உறவாக அன்பில் வாழ -17(pre-final)

தன் எதிரே இருந்த மதுக்கிண்ணத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் செந்தூரன்.

அவனது மனதில் சொல்ல முடியாத வேதனை. திடீரென்று ஒருநாள் சரண் அவனை அழைத்து, நீயும் ஷிவானியும் லவ் பண்றீங்களா என்று கேட்க,

மறைக்க ஒன்றுமில்லை என்று நினைத்து அவன் ஆமென்று சொன்னதும் மறுநாளே கோவிலில் திருமணத்தை நடத்தியாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.

செந்தூரனுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் ஏதோ அவசரம் என்று அவன் பேச்சில் புரிய, தந்தைக்கு பின்னர் விளக்கி கொள்ளலாம் என்று நினைத்து தான் அவன் ஒத்துக்கொண்டது.

ஆனால் தந்தை கடைசி நேரத்தில் வந்து அவனை அழைக்க, அவருடன் சென்று சமாதானம் செய்து மீண்டும் கோவிலுக்கு வரும் முடிவுடன் தான் அவருடன் கிளம்பினான்.

ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் சரணுக்கும் ஷிவானிக்கும் திருமணமாகி விட்டது என்று தந்தை சொல்ல அதனை அவனால் நம்பக்கூட இயலவில்லை. காரணமே சொல்லாமல் அவசரமாக திருமண ஏற்பாடு செய்தவர்கள். தான் இல்லை என்ற சூழ்நிலையில் அவர்கள் மணந்து கொண்டனர் என்று நினைத்த செந்தூரனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.

மீண்டும் பெங்களூரு செல்ல விருப்பமில்லாதவனாக தந்தை தொழிலை ஏற்று லண்டனில் இருக்கும் ஒரு கிளைண்டின் வேலையை முடித்துக்கொடுக்க நேரில் சென்றுவிட்டான்.

ஆறு மாதம் கழித்து வந்தவனுக்கு சரணைப் பார்த்து பேச ஆவல் பிறக்க, அவனோ இவனது அழைப்புகளை ஏற்கவே இல்லை.

தந்தையிடம் அவன் புலம்ப, அவர் அவனை வீட்டிற்கு வரவழைக்க பல முயற்சிகள் எடுத்து அதில் தோல்வியைத் தழுவினார்.

அவரைப் பொறுத்தவரை சரண் நல்ல பையன். ஷிவானி திருமண ஏற்பாடு அவர்கள் பெற்றோரின் நாடகம் என்று முழுமையாக நம்பினார். தன் மகனை தான் அழைத்து வந்ததும் மருமகனுக்கே மணம் முடித்து விட்டனர் என்று எண்ணிக்கொண்டிருந்தார் ராஜராஜன்.

சரண் அன்று போனில் அவரிடம் கோபம் கொள்ளும்பொழுது ஷிவானிக்கு வளைகாப்பு என்று சொல்ல, மகன் ஏதோ அவர்கள் வாழ்க்கையை கெடுத்தது போல எண்ணிக்கொண்டு சோகத்தில் அலைவதால், அவனை சமாதானம் செய்யும் பொருட்டு,

“நீ தான் அன்னைக்கு நடந்ததை நெனைச்சுட்டு கஷ்டப்பட்டு சுத்திட்டு இருக்க, ஆனா அந்த பெண்ணும் சரணும் நல்லா தான் இருக்காங்க. அந்த பொண்ணுக்கு நேத்து தான் வளைகாப்பு முடிஞ்சதாம்.” என்று சொல்லி மகனை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் சொல்லி வலியுறுத்தினார்.

ஆனால் அது அவனிடம் எதிர்வினையாற்றி முழு போதையில் அவன் ஷிவானி எண்ணுக்கு அழைப்பு விடுத்து,

“ஏன் டி உருகி உருகி என்னை காதலிச்சிட்டு, இப்போ அவனை கல்யாணம் பண்ணி, பிள்ளையும் பெத்துக்க போறியா? அப்பறம் ஏண்டி என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு சுத்தின? நான் என்ன இளிச்சவாயனா உனக்கு?” என்று கேட்க,

அவனது கேள்விகள் நாராசமாக ஷிவானியின் காதுகளில் ஒலித்தது.

அவள் அழைப்பை துண்டித்துவிட்டு அவனை நேரில் சந்திக்க சரணின் சொல்லையும் மீறி கிளம்பினாள். ஆனால் அவளது போதாத வேளை படியில் வழுக்கி பின் நிகழ்ந்தவை எல்லாம் வலி தரும் நிகழ்வுகளே.

இனியும் இவனுக்கு உண்மையை சொல்லாமல் இருப்பது சரணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என்று அவளுக்கு உறைத்தது, செவிலியர் அவளின் மகளின் பிறப்பு சான்றிதழுக்காக ஃபாரத்தை அவளிடம் கொடுத்த போது தான்.

அதில் அவள் தந்தை என்ற இடத்தில் செந்தூரன் என்று ஷிவானி நிரப்ப, செவிலியோ, மருத்துவமனை சான்றுகளின் படி சாய்சரண் என்று இருப்பதாக கூற, தன் மகளின் பிறப்பே அசிங்கப்பட்டுவிடும், சரணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் என்று உணர்ந்து அந்த செவிலியரின் உதவியுடன் சரணை பார்மஸிக்கு அனுப்பி, அவருக்கு தெரிந்த டேக்சி மூலமே செந்தூரனை சந்திக்க வந்து சேர்ந்தாள்.

செந்தூரனின் வீட்டு வாயிலில் இறங்கியாவளின் தோற்றத்தைக் கண்டு வாயிர்காவலன் உள்ளே அனுப்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவள் ராஜராஜனிடன் தன்னை பற்றி கூறுமாறு கோபத்துடன் தெரிவித்தாள்.

வலி ஒருபுறம், வாழ்வை எண்ணி பயமொருபுறம், சரணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு ஒருபுறம் என்று ஷிவானி தவித்தபடி வாசலில் நிற்க,

ராஜராஜன் உள்ளே அழைத்ததாக சொல்லி காவலன் உள்ளே அனுமதித்தான்.

மெல்ல நடந்து உள்ளே நுழைந்தவளை ராஜராஜனுக்கு அடையாளம் கூட தெரியவில்லை.

ஹாலில் வந்தவள் நிற்க முடியாமல் சோபாவில் அமர்ந்து,

“சார் உங்க பையனை கூப்பிடுங்க. நான் கொஞ்சம் பேசணும்.” என்று சொல்ல, அவரோ,

“நீ யாரும்மா? எதுக்கு என் பையனை பார்க்கணும்?” என்று கடுமையோடு கேட்க,

“உங்ககிட்ட சண்டை போடுற அளவுக்கெல்லாம் எனக்கு உடம்புல வலு இல்ல சார். கொஞ்சம் கூப்பிடுங்க. ரெண்டு நிமிஷம் பேசிட்டு போயிடுவேன். எந்த பிரச்சனையும் பண்ண நான் வரல .” என்று அவள் கூற,

“செந்தூ..” என்று மாடி நோக்கி குரல் கொடுத்தார் ராஜராஜன்.

மதுக்கோப்பையை கையில் எடுத்தவன், தந்தையின் குரல் கேட்டு எரிச்சலுடன் எழுந்து மாடி வராண்டாவுக்கு வந்தவன் விழிகள் கீழே சோபாவில் துவண்டு போன கொடியாய் அமர்ந்திருந்த ஷிவானியின் மீது நிலைகுத்தி நின்றது.

கால்கள் வேரோடியது போல நகர முடியாமல் நிற்க, கண்கள் அவளைக் கண்டு கலங்கி கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

தந்தை அவள் கர்ப்பமாக இருப்பதாக சொன்னது நினைவுக்கு வர, அவளை ஆராய்ந்தவனுக்கு அவளின் தோற்றத்தில் எதுவும் கண்டுகொள்ள இயலவில்லை.

“வா செந்தூ.. இந்த பொண்ணு உன்னை பார்க்க வந்திருக்கு. யாருன்னு உனக்கு தெரியுமா?” என்று அவர் கேட்க,

மகனோ பதில் சொல்லாமல் அவளை மட்டுமே பார்த்தபடி படிகளில் ஒவ்வொன்றாக இறங்கி கீழே வந்து கொண்டிருந்தான்.

அவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன சார் என்னை அடையாளம் தெரியலையா? அன்னைக்கு பட்டு சேலையில பார்த்திங்க. இன்னிக்கு இந்த நைட்டில என்னை அடையாளம் தெரிய வாய்ப்பு குறைவு தான்.” என்று வறட்சியாக ஒரு புன்னகை புரிய,

“அன்னைக்கு சரண் கூட இருந்த பொண்ணு தானே நீ.. சமரனோட மகள் இல்ல..” என்று வேகமாக வினவினார் ராஜராஜன்.

“உனக்கு வளைகாப்புன்னு சரண் சொன்னேனே! நீ எங்கே மா இங்க? சரண் வரலையா? புருஷன் இல்லாம தனியாவா வந்த?” என்று அவர் கேட்க,

“புருஷன்.. யார் புருஷன்? யாருக்கு புருஷன்? நீங்களா வருவீங்க நடக்க இருந்த கல்யாணத்தை ஏன் என்னனு கூட கேட்காம நிறுத்தி, உங்க பையனை இழுத்துட்டு போவீங்க, அப்பறம் நீங்களே எனக்கு கல்யாணம் ஆனதா சொல்லிக்கிறதா? சரண் மாமா எனக்கு புருஷன்னு நான் சொன்னேனா? இல்ல ஷிவானி என் பொண்டாட்டின்னு என் சரண் மாமா சொன்னாரா?” என்று கோபத்தில் அவள் எழுந்து கொள்ள முயல,

அவளது உடையில் உதிரக்கரை படிந்திருந்தது.

“ஐயோ என்னம்மா ஆச்சு? நீ கர்ப்பமா இருந்தியே?” என்று அவர் பதறிப்போய் வினவ?

“என்ன ஆகும்? எல்லாம் உங்க பையனோட அபாரமான கேள்வியால நான் நிலை தடுமாறி கீழ விழுந்து அவசரமா சிசேரியன் பண்ணி குழந்தை பிறந்திருக்கு.” என்று வெறுப்புடன் கூறினாள்.

“என்னம்மா என்னென்னவோ சொல்ற? என் பையன் ஏன் உன்னை கேள்வி கேட்க போறான்?” என்று அவர் அப்பொழுதும் புரியாமல் வினவ,

“மூணு வருஷ காதல் சார். காதலி வேற கர்ப்பம். அப்பறம் ஐயா ஏக வசனத்துல பேசுவாரா மாட்டாரா?” என்று நக்கல் குரலில் அவள் கேட்க,

செந்தூரன் காதுகளை மூடிக்கொண்டு, “ஐயோ வானி.. ப்ளீஸ் அப்படியெல்லாம் பேசாத. நான் உன்னை அசிங்கப்படுத்த நினைச்சு போன் பண்ணல. ஆதங்கத்துல போன் பண்ணினேன். ஆனா உள்ளே போயிருந்த சரக்கு என்னை தப்பா பேச வச்சிடுச்சு.” என்று அழுதான்.

“ஓ.. குடிச்சிருந்தியா? குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணின? எல்லாம் சும்மாவா? சரிதான்.” என்று ஏளனமாக பேசியவள்,

“ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு போக தான் வந்தேன். எனக்கு பொண்ணு பிறந்திருக்கு. பர்த் சர்டிபிகேட் வாங்க பெத்தவங்க ஆதார் கார்ட் ஜெராக்ஸ் வேணுமாம். அதான் உன்கிட்ட வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேன். கொடுத்தா வாங்கிட்டு போயிட்டே இருப்பேன். என் பொண்ணை காட்டி உன்கிட்டயோ, உங்க அப்பா கம்பெனிலயோ எந்த சொத்தும் கேட்கிற ஐடியா எனக்கு இல்ல. என் மாமா என்னையும் என் பெண்ணையும் கடைசி வரைக்கும் நல்லாவே வச்சு பார்த்துக்குவார். ஆனா அதுக்காக கண்டவன் குழந்தையை அவர் இனிஷியல்ல சேர்த்து அவரோட வாழ்க்கையை நான் புதைகுழில தள்ள விரும்பல.” என்று அவள் கூற,

ராஜராஜன் அவள் பேச்சின் சாராம்சம் புரியாமல் திகைக்க, அவள் சொல்ல வந்ததன் பொருள் புரிந்திருந்த செந்தூரன்,

“நீ என்ன சொல்ற ஷிவானி? நம்ம குழந்தை.. நம்ம குழந்தையா உன் வயித்துல.. | என்று அவன் இழுக்க,

மகனின் பேச்சில் அவர்கள் இருவருக்குமான நெருக்கமும் அவள் சொல்ல வந்ததன் முழு பொருளும் உணர்நதவர் உடைந்தவராக சோபாவில் அமர்ந்தார்.

“என்ன.. நம்ம குழந்தையா? அது என் பொண்ணு. அவ்ளோதான். நான் தான் சொன்னேனே என் மாமா வாழ்க்கையை கெடுக்க விரும்பலன்னு. அவர் யாரையோ லவ் பண்றாரு. அவர் முகத்தில் காதலும் குழப்பமும் வந்து வந்து போகுது. முன்னாடி குழந்தை பிறந்ததும் அவளோட டி.என்.ஏ ரிசல்ட் எடுத்துட்டு உன்னை பார்க்க வர்றதா மாமா முடிவு பண்ணி இருந்தார். ஆனா ஹாஸ்பிடல்ல ஆப்ரேஷனுக்கு ஹஸ்பண்ட் தான் கையெழுத்து போடணும்னு சொன்னதும் அவர் கையெழுத்து போட்டுட்டு என் வாழ்க்கையை நெனச்சு எவ்வளவு கலங்கி இருப்பார். கண்டிப்பா எனக்காக அவர் காதலை கூட தியாகம் பண்ண தயங்க மாட்டார்ன்னு தான் இப்போ ஆதார் கார்ட் கேட்டு வந்திருக்கேன்” என்றவளுக்கு வலி முதுகில் பின்னி எடுத்தது.

நிற்க முடியாமல் மீண்டும் சோபாவில் விழுந்தவள், “ப்ளீஸ் கொஞ்சம் கொடுக்க முடியுமா? நான் கிளம்பணும்.” என்று சொல்ல

“அன்னைக்கு பெங்களூருல தூங்கி எழுந்ததும் நான் இருந்த நிலைமையே நமக்குள்ள என்னவோ நடந்ததை எனக்கு சொல்லிடுச்சு. அதுக்கு அப்பறம் நீ என்னை அவாய்ட் பண்ணவும், ரொம்ப சங்கடப்படுற, பேசி புரிய வைக்கணும்னு நெனைச்சுட்டு இருந்தப்ப தான் சரண் கல்யாணத்துக்கு கேட்டான். சரி நீ அவன் கிட்ட அன்னைக்கு விபத்தா நடந்ததை சொல்லி இருப்ப அதான் இப்படி அவசரப்படுறானு நெனச்சு தான் சரின்னு சொன்னேன்.

அப்பா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னதும் எனக்கு உயிரே இல்ல. ஒருவேளை உன் வீட்டுல உங்களை போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க போலன்னு நெனச்சு உன்னை மறக்க முடியாம நான் தவிச்சுட்டு இருக்கும்போது நீ கர்ப்பம், உனக்கு வளைகாப்புன்னு அப்பா சொல்ல நான் உடைஞ்சு போயிட்டேன். என்னையும் அறியாம குடிச்சிட்டு தப்பு தப்பா பேசிட்டேன்.” என்று சொன்னவன்,அவள் காலருகில் வந்து அமர்ந்து,

“சத்தியமா நீ கர்ப்பமா இருக்கறதுனால தான் கல்யாணத்துக்கு சரண் அவசரப்பட்டான்னு எனக்கு தெரியாது வானி. நீ எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல” என்று அவன் வினவ,

“என்ன டா சொல்றது? அன்னைக்கு ரெண்டு பேரும் உணர்வே இல்லாம தப்பு பண்ணிட்டோம். எனக்கு வாழ்க்கை கொடுன்னு உன்கிட்ட பிச்சை கேட்டு இருக்கணுமா?” என்று கோபத்துடன் வினவ,

“ஐயோ என்ன பேசுற ஷிவானி” என்று அவன் அவளை கட்டிக்கொள்ள,

“தள்ளிபோடா. அப்பா சொன்னாரு அப்பா சொன்னாரு இவ்ளோ நேரம் சொன்னியே! உன் அப்பா கிட்ட நீ என்னை காதலிச்சதை சொன்னியா? நாம ஆசையா தான் கல்யாணம் பண்ணிக்க இருந்தோம்ன்னு சொன்னியா? அவர் சொன்னா உனக்கென்ன புத்தி புல்லு திங்க போயிருந்ததா? நானும் மாமாவும் இங்கேயே தானே டா இருந்தோம்? என்னாச்சுன்னு ஒரு வார்த்தை நேர்ல வந்து எங்களைப் பார்த்து கேட்டியா? உன்னை காதலிச்சிட்டு என் மாமாவை கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீ எப்படி டா நம்பின?

அப்போ என் மேல உனக்கு அவ்ளோ தான் நம்பிக்கை. அப்படித்தானே? என் சரண் மாமா என் அப்பாவுக்கும் மேல டா. என் உயிருக்கும் மேல. இந்த ஏழு மாசமும் என்னை எப்படி வச்சு தாங்கினார் தெரியுமா? அழுத என்னை சமாளிச்சு, குழந்தைக்கு வேண்டிய சத்து வேணும்ன்னு சாப்பிட வச்சு. எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சாரு. அவர் வாழ்க்கை கெட்டுப்போக நான் விடமாட்டேன். எதுக்கு வெட்டி பேச்சு? நீ ஆதார் ஜெராக்ஸ் கொடு. நான் கிளம்பறேன்.” என்று எழ,

“மா” என்று உடைந்த குரலில் அழைத்தார் ராஜராஜன்.

அவரை அவள் திரும்பியும் பார்த்தாள் இல்லை. செந்தூரன் அவளை சமாதானம் செய்ய முயல,

“கொடுத்தா ஆதார் ஜெராக்ஸ் கொடு. இல்லன்னா உன் மேல கோர்ட்ல கேஸ் போட்டு அவ உன் பொண்ணுன்னு நிரூபிச்சு அப்பறம் பர்த் சர்டிபிகேட் வாங்கிக்கிறேன்” என்று பிடித்தபிடியில் நிற்க,

அவளிடம் தன் ஆதார் ஜெராக்ஸ் ஒன்றை கொடுத்தவன், “குழந்தையை எப்போ பார்க்கலாம்? நான் வர்றேன் வானி. எனக்கு பாப்பாவை பார்க்கணும்” என்று ஏக்கமாகக் கூறினான்.

அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் பதில் பேசாது மெல்ல எழுந்து கொள்ள, அவளது கால்கள் தள்ளாடியது.

“வானி நீ என்னை எப்படி வேணா தண்டிச்சுக்கோ. ஆனா இப்போ என்னோட வா. நான் உன்னை ஹாஸ்பிடல்ல விடுறேன். ப்ளீஸ்” என்று செந்தூரன் கெஞ்ச,

வலியாலும் வேதனையாலும் துவண்டிருந்த ஷிவானி எதுவும் சொல்லாமல் அவனது காரின் பின் சீட்டில் ஏறி சாய்வாக அமர்ந்து கொண்டாள்.

அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர, வேகமாக ஓடி வந்த ராஜராஜன் பக்கத்து இருக்கையை அக்கிரமித்தார்.

“நான் ஒன்னும் உங்க பையனை கடத்திட்டு போயிட மாட்டேன் சார். என் வீட்டு ஆளுங்களுக்கு உங்க பிஸ்னஸை குறுக்கு வழில என்னை வச்சு அடைய உங்க பையன் தேவையில்ல. நீங்க பயமில்லாம வீட்ல இருக்கலாம்.” என்று அவள் கூற, அன்று அவர் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்து தலை குனிந்து கொண்டார் ராஜராஜன்.