனைக்கு வந்தால் ஒரு வித பதட்டம் ஆட்கொண்டிருக்கும்.

டாக்டர் என்ன சொல்வாரோ? என்னாகுமோ? என்று யோசித்துக் கொண்டே தான் இருக்க வேண்டியது இருக்கும்.

ஆனால் இன்றோ அனைத்து பரிசோதனைகளும் செய்யப் போகின்றோம் என்று தெரிந்தும், எந்தப் பதட்டமும் இல்லாமல் வெகு நிதானமாக அமர்ந்திருந்தாள்.

அந்த நிமிடம் பிரசன்னா உடன் இருந்து பார்த்துக் கொள்வான் என்ற திடன் அவள் அறியாமலேயே அவளின் மனதில் குடிபுகுந்தது. ஆனால் அதை அவளே உணரவில்லை. ‘தெரிந்த டாக்டர் இங்கே இருக்கிறார் என்பதால் நிதானமாக இருக்கிறேன் போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு செவிலி அவளை உள்ளே போகச் சொல்ல, எழுந்து உள்ளே சென்றாள்.

அவளைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் “வா தாரா… உட்கார்…” என்று ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக வரவேற்றான்.

வசுந்தராவும் அவனுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு வந்து அமர, அவளின் பின்னால் பார்த்தவன், “உன் கூட யாரும் வரலையா தாரா?” புருவத்தைச் சுருக்கி யோசனையாகக் கேட்டான்.

“யார் வரணும்?” அவள் புரியாமல் கேட்க,

“அத்தை தான். உன் கூடத் துணைக்கு அத்தை வருவாங்கனு நினைச்சேன். தனியா வந்திருக்க?”

“அவங்க ஊரில் இல்லையே. அதான் தனியா வந்தேன்…”

“ஓ! அப்போ நீ இங்கே டெஸ்ட் பண்ணப் போறது அவங்களுக்குத் தெரியாதா?” வீட்டில் சொல்லாமல் வந்திருப்பாளோ என்று நினைத்துக் கேட்டான்.

“இல்ல, தெரியும். நேத்து நீங்க ரிப்போர்ட் கொடுத்ததைச் சொன்னதுமே அப்போ உனக்கும் டெஸ்ட் பண்ணிக் காட்டிருவோம்னு அவங்களே தான் சொன்னாங்க…”

“அப்ப ஏன் கூட வரலை?”

“இரண்டு பேருமே பாண்டிச்சேரிக்கு அக்கா வீட்டுக்குப் பத்திரிகை வைக்கப் போயிருக்காங்க. நைட் தான் வருவாங்க. அம்மா கூட நான் வந்த பிறகு நாளைக்குப் போகலாம்னு தான் சொன்னாங்க. ஆனா நான் தான் உங்க மாப்பிள்ளை பார்த்துப்பாங்க. நான் மட்டும் போயிட்டு வர்றேன்னு சொல்லி, இன்னைக்கே வந்தேன்…”என்று அவள் சொல்லவும் அவனின் முகம் மலர்ந்து போனது.

அவள் சாதாரணமாகத் தான் அதைச் சொன்னாள். ஆனால் அதை அவள் தனக்குக் கொடுத்த முக்கியத்துவமாகப் பிரசன்னா நினைத்துக் கொண்டான்.

கல்பனா ‘தனியாக எப்படிப் போவாய்?’ என்று கவலை கொள்ள, அவரைச் சமாளிக்கவே ‘உங்க மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார்’ என்று சொல்லி வைத்தாள்.

பெண்ணின் மனம் மாப்பிள்ளையின் பக்கம் சாய இதுவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் தான் என்று நினைத்துக் கல்பனாவும் அவள் தனியாகப் போகச் சரி என்றார்.

“ஓகே தாரா… இப்ப ஒரு சிஸ்டர் வருவாங்க. அவங்க கூடப் போய் டெஸ்ட் முடிச்சுட்டு வந்துடு. அவங்களே உன் கூட இருந்து பார்த்துப்பாங்க. எல்லா விவரமும் நான் அவங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். அவங்க வருவதில் உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை தானே?”

“இல்லை, எனக்கு ஒன்னும் இல்ல. வரச் சொல்லுங்க…” என்று சொல்ல, செவிலியை அழைத்து அவருடன் அவளை அனுப்பி வைத்தான்.

அவனுக்கு அடுத்து நோயாளிகள் காத்துக் கொண்டிருந்ததால், அவர்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

ஒருமணி நேரம் கடந்த நிலையில் ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனின் மேஜையில் இருந்த தொலைபேசி அழைத்தது.

அதை எடுத்தவன் அந்தப்பக்கம் வசுந்தராவுடன் சென்ற செவிலி சொன்னச் செய்தியைக் கேட்டு “வாட்! என்ன சொல்றீங்க சிஸ்டர்?”என்று அதிர்ந்தான் பிரசன்னா.