என்னுள் யாவும் நீயாக! – 15

அத்தியாயம் ‌- 15

“குளிச்சுட்டுக் கிளம்பு. வெளியே போய்ட்டு வரலாம்…” என்ற பிரசன்னா அந்த ஹோட்டல் அறையின் ஜன்னல் திரைகளை விலக்க ஆரம்பித்தான்.

கோயம்புத்தூர் வந்து இறங்கி, அங்கிருந்து ஒரு கார் பிடித்துக் காலை எட்டு மணியளவில் ஊட்டி வந்து சேர்ந்திருந்தனர்.

இங்கேயும் மூன்று நாட்கள் இருக்கும் வரை உபயோகிக்க ஒரு காரை வாடகைக்குப் பேசியிருந்தான்.

அவர்கள் இருந்த அறை மூன்றாவது மாடியில் இருந்தது.

திரைச்சீலைகளை விலக்கியவன் ஜன்னல் வழியே வெளியே பார்க்க, மேகக் கூட்டங்கள் சூழ்ந்து குளிர்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தன.

கைகள் இரண்டையும் பரபரவென்று தேய்த்தவன் கன்னத்தில் வைத்துக் குளர்ச்சியைக் குறைக்க முயன்று கொண்டிருந்தான்.

அவனின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டே மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் வசுந்தரா.

அவள் கதவை அடைத்த சப்தத்தில் திரும்பிப் பார்த்த பிரசன்னா நேற்று ரயிலில் நடந்த பேச்சு வார்த்தையை நினைத்துப் பார்த்தான்.

தன் குத்தல் பேச்சில் சுணங்கியவள் அதன் பிறகு மீண்டும் மௌனமானது அவனுக்கும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.

ஆனாலும் அவன் அதற்காக வருந்தவில்லை. அவனுக்கு இப்போது அவனின் வலி மட்டுமே பெரிதாகத் தெரிந்தது.

புகைப்படத்தில் அவளைப் பார்த்தே விரும்பத் தொடங்கியவன் அவன். ஆசை ஆசையாகப் பெண் பார்க்கச் சென்று, அப்போதே அவளின் மீது பித்தாகிக் காதலாகிக் கசிந்துருகியவன்.

நிச்சயதார்த்தம் அன்று கூடத் திடீர் முடிவாக மேடையில் வைத்துக் காதலைச் சொன்னாலும் அதிக விருப்பத்துடனேயே சொன்னான்.

திருமணம் முடிந்து மனைவியைத் தனிமையில் சந்திக்கும் தருணத்திற்காக எவ்வளவு ஆர்வத்துடன் இருந்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.

‘ஆனால் சந்தித்த பிறகு…’ என்று நினைத்தவனுக்கு அதற்கு மேல் நினைத்துப் பார்க்கவே விருப்பமில்லை.

‘குத்தல் பேச்சும், வெறுப்பான வார்த்தைகளும் பேசுவது ஒரு மருத்துவனுக்கு அழகா?’ என்று அவனின் மனசாட்சியே அவனைக் கேள்விக் கேட்டுத் துரத்தத்தான் செய்கிறது.

‘மருத்துவனாக இருந்தால் என்ன? நானும் ஆசையும், பாசமும், கோபமும், தாபமும் நிறைந்த சாதாரண மனிதன் தானே? என் மனம் கல்லிலா செய்யப்பட்டுள்ளது? நான் அவள் மீது எவ்வளவு காதலுடன் இருக்கிறேன். ஆனால் அவள்?’ என்று கேள்விக் கேட்ட மனசாட்சியிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

குளித்துவிட்டு வந்த வசுந்தரா யோசனையுடன் நின்றிருந்த கணவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்ததைக் கூட அவன் உணரவில்லை.

மெதுவாகத் தலைவாரி முடித்து அவள் கிளம்பிய பிறகும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவனுக்குள்ளேயே மூழ்கிப் போய் இருந்தான்.

‘வெளியே கிளம்பணும்னு சொன்னாரே?’ என்று நினைத்துக் கணவனின் நிலையைக் கலைக்கவா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் தயங்கி நின்றிருந்தாள் வசுந்தரா.

“நீங்க குளிக்கப் போகலையா?” என்று தன் தயக்கத்தை உதறி ஒரு வழியாகக் கேட்டே விட்டிருந்தாள்.

மனைவியின் குரல் கேட்டுச் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவன் தன்னெதிரே நின்றிருந்தவளைப் பார்த்தான்.

குளித்து இளம் சிவப்பு நிறத்திலான சுடிதார் அணிந்து, தலைமுடியைத் தளர்வாகப் பின்னி, வெறும் பவுடர் மட்டும் பூசிய முகத்துடன் சாதாரணத் தோற்றத்தில் இருந்தாலும் அவனைச் சாய்க்கும் தோற்றத்தில் இருந்தாள் அவனின் மனைவி.

அவளின் அழகு முகம் அவனைச் சாய்த்தே விட்டிருக்க, அவளின் முகத்தில் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் தடுமாறினான்.

கணவனின் பார்வையில் தெரிந்த மாற்றம் வசுந்தராவையும் தடுமாற வைத்தது.

அவனின் பார்வையைச் சந்திக்க முடியாமல் கண்ணாடியைப் பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்.

அவளின் செய்கையைப் பார்த்துக் கொண்டே அவளைத் தாண்டிச் சென்று குளியலறைக்குள் நுழைந்தான்.

சற்று நேரத்தில் குளித்து விட்டு வந்தவன், படுக்கையில் அமர்ந்திருந்தவள் புறம் திரும்பாமல் தானும் கிளம்ப ஆரம்பித்தான்.

அவன் துவாலையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்ததைப் பார்த்த உடனே தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் வசுந்தரா.

அதைக் கண்ணாடி வழியாகக் கண்டவன் முகத்தில் லேசானப் புன்முறுவல் பூத்தது.

“என் இந்தக் கோலம் உன்னைத் தடுமாற வைக்குதா என்ன?” என்று சீண்டலாகக் கேட்டுக் கொண்டே மெதுவாக உடையை மாற்றினான்.

“இல்லை…” என்று பட்டென்று பதில் சொல்லியிருந்தாள் வசுந்தரா.

“ஓ! அப்போ ஏன் என்னை இப்படிப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கிட்ட?” என்று கேட்டான்.

“உங்களுக்குச் சங்கடமா இருக்கும்னு தான்…” என்றாள்.

“ஓகோ! அப்போ உனக்குச் சங்கடம் இல்லையா?”

“இதில் சங்கடப்பட என்ன இருக்கு? மனுஷங்க உடம்பு எப்படி இருக்கும்னு எல்லோருக்குமே தெரியும். அப்படி இருக்குறப்ப, ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு வந்ததும் தடுமாறுவது என்பது பலவீனமான மனசைத் தான் காட்டுது…” என்றாள்.

“நீ சொல்றது சரிதான்! ஆனாலும் புதுசா ஒருத்தரை அப்படிப் பார்க்கும் போது தடுமாறுவது இயல்பு தானே? அந்த இயல்பு கூடவா உன்கிட்ட இல்லை?” என்று மேலும் துருவினான்.

“எனக்குத் தடுமாற்றம் வரலையே…” என்று கைகளை விரித்த மனைவியின் பார்வையைச் சந்தித்தவன்,

“உண்மையையும் சில நேரம் வெளிப்படையாகச் சொல்லாமல் இருப்பது நன்மையே!” என்றான் பூடகமாக.

‘இதை ஏன் இப்போது சொல்கிறார்?’ என்பது போல் அவனின் முகத்தை ஆராய்ந்து பார்த்தவள் ‘அவரின் இந்தத் தோற்றத்தை நான் ரசிக்கவில்லை என்ற கோபமோ?’ என்று நினைத்தாள்

வேறு ஒன்றிருக்கும் சேர்த்தே தான் அவன் அதைச் சொல்லியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

அவளின் எண்ணம் உண்மைதான் என்பது போலப் பிரசன்னாவின் முகம் இருந்தது.

அங்கே வீட்டில் இருந்த போது இருவருமே குளித்து விட்டு வரும் போது அறைக்குள் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் சூழ்நிலை வந்ததில்லை.

அவள் குளித்துவிட்டு வரும் போது அவன் தூங்கிக் கொண்டிருப்பான்.

அவன் குளித்துவிட்டு வரும் போது அவள் கீழே இறங்கி மாமியாருக்கு உதவியாகச் சமையலறைக்குச் சென்றிருப்பாள்.

இன்று தான் முதல் முறையாக இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர். அதனால் இன்று அவர்களுக்குள் இந்தப் பேச்சு வார்த்தை நடக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு வேறு பேசாதப் பிரசன்னா, உடை மாற்றி விட்டு வந்து “போகலாமா?” கேட்க, ‘திரும்ப ரொம்பப் பேசிட்ட வசு’ என்று அவளையே திட்டிக் கொண்டு அமைதியாக அவனின் பின் சென்றாள்.

முதலில் கீழே இருந்த உணவகத்தில் உணவை முடித்துக் கொண்டனர்.

“உனக்கு முதலில் எங்கே போகணும்னு எதுவும் ஐடியா இருக்கா?” என்று வாடகை காரில் ஏறியதும் மனைவியிடம் கேட்டான்.

“எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. உங்களுக்குப் பிடிச்ச இடத்துக்குப் போகலாம்…” என்றாள்.

“இங்கே நீங்க ஏற்கனவே வந்திருக்கிறதா மாமா சொன்னார். அப்படி வந்த போது இந்த இடத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நல்லா இருக்கும்னு நீ நினைச்ச இடம் எதுவும் இருக்கா?” என்று கேட்டான்.

“பொட்டானிக்கல் கார்டன்! அங்கே எவ்வளவு நேரம் வேணும் என்றாலும் இருக்கலாம்னு தோணும்…” என்று கண்கள் மின்னச் சொன்னவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, “சரி அங்கேயே போகலாம்…” என்றவன், முன்னால் இருந்த ஓட்டுனரிடம் “பொட்டானிக்கல் கார்டன் போங்க…” என்று சொல்லி விட்டு இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான்.

இருவருமே பின் இருக்கையில் தான் அமர்ந்திருந்தனர். ஆனாலும் இருவருக்கும் இடையே இன்னும் ஒருவர் அமரும் அளவில் இடம் இருந்தது.

கணவன் தனக்குப் பிடித்த இடத்தைக் கேட்டு அங்கேயே அழைத்துப் போவதாகச் சொன்னதும் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.

“என்ன பார்வை?” அவளின் பார்வையை உணர்ந்து அவள் பக்கம் திரும்பிக் கேட்டான்.

அவனைப் பற்றி நினைத்ததை அவனிடமே என்னவென்று சொல்லுவாள்? ‘ஒன்றுமில்லை’ என்று வேகமாகத் தலையசைத்தாள்.

அப்போதைக்கு அந்தப் பேச்சை விட்டவன் தாவரவியல் பூங்காவிற்குச் சென்று அங்கே இருந்த புல் தரையில் அமர்ந்த பிறகு “நீ காரில் என்ன பத்தி என்ன நினைச்சன்னு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் தானே பேச்சைத் தொடர்ந்தான்.

“என்னடா இவன் சில நேரம் நல்லா பேசுறான். சில நேரம் தீயாய்க் காய்கிறான்னு தானே நினைத்தாய்?” என்று தன் எதிரே புல் தரையில் அமர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளிடம் கேட்டான்.

அவள் அதைத்தான் நினைத்தாள். ஆனாலும் ‘ஆமாம்’ என்று சொன்னால் எதுவும் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று நினைத்து அமைதியாகவே இருந்தாள்.

“உன் அமைதியே ஆமாம்னு சொல்லுது. உன் மேலே எனக்கு எக்கச்சக்கமா கோபம் இருக்கு. இல்லன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்…” என்றவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

கணவனின் கோபம் தெரிந்தது தான். ஆனால் அதை அவனே சொல்லும் போது அவளுக்கு எப்படியோ இருந்தது.

‘ஆமாம் நீ சொன்ன விஷயத்துக்கு அவன் உன் மேல் கோபப்படலைனா தான் அதிசயம்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் தன் அதிர்வை மாற்றிக் கொண்டாள்.

“கோபம் ஒருபக்கம் இருந்தாலும் கூட அதையும் தாண்டி நான் சாதாரணமா பேசக் காரணம், நீ என் மனைவி என்பதால் தான். முன்னாடி நடந்த எதுவும் மாறப் போறது இல்லை. நம்ம கல்யாணமும் இல்லைன்னு ஆகப் போறதில்லை. அப்படி இருக்கும் போது என் கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டுப் பேசித்தான் ஆகணும். வேற வழி இல்லை…” என்றவன் அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் மீண்டும் அமைதியாகி விட்டான்.

அவளும் என்ன சொல்லுவாள்? வார்த்தைகள் இல்லா மௌனத்தைத் தான் அவளால் துணைக்கு அழைத்துக் கொள்ள முடிந்தது. ஆனாலும் கணவனின் குரலில் தெரிந்த வலி, ‘என்னை இப்படிப் பேசவைத்து விட்டாளே’ என்பது போல் தெரிந்த பாவம் அவளை வருந்த வைத்துக் கொண்டும் இருந்தது.

அந்தப் பூங்காவில் குடும்பமாகப் பலர் வந்திருக்க, பலர் ஜோடிகளாக வந்திருந்தனர்.

பிள்ளைகள் வைத்திருந்தவர்கள் அவர்களுக்குப் போட்டியாகக் குழந்தையாக மாறி அவர்களுடன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஜோடிகளாக வந்திருந்தவர்கள் தோளோடு தோள் உரசிய படியோ, தோளின் மீது கைகளைப் போட்ட படியோ, இல்லையென்றால் ஒருவர் கையுடன் ஒருவர் பிணைத்துக் கொண்டோ தான் இருந்தனர்.

புதுமண தம்பதிகளான வசுந்தரா, பிரசன்னாவோ முற்றிலும் மாறாக எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

வசுந்தரா கால்களைக் கட்டியபடி அமர்ந்திருக்க, பிரசன்னாவோ கால்களை நீட்டி, கைகளைப் பின்னால் ஊன்றி, தலையை நிமிர்த்தி மேலே ஓடும் மேகக்கூட்டங்களைப் பார்த்தபடி இலகுவாக அமர்ந்திருந்தான்.

சுற்றிலும் பார்த்த வசுந்தராவிற்குத் தாங்கள் மட்டுமே வித்தியாசமாக இருப்பதாகத் தோன்ற, “நாங்க மட்டும் தான் இப்படி இருக்கோம்…” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டாள்.

அவளின் முணுமுணுப்புக் காதில் விழ, “என்ன?” என்று தலையை அவள் புறம் திருப்பிக் கேட்டான்.

அவனின் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் பார்வையைத் தங்களைச் சுற்றிச் சுழற்றினாள்.

தானும் அவளின் பார்வைக்கு இணையாகச் சுற்றுப்புறத்தை நோக்கிச் சுழல விட்டவன், “ஓ! நம்ம மட்டும் தான் வித்தியாசமா இருக்கோமோ?” என்று சரியாகக் கேட்டவன், “இந்த வித்தியாசத்தை உருவாக்கியது யார்?” என்று சீறலாகக் கேட்டான்.

‘ஹப்பா! திரும்பக் கோபத்தை விலை குடுத்து வாங்கிட்டேனா?’ என்று தனக்குத்தானே கொட்டு வைத்துக் கொண்டாள்.

“சும்மா பார்த்ததும் தோணுச்சு சொன்னேன். வேற எதுவும் நினைச்சு சொல்லலை…” என்று கணவனைச் சமாதானப்படுத்தும் விதமாகச் சொன்னாள்.

‘நீ தான் நினைக்க மாட்டாய்னு தெரியுமே…’ என்று நினைத்துக் கொண்டவன் சட்டென்று எழுந்து நின்றான்.

“என்னாச்சு?” அவன் எழுந்த வேகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

“நடந்துட்டு வருவோம் வா!” என்று மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

அவளும் எழுந்து அவனின் பின் நடந்தாள்.

சிறிது தூரம் வரை, அவன் முன்னாலும், இவள் பின்னாலும் நடக்க, நேரம் செல்லச் செல்ல முன்னால் நடந்தவன் அவளுக்கு இணையாக நடக்க ஆரம்பித்தான்.

அவ்வப்போது தோள்களும் உரசிக் கொள்ள ஆரம்பித்தன.

ஓர் இடத்தில் பூக்கள் விதவிதமாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க, அநேகம் பேர் அங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டவன் “நீயும் நில்லு வசுந்தரா…” என்று தன் கைபேசியில் அவளைப் புகைப்படம் எடுக்கத் தயாரானான்.

பூக்களோடு பெண் பூவாக நின்றவளின் கண்கள் தன்னிச்சையாகப் பூக்களுக்கு இணையாக மலர்ந்து சிரிக்க ஆரம்பித்தன.

லேசாக இதழ் பிரித்து வெண்முத்துப்பற்கள் கீற்றாகத் தெரிய, அதனுடன் கண்களும் சேர்ந்து சிரிக்க நின்றிருந்தவளைக் கைபேசியின் கேமரா வழியாகப் பார்த்தவனின் விழிகள் இமைகளைக் கூடச் சிமிட்ட மறந்து போயின.

‘அழகாக இருந்து என்னை அடியோடு சாய்க்கின்றாளே!’ என்று நினைத்தவன் இமைகளைச் சிமிட்டி, தலையைக் குலுக்கித் தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தவன் வரிசையாகப் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினான்.

‘நீ இவ்வளவு அழகாகவும் இருந்திருக்க வேண்டாம்னு இப்ப தோணுது…’ என்று கைபேசியில் விழுந்திருந்த அவளின் நிழல் படத்தைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டான்.

“இப்போ நீங்க நில்லுங்க. நான் உங்களை எடுக்கிறேன்…” என்று அவனின் அருகில் வந்தவள் சொல்ல, ‘சரி’ என்பதாகத் தலையசைத்துவிட்டு தான் சென்று நின்றான்.

அவளும் அவனைப் புகைப்படம் எடுத்து முடித்து, அவனின் கைபேசியைக் கொடுத்தாள்.

“எப்படி வந்திருக்கு படம்?” என்று கேட்டான்.

“நீங்க பார்க்க அழகா இருக்கீங்க. படமும் அழகா வந்திருக்கு…” என்று இயல்பாகச் சொன்னாள்.

“ம்கூம்… அப்படியா? நான் அழகாவா இருக்கேன்? நம்புற மாதிரி இல்லையே…” என்று வியப்பு போல் கேட்டவன் கண்கள் கள்ளத்தனமாகச் சிரித்தன.

“ஏன் நம்ப முடியலை? நான் உண்மையைத் தான் சொல்வேன்…” அவன் தன்னைச் சீண்டுவதைப் புரிந்து கொள்ளாமல் பதில் சொன்னவளை இப்போது உதடுகள் விரிய சிரித்துப் பார்த்தான்.

கணவனின் சிரிப்பைக் கண்டதும் தான் அவன் வேண்டும் என்றே தன்னைப் பேச வைத்திருக்கின்றான் என்று புரிந்து வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“பரவாயில்லையே, நீ என்னைக் கூடக் கவனிச்சு பார்த்து இருக்கியே!” என்று புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டான்.

அவன் தன்னை இன்னும் கேலி செய்கின்றானோ என்று நினைத்துப் பார்த்தாள்.

இப்போது அவனின் முகத்தில் கேலி இல்லை. உண்மையாகவே வியப்பைத் தான் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

‘சரிதான். என்னை எப்போதும் என்ன பேச என்று தெரியாமல் தடுமாற வைக்கின்றானே’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவளின் முகமே அவள் பதில் சொல்ல மாட்டாள் என்று பறைச்சாற்ற “இப்போ நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுக்கலாம் வா…” என்று அழைத்தான்.

‘ஹப்பா! அப்பேச்சை அத்துடன் விட்டுவிட்டான்’ என்று நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டாள் வசுந்தரா. அவன் இன்னும் சற்று நேரத்தில் அவளை மூச்சடைக்க வைக்கப் போவதை அறியாமல்!

முதலில் இருவரும் அருகருகே நிற்க புகைப்படம் எடுத்தவன், அதில் ஏதோ திருப்தி இல்லாதது போல் தோன்ற மெல்ல அவளின் தோளின் மீது கைப்போட்டுப் புகைப்படம் எடுத்துப் பார்த்தான்.

அப்படம் அவ்வளவு அழகாக வந்திருக்க, அதை ரசித்தவன் இன்னும் மனைவியை நெருங்கி நின்று அவளின் தோளில் இருந்த கையை இன்னும் அழுத்திப் பிடித்தான்.

பிரசன்னா புகைப்படம் எடுக்கும் மும்முரத்தில் இயல்பாகச் செய்து கொண்டிருக்க, தன்னை நெருங்கி நின்று இறுக்கிப் பிடித்திருந்த கணவனின் செயலில் திகைத்துப் போனாள் வசுந்தரா.

அவனின் நெருக்கமும், இறுக்கமும் அவளை உறைந்து போக வைத்தது.

அதிர்வுடன் கணவனின் முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் அசைவை உணர்ந்து அவனும் அவள் பக்கம் திரும்ப, கைபேசியில் இருந்த அவனின் கைவிரலோ தன்னிச்சையாகப் பட்டனை அழுத்தி இருக்க, பார்வையுடன் பார்வை மோதி நின்றிருந்த இருவரையும் அழகாக உள்வாங்கிப் புகைப்படமாகப் பதிவு செய்தது கைபேசி!