உறவாக அன்பில் வாழ – 15

சிறுவயது முதலே ஷிவானி சரணின் கைபிடித்து நடந்தே பழகியவள். எப்பொழுதும் மாமா மாமா என்று அவன் தோளில் தொங்கும் அவளிடம் அவன் ஒருநாளும் கோவித்ததோ, கடுமை காட்டியதோ இல்லை.

வீட்டில் அவள் செய்யும் சிறுபிள்ளை சேட்டைக்கு சித்ரா திட்டுவார் என்று அவனறைக்குள் புகுந்து கொள்வாள். எந்தநேரமும் அவளுக்கு சரண் மாமா இருந்தால் போதும். அன்னையையோ தந்தையையோ எதிர்பார்க்காத அளவுக்கு சரணும் அவளை கொண்டாடுவான்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வது போல, சரண் அவளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் அவள் வேறு எதற்கும் யாருக்கும் ஏங்கியதோ எதிர்பார்த்ததோ இல்லை எனலாம்.

சரணின் சிறுவயது முதலே நண்பனான செந்தூரன் அடிக்கடி சரணை கேலி செய்வதுண்டு, “இப்படி அவளை இடுப்புல வச்சுக்கிட்டு தெரிஞ்சா நாளைக்கு வர்ற உன் பொண்டாட்டி உன்னை சும்மா விட மாட்டா” என்று.

சரண் சிரித்தபடி “அதெல்லாம் ஷிவானியை என் பொண்டாட்டிக்கு பிடிக்கும். ஒன்னும் சொல்ல மாட்டா” என்று அவனை வாரி விடுவான்.

இப்படியாக இருந்த சரண் ஷிவானியின் அன்புக்கு இடையில் பெரிய தடையாக வந்தது தான் சரணின் ஸ்ரீ சாய் கேரேஜ்.

விநாயகம் அவனை சிவில் இன்ஜினியரிங் படித்து தங்கள் கம்பெனியின் பொறுப்பை எடுத்துக்கொள்ள வலியுறுத்த, ஆட்டோ மொபைலில் இருந்த ஆர்வம் காரணமாக, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் தேர்தெடுத்து அவருக்கு கோபத்தை மூட்டினான்.

‘எது படித்தால் என்ன நிர்வாகத்தை வந்து பார்’ என்று படிப்பு முடிந்ததும் மகனை அழைத்த விநாயகத்துக்கு அவனது கேரேஜ் ஐடியா சுத்தமாக பிடிக்கவில்லை. வீட்டில் தினமொரு சண்டை, நிமிடம் ஒரு முகத்திருப்பல் என்று இருக்க, அவர்கள் உதவி இல்லாமல் கேரேஜ் ஆரம்பிக்க நினைத்தான் சரண்.

இதை எப்பொழுதும் போல செந்தூரனும் ஷிவானியும் அவனோடு அமர்ந்திருக்கும் வேளையில் கூற செந்தூரன்,

“டேய் எனக்கு பெங்களூர் ஐ.டி கம்பெனில வேலை கன்பார்ம் ஆயிடுச்சு டா. கொஞ்ச நாள் பார்த்துட்டு அப்பறம் வந்து அப்பா பிஸ்னஸை பார்த்துக்க போறேன். உனக்கே நல்லா தெரியும்,என் அப்பாவும் உன் அப்பாவும் பிஸ்னஸ்ல எப்படி பகையாளியா இருக்காங்க ன்னு. ஆனா என் அப்பாவுக்கு உன் மேல உள்ள பாசமும் உனக்கு தெரியும் தானே? நான் அவர்கிட்ட சொன்னா கண்டிப்பா உனக்கு பேங்க் ஷுரிட்டி சைன் போடுவார் டா. இந்த ஒரு உதவியை மட்டும் அக்ஸப்ட் பண்ணிக்கோ” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்த,

ஏற்கனவே பேங்கில் எல்லாம் பேசியாகி விட்டது. ஒரு ஷுரிட்டி இருந்தால் போதும் என்று மேனேஜர் அழுத்தமாக சொல்லி விட்டார். சரண் மிகுந்த யோசனையோடு இருக்க,

ஷிவானி, “மாமா எதுக்கு நம்ம போட்டி கம்பெனி ஆளுங்க கிட்ட ஷுரிட்டி வாங்கணும்? உங்கப்பா போட்டா தான் ஷுரிட்டியா? இல்ல இவங்க அப்பா மட்டும் தான் போட முடியுமா? என் அப்பாவும் போடலாம். நான் கேட்டா என் அப்பா இல்லன்னு சொல்லவே மாட்டார். நான் வாங்கி தர்றேன்.”என்று அடித்து கூற,

சரணுக்கு அதில் அந்தளவு நம்பிக்கை இல்லை. கண்டிப்பாக சமரன் கையெழுத்து போடுவாரா என்று குழப்பம் இருந்தது. அதனால் செந்தூரனிடம்,

“டேய் எதுக்கும் என் மாமா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, அவர் இல்லன்னா நான் அங்கிள் கிட்ட சைன் வாங்கிக்கிறேன் டா.” என்று சொல்ல, ஷிவானி தன் மாமா தன் பேச்சை தான் கேட்டான் என்று செந்தூரனை நோக்கி நக்கல் பார்வை வீச,

என் நண்பனை இப்படி ஆட்டி வைக்கிறாளே என்று கடுப்புடன் நோக்கினான் செந்தூரன்.

ஆனால் சரண் நினைத்தது போல சமரன் கையெழுத்து போட முடியாது என்று சொன்னதும் ஷிவானிக்கு தந்தை மேல் கோபம் வந்துவிட்டது.

“ஏன் பா இப்படி பண்ற? மாமா அவருக்கு பிடிச்சத செய்யட்டுமே! நீயும் பெரிய மாமாவும் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? உங்க எதிராளி கம்பெனி மாமாவுக்கு உதவி பண்ண தயாரா இருக்கு. ஆனா சொந்த வீட்டு மனுஷங்க பண்ண மாட்டேங்கறீங்க” என்று கோபத்தில் வார்த்தையை விட,

சமரன், “இங்க பாரு சரண், நீ எங்கே கம்பெனியை டேக் ஓவர் பண்ணலன்னாலும் பரவாயில்ல. ஆனா ராஜராஜன் கிட்ட போய் உதவி கேட்காத. என் நண்பனுக்கு அது சுத்தமா பிடிக்காது.” என்று அழுத்தி கூற, சரண் கூட அவரின் பேச்சில் சற்று சிந்தித்தான். ஆனால் ஷிவானியோ,

“ஓ நீங்களும் செய்ய மாட்டிங்க, செய்யறவங்களையும் விட மாட்டிங்க. அப்படித்தானே? என் மாமா ஒன்னும் அவர் கிட்ட கடன் வாங்கப்போறது இல்ல. பேங்க்ல ஷுரிட்டிக்கு அவர் ஒரு ரெண்டு இன்ச் கையெழுத்து தான் போடப்போறாரு. என் மாமாவுக்காக அதை செய்ய கூட உங்களுக்கு மனசில்ல. அப்பறம் என்ன இதுக்கு என் மாமாவை இதை செய்யாத அதை செய்யாத ன்னு சொல்லிட்டு இருக்கீங்க. அவர் கிட்ட ஷுரிட்டி வாங்க தான் போறோம். என் மாமா கேரேஜ் ஆரம்பிக்க தான்  போறாரு. இனிமே உங்க யார் கூடவும் நான் பேச மாட்டேன் போங்க.” என்று தூக்கி வளர்த்த தன் மாமனுக்காக தந்தையிடம் மல்லுக்கு நின்று முகத்தை முறித்துக் கொண்டாள் ஷிவானி.

கடைசியில் ராஜராஜனிடம் கையெழுத்து வாங்கி கேரேஜ் ஆரம்பித்ததும், சரண் ஷிவானியின் கையை பற்றிக்கொண்டு,

“நீ என் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சு எனக்காக பேசின ஷிவானி. கண்டிப்பா மாமா என் வாழ்க்கை முழுக்க உனக்கு உறுதுணையா இருப்பேன் டா” என்று அணைத்துக்கொள்ள, அருகில் இருந்த செந்தூரனுக்கு முகம் விழுந்து விட்டது.

ஆனால் கேரேஜ் ஆரம்பித்தது முதலே சரணுக்கு கழுத்தை நெறிக்கும் அளவுக்கு வேலை இருந்தது. ஷிவானி அவனைக் காண கேரேஜ் வந்தாலும் பணியிடத்தில் ஆண்களுக்கு மத்தியில் இருக்க வேண்டாம் என்று சரண் அவளை அலுவலகத்துக்கு அனுப்ப, தனியே இருக்க சிரமம் கொண்டு வீட்டிலேயே இருக்க பழகினாள் ஷிவானி. கல்லூரி முடிந்து மேல் படிப்புக்கு அப்ளை செய்துவிட்டு வீட்டில் இருந்தவளுக்கு பொழுதே போகவில்லை. சரணும் முன்னைப்போல வீடு தங்குவதில்லை.

செந்தூரனும் பெங்களூரு புறப்பட்டு சென்று வாரா வாரம் சனி ஞாயிறுகளில் சென்னை வருவதை வழக்கமாக்கி இருந்தான்.

முன்பென்றால் சரண், ஷிவானி, செந்தூரன் என்று ஒன்றாக அலைவார்கள். இப்பொழுது சரண் இல்லாததால் செந்தூரன் ஷிவானியின் தனிமையை உணர்ந்து அழைக்க,அவளும் வீட்டிலேயே இருப்பதற்கு சென்று வருவோம் என்று அவனுடன் செல்வதை வழக்கமாக்கி இருந்தாள்.

செந்தூரன் ஷிவானியின் மனதில் சரண் மாமா என்ற உறவு முறையில் மட்டுமே நிறைந்திருப்பதை வெகு விரைவில் புரிந்து கொண்டான். அவனுக்கு ஷிவானி மீது சிறுவயது முதலே இருந்த சலனம், இந்த கொஞ்ச நாள் நெருக்கத்தில் காதலாகி இருக்க, அதை அவளிடம் சொல்ல நல்ல நேரமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

சரண், தனக்கும்,ஷிவானிக்கும் செந்தூரனுக்குமான உறவை பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று ஷிவானியின் அறையில் பரபரப்பு தென்பட்டது.

செவிலியர்கள் அங்கும் இங்கும் ஓட, ஐவரும் பயந்து போக, இங்கே அக்காவின் நிலை பற்றி தெரியாமல் வீட்டில் நல்ல உறக்கத்தில் இருந்தான் ஷியாம்.

**

சிவபாலனின் பேச்சில் சற்றே நிம்மதியடைந்த ஷான்வி வீட்டிற்கு வந்து உடை மாற்றி தன் விருப்ப இடமான பால்கனியில் தஞ்சம் கொள்ள, மனதை ஏனோ மருத்துவமனையில் விட்டுவிட்டு வந்த உணர்வு.

அவளுக்கு பின் சற்று நேரத்தில் கீர்த்தியும் வீட்டிற்கு வந்துவிட, ஏதோ கான்பிரன்ஸ் என்று சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தியும் வீடு வந்து சேர்ந்தார்.

இரவு உணவை அனைவரும் சேர்ந்து உட்கொள்ளலாம் என்று தந்தையிடமிருந்து குறுஞ்செய்தி அழைப்பு வந்ததும் ஷான்விக்கு எரிச்சல் மிகுந்தது.

தனக்கு படிக்க இருப்பதாக பதில் தகவல் அனுப்பிவிட்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். கண்களுக்குள் சரணின் சிரித்த முகம் வந்து போக அதில் பொய்மை சிறிதேனும் இருக்கிறதா என்று ஆராய ஆரம்பித்தாள்.

அவளால் அவனை சந்தேகிக்க முடியவில்லை. அதே நேரம் கண்ணில் கண்டுவிட்ட கையெழுத்து அவள் தலையெழுத்தைப் பார்த்து கைகொட்டி சிரித்தது.

எங்கே பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்து போனாள்.

கீழே உணவு மேசையில் கீர்த்தி கணவனின் யோசனை முகத்தை ஆராய்ந்தபடி,

“அதான் நான் உங்க முடிவுக்கு ஓகே சொல்லிட்டேனே கிருஷ்.இன்னும் என்ன பலமான சிந்தனை? சிவபாலன் நல்ல பையனா தான் இருக்கான்.” என்று மனதில் நினைத்ததை சொல்ல,

“ம்ம். நல்ல பையன் தான். ஆனா ஹாஸ்பிடல் நிர்வாகம் பத்தி இன்னும் நல்ல தெரிஞ்சுகிட்டு, ப்ராக்டிஸ் கூட கொஞ்சம் நல்லா பண்ணிட்டு அப்பறமா கல்யாணத்தை வச்சுக்கலாமான்னு கேட்டான்.” என்று இழுத்தார்.

“சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க கிருஷ். எனக்கு ஷான்வி கிட்ட ஹாஸ்பிடல் ஒப்படைக்க தான் விருப்பம் இருந்தது. அதுவும் என் ஸ்பெஷாலைஷேஷன்ல அவ வந்தா அடுத்த தலைமுறைலயாவது கிருஷ்ணா ஹாஸ்பிடல்ல கீர்த்தி டாக்டர் பெருமை இன்னும் பரவும்ன்னு நெனச்சேன். ஆனா நீங்க சொன்ன பின்னாடி தான் தெரிஞ்சது ஷான்விக்கு ரொம்ப சாப்ட் ஹார்ட்ன்னு. அவ கண்டிப்பா நாம கஷ்டப்பட்டு உருவாக்கின இந்த ஹாஸ்பிடல தர்மத்துக்கு நடத்தினாலும் ஆச்சரியம் இல்லன்னு புரிஞ்சு தான் சிவபாலனை கல்யாணம் பண்ணி வைக்க ஓகே சொன்னேன். ஆனா இப்போ சிவா சொல்ற படி செய்ய முடியாது கிருஷ். எனக்கு ஷான்வி மேல ஒரு டவுட் இருக்கு. சோ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடணும். ப்ளீஸ் காரணம் கேட்காத. எனக்கே இன்னும் தெளிவா தெரியல.” என்று கீர்த்தி உரைக்க,

“ம்ம்.. எனக்கும் டிலே பண்றதுல விருப்பம் இல்ல கீர்த்து. சிவாவை கரெக்ட்டா கைடு பண்ணி நம்ம லைனுக்கு அவனை கொண்டு வரணும். அதுக்கு மாப்பிள்ளைன்னு ஒரு மூக்கணாங்கயிறு இருந்தா தான் சரியா இருக்கும். ஏன்னா அவன் அவங்க அப்பா கூட சண்டை போட்டுட்டான். கோயம்புத்தூர் ஹாஸ்பிடல் எல்லாமே அவங்க அண்ணன் கையில இருக்கிற கோபம் அவனுக்கு. இதை சரியா யூஸ் பண்ணிக்கிட்டா அவனை ட்யூன் பண்ணி நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம். எப்படியும் நம்ம கூட தானே இருக்க போறாங்க. ஷான்விக்கு தேவையான செக்யூரிட்டி எல்லாமே லீகலா நாம ரெடி பண்ணிட்டா அவனால தப்பா எதுவும் செய்ய முடியாது. அவன் செய்யற ஆளும் இல்லன்னு வச்சிக்கோ. பிகாஸ் மை சாய்ஸ் இஸ் ஆல்வேஸ் தி பெஸ்ட். “என்று சொல்ல, கீர்த்தி, ஒரு பெருமூச்சோடு,

“அவளை கூப்பிட்டு கல்யாணத்து நாள் பார்க்க போறோம்ன்னு சொல்லிடுங்க. லேட் பண்ண வேண்டாம். முடிஞ்சா அடுத்த மாசத்துக்குள்ள முடிக்க பார்ப்போம்.’ என்று சொல்லிவிட்டு தங்கள் அறை நோக்கி சென்றார் கீர்த்தி.

கிருஷ்ணமூர்த்தி தன் மகள் அறைக்கதவை தட்டி உள்ளே எட்டிப்பார்க்க, அவள் இல்லாது போகவே, மெல்ல பால்கனிக்கு வந்தார்.

கூடை நாற்காலியில் கால்களை குறுக்கிக்கொண்டு கண்களை மூடி கண்ணீர் வழிய மகள் அமர்ந்திருந்த தோற்றம் அவரை லேசாக அசைத்தது.

‘ஏன் இப்படி இருக்கிறாள்? அவளுக்கு நாம் நல்லது தானே செய்கிறோம் என்று மனதிற்குள் தோன்றிய கேள்விகளை மகளிடம் கேட்க விருப்பம் இல்லாமல், அவளுக்கு புரியவில்லை. திருமணமாகி மகிழ்ச்சியாக வாழும்போது புரிந்து கொள்வாள்’ என்று நினைத்துக்கொண்டு அவளை தட்டி எழுப்பினார்.

“ஷான்வி” என்று தட்ட,

கண் மலர்ந்தவள், தந்தையைக் கண்டு தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்து கண்களை துடைத்துக்கொண்டாள்.

“என்னாச்சு? ஏன் இங்க உட்கார்ந்திருக்க?” என்று அவரும் எதிர் இருக்கையில் அமர,

“சும்மாதான் பா.என்ன விஷயம்?” என்று கேட்க,

“சிவபாலன் போன் பண்ணி இருந்தார் மா. கல்யாணத்தை கொஞ்ச மாசம் கழிச்சு வச்சுக்கலாம்ன்னு சொல்றாரு.” என்று அவர் சொன்னதும்,

அப்பாடி அவன் அவளிடம் சொன்னது போலவே தந்தையிடம் பேசிவிட்டான் என்ற நிம்மதியில்,

“நல்லது தான் பா. எனக்கும் எக்ஸாம்ஸ் இருக்கு. மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு கூட பண்ணிக்கலாம் பா” என்று லேசாக சிரித்தபடி கூறிய மகளை உற்று நோக்கியவர்,

“இல்லம்மா அது சரிவராது. அடுத்த மாசம் தேதி பார்க்க சொல்லி இப்ப தான் அவங்க அப்பாகிட்ட பேசிட்டு வந்தேன்” என்று அவள் தலையில் அலுங்காமல் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

“அப்பா.. என்னப்பா..அவரே டைம் கேட்கறார். நானும் கேட்கறேன். கொஞ்சம் கொடுத்தா என்ன? எங்களுக்கும் கல்யாணத்துக்கு பிரிப்பேர் ஆக டைம் எடுக்காதா?” என்று சற்றே கோபத்துடன் மகள் வினவ, கீர்த்தி சொல்ல வந்ததன் அர்த்தம் லேசாக புரிய ஆரம்பித்தது கிருஷ்ணமூர்த்திக்கு.

“அதான் ஒரு மாசத்துக்கு மேல டைம் இருக்கே! பிரிப்பேர் ஆகிக்கோ.” என்று எழுந்து சென்றார்.

“அப்பா.. அப்பா” என்று அவர் பின்னாலேயே படியிறங்கி ஷான்வி வர, அவசர அவசரமாக கிளம்பி காரை எடுக்க சென்று கொண்டிருந்தார் கீர்த்தி.

“என்னாச்சு? எதுவும் எமர்ஜென்சியா? என்ன கேஸ்?” என்று கிருஷ்ணமூர்த்தி விசாரிக்க,

இதையே மகள் கேட்டிருந்தால் பதில் சொல்லாமல் ஓடி இருப்பார். ஆனால் இப்பொழுது அவருக்கு கிருஷ்ணமூர்த்தியின் துணை அதிகம் தேவை என்பதால் அவரோடு சண்டையிடவோ, எதிர்த்து பேசவோ விருப்பம் இன்றி,

“காலைல ஒரு கிரிட்டிகல் சர்ஜரி பண்ணிட்டு வந்திருந்தேன். கீழே விழுந்து ப்ரீ டேர்ம் டெலிவரி. அந்த பொண்ணுக்கு திடீர்னு சீஷர் வந்திடுச்சாம். இப்போ கண்ட்ரோல் பண்ணிட்டாங்க. ஆனா அடுத்த சீஷர் வர விடாம இருக்க நான் உடனே போகணும்.” என்று  கிளம்ப,

“அம்மா இருங்க. நானும் வர்றேன்
” என்று கிளம்ப எத்தனித்தவளை கைகாட்டி நிறுத்தியவர்,

“வா வான்னு என் ஸ்பெஷாலிட்டிக்குன்னு கூப்பிட்டப்ப வரல. இப்போ என்ன சும்மா சும்மா நானும் வர்றேன்னு நிக்கிற? எனக்கு நிறைய ஜூனியர்ஸ் இருக்காங்க. உனக்கு ஏதோ படிக்க இருக்குன்னு சொல்லி தான டின்னர் சாப்பிட கூட வர மாட்டேன்னு சொன்ன? போய் உனக்கு பிடிச்ச அந்த படிப்பை பாரு ஷான்வி” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றார்.

ஷான்வி ஆணி அடித்தது போல் நின்றாள்.

அவளுக்கு உண்மை முகத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.

அவள் விரும்பிய சரண் இப்பொழுது யாருடைய கணவனோ.

பெற்றோர் அவளது விருப்பத்தை எதிர்பார்க்காமல் மருத்துவமனை நிர்வாகத்துக்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக அவளுக்கு ஒரு திருமணம்.

இனி என்ன தடுத்தாலும் அவர்கள் நிறுத்தப்போவது இல்லை. மெல்ல மனதை பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேறு வழி தேடவேண்டும் என்று சிந்தித்தவளுக்கு அது என்ன வழி என்று தான் தெரியவில்லை.

அங்கே மருத்துவமனையில் உதவி மருத்துவர்கள் ஷிவானிக்கு ஏற்பட்ட வலிப்பை நிறுத்தியிருந்தனர். சரண் முதல் விநாயகம் வரையில் ஷிவானியின் உடல் தூக்கி போட்டதைப் பார்த்து பயந்து போயினர்.

சரணின் கைகளை அழுத்தமாக பற்றி இருந்த முத்துலட்சுமி.

“ஒன்னும் கவலைப்படாத சரண். அவளுக்கு எதுவும் ஆகாது. ” என்று சொல்ல, விநாயகம் அவனுக்கு ஆறுதல் தரும் வகையில் தோளில் தட்டினார்.

அவர் அனைவருக்கும் குடிக்க தேநீர் வாங்கி வருவதாக கிளம்ப, சமரனும் அவருடன் சென்றார்.

போகும் வரை பார்த்த சரண் தன் அன்னையிடம், “ஏன் மா அப்பா எப்படி இப்படி மாறினாரு? நான் எதிர்பார்க்கவே இல்லமா” என்று சொல்ல,

“மனுஷ மனசு ஒரு விஷயத்தை தப்பா புரிஞ்சுக்கவும் ஒரு நொடி போதும், அதே போல அதை சரியா புரிஞ்சுக்கவும் ஒரு நொடி போதும்.

என்ன அந்த இரண்டு நொடிக்கும் இடைப்பட்ட காலம் தான் அவங்க வாழ்க்கையை புரட்டி போட்டுடுது. உங்க அப்பாவுக்கு நான் அவரை  மதிக்கலன்னு மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அதை மாத்திக்க அவர் தயாராவே இல்ல. அவங்க அம்மாவுக்கு ஜால்ரா தட்டி நான் பட்டும் நகையுமா இருக்கிறதா அவர் நெனச்சுக்கிட்டார். அது அவங்க விருப்பத்துக்கு நான் கொடுத்த மரியாதைன்னு அவருக்கு புரியல. அவங்க அம்மா இறந்த பின்னாடி நான் பழைய முத்துவா மாறி சாதாரணமா இருந்து, அவர்கிட்ட நெருங்க முயற்சி பண்ண, மறுபடியும் ஒட்டுண்ணி மாதிரி அவரை உறிய வர்றதா நெனச்சுக்கிட்டு என்னோட உண்மைத்தன்மையை புரிஞ்சுக்காம நடிக்கிறேன்னு நெஞ்சுட்டார். ஆனா நம்ம கண்ணு முன்னாடி இப்படி இருக்கிறவ, நாம இல்லாதப்பவும் நமக்கு சாதகமான பேசுவான்னு என்னோட உண்மையான குணம் அவருக்கு தெரிஞ்ச நொடி, அவரோட தப்பு அவருக்கு புரிஞ்சு போச்சு. 

மனுஷனோட மனசு விசித்திரமானது சரண். யாரை பிடிக்கல பிடிக்கலன்னு மனசு தள்ளி தள்ளி வைக்குதோ அவங்க தான் அதிகமா நமக்கு பிடிச்சவங்களா இருப்பாங்க. அதை ஒத்துக்க மனசு இருக்காது. அவ்ளோ தான். என்னைக்கு அதை மனசு ஒத்துக்குதோ அன்னைல இருந்து வாழ்க்கை வேற மாதிரி இருக்கும்.

நம்ம ஈகோவை லேசா தள்ளி வச்சிட்டு ஒரு உறவை பார்த்தா அது அவ்ளோ அர்த்தமுள்ளதா இருக்கும். அப்பா அந்த ஈகோவை ஒதுக்கி வச்சுட்டு என்னை பார்த்துட்டார். இப்போ உன்னை பார்க்க முயற்சி பண்ணிட்டு இருக்கார். அப்போ அவருக்கு உறவோட உன்னதம் புரியுதுன்னு அர்த்தம்.” என்று சொல்ல,

“உண்மை தான் மா. உறவுகள் இருக்கறது எவ்வளவு பலம். நேத்து செந்திலும் கங்கம்மாவும் பக்கத்துல இல்லன்னா நான் உடஞ்சு போயிருப்பேன். உறவுங்கறது ரத்தத்துல மட்டும் வர்றது இல்லல்ல.”என்று கேட்க,

அவன் முகத்தை பற்றி கன்னம் வழித்து முத்தமிட்டார் முத்துலட்சுமி.