என்னுள் யாவும் நீயாக! – 6

அத்தியாயம் ‌- 6

“ஹாய் தாரா… போன் பண்ணிருந்தியா?” என்று அலைபேசியில் கேட்ட பிரசன்னாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

அவனிடம் தன் முன்னால் காதல் விவகாரத்தைச் சொல்லத்தான் அவனை அழைத்தாள். ஆனால் அந்த நேரத்தில் அவன் போனை எடுக்கவில்லை.

மீண்டும் இப்போது அவன் அழைத்த போது அவள் சொல்லக் கூடிய சூழ்நிலையில் இல்லை.

பெண் பார்த்து விட்டுச் சென்று ஒரு வாரம் ஆகியிருந்த நிலையில் திருமண நாளும் பக்கத்தில் இருப்பதால் திருமண வேலையாகத் தாயும், தந்தையும் வெளியே சென்றிருந்த நேரத்தில் பிரசன்னாவிடம் சொல்லி விடும் முடிவுடன் அழைத்திருந்தாள்.

ஆனால் அப்போது எடுக்காமல் அப்பாவும், அம்மாவும் வீட்டிற்கு வந்த பிறகு இப்போது அழைத்தால் தான் எப்படிச் சொல்வதாம்? என்று நினைத்தவள் மௌனம் சாதித்தாள்.

“என்ன தாரா சைலண்ட் ஆகிட்ட? லைன்ல இருக்கியா?” என்று மீண்டும் பிரசன்னா கேட்க,

“தாரா யார்?” என்று கேட்டாள்.

“இது உன்னோட நம்பர் தானே? நீ வசுந்த…தா…ரா…தானே?” என்று அவள் பெயரை இழுத்துக் கேலியுடன் உச்சரித்துக் காட்டினான்.

தரா, தாரா ஆகிவிட்டதைப் புரிந்து கொண்டவளின் இதழில் மெல்லிய புன்னகை பூத்தது.

“என் பேரு வசுந்தரா தான். வசுந்தாரா இல்லையே?”

“அது எனக்கு நல்லா தெரியுமே…”

“தெரிஞ்சும் ஏன் அப்படிக் கூப்பிடுறீங்க? என்னை யாரும் அப்படிக் கூப்பிட்டதே இல்லை…”

“ஏன் நான் வித்தியாசமா கூப்பிட கூடாதா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டவன், அவளின் பதிலை எதிர்பார்க்காமல், “தன் துணை என்றாலே ஸ்பெஷல் தான் தாரா. ஆனா அதே நேரத்தில் அவங்களுக்காக மட்டும் ஒரு ஸ்பெஷல் பேர் வச்சு கூப்பிடும் போது இன்னும் அன்னியோன்யம் அதிகரிக்கும். இப்போ இந்த நிமிஷம் உன்னைத் தாரான்னு நான் கூப்பிடும் போது நீ ஸ்பெஷலா ஃபீல் பண்றீயா, இல்லையா?” என்று கேட்டான்.

அவனின் அழைப்பின் போது வித்தியாசமாக உணருகின்றாள் தான். அப்படியே உள்ளுக்குள் ஏதோ புகுந்தது போல ஒரு தித்திப்பான உணர்வை அவனின் அழைப்பு அவளுக்குத் தந்து கொண்டிருந்தது.

தான் உணர்ந்ததை அவனுக்கு உணர்த்தும் விதமாக “ம்ம்ம்…” என்று மட்டும் சொன்னவள் மேலும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அவனின் ‘தாரா’ என்ற அழைப்பு வித்தியாசமான உணர்வைத் தோற்றுவித்த அதே நேரத்தில் அவனின் சகஜமான பேச்சு அவளின் உறுத்தலை அதிகமாக்கியும் இருந்தது.

“என்ன தாரா திரும்ப அமைதியாகிட்ட?” மேலும் அவளை அதே சிந்தனையில் சூழல விடாமல் கேட்டான் பிரசன்னா.

“ஒன்னுமில்லை, சும்மா தான். என்ன செய்றீங்க?”

“இப்பத்தான் ஒரு ஆப்ரேஷன் முடிஞ்சு வந்தேன் தாரா. டயர்டா இருந்தது காஃபி குடிச்சு, என்னை நானே ஃப்ரஷ் பண்ணிட்டு இருக்கேன்…”

காஃபி என்றதும் தங்கள் வீட்டில் நடந்தது ஞாபகம் வர, லேசாகச் சிரித்துக் கொண்டவள், “மேலே ஊத்திக்காம கவனமா குடிங்க…” கேலி இழைந்தோடிய குரலில் சொன்னாள்.

“ஹா…ஹா…! எப்பவும் எந்த விஷயத்திலும் கவனமாத்தான் இருப்பேன். ஆனா அன்னைக்கு ஒரு மோகினியைப் பார்த்தேனா? அந்த மோகினி தான் என் கையில் இருந்த காஃபியை மட்டும் இல்லாம, என் மனசையும் நழுவ வச்சிருச்சு…” என்றவன் குரல் கிறக்கமாக ஒலித்தது.

அவனின் பேச்சில் உதட்டைக் கடித்தாள் வசுந்தரா.

நாணிக் கோணாமல் பேசும் பழக்கம் உடையவள் வசுந்தரா. ஆனால் இப்போதோ பிரசன்னாவின் ஒவ்வொரு வார்த்தையும் அவளை வாயடைக்கச் செய்து, ஒருவிதச் சங்கடத்தை உண்டாக்கி கொண்டிருந்தது.

அவளின் இப்போதைய மௌனத்தை வசுந்தராவின் சங்கடமாகக் கணிக்க முடியாததால், அதை வெட்கமாக எடுத்துக் கொண்டவன், “ஹா…ஹா…!” எனச் சப்தமாகச் சிரித்தான்.

அதில் இன்னும் தான் அவளுக்குச் சங்கடம் வந்தது. அதனால் “நா… நான் வச்சுடுறேன்…” என்றாள் தயக்கத்துடன்.

“ஹேய் தாரா… வச்சுடாதே! என்கிட்ட என்னமோ பேசணும்னு தானே போன் போட்ட. என்னமா? என்ன விஷயம்னு சொல்லு…” என்று கனிவான குரலில் கேட்டான்.

அவனின் அந்தக் குரலில் தன் சங்கடத்தைப் புறம் தள்ளியவளுக்கு ஏனோ இப்போது அந்த விஷயத்தைச் சொல்ல தோன்றவில்லை.

அதோடு வீட்டில் தாய், தந்தை வேறு இருக்க, அமைதியையே பதிலாகத் தந்தாள்.

“தாரா?” அவளின் அமைதி பொறுக்காமல் அழைத்தான்.

“ம்ம்… சும்மா பேசலாம்னு…” என்று இழுத்தாள்.

அவளின் பதிலில் பிரசன்னாவின் உதடுகள் புன்னகையில் சப்தமில்லாமல் விரிந்தன.

“உனக்கு என்கிட்ட பேசணும்னு தோன்றியதில் எனக்கு ரொம்பச் சந்தோஷம் தாரா…” என்றான் குழைந்த குரலில்.

“நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன் தாரா. ஆனா இங்கே ஹாஸ்பிட்டலில் செம்ம பிஸி. பேச டைம் கிடைக்கலை. இப்போ நீயா பேசியதில் ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு…” என்றான்.

அவன் பேசப் பேச இங்கே வசுந்தராவிற்குக் குற்றவுணர்வு கூடிக் கொண்டே போனது. அவன் தன் மீது இவ்வளவு விருப்பத்துடன் இருக்க, தான் மட்டும் அவனுக்கு நியாயம் செய்யவில்லையோ? என்று தோன்றியது.

அவள் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னாள் தான். ஆனால் முழு மனதுடன் சொன்னாளா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வாள்.

அவளுக்குத் திருமணம் செய்து கொள்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை என்பதே உண்மை!

வீட்டில் வரன் பார்க்க ஆரம்பிக்க, வேண்டாம் என்று தான் மறுத்தாள்.

அவளின் மறுப்பில் ‘இன்னும் பழையதைத் தான் நினைத்து கொண்டிருக்கிறாயா?’ என்ற கேள்வி வர, ‘இல்லை’ என்றாள்.

‘அப்படினா கல்யாணம் பண்ணிக்கோ. நீ கல்யாணத்தை மறுக்க, மறுக்க எங்கே இன்னும் நீ அவனை மனசில் நினைச்சு மறுகுறாயோனு தோணுது’ என்று சொல்ல, தாய், தந்தையைத் திருப்தி படுத்த திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

பிரசன்னாவின் விபரம் சொல்லி புகைப்படத்தைக் காட்டும் போது கூட, ஏனோ தானோ என்று தான் பார்த்துக் கொண்டாள்.

அதற்கு மேல் பெரிதாக எதுவும் ஈடுபாடு காட்டிக் கொள்ளவில்லை.

பெண் பார்க்கும் படலத்தின் போதும், கடமைக்குத் தான் வந்து நின்றாள்.

ஆனால் பிரசன்னா தன்னை ஆர்வத்துடன் பார்க்க, தனியே அறைக்குச் சென்ற போதும் ‘பிடித்திருக்கிறது என்று சொல்லேன்’ என்ற தவிப்புடன் நோக்க, அப்போது அவளை ஏதோ ஒன்று உந்தித் தள்ள, தன்போக்கில் அவனிடம் பிடித்திருக்கிறது என்றாள்.

அதே போல வீட்டினரிடமும் அவர்களைத் திருப்தி படுத்தத்தான் ‘நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று சொல்லி வைத்தாள்.

பிடித்திருக்கிறது என்பதை முழு மனதுடன் சொன்னாளா? என்று கேட்டால் அதற்கும் இல்லை என்று தான் பதில் சொல்லுவாள்.

அவளின் பிடித்திருக்கிறது என்றது வெறும் உதட்டளவில் என்பது தான், அவள் அறிந்த உண்மை!

இந்த நிலையில் இப்போது பிரசன்னாவின் ஆர்வமான பேச்சு அவளின் மனதைத் தாக்கிக் குற்றவுணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

“அப்புறம் தாரா… என்ன செய்ற? சாப்பிட்டியா?” என்று பிரசன்னா பேச்சை வளர்க்க, மனதில் இருந்த குற்றவுணர்வுடன் அவனிடம் தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறியவள்,

“ஹ… ஹான்… இனி தான் சாப்பிடணும். அம்மா அதுக்குத் தான் கூப்பிடுற மாதிரி இருக்கு. வச்சுடட்டுமா?” என்றாள் படபடவென.

“ஹோ! ஓகே… போய்ச் சாப்பிடு. இன்னொரு நாள் பேசலாம். பை தாரா…” என்றான் மனமே இல்லாமல்.

“பை…” என்று வேகமாக அலைபேசியை அணைத்தவள் தவிப்புடன் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

அன்றைக்குப் பிறகு மீண்டும் பிரசன்னாவை அழைத்துப் பேசும் துணிவில்லாமல் அழைக்கவே இல்லை.

அவனும் வேலையில் பிஸியாக இருக்க, அவனுக்கும் அழைக்க நேரம் இல்லாமல் போனது.

அதில் வசுந்தராவிற்குத் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

ஆனாலும் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளும் நாளும் வந்தது.

முகூர்த்த புடவை எடுக்கக் குடும்பத்துடன் செல்ல வேண்டியது வர, இரண்டு குடும்பமும் ஜவுளிக்கடைக்கு வந்திருந்தனர்.

பிரசன்னா குடும்பத்தில் கிருஷ்ணன், ராதா, யாதவும், தீபா குழந்தை மயூரியுடனும் வந்திருந்தாள். பிரசன்னா மட்டும் இன்னும் வராமல் இருந்தான்.

மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை இருக்க, அதை முடித்து விட்டு அவன் வருவதாக இருந்தது.

வசுந்தராவின் வீட்டில் அவளும், எத்திராஜும், கல்பனாவும் வந்திருந்தனர்.

காஞ்சனா இந்த நேரத்தில் அலைய வேண்டாம் என்று அவள் கணவன் வீட்டிலேயே இருந்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாள்.

“நாம புடவையைப் பார்த்துட்டு இருப்போம். அதுக்குள்ள பிரசன்னா வந்துருவான்…” என்று ராதா சொல்ல, ‘சரி’ என்று அனைவரும் முகூர்த்த புடவையைப் பார்க்கச் சென்றனர்.

“அண்ணி, இந்த அண்ணா எப்பவும் இப்படித்தான். வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஹாஸ்பிட்டலில் இருக்கும் நேரம் தான் அதிகம். இப்போ இருந்தே இதெல்லாம் பழகிக்கோங்க…” என்று தீபா சொல்ல,

மயூரியைக் கையில் வைத்திருந்த யாதவ், “ஆமா, நீ மட்டும் எப்படி அக்கா? நீயும் தான் ராத்திரி பத்து மணி வரை அந்தக் கம்ப்யூட்டர் பொட்டியை நொட்டு, நொட்டுன்னு தட்டிக்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன்…” என்றான் கேலியுடன்.

“நானாவது பிராக்ஜெக்ட் ரிலீஸ் அப்போ தான் அப்படி இருப்பேன். ஆனா நீயும், அண்ணனும் அப்படியா? நீ ஜுனியர் அட்வகேட்டா இருக்குறப்பயே பெரிய அப்பாடக்கர் போல, என் வீட்டுக்கு வர கூட நேரம் இல்லாமல் பிஸியா இருக்க…” என்றாள் சலிப்பாக.

“வீட்டுக்குத் தானே? வந்துட்டா போச்சு. அதுக்கு எதுக்கு அப்பாடக்கர், ஆட்டுக்குட்டி டக்கர்ன்னு என்னை டேமேஜ் பண்றக்கா? உனக்காக இல்லாவிட்டாலும் எங்க மயூரி குட்டியை பார்க்கவே உன் வீட்டுக்கு வருவேன்…” என்று சொல்லி விட்டு மயூரியின் வயிற்றில் முத்தமிட்டு கிச்சுகிச்சு மூட்டினான்.

அவளும் கிளுங்கிச் சிரிக்க, அவர்களின் செல்லச் சண்டையைப் பார்த்து வசுந்தராவும் வசீகரமாகச் சிரித்தாள்.

“சரி… சரி… அக்காவும், தம்பியும் அரட்டை அடிச்சது போதும். புடவையைப் பார்க்க ஆரம்பிங்க…” என்று ராதா ஒரு அதட்டல் போட, தீபாவும், வசுந்தராவும் புடவையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

எத்திராஜும், கிருஷ்ணனும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, மயூரி சிணுங்கியதால் யாதவ் அவளைக் கடையில் மற்ற பிரிவுகள் பக்கம் அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான்.

பெண்கள் நால்வரும் புடவையைப் பார்ப்பதில் கவனமாக இருந்தனர்.

வசுந்தராவிற்குப் பிரசன்னா இன்னும் வராததெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை.

எதற்கு வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்ப்போம் என்பது போலப் புடவையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தீபாவுடன் மெல்லிய குரலில் பேசிக் கொண்டே புடவையைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தரா, தன் பின்னால் கழுத்தில் யாரோ ஊதுவது போல உணர்ந்து பதறி வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.

அவளின் பின்னால் “ஹாய்…” என்று கிசுகிசுப்பான குரலில் சொல்லிய படி நின்று கொண்டிருந்தான் பிரசன்னா.

பிரசன்னா கடைக்குள் வந்த போது அவரவர் வேலையில் அனைவரும் கவனமாக இருந்ததால், வசுந்தராவின் பின்னால் சப்தமில்லாமல் வந்து நின்றவன், அவளின் பின்னங்கழுத்தில் லேசாக ஊதினான்.

அதில் அவள் சட்டென்று திரும்ப அவளின் முகத்தை அவ்வளவு அருகில் பார்க்கவும் இன்பமாக உணர்ந்தவன் குரல் தன்னால் கிசுகிசுப்பாக மாறியிருந்தது.

அவனின் வரவைப் பற்றியே பெரிதாக நினைக்காத வசுந்தராவிற்கு அவனைத் திடீரென்று அவ்வளவு அருகில் பார்க்கவும் திருப்பி ‘ஹாய்’ சொல்ல கூட முடியாமல் வார்த்தை தொண்டைக்குள் இருந்து வர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.

பிரசன்னாவின் பார்வை அவளின் முகத்தையே மொய்க்க, தடுமாறி நின்றாள்.

அவளை மேலும் தடுமாற விடாமல் காப்பது போல் அண்ணனை பார்த்துவிட்ட தீபா “ஹாய் அண்ணா, வந்துட்டியா? வா… வா… இந்தப் புடவை எல்லாம் நல்லா இருக்கும்னு தனியா எடுத்து வச்சுருக்கோம். இதில் உனக்கு எது பிடிச்சுருக்குனு சொல்லு. அதையே எடுத்துருவோம்…” என்று படபடவெனப் பேசி இருவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினாள்.

பெரியவர்கள் பார்வையும் அவனின் புறம் திரும்ப, மாமியார், மாமனாருக்கு வரவேற்பு புன்னகையைக் கொடுத்துவிட்டு, வசுந்தரா அருகிலேயே சிறு இடைவெளி மட்டும் விட்டு நின்று கொண்டவன், தங்கை காட்டிய புடவைகளில் பார்வையைப் பதித்தான்.

அவன் விட்ட இடைவெளி என்பது சிறிது அசைந்தாலும் இருவரின் தோள்களும் உரசிக் கொள்ளும் என்ற அளவில் தான் இருந்தது.

அதில் வசுந்தரா மூச்சை இழுத்துப் பிடித்தாள். அவளால் நகரக் கூட முடியவில்லை. அந்தப் பக்கம் வேறு ஒரு திருமணக் கோஷ்டி நின்று கொண்டிருந்ததால் சிறிது நகர்ந்தாலும் அவர்களுடன் போய் நிற்பது போல் தெரியும்.

‘இவன் ஏன் இப்படி இடித்துக் கொண்டு நிற்கிறான்?’ என்று சலிப்புடன் நினைத்துக் கொண்டாள்.

அவனோ அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘என் மனைவியுடன் நிற்கிறேன்’ என்பது போல வெகு இயல்பாக நின்று புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு புடவையைக் கையில் எடுத்தவன் வசுந்தராவின் புறம் திரும்பி, “இதைத் தோளில் போட்டுக் காட்டு தாரா…” என்றான்.

அவன் தாரா என்றதில் கல்பனாவின் முகம் மலர்ந்தது என்றால், தீபாவும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

வசுந்தராவிற்கு அவனின் அழைப்பு ஏற்கனவே தெரியும் என்பதால் அவள் சாதாரணமாகவே இருந்தாள்.

அவன் கொடுத்த புடவையை வாங்கி எப்படித் தோளில் போட என்று தடுமாற, அங்கிருந்த கடை பெண் உதவிக்கு வந்தாள்.

தோளில் மேலாக மட்டும் இல்லாமல், புடவையைக் கட்டியது போலவே அந்தப் பெண் வசுந்தராவின் உடையின் மீதே கட்டி விட்டாள். கட்டி முடித்ததும் அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க, அந்த உடை வசுந்தராவிற்கு அவ்வளவு பொருத்தமாக அழகாக இருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை வசுந்தராவே வியந்து பார்க்க, அவளுக்கு நேராகப் பின்னால் வந்து நின்று பார்த்த பிரசன்னாவின் கண்கள் கிறக்கமாக ஜொலித்தன.

“பியூட்டிஃபுல்!” அவனின் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டன.

வசுந்தரா கண்ணாடியின் முன் நிற்க, அவளுக்குப் பின்னால் சிறிது அருகில் பிரசன்னா நிற்க, அது இருவரும் ஜோடியாக நிற்கும் தோற்றத்தைக் கொடுக்க, “வாவ்! அண்ணா, அண்ணி ஜோடி பொருத்தம் செம்ம!” என்று விசிலடித்துச் சொல்லிக் கொண்டே அங்கே வந்தான் யாதவ்.

குடும்பமே அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைத் தான் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் தானும் அதை உணர்ந்து அவனைப் பின்னால் திரும்பிப் பார்த்தாள் வசுந்தரா.

பிரசன்னாவோ கண்களில் மின்னியக் காதலுடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் அப்படிப் பார்த்துக் கொள்ளும் காட்சிக் கவிதையாக இருக்க, உடனே அதைத் தன் கைபேசியில் அடக்கினான் யாதவ்.

“அண்ணா, செம்ம ஷாட்!” என்று கூவினான்.

அவனின் சப்தத்தில் பார்வையை வேகமாக விலக்கி, விலகிப் போனாள் வசுந்தரா.

அனைவரின் பார்வையையும் உணர்ந்து கண்ணாடியைப் பார்த்து வசீகரமாகச் சிரித்துத் தலையைக் கோதிக் கொண்டு யாதவ்வின் அருகில் சென்றான் பிரசன்னா.

தம்பியின் போனை வாங்கித் தங்கள் புகைப்படத்தைப் பார்த்தவனுக்குத் தன் கண்களையே விலக்க முடியவில்லை.

அந்தப் படம் அவ்வளவு அழகாக வந்திருந்தது.

“ஹேய்… போதும் அண்ணாரே. விட்டா உன் கண்ணைப் போனோட ஒட்ட வச்சுக்குவ போல…” என்று கேலி செய்து கொண்டே தன் அலைபேசியை அண்ணன் கையிலிருந்து பறித்தான்.

“டேய்… கொடுடா…” பிரசன்னா மீண்டும் பறிக்க முயல, “உன் போனுக்கு அனுப்பி வைக்கிறேன். விடிய விடிய கூட உட்கார்ந்து பார்…” என்றவன் சொன்னபடி அனுப்பியும் வைத்தான்.

அடுத்தச் சில மணி நேரங்களில் சிரித்துப் பேசிக் கொண்டே அனைவருக்கும் உடைகள் எடுத்து முடித்தனர்.

கடையை விட்டு வெளியே வந்ததும், உணவகத்திற்குச் செல்லக் கிளம்பினார்கள்.

இரண்டு குடும்பமும் அவரவர் காரில் வந்திருக்க, பிரசன்னா தனியாக வந்ததால் அவனும் ஒரு காரில் வந்திருந்தான்.

அவனுக்கு இன்னும் வசுந்தராவுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்கத் தோன்ற, நேராக எத்திராஜிடம் வந்தவன் “மாமா, தாராவை நான் கூட்டிட்டு வரட்டுமா?” என்று அனுமதி கேட்டான்.

அவரும் சம்மதம் சொல்லிவிட, “அண்ணா, ஹ்ம்ம்… ஹ்ம்ம்… தேறிட்ட…” தீபாவும், யாதவ்வும் கோரஸாகக் கேலியில் இறங்கினர்.

“பேசாம போங்கடா…” சிரித்துக்கொண்டே அவர்களின் கேலியைச் சமாளித்தவன், தயக்கத்துடன் அன்னையின் அருகில் நின்றிருந்த வசுந்தராவைப் பார்த்து ‘வா’ என்பதாகக் கையை நீட்டித் தலையை அசைத்தான்.

வசுந்தராவிற்குக்கோ ‘என்னடா இது?’ என்பது போல் இருந்தது.

அவர்களின் கேலியும், இவனின் ஆர்வமும் வசுந்தராவை அவர்களுடன் ஒட்ட விடாமல் விலகச் சொல்லியே தூண்டியது.

“போமா… அவன் கூட வா…” என்று ராதா சொல்ல, வேறு வழியில்லாமல் பிரசன்னாவின் காரில் ஏறினாள்.

அனைவரும் முன்னால் காரில் செல்ல, பிரசன்னா உடனே காரைக் கிளப்பாமல் இருக்க, ‘ஏன்?’ என்பதாக அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வைக்காகவே காத்திருந்தவன் போல் அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், காரின் முன்னால் வைத்திருந்த ஒரு ஃபைலை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“என்னது இது?”

“பிரிச்சு பார் தாரா…”

‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனையுடன் அந்தக் கோப்பை திறந்து பார்த்த வசுந்தராவின் விழிகள் கேள்வியுடன் விரிந்தன.