என்னுள் யாவும் நீயாக! – 4

அத்தியாயம் – 4

“ஹலோ பிரசன்னா… கிளம்பிட்டியா?” என்று அலைபேசியின் வாயிலாக அன்னை கேட்ட கேள்வியில் நிமிர்ந்து தன் எதிரே இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான் பிரசன்னா.

மாலை நான்கு என்றது கடிகாரம்.

“யெஸ்மா, இதோ கிளம்பிட்டேன். இன்னும் ஆப் அன் ஹவர்ல வீட்டில் இருப்பேன்…” என்றான்.

“சீக்கிரம் வந்துருப்பா. நேரம் ஆச்சுன்னா நல்லா இருக்காது…” என்று அவனின் அன்னை ராதா சொல்ல,

“கரெக்டா வந்துருவேன்மா… டோன்ட் வொர்ரி…” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

மேஜையின் மீதிருந்த பெயர் பலகை அவனை மருத்துவன் என்று அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது.

தன் பொருட்களை எல்லாம் பையில் எடுத்து வைத்தவன், மேஜை மீதிருந்த அழைப்பு மணியை அழுத்தினான்.

அடுத்த நிமிடம் ஒரு செவிலி “யெஸ் டாக்டர்…” என்று வந்து நிற்க, “நான் கிளம்புறேன் சிஸ்டர். பேஷண்ட் அஸ்வினுக்கு இன்னும் ஒன் ஹவர் பிறகு நான் சொன்ன இன்ஜக்சன் போட்டு விட்டுருங்க. ட்ரிப்ஸ் இன்னும் ஒரு பாட்டில் போடுங்க. வேற எதுவும் எமர்ஜென்சினா எனக்குக் கால் பண்ணுங்க…” என்று தன் கட்டளைகளைப் பிறப்பித்தான் டாக்டர் பிரசன்னா.

“ஓகே டாக்டர்…” என்று செவிலி சொல்லி விட்டுச் செல்லவும், தானும் கிளம்பி வெளியே வந்தான்.

டாக்டர் பிரசன்னா இதய நல மருத்துவன் (Cardiologist). சென்னை முகப்பேரில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் பணிபுரிகின்றான்.

கடந்த நான்கு வருடமாக அங்கே தான் பணியில் இருக்கின்றான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு விடுமுறை தான்.

ஆனால் அஸ்வின் என்ற சிறுவனுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை முடிந்திருந்த நிலையில் இன்று ஏதோ பிரச்சனை என்று மருத்துவமனையில் இருந்து அழைப்பு வரவும், விடுமுறையில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வந்து மருத்துவம் பார்த்து விட்டு இப்போது கிளம்பிக் கொண்டிருந்தான்.

அரைமணிநேரம் பயணத்திற்குப் பின்னர்த் தன் வீட்டை அடைந்தான். மீண்டும் வெளியே செல்ல வேண்டும் என்பதால் காரைப் பெரிய கேட்டிற்கு முன்பே நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே சென்றான்.

மேல் பகுதியில் மூன்று படுக்கையறைகளும், கீழ் பகுதியில் இரண்டு படுக்கையறைகளும், அதனுடன் சமையலறை, வரவேற்பறை என்று இருந்தது அந்த வீடு.

வெளியே இரண்டு கார் நிறுத்தும் அளவிலான இடமும், சுற்றுச் சுவரை ஒட்டிச் சில பூச்செடிகளும், தென்னை, மா என்று நான்கு மரங்களும், மாலை வேளையில் வெளியே அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் இருந்தன.

அவ்வீட்டில் காவலுக்கும், செடிகளைப் பராமரிக்கவும் பாலன் என்ற நடுத்தர வயதுடையவர் இருக்க, அவரின் மனைவி அகிலா சமையலுக்கு உதவியாக இருந்தார்.

அவர்கள் இருவருக்கும் மாலை வரை அங்கே வேலைகள் இருக்கும். அவர்களின் வீடு சற்று அருகிலேயே இருந்ததால் அவசரத் தேவைக்கு அழைத்துக் கொள்ளவும் வசதியாக இருந்தது.

பிரசன்னா உள்ளே நுழைந்த போது, பாலன் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டே அவனுக்கு வணக்கம் சொல்ல அதை ஏற்றுக் கொண்டே உள்ளே சென்றான்.

வெளியே இருந்த அமைதிக்கு நேர்மாறாக வீட்டிற்குள் ஆரவாரமாக இருந்தது.

“அம்மா, அண்ணா வந்தாச்சு…” என்று பிரசன்னாவின் தம்பி யாதவ் குரல் கொடுத்தான்.

“இந்தத் தாம்பூலத் தட்டை எல்லாம் அந்தப் பையில் எடுத்து வை அகிலா…” என்று சொல்லிக்கொண்டே சமையலறையில் இருந்து வேகமாக வெளியே வந்தார் ராதா.

“வா பிரசன்னா, காஃபி குடிக்கிறியா?” என்று மகனிடம் கேள்விக் கேட்டவர், “அப்படியே உங்க இரண்டு பேருக்கும் போடவா?” என்று அங்கே அமர்ந்திருந்த கணவரிடமும், இளைய மகனிடமும் கேட்டார்.

“இல்லைமா, எனக்கு வேண்டாம். எப்படியும் அங்கே போனதும் குடிக்கச் சொல்லுவாங்க. இங்கே குடித்தால் அங்கே குடிக்க முடியாது. அதனால் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்…” என்றான் பிரசன்னா.

“எனக்கும் வேணாம்…” என்று ராதாவின் கணவர் கிருஷ்ணனும், மகன் யாதவும் ஒன்று போல் சொல்ல, “அதுவும் சரிதான்… அப்போ நீ போய்ப் பிரஷ் ஆகிட்டு வந்துடு பிரசன்னா. இன்னும் கால்மணி நேரத்தில் கிளம்பிடலாம்…” என்றார் ராதா.

“சரிம்மா… தீபா எப்படி வர்றாள்?” என்று கேட்டான்.

“அவள் நேரா தாம்பரத்திலிருந்து அம்பத்தூர் வந்துடுறேன்னு சொன்னாள். மாப்பிள்ளை அப்படியே அங்கிருந்தே திரும்ப வீட்டுக்குப் போகணும்னு சொன்னாராம். நாளைக்கு வேலைக்குப் போகணும்ல…” என்று ராதா விவரம் சொன்னார்.

தீபா, பிரசன்னாவின் தங்கை. யாதவ்வின் அக்கா. அவளுக்குத் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.

வீட்டிற்கு ஒரு மென்பொறியாளர் இல்லையென்றால் அதிசயம் என்பதை நிரூபிக்கும் வகையில் தீபா மென்பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

தீபாவின் கணவன் சரணும் அதே துறையில் இருந்தான். சரணின் இல்லம் தாம்பரத்தில் இருந்தது. சரண், தீபா தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தாள்.

இப்போது பிரசன்னாவின் குடும்பம் அவனுக்குப் பெண் பார்க்கக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பெண்ணின் வீடு அம்பத்தூரில் இருந்தது.

இவர்கள் இங்கிருந்து செல்ல தீபாவும் அவளின் கணவனும், குழந்தையும் நேராகப் பெண் வீட்டிற்கே வருவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அதைப்பற்றிய விபரத்தைத் தான் ராதா இப்போது தன் மகனிடம் பகிர்ந்து கொண்டார்.

“ஓகே மா… நீங்க எல்லாம் கிளம்பியாச்சா?” என்று கேட்டுக் கொண்டே மூவரையும் பார்த்தான்.

“நாங்க ரெடி அண்ணா… நீ மட்டும்தான் கிளம்பணும்…” என்றான் யாதவ்.

அவனையும், தன்னையும் ஒரு பார்வை பார்த்தவன், “நீதான்டா பார்க்க ஜம்முனு இருக்க. உன்னையும், என்னையும் சேர்ந்து பார்த்தால் உன்னைத்தான் மாப்பிள்ளைனு சொல்லப் போறாங்க…” என்று கேலி செய்து சிரித்தான் பிரசன்னா.

“நோ… நோ அண்ணாரே… அந்த டவுட்டு பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் சிம்பிளா கிளம்பி இருக்கேன்…” என்ற தம்பியைத் தலையிலிருந்து கால் வரை ஆராய்ந்தான் பிரசன்னா.

ஜீன்ஸ் பேண்டும், உடலை ஒட்டிக்கொண்டு கச்சிதமாக இருந்த அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். தலையில் அடங்காமல் ஆடிக் கொண்டிருந்த அவனின் கேசமும், அவனின் முகப் பளபளப்பும் அவன் அழகு நிலையம் சென்று வந்துள்ளதை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது.

“நம்புற மாதிரி இல்லையே. நீதான் பார்லர் போயிட்டு வந்து மாப்பிள்ளை போலக் கிளம்பி உட்கார்ந்து இருக்க…” என்று நக்கலுடன் சொன்னான்.

“நீயே கேளு பிரசன்னா, சொல்லச் சொல்லக் கேட்காம பார்லர் போய் விட்டு வந்து இருக்கான்…” என்று ராதா சொல்ல,

அன்னையைப் பார்த்துச் சிரித்தவன், “இதோ கேட்கிறேன் மா. சொல்லுடா எதுக்குப் பார்லர் போன?” என்று கோபம் போல முகத்தை வைத்துக் கொண்டு கண்களை உருட்டி தம்பியைப் பார்த்துக் கேட்டான்.

“பின்ன? போக வேண்டாமா? நான் யாரு? மாப்பிள்ளையோட தம்பியாச்சே… ஜம்முனு இருக்க வேண்டாமா?” என்றான் யாதவ் அலட்டலாக.

“மாப்பிள்ளை நானே பார்லர் போகாம இருக்கும் போது உனக்கு என்னடா?” தம்பியின் பதிலில் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“அது உன்னோட பிரச்சனை அண்ணாரே. நீ போகாமல் விட்டது உன் தப்பு. அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…” என்று அலட்சியமாகச் சொன்னவன், “அதுமட்டுமில்லாம நான் பார்லர் போனதுக்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கு அண்ணா…” என்று சொன்னவனைப் புருவத்தை உயர்த்தி வியந்து பார்த்தான் பிரசன்னா.

“அப்படி என்னடா முக்கியமான காரணம்?” என்று அவ்வளவு நேரம் அமைதியாக அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் தந்தை கிருஷ்ணன் கேட்டார்.

“அது வந்து அப்பா, இப்ப அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போகிறோம். அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து நான் தானே மாப்பிள்ளை. இந்த மாதிரி விசேஷத்துக்கு ஜம்முனு போனால் தானே நாலு பேரு கண் பார்வையில் படுவேன். அதை வச்சி யாராவது மாப்பிள்ளை கேட்கலாம். அப்போ தானே அண்ணனுக்குப் பிறகு எனக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கும்…” என்று நீட்டி முழங்கி அவன் விளக்கவும் குடும்பமே வாயைப் பிளந்து கொண்டு பார்த்தது.

“என்ன எல்லாரும் இப்படி வாயைப் பிளந்து கிட்டு பார்க்கிறீங்க?” என்று கேட்டு யாதவ் அவர்களின் நிலையைக் கலைத்தான்.

முதலில் சுதாரித்த ராதா “டேய் யாதவ்… இது உனக்கே ஓவரா தெரியலை?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்துக் கேட்டார்.

“உண்மையைத் தானே அம்மா சொன்னேன். இதில் என்ன ஓவரா இருக்கு?” அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

“பின்ன என்னடா? இப்போதான் அண்ணனுக்குப் பொண்ணு பார்க்கவே போறோம். பிடிச்சிருந்தால் பேசி முடிக்கணும். அதுக்குப் பிறகுதான் நிச்சயம், கல்யாணம் எல்லாம் நடக்கணும். அதுக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு. அதுக்குள்ள உன் கல்யாணத்துக்கு அடி போடுற…”

“எப்படியும் இந்த வேலையெல்லாம் இரண்டு மாதத்தில் முடிஞ்சுரும் தானே அம்மா. இப்பயே என்னை ஒரு நாலு பேரு பார்த்தால் தானே அண்ணன் கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒரு மூன்று மாதத்தில் என் கல்யாணம் நடக்கும்?”

“அடப்பாவி! அவன் கல்யாணம் முடிஞ்சு மூனு மாதத்தில் உனக்குக் கல்யாணமா? அப்படின்னு யாரு சொன்னா?”

“நான் தான்! வேற யாரு சொல்லணும்?”

“நாங்க சொல்லணும்டா மகனே…” என்று ராதா சொல்ல, கூடவே “நாங்க சொல்லணும்…” என்று பின் பாட்டுப் பாடினார்கள் பிரசன்னாவும், கிருஷ்ணனும்!

“சொல்லாம என்ன செய்யப் போறீங்க? கண்டிப்பா சொல்லுவீங்க…”

“ரொம்பக் கனவு காணாதே மகனே! அண்ணன் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருஷத்துக்குப் பிறகு தான் உன் கல்யாணம். அதுக்குள்ள கனவில் கூடக் கல்யாணத்தைப் பற்றி நினைச்சுடாதே…” என்று சொன்ன ராதாவை முறைத்துப் பார்த்தவன், “என்ன இரண்டு வருஷமா?” என்று இப்போது யாதவ் வாயை பிளந்து கொண்டு கேட்டான்.

“ரெண்டு வருஷமே தான்!” என்று ராதா இப்போது அலட்டாமல் சொன்னார்.

“மம்மி இது அநியாயம். நான் உங்க மேல கேஸ் போடுவேன்…” என்று சபதமிட்டான் யாதவ்.

“உன்னை வக்கீலுக்குப் படிக்க வைச்சதுக்கு என் மேலேயே நீ கேஸ் போடுவியா?”

“ஆமாம் கேஸ் போடுவேன். அப்போ தானே நான் நல்லா படிச்சு இருக்கேனா இல்லையான்னு உங்களுக்குத் தெரியும்…”

“ஓஹோ! அப்படியா? சரிடா நீ கேஸ் போடு… நான் என் மகனை வச்சு இந்தக் கேசை ஒன்னும் இல்லாம ஆக்கிடுவேன்…”

“எந்த மகனை வச்சு?” என்று அன்னையைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“என் மகன் யாதவை வச்சுதான்…”

“உங்க மகன் யாதவ் தானே கேஸ் போட போறேன். அப்புறம் எப்படி என்னைய வச்சே கேசில் இருந்து வெளியே வருவீங்க?” குழப்பத்துடன் கேட்டான்.

“நீ வக்கீலா என் மேல கேஸ் போட்டனு வை. நான் என் மகன் யாதவ்கிட்ட அம்மா மேல ஒரு லூசு வக்கீல் ஒருத்தன் கேஸ் போட்டுட்டான்டா மகனே, நீ தான் இந்தக் கேஸில் இருந்து என்னை வெளியே வர வைக்கணும்னு சொல்வேன். அந்த லூசு வக்கீலை விட, என் மகன் வக்கீல் ரொம்ப நல்லவன். உடனே இந்த அம்மாவுக்காக, அந்த லூசு வக்கீல்கிட்ட பேசிக் கேஸை வாபஸ் வாங்க வச்சுருவான்…”

“அம்மோவ்… நான் உங்களுக்கு லூசா? என்னையே லூசுன்னு சொல்லிட்டு என்னையவே கேஸ் வாபஸ் வாங்க வைக்கச் சொல்லுவீங்களா?” என்று கோபத்துடன் கேட்டான்.

“நோ டா மகனே. நீ லூசு இல்லை. என் மேலே கேஸ் போடுறவன் தான் லூசு…”

“என்னமா குழப்புறீங்க? இரண்டுமே நான் தானே? அப்போ என்னைத்தானே சொல்றீங்க?” இப்போது அன்னை குழப்பியதில் ஏறிப் போன கடுப்புடன் கேட்டான்.

அவனின் கடுப்பில் கிருஷ்ணன், ராதா, பிரசன்னா மூவரும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.

அவர்கள் மாற்றி மாற்றிப் பேசியபடியே கிளம்பிக் கொண்டிருந்தனர்.
பிரசன்னா, அன்னை, தம்பியைப் பேச விட்டுவிட்டு மாடியில் சென்று கிளம்பி மாப்பிள்ளையாகத் தயாராகி வரவும், அப்படியே கிளம்பி விட்டனர்.

இப்போது பெண் வீட்டிற்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். காரிலும் விடாமல் பேச்சுத் தொடர்ந்து கொண்டிருந்தது.

பிரசன்னா காரை ஓட்ட, அவனின் அருகில் கிருஷ்ணன் அமர்ந்திருந்தார். பின்னால் ராதாவும், யாதவும் பேசிக் கொண்டே வந்தனர்.

மூவரும் சிரிக்க அதில் இன்னும் கடுப்பானவன், “அப்பா, அண்ணா… அம்மா சொல்றது உங்களுக்காவது புரியுதா என்ன? எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க?” என்று கேட்டான்.

“வக்கீலுக்கே புரியலையா? நீ எல்லாம் என்னடா வக்கீல்? நீ வக்கீலுக்கு சரியா படிக்கலைடா தம்பி. சிம்பிள் லாஜிக் கூடப் புரியாமல் குழம்பிப் போய் இருக்க…” என்று பிரசன்னா கேலி செய்தான்.

“ஓ! டாக்டர் உனக்குப் புரிஞ்சிடுச்சா? எங்கே புரிஞ்சதை சொல்லு பார்ப்போம்…”

“சொன்னா எவ்வளவு பீஸ் தருவ?” என்று பேரம் பேசினான் பிரசன்னா.

“வக்கீல்கிட்டயே பீஸா?”

“வக்கீலுக்கே நான் தானே கிளியர் பண்ணப் போறேன். அப்போ பீஸ் கொடுக்கணும் தானே?”

“நீ முதலில் சொல்லு! நான் பீஸ் தர்றதை பற்றி அப்புறம் யோசிக்கிறேன்…”

“யோசிக்கத்தான் செய்வியாக்கும்? சரி போனா போகுது, தம்பியாச்சேனு சொல்றேன்… நீ வக்கீலா அம்மா மேலே கேஸ் போட்டா, அம்மா உன்கிட்ட சென்டிமென்ட் பிட் போடுவாங்க. நீ தான் அம்மா கூட எவ்வளவு வாய் அடிச்சாலும், அம்மா கொஞ்சம் உருக்கமா பேசினா உருகிடுவாயே… அதில் நீயே கேஸை வாபஸ் வாங்கிடுவ தானே… அதான் நீ போட்ட கேஸை, உன்னை வச்சே வாபஸ் வாங்க வச்சுருவேன்னு சொல்றாங்க…” விம் இல்லாமலேயே விளக்கினான்.

“ஓ! அதானா? ம்ப்ச்! இதைக் கூடப் புரிஞ்சுக்காம கோட்டை விட்டுட்டேயே யாதவா…” என்று தன்னையே அவன் திட்டிக் கொண்டிருந்தபோது பெண்ணின் வீடு வந்திருந்தது.

மூவரையும் இறங்கச் சொல்லி விட்டுப் பிரசன்னா கடைசியாக இறங்கினான்.

பெண்ணின் வீடும் அவர்களின் வீட்டின் அளவும் பெரியதாகத் தான் இருந்தது.

பெண்ணின் தந்தை பைக் ஷோரூம் வைத்திருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். பெரிய பெண்ணைப் புதுச்சேரியில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.

பெண் தந்தைக்கு உதவியாகப் பைக் ஷோரூம் பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இறங்கிய அடுத்த நிமிடம், வேகமாக வந்து வரவேற்றார்கள் பெண் வீட்டார்கள்.

அதே நேரத்தில் தீபாவும், சரணும் குழந்தையுடன் வந்து சேர, மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் சேர்ந்தே உள்ளே சென்றனர்.

உள்ளே சென்று அமர்ந்ததும் பொதுவான சில பேச்சுக்கள் நடக்க, தீபாவின் குழந்தை மயூரி பிரசன்னாவின் மடியில் அமர்ந்திருந்தாள்.

பொதுவான பேச்சு வார்த்தைக்குப் பிறகு பெண்ணை அழைத்து வர, மனதில் துளிர்த்த ஆர்வத்துடனேயே பெண்ணைப் பார்த்தான் பிரசன்னா.

பச்சை நிறத்தில், மயில்களை ஆங்காங்கே உலாவ விட்ட சேலையில் அழகுப் பதுமையாக அனைவருக்கும் வணக்கம் சொல்லிய படி மணப்பெண்ணாக நின்று கொண்டிருந்தாள் வசுந்தரா!