என்னுள் யாவும் நீயாக! – 1

அத்தியாயம் – 1

அந்த உயர்ந்த அலுவலகக் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தன் முன்னால் இருந்த கணினியைக் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

அவள் வேலை செய்வது ஓர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம்.

இந்தியாவில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்கள், துணி வகைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதும், அதேபோல் வெளிநாட்டில் மட்டும் கிடைக்கும் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்வதும் தான் அந்தக் கம்பெனியின் வேலை.

அந்தக் கம்பெனியில் வசுந்தரா வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கடந்திருந்தது.

வசுந்தரா அங்கே மேனேஜருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியில் இருந்தாள்.

அங்கிருந்து பொருட்கள் சரியாக இங்கே வந்து சேர்ந்தனவா? இங்கிருந்து சரியாக அனுப்பப்பட்டு அங்குச் சென்று சேர்ந்தனவா? என்பதைச் சரி பார்ப்பது அவளின் பொறுப்பு.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அட்டவணை ஒன்று அவளின் கணினிக்குச் சற்று நேரத்திற்கு முன்புதான் வந்து சேர்ந்தது. அதைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அவளின் மேஜையின் மீது இருந்த தொலைபேசி அழைக்க, அழைப்பை ஏற்று “ஹலோ… வசுந்தரா ஹியர்!” என்றாள்.

அவள் சொன்ன ஹலோவிற்கு அந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பிரதிபலிப்பும் சில நொடிகள் இல்லாமல் போக, “ஹலோ மேனேஜர் சார், என்ன விஷயம் சொல்லுங்க?” என்று கேட்டாள்.

“அது எப்படி நான் தான்னு சரியா சொன்ன?” என்று அந்தப் பக்கம் இருந்து கேட்க, “ஹான்… ஜோசியம் பார்த்துட்டு வந்தேன் மேனேஜர் சார்…” என்று பற்களை இறுக்கிப் பிடித்து அழுத்திச் சொன்னாள்.

“நோ… நோ… நான் இப்ப உன் மேனேஜரா பேசலை. கிருபாவா பேசுறேன் வசு. உன் வேலை முடிஞ்சுதா?” என்று கேட்டான் அந்நிறுவனத்தின் மேனேஜராக இருக்கும் கிருபாகரன்.

“கிருபாவா பேசணும்னா என் ‘செல்’லுக்குத் தான் கூப்பிடணும்னு சொல்லியிருக்கேனா இல்லையா?” என்று கேட்டவள் அவனின் அலுவலகத் தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

“நீ சரியான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் லேடி வசு…” என்று அலுப்பாகச் சொல்லிக் கொண்டே அவளின் கைபேசியில் இப்போது பேச ஆரம்பித்திருந்தான் கிருபாகரன்.

“எந்த வேலையாக இருந்தாலும் அதைச் சரியா செய்யணும்னு எதிர்பார்க்கின்றேன் கிருபா. அதிலென்ன தப்பு சொல்லுங்க? ஆஃபிஸ் ஃபோனை சொந்த உபயோகத்துக்கு யூஸ் பண்றது எனக்குப் பிடிக்கல. அதனால் தான் சொல்றேன்…” ஏற்கனவே பல முறை சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொன்னாள்.

“சரி விடு… நான் ஆஃபீஸ் ஃபோனில் உன்னைக் கூப்பிட்டது தப்புத் தான். இப்ப சொல்லு, உன் வேலை முடிஞ்சுதா?” என்று இறங்கி வந்தே கேட்டான் கிருபாகரன்.

“இன்னும் ஒரு டென் மினிட்ஸ் வேலை இருக்கு கிருபா…”

“ஓகே… அப்போ நீ வேலையை முடிச்சிட்டுக் கார் பார்க்கிங் வந்திடு. நான் அதுக்குள்ள அங்கே போய்க் காரை ஸ்டார்ட் பண்ணி வைக்கிறேன். நம்ம பிளான் படி இப்போது கிளம்பினால் தான் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் முடிச்சிட்டு நீ வீட்டுக்குப் போகச் சரியாக இருக்கும்…” என்றான்.

“ஓகே கிருபா…” என்றவள் கைபேசியை அணைத்து விட்டு, விட்ட வேலையில் இருந்து மீண்டும் தொடர்ந்தாள்.

அவள் சொன்னது போல் பத்து நிமிடங்களில் அவளின் வேலை முடிய தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கார் பார்க்கிங் சென்று சேர்ந்தாள்.

கிருபாகரன் ஏற்கனவே அங்கே தயாராக இருக்க, காரில் ஏறி அமர்ந்தாள். அங்கிருந்து கிளம்பிச் சாலையில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

கிருபாகரன் காரைச் செலுத்த, அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள்.

சாலையின் மீது ஒரு கவனத்தை வைத்துக்கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தவன் “என்ன வசு ஒன்னும் பேசாமல் வர்ற?” என்று கேட்டான்.

அவனின் புறம் பார்வையைத் திருப்பியவள், “என்ன பேசணும்னு நீங்களே சொல்லுங்க…” என்றாள்.

“நீ என்ன பேசணும்னு கூட நானே சொல்லணும்னா என்ன அர்த்தம் வசு? நாம பேசிட்டு இருக்கத்தானே இப்போ வெளியில் வந்தோம்…”

“எனக்கும் உங்க கூட நிறையப் பேசணும்னு ஆசைதான். ஆனால் இப்படி வீட்டுக்குத் தெரியாமல் வெளியில் வந்து பேசுவது எனக்குப் பிடிக்கல…”

“அப்புறம் எங்க வந்து எப்படிப் பேசணும்னு சொல்ற?” என்று கேட்டான்.

“நாம உரிமையா பேசணும்னா அதற்கு ஒரே வழிதான் இருக்குன்னு உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே…” என்று திருப்பிக் கேட்டாள்.

“நாம காதலிக்க ஆரம்பித்து மூணு மாசம் தான் ஆகுது வசு. அதுக்குள்ள கல்யாணம் முடிக்கணும்னு ஏன் அவசரப்படுற? இன்னும் சில மாசத்துக்கு ஜாலியாகக் காதலிச்சுட்டு தான் இருப்போமே…” என்று இப்போது சிரித்துக்கொண்டே சொன்னான் கிருபாகரன்.

“என்ன இன்னும் கொஞ்ச மாசமா? ஏற்கனவே மூணு மாசமா வீட்டுக்குத் தெரியாம காதலிக்கிறது தப்புன்னு என் மனசு என்னை உறுத்திக்கிட்டே இருக்கு கிருபா. இதில் இன்னும் கொஞ்ச மாசம் என்றால் என்னால் தாங்க முடியாது…” என்றாள்.

“மூணு மாசத்துக்கே இப்படி அலுத்துக்கிற… அவனவன் வருச கணக்கா வீட்டுக்குத் தெரியாம லவ் பண்ணிக்கிட்டு இருக்கான்…”

“யாரும் எப்படியோ இருக்கட்டும் கிருபா. ஆனால் நான் இப்படித்தான். எனக்கு உங்களை ரொம்பப் பிடித்ததால் தான் நீங்க உங்க விருப்பத்தைச் சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன். ஆனால் இப்படி அடிக்கடி வீட்டுல பொய் சொல்லிட்டு வெளியில் போறது எனக்குக் கஷ்டமா இருக்கு…” என்றாள்.

“அபாண்டமா பேசாதே வசு. நாம எங்க அடிக்கடி வெளியே போனோம்? இந்த மூணு மாசத்தில் ஒரு நாலு தடவை தான் நீ என் கூட வெளியில் வந்து இருக்க. அதுவும் மூணு தடவை ஆஃபீஸ் பக்கத்தில் இருக்கிற பார்க் தான் நம்ம மீட்டிங் பாயிண்ட். இன்னைக்குத் தான் என்னமோ மனசு வந்து என்கூடக் கொஞ்ச தூரம் வெளியில் வர சரின்னு சொல்லியிருக்க.‌‌..” என்றவன் குரல் அலுப்பாக ஒலித்தது.

“அது சரி… அதை ஏன் இவ்வளவு அலுப்பா சொல்றீங்க?” என்று கேட்டாள் வசுந்தரா.

“உன் கூடக் கொஞ்சம் சந்தோஷமா சிரிச்சு பேசிக்கிட்டு வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீ ஏன் வெளியில் வந்தோம் என்பது போலப் பேசி வைக்கிற… அப்புறம் எனக்கு அலுப்பா தானே இருக்கும்?” என்று இப்போது சலிப்புடன் சொன்னான்.

“ஓகே… ஓகே கூல்! என் கிருபாவை இனி நான் டென்ஷன் பண்ணலை. என்ன சந்தோசமா சிரிச்சி பேசணும்னு சொல்லுங்க பேசிடலாம்…” என்று அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிய படியே புன்னகையுடன் சொன்னாள்.

அவளின் கண் சிமிட்டலையும், சிரிப்பையும் மயக்கத்துடன் பார்த்தவன் அப்படியே காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

“என்ன கிருபா ஏன் நிறுத்திட்டீங்க?” என்று புரியாமல் அவனை ஏறிட்டாள்..

“என் மனதை மயக்கிய மோகினியை வசியம் செய்ய நிறுத்தினேன்…” என்று குழைவான குரலில் சொல்லிக்கொண்டே அவள் மடியில் இருந்த அவளின் கைகளை மென்மையாகப் பற்றினான்.

“ஹேய்! என்ன பண்றீங்க?” என்று கூச்சத்துடனும், பதட்டத்துடனும் கூவினாள்.

“மயக்க போகின்றேன் மோகினியே…” என்று கிறக்கமாகச் சொல்லிக்கொண்டே அவளின் கைகளைத் தன் தோளின் மீது போட்டவன் மெல்ல அவளின் முகத்தை நோக்கிக் குனிந்தான்.

“நோ கிருபா…” என்று அவள் தயக்கத்துடன் மறுக்க,

“எஸ் வசு…” என்று அவளை நெருங்கினான்.

ஆனால் அவனின் தோளில் இருந்த தன் கையை எடுத்துத் தங்கள் முகத்திற்கு நேரே கொண்டு வந்து மறைத்தவள் “ப்ளீஸ்… வேண்டாம்!” என்று அழுத்தத்துடன் சொன்னாள்.

அவளின் உறுதியில் பின் வாங்கியவன் “ஏன் வசு?” என்று ஏமாற்றத்துடன் கேட்டான்.

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் வேண்டாம் கிருபா. ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கங்க…” என்று உறுதியாகவே மறுத்தாள்

“எப்போ இருந்தாலும் நாம தானே கல்யாணம் பண்ணிக்கப் போறோம் வசு. அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்ற?”

“நாம தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். யார் இல்லைன்னு சொன்னா? ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிப்பா இது தப்பு தான். வேண்டாம்…” என்றாள் வலுவாக.

“என்ன தப்பு வசு? இப்போ ஒரு காதலனாகக் கொடுக்கிறதை கல்யாணத்துக்குப் பின்னாடிக் கணவனாகக் கொடுப்பேன். அவ்வளவு தான் வித்தியாசம்! இதில் என்ன தப்பு கண்டுட்ட?”

“தப்புனா தப்பு தான் கிருபா!”

“அதுதான் என்ன தப்புன்னு கேட்கிறேன்? கல்யாணம் ஆன பிறகு இப்படிக் கிஸ் பண்றதுக்கு எல்லாம் உன்கிட்ட பெர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அது உரிமை! நமக்குள் அதெல்லாம் உரிமையா நடந்து போகும்.

ஆனா இப்போ அப்படி இல்ல. இப்போ இது ஒருவித திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ். அதை நான் அனுபவிக்கணும்னு நினைக்கிறேன். சும்மா ஒரே ஒரு கிஸ்! அதுக்கு ஏன் இப்படிப் பண்றன்னு தான் எனக்குத் தெரிய மாட்டேங்குது…” என்று சலிப்புடன் சொன்னவன் இயலாமையில் ஸ்டியரிங்கில் தன் கையை ஓங்கி அடித்தான்.

“ஹேய்… என்ன பண்றீங்க கிருபா?” என்று அவனின் கையை வேகமாகப் பிடித்தாள்.

“ம்ப்ச்… விடு வசு…” என்று தன் கையை விலக்கிக் கொண்டவன் கோபத்துடன் மீண்டும் காரை எடுத்தான்.

“கோபப்படாதீங்க கிருபா. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் காத்திருந்து அது நமக்குக் கிடைக்கும் போதும் ஒரு ஸ்பெஷல் எக்ஸ்பீரியன்ஸ் தான் கிருபா. அதுபோல இதையும் நினைச்சுக்கோங்களேன்…” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

ஆனால் அவனோ கோபத்துடன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் அவளின் புறமே திரும்பாமல் காரைச் செலுத்தினான்.

சிறிது நேரத்தில் அவர்கள் செல்ல முடிவு செய்திருந்த உணவகம் வரவும் இறங்கி உள்ளே சென்றார்கள்.

அவளுக்குப் பிடித்த பாவ்பாஜியை ஆர்டர் செய்தவன், தனக்கு ஒரு சமோசா ஆர்டர் செய்தான்.

அவளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தாலும் அவனின் கோப முகம் சிறிதும் மாறாமல் இருக்க, வசுந்தராவும் அதன் பிறகு அவனைச் சமாதானம் செய்யாமல் தானும் அமைதியாகவே இருந்தாள்.

தாங்கள் ஆர்டர் செய்த உணவை உண்ட பிறகும் இருவருக்கும் இடையில் மௌனமே நிலவ, அதில் இன்னும் தான் கிருபாகரனுக்குக் கோபம் வந்தது.

“நான் கோபமா இருக்கேனே. சமாதானம் செய்யணும்னு கூட நினைக்க மாட்டியா வசு?” என்று தானே முதலில் இறங்கி வந்து கோபம் குறையாமல் கேட்டான்.

“உங்களைக் கோபப்படுங்கனு நான் ஒண்ணும் சொல்லலையே கிருபா? நான் ஏற்கனவே சொன்னதையும் மறந்து, நீங்க என்னைக் கிஸ் பண்ண வந்ததுக்கு நான் தான் உங்க மேல கோபமா இருக்கணும். ஆனா இப்போ நீங்க கோபமா இருக்கீங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு என்னைச் சமாதானப்படுத்த சொல்லி நான் சமாதானம் செய்தால், நீங்க செய்த தப்பு சரின்னு ஆகிடுமே…” என்று நிதானமாகச் சொன்னாள்.

“தப்பு தப்புன்னு சொல்லாதே வசு. நமக்கிடையே நடக்கும் கிஸ் ஒன்னும் தப்பு இல்லை…” என்று எரிச்சலுடன் சொன்னான்.

“கண்டிப்பா நமக்கிடையே வரும் கிஸ் தப்பு இல்லைதான். ஆனால் அது நம்ம கல்யாணத்துக்குப் பிறகு தான். கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிப்பா தப்புதான்!” என்று மீண்டும் சொன்னதையே சொன்னவளை என்னதான் செய்வது என்பது போல் பார்த்தான்.

அவளும் அவனின் பார்வையைச் சளைக்காமல் எதிர்கொள்ள ‘இவளைத் திருத்த முடியாது’ என்று முனங்கிக் கொண்டே தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு “சரிம்மா தாயே… நீ சொன்னது போலத் தப்பாவே இருக்கட்டும். இனிமே நான் கேட்கல. இதுக்காகவே சீக்கிரம் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். கல்யாணத்துக்குப் பின்னாடி நீ எப்படித் தடுக்கிறன்னு நானும் பார்க்கிறேன்…” என்றான் வீம்பாக.

அவன் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வர பக்கென்று சிரித்து விட்டாள்.

“இது குட்பாய்க்கு அழகு! சீக்கிரம் கல்யாணத்துக்குப் பேசி முடிங்க. அப்புறம் நீங்க கிஸ் கொடுக்கத் தவிக்க வேண்டாம். நானே கொடுப்பேன்…” என்று கண் சிமிட்டிச் சிரித்தாள்.

“அம்மா தாயே வசு… திரும்பக் கண்ணைச் சிமிட்டிச் சிரிக்காதே! நீ அப்படிச் செய்தால் எனக்கு என்னென்னமோ செய்யுது…” என்று குழைவான குரலில் சொன்னான்.

‘தான் தான் அவனைத் தடுமாற வைக்கிறோம்’ என்பதை உணர்ந்ததும் சட்டென்று சிரிப்பை நிறுத்தினாள்.

“உடனே சிரிக்கிறதை நிறுத்திடுவியே…” என்றவன் “கூடிய சீக்கிரம் வீட்டுல பேசுறேன் வசு. நீயும் உங்க வீட்டில் பேசு…” என்றான்.

“கண்டிப்பா பேசுறேன் கிருபா. நீங்க முதலில் உங்க வீட்டில் பேசிட்டு வாங்க. எங்க அப்பா எப்படியும் சம்மதம் சொல்லிருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் பிரச்சனை இல்லை. உங்க வீட்டில் தான் எப்படின்னு எனக்குத் தெரியல. அதனால் உங்க வீட்டில் முதலில் பேசி சம்மதம் வாங்கிட்டு வாங்க…” என்றாள்.

“எங்க வீட்டிலும் சம்மதிப்பாங்கனு தான் நினைக்கிறேன். என் மேல அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நிறையப் பிரியம். ஒரே மகன் வேற! கண்டிப்பா என் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டாங்க. நம்ம கல்யாணம் கூடிய சீக்கிரமே நடக்கும். அப்புறம் நான் உன் பக்கத்தில் வருவதை உன்னால தடுக்கவே முடியாது…” என்று கேலியாகச் சொல்லி விட்டு அவளின் கைகளைப் பற்றியவன் “இப்படிக் கையைப் பிடிக்கிறதுக்கு மட்டுமாவது அனுமதி கொடு…” என்றான்.

சிறிது தயங்கினாலும் மேலும் அவனை வருத்தப்படுத்த விரும்பாமல் “ஓகே கிருபா…” என்று மட்டும் சொன்னவள் அவனின் கைகளுக்குள் தன் கையைப் பிணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கைகளைப் பற்றிய படி அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தவர்களுக்கு அதற்கு முன் வந்த கோபமெல்லாம் ஓடி ஒளிந்து கொள்ளச் சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

வசுந்தரா அவள் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள, கிருபாகரன் அங்கிருந்து தன் வீட்டிற்குச் சென்றான்.

அடுத்து வந்த ஒரு பேருந்தில் ஏறிய வசுந்தராவின் மனம் இனிமையைச் சுமந்திருந்தது.

கிருபாகரன் அவள் மனம் கவர்ந்தவன்!

தான் ஒருவனைக் காதலிப்போம் என்று கம்பெனியில் வேலைக்குச் சேரும் போது யாராவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக நம்பி இருக்கவே மாட்டாள்.

ஆனால் கிருபாகரனின் இனிமையான குணமும், அவனின் பழகும் தன்மையும் அவளை வீழ்த்த காதலில் விழுந்தாள்.

அவர்களின் காதல் மூன்று மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

முதலில் கிருபாகரன் தான் தன் விருப்பத்தை அவளிடம் சொன்னான். அதே நேரத்தில் அவளுக்கும் அவனின் மீது விருப்பம் இருக்க, உடனே தனது சம்மதத்தைத் தெரிவித்து இருந்தாள்.

அவனைப் பிடித்து இருந்தாலும் இன்னும் தங்கள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் இருப்பதால், தாங்கள் தவறு செய்வது போலவே உணர்ந்தவள், அடிக்கடி அதைச் சொல்லிக்காட்டி அவனுடன் வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிர்த்து விடுவாள்.

அவனின் விருப்பம் சில நேரம் பிடிவாதமாக மாறும் போது மட்டும் வெளியில் வந்து செல்வார்கள்.

அவன் சொன்னது போல் இதுவரை நான்கு முறை மட்டுமே வெளியில் வந்தார்கள். அவனுடன் வெளியில் செல்வது பிடித்திருந்தாலும் ‘வேலை இருக்கு. வீட்டுக்கு வர லேட்டாகும்’ என்று அன்னையிடம் பொய் சொல்லி விட்டு இப்படி வெளியில் செல்வது மனதை உறுத்த, அதையும் அவனிடம் கோபமாகச் சில நேரம் காட்டி விடுவாள்.

அவர்களின் காதல் சிறு சிறு ஊடல்களுடன் வளர்ந்து கொண்டிருந்தது.

அந்தக் காதலின் வளர்ச்சி எதுவரை என்பது அவர்களே அறியாத ஒன்று!

வசுந்தரா தங்கள் காதல் கல்யாணத்தில் முடியும் என்று காத்திருக்க, நடந்ததோ வேறு!