உறவாக அன்பில் வாழ – 7

காலை நேரத்திலேயே அனைவரும் வெளியே சென்றுவிட்டதால் அமைதியாக இருந்த அந்த வீட்டினுள் வாரப்பத்திரிகை ஒன்றை கையில் வைத்து புரட்டியபடி அமர்ந்திருந்தார் முத்துலட்சுமி.

வாசல் கேட் சத்தம் கேட்க,எழுந்து யாரென்று பார்த்தவர் மிகவும் சோர்வுடன் நடந்து வந்துகொண்டிருந்த சித்ராவைக் கண்டு துணுக்குற்றார்.

வேலையாளிடம் எலுமிச்சைச்சாறில் இஞ்சியுடன் உப்பும் சக்கரையும் கலந்த பானத்தை தயாரிக்க பணித்தவர் சித்ராவை இன்முகமாக எதிர்கொண்டார்.

“வா சித்ரா. கோவிலுக்கு தானே போன? அரண் இவ்ளோ சோர்வா வந்திருக்க? இன்னிக்கு எதுவும் ரொம்ப கூட்டமா?” என்று கரிசனையோடு கேட்டு அவருடன் சோபாவில் அமர்ந்தார்.

சாய்சரணின் கவனிப்பிலேயே குற்றவுணர்வுடன் திரும்பி இருந்தவர் முத்துலட்சுமியின் வரவேற்பில் வெகுவாக சோர்வுற்றார்.

‘இவங்களை இதனை வருஷம் நான் அதிகம் கவனிக்க கூட இல்லையே! ஆனா என் முகம் வச்சே சோர்வா இருக்கேன்னு ஆதரவா பேசுறாங்க. சரணும் அவங்க அப்பா கோவத்தை நான் தாங்க மாட்டேன்னு தெரிஞ்சு வச்சிருக்கான். நான் தான் இத்தனை நாளும் சுயநலமா இருந்திருங்கேன்.’ என்று மனதிற்குள் புழுங்கியபடி இருந்தவர் முன் எலுமிச்சை பானத்தை நீட்டினார்.

“வெயில் அதிகம் தெரியலன்னாலும் முகம் வாடி இருக்கு சித்ரா. இதை குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்.” என்று அவர் கொடுக்க, அதை வாங்கிய சித்ராவின் கண்களில் கண்ணீர்.

அதை அப்படியே டீபாயில் வைத்தவர் “அண்ணி” என்று முத்துலட்சுமியை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

அவரின் அழுகைக்கான காரணம் புரியாத லட்சுமியோ, “என்னாச்சு சித்ரா? இத்தனை வருஷத்துல நீ அழுது நான் பார்த்ததே இல்லையே மா.. உங்க அண்ணன் பார்த்தா நான் ஏதோ சொல்லி நீ அழறியோன்னு நினைப்பார் மா.” என்று அவரை தட்டிக்கொடுக்க,

“அண்ணனை பத்தி பேசாதீங்க அண்ணி.” என்று கோபமும் அழுகையுமாகக் கூறிய சித்ராவை புரியாது நோக்கினார்.

“மனசுல என்ன இருந்தாலும் வெளில சொல்லு சித்ரா. உன் அண்ணன்..” என்று ஆரம்பித்தவர், சட்டென்று சித்ராவை தன்னை விட்டு நகர்த்தி அமர்த்திவிட்டு,

“உங்க அண்ணன் கிட்ட போய் ஷிவானிக்காக பேசினியா?” என்று சற்று கோபத்துடன் வினவினார்.

சித்ரா பதில் பேசாமல் தலையை தாழ்த்தி அழுதபடி இருக்க,

“உன்னால அவரோட கோபத்தை தாங்க முடியாதுன்னு தானே அவ்ளோ சொன்னேன். உன்னை மனசு வருத்தப்படுறப்படி பேசிட்டாரா மா? ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?” என்று மனம் பொறுக்காமல் வினவினார்.

“அண்ணி, ஷிவானின்னா எனக்கு உயிரு. அவ அன்னைக்கு போன் பண்ணி ‘அம்மா நான் எனக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்க போறேன். கேட்டா நீங்க ஒத்துக்க மாட்டிங்கன்னு தான் மா போறேன். என்னை மன்னிச்சிருங்க’ன்னு சொன்னப்ப, எனக்கு அவ்ளோ கோபம் வந்துச்சு அண்ணி. ஆனா கோவில்ல போய் பார்த்தா நம்ம ஷிவாவும் சரணும் ஜோடியா நின்னத பார்த்தப்போ என் மனசு அவ்ளோ சந்தோஷமா இருந்தது. என் மருமகன் என் மகளை நல்லா பார்த்துப்பான்னு நான் அவ்ளோ சந்தோஷப்பட்டேன். ஆனா அண்ணன் சரணை அடிச்சு இனிமே வீட்டுக்கு வராதன்னு சொன்னதும் எனக்கு ஒன்னுமே புரியல. அவர் கிட்ட கேட்டாலும் அவரும் ஒன்னும் சொல்லல. சரி நம்மளை கேட்காம இப்படி பண்ணின கோபத்துல இருக்காங்க, நாளானா சரியா போய்டும்னு நெனச்சு தான் உங்ககிட்டயும் அண்ணனை சமாதானம் பண்ண சொல்லி சொல்லிட்டு இருந்தேன். ஆனா ஷிவானி கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சும் இவங்க இறங்கி வரல. இப்போ மாசம் ஏறுது. சரண் தனியா எப்படி பார்த்துப்பான்? என் பொண்ணை நினைச்சு எனக்கு கவலையா இருக்காதா? நம்ம அண்ணன் தானே, சரி கேட்டுப்பார்ப்போம்ன்னு பேசினா.. என்னை வீட்டை விட்டு வெளில போக சொல்றாரு.” என்று மனம் தாளாமல் முத்துலட்சுமியின் மேல் சாய்ந்து கண்ணீர் விட்டார் சித்ரா.

“அழாத சித்ரா. இது நமக்கு தெரிஞ்ச விஷயம். தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கும். ஒருவேளை அது தெரிஞ்சா நம்மளால தாங்க முடியுமோ இல்லையோ? யார் கண்டா? ரொம்ப மனசை குழப்பிக்காம இரு. ஷிவானி சரணோட பொறுப்பு. அவளை நமக்கும் மேல நல்லா பார்த்துப்பான் அவன்.” என்று மகனைப் பற்றி நன்கறிந்தவராக கூறினார் முத்துலட்சுமி.

“அவனும் அப்படிதான் அண்ணி சொன்னான். எவ்ளோ நல்ல பிள்ளை? அவனைப் போய் இப்படி ஒதுக்கி வச்சிருக்காரே! நம்ம சொந்ததுல எந்த வீட்டுலையாவது இப்படி இந்த வயசுல தானே மேலே எழுந்து நிக்கிற பிள்ளைங்க இருக்கா? எல்லாம் அப்பா தாத்தா சொத்தை காருக்கு பெட்ரோல் போட்டு கண்ட பொண்ணுங்க கூட சேர்ந்து செலவு பண்ணிட்டு சுத்தது. ஆனா நம்ம சரண் எப்படி பொறுப்பா இருக்கான்? அவனை ஏன் அண்ணா இப்படி நடத்துறார்?” என்று சித்ரா அங்கலாய்ந்தார்.

முத்துலட்சுமி ஒரு விரக்தி சிரிப்புடன், “யாருக்கும் தன் நிழல்ல இவங்க வளர்ந்தாங்கன்னு சொல்லிக்க தான் பெருமையா இருக்கும் சித்ரா. என்னை விட்டு தள்ளிப்போய் இவன் பெரியாளா வந்துட்டான்னு சொல்ல அவங்க ஈகோ ஒத்துக்காது மா.” என்று சொல்லி எழுந்து கொண்டார்.

“அண்ணி அதெல்லாம் வேற யாரையோ சொல்ற மாதிரி இருந்தா சரி. நம்ம வீட்டு பிள்ளை வளர்ந்தா சந்தோஷம் வரவேண்டாமா?” என்று கோபமாகக் கேட்ட சித்ராவைக் கண்டு,

“உலகம் புரியாம இருக்க சித்ரா. போக போக புரிஞ்சுக்குவ. ஜூஸை குடிச்சிட்டு ரெஸ்ட் எடு.” என்று மாடியில் இருக்கும் தன் அறையை நோக்கி நடந்தார்.

அவர் சொல்ல வருவது முழுமையாக புரியாமல் போனாலும் சரண் தனியே நின்று தொழில் செய்வதில் தன் அண்ணனுக்கு உடன்பாடில்லை என்று புரிந்து கொண்டார் சித்ரா. முன்னமே இது அவருக்கு தெரிந்திருந்தாலும் இப்படி ஒரு கோபம் அவருக்கு இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்ததில்லை. அண்ணி சொல்வதைப்போல இன்னும் தனக்கு உலகம் புரியவில்லை என்று நொந்து கொண்டு அவர் கொடுத்த பழச்சாறை பருகிவிட்டு தன் அறைக்குள் முடங்கினார்.

ஷிவானிக்கு அன்று ஏதோ உடலில் அசவுகர்ய உணர்விருக்க சரணின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு, “மாமா என்னவோ போல இருக்கு மா. சொல்ல தெரியல. குழந்தையோட மூவ்மெண்ட் ரொம்ப வேகமா இருக்கு. எனக்கு வயிரெல்லாம் வலிக்குது.” என்று கண்ணீருடன் கூற,

அவளுக்கு இளம் சூட்டில் குடிக்க நீர் எடுத்து வந்து கொடுத்தவன், “ஒன்னும் இல்ல ஷிவானி, தர்ட் ட்ரைமஸ்டர் ஆரம்பிச்சிடுச்சு இல்லையா அதான் சேஞ்சஸ் தெரியுது. இது இப்படி தான் இருக்கும்ன்னு சொல்ல பக்கத்துல யாரும் இல்லாததால உனக்கு பயமா இருக்கு. மாமா கூடவே இருக்கேன். சீக்கிரம் சரியா போய்டும்.”என்று அவளை சாய்வாக அமர வைத்தான். ஏற்கனவே அவளுக்கு இப்படியான மாற்றங்கள் நிகழும் என்று கங்கம்மா மூலம் அறிந்து வைத்திருந்தால் பதற்றம் கொள்ளாமல் அமைதியாக அதை கையாள முடிவு செய்தான் சாய்சரண்.

“பாப்பா பிறந்தா அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் மாமா? என்னை பத்தி என்ன நினைக்கும்? நம்ம வீட்டுலையும் நம்மளோட பேச மாட்டேங்கறாங்க. நம்மளால பாப்பாவை வளர்க்க முடியுமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று கூறி அவனை அருகில் அமர்த்தி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சிறுவயது முதலே அவளுக்கு எந்த பயமிருந்தாலும் சரணிடன் சரண் புகுந்து கொள்வது ஷிவானியின் வழக்கமாக இருந்தது. ஆனால் ஓரிரு வருடங்களாக தொழில் தொடங்கி அதில் கவனம் வைத்திருந்த சரணுக்கு ஷிவானியோடு செலவு செய்ய அதிக நேரம் கிடைக்கவில்லை. அந்த இடைவெளியில் அவளின் பயங்கள் அவளை வெகுவாக ஆட்டிப்படைத்து, இன்று தங்கள் குடும்பத்தை விட்டு இப்படி தனியே வந்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு அவர்களை தள்ளி விட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஷிவானி தான் என்று ஒரே வரியில் சொல்லி சரணால் நிம்மதியாக இருந்து கொள்ள இயலும். ஆனாலும் அவன் அதனை விரும்பவில்லை. அவனுக்கு என்றும் ஷிவானி அவன் சுட்டு விரலை இறுகப்பற்றிய பச்சிளம் குழந்தை தான். அதனால் தான் குடும்பத்தையும் எதிர்த்து ஷிவானியோடு தனியே வந்து இருக்கிறான்.

ஷிவானிக்கு ஆறுதல் கூறினாலும் அதை ஏற்கும் மனோபாவத்தில் அவள் இல்லை என்று உணர்ந்த சரண், அவளது தலையில் லேசாக தட்டிக்கொடுத்தபடி, “எதையும் யோசிக்காத. உன்னையும் பாப்பாவையும் பார்த்துக்க தானே நான் இருக்கேன். உனக்கு மாமா மேல நம்பிக்கை இல்லையா?” என்று அவளுக்கு தைரியம் கொடுத்தபடி இருக்க,

மெல்ல கண்களை மூடிக்கொண்டவள் அப்படியே உறங்கிப்போனாள்.

அவளது விழிநீர் காய்ந்து கன்னத்தில் இருப்பதை கவனித்த அவனுக்கு மனமெல்லாம் வலித்தது. எழுந்து வந்து செந்திலுக்கு அழைப்பு விடுத்தான்.

“இன்னிக்கு வேலையெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோ செந்தில். ஷிவானிக்கு உடம்பு சரி இல்ல. நான் மதியத்துக்கு மேல வர்றேன்.” என்று கூறி வைத்துவிட்டு, மொபைலில் வாடிக்கையாளர், மொத்த விற்பனையாளர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தான்.

இரண்டாவது அழைப்பாக ஷான்வியின் அழைப்பு வர, தொழில் முறை பேச்சை விடமுடியாமல் அதை பேசி முடிப்பதற்குள் அவள் நான்கு முறை அழைத்திருந்தாள்.

அவளை அழைத்தவன், “என்னாச்சு ஷான்வி மேடம்?” என்று கேட்க,

“சரண் நான் என் பிரெண்ட் ஒருத்தரை பார்க்க பாண்டிச்சேரி வரைக்கும் வந்தேன். ரிட்டர்ன் வர்றப்ப கார் நின்னு போச்சு.” என்று அவள் பதற்றமாக கூற,

“மேடம் விளையாடாதீங்க. உண்மையாவே அவுடர்ல இருக்கீங்களா?” என்று கேட்க,

“ஏன் சரண் இப்படி கேட்குறீங்க? நான் ஏன் பொய் சொல்ல போறேன்? ரோட்ல ஆளே இல்ல. ரெண்டு பக்கமும் லேக் மாதிரி இருக்கு. பயமா இருக்குன்னு தான் சரண் உங்களுக்கு போன் பண்ணுறேன்.” என்று அவள் கூறுவதில் பொய் இருப்பது போல் அவனுக்கு தெரியவில்லை. ஆனாலும் உடனே செல்லவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது.

“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க வண்டியை லாக் பண்ணிட்டு கேப் புக் பண்ணி வந்துடுங்க. நான் பசங்களை விட்டு காரை ரிப்பேர் பார்த்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்று அவன் பதில் தர,

“சரண்.. நான்.. கார் ரிப்பேர் பண்ண தான் உங்களுக்கு போன் பண்ணினேன்னு தோணுதா? நான் தனியா இருக்கேன். எனக்கு பயமா இருக்கு..” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“ஏன் மேடம்? உங்க டாக்டருக்கு போன் பண்ண வேண்டியது தானே? ஏன் உங்க அப்பா, அண்ணன், க்ளோஸ் பிரெண்ட் இப்படி யாருமே இல்லையா? இதுவரைக்கும் நாலு தடவை உங்களை நான் பார்த்திருப்பேனா? எந்த நம்பிக்கையில ஒரு ஆம்பளை உங்களுக்கு அப்படி ஒரு காட்டுல உதவியா இருப்பான்னு நம்புறீங்க? ஏன் பொண்ணுங்க இப்படி இருக்கீங்க?” என்று எங்கோ ஆரம்பித்து கோபத்துடனும் இயலாமையுடனும் கேட்ட சரணுக்கு பதிலாக மறுமுனை வைக்கப்பட்டிருந்தது.

சரண் போனை கையில் எடுத்து அழைப்பு துண்டிக்கப்பட்டதைக் கண்டு செய்வதறியாது நின்றான். அவன் மனம் ‘அவளைத் தேடிச் செல்’ என்றது ஆனால் மூளையோ ‘வேண்டாம், அவளுக்கான சரியான உதவி எது என்று அவள் அறிந்துகொள்ளவேண்டிய நேரம் இது’ என்று கூறியது.

மனதிற்கும் மூளைக்குமான சண்டையில் மூளையை மழுங்கடித்தது மனதில் அவள் மேல் தேங்கி நின்ற நேசம்.

அவளது நலனை அறியாமல் அரை நொடியும் இருக்க இயலாதென்று உணர்ந்தவன் வேகமாக கிளம்ப நினைக்க, தன் அருகே தன்னையும் மறந்து உறங்கிக்கொண்டிருக்கும் ஷிவானியைக் கண்டதும் அவன் கால்கள் மெல்ல தளர்ந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் மனம் நொறுங்க நின்றவனைக் காக்கவென்று வீட்டிற்குள் நுழைந்தார் கங்கம்மா.

“வாங்க கங்கம்மா. கொஞ்சம் ஷிவானி கூட இருங்க. என்னவோ அவ அன்கம்பர்டபிளா பீல் பண்றா. எனக்கு அவசரமா ஒரு வேலை வந்துடுச்சு. நான் வீட்டுக்கு வர்ற வரைக்கும் அவளுக்கு துணைக்கு இருங்க.” என்று அவசரமாகக் கூறிவிட்டு தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு ஓடினான் சரண்.