உறவாக அன்பில் வாழ – 18 (final)

“சரண் சரண்” என்று அழைத்தபடி ஷான்வி அவள் அன்னையுடன் செல்லாமல் முரண்டு பிடிக்க,

வேகமாக முன்னே வந்த முத்துலட்சுமி, அவளை இறுக்கமாக பற்றிக்கொண்டார்.

“அவ என்ன எல்.கே.ஜி குழந்தையா வர மாட்டேன்னு சொல்றவளை இழுத்துட்டு போறீங்க. கொஞ்சம் பொறுங்க. எங்க வீட்ல தலைக்கு மேல பிரச்சனை இருக்கு. அதை முடிக்கவே எங்களுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அதுக்குள்ள ஏன் அடுத்த பிரச்சனைக்கு அடிக்கல் நட்டுகிட்டு இருக்கீங்க” என்று கீர்த்தியைப் பார்த்து அவர் வினவ,

“அதான் உங்க வீட்டு பிரச்சனை தலைக்கு மேல இருக்கே அதை பாருங்க. என் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம். மாப்பிள்ளை அதோ நிக்கிறார் பாருங்க. அவர் தான். இங்க எதுக்கு அவ நிக்கணும்? உங்க பிரச்சனைக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? ஒன்னும் இல்லல்ல. அதான் வேலை இருக்குன்னு கூட்டிட்டு போறேன். நீங்க ஓடிப்போன உங்க வீட்டு பொண்ணைத் தேடுங்க” என்று மறுபடி ஷான்வியை கையை பற்ற வர,
அவர் அவளின் மறுகையையும் பற்றி ஷான்வியை தன்னோடு அணைத்துக்கொண்டார்.

“என்னது எங்க வீட்டு பொண்ணை தேடுறதா? நீங்க தானே ஊசி வாங்கப்போன கேப்புல தொலைச்சது. தேடி கொடுங்க. இல்லன்னா நாங்க போலீசுல உங்க மேல புகார் கொடுப்போம்” என்று முத்துலட்சுமி வேகமாக சொல்ல,

“என்ன விளையாடுறீங்களா? அதான் அந்த பொண்ணு லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கே!” என்று கீர்த்தி அவசரமாக கூற,

“லெட்டரா? எங்க? எங்களுக்கு எதுவும் தெரியாதே! ஏன் சரண் எதுவும் லெட்டர் இருக்கா என்ன?’ என்று மகனைப் பார்த்துக்க கேட்க, தாயின் பேச்சை உணர்ந்து கொண்டவன்,

“இல்லையே! படுத்த படுக்கையா இருந்தவ எப்படி லெட்டர் எழுதி வைப்பா? நான் போலீசுக்கு சொல்றேன்” என்று அன்னைக்கு சார்பாக அவன் பேச கீர்த்திக்கு குழப்பம் மேலிட்டது.

அவர் மருத்துவமனையில் பணியில் இருக்கிறாரே தவிர நிர்வாகம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. போதாத குறைக்கு அனைத்தையும் தானே நூறு சதம் செய்து விடும் கிருஷ்ணமூர்த்தி கீர்த்திக்கு இது போன்ற பிரச்சனைகளை கையாள அனுமதித்ததில்லை.

ஷான்வி முத்துலட்சுமியின் தோளில் தஞ்சம் புகுந்தவள், “ஆன்ட்டி” என்று அழைக்க,

“அழகா அத்தைன்னு கூப்பிடு மருமகளே. எதுக்கும் கவலைப்படாத உங்க அம்மா கூட இப்போ கிளம்பு. ஷிவானி பிரச்சனையை முடிச்சிட்டு நானே உங்க அப்பா அம்மா கிட்ட பொண்ணு கேட்க குடும்பத்தோட வர்றேன்.” என்று தட்டிக்கொடுக்க,

அவள் பார்வை சரணை தொட்டு மீண்டது.

“தைரியமாகப் போ” என்று அவன் விழியசைவில் நம்பிக்கை கொடுக்க, முகத்திலிருந்த கலக்கம் களைந்தவளாக கீர்த்திக்கு முன்னே நடக்கலானாள் ஷான்வி.

சரண் தாவி தன் அன்னையை அணைத்துக்கொள்ள, “நீ என் பிள்ளை டா. தப்பு பண்ண மாட்டன்னு நான் நம்பினேன்.” என்று சொல்ல,

“அதான் வாராவாரம் விநாயகர் கோவில்ல ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் பார்த்து கண்ணாமூச்சி ஆடிக்கிட்டோமே” என்று சிரித்தான் சரண்.

“அது என்ன கதை?” என்று விநாயகம் வர,

“அம்மாவைப் பார்க்க நான் அவங்க கோவிலுக்கு வர்ற நேரம் வந்து மறைஞ்சு நின்னு பார்ப்பேன். அம்மா நான் வர்ற நேரம் ஒளிஞ்சு நின்னு என்னை பார்ப்பாங்க. இதை ரெண்டு பேரும் ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் செஞ்சுட்டு இருந்தோம். போன வாரம் வரைக்கும்.” என்று சரண் விளக்க,

“அவன் மேல உனக்கு நம்பிக்கை இருந்திருந்தா என்கிட்ட சொல்லி இருக்கலாமே முத்து?” என்று விநாயகம் வருத்தத்தோடு வினவினார்.

“அது என் வளர்ப்பு மேல இருந்த நம்பிக்கை. ஆனா நீங்க ஒன்னு சொல்லி நான் மறுத்து பேசினா கண்டிப்பா நமக்குள்ள பெரிய பிரிவு வரும்ன்னு தெரியும். அதுக்கு தான் தப்பு செய்யாத என் பிள்ளை சீக்கிரமே அதை நிரூபிச்சிடுவான்னு நம்பினேன்.” என்று முத்துலட்சுமி சொல்ல விநாயகம் அவரை ஆதுரமாக நோக்கினார்.

“உன்னை புரிஞ்சுக்காம போயிட்டேன் முத்து.” என்று வருத்தம் கொள்ள,

“அதுனால என்ன இன்னும் வாழ்க்கை நீண்டு கிடக்கு. நம்ம பிள்ளைங்க பிரச்சனையெல்லாம் முடிச்சு வச்சிட்டு நீங்களும் நானும் மனசு விட்டு பேசுவோம். எங்கயாவது போவோம். சமர் அண்ணா கம்பெனியை பார்த்துக்க மாட்டாரா என்ன?” என்று முத்துலட்சுமி கணவரை சமாதானம் செய்ய,

“அண்ணி என் பொண்ணு” என்று சித்ரா அவரிடம் சரண் புகுந்தார்.

“இங்க பாரு சித்ரா, ஷிவானி தைரியமான பொண்ணு. தப்பா எந்த முடிவும் எடுக்க மாட்டா.” என்று ஆறுதல் சொல்ல,

“எப்படி அண்ணி நம்புறீங்க. எனக்கு பயமா இருக்கே?” என்று அவர் கண்ணீர் உகுத்தார்.

“தப்பான முடிவு எடுக்கற பொண்ணுன்னா அன்னைக்கு அப்படி நடந்த பின்னாடி தைரியமா தனியா சென்னை கிளம்பி வந்திருப்பாளா? அதே போல கர்ப்பம்ன்னு தெரிஞ்சதும் சரண் கிட்ட தானே வந்தா, கல்யாணம் நின்னும் அவ குழந்தையை நல்லபடியா தானே தாங்கி இருக்கா? இதை விட நம்ம பிள்ளைக்கு தைரியம் இருக்குன்னு சொல்ல வேற என்ன வேணும் சித்ரா. பயப்படாம இரு. செந்தூரனை பார்க்க போயிருப்பா. அவனும் நம்ம கையில சாப்பிட்டு வளர்ந்தவன் தானே! கண்டிப்பா நம்ம ஷிவானியை ஏமாத்த மாட்டான்.” என்று முத்துலட்சுமி சொல்ல,

“சரியா சொன்னிங்க ஆன்ட்டி. எனக்கு என்ன விஷயம்ன்னே புரியாம போனது தான் இவ்ளோ குழப்பத்துக்கும்
காரணம். இவ ப்ரெக்னன்ட்ன்னு அன்னைக்கே எனக்கு தெரிஞ்சிருந்தா எங்கப்பா அடிச்சு இழுத்துட்டு போக ட்ரை பண்ணி இருந்தாலும் நான் அவளை விட்டு நகர்ந்திருக்க மாட்டேன். அப்பாவை கன்வின்ஸ் பண்ணிடலாம்ன்னு அவர் கூட போன அரை மணி நேரத்துக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சு” என்று முத்துலட்சுமியிடம் வந்து நின்றான் செந்தூரன்.

அவனை அழுத்தமான பார்வை பார்த்த சரண், பின்னால் மெல்ல நடந்து வந்த ஷிவானியை நோக்கி ஓடினான்.

அவளை அப்படியே அள்ளிக்கொண்டு அவளது அறையின் கட்டிலில் கிடத்தியவன்,

“அறிவு இருக்காடி உனக்கு? ஆபரேஷன் ஆன உடம்போட அந்த பரதேசியை தேடி போகலன்னா என்ன? அவன் தப்பா பேசினா அது உண்மையின்னு ஆயிடுமா? அவன் உன்னை ஏத்துக்கறான், இல்ல வேண்டாம்ன்னு சொல்றான் இதெல்லாம் ரெண்டாம் பட்சம். நான் முதல்ல உன்னை அவனோட நம்பி அனுப்பணும்ல? எனக்கு தெரியாம எப்படி டி போவ??” என்று அவள் காதை திருக,

“என்னைப் பார்த்து நீ உன் வாழ்க்கையை தொலைச்சுட்டா என்னால அடுத்த நிமிஷம் உயிரோட இருக்க முடியாது மாமா. அவன் இல்லன்னா கூட நான் வாழ்ந்திடுவேன். ஆனா உனக்கு ஒரு அவமானத்தையோ இல்ல உன் வாழ்க்கையையோ அழிச்சிட்டு என்னால எப்படி மாமா வாழ முடியும்?” என்று அவள் கேட்க, அவளை அணைத்து முன் நெற்றியில் முத்தமிட்டான்.

“நீ என் ஷிவானி டி. உனக்காக எதை வேணாலும் விடுவேன். உனக்கென்ன அதை பத்தி” என்று நெற்றியில் முட்ட,

“அப்போ நீ காதலிச்ச பொண்ணு உனக்கு வேண்டாமா மாமா?” என்று கண்களை சிமிட்டி வினவினாள் ஷிவானி.

“ஏய் உனக்கு எப்படி?” என்று அவன் ஆச்சரியம் கொள்ள,

“காதல் நம்மளை எப்படி கிறுக்கா சுத்த வைக்கும் தெரியுமா? நான் தான் வளைகாப்பு அன்னைக்கு காலைல பார்த்தேனே. உன் கண்ணுல அப்படி ஒரு குழப்பம். அப்போவே தெரிஞ்சு போச்சு. நம்ம மாமா யார் கண்ணுமுழிலையோ, கன்னத்துகுழிலயோ விழுந்துட்டார்ன்னு” என்று ஷிவானி சிரித்தாள்.

“இப்படியே நீ எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும் ஷிவா. அதான் மாமாவோட ஆசை.” என்று சரண் சொல்ல,

“கண்டிப்பா உன்னோட ஷிவானி என் மருமகளா என் வீட்ல மகாராணியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பா சரண். அதுக்கு முன்னாடி நீயும் ஷிவானியும் என்னை மன்னிச்சிருங்க.” என்று வந்தார் ராஜராஜன்.

மெல்ல எழுந்து கொண்டவன், “அங்கிள் அன்னைக்கு அவ்ளோ கோவமா கத்திட்டு இருந்தீங்க. ஒரே ஒரு நிமிஷம் என் பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்படியெல்லாம் நம்ம எல்லார் வாழ்க்கையிலும் நடந்தே இருக்காது.” என்று அவன் வருத்தம் கொள்ள,

“புரியுது பா. அன்னைக்கு எனக்கு என் பிசின்ஸும் என் பையனும் தான் கண்ணு முன்னாடி தெரிஞ்சாங்க. ஒரு பொண்ணை கல்யாண மேடையில நிறுத்திட்டு நம்ம பையனை கூட்டிட்டு போறோம், அதுல அவனுக்கு சம்மதம் இருக்குமா இருக்காதான்னு நான் யோசிக்கவே இல்ல.” என்று வருத்தம் கொண்டார்.

“விடுங்க ராஜன், உங்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி பிசினஸ் அப்படிங்கறது நம்ம உயிருக்கும் மேல. நம்ம மரியாதை, நம்ம கௌரவம். ஆனா நம்ம பிள்ளைகளுக்கு அது வெறும் தொழில். அவங்களுக்கு உறவும் அனுசரணையும் இருந்த அளவுக்கு நமக்கு இல்ல.” என்று விநாயகம் சொல்ல,

“உண்மை தான் விநாயகம்” என்று ராஜராஜன் ஆமோதித்தார்.

மெல்ல முன்னே நடந்து வந்த சமரன் ராஜராஜன் கரத்தை பற்றி, “பழைய பகையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு என் பொண்ணை கஷ்டப்படுத்திட மாட்டீங்களே ராஜன். ஏன்னா எங்களுக்கே தெரியாம இவ்ளோ நாள் நாங்களும் அவளை கஷ்டப்பட வச்சுட்டோம்” என்று கூற,.

“ஒன்னும் இல்ல சமரன்.உங்க பொண்ணு அவ புருஷன் குழந்தையோட நிம்மதியா சந்தோஷமா இருப்பா. இது என் மேல சத்தியம். ஆமா வந்ததல இருந்து யாரும் என் பேத்தியை காட்டவே இல்ல” என்று ராஜராஜன் கேட்க,

“அவளுக்கு வளர்ச்சி குறைவு அங்கிள். அதுனால என்.ஐ.சி.யூல இருக்கா. இன்னும் ஒரு மாசமாவது ஆகும் அவளை நம்ம கிட்ட அவங்க கொடுக்க.” என்று சரண் பதிலளித்தான்.

அவன் சொன்னதில் மனம் வெதும்பிய செந்தூரன், “எல்லாமே என்னால தானே? என் கோவத்தால தானே?” என்று முகத்தில் அறைந்து கொள்ள, அவனை எட்டி வந்து தடுத்த சரண்,

“ஆமா உன்னால தான். அதுக்கு நீ என்ன செய்ய போற? என் ஷிவானியையும் என் குட்டி தங்கத்தையும் தங்க தட்டுல வச்சு தாங்கணும் இனிமே. புரியுதா?” என்று கோபமாக வினவ, செந்தூரன் சரணை அணைத்துக்கொண்டான்.

“எப்போ இவங்களுக்கு கல்யாணம் வைக்கலாம்?” என்று ராஜராஜன் வினவ,

“என் மாமா மனசுல உள்ள பொண்ணுக்கும் என் மாமாவுக்கும் நிச்சயம் முடிஞ்சதும்.” என்று பதில் தந்தாள் ஷிவானி.

“அது ரொம்ப கஷ்டம்.” என்று சரண் ஷான்வி பற்றியும், கிருஷ்ணமூர்த்தி,கீர்த்தி பற்றியும் சொல்ல,

சமரன்,விநாயகம், ராஜராஜன் மூவரும் சற்று நேரம் தனியே பேசிக்கொண்டனர்.

“சரண் நீ ஒன்னும் கவலைப்படாத. நாங்க உன் கல்யாணத்தை இவங்க கல்யாணத்தோட சேர்த்தே நடத்துறோமா இல்லையான்னு பாரு” என்று மூவரும் ஒருசேர கூறியதும் அவனுக்கும் சற்று மனதில் நிம்மதி பரவியது.

ஷிவானிக்காக பிரத்யேக தனியறை ஒன்றை அந்த மருத்துவமனையில் வாடைக்கு எடுத்துக்கொண்ட சரண் அனைவரையும் அங்கே அமர்த்த, கிருஷ்ணமூர்த்தி, கீர்த்தி,ஷான்வி, சிவபாலன் நால்வரும் அவ்வறைக்குள் நுழைந்தனர்.

கிருஷ்ணமூர்த்தி சரணைக் கண்டு, “நீ ரொம்ப நல்ல பையன்னு நினைச்சேனே சரண், ஏன் என் பொண்ணு வாழ்க்கையில தடையா வர்றீங்க? உங்களுக்கு தெரியாதா அவ டாக்டர்ன்னு. அவளுக்கு நான் டாக்டர் மாப்பிள்ளை தான் பார்ப்பேன்னு உங்களுக்கு தோணலையா? உங்க தொழிலை நான் குறைச்செல்லாம் பேசல பா. ஆனா என் பொண்ணுக்கு ஒத்து வராது” என்று திட்டவட்டமாக கூற,

ஷான்வி கண்களில் நிறைந்த நீரோடு மெல்ல சரண் அருகில் சென்று அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

சரண் பதில் தரும் முன்னர் விநாயகம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

“விசாலாட்சி கன்ஸ்ட்ரக்ஷன் எங்க கம்பனி தான் டாக்டர்.நானும் என் தொழிலுக்கு என் பையனை இழுக்கணும்னு பார்த்தேன். ஆனா அவனுக்கு ஆட்டோமொபைல்ல தான் ஆர்வம். அவன் வேலை எப்படி இருக்கும்ன்னு நான் சொல்லி உங்களுக்கு
தெரிய வேண்டாம்.” என்று சொல்ல,

“உங்க பையன்கிட்ட குறைவா நான் எதையும் சொல்லல சார். எனக்கு தேவை என் ஹாஸ்பிட்டலை எனக்கு அப்பறமும் கட்டி காப்பத்துற ஒருத்தர். அது என் பொண்ணு இல்லன்னு தெரிஞ்சு போச்சு. அப்போ எனக்கு வரப்போற மருமகனை நான் பார்த்து தேர்தெடுக்கணும் இல்லையா?” என்று அவரை மடக்குவதாக எண்ணி கிருஷ்ணமூர்த்தி பேச,

“ஏன் ஷான்வி நல்லாவே பண்ணுவா.” என்று சரண் அவளுக்கு சார்ந்து பேச,

விநாயகம் மகனை கையமர்த்தி, “உங்களுக்கு உங்க ஹாஸ்ப்பிடலை நிர்வாகம் பண்ணுற மருமகன் வேணுமா? இல்ல, டாக்டரா இருக்கிற மருமகன் வேணுமா?” என்று கேட்க, மூர்த்தியே இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பினார்.

“ஏன் ரெண்டும் ஒருத்தரே செய்யலாமே. நான் பண்ணல?” என்று அவர் கூற,

“ஓ தாராளமா செய்யலாமே. உங்களைப்போலவே பண்ணினா என்ன ஆகும்னு ஷான்வி கிட்ட கேளுங்க” என்று சரண் கூற, அவர் மகளை உற்று நோக்கினார்.

“நீங்க மேனேஜ்மெண்ட், கூடவே பேஷண்ட் சர்ஜரின்னு பிஸியாவே இருப்பீங்க. எனக்கு உங்க கூட பேசணும்,சேர்த்து வெளில போகணும்ன்னு நிறைய ஆசை இருக்கும். ஆனா அதெல்லாம் ஒருநாள் கூட நடந்ததே இல்ல தெரியுமா?” என்று ஏக்கமாக ஷான்வி கூற,

“இதை தான் சொல்ல வந்தேன் டாக்டர் சார். நீங்க ரெண்டையும் பார்த்தா குடும்பம் சந்தோஷமா இருக்காது. உறவுகள் பலமா இணைஞ்சு இருக்காது. இதுவே ஷான்வி டாக்டரா பேஷண்ட்ஸ் பார்த்தா, என் பையன் ஹாஸ்பிடல் மேனேஜமெண்ட் பார்த்துக்குவான். உங்களுக்கே அவன் கேரேஜை எப்படி மேனேஜ் பண்றான்னு தெரியும். உங்க திருப்திக்கு அவனை எம்.பி.ஏ ஹாஸ்பிடல் மேனேஜமெண்ட் கோர்ஸ் வேணாலும் எடுத்து படிக்க சொல்றேன். அவன் உங்களுக்கு அப்பறம் இந்த ஹாஸ்பிடலை நல்லா பார்த்துக்குவான். உங்க பொண்ணும் மனசுக்கு பிடிச்சவன் கூட வாழ்க்கையை வாழுவா. அவங்களுக்கு அப்பறம் வர்ற ஜெனரேஷன் கூட சந்தோஷமா எல்லார் கூடவும் சேர்ந்து இருக்கும். ஏன்னா நாங்க கூட்டு குடும்பம்.” என்று மெல்ல அவர் மனதில் அவருக்கு நல்லது என்பது போல அனைத்து விஷயங்களையும் பதித்தார் விநாயகம்.

“உண்மை தான் டாக்டர் சார். எப்படியும் என் பையன் சிவில் படிச்சிட்டு எங்க கம்பனி பொறுப்பை எடுத்துக்கறேன்னு சொல்லிட்டான்.” என்று ஷியாமை காட்டினார் சமரன். அவனோ ‘இது எப்போ?’ என்பது போல விழிக்க,

“எங்க மாப்பிள்ளையும் சம்மந்தியும் இதே பிஸ்னஸ் தான். அதுனால நாங்க சரணை எங்க பக்கம் இழுக்க மாட்டோம். அவனோட கேரேஜுக்கு அப்பறமா அவன் உங்க ஹாஸ்பிடலை தான் பார்ப்பான். அதுவும் இல்லாம எப்பவும் பொண்டாட்டி கூட இருக்க வாய்ப்பு கிடைச்சா எந்த புருஷன் வேண்டாம்ன்னு சொல்லுவான்” என்று பல கோணங்களில் கிருஷ்ணமூர்த்தி சமரன் மடக்க,

“ரொம்ப யோசிக்க வேண்டாம் டாக்டர் சார். உங்க சாய்ஸ் எப்பவும் சூப்பரா இருக்கும்ன்னு காஸ்மோ கிளப்ல எல்லாரும் பேசிக்குவாங்க. நீங்க சரணை மட்டும் உங்க மருமகனா ஆக்கிக்கோங்க எல்லாரும் உங்க மகளுக்காக நீங்க எப்படி சரியான காரியம் பண்ணி இருக்கீங்கன்னு புகழ்ந்து பேசுவாங்க. கூடவே உங்க பொண்ணுக்கு தான் முழு ஹாஸ்பிடல். எங்க பையன் வெறும் நிர்வாகம் மட்டும் தான். எப்படி பார்த்தாலும் இது உங்க சொத்தா, உங்க வாரிசுக்கு தான் நாளைக்கு போகும்.” என்று ராஜராஜனும் அவர் பங்குக்கு பேச,

கீர்த்திக்கு மகளை எப்படியாவது மனதை மாற்றி கைனோ படிக்க வைத்துவிட்டால் தனக்கு பிறகு, தன் மகளின் பெயர் புகழப்படும். தனக்கும் அது பெருமை. சிவபாலன் என்ற ஒருவன் தேவையே இல்லை என்று உணர்ந்தவர் மெல்ல கிருஷ்ணமூர்த்தியை ஒப்புக்குள்ள வைக்க முயற்சிகளை செய்தார்.

ஷான்வி தந்தையின் முகத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்க அவர் அவளை வா என்று அருகே அழைத்து,

“உனக்கு சரணை தான் பிடிச்சிருக்கா?” என்று வினவினார்.

“ஆமா பா. நான் சரணை தான் லவ் பண்ணினேன் முன்னாடி. ஆனா இப்போ அவரோட குடும்பத்தையே நேசிக்கிறேன். நான் இந்த குடும்பத்தை இழக்க தயாரா இல்லப்பா. ப்ளீஸ் பா என்னை இந்த உறவுகளோட வாழ விடுங்க பா. உங்களுக்கு என்னையும் என் வாழ்க்கையையும் விட இந்த ஹாஸ்பிடல் தான் பெருசுன்னா தாராளமா சிவபாலனை உங்க ஹெயரா அனவுன்ஸ் பண்ணி இந்த ஹாஸ்பிடலை அவர் கிட்ட ஒப்படைச்சுக்கோங்க. ஆனா என்னை மட்டும் சரணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க பா. கண்டிப்பா அவங்க எனக்கு சின்ன கிளினிக்காவது வச்சு தருவாங்க. இல்ல என்னை வச்சுக்க அலோ பண்ணுவாங்க. நான் என் அறிவை வச்சு வளர்ந்துக்குவேன் பா. இல்லன்னாலும் என்னை தாங்கி பிடிக்க இவ்ளோ பேர் இருப்பாங்க. ப்ளீஸ்” என்று கண்களில் கண்ணீர் சேரக் கெஞ்சினாள்.

மகளை அழுத்தமாக பார்த்தவர், “எனக்கு இந்த ஹாஸ்பிடல் குழந்தை மாதிரி தான் ஷான்வி. ஆனா உண்மையான குழந்தை நீ தானே. அதான் அவங்க இவ்ளோ சொல்றாங்களே, அவர் படிச்சிட்டு வந்து மெதுவா நிர்வாகத்தை பார்க்கட்டும். நீ சொன்னது போல எனக்கு ஜூனியரா நான் சிவபாலனை வளர்த்து விடுறேன். நீ ஹாஸ்பிடல் பொறுப்பு எடுக்கும் போது அவரை மரியாதையா நடத்து.” என்று சொன்னவர்,

“சாரி சிவபாலன்.பொண்ணு மனசுல இப்படி ஒரு ஆசை இருக்கும்ன்னு நான் நினைக்கல.” என்று மன்னிப்பு வேண்ட,

“அதுக்கென்ன அங்கிள் அதான் என்னை உங்க ஜூனியரா எடுத்துக்க ஓகே சொல்லிட்டிங்க. இவங்களே நாளைக்கு என்னை வெளில போன்னு சொன்னா கூட உங்க சிஷ்யன்னு சொன்னா வேலை ஈஸியா கிடைக்காதா என்ன?” என்று முறுவலுடம் வினவினான்

ஷான்வி அவனிடம் மன்னிப்பு வேண்ட, “இட்ஸ் ஓகே ஷான்.” என்று ஒரு தோள் குலுக்கலோடு நகர்ந்தான்.

அவனுக்கு இந்த சந்தர்ப்பம் போகிறதே என்று ஆரம்பத்தில் கோபம் பெருகியது. ஆனால் இப்பொழுது அனைத்தையும் சிவபாலனுக்கே வேண்டுமானாலும் கொடுங்கள். எனக்கு என் குடும்பம் இருக்கிறது என்று ஷான்வி கூறினாளோ அப்பொழுதே உணர்ந்தான், ஆயிரம் தான் அடுத்தவர் உதவினாலும் நம் உறவுகள் தரும் நம்பிக்கையையை, அன்பை பக்கத்துணையை யாரும் தர இயலாது என்று. அதனால் இந்த கல்யாண விஷயத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டான்.

அனைவரும் மனநிறைவுடன் அங்கிருந்து நகர,ஷான்வி சரணின் கைகளை பற்றிக்கொண்டு கண்ணோடு கண் நோக்கி, “ஐ லவ் யூ சரண்” என்று கூற,

அவனும் அவளை அணைத்துக்கொண்டு “லவ் யூ ஷானுமா.” என்று கன்னத்தில் அச்சாரம் வைத்தான்.

ஷிவானியும் குழந்தையும் சற்றே தேறி வரும்வரை காத்திருந்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பின் இருவரும் வீட்டிற்கு வந்த ஒரே வாரத்தில் ஊரையே கூட்டி திருமணம் நிகழ்த்தினர்.

ஷான்வி எப்பொழுதும் ஷிவானி செந்தூரனின் மகளை மருத்துவமனையில் வைத்து கொஞ்சி பழகி விட, அமுதுண்ண அன்னையிடம் செல்லும் குட்டி தங்கம் மற்ற நேரமெல்லாம் ஷான்வியின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டது.

சரணுக்கும் குட்டி தேவதையை பிடித்துவிட திருமண மேடையில் கூட அவள் ஷான்விக்கு சரணுக்கும் பொதுவாக மடியில் படுத்திருந்தாள்.

ஷிவானி சரணிடம்,”என்ன மாமா என் பொண்ணு என்னை விட உன்கிட்ட அதிகமா உரிமை எடுத்துக்கறா போல?” என்று கிண்டல் அடிக்க,

“என்ன சும்மா தங்கம் செல்லம்ன்னு இவ்ளோ நாள் சொல்றது? இன்னிக்கு நல்ல நாள் தானே குழந்தைக்கு பேர் வச்சிடலாம்” என்று அனைவரும் கூற ஷிவானி அந்த பொறுப்பை சரணிடமே கொடுத்தாள்.

“என்னை விட அவ மேல உனக்கு தான் மாமா உரிமை ஜாஸ்தி நீ வை” என்று அவள் அமைதியாக,

அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், னா எல்லாரோட வாழ்க்கையையும் சந்தோஷமாக்க வந்த என் குட்டி தேவதைக்கு சந்தோஷின்னு வைக்கலாம் என்று அவள் காதில்

“சந்தோஷி ,சந்தோஷி, சந்தோஷி” என்று மூன்று முறை கூற பெரியவர்கள் அனைவரும் அவனை பின்பற்றி பெயர் வைத்து முடித்தனர்.

செந்தூரனிடம் அதிகம் பேசாமல் ஷிவானி ஒதுங்கியே இருக்க,

அனைவரது முன்னிலையிலும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினான் செந்தூரன். அதற்கு மேல் அவன் மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாமல் அழுகையோடு அவன் மார்பில் நான்கு அடிகளை பரிசாக அளித்து அவனை ஏற்றுக்கொண்டாள் ஷிவானி.

முத்துலட்சுமி ஷான்வியின் கைகளை பற்றிக்கொண்டு, “நீ எப்பவும் எங்க வீட்ல சந்தோஷமா வளைய வரணும் மா” என்று வைர வளையலை போட்டு விட,

சரண் அவளது வளைகரம் பற்றி தன்னோடு சேர்த்துக்கொண்டான்.

====

நாளைக்கு ஒரு குட்டி எபிலாக் போட்டு கதையை முடிச்சு விடுறேன் ஃபிரெண்ட்ஸ்