உறவாக அன்பில் வாழ – 11

மாலை வேளையில் என்றும் இல்லாத திருநாளாக சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார் விநாயகம். சமரன் ஏதோ வேலை இருப்பதாக அவரை கேட்டுக்கு வெளியே இறக்கிவிட்டுச் சென்றுவிட,

காதில் கைபேசியை பொருத்தி யாருக்கோ அழைக்க முயன்றபடி வீட்டினுள் நுழைந்தார்.

எப்பொழுதும் இந்த நேரமெல்லாம் வீட்டுப் பெண்களும் வேலையாட்களும் மட்டுமே இருக்கும் நேரம். அதனால் அவர் அமைதியாக மாடிக்கு சென்றுவிடும் நோக்கில் படிகளை நோக்கி நடந்தார்.

ஆனால் சமையலறையில் கேட்ட பேச்சு சத்தமும் அதன் சாராம்சமும் அவரை நகர விடாமல் நிறுத்தியது.

பேச்சு அவரது மகனைப் பற்றியது எனும்போது அதற்கு தடை விதித்திருக்கும் அவர் என்னவென்று கவனித்தால் தானே பேசியருக்கு தண்டனை வழங்க முடியும்? அதனால் அங்கேயே தேங்கி நின்றார்.

“நான் சொன்னதைக் கேட்டு நீங்க கோவிச்சாலும் பரவாயில்லைங்க மா. அப்போ சொன்னதே தான் இப்பவும் சொல்றேன். போய் ஒருதடவை பாப்பாவைப் பாருங்க. ரெண்டு நாளா ஆஸ்பத்திரியில கிடந்து நாரா வந்து சேர்ந்திருக்கு பிள்ளை. என்ன தான் நம்ம தம்பி நல்லா பார்த்துகிட்டாலும் பொம்பளைங்க நாம பக்கத்துல இருந்து பார்க்கிறது போல வருமா? அதுவும் இல்லாம, அவரும் சின்ன வயசுக்காரர் தானே?” என்று வீட்டு வேலை செய்யும் தேவகி கூறிக்கொண்டிருக்க,

சித்ரா ஒரு பெருமூச்சோடு, “என் பிள்ளை என்ன தப்பு பண்ணிச்சுன்னு எனக்கும் புரியல. ஆனா எல்லாரும் சேர்ந்து தண்டனை அனுபவிக்கிறோம். அந்த சரணும் வாயைத் திறந்து இன்னது தான் நடந்துச்சுன்னு சொல்ல மாட்டேன்கறான்.” என்று வருத்தம் கொள்ள,

முத்துலட்சமி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

தேவகி, “கங்கம்மா தான் இப்போ பாப்பாவை பார்த்துக்குதாம். சமையல், வீட்டு வேலை எல்லாம் அதுவே செஞ்சிடுது. ஆனாலும் நம்ம ஷிவானி பாப்பா ஓஞ்சு தெரியுதாம். அம்மா ஏக்கமா இருக்கும்ன்னு பொலம்பிச்சு. அது சொல்றதும் சரிதான். இந்த நேரம் எந்த பிள்ளைக்கும் அம்மா வீட்டுல அவங்க கவனிப்புல இருக்க ஆசையா இருக்கும். உறவுகள் சுத்தி நின்னு ஒரு பிள்ளையை தாங்கும்போது அதுக்கு வலி அவ்வளவா தெரியாதுல்ல..” என்று வேகமாக கேட்க,

முத்துலட்சுமி, “இதெல்லாம் இந்த வீட்டு படியை தாண்டி போகும்போது தோனி இருக்கணும் தேவகி. என் பையன் அவளை எப்படி பார்த்துகிட்டாலும், இல்லாம போனாலும் அவளை நாங்க ரெண்டு பேரும் போய் பார்க்க முடியாது. அவர் வார்த்தையை மீறி போகவும் மாட்டோம்.” என்று சொல்ல,விநாயகத்தின் முகத்தில் முதல் முறையாக மனைவி பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் பிறந்தது.

“இல்லைங்க மா. நாளை மறுநாள் பாப்பாவுக்கு வளைகாப்பு வச்சிருக்காம் தம்பி. எட்டாம் மாசம் ஆரம்பிக்க போகுதாம். பாப்பாவுக்கு உடம்புல வேற ஏதோ நோவு இருக்கும் போல. ஒன்பதாம் மாசம் வரைக்கும் அதுக்கு காத்திருக்க வேண்டாம்ன்னு ஏற்பாடெல்லாம் செய்யுதாம். பிள்ளையை கூட்டிட்டு வராட்டியும் போய் பார்த்து வாழ்த்திட்டாவது வாங்க மா.” என்று தேவகி இளையவர்கள் சார்பாக பேச,

சித்ராவின் முகத்தில் ஆசையின் ரேகை. ஆனால் முத்துலட்சுமி அமைதியாக, “நான் போகப்போறது இல்ல. சித்ராவுக்கு போக ஆசைன்னா போகட்டும். ஆனா அவங்க அண்ணன் சொன்னது தான் போனா வரக்கூடாது.” என்று சொல்லிவிட்டு,

“நீ இதையே பேசிட்டு இருக்க தேவகி, மறுபடி பேசினா தயவு தாட்சண்யம் பார்க்காம வேலையை விட்டு நிறுத்திடுவேன்.” என்று சற்று கோபமாக சொல்லிவிட்டு சமையலறைக்கு உள்ளே இருக்கும் ஸ்டோர் ரூம் பக்கம் சென்றார்.

மனைவியின் பேச்சில் திருப்தியான விநாயகம் மாடியேறிச் சென்றுவிட, அவர் காலடி ஓசை மறைந்ததும் உள்ளிருந்து வெளியே எட்டிப்பார்த்தார் முத்துலட்சுமி.

“என்னாச்சு அண்ணி?” என்று சித்ரா வினவ,

“உங்க அண்ணன் இவ்ளோ நேரமும் நம்ம பேச்சை கேட்டுட்டு இருந்துட்டு இப்போ தான் மாடி ஏறி போறாரு.” என்று மெல்லிய குரலில் சொன்னவர்,தேவகியிடம்,

“பகல்ல பக்கம் பார்த்து பேசுன்னு உனக்கு யாரும் சொல்லித்தரலையா தேவகி. நான் மட்டும் உன்னை திட்டலன்னா, இந்நேரம் அவர் உள்ளே புகுந்து உன்னை உண்டு இல்லன்னு ஆக்கி இருப்பார்.” என்று கூறிவிட்டு அவருக்கு காபி கலந்து வைக்கும்படி கூறியவர் மாடிக்குச் சென்றார்.

விநாயகம் உடை மாற்றிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தவர் அப்படியே வாயிலில் நிற்க,

“உள்ள வா” என்று திருவாய் மலர்ந்து அழைத்தது தன் கணவன் தானா என்று நம்ப முடியாமல் திகைத்தார் முத்துலட்சுமி.

அவரின் திகைப்பைக் கண்ட விநாயகம், “எனக்கு உன் மேல இத்தனை வருஷமா என்ன கோவம்ன்னு தெரியுமா?” என்று வினவ, ‘தெரியாது’ என்று தலையசைத்தார் அவர்.

“கல்யாணமாகி வந்த நாள் தொட்டு நீ எங்கம்மா பேச்சைக் கேட்ட, என் தங்கச்சிக்கு பார்த்து பார்த்து செஞ்ச,என்னைக்காவது ஒருநாள் என் பேச்சை கேட்டு மதிச்சு அதுப்படி செஞ்சிருப்பியா?” என்று கேள்வி கேட்டார்.

அவருக்கு என்ன பதில் சொன்னாலும் உடனே புரியப்போவது இல்லை என்று உணர்ந்த முத்துலட்சுமி, ஒருபெருமூச்சுடன்,

“உங்க அம்மா இருந்த வரைக்கும் இந்த வீட்டுல எனக்கோ அவங்களுக்கோ ஒரு சண்டை வந்திருக்குமா?” என்று கேட்டார்.

“இல்ல” என்று விநாயகம் சொல்ல,

“உங்க தங்கச்சிக்கும் எனக்கும் நாத்தனர்-அண்ணி சண்டை என்னைக்காவது வந்திருக்கா?” என்றதும்,

தலையை இடம் வலமாக ஆட்டினார்.

“உங்க தொழில் நேரத்துல என்னைக்காவது வீட்டு பிரச்சனையை நெனச்சு வேலை நின்னு போயிருக்கா?” என்றதும், சற்றே யோசனையுடன் அவர் இல்லை என்று தலையசைத்தார்.

“இதெல்லாத்தையும் விட, என்னைக்காவது நானா இல்ல உங்க அம்மா, தங்கச்சியான்னு உங்க கையில தராசை கொடுத்து நிறுத்தி பார்த்திருப்பேனா?” என்று கேட்க,

“இல்லை” என்று சொன்னவர் குரல் உள்ளே சென்றிருக்க,

“பொண்டாட்டி கடமை வீட்டை சண்டை சச்சரவு இல்லாம, நிம்மதியா உறவுகளுக்குள்ள விரிசல் வராம பார்த்து புருஷனுக்கு உதவியா இருக்கிறது தான்னு எங்கம்மா சொல்லி வளர்த்தாங்க. அதான் உங்களுக்கு மனசங்கடம் வராம இருக்க, என் மாமியார் நாத்தனார் மனம் கோணாம நடந்துகிட்டேன். இராவுக்கு வந்து அடைஞ்சா நீங்க என்கிட்ட பேசாம தூங்கிடுங்க, இல்ல தேவைக்கு ஏதாவது கேட்பீங்க. சரி அவருக்கே புரியும்ன்னு விட்டேன். அத்தை காலமானதுக்கு அப்பறம் உங்க கிட்ட நான் எவ்ளோ நெருங்கி வந்தேன்? ஆனா என்னை நீங்க ஒரு ஜென்மமா கூட மதிக்கல. சரி அவருக்கு மனசுல என்னவோ விழுந்து போச்சுன்னு நெனச்சு என் பையனை ஆதாரமா வச்சு வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ அவனும் இல்ல. இனி இந்த கட்டை வேகற வரைக்கும் உங்க பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது.”என்று கூறியவர் வாயை தன் கரம் கொண்டு மூடினார் விநாயகம்.

“என்ன முத்து இப்படி பேசுற?” என்று விநாயகம் கேட்க, திருமணமான புதிதில் அவரை ‘முத்து முத்து’ என்று அழைத்து பின்னாலே வருபவர் தான் அவரின் நினைவுக்கு வந்தார்.

“இனி இப்படியெல்லாம் பேசாத” என்று சொன்னவர், கைலி, டிஷர்ட் சகிதம் வெளியே சென்றுவிட்டார்.

முத்துலட்சுமி சொன்னதை புரிந்து ஜீரணிக்க அவருக்கு தனிமை தேவைப்பட்டது.

வயது காலத்தில் ஏதோ வீராப்பு பிடித்து மனைவியின் உண்மை மனநிலை அறியாது தான் செய்த செயல் இன்று நினைக்க வெட்கமாக இருந்தது.

‘எத்தனை வருடம் அவளுடன் பேசாமல் தொலைவில் நிறுத்திவிட்டேன்? அவள் செய்த எல்லாமே என் நல்லதற்கு என்று கூட புரிந்துகொள்ள முடியாத முட்டாளா நான்?’ என்று தன் அறிவை எண்ணி நொந்தார்.

அதை விட அவரிடம் காரணம் கூட கேட்காது ஒதுக்கி வைத்த தன் கோபத்தை நினைக்க அவருக்கே சங்கடமாக இருந்தது.

இந்த எண்ணத்துடனே ஷெட்டில் இருந்த பழைய இண்டிகாவை எடுத்துக்கொண்டு அவர் சென்றிருக்க, பெட்ரோல் போட ஒரு பங்கில் நிறுத்தினார்.

அவரின் கண்கள் சற்று தள்ளி இருந்த கவுண்டரில் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த சரண் மேல் சென்றது.

‘இவன் என்ன இங்க?’ மனதில் யோசித்தாலும் அமைதியாக அவனை கவனிக்கலானார்.

அத்தனை கூட்டத்திலும் தனக்கு பெட்ரோல் போட்ட அந்த பையனுக்கு புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டுத் தான் சென்றான் சரண்.

‘இத்தனை வருடங்கள் முத்துலட்சுமியை புரிந்துகொள்ளாமல் தள்ளி நிறுத்தியதைப் போல இவனையும் ஒதுக்கி வைத்திருக்கிறோமோ? முத்துவுக்கு சரியான காரணம் இருந்தது போல இவனுக்கும் இருக்கலாமோ? அன்றே ஏதோ சொல்ல வந்தானே! நான் தான் காது கொடுத்து கேட்கவில்லையோ?’ என்று அவர் யோசித்துக்கொண்டிருக்க, அவரது முறை வந்தது.

“டேங்க் பில் பண்ணு பா” என்று சொல்லிவிட்டு பணம் கொடுக்க பாக்கெட்டில் கை விட வீட்டிலிருந்து அப்படியே வெளியே வந்ததால் தன்னுடைய பர்ஸ், கார்ட் ஹோல்டர் என்று எதையும் அவர் எடுத்து வரவில்லை. பெட்ரோல் போடுவதை நிறுத்தைச் சொல்ல அவர் நிமிர ஏற்கனவே டேங்கில் பெட்ரோல் நிறைய ஆரம்பித்திருந்தது.

சரி பங்க் முதலாளியைப் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்தே சமரனுக்கு அழைத்து பணத்தைக் கொண்டு வரச் செல்லலாம் என்று யோசித்தபடி, “பங்க் ஆபிஸ் அதானே தம்பி?” என்று வினவ,

அவனோ அவர் கார்டில் பணம் செலுத்த விசாரிப்பதாக நினைத்து, “பணம் ஏற்கனவே ஒரு அண்ணன் கொடுத்துட்டு போயிட்டார் சார். நீங்க நகர்ந்தா நான் அடுத்த காரை பார்ப்பேன்.” என்று நிதானமாக சொல்ல, அவருக்கு புரியாமல் போக,

“யாரை சொல்ற பா? உன் கிட்ட சிரிச்சு ஒருத்தர் பேசினாரே அவரா?” என்று சரணை அடையாளம் சொல்லி வினவ

“ஆமா சார். ” என்று அவரை நகருமாறு வேண்டினான்.

யோசிக்காமல் காரை வேகமாக சாலையில் செலுத்தியவர் சென்று நிறுத்தியது ஸ்ரீ சாய் கேரேஜில் தான்.

ஆரம்பத்தில் சின்னதாக இருந்தது, இப்பொழுது விஸ்தரிக்கப்பட்டு அழகாகவும் எளிமையோடும் காட்சியளித்தது.

அவனது ஒவ்வொரு பிரிவுகளாக பார்த்தபடி வந்தவர் அவன் அலுவல் அறைக்கு முன்னே வந்ததும் தயங்கி நின்றார்.

உள்ளே சரண், யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

பேசியபடி திரும்பியவன், தந்தையை கவனித்து அழைப்பை துண்டித்து வேகமாக அவரை நோக்கி வந்தான்.

“வாங்க பா.” என்று அழைத்ததும் விநாயகத்துக்கு முகமே விழுந்து விட்டது.

‘தன்னை மதிக்கவில்லை. தன் சொல்பேச்சு கேட்கவில்லை என்று எத்தனை வருடமாக பாராமுகமாக இருக்கிறோம்? ஆனால் நான் வந்ததை அறிந்ததும் ஓடி வந்து வரவேற்கும் இந்த குணம் கண்டிப்பாக முத்துவிடமிருந்து தான் மகனுக்கு வந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினார்.

அமைதியாக அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தவர், “பெட்ரோல் பங்க்ல.” என்று இழுக்க,

“இல்ல வீட்டுக்கு போடுற ட்ரெஸ் போட்டு வெளில வரவே மாட்டிங்க, அதுவும் இல்லாம அந்த இண்டிகாவை எடுத்தே பல மாசம் இருக்கும். அதான் ஏதோ குழப்பம் இல்லன்னா கோவமா இருக்கும்ன்னு நெனச்சேன். கண்டிப்பா அப்படி ஒரு மனநிலையில பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்க மாட்டீங்கன்னு நெனச்சு டேங்க் ஃபில் பண்ண பணம் கொடுத்துட்டு வந்தேன். நான் ஏதோ தப்பா நெனச்சுட்டேன் போல. பணத்தை திருப்பிக்கொடுக்கவா இவ்ளோ தூரம் வந்தீங்க?” என்று வருத்தத்துடன் வினவினான்.

“இல்ல.. இல்லப்பா.. அது.. நான் பணம் எடுத்துட்டு வரல. நீ கொடுத்தது ரொம்ப உதவியா இருந்தது.” என்று என்ன பேசுவதென்று தெரியாமல் அவர் தவிப்போடு பேச,

அவரை மேலும் சங்கடமாக உணர வைக்க விரும்பாத சரண், “அதெல்லாம் ஒன்னும் பெரிசு இல்லப்பா. எனக்கு ஒன்னுன்னா நீங்க பார்த்துட்டு பேசாம போவீங்களா? அதே போல தான். சேர்ந்து இருந்தா தான் செய்யணும்ன்னு இல்லையே. என்ன கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருக்கலாம். இவ்ளோ தூரம் நீங்க வந்ததே சந்தோஷம்.” என்று பொறுமையோடு கூற, விநாயகம் ஒரு பெருமூச்சுடன் எழுந்து கொண்டார்.

“நான் கோவக்காரன் தான். அவசரக்காரன் தான் ஆனா கொடுமைக்காரன் இல்ல. ஷிவானிக்கு ரொம்ப முடியலன்னா வீட்ல கொண்டு வந்து விடு, அவங்க அம்மாவும் அத்தையும் பார்த்துக்கட்டும்.” என்று சொல்ல,

“அவளைப் பார்த்துக்க எனக்கு தெரியும் பா. யாரோட உதவியும் இல்லாமலே நான் அவளை பார்த்துக்குவேன்.” என்று ரோஷமாக அவன் தந்த பதிலில் வெளியே அவனை முறைத்தாலும் தன் பிள்ளை இத்தனை வைராக்கியமாக இருப்பது உள்ளே பெருமையாக இருந்தது.

அமைதியாக அவர் வெளியேற, அவர்கள் உரையாடலை கேட்டபடி இருந்த செந்தில், “என்ன அண்ணா நீங்க? அவரே மனசு வந்து அண்ணியை கொண்டு வந்து வீட்டுல விட சொல்றாரு. நீங்க ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க?” என்று புரியாமல் வினவ,

“அவர் மனசுல ஏதோ தப்பு செஞ்சிருக்கோம்ன்னு தோணுது. அதை தெரிஞ்சுகிட்டு சரி பண்ண நினைக்காம, எங்களை மன்னிக்கிற மாதிரி பேசி அவரோட ஈகோவை அவர் சாட்டிஸ்ஃபை பண்ணிக்கிறாரு.  அதுக்கு நான் ஆள் இல்லை செந்தில். உப்பு தின்னவன் எங்கேயோ இருக்க, உதவிக்கு வந்தவன் எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கிட்டு இருக்கேன்.” என்று பலநாள் மனதில் இருந்த கோபத்தை வெளிப்படுத்தினான்.

அவன் சொல்வது செந்திலுக்கு புரியவில்லை என்றாலும் சரண் எது செய்தாலும் யோசித்து தான் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தால் அவன் அமைதியாக தன் வேலையை பார்க்கச் சென்றான்.

சரணுக்கு வளைகாப்பு வேலைகள் தலைக்கு மேல் இருக்க, அவனால் ஷான்வியை சந்திப்பதைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் இருந்தது.

ஷான்வி பெற்றோர் சொன்னதற்கு தன் மறுப்பை தெரிவிக்க கூட வழி இல்லாத தன் நிலையை எண்ணி நொந்தபடி சிவபாலன் கண்ணில் படாமல் தன் வேலையை கவனித்துக்கொண்டிருந்தாள்.

அவளது கண்ணாமூச்சி ஆட்டம் தெரியாத சிவபாலன், அவளை காண வரும்போதெல்லாம் அவள் இல்லாமல் இருப்பது எண்ணி, நேரத்தை அடுத்தநாள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சிந்தித்தபடி அன்றைய பணியை முடித்துக்கொண்டு கிளம்பினான்.

ஷான்வியின் செயலை கவனித்த சுகந்தி, “என்ன பண்ணுற ஷான்வி மா? ஏன் அந்த டாக்டர் தம்பியை அவாய்ட் பண்ணுற?” என்று கேட்க,

“எனக்கு யோசிக்கணும் சுகந்திம்மா.” என்று தலையை பற்றிக்கொண்டு அமர்ந்தாள்.

சரணுடன் கண்டிப்பாக பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு வீடு நோக்கி பயணித்தாள்.