என்னுள் யாவும் நீயாக – 30

அத்தியாயம் – 30

“வசு… வசு… வசு… நான் உங்களுக்கு வசு மட்டும் தானா? ஏன் வசுன்னு கூப்பிட்டு ஒவ்வொரு முறையும் உன்னை நான் மனசளவில் விலக்கித்தான் டீ வச்சுருக்கேன்னு சொல்லாமல் சொல்லிக் காட்டிக்கிட்டே என்னை உயிரோடு சாகடிச்சுட்டு இருக்கீங்க?

அப்படி நான் என்ன தப்புச் செய்தேன்? கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சது தப்பா? அதுதான் தப்புனா உங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.

எனக்கு என் வாழ்க்கை உங்க கூடத் தான்னு ஆண்டவன் எழுதி வச்சது அப்போ தெரியாம எவனையோ மனசில் நினைச்சது தப்புத் தான்.

ஆனால் எப்போ அவன் இன்னொருத்தி புருஷன்னு தெரிஞ்சதோ அப்பவே என் மனசில் இருந்து அவனைத் தூக்கி எறிஞ்சிட்டேன்.

இப்போ, இந்த நிமிஷம் உங்களைத் தவிர என் மனசில் யாருமில்லை! வேறு யாருமே இல்லை!

என் கணவனும் நீங்க தான்! என் காதலனும் நீங்க தான்! என் எல்லாமும் நீங்க தான்! நீங்க மட்டும் தான்!” என்று ஆவேசமாகக் கத்தினாள் வசுந்தரா.

வசுந்தரா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே உள்வாங்கிக் கொள்பவன் போல் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் பிரசன்னா.

வசுந்தரா கோபமாகக் கத்த ஆரம்பிக்கும் போதே கட்டிலை விட்டு இறங்கியிருந்தாள். பிரசன்னாவும் இறங்கி ஓரமாக நின்றிருந்தான்.

கட்டிலின் இந்தப் பக்கமாகச் சுவற்றில் சாய்ந்து பிரசன்னா நிற்க, அதற்கு எதிர்ப்பக்கமாக வசுந்தரா நின்று கத்திக்கொண்டு இருந்தாள்.

தன் மனதை எடுத்துச் சொன்னப் பிறகும் கணவன் ஒன்றும் பேசாமல் அப்படியே நிற்பதைக் கண்டவள் ஆவேசமாக அவனின் அருகில் சென்றாள்.

கணவன் போட்டிருந்த டீசர்ட்டை கொத்தாகப் பிடித்தவள் “உங்களுக்கு என் மேல் அப்படி என்னதான் கோபம்? நான் என்ன தப்புச் செய்தேன்? ஏன் என்னை விட்டு விலகி விலகிப் போறீங்க? சொல்லுங்க… சொல்லுங்க…” என்று உலுக்கிக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் பட்டென்று விழிகளைத் திறந்து மனைவியைக் கூர்மையாகப் பார்த்தான் பிரசன்னா.

சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேள்விக் கேட்ட பிறகும் சலனமே இல்லாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டு அவளின் ஆவேசம் இன்னும் தான் கூடிப் போனது.

“நீங்கதானே நாம இரண்டு பேரும் சேர்ந்து காஃபி குடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்து சாப்பிடுவோம்னு சொல்லி அந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது. ஆனா இப்ப அந்தப் பழக்கத்தை நிறுத்தி என்னைத் தவிக்க விடுறீங்களே ஏன்? சொல்லுங்க…”

“ஒரு ஐஞ்சு நிமிஷம் கிடைச்சாலும் அந்த நேரத்திலும் என் கூடத் தான் நேரம் செலவழிக்கணும்னு சொல்லி எப்போதும் என் கூடவே நேரம் செலவழிக்கும் பழக்கத்தைப் பழக்கப்படுத்தியது நீங்கதானே? ஆனா இப்போ என்ன விட்டு எவ்வளவு தூரம் விலகிப் போக முடியுமோ அவ்வளவு தூரம் விலகிப் போறீங்களே ஏன்? சொல்லுங்க…”

“தலையைக் கோதிக் கொடுனு வம்பு செய்து கோதிக் கொடுக்க வச்சுது நீங்க தானே? அப்படி இருக்கும்போது அன்னைக்கு நான் தலையில் கை வைச்சால் கையைத் தட்டி விட்டீங்களே ஏன்? சொல்லுங்க…”

“வேலைக்குப் போகும்போது கூட அந்த ட்ராவல் நேரத்திலும் என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டது நீங்கதானே? இப்ப ஏன் அந்தப் பழக்கத்தை நிறுத்தினீங்க? சொல்லுங்க…”

“முன்னாடியெல்லாம் நான் மெளனமா இருந்தாலும் நீங்க பேசி என்னையும் பேச வைத்தது நீங்கதானே? ஆனா இப்போ நான் பேசினாலும் நீங்க என்கிட்ட பேசாம தவிர்க்கிறீங்களே ஏன்? சொல்லுங்க…”

“அன்னைக்கு என்கிட்ட முத்தம் வேணும்னு கேட்டது நீங்கதானே? ஆனால் அதை நான் கொடுக்க வந்தபோது என்னை விட்டு விலகிப் போனீங்களே ஏன்? சொல்லுங்க…”

“அன்னைக்கு நீங்க கட்டிப்பிடிச்சப்போ எனக்கும் அதைப் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் மனதை உங்களுக்கு நான் உணர்த்தியும் என்னை உதறித் தள்ளினீங்களே ஏன்? சொல்லுங்க…”

“அக்கா வளைகாப்புக்கு என் கூடச் சந்தோசமா சிரித்துப் பேசிப் பாட்டு பாடிக் கொண்டு வந்தவர், என் கூடத் திரும்பி வர விருப்பம் இல்லாமல் பொய்ச் சொல்லிட்டு இங்கே ஓடி வந்தீங்களே ஏன்? சொல்லுங்க…”

“உங்களுக்கா தோன்றினால் என் பக்கத்தில் வந்து பேசுவதும், உங்களுக்கு விருப்பம் இல்லைனா என்னை விட்டு விலகுவதும், பேசாமல் தவிர்ப்பதும், என்னைத் தவிக்க விடுவதும் ஏன்? சொல்லுங்க…”

“சொல்லுங்க… நான் என்ன தப்புச் செய்தேன்னு சொல்லுங்க… எனக்கு இப்பவே எல்லாம் தெரிஞ்சாகணும் சொல்லுங்க…” என்று விடாமல் அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

ஆத்திரமாக, கோபமாக, வேதனையாக, வருத்தமாக, தவிப்பாக, வலியாக, உரிமையாக என்று பல்வேறு உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

அவளின் மனதிற்குள்ளேயே இத்தனை நாட்களாகக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தவள் ‌இன்று மொத்தமாக வெளியில் கொட்டிவிட்டாள்.

வசுந்தரா ஆவேசம் வந்தவள் போல் கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்க, அவளின் கணவனோ சற்றும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எனக்கு இப்போ நீங்க பதில் சொல்லியே ஆகணும்…” என்று அவள் இன்னும் உலுக்க…

பொறுமையாகத் தன் சட்டையைப் பிடித்திருந்தவளின் கை விரல்களைப் பிரித்து விலக்கி விட்டவன் “உன்னோட கேள்வியெல்லாம் கேட்டு முடிச்சிட்டியா? இல்லை இன்னும் இருக்கா?” என்று நிதானமாகக் கேட்டான்.

“நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் என்னைக் கேலி பண்றீங்களா?” என்று கோபமாகக் கேட்டவள் மீண்டும் அவனின் சட்டையைப் பிடிக்கப் போனாள்.

ஆனால் அவளின் இரண்டு கைகளையும் தன் ஒற்றைக் கையால் பிடித்துத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டான் பிரசன்னா.

“விடுங்க… விடுங்க… எனக்குப் பதில் சொல்லுங்க…” என்று துள்ளிக் கொண்டு கேட்டாள்.

“சொல்றேன் தாரா, சொல்றேன்… உன்னோட கேள்வி எல்லாத்துக்குமே பதில் சொல்றேன் தாரா…” என்று காதலுடன் சொன்னான் பிரசன்னா.

கணவன் ‘தாரா’ என்றழைத்ததில் கண்களைப் பெரிதாக விரித்து அவனைப் பார்த்தாள்.

“என்னடா இவன் இத்தனை நாளா ‘தாரா’ன்னு கூப்பிடாமல் இன்னைக்குத் ‘தாரா’ன்னு கூப்பிடுறானேனு பார்க்கிறீயா?” என்று பிரசன்னா கேட்டதும் ‘ஆமாம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டினாள் வசுந்தரா.

“ஏன்னா, இத்தனை நாளா நீ ‘வசு’வாக மட்டும்தான் இருந்தாய். ஆனா இன்னைக்குத் தான் நீ என் ‘தாரா’வாக மாறி இருக்கிறாய். என் ‘தாரா’வாக நீ மாறும் இந்த நாளுக்காகத் தான் நான் காத்திருந்தேன். அந்த நாள் இன்று தான் வந்தது…” என்றவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

“என்ன நான் சொன்னது புரியலையா?” என்று பிரசன்னா கேட்க, அதற்கும் ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தாள்.

“இத்தனை நாளும் நீ எப்படி இருந்தாய் என்று நீயே யோசித்துப்பார். உனக்கு என் இந்தப் பேச்சிற்கான அர்த்தம் விளங்கும்…” என்றான்.

கணவன் தன்னைத் தாரா என்றழைக்காத நாளிலிருந்து இப்போது வரை நடந்தவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தாள் வசுந்தரா. அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

“என்ன உனக்கு ஏதாவது புரிந்ததா?” என்று அவன் கேட்க ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தாள்.

“என்ன புரிஞ்சுதுன்னு நீயே சொல்லு…” என்றான்.

“உங்ககிட்ட ஒட்டாமல் யாரோ போல நடந்துகிட்டேன்…” என்று உள்ளே போன குரலில் சொன்னாள் வசுந்தரா.

“ஆனா இன்னைக்கு நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.

“உங்ககிட்ட உரிமையா கேள்விக் கேட்டேன்…” என்றாள்.

“யெஸ்! அதேதான்! உரிமையாகக் கேள்விகள் கேட்டாய்…” என்றான் அழுத்தமாக.

“அப்போ நானே உங்ககிட்ட உரிமையா பேசணும்னு தான் என்னைத் தவிர்த்தீங்களா?” என்று கேட்டாள்.

“ஆமாம்..‌. ஆனா அது மட்டும் காரணமில்லை…” என்றான்.

“இன்னும் வேற என்ன காரணம்?” என்று புரியாமல் கேட்டாள்.

“இப்படி வந்து உட்கார். நாம பேச வேண்டியது நிறைய இருக்கு…” என்று கட்டிலில் அமர்ந்து மனைவியையும் தன் அருகில் அமர வைத்துக்கொண்டான் பிரசன்னா.

மேஜையின் மீதிருந்த தண்ணீரை எடுத்து மனைவியிடம் கொடுத்தவன் “இந்தா குடி! நீ கத்துன கத்துக்குத் தொண்டை எல்லாம் காஞ்சு போயிருக்கும்…” என்று சிரிப்புடன் சொல்லித் தண்ணீரைக் குடிக்க வைத்தான்.

அவனின் கேலி பேச்சில் வசுந்தரா கணவனை முறைத்தாள்.

“அம்மாடி! முறைப்பு எல்லாம் பயங்கரமா இருக்கு. எனக்குப் பயமா இருக்கே…” என்று சிரித்துக்கொண்டே போலியாகப் பயந்தான் பிரசன்னா.

“கேலி பண்ணாம விஷயத்துக்கு வாங்க. இன்னைக்கு மட்டுமா நான் கேள்விக் கேட்டேன்? இதுக்கு முன்னாடியும் கேட்டுருக்கேன் தானே? அப்போ அதில் உரிமை இல்லையா?” என்று கேட்டாள் வசுந்தரா.

“கண்டிப்பா அதில் உரிமையில்லை! ஒரு பயம், தயக்கம், கேட்டால் என்ன சொல்வானோ என்ற தடுமாற்றம் மட்டும் தான் உன்கிட்ட இருந்தது…” என்றான்.

“ஓ! அப்போ இப்பவும் நான் உரிமையா கேள்விக் கேட்கலைனா என்னைத் தவிக்க விட்டுக்கிட்டே இருப்பீங்களா?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் பிரசன்னாவின் முகம் மாறிப் போனது. மனைவியின் கையைத் தன் கைகளுக்குள் அடங்கி அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.

“என் நிலையையும் நீ புரிஞ்சுக்கணும் தாரா. ஆசை ஆசையா உன்னை ரொம்பப் பிடிச்சுப் போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே அவளின் கன்னத்தை விரலால் லேசாக வருடினான்.

அவன் வருடியதில் கூச்சமாக இருந்தாலும் அவளுக்கும் அவனின் அருகாமை பிடித்திருக்க, அவனைத் தடுக்கவில்லை.

“ஆனால் பொண்ணு பார்த்ததில் இருந்து நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகும் கூட நீ ஒரு பிடிப்பு இல்லாம, முக்கியமா என் மேல் ஒரு பிடித்தம் இல்லாம நீ இருக்கிறாய்னு எனக்குத் தெரிஞ்ச பிறகு என்னை என்ன செய்யச் சொல்ற?” என்று கேட்டான்.

“உனக்கு என்னைப் பிடிக்கணும், பிடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ செய்தேன்…” என்றான்.

“ஆனாலும்…” என்று அவள் வருத்தத்துடன் ஏதோ சொல்ல முனைந்தாள்.

“இரு! நமக்குக்கிடையே நிறைய வருத்தங்கள், வலிகள் இருக்கு. நம்ம சந்தித்த நாளில் இருந்து ஏதாவது உன் மேல் எனக்கு மனஸ்தாபம் வருவது போலச் சில விஷயங்கள் நடந்திருக்கு. அதை எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நாம பேசித் தெளிவாகிட்டா தான் என் பக்கமும் உனக்குப் புரியும். உன் பக்கமும் எனக்குப் புரியும். ஆரம்பக்காலக் கசடுகள் நம்மை விட்டுப் போனால் தான், இனி நாம வாழப் போற வாழ்க்கை எந்தவித உறுத்தலும் இல்லாம இருக்கும். அதனால் அதை எல்லாம் பேசுவோமா?” என்று கேட்டான்.

அவளும் ‘சரி’ என்று சொல்ல, சில நொடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பேச்சைத் துவங்கினான் பிரசன்னா.

“முதல் விஷயம் அந்த ரிப்போர்ட். அதைப் பற்றி நான் தான் மேலும் பேச வேண்டாம்னு சொன்னேன். ஆனால் இதில் நம்ம இரண்டு பேர் மனநிலையும் என்னன்னு நாம பேசிக்கிறது நல்லதுன்னு தோணுது. அதனால் பேசியே விடுவோம்…” என்றான்.

“நான் எடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்க்கு பதிலுக்கு நீயும் எடுத்துட்டு வரணும்னு நான் நினைக்கவே இல்லை. இன்னும் நீ அதைச் செய்திருக்க வேண்டாம் என்பது தான் என் எண்ணம். அன்னைக்குச் சிஸ்டர் விஷயம் சொன்னதும் எனக்குச் செம கோவம்…” என்று இப்போதும் கோபமாக மனைவியை முறைத்தான்.

“சாரி…” என்று முனங்களாகச் சொல்லி கணவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“உங்களுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைச்சேன். அதனால்தான் எப்படியும் நான் காதலிச்ச விஷயத்தைச் சொல்லும் போது அந்த ரிப்போர்ட்டைப் பார்த்தால் என்னை நீங்க சுத்தமானவள் என்று நம்புவதற்கு ஏதுவாக இருக்கும்னு தான் எடுத்தேன்…” என்று தயக்கத்துடன் முனகினாள்.

“இப்படி நினைச்சுத்தான் நீ ரிப்போர்ட் எடுத்து இருப்பாய்னு நம்ம பஸ்ட் நைட் அன்னைக்கு உண்மையைச் சொல்றேன்னு பழைய விஷயத்தைச் சொன்னப் போதே எனக்குப் புரிஞ்சுது. ஆனாலும் அப்படி ரிப்போர்ட் பார்த்து ஆராய்ச்சி செய்து உன்னை நான் நம்பணும் என்ற அளவுக்கு என்னைக் கெட்டவனா நீ நினைச்சிருக்கன்னு நினைக்கும்போது எனக்குக் கஷ்டமா இருந்தது…”

“இல்ல… இல்ல… உங்களைக் கெட்டவனா நினைச்சு அப்படிச் செய்யலை. ஆனா உங்களைப் பத்தி எனக்கு அப்போ ஒரு விவரமும் தெரியாதே? அதனால் என்னை நிரூபிக்க முன்னெச்சரிக்கையாக இருந்தேன். அவ்வளவுதான்!” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“அது உன் பக்க நியாயமா இருக்கலாம். ஆனால் நீ அப்படி நிரூபிக்கணும்னு நான் எதிர்பார்க்கலை. ஏன்னா நான் உன்னை நம்புறேன்…” என்றவன் அவளின் கையை அழுத்திப் பிடித்தான்.

கணவனின் நம்பிக்கையில் நெக்குருகிப் போனாள் வசுந்தரா.

“ஆனா அந்த ரிப்போர்ட் விஷயம் எனக்கு இன்னும் ஒன்றையும் உணர்த்தியது…” என்றான்.

“என்ன அது?”

“நீ பக்கா அரிச்சந்திரினி என்று தான்…” என்று சொல்லி மனைவியின் நெற்றியில் லேசாக முட்டினான்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நான் பொய்யும் பேசுவேன்…” என்றவளுக்குக் கிருபாகரனைப் பார்க்கப் பெற்றோரிடம் பொய்ச் சொல்லி விட்டுச் சென்றது ஞாபகத்தில் வந்தது

அப்படிப் பொய்ச் சொன்னதால் தான் தன் காதல் தோற்றுவிட்டதோ என்று கூட நினைத்திருக்கிறாள். அந்த எண்ணம் தான் பிரசன்னாவுடன் திருமணம் என்று முடிவானதும் அவனிடம் உண்மையைச் சொல்லித்தான் வாழ்க்கை என்று உறுதியாக இருந்தாள்.

காதல் வேண்டுமானால் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் கண்டிப்பாகத் தான் திருமண வாழ்க்கையில் தோற்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் கணவன் தன்னைத் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று சொன்னாள்.

‘தான் உண்மையாக இருந்ததற்காகக் கடவுள் கொடுத்த பரிசுதான் தன் பிரசன்னா’ என்று இப்போது உறுதியாக நம்பினாள்.

“நீ பொய்ச் சொல்லுவியா மாட்டியா என்றெல்லாம் நான் ஆராயலை. ஆனால் நீ என்னிடம் உண்மையாகத் தான் இருந்தாய். அதற்கு அத்தாட்சியாக நம்ம முதல் இரவு அன்னைக்கு அதை நிரூபிச்சுட்ட…” என்றவன் முகம் கலக்கத்தைக் காட்டியது.

“இந்த இடத்தில் உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேங்க…” என்றவள்,

“அன்னைக்கு நீங்க என்னிடம் ஒரு கேள்வி கேட்டீங்க. எப்படிக் குற்றவுணர்வு இருந்தும் நம்ம கல்யாணத்தில் உன்னால் இயல்பாக நடந்து கொள்ள முடிந்தது என்று. அப்போ எனக்குப் பதில் தெரியல‌. ஆனா இப்ப சொல்றேங்க. உங்களைப் பார்த்த நாளில் இருந்து ஏதோ ஒரு விதத்தில் என் மனதை நீங்க பாதித்து இருக்கீங்க. ஆனால் எனக்கு அப்ப புரியவே இல்லை. அது இப்ப நன்றாகவே புரிகிறது. என் மனசு உங்கள் மீது சலனப்படவும் தான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி உண்மையைச் சொல்ல முடியாமல் தடுமாறி இருக்கேன். எங்கே உங்களை நான் மிஸ் பண்ணி விடுவானோ என்று எனக்கே தெரியாமல் உள்ளுக்குள் இருந்த ஒருவித அச்சத்தில் தான் உண்மையைச் சொல்லாமல் தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்திருக்கேன்.

என் மனசு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பக்கம் சாயத்தான் செய்தது‌. அதேநேரம் அப்போ எல்லாம் உங்ககிட்ட உண்மையை மறைக்கிறேனே என்ற குற்றவுணர்வு என்கிட்ட அதிகம் இருந்தது. அதோட இன்னொரு முறை எனக்கு எப்படிக் காதல் வரும்னு தவறாக நினைத்து எனக்கு நானே கடிவாளம் போட்டுக்கிட்டேன்…” என்று தயக்கமாகச் சொன்னாள்.

அவள் சொன்னப் பதில் அவனின் காயம்பட்ட நெஞ்சத்திற்கு மருந்தாக இருந்ததோ? மனைவியின் கையை எடுத்து அதில் மென்மையாக முத்தம் பதித்தான் பிரசன்னா.

“நீ இப்ப சொன்னதை அன்னைக்கு உன்கிட்ட நான் பேசும் போதே புரிஞ்சுகிட்டேன்…”என்றான்.

“என்ன அப்பவேவா?”

“ஆமா அப்பவே புரிஞ்சுகிட்டேன். அந்தப் புரிதல் தான் எனக்குச் சில முடிவுகள் எடுக்க உறுதுணையாக இருந்தது…” என்றவன்,

“ஆனாலும் ஆரம்பத்தில் குற்றவுணர்வுல இருந்து நீ தப்பிக்க உண்மையைச் சொல்லி எனக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்தாய் என்று தெரியுமா?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

அவனின் வருத்தத்தை அன்றே உணர்ந்தவள் தானே! அதனால் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.

“ஏன் சொல்லுங்க… ஏன் சொல்லுங்கன்னு என்கிட்ட நீ எத்தனை கேள்விக் கேட்ட? அதுக்கு எல்லாம் பதில் இதோ சொல்றேன்…” என்றவன் வருத்தமான பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்.

பின் மெதுவாகத் தொண்டையைச் செருமி “முன்னாடியே ஒருத்தனைக் காதலிச்சன்னு அன்னைக்கு நீ சொன்ன போது எனக்கு இதோ இங்க வலிச்சது…” என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டியவன் “அன்னைக்கு உணர்ந்தேன்… நீ மட்டும் காதலில் தோற்றுப் போகலை. நானும் தான் காதலில் தோற்றுப் போனேன்…” என்று சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“ஆமாம்… நானுந்தான் காதலில் தோற்றுப் போனேன். உன்மேல் நான் வைத்த காதலில்!” என்று சொன்னவன் அப்போது உணர்ந்த வலியை இப்போதும் அனுபவிப்பவன் போல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

முகத்தில் மட்டுமில்லாது குரலிலும் வலி பிரதிபலிக்கக் கணவன் கூறியதைக் கேட்டுத் தானும் அவனை வலியுடன் பார்த்தாள் வசுந்தரா.