என்னுள் யாவும் நீயாக! – 3

அத்தியாயம் – 3

கிருபாகரனுடன் பேசிவிட்டு எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று வசுந்தராவிற்கே தெரியாது.

தன்னுடைய காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வரும் என்று அவள் சிறிது கூட நினைத்துப் பார்த்தாள் இல்லை.

காதலித்தவனையே கை பிடிப்போம் என்ற நம்பிக்கையுடன் தான் அவனின் காதலையே ஏற்றுக் கொண்டாள் வசுந்தரா.

ஆனால் இன்றோ அத்தனையும் மாறி காதலில் தோற்று விட்டு வந்திருக்கிறாள்.

காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் அது அவளைத் துரத்திக் கொண்டுதான் இருந்தது.

‘தான் ஏமாந்த உணர்வு! ஏமாற்றப்பட்ட உணர்வு!’ என்று இரு வகையில் ஆட்கொள்ளப்பட்டவள் தன்னைத் தாக்கிய சோகத்துடன் தன் அறையில் படுத்துக் கிடந்தாள்.

ஆம்! அவள் கிருபாகரனை சந்தித்துப் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. இந்த இரண்டு நாட்களை அவள் கடப்பதற்குள் இரண்டு யுகங்களாகத் தான் தெரிந்தன.

இன்னும் அவளின் மனக்கண்ணில் கிருபாகரன் இன்னொருத்தியுடன் மணக்கோலத்தில் இருந்ததே கண்முன் தோன்ற கண்களை மூடி அந்த உருவங்களை விரட்ட முயன்றாள்.

ஆனால் அது முடியாமல் போக, கண்களைத் திறந்தவள் தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டு அவளின் தலைக்கு நேரே சுற்றிய காற்றாடியை வெறித்துப் பார்த்தாள்.

கூடவே தங்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தைகளும் ஞாபகத்தில் வந்தன.

‘உன் பெத்தவங்களுக்காக என்னை உயிரோடு கொன்றுவிட்டாய்!’ என்று வசுந்தரா சொன்ன அடுத்த நிமிடம் அதிர்ந்து அவளைப் பார்த்தான் கிருபாகரன்.

அவனின் கண்களில் உயிர் போகும் வலி தெரிய, “ப்ளீஸ் வசுந்தரா… இப்படி எல்லாம் பேசாதே!” என்றான் வலியுடன்.

“ஹா… உங்களால் நான் பேசுவதையே தாங்க முடியலையா? ஆனா இப்போ இந்த நிமிஷம் எனக்கு அப்படித்தான் இருக்கு. நான் உயிரோடு இருந்தும் செத்துப் போனது போலத் தான் இருக்கு…” என்றாள்.

விரக்தியுடன் வெளி வந்த அவளின் வார்த்தைகளில் தவித்துப் போனவன் “ஸாரி வசுந்தரா…” என்றான்.

“போதும் கிருபாகரன்! இனி ஸாரி சொல்லி எதுவும் மாறப்போவது இல்லை. உங்க ஸாரியால் என்னோட வேதனையும் போகாது. உங்களுக்கு நடந்த கல்யாணமும் மாறாது. அதனால் தேவையில்லாமல் உங்க ஸாரியை வேஸ்ட் பண்ண வேண்டாம்…” என்று எரிச்சலுடன் சொன்னவள் கீழே குனிந்து தன் கைபேசியை எடுத்தாள்.

அவளின் கைபேசி புல் தரையில் தான் விழுந்திருந்ததால் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

அதைக் கண்டதும் இது உடைந்தே போயிருக்கலாம் என்று தான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.

அதிலும் இன்னும் திரையில் மின்னிக் கொண்டிருந்த கிருபாகரனின் திருமணப் புகைப்படம் ‘கைபேசியைத் தானே உடைத்து விட்டால் தான் என்ன?’ என்ற எண்ணத்தை அவளுக்கு வர வைத்துக் கொண்டிருந்தது.

அந்த எண்ணத்தையும் உதறித் தள்ளியவள் அவனின் திருமணப் புகைப்படத்தை முதலில் அழித்தாள். அடுத்ததாக அவளின் கைபேசியில் இருந்த அவனின் புகைப்படங்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்தாள். அடுத்ததாக அவனின் தொலைபேசி எண்களை அழித்தாள்.

பின்பு கைபேசியைத் தூக்கி அவனின் முகத்திற்கு நேராகக் காட்டியவள் “இதுல உங்க சம்மந்தப்பட்டது எல்லாத்தையும் டெலிட் பண்ணியது போல, என் மனசுல இருந்தும் நீங்க கூடிய சீக்கிரமே டெலிட் ஆகணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்…” என்றவள் அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்தாள்.

நின்றபடியே ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டவள் அவனை நிதானமாகத் திரும்பிப் பார்த்து “குட்பை மிஸ்டர்.கிருபாகரன்!” என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவனின் புகைப்படத்தைப் பார்த்து ஆரம்பத்தில் கண்கலங்கியவள், அதன் பிறகு அவனின் முன் சிறிது கூடத் தன் கண்ணீரை காட்டவில்லை. அப்படியே இறுகிப் போயிருந்தாள். அவனிடம் உறுதியுடன் பேசி விட்டுப் பூங்காவிலிருந்து வெளியேறினாள்.

அவள் போவதையே வேதனையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கிருபாகரன்.

அவனின் உதடுகள் “நானும் அதையே வேண்டிக்கிறேன் வசுந்தரா…” என்று முணுமுணுத்துக் கொண்டன.

அதற்கு மேல் அவனிடம் ஒன்றும் பேசாமல் வந்து விட்டாலும் அவளின் உணர்வுகள் வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தன. உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள்.

‘பெற்றோரைச் சமாளிக்கத் தெரியாதவன் எதற்காகக் காதலிக்க வேண்டும்? அவர்களைச் சமாளிக்க முடியவில்லை எனும் போது அவனைக் காதலித்த பாவத்திற்காகத் தன்னிடம் ஒரு முறை சொல்லி என்ன செய்வது என்று சேர்ந்து பேசி இருக்கலாமே?

நானே என்ன பிரச்சனை என்று வழிய கேட்ட போதும் சொல்லாமல் இருந்ததிலிருந்தே தெரியவில்லையா அவன் தன்னை விலக்கி வைக்கும் முடிவை எடுத்து விட்டான் என்று? காதலியைக் கைப்பிடிக்க முடியாத கோழை எல்லாம் ஏன் காதலிக்க வேண்டும்?’ இப்படியெல்லாம் அவனிடம் கேள்விக் கேட்க வேண்டும் என்று அவளின் நாவு துடிக்கத் தான் செய்தது.

ஆனால் இனி கேட்டு என்ன ஆகப்போகின்றது? இப்பொழுது அவன் இன்னொருத்தியின் கணவன்!

‘இன்னொருத்தியின் கணவனிடம் போய் இப்படிக் கேள்விக் கேட்பது தன் பெண்மைக்கு இழுக்கு’ என்று நினைத்து தான் அவனிடம் எதுவும் கேட்காமல் கிளம்பி வந்தாள்.

“சரியான கோழை…” என்று அவளின் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டன.

அவனைப்பற்றிக் கோபத்துடன் நினைத்துக் கொண்டே தன்போக்கில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

வந்தவுடன் அவளின் அன்னையின் முன் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தவள் இரவு உணவு முடிந்ததும் படுக்கையில் படுத்துக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

அவளின் தந்தை வெளியூர் சென்றிருந்ததால் அவரின் முன்பும் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்படாமல் போனது.

அவ்வளவு நேரமாக அடக்கி வைத்த வேதனை எல்லாம் கண்ணீராக வெளியே வந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் கம்பெனிக்கு சென்றாலும் இரவில் வந்து வீட்டில் கண்ணீர் வடித்தாள்.

அந்த இரண்டு நாட்களும் கிருபாகரன் வேலைக்கு வராததால் அவளுக்கு அவனின் முகத்தில் முழிக்க வேண்டிய சங்கடம் ஏற்படவில்லை.

ஆனால் அவன் மறுநாள் வேலைக்கு வருவதாக இருந்ததால் நாளை எப்படித் தான்‌ அவனை எதிர்கொள்ளப் போகிறோம் என்று நினைத்து வருந்தினாள்.

தானே ஓடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு அவள் எதுவும் தவறு செய்யவில்லை தான்!

ஆனால் ஒரு காலத்தில் தன் மனதை கவர்ந்தவன், இப்பொழுது இன்னொருத்தியின் கணவன் என்ற நிலையில் இருப்பவனின் முகத்தில் விழிக்க அவளுக்கு விருப்பமில்லை.

அதனால் நாளை வேலைக்குப் போவதைப் பற்றி என்ன செய்வது? என்ற யோசனையுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அவளின் அறைக்கதவை தட்டி “தூங்கிட்டியா வசு?” என்று கேட்டுக் கொண்டே கல்பனாவும், அவளின் தந்தை எத்திராஜும் அறைக்குள் நுழைந்தார்கள்.

வேகமாகப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவாறு “இல்லம்மா, இன்னும் தூங்கல…” என்றாள்.

“நீ தூங்கி இருக்க மாட்டனு தெரிஞ்சு தான் வந்தோம்…” என்றபடி கல்பனா அவளின் அருகில் கட்டிலில் அமர, கட்டிலுக்கு எதிரே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு எத்திராஜ் அமர்ந்தார்.

அன்னையும், தந்தையும் சேர்ந்து தன் அறைக்கு வந்ததை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் “என்னமா?” என்று கேட்டாள்.

“என்னன்னு நீ தான் சொல்லணும் வசு…” என்றார் எத்திராஜ்.

“நான் என்னப்பா சொல்லணும்?” என்று அவள் குழப்பத்துடன் கேட்க, “நீ ஏன் இப்படி இருக்கனு சொல்லணும்…” என்றார் கல்பனா.

“ஏன்மா நான் எப்படி இருக்கேன்? எப்பவும் போலத் தானே இருக்கேன்…” என்றாள் உள்ளுக்குள் ஏற்பட்ட திடுக்கிடலுடன்.

“போதும் வசு! நீ எங்ககிட்ட மறைச்சது. உன் கண்ணே உன்னோட தவிப்பை எல்லாம் எங்ககிட்ட காட்டிக் கொடுத்திருச்சு. உனக்கு என்ன பிரச்சனைனு சொல்லு! அப்பா தீர்த்து வைக்கிறேன்…” என்றார் எத்திராஜ்.

அவர் அப்படிக் கேட்டதும் அதிர்ந்து அன்னையையும், தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள் வசுந்தரா.

தான் சொல்லாமலேயே தன் தவிப்பை உணர்ந்து தன்னிடம் கேட்ட பெற்றவர்களைக் கண்டு அவளின் மனம் நெகிழ்ந்து போனது.

அதே நேரத்தில் அவளின் கண்கள் சட்டென்று கலங்கிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தன.

மகளின் கண்ணீரைப் பார்த்ததும் பதறி “என்னடா? என்னம்மா?” என்று மாறி மாறி கேட்டுத் தவித்துப் போனார்கள் அந்தப் பெற்றோர்.

அவர்களின் தவிப்பைப் பார்த்து இன்னும் தான் அவளுக்கு அழுகை வந்தது. அழுது கொண்டே கல்பனாவின் தோளில் சாய்ந்தாள்.

அவளின் அழுகை கூடியதில் பெற்றவர்களுக்கு இன்னும் பதட்டம் அதிகரித்தது.

“என்ன வசு? என்ன?” என்று கல்பனா அவளைப் பிடித்து உலுக்க, “ஸாரிமா… ஸாரிபா…” என்று அழுது கொண்டே சொன்னாள் வசுந்தரா.

“எதுக்கு ஸாரி சொல்ற? என்னன்னு சொல்லுமா…” என்று தவிப்புடன் கேட்டார் எத்திராஜ்.

தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே அன்னையின் தோளில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தவள் “ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம மறைச்சுட்டேன். என் கம்பெனியில் கிருபாகரன் என்ற ஒருத்தரை…” என்று ஆரம்பித்தவள் தற்போது நடந்தது வரை அனைத்தையும் பெற்றவர்களிடம் கொட்டிவிட்டாள் வசுந்தரா.

மகள் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் சிலையாகிப் போனார்கள் எத்திராஜும், கல்பனாவும்.

அவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

மகள் காதலில் விழுந்தது ஓர் அதிர்ச்சி என்றால், அக்காதல் தோல்வியில் முடிந்தது இன்னும் ஓர் அதிர்ச்சியாக இருந்தது.

அவர்கள் காதலுக்கு எதிரி இல்லை தான்.

அவர்களின் மூத்த மகள் காஞ்சனா சென்னை கல்லூரியில் பேராசிரியையாக வேலையில் இருந்த போது புதுச்சேரியில் இருந்து அவள் வேலை பார்க்கும் கல்லூரிக்கு ஒரு செமினார் எடுக்க வந்த கமலேஷ் அவளைப் பிடித்திருக்கிறது என்று சொல்ல, காஞ்சனா தன் வீட்டில் வந்து பேசச் சொல்ல, அவனும் வந்து பேசினான்.

கமலேஷ் பேசவும் முதலில் மகளிடம் ‘உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டு, அவள் பிடித்திருக்கிறது என்று சொன்ன பிறகு தான் மேற்கொண்டு பேசி, விசாரித்துத் திருமணத்தை முடித்து வைத்தனர்.

இப்போது காஞ்சனா புதுச்சேரியில் கணவன் வேலை பார்க்கும் கல்லூரியிலேயே வேலை வாங்கிக் கொண்டு செட்டில் ஆகியிருந்தாள்.

இளைய மகள் காதல் என்று வந்து நின்றிருந்தாலும் மாப்பிள்ளை பற்றித் தீர விசாரித்து விட்டு மணம் முடித்து வைத்திருப்பார்கள்.

அவர்கள் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் வசுந்தரா சிறிது அசால்டாக இருந்தாள்.

ஆனால் இப்போதோ காதல் தோல்வியில் முடிய அவர்களிடம் ஆறுதல் தேடுவதை மட்டுமே அவளால் செய்ய முடிந்தது.

பெற்றவர்களிடம் பொய்ச் சொல்லி தன் காதலை வளர்க்க சென்றதால் தான் தன் காதல் தோல்வியில் முடிந்ததோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

‘தன்னை நம்பியவர்களை ஏமாற்றினால் அதற்குத் தக்க பலன் கிடைக்கத்தானே செய்யும்!’ என்று நினைத்தவள் அன்னையின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் அழவும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த கல்பனா, மகளின் முகத்தை நிமிர்த்தி, “இன்னும் அந்தப் பையனையே நினைச்சுட்டு இருக்கியா?” என்று கேட்டார்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “சொல்லு வசு…” என்று அழுத்திக் கேட்டார்.

“ஏமாற்றமா இருக்கு…” என்றாள்.

“தப்பு பண்ற வசு…” என்று பட்டென்று சொன்னார்.

“அம்மா?” என்று வசு கேள்வியுடன் அவரைப் பார்க்க, “ஆமா… தப்பு தான் பண்ற. இத்தனை நாளும் மனசில் நினைச்ச பையனை உடனே மறக்குறது கஷ்டம் தான். ஆனா மறந்து தான் ஆகணும். அந்தப் பையன் அவங்க அம்மா அப்பாவுக்காகவாவது அந்தப் பொண்ணோட சேர்ந்து வாழணும்னு முயற்சி பண்ணிட்டு இருப்பான்.

ஆனா நீ அவனையே நினைச்சுட்டு இருப்பியா? கிருபாகரன் என்ற மனுஷனோட உனக்கு இருந்த அத்தியாயம் முடிஞ்சு போயிருச்சு. இனி உன்னோட புது அத்தியாயம் என்ன என்பதை மட்டும் பார்!” என்று அழுத்தமாகச் சொன்னார் கல்பனா.

“புரியுதும்மா…” என்று அன்னையிடம் சொன்னவள் தந்தையின் புறம் திரும்பி, “எனக்கு இனிமே அங்க வேலைக்குப் போகப் பிடிக்கலைப்பா. நாளைக்கு அங்க போறதை நினைச்சாலே மனசை ஏதோ பண்ணுது. அவ்வளவா நான் கோழையா போய்ட்டேன்னு என்னை நினைச்சே கஷ்டமா இருந்தாலும், நான் இதிலிருந்து மீண்டு வர அந்த ஆபிஃஸுக்குப் போகாம இருக்குறது தான் சரிவரும்னு தோணுது…” என்றாள்.

“ஹ்ம்ம்… புரியுது வசு. இனி நீயே கேட்டாலும் நான் அந்த ஆபிஃஸுக்கு உன்னை அனுப்புறதா இல்லை. நீ இனி என் கூடவே வேலைக்கு வா. உனக்கும் மாற்றமா இருக்கும். எனக்கும் உதவியா இருக்கும்…” என்றார்.

அன்னை, தந்தையிடம் பேசியதில் சிறிது தெளிந்த வசுந்தரா மறுநாள் அலுவலகத்திற்குச் சென்று தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தாள்.

தன் தந்தையிடம் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்க, புது வேலை அவளுக்கு மாற்றம் தர உதவியாக இருந்தது.

அன்னையும், தந்தையும் அவளுக்கு உறுதுணையாக இருக்கக் காதல் தோல்வியில் இருந்து முழுதாக மீண்டு வர முயன்று கொண்டிருந்தாள்.