என்னுள் யாவும் நீயாக – 23

அத்தியாயம் – 23

வசுந்தரா திரும்ப வேலைக்குச் செல்ல ஆரம்பித்து ஒரு மாதம் கடந்திருந்தது.

அன்று முதல் நாள் வேலைக்குக் கிளம்பும் போது முத்தம் கேட்டுப் பின்னர் அதைக் கொடுக்க விடாமல் தவிக்க விட்ட பிறகு, இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய திரை விழுந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

காலையில் அவன் மருத்துவமனைக்குக் கிளம்பும் போதே அவளையும் கிளப்பி விட்டுத் தானே போகும் வழியில் அவளை இறக்கி விட்டுச் செல்பவன், மதியமும் தான் வீடு திரும்பும் நேரத்தில் அவளை அழைத்துக் கொள்வான்.

ஒருவேளை மதியம் அவனால் வர முடியவில்லை என்றால் அவளின் தந்தையின் காரில் வீடு வந்து விடுவாள். இல்லையென்றால் அப்படியே அருகில் இருக்கும் மாமனாரின் ஷோரூமிற்குச் சென்று விடுவாள்.

மாலையிலும் அவளைத் தந்தையின் ஷோரூமில் இறக்கி விடுவான். இரவு மாமனாருடன் திரும்ப வீடு வந்து விடுவாள்.

இரவு பிரசன்னா வர எப்படியும் பத்து மணி ஆகிவிடும்.

‘நானே தனியாக இருசக்கர வாகனத்தில் போய்க் கொள்கிறேன்’ என்று அவள் சொல்ல, வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அவர்களுக்கு முன் பிரசன்னா சம்மதிக்கவில்லை.

‘நானும் அந்த வழியாகத் தான் தினமும் செல்வேன். என் கூடவே வந்து விடு’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.

பெரியவர்களும் ‘தனியாகச் செல்ல வேண்டாம். ஒன்று பிரசன்னாவுடன் செல்! இல்லையென்றால் உனக்குத் தனியாகக் கார் வாங்கித் தருகிறோம்’ என்று விட்டார்கள்.

காரில் செல்ல வசுந்தராவிற்கு விருப்பம் இல்லை என்று தெரிய, ‘அப்போ பிரசன்னா கூடப் போ! மற்ற நேரம் எங்கள் கூடக் காரில் வா!’ என்று அவளின் மாமனாரும், அப்பாவும் சொல்லி விட, அவர்களின் பேச்சை அவளால் மீற முடியவில்லை.

அவளுடன் இருக்கும் மணித்துளிகள் எந்த நேரத்திலும் குறைவதைப் பிரசன்னா விரும்பாததே அவளைத் தனியாகச் செல்ல விடாததன் காரணமாக இருந்தது.

திரும்பி வரச் சுலபம் என்று அவள் இருசக்கர வாகனத்தில் செல்ல ஆரம்பித்தால் அப்போது தான் அவளை அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்தவன் அவள் தனியே செல்லத் தடை விதித்திருந்தான்.

இப்போதும் மருத்துவமனைக்குக் கிளம்பும் நேரத்தில் மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டான்.

அது ஒரு மாலை நேரம்!

மதியம் உணவு நேரம் முடிந்து வீட்டில் இருந்து விட்டு, மாலை அவர்களின் வேலையைப் பார்க்கக் கிளம்பி இருந்தனர்.

சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்க, ஸ்டேரிங்கை அழுத்தமாகப் பற்றிய படி காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் பிரசன்னா.

காரில் ஒலித்த மெல்லிசைக்கு ஏற்ப அவனின் வாய் அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டு மட்டும் இருந்தது.

அவனின் அருகில் பார்வையால் சாலையை வெறித்த படி அமர்ந்து வந்து கொண்டிருந்தாள் வசுந்தரா.

தன் மனதில் இருந்த அழுத்தம் முகத்தில் தெரியாமல் இருக்கத் தன் பாவனைகளை மாற்றி முயன்று இயல்புக்குக் கொண்டு வந்திருந்தாள்.

ஆனால் உள்ளே அவளின் மனது புழுங்கிக் கொண்டு தான் இருந்தது.

அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அப்போது ஒலித்த ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு வந்தான். அவனின் கவனம் சாலையிலும், பாடலிலும் மட்டுமே இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

சற்று முன் வீட்டில் நடந்ததை மறந்தவன் போல நடந்து கொண்டான். ஆனால் வசுந்தரா அதிலிருந்து வெளியே வரவில்லை. இருவருக்குள் நடந்ததையே மனதில் நினைத்துக் கொண்டும், அப்படி நடந்து கொண்ட கணவனைப் பார்த்துக் கொண்டுமே வந்து கொண்டிருந்தாள்.

அன்று மதிய உணவை முடித்து விட்டு அறைக்குச் சென்ற பிரசன்னா மிகவும் சோர்வுடன் காணப்பட்டான்.

அவனுடனே அறைக்குச் சென்ற வசுந்தரா அவனின் சோர்ந்த முகத்தையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வழக்கமாகச் சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது என்னும் பழக்கமுடைய பிரசன்னா அன்று வழக்கத்திற்கு மாறாக நேராகச் சென்று படுக்கையில் விழுந்தான்.

அதன் பிறகும் அமைதியாக இருக்க முடியாமல் “என்னாச்சுங்க, படுத்துட்டீங்க?” என்று தான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் அமர்ந்து கேட்டாள் வசுந்தரா.

“தலை வலிக்குது வசு…” என்றவன் கையை வைத்து நெற்றியை அழுந்த பற்றிக் கொண்டான்.

“ஓ..! மாத்திரை எதுவும் போட்டீங்களா?” என்று கவலையுடன் கேட்டாள்.

“மாத்திரை எல்லாம் சும்மா தேவையில்லாம போடக்கூடாது வசு. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிடும்…” என்றான் கண்களைத் திறக்காமல்.

“உங்களுக்கு ரொம்ப வலிக்குது போல இருக்கே? குரலே சோர்வா இருக்கு…” என்றாள்.

“ம்ம்… ரொம்ப வலி தான். இன்னைக்குக் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். அதான்…” என்றவன் நெற்றியில் கண்களை மறைப்பது போல் வைத்திருந்த கையை எடுத்து மீண்டும் நெற்றியைத் தானே அழுத்தி விட்டுக் கொண்டான்.

நெற்றியை அவனே பிடித்துக் கொள்வதைப் பார்த்து “நான் வேணும்னா தைலம் தேய்ச்சு விடட்டுமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்

அவளின் கேள்வியில் பட்டென்று கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவன், “உனக்கு ஓகேனா தேய்ச்சு விடு…” என்றான்.

‘அதென்ன எனக்கு ஓகேனா? எனக்கு ஓகே இல்லாமலா கேட்டேன்…’ என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவள், எழுந்து சென்று அலமாரியில் இருந்த தைலத்தை எடுத்து வந்து மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள்.

“கையை எடுங்க, தேய்ச்சு விடுறேன்…” என்று அவன் நெற்றியில் வைத்திருந்த கையைப் பார்த்துச் சொல்ல, அவனோ அசையாமல் இருந்தான்.

“என்னங்க…” என்று மீண்டும் அவள் அழைக்க,

“நீயே…” என்று குரல் மட்டும் கொடுத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி தயங்கினாலும் இன்னும் அவனை நெருங்கி அமர்ந்து நெற்றியின் மீதிருந்த அவனின் கையை மென்மையாகப் பற்றி விலக்கி வைத்து விட்டுத் தைலத்தை எடுத்து மெதுவாகத் தேய்க்க ஆரம்பித்தாள்.

அவள் கையை எடுத்து விட்ட போதும், தைலத்தைத் தடவி விட ஆரம்பித்த போதும் கண்களை மூடியிருந்த பிரசன்னா அவள் நடு நெற்றியில் அழுத்தித் தேய்த்து விட்ட போது கண்களைப் பட்டென்று திறந்து கொண்டான்.

அவனின் விழிகள் திறந்ததும் அவளின் கை, அசைவை அப்படியே நிறுத்திக் கொண்டது.

“ம்ம்… தேய்!” அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்ல, மீண்டும் அவளின் விரல்கள் அசைய ஆரம்பித்தன.

அவனின் பார்வை அவளின் முகத்தையே வண்டாக மொய்க்க, கணவனின் தொடர் பார்வையில் தடுமாறிப் போனாள் வசுந்தரா.

அவளின் விரல்கள் அந்தத் தடுமாற்றத்தில் லேசாக நடுங்க ஆரம்பிக்க, அதை உணர்ந்து கொண்டவன் போல், தன் நெற்றியின் ஓரத்தில் இருந்த அவளின் விரல்களை மெதுவாகப் பற்றித் தானே தன் நெற்றி முழுவதும் தடவ ஆரம்பித்தான்.

அவன் அப்படிச் செய்வான் என்று எதிர்பாராத வசுந்தரா திகைத்த விழிகளுடன் கணவனை நோக்கினாள்.

“வி.. விடுங்க… நா…நானே தேய்க்கிறேன்…” என்றாள் திணறலுடன்.

“நீயா? நீயெங்கே தேய்கிற? உன் விரல் என் நெத்தியில் நகரக் கூட மாட்டீங்குது…” என்று கேலியாகச் சொன்னான்.

“ஆங்… அது… அது…” என்று திக்கியவளுக்கு ‘நீங்க ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீங்க?’ என்று நினைத்ததை வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை.

“இ… இன்னைக்கு என்ன டென்ஷன்?” தன் தடுமாற்றத்தை மறைக்க உடனே வேறு பேச்சிற்குத் தாவினாள்.

“அதுவா?” என்றவன் சில நொடிகள் மௌனமாக இருக்க,

“ம்ம்ம்…” என்று மேலும் அவனைப் பேச ஊக்கினாள்.

“இன்னைக்கு ஒரு ஹார்ட் அட்டாக் கேஸ். கொஞ்சம் ஹிரிட்டிகல் தான். அந்தப் பேசண்ட்டுக்கு வெறும் முப்பத்தைந்து வயசு தான். அவருக்கு நாலு வயசில் ஒரு குட்டிப் பொண்ணு இருக்கிறாள். அவளுக்கு அவங்க அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கூடப் புரியுற வயசு இல்ல. ஆனாலும் அவளோட அம்மா அழுததால் அவளும் என்னன்னு புரியாமலேயே அழுதுட்டு இருந்தாள்.

அப்போ அவளோட அம்மாகிட்ட அவங்க ஹஸ்பெண்ட் நிலையைச் சொல்லிப் பேசிட்டு இருந்தேன். அப்போ சட்டுன்னு அந்த அம்மா என் காலில் விழுந்து எப்படியாவது அவங்க ஹஸ்பெண்டை காப்பாத்த சொல்லிக் கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க. அந்தக் குட்டிப் பொண்ணும் அவங்க அம்மா விழவும் அவளும் என் காலில் விழுந்துட்டாள். எனக்கு அந்த நிமிஷம் உடம்பே ஆடிப் போயிருச்சு…” என்று இப்போது அதைச் சொல்லும் போதும் அவனின் உடல் சிலிர்த்துக் கொண்டதை வசுந்தரா உணர்ந்தாள்.

“அந்த மாதிரி நேரத்தில் பெரியவங்க சிலர் எமோசனல் ஆனால் இப்படி ஏதாவது செய்து விடுவாங்க. ஆனா இப்போ அந்தக் குட்டிப் பொண்ணு செய்தது என்னைக் கொஞ்சம் எமோசனல் ஆக்கிருச்சு. ஆனாலும் அதை வேலை நேரத்தில் என்னால் வெளிப்படையா காட்டிக்க முடியாது. ஆனால் உள்ளுக்குள் ஒரு பதட்டம். எப்படியாவது அந்தக் குட்டிப் பொண்ணோட அப்பா பிழைத்து விடணும், காப்பாத்தி விட்டுரணும்னு எனக்குள் ஒரு உத்வேகம்.

எல்லாப் பேசண்ட்டையும் அப்படி நினைச்சுத்தான் நாங்க காப்பாற்றப் போராடுவோம். ஆனாலும் நான் அந்தக் குட்டிப் பொண்ணுக்காகக் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். கடவுளும் அந்தக் குட்டிப் பொண்ணுக்காக இறங்கி வந்து எங்க மூலமா அந்தப் பொண்ணோட அப்பாவைப் பிழைக்க வச்சுட்டார்…” என்று விவரம் சொல்லிப் பிரசன்னா நிம்மதி பெருமூச்சு விட,

“தேங்க் காட்!” என்று கடவுளுக்கு நன்றி சொன்னாள் வசுந்தரா.

“ம்ம்… தேங்க் காட் தான். என்ன தான் நாங்க மருத்துவர்களாகப் போராடினாலும் கடவுளின் கிருபையும் கண்டிப்பா வேண்டும். அதனால் கடவுளுக்குக் கண்டிப்பா நன்றி சொல்லணும்…” என்றான்.

பேசிக் கொண்டிருந்ததில் வசுந்தரா தைலம் தேய்ப்பதை நிறுத்தியிருக்க, அவளைக் குறும்புடன் பார்த்தவன் தன் நெற்றியில் இருந்த அவளின் கையைப் பிடித்து வெக்கென்று இழுக்க, அவனின் மார்பின் மீதே அப்படியே கவிழ்ந்து விழுந்தாள்.

அந்தக் குழந்தையின் செயலைக் கணவன் உணர்ச்சி வசத்துடன் சொன்னதால் அந்த நினைவிலேயே இருந்த வசுந்தரா கணவனின் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பாராமல் அவனின் மார்பில் விழுந்த வேகத்தில் “ஆ…!” என்று சற்றுச் சத்தமாகவே கத்தியிருந்தாள்.

“ஷ்ஷ்! வசு… நான் தான்…” என்று தன் மார்பில் இருந்தவளின் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்தினான்.

அவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் அப்போதுதான் தான் இருக்கும் நிலை உணர்ந்து தன்னிச்சையாக அவனின் மேல் இருந்து பதறி எழ முயன்றாள்.

ஆனால் அவளால் சிறிதும் அசைய முடியவில்லை. முதல் முறையாக மனைவியை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்த பிரசன்னாவிற்கு அவளை விலகிச் செல்ல விட சிறிதும் விருப்பம் இல்லாமல் போக, அவளை எழ விடாமல் அவளின் முதுகைச் சுற்றிக் கையைப் போட்டு இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

கடந்த நாட்களில் அவனைத் தன் கணவன், இனி அவன் என் வாழ்க்கையின் ஓர் அங்கம், இனி அவனோடு முழு மனதோடு வாழலாம் என்று ஒரு மனைவியாக இயல்பாக ஒன்ற ஆரம்பித்திருந்தாள் வசுந்தரா.

முன் இருந்தது போல் ஒட்டாத மனநிலை இப்போது அவளிடம் இல்லை. கடமை மனைவி என்ற நிலையில் இருந்து இனி அவன் தான் தனக்கு எல்லாம் என்று அவளின் மனது நினைக்க ஆரம்பித்திருந்தது.

அதனால் கணவன் அவனோடு இறுக்கி அணைக்கவும் அவளும் அதற்குச் சந்தோஷமாகவே உடன் பட முயன்று விலகிக் கொள்ளும் முயற்சியைக் கைவிட்டுத் தானும் அவனோடு ஒன்ற ஆரம்பித்தாள்.

மனைவியின் இணக்கத்தை உணர்ந்து கொண்ட பிரசன்னாவின் விழிகள் வியப்பில் விரிந்தன.

அவளின் இணக்கம் அவனுக்கு இன்னும் தூண்டுதல் கொடுக்கத் தன் அணைப்பை இன்னும் வலுவாக்கியவனின் கண்கள் மயக்கத்துடன் மூடிக் கொண்டன.

வசுந்தராவும் மயக்கத்தில் தான் இருந்தாள். கணவனின் அணைப்பினால் உண்டான உணர்ச்சி மயக்கத்தில்!

காதல் மயக்கத்துடன் கிறங்கிய பிரசன்னா “வசு…” என்று கரகரப்பான குரலில் முணுமுணுத்துக் கொண்டவன் அடுத்த நொடி என்ன நினைத்தானோ சட்டென்று தன் மார்பில் ஒன்றி கிடந்தவளைத் தன்னை விட்டுத் தூக்கிப் படுக்கையில் நன்றாக அமர வைத்தவன் அதே வேகத்தில் அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்து “எனக்குத் தலைவலி மண்டையைப் பிளக்குது. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்…” என்று மெல்லிய குரலில் சொல்லிக் கண்களை மூடிக் கொண்டான்.

அவன் அணைத்த வேகத்தைக் கண்டு புரியாமல் தடுமாறியதை விட அதிகமாக இப்போது அவன் விலக்கி நிறுத்தியதில் தடுமாறிப் போனாள் வசுந்தரா.

‘என்ன நடந்தது?’ என்று அவள் முழுமையாக உணர சில பல நிமிடங்கள் பிடித்தன.

அவன் தன் அருகாமையை நிராகரித்து விட்டான் என்று புரிந்த நொடி மனதளவில் வெகுவாகக் காயப்பட்டாள் வசுந்தரா.

கண்கள் கலங்கி அழுகை வரும் போல் இருந்தது. ஆனாலும் முயன்று அழுகைக்குத் தன்னை ஒப்புக் கொடுக்காமல் சமாளித்தவள் திரும்பிப் படுத்திருந்த கணவனின் முதுகை வெறித்துப் பார்த்தாள்.

அன்று முத்தம் கேட்டபோது அவனின் கட்டாயத்தின் பேரில் தான் கொடுக்க முன்வந்தாள். ஆனால் இன்று அவளின் மனதும் அவனின் பக்கம் சாய்ந்து இருப்பதால் தானே அணைப்பில் இணக்கத்தைக் காட்டினாள். அதனால் அன்று விட இன்று அவள் மனது அதிகமாகவே அடிவாங்கியது.

‘ஏன் இப்படி விலக வேண்டும்?’ என்று தோன்ற அசையாமல் கணவனை வெறிப்பதைத் தொடர்ந்தாள்.

மீண்டும் ‘ஏன்?’ என்ற கேள்வி மட்டும் இருவருக்கும் இடையே சுவர் போல் எழுந்து நின்றது.

பிரசன்னா தூங்கி எழுந்த பிறகும் சரி, இதோ இப்போது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுதும் சரி அவன் அவளை அப்படி வேகமாக விலக்கிய ஒரு நிகழ்வு நடவாதது போலவே நடந்து கொண்டான்.

ஆனால் அந்த நொடியிலிருந்து வசுந்தராவின் காயப்பட்ட மனது அந்த நிகழ்வைத் தவிர வேறு எதையும் நினைக்க மறுத்தது.

ஒன்றுமே நடவாதது போல் பாடலை முணுமுணுத்துக் கொண்டு வந்தவனின் சட்டையைப் பிடித்து ‘ஏன் இப்படி நடந்துகிறீங்க?’ என்று கேட்கும் ஆவேசம் வந்தது.

ஆனால் அதை மனதோடு மட்டுமே கேட்டுக் கொண்டாளே தவிர அவனிடம் நேரடியாகக் கேட்கவில்லை அவள்.

ஒருவேளை அவள் நேரடியாக அவனின் சட்டையைப் பிடித்துக் கேள்விக் கேட்டுருந்தால் அவளுக்கான பதில் கிடைத்திருக்குமோ என்னவோ?

அப்படி அவனைக் கேள்விக் கேட்க விடாமல் அவளை எது தடுத்துக் கொண்டிருக்கிறது என்று அவளே அறியாள்!

சில நேரங்களில் கேட்டால்தான் கிடைக்கும்! சில விஷயங்கள் பேசினால் தான் தெளிவு வரும்! ஆனால் வாய்விட்டுப் பேச மறந்து போனாள் வசுந்தரா!

அவளின் அந்த அமைதியே இன்னுமின்னும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்க வைக்கப் போதுமானதாக இருக்கப் போவதை அறியாமல் வழக்கம்போல மனதிற்குள்ளேயே அவனிடம் பேசிக் கொண்டாள்.