என்னுள் யாவும் நீயாக! – 13

அத்தியாயம் – 13

முதல் முதலாக வசுந்தராவை நேரில் பார்த்த நாளில் இருந்து அவள் நடந்து கொண்ட முறைகளை நினைத்துப் பார்த்த பிரசன்னாவிற்கு அந்தக் கேள்வியைக் கேட்க தோன்ற கேட்டு விட்டிருந்தான்.

பெண் பார்க்க சென்ற அன்று அவள் அவனைப் பிடிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. பிடிக்காதது போலும் நடந்து கொள்ளவில்லை.

அதன் பிறகான தொலைபேசி உரையாடல்கள், நேரில் சந்தித்த போது என்று எந்த இடத்திலும் அவள் தங்கள் திருமண ஏற்பாட்டில் வெறுப்பையோ, பிடித்தமின்மையையோ காட்டவில்லை.

அதற்கு மாறாக அனைத்தையும் அவள் இயல்பாக ஏற்றுக் கொண்டதை எண்ணிப் பார்த்தான். திருமணச் சடங்கின் போதும் அவள் சாதாரணமாகவே இருந்ததைப் புரிந்து கொண்டான்.

இப்போது காரிலும் கூடத் தன் தம்பியிடம் சொல்வது போல் ‘நம்ம வீடுன்னு சொல்லுங்க’ என்று அவள் உரிமையாகச் சொன்னது என அனைத்தும் அவனுக்குள் ஒரு நெருடலை உண்டாக்கி இருந்தது.

ஒருவேளை பிடிக்காத திருமணத்தைப் பிடித்தது போல் காட்டிக் கொள்ள நடித்தாளோ என்றும் அவனால் நினைக்க முடியவில்லை.

அப்படி இயல்பாக நடந்து கொண்டவள் தனக்கு ஒரு முன்னால் காதல் இருந்தது என்று சொன்னதை இப்போது நம்ப முடியாமல் ஏதோ முரண்டியது.

ஆனாலும் அவள் பொய் சொன்னது போலவும் தெரியவில்லை.

அதே போல் திருமணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டவள் அவனிடம் ஒரு வித ஒதுக்கத்தை வெளிப்படுத்தியதையும் உணர்ந்தே இருந்தான் பிரசன்னா.

ஆனாலும் ஆசை கொண்ட மனதின் வெளிப்பாடாக அவள் சொன்னது உண்மையாக இருக்கக்கூடாது என்று அவனின் மனம் தவித்ததோ? இல்லை நான் சொன்னது அனைத்தும் பொய் என்று சொல்லி விட மாட்டாளா என்று உள்ளம் துடித்ததோ? ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருந்து அவனை அந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டியிருந்தது.

“என்கிட்ட ஏன் உன் காதல் விஷயத்தைச் சொன்னாய் வசுந்தரா?” என்று கேள்விக் கேட்ட கணவனை அமைதியாகவே எதிர்கொண்டாள் வசுந்தரா.

“என் விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கணும்னு சொன்னேன்…” என்று சொன்ன மனைவியை இமைகள் இடுங்கப் பார்த்தான் பிரசன்னா.

“ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனையோ விஷயம் நடந்திருக்கும் தான். ஆனா எல்லாத்தையுமா வாழ்க்கைத் துணை கிட்ட சொல்லுவோம்?” என்று கேட்டான் பிரசன்னா.

“கண்டிப்பா எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க மாட்டோம் தான். ஆனா எல்லா விஷயமும் போலக் காதல் விஷயம் இல்லையே? அதான் சொன்னேன்…” என்றாள்.

அவள் இல்லை என்று மறுக்கவில்லை என்பதால் அவனை ஏமாற்றம் சூழ்ந்ததோ? அவளின் பதிலில் பிரசன்னாவின் முகம் அப்படியே இறுகிப் போனது.

ஆனாலும் மனைவி சொன்னதை ஜீரணித்துக் கொள்ள முயன்று கொண்டே அடுத்தக் கேள்வியை எழுப்பினான்.

“நீ உன் காதல் விஷயத்தை என்னிடம் சொன்னால் என்ன பின்விளைவுகள் வரும்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா?” என்று கேட்டான்.

“பின்விளைவுகள் வரும்னு தெரிஞ்சே தான் சொன்னேன்…” என்று பளிச்சென்று சொன்னவளைப் பார்த்து, “தைரியம் தான்!” என்றான்.

“தைரியத்தை வர வைத்துக் கொண்டு தான் சொன்னேன்…” என்று சளைக்காமல் பதில் சொன்னவளை அவனின் கண்கள் கூர்மையாக அளவிட்டது.

எதிரே கட்டிலில் அமர்ந்திருந்து தன்னை ஊடுருவுவது போல் பார்த்துக் கொண்டே பேசிய கணவனைப் பார்த்த வசுந்தரா லேசாகச் செருமிக் கொண்டாள்.

பின் மெல்ல தன் தலையைத் தாழ்த்தித் தன் கைவிரல்களைப் பார்த்துக் கொண்டே பேசத் துவங்கினாள்.

“இப்போ நான் பேசப் போகும் விஷயத்தால் நீங்க என்னை வெறுக்கக் கூடச் செய்யலாம். ஆனா இந்தப் பேச்சை ஆரம்பித்த பிறகு அதை முடித்து விடுவதே நல்லதுன்னு நினைக்கிறேன்…” என்று சொன்னவள் தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தாள்.

‘இதற்கு மேலும் என்ன பேசப் போகின்றாய்?’ என்பது போல் பிரசன்னா அவளைக் கேள்வியாகப் பார்க்க, அவளோ இப்போது அவனின் பார்வையை எதிர்கொள்ளத் தயங்கினாள்.

“கிருபாகரனை நான் காதலிச்சது இனம் புரியா பருவ வயதில் இல்லை. ஆனால் ஒரு நாள் அவர் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்ன போது அவரை மனதால் கூட நினைப்பது அருவருப்பா இருந்தது.

இன்னொருத்தியின் புருஷனை நினைக்கும் அளவுக்கு நான் மோசமானவள் இல்லை. என் காதல் பொய்த்துப் போயிருக்கலாம். ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என் மனதில் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கிட்டு தான் இருக்கு…” என்று சொன்னவளை வலியுடன் பார்த்தான் பிரசன்னா.

அவனுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது போல் இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி இன்னும் அவனுக்குத் தெரிய வேண்டியது இருந்ததால் லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கேட்டான்.

“மனதில் தாக்கம் இருந்த உன்னால் எப்படி நம்ம திருமண நிகழ்வில் இயல்பாக இருக்க முடிந்தது?” என்று கேட்டான்.

‘இதைச் சொன்னால் இன்னும் வருத்தப்படுவானே’ என்பது போல் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இனியும் தனியா வலிக்க ஒன்னுமில்லை. சும்மா சொல்லு!” என்றான் மரத்துப் போன குரலில்.

அவன் சொன்ன விதத்தில் இப்போது அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

“என் கல்யாணத்தை நடத்திப் பார்க்கணும்னு என் பேரன்ட்ஸ் விரும்பிய போது அவங்க விருப்பத்துக்காகத் தான் சம்மதித்தேன். ஆனா பொண்ணு பார்க்க வந்தப்போது என்னை உனக்குப் பிடிச்சுருக்கான்னு ஆர்வத்தோடு நீங்க கேட்டப்ப பிடிச்சுருக்குனு தான் எனக்குச் சொல்லத் தோணுச்சு. அதன் பிறகு உங்களை நேரில் பார்க்கும் போதும் சரி, போனில் பேசும் போதும் சரி எனக்குக் கொஞ்சம் சங்கடமும், நிறையக் குற்றவுணர்வும் இருந்தாலும் நம்ம கல்யாண நிகழ்வில் வெறுப்போ, பிடித்தமின்மையோ எனக்குக் கொஞ்சமும் வரலை. என்னால் எப்படி அப்படி இருக்க முடிஞ்சதுன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கே தெரியலை…” என்றாள்.

அவளின் பதிலைக் கேட்டுச் சிலநொடிகள் அமைதியாக இருந்தான்.

“நம்ம கல்யாணம் நிச்சயம் செய்ததில் இருந்து கல்யாண நாள் வரை ஒன்றரை மாதம் நடுவில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் சொல்லாம ஏன் கல்யாணம் முடிந்த பிறகு, அதுவும் பர்ஸ்ட் நைட்ல வந்து சொன்னாய்?” என்று கேட்டான்.

“நீங்க பொண்ணு பார்க்க வந்தப்பயே உங்ககிட்ட சொல்லிடணும்னு நினைச்சேன். அன்னைக்கே நான் உங்ககிட்ட அதைச் சொல்ல நினைச்ச காரணம் என்னைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்னு தான். ஆனா அப்போ மட்டுமில்லாம நம்ம கல்யாணம் வரையுமே சொல்ல முடியாம ஏதோ தடங்கல்.

அதைவிட என்னால அப்போ சொல்லவே முடியலை. அதுக்குக் காரணம் எனக்கே தெரியலை. சொல்லிடணும் சொல்லிடணும்னு எனக்குள்ள உருப்போட்டு என்னை நானே தயார் படுத்திக்கிட்டு சொல்ல நினைப்பேன். ஆனா உங்களை நினைச்சதும், உங்களோட பேசினதும் என்னால் அந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் அப்படியே விட்டுவிடத் தான் முடிந்தது. ஏன் உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லாம இப்படித் தள்ளிப் போடுறேன்னு என்னை நானே கேட்டுப் பார்த்தேன். எனக்கே பதில் கிடைக்கலை…” என்று உதட்டைப் பிதுக்கி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“அப்போ அப்படியே சொல்லாமல் விட்டுருக்க வேண்டியது தானே? நேத்து நைட் மட்டும் ஏன் சொன்னாய்?” என்று திருப்பிக் கேட்டான்

“அது… நீங்க மணமேடையில் வச்சு உங்க காதலைச் சொன்னப்போ எனக்கு ரொம்பக் குற்றவுணர்வா இருந்தது. உங்களை ஏமாற்றுவதாக ஒரு உணர்வு. உங்களுக்கு நான் உண்மையாக இல்லையோன்னு ஒரு உறுத்தல். அந்த உறுத்தலைக் காலம் முழுவதும் தொடர எனக்கு விருப்பம் இல்லை. பின்விளைவுகள் என்ன நடந்தாலும் பரவாயில்லை. உங்ககிட்ட உண்மையை மறைச்சு நம்ம திருமண வாழ்க்கை ஆரம்பித்ததாக இருக்க வேண்டாம்னு தான் சொல்லிட்டேன்.

நான் நினைத்திருந்தால் உண்மையை மறைத்து உங்க கூட மணவாழ்க்கையை ஆரம்பித்திருக்க முடியும். ஆனா எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அது நீங்க என் மேல வச்சுருக்கிற காதலுக்குத் துரோகம் பண்ற போலத் தோன்றியது. என்னோட குற்றவுணர்வில், உறுத்தலில் தொடரும் நம்ம மணவாழ்க்கை கண்டிப்பா ருசியா இருக்காது…” என்று அவள் சொல்ல,

“கடமைக்கு வாழ்ற வாழ்வு மட்டும் ருசிக்குமா என்ன?” என்று குத்தலாகக் கேட்டான்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே அவன் அப்படிச் சொல்லவும் ‘என்ன சொல்கிறான்?’ என்று சட்டென்று கிரகிக்க முடியாமல் மலங்க விழித்தபடி அவனைப் பார்த்தாள்.

“இவ்வளவு உறுத்தலையும், குற்றவுணர்வையும் மனசுல வச்சுக்கிட்டு என் கூட மனைவியா வாழத் தயார் என்று சொன்னாயே… அதைச் சொல்றேன்…” என்று அவனே விளக்கமாகச் சொல்ல, இப்போது சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள்.

“அது சொல்லணும் என்று நினைத்துச் சொல்லலை. உங்க வேதனையான முகத்தைப் பார்த்துச் சட்டுனு ஏதோ உளறிட்டேன்…” என்று தயக்கமாகச் சொன்னாள்.

“உளறல் என்று புரிந்தால் சரி…” என்றான் நக்கலாக.

“உங்க கோபம் எனக்குப் புரியுது…” என்று அவள் சொல்ல,

“என்ன? என்ன புரியுது? கண்டிப்பா என்னோட கோபமும், மனநிலையும் உனக்குப் புரியாது…” என்றான் பட்டென்று.

அவனின் கோபமான முகத்தைப் பார்த்து அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் தயக்கம் வர, சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“இவள் என்னடா அரிசந்திரினி மாதிரி உண்மையைச் சொல்றேன் என்று சொல்லிக் கல்யாணமான அன்னைக்கே உங்களை இவ்வளவு வேதனைப்பட வைக்கிறேன் என்று உங்களுக்குத் தோணலாம். ஆனால் நான் உண்மையை மறைத்து எதுவும் சொல்லாம உங்க கூட வாழ ஆரம்பித்த பிறகு பின்னாளில் ஏதோ ஒரு சூழ்நிலையில் வேறு யார் மூலமாகவும் என் காதல் விஷயம் உங்களுக்குத் தெரியவந்தால் அப்போ உங்க கண்ணுக்கு நான் நம்பிக்கை துரோகியாகத் தான் தெரிவேன். அப்படி ஒரு சூழ்நிலை வருவதற்கு நானே சொல்லி விடுவது மேல் இல்லையா?” என்று தன் மனதில் நினைத்ததைக் கேட்டுவிட்டுக் கணவனைப் பார்த்தாள் வசுந்தரா.

ஆனால் அவனோ அவளுக்கு எந்த விதப் பதிலும் சொல்லாமல் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் வெறித்த பார்வையைக் கண்டு தடுமாறியவள் “ஸாரி…” என்றாள்.

அவளுக்கு அவனின் வலி புரியத்தான் செய்தது.

ஆயிரம் கனவுகளுடன் மணம் முடித்த ஆணோ, பெண்ணோ தங்கள் வாழ்க்கைத் துணையின் வாழ்வில் இன்னொரு நபர் குறுக்கிட்டுச் சென்றுள்ளார் என்பதை அறிந்தால் அவர்களின் மனம் என்ன பாடுபடும் என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இதே இடத்தில் அவன் வேறு பெண்ணை நான் காதலித்தேன் என்று தன்னிடம் சொல்லியிருந்தால் அவளால் மட்டும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? நிச்சயமாக முடியாது!

தன் எண்ணம் போலத் தானே அவனுக்கும் இருக்கும் என்ற எண்ணமே அவளை வாள் கொண்டு அறுத்தது போல் வலிக்க வைத்தது.

ஆனாலும் அவனிடமே சொன்னது போல் குற்றவுணர்வுடன் வாழ்க்கையைத் தொடங்க அவளுக்கு விருப்பம் இல்லை.

இவ்வளவு யோசித்த வசுந்தரா இன்னும் சிறிதும் யோசித்திருக்கலாம்.

உண்மையாக இருப்பது நல்லதுதான்! ஆனால் உண்மையாக மட்டுமே இருப்பது அவ்வளவு நல்லதில்லை என்று! பொய்யும் கூடச் சில நேரங்களில் நன்மையே பயக்கும்! என்று அவளுக்குப் புரியாமல் போனது.

ஆனால் இங்கே வசுந்தரா உண்மையைச் சொல்லி நடக்கப்போவதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாள். இனி அவள் சமாளித்துத் தான் ஆக வேண்டும்.

இறுக்கமாக நின்றிருந்த கணவனின் முகத்தையே வசுந்தரா வருத்தமாகப் பார்க்க, அவளின் அந்தப் பார்வையை விரும்பாது முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரசன்னா.

சில நிமிடங்கள் அவர்களுக்குள் மௌனமாகக் கரைந்து சென்றன.

பிரசன்னாவின் இறுகிய முகத்தைப் பார்த்து அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை.

“க்கும்…” என்று தொண்டையைச் செருமி மேலும் ஏதோ வசுந்தரா பேச முயல, தன் தலையை அழுந்த கோதிக் கொண்ட பிரசன்னா சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

அவனின் வேகத்தில் வசுந்தராவும் சோஃபாவில் இருந்து எழுந்து நின்று அவனைக் கேள்வியாகப் பார்க்க, வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தவன் வாயிலின் அருகில் சென்று நின்று அவளின் புறம் திரும்பாமல், “கீழே போகலாம்…” என்று மட்டும் சொன்னவன் நிற்காமல் நடக்க ஆரம்பித்தான்.

அவளும் அவனின் பின் சென்றாள்.

கீழே ராதாவும், தீபாவும் இரவு உணவை எடுத்துச் சாப்பாட்டு மேஜையில் வைத்துக் கொண்டிருக்க, கிருஷ்ணனும், சரணும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

மயூரி தன் பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து மெதுவாக ஓட, யாதவ் அவளைப் பிடிப்பதாகப் பாவ்லா காட்டிய படி அவளின் பின் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

தன் மாமாவால் தன்னைப் பிடிக்க முடியவில்லை என்ற சந்தோஷத்தில் கிளுங்கிச் சிரித்தபடி மயூரி ஓடிக் கொண்டிருந்தாள்.

அவளின் சிரிப்பைக் கண்டதும் அவ்வளவு நேரம் இறுகிய முகத்துடன் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த பிரசன்னாவின் முகம் இளக உதடுகளில் புன்னகையைத் தவழ விட்டான்.

“என் மயூ பேபியை உன்னால பிடிக்கவே முடியாதுடா…” என்று தம்பியைக் கேலி செய்து கொண்டே மயூரியைத் தூக்கிக் கொஞ்சி அவளின் வயிற்றில் முகம் பதித்துக் கிச்சுகிச்சு மூட்டினான் பிரசன்னா.

அதில் அவள் இன்னும் குலுங்கிச் சிரிக்க, “இப்போ நாம ஓடலாமா பேபி?” என்று கேட்டு அவளையும் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரசன்னா ஓட ஆரம்பிக்க, “இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டா ஓடுறீங்க? இதோ இரண்டு பேரையும் பிடிக்கிறேன்…” என்று யாதவ் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினான்.

பிரசன்னா, மயூரியுடன் சேர்ந்து தம்பிக்கு ஆட்டம் காட்ட, குழந்தையின் சிரிப்புச் சப்தம் வீடு முழுவதும் எதிரொலித்தது.

சிறு பிள்ளையுடன் சிறுபிள்ளையாக மாறி விளையாட ஆரம்பித்த கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வசுந்தரா.

சற்று முன் வரை இருந்த அவனின் முக இறுக்கம் போன இடம் தெரியாமல் இருக்க, அவனின் மலர்ச்சி முகம் அவளின் முகத்தையும் இளக வைத்தது.

“அவங்க எப்பவும் அப்படித்தான் அண்ணி. மயூ கூடச் சேர்ந்துகிட்டுக் கொட்டம் அடிப்பாங்க…” அவளின் பார்வையைக் கண்டு தீபா சொல்ல, அவளைப் பார்த்து மென்னகை புரிந்தாள் வசுந்தரா.

“நான் எதுவும் வேலை செய்யவா அத்தை?” என்று ராதாவிடம் கேட்க,

“டம்ளரில் எல்லாம் தண்ணி ஊத்துமா…” என்றார்.

“அச்சோ! அவுட் ஆகிட்டோமே…” என்ற பிரசன்னாவின் குரல் கேட்க, தண்ணீரை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தவள் வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

பிரசன்னா சோகம் போல முகத்தை வைத்துக் கொண்டு நடிக்க, குழந்தையும் அழுகை வருவது போல் உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹேய்… நான் பிடிச்சுட்டேனே…” என்று ஆர்ப்பாட்டமாகக் கத்திக் கொண்டிருந்தான் யாதவ்.

“நீ அழாதேடா பேபி. நாம அவனை அவுட் பண்ணிடுவோம்…” என்று குழந்தையை உற்சாகப்படுத்திய பிரசன்னா, இப்போது தம்பியைத் துரத்தினான்.

அதில் மயூரி கைதட்டிச் சிரித்தபடி ஆரவாரமாகக் குதித்தாள்.

குழந்தையை விடக் கணவனின் உற்சாக முகம் வசுந்தராவை ஏதோ செய்தது. அவனின் முகத்தையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வை சென்ற திசை பார்த்துத் தீபா நமட்டுச் சிரிப்புச் சிரிக்க, மருமகளைக் கண்டும் காணாமல் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார் ராதா.

மாமியாரும், நாத்தனாரும் அவளைப் பார்க்கிறார்கள் என்பதை அறியாமல் வசுந்தரா மோன நிலையில் இருக்க,

“ஹேய்… இப்போ நாங்க ஜெயிச்சிட்டோம். நீ அவுட்…” என்று உற்சாகமாகக் கத்திய பிரசன்னா மயூரியின் குட்டிக் கையில் ஹைபை அடித்துக் கொண்டிருந்தவன் தன்னை உறுத்தும் பார்வையை உணர்ந்து பட்டென்று மனைவியின் புறம் திரும்பிப் பார்த்தான்.

அவன் தன்னைப் பார்த்து விட்டதைக் கண்டு நொடிப் பொழுது தடுமாறினாலும் அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை அவள்.

“போதும்டா விளையாண்டது. சாப்பிட வாங்க…” என்று ராதா குரல் கொடுக்க, பார்வையைத் திருப்பிக் கொண்டு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்தாள்.

“என்ன பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?” சாப்பிட அமர்ந்ததும் தன் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த மனைவியின் புறம் குனிந்து ஒரு மாதிரியான குரலில் கேட்டான் பிரசன்னா.

“உங்க சிரிப்பைப் பார்த்ததும் நீங்க எப்பவும் இப்படியே சிரிச்சுட்டு இருக்கணும்னு தோணுச்சு. அதான் பார்த்தேன்…” என்று தயக்கமே இல்லாமல் பளிச்சென்று சொல்லியிருந்தாள் வசுந்தரா.

“எது இப்ப நான் சிரிச்ச போலிச் சிரிப்பா?” என்று விரக்தியான குரலில் கேட்டான்.

‘என்ன போலியா?’ என்ற அதிர்வுடன் அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,

“பின்ன? நான் உண்மையா சிரிச்சேன்னு நினைச்சியா? இது என் குடும்பத்துக்காக நான் வழிய காட்டிக்கிட்ட உற்சாகம். என் உண்மையான சிரிப்பு நேத்து நைட்டோட என்னை விட்டுப் போயிருச்சு…” என்று வறண்டக் குரலில் சொன்ன பிரசன்னா,

“என் நேரத்தைப் பார்த்தியா? என் சிரிப்பைப் பறிச்சவளே ஒன்னும் அறியாதவள் போல என் சிரிப்புத் தொடரணும்னு சொல்றாள். ம்ப்ச்…” என்று அவன் தொடர்ந்து சலிப்பாகச் சொல்ல, வசுந்தராவின் முகம் சட்டென்று சுருங்கிப் போனது.