என்னுள் யாவும் நீயாக! – 5

அத்தியாயம் – 5

விரல்களை அழகாகக் குவித்து ‘வணக்கம்’ சொன்ன வசுந்தராவை ஆர்வமாகப் பார்த்தான் பிரசன்னா.

“அண்ணா இந்தப்பக்கம் கடவாய் ஓரம் ஈரமா இருக்குண்ணா…” என்று அவனின் அருகில் இருந்த யாதவ் சொல்ல,

“என்னடா, என்ன ஈரம்?” என்று கேட்டுக் கொண்டே உதட்டுக்குக் கீழிருந்த தாடையைத் தடவினான்.

அவனின் செய்கையில் சட்டென்று சிரித்த யாதவ் “ஜொள்ளுண்ணா ஜொள்ளு!” என்று அண்ணனைக் கேலி செய்தான்.

யாதவ்வின் கேலியில் அவனை முறைத்த பிரசன்னா “என் பொண்டாட்டி… நான் பார்க்கிறேன். உனக்கு என்னடா?” என்று அசால்டாகக் கேட்டான்.

“பொண்டாட்டின்னு முடிவே பண்ணிட்டியா? இப்பத்தானே அண்ணா பொண்ணே பார்க்க வந்திருக்கோம்… அதுக்குள்ள முடிவு பண்ணினா எப்படி?”

“நான் போட்டோவைப் பார்த்தே முடிவு பண்ணிட்டுத் தான்டா பொண்ணு பார்க்க வரவே சம்மதிச்சேன்…”

“இது வேறயா? நீ நடத்து அண்ணா நடத்து…” என்று ‌அவனைக் கேலி செய்வதை விட்டுவிட்டு அமைதியானான்.

அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டே இருக்க, அதே நேரத்தில் வசுந்தராவின் கையில் காஃபியைக் கொடுத்திருந்தார்கள்.

முதலில் பெரியவர்களுக்குக் கொடுத்தவள், பின்பு மாப்பிள்ளையின் புறம் வந்தாள்.

மயூரியை வசதியாக அமர வைத்துக் கொண்டு ஒரு கையினால் காஃபி கப்பை எடுத்த பிரசன்னா, வசுந்தராவைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.

அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்த வசுந்தரா அவனின் சிரிப்பைக் கண்டதும் தன்னிச்சையாகத் தானும் சிரித்தாள்.

அதில் திருப்தியான பிரசன்னா காஃபியை அருந்திய படியே அவள் மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது தனக்குக் காஃபி என்பது போல அவனின் கையைப் பிடித்து இழுத்தாள் மயூரி.

பிரசன்னாவின் கவனம் முழுவதும் வசுந்தராவின் மீது இருந்ததால், குழந்தையின் செயலைக் கவனிக்காமல் போனான்.

அவன் கவனித்த போது கப்பைப் பிடித்திருந்தாள் மயூரி. அதை அப்போது தான் கவனித்தவன் ‘சூடு’ என்று வேகமாகக் கையை இழுத்ததில் அவனின் கால் சட்டையின் மீதே காஃபி கொட்டியது.

சூட்டில் “ஸ்ஸ்ஸ்…” என்று வலியில் முனங்கினான். மயூரி இன்னொரு காலின் மீது அமர்ந்திருந்ததால் நல்லவேளையாகக் குழந்தையின் மீது படாமல் போனது.

ஆனால், தன் மாமா வலியில் முனங்கவும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

மகளை வேகமாகத் தூக்கிய சரண் அவளைச் சமாதானம் செய்ய, “என்னாச்சு பிரசன்னா, அண்ணா, மாப்பிள்ளை…” என்று சுற்றியிருந்தவர்கள் பதறி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

“ஒன்னும் இல்லை… ஒன்னும் இல்லை… லேசான சூடு தான். மயூ குட்டி மேல படலை தானே?” என்று அப்போதும் குழந்தையைப் பற்றித் தான் கேட்டான்.

“அவளுக்கு ஒன்னும் இல்லை அண்ணா…” என்று தீபா சொல்ல, “அவளை ஏன் இவன்கிட்ட கொடுத்த?” என்று மெல்லிய குரலில் அதட்டினார் ராதா.

பெண் பார்க்க வந்த இடத்தில் இதென்ன கலாட்டா என்பது போல அவருக்கு மனதை உறுத்த மகளைக் கடிந்து கொண்டார்.

“ம்ப்ச்… எனக்கு ஒன்னும் இல்லைமா, விடுங்க…” அவரை அடக்கியவன், “நீ போய்க் குட்டியைச் சமாதானம் பண்ணு…” என்று தங்கையை அனுப்பி வைத்து விட்டு, பெண் வீட்டாரின் புறம் திரும்பினான்.

எத்திராஜூம், கல்பனாவும் அவனைச் சுற்றித் தான் நின்றிருந்தார்கள். வசுந்தரா தன் அக்கா காஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவனைத் தான் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் தங்கள் பக்கம் திரும்பவும் “உள்ளே போய்ப் பேண்ட்டை கிளீன் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை…” என்று அவனிடம் சொல்லிவிட்டு “நீ கூட்டிட்டு போமா வசு…” என்று மகளைப் பார்த்துச் சொன்னார் எத்திராஜ்.

“அண்ணா பொண்ணுகிட்ட தனியா பேச சூப்பர் சான்ஸ், மிஸ் பண்ணிடாதே…” என்று அவனின் காதின் ஓரம் முணுமுணுத்தான் யாதவ்.

“வாங்க…” என்று வசுந்தரா மெல்லிய குரலில் அவனை அழைக்க, உதட்டில் பூத்த மென்புன்னகையுடன் அவளின் பின் சென்றான் பிரசன்னா.

வரவேற்பறை அருகில் இருந்த விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றவள், உள்ளே இருந்த குளியலறையைக் காட்டினாள்.

“டவல் அங்கே செல்பில் இருக்கும். வேணும்னா எடுத்து யூஸ் பண்ணிக்கோங்க…” என்றாள்.

“ஓகே, நான் பார்த்துக்கிறேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

வசுந்தரா அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவன் மீண்டும் வெளியே வந்த போது, வேகமாக எழுந்து நின்றாள். அவனின் பேண்ட் தொடையில் ஈரமாக இருந்தது. உடனே ஹேர் ட்ரையரை எடுத்து வந்தவள், “இதைப் போட்டு கொஞ்ச நேரம் காட்டுங்க. சீக்கிரம் உலர்ந்திடும்…” என்றாள்.

“தேங்க்ஸ்…” என்று உடனே வாங்கிக் கொண்டவன் அங்கிருந்த பிளக்கில் வயரைச் சொருகி, கால்சட்டையை உலர வைத்தான்.

சில நொடிகள் காட்டி முடித்ததும், “பிரச்சனை எதுவும் இல்லையே?” என்று மெதுவாகக் கேட்டாள் வசுந்தரா.

“என்ன?” என்று அவன் புரியாமல் கேட்க,

“அ… அது… சூடு…” என்று லேசாகத் தயங்கி அவனின் காலைக் காட்டினாள்.

“இல்லை… ஒன்னும் பிரச்சனை இல்லை. அப்படியே இருந்தாலும் நான் வீட்டில் போய் ஆயில்மெண்ட் போட்டுக்கிறேன்…” என்றான் லேசான சிரிப்புடன்.

அவள் ‘சரி’ எனத் தலையசைக்க, தாங்கள் தனியாக இருக்கிறோம் என்ற உந்துதலில் அவளை ஆர்வமாகப் பிரசன்னா பார்க்க, அதைக் கண்டவள் “போகலாமா?” என்று வெளியே கையைக் காட்டிக் கேட்டாள்.

“போகலாம்… ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணுமே…” என்று கதவை நோக்கி நடந்தவளை நிறுத்தினான்.

“என்ன? கேளுங்க…” என்று அவள் நிற்க,

“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் வேகமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் வசுந்தரா.

‘பிடிச்சுருக்குன்னு சொல்லு’ என்ற எதிர்பார்ப்பு அவனின் முகத்தில் தெரிய, அதைக் கண்ணுற்றவள், “ம்ம்ம்…” என்று பிடித்திருப்பதாகச் சொன்னாள்.

அவளின் பதிலில் பிரசன்னாவின் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது.

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு…” என்று பட்டென்று ஒருமைக்குத் தாவி சொன்னான் பிரசன்னா.

அதில் பிரசன்னா அளவு இல்லையென்றாலும், வசுந்தராவின் முகமும் பளிச்சென்று ஆனது.

ஆனாலும் மனதின் ஓரம் உறுத்த, “உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்ல…” என்று அவள் ஆரம்பித்த போது, “வசு…” என்று அழைத்துக் கொண்டே அங்கே வந்தாள் காஞ்சனா.

கதவு திறந்து தான் இருந்ததால், வாசல் அருகிலேயே நின்றவள், “நேரமாச்சு வர்றீயா…” என்று தங்கையை அழைத்தாள்.

அவள் ஏதோ சொல்ல வந்ததில் பிரசன்னா, வசுந்தராவைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று நினைத்தவள், “வாங்க போகலாம்…” என்று சொல்லி விட்டு அக்காவின் பின் வேகமாக நகர்ந்தாள்.

‘என்ன சொல்ல வந்திருப்பாள்?’ என்று நினைத்துக் கொண்டே தானும் வெளியே சென்றான்.

அவன் போய் அமர்ந்ததும், “பொண்ணுகிட்ட பேசுனியா அண்ணா?” என்று ஆர்வமாக அண்ணனின் காதைக் கடித்தான் யாதவ்.

“ம்ம்… பேசினேன்… பேசினேன்…” என்றவன் பார்வை இன்னும் வசுந்தரா மீது தான் இருந்தது.

அவனின் பார்வையைப் பார்த்தே மகனின் விருப்பத்தை அறிந்து கொண்டாலும் ராதா மெதுவான குரலில் மகனிடமும் கேட்க, அவன் சம்மதத்தை அன்னையிடம் சொல்ல, அவர் தன் கணவரிடம் தெரிவித்தார்.

“எங்களுக்கு உங்க பொண்ணைப் பிடிச்சுருக்கு எத்திராஜ். உங்களுக்கும் பிடிச்சதுனா மேற்கொண்டு பேசலாம்…” என்றார் கிருஷ்ணன்.

உடனே எத்திராஜ் மகளைத் தான் பார்த்தார். அவளின் முகத்திலும் சம்மதம் தெரிந்தது. அதே நேரம் கணவனின் பார்வையை உணர்ந்து கல்பனா மகளிடம் மெதுவான குரலில் கேட்டார்‌.

வசுந்தராவும் சம்மதம் தெரிவிக்க “எங்களுக்கும் சம்மதம். மேற்கொண்டு பேசலாம்…” என்றார் எத்திராஜ்.

பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணனும், வசுந்தராவின் தந்தை எத்திராஜும் தொழில் ரீதியாகப் பழகியவர்கள் தான் என்பதாலும், ஏற்கனவே புகைப்படம் பார்த்தே இரு வீட்டிலும் சம்மதம் சொல்லியிருந்ததாலும், நேரில் பார்த்தும் உறுதிபடுத்திக் கொள்ளத்தான் அவர்கள் வந்திருந்தார்கள் என்பதால் அன்றே அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

எத்திராஜ் இருசக்கர வாகனம் ஷோரூம் வைத்திருப்பது போல, கிருஷ்ணனும் அதே தொழில் தான் செய்து கொண்டிருந்தார்.

ஆனாலும் பைக்கின் கம்பெனி பெயர்கள் மட்டும் வேறு. அதனால் ஒரே ஏரியாவில் தான் இருவரின் ஷோரூம்களும் இருந்தன.

அதே தொழில் வழியில் இருவருக்கும் பழக்கமும் இருந்தது. ஒரு முறை நட்பு ரீதியான பேச்சின் போது பிள்ளைகளின் திருமணம் பற்றிய பேச்சு வர, அது இப்போது பெண் பார்க்கும் படலம் வரை வந்திருக்கிறது.

சீர்வரிசை, எப்போது நிச்சயம் வைப்பது, திருமணம் எங்கே வைத்து நடத்துவது, எப்போது… என்று பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள். காஞ்சனாவின் கணவன் கமலேஷும் பெண் வீட்டுச் சார்பில் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அதுவரை அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் தம்பியிடமும், மாப்பிள்ளையிடமும், தங்கையிடமும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த பிரசன்னா எப்போது திருமணம் வைப்பது என்று பேசவும் நிமிர்ந்து அமர்ந்தான்.

‘சீர்வரிசை அவர்கள் செய்வது செய்யட்டும். நீங்களாக எதுவும் கேட்க வேண்டாம்’ என்று ஏற்கனவே அவன் சொல்லி வைத்திருந்ததால் அவர்களும் அதையே பெண் வீட்டில் சொல்லி வைத்தனர்.

இப்போது திருமணத் தேதி பற்றிப் பேசவும் வேகமாக அன்னையின் முகத்தைப் பார்த்தான்.

அவரோ பேச்சின் மும்முரத்தில் அவனைக் கவனிக்கவில்லை. “ஒரு மூனு மாசத்துக்குப் பிறகு கல்யாணத்தை வச்சிடலாம்ங்க…” என்று தன் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராதா.

மூன்று மாதம் என்றதும் பிரசன்னாவின் முகம் களையிழந்து போனது

அவனின் முகப் பாவனையைப் பார்த்து யாதவ், தீபா, சரண் மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அவர்களின் சிரிப்பைப் பார்த்து மயூரியும் கை தட்டிக் கொண்டு சிரிக்க, பெரியவர்களின் பார்வை இவர்களின் புறம் திரும்பியது.

“என்னடா எதுக்குச் சிரிக்கிறீங்க?” என்று ராதா கேட்க, “அண்ணாவுக்குச் சீக்கிரம் கல்யாணம் வைக்கணுமாம் அம்மா…” என்றான் யாதவ்.

“டேய்! நான் எங்கடா அப்படிச் சொன்னேன்?” என்று தம்பியை அதட்டினான் பிரசன்னா.

“நீ சொல்லலை… ஆனா உன் முகம் சொல்லிருச்சு…” என்று தம்பி அண்ணனை வார, பிரசன்னாவிற்கு அசடு வழியும் நிலைதான் ஏற்பட்டது.

அதை அவன் மறைக்கப் போராட, பெரியவர்களின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

அதே நேரம் அறைக்குள் இருந்த வசுந்தராவின் காதிலும் அவர்களின் பேச்சு விழ, தன் தமக்கையைப் பார்த்துச் சங்கடத்துடன் சிரித்துக் கொண்டாள்.

ஆனால் பதிலுக்குத் தங்கையை முறைத்துக் கொண்டிருந்தாள் காஞ்சனா.

அவளின் முறைப்பிற்கான காரணம் புரிந்தும் இன்னும் தான் சிரித்தாள் வசுந்தரா.

“எங்களுக்கும் சீக்கிரம் கல்யாணத்தை வைப்பது தான் நல்லதுன்னு தோணுது சம்பந்தி. எங்க மூத்த பொண்ணு கல்யாணம் ஆகி மூணு வருஷத்துக்குப் பிறகு இப்போதான் கன்சீவ் ஆகியிருக்காள். நாலு மாசம் ஆகுது. மூணு மாசத்துக்குப் பிறகுனா அவளுக்கு வளைகாப்பு, டெலிவரி டைம்னு நெருங்கி வந்திடும். அந்த நேரத்தில் கல்யாண வேலையும் பார்த்து, அவளையும் நாங்க பார்க்கணும்னா எங்களுக்குச் சிரமமா போயிடும்…” என்றார் கல்பனா.

“அப்போ அடுத்த மாசமே ஒரு முகூர்த்தம் இருக்கானு பாரு ராதா…” என்றார் கிருஷ்ணன்.

ஏற்கனவே அங்கிருந்த காலண்டரைக் கையில் வைத்திருந்த ராதா அடுத்த மாதம் முகூர்த்தம் இருக்கிறதா என்று பார்த்தார்.

“அடுத்த மாசம் இருபதாம் தேதியும், இருபத்தி எட்டாம் தேதியும் முகூர்த்தம் இருக்குங்க…” என்றவர் கல்பனாவை அர்த்தத்துடன் பார்த்தார்.

வசுந்தராவிற்கு எந்தத் தேதி வசதிப்படும் என்ற அர்த்தத்தில் அவர் பார்ப்பதைப் புரிந்து கொண்ட கல்பனா, “இருபதாம் தேதி சரியாக இருக்கும்…” என்றார்.

“அப்போ அதுலேயே கல்யாணத்தை வச்சுருவோம். இப்பதான் மாசம் பிறந்திருக்கு. அடுத்த மாதம் இருபதாம் தேதினா அப்போ நமக்கு ஒன்றரை மாசம் டைம் இருக்கு. நாள் பக்கத்தில் இருப்பதால் நிச்சயதார்த்தம் தனியா வைக்காம கல்யாணத்துக்கு முதல் நாளே வைச்சுருவோம். இந்த ஏற்பாடு உங்களுக்குச் சரிதானே சம்பந்தி?” என்று எத்திராஜைப் பார்த்துக் கேட்டார் கிருஷ்ணன்.

அதோடு முக்கியமாக மகனையும் பார்த்துக் கொண்டார். பிரசன்னாவின் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.

எத்திராஜும் சந்தோஷமாகச் சம்மதம் சொல்ல, அந்தத் தேதியிலேயே திருமணம் வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினார்கள். அப்போது மீண்டும் வெளியே வந்தாள் வசுந்தரா.

அனைவருக்கும் முன்பே “போயிட்டு வர்றேன்…” என்று வசுந்தராவிடம் சொல்லிவிட்டே சென்றான் பிரசன்னா.

அவர்கள் கிளம்பவும் தன் நண்பன் ஒருவனைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லி வெளியே கிளம்பினான் கமலேஷ்.

அவனும் சென்றதும் காஞ்சனா தங்கையைக் கோபமாக முறைத்தாள்.

ஆனால் அவளோ அமைதியாகச் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“என்ன காஞ்சனா எதுக்கு அவளை முறைக்கிற?” என்று கேட்டார் கல்பனா.

“அவ ரூம்ல மாப்பிள்ளைகிட்ட என்ன பேசுறதா இருந்தாள்னு கேளுங்கமா…”

“என்ன வசு அக்கா இவ்வளவு கோபப்படும் படியா மாப்பிள்ளைகிட்ட என்ன பேசின?” கல்பனா இளைய மகளிடம் கேட்க,

“நான் எங்கே பேசினேன்? அதுக்குள்ள தான் அக்கா என்னைத் தடுத்துட்டாளே…” என்றாள் வசுந்தரா.

“அப்போ நீ பேசக் கூடாதுனு அவ தடுக்குற அளவுக்கு என்ன பேசப் போன?” என்று கேட்டக் கல்பனாவிற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வசுந்தரா.

“சொல்லு வசு…” என்று இப்போது கேட்டது எத்திராஜ்.

“கிருபாகரன் பற்றிச் சொல்லிடலாம்னு நினைச்சேன்…” என்று முனங்கினாள் வசுந்தரா.

அவள் சொன்னதைக் கேட்ட, எத்திராஜ் அதிர்வில் நின்று கொண்டிருந்தவர் தளர்ந்து சோஃபாவில் அமர்ந்து விட்டார்.

“நீ என்ன பண்ணிட்டு இருக்க வசு? இப்போ எதுக்குத் தேவையில்லாம உன் கல்யாண விஷயத்தில் கிருபாகரனை நுழைக்கிற?” என்று கோபத்துடன் கேட்டார் எத்திராஜ்.

அவரின் தளர்ச்சியிலும், கோபத்திலும் பயந்த கல்பனா அவருக்குத் தண்ணீரை எடுத்து வந்து குடிக்க வைத்தார்.

“நீங்க அமைதியா இருங்க. நான் பேசிக்கிறேன்…” என்று அவரை அமைதி படுத்தியவர் மகளின் புறம் கோபமாகத் திரும்பினார்.

“உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க வசு? உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்னு உன்கிட்ட விவரம் சொல்லிட்டு தானே கல்யாண வேலையே ஆரம்பிச்சோம். எல்லாத்துக்கும் சரி சரினு சொல்லிட்டு இப்போ கல்யாணம் கூடி வந்திருக்கிற நேரத்தில் ஏன் தேவையில்லாம கிருபாகரன் பேரை இழுக்குற?

அவன் உன் வாழ்க்கையில் ஆறு மாசத்துக்கு முன்னாடியே இல்லாமல் போய்ட்டான். ஆறு மாசம் முடிஞ்ச பிறகும் அவன் உன் எண்ணத்தில் வர்றான்னா இன்னும் நீ அவனை மறக்கலையா?” என்று கோபத்துடன் கேட்டார் கல்பனா.

“ம்ப்ச்… அம்மா நான் ஏன் அவனை நினைக்கிறேன்? அதெல்லாம் இல்லை. இப்போ கூட நீங்க பார்த்த மாப்பிள்ளை பிரசன்னாவை எனக்குப் பிடிச்சிருக்கு…”

“பிடிச்சிருக்குனு சொல்றவ பார்க்கிற வேலையா இது? கிருபாகரன் பற்றிச் சொன்னா அப்புறம் பிரசன்னா கூட எப்படிக் கல்யாணம் நடக்கும்? அதை யோசிச்சியா நீ?” என்று கேட்டாள் காஞ்சனா.

காஞ்சனாவிற்கு வசுவின் காதல் விவகாரம் தெரியும். கமலேஷுக்கு மட்டும் தெரியாது.

“பிரசன்னா ஒரு டாக்டர் அக்கா. அவர் இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டார்…” என்று சாதாரணமாகவே சொன்னாள் வசுந்தரா.

“தப்பு வசு! ரொம்பத் தப்பு! டாக்டரா இருந்தாலும் தன் மனைவிக்கு முன்னாடி ஒரு காதல் இருந்ததை ஏத்துக்க முடியாது. ஆம்பிளைங்க மனசு அப்படி! முட்டாள்தனமா எதுவும் உண்மையைச் சொல்றேன்னு உளறி வச்சுக்கிட்டு இருக்காதே…” என்று அதட்டினார் எத்திராஜ்.

சிறிது நேரம் மாறி மாறிப் பேசி வசுந்தராவை ‘இனி கிருபாகரனைப் பற்றிப் பிரசன்னாவிடம் பேச மாட்டேன்’ என்று சொல்ல வைத்தார்கள்.

ஆனால் வெளியே தான் பேச மாட்டேன் என்று சொன்னாளே தவிர, அவனிடம் என்றாவது சொல்லிவிடும் முடிவுடன் இருந்தவள், தன் முடிவைக் குடும்பத்தினர் அறியாமலும் பார்த்துக் கொண்டாள்.