உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 1

கடும்வெயிலிலும் சிலுசிலுவென இளங்காத்து உடலை வருடும் பெங்களூர் மாநகரம் அது.

ஜூன் 2013

அழகுக் கண்ணாடிக் கட்டிடமாய் பல வணிகக் கடைகள் நிரம்பிய குளுகுளு மாலான ஃபோரம் மாலுக்குள் நுழைந்தனர் அந்த மூன்று பெண்கள்.

அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவனிடம் இப்பெண்கள் கை அசைத்து,

“ஹாய் ஆஷிக்” என உரைத்து அவனருகில் சென்றனர்.

“ஹாய் கேபி”

“ஹலோ மஹா”

“ஹாய் அம்மு”

என மூவரையும் வரவேற்றானவன்.

“வாங்க கேர்ள்ஸ். நானும் இந்த கேபி தனியா தான் வருதுப் போலனு நம்பிட்டேன்” என ஆஷிக் உரைக்க,

“அவ என்னிக்கி தனியா வெளிய போயிருக்கா? சும்மா வாய் பேச்சு தான் அவளுக்கு… மேடம் சரியான பயந்தாங்கொள்ளி” என அம்சவேணி எனும் அம்மு கேபியை வார,

“அவன் இப்ப உன்ன கேட்டானா?” என அடிக்குரலில் சீறினாள் கேபி எனும் மதுரவாணி.

“சரிடி வாணி, யூ கேரி ஆன்… நாங்க எங்க ஃப்ரண்ட பார்க்க போறோம்”
என மஹா கேபி யிடம் உரைக்க ஆஷிகிடம் தலையசைத்து நகர்ந்தனர் மஹாலட்சுமியும் அம்சவேணியும்.

“எந்த ஃப்ரண்ட பார்க்க போறாங்க அவங்க” எனக் கேட்டான் ஆஷிக்

“மஹா மதியை பார்க்க போறா… அம்மு இளாவ பார்க்க போறா” என்றாள் வாணி.

“ஹோ அவங்க ஆளுங்களைப் பார்க்கப் போறாங்கனு சொல்லு” என கேலி செய்தான் ஆஷிக்.

“டேய் ப்ரண்ட்ஷிப்பை கொச்சைபடுத்தாத… அவங்க ஃப்ரண்ட்ஸ் தான்” கோபமாய் உரைத்தாள் வாணி.

“இப்படி தான் அவங்க உன்னை ஏமாத்திட்டு இருக்காங்க… நீயும் நம்பிட்டு இருக்க” அதே கேலி பாவனையில் உரைத்தான் ஆஷிக்.

“ம்ப்ச்… அதை விடு. நீ என்னமோ முக்கியமான விஷயம்… நேர்ல தான் சொல்வேனு சொன்ன… என்னதது” எனக் கேட்டாள் கேபி எனும் மதுரவாணி.

“ஹம்ம்ம் கல்யாணத்தை பத்தி பேச தான் வர சொன்னேன்” என்றான் ஆஷிக்.

“வாவ் உன் கல்யாணமா ஆஷிக்… சொல்லவே இல்லை… கங்கிராட்ஸ் டா” எனத் துள்ளலுடன் உரைத்திருந்தாள் வாணி.


“ம்ப்ச் கடுப்பேத்தாத வாணி”
கடுப்பாய் அவளை பார்த்து உரைத்தான் ஆஷிக்.

அவனின் கோபத்திலும் கடுப்பிலும் தான் வாணி என்றழைப்பானென தெரியுமாதலால், அவன் மேற்கொண்டு பேச அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் மதுரவாணி.

ஃபோரம் மாலின் பின் வாசலிலுள்ள காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர் மதியும் மஹாவும்.

“ஐ லவ் யு மஹா” கடும் மன போராட்டத்திற்கு பிறகு இன்று கூறிவிட்டான் மதி தன் காதலை.

“பர்த்டே அன்னிக்கே சொல்லனும் நினைச்சேன்… ஆனா அவ்ளோ ஹேப்பியா இருந்த உன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லாம தான் சொல்லலை மஹா” என்றான் மதி.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மஹா. ஆயுசுக்கும் உன்னை நல்லா வச்சு பாத்துப்பேன் குட்டிம்மா. டேக் யுவர் ஓன் டைம்… நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்”
என்றவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

அதே மாலில் மேல் தளத்திலுள்ள ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.

“நேத்து ஏன்டா அப்படி மெசேஜ் பண்ண? மூளை கீள கொழம்பி போச்சா உனக்கு! என்னடா வாழ்க்கை இதுனு இருக்குனு சொல்ற. என் நிலைமை யாருக்குமே வரக்கூடாதுனு வேற சொல்ற… நம்மல நினைச்சு நாமளே பரிதாபப்படுறது நம்ம படைத்த கடவுளுக்கு செய்ற துரோகம்” வேணி அவனை வறுத்தெடுக்க, இளா அவளை வெறித்து நோக்க,

“என்ன பாக்குற? இது நீ அடிக்கடி சொல்லுற டயலாக் தான். எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சி நீயே கறஞ்சி போக மாட்டியே… இப்ப என்ன வந்துச்சு உனக்கு”

இவ்வாறாக இளாவிடம் வேணி கோபத்தில் சீறிக்கொண்டிருக்க,

“என்னை நினைச்சு இல்ல… உன்னை நினைச்சு தான் கறஞ்சு போறேன் அம்ஸ்” இளா உரைக்க,

அவன் கூற வருவதன் அர்த்தம் விளங்காது அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.

யார் இந்த பாசப் பறவைகள்…

இவர்களின் பிரச்சனை என்ன?

அவர்களின் தோழமைகள் எவ்வாறு அதை தீர்த்து வைத்தார்கள்?..

மதியின் காதலுக்கு மஹாவின் பதிலென்ன?

வாங்க பயணிக்கலாம் கதைக்குள் இக்கேள்விகளின் விடையறிய…

பிப்ரவரி 2011

எங்கெங்கோ தங்கள் குடும்பக் கூட்டிற்குள் வாழ்ந்து இளமை துள்ளலுடன் கல்லூரி வாழ்வை முடித்துப் பட்டம் பெற்றிருந்த இளம் பொறியாளர்கள் பணி நிமித்தமாய் வந்திருந்தனர் பெங்களூர் நகரத்திலிருக்கும் மென்பொருள் நிறுவனத்திற்கு.

ஆஃப் கேம்பஸ் மூலம் இந்நிறுவனத்திற்கு தேர்வாகியிருந்த மக்களுக்கு இன்று தான் தங்கள் வாழ்வின் முக்கிய நாள்.

ஆம் அவர்கள் பணியின் முதல் நாள் இது.

இந்நாள் தான் தங்கள் வாழ்வின் போக்கை மாற்றியமைக்க போகும் நாள்.
தங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும், வாழ்க்கை கற்பிக்கவிருக்கும் பாடங்களுக்கும் வித்தாக போகும் நாளிதுவென அறிந்திருக்கவில்லை அவர்கள்.

சென்னையில் நடந்த நேர்முக தேர்வில் தேர்வான இளம் பொறியாளர்களுக்கு பெங்களூரை பணியிடமாய் அளித்து அங்கு பணி செய்யுமாறு ஆஃபர் லட்டர் (பணி நியமனக் கடிதம்) வழங்கியது அந்நிறுவனம்.

அந்நிறுவனத்தின் நுழைவாயிலுள்ள இரும்புக்கதவருகே தனது தாய் தந்தையருடன் காரில் வந்திறங்கினாள் மதுரவாணி.

சென்னையை இருப்பிடமாய் கொண்ட அவர்களின் குடும்பத்திற்கு நெல்லை தான் பூர்வீகம். இவ்விரு ஊரை தாண்டி வேறெங்குமே சென்றிடாத, பக்கத்து தெருவிலிருக்கும் கடைக்கு கூட தனியே சென்று பழக்கமில்லாத பெண்ணவள்.
ஆனால் படிப்பில் படு சுட்டி நம் வாணி. அதனாலேயே கடும் கட்டுப்பாடான குடும்பமாயினும் அவளின் திறமைக்கு மதிப்பளித்து இவ்வேலை செய்ய அனுமதியளித்து அவளை சேர்க்கவென அவளுடன் வந்திருந்தனர் அவளின் பெற்றோர்.

ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இவர்கள் வந்துவிட்டதால், நுழைவாயில் அருகே ஓரத்தில் காரை நிறுத்தி அருகே நின்றிருந்தனர் வாணியின் பெற்றோர்.
வாணி அங்கிருந்த செக்யூரிட்டியிடம் விசாரிக்கவென சென்று அங்கே நின்றிருக்க, அச்சமயம் அங்கே வந்தான் ஆஷிக்.

ஆஷிக்கிற்கு சொந்த ஊர் சென்னை.
அவனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனைத்துமே சென்னை தான். இதுவரை வாழ்வில் சென்னையைத் தாண்டி வேறெங்கும் சென்றிடாதவன் அவன்.
இந்த பெங்களூர் பணியில் சேர தன் தந்தையுடன் வந்திருந்தான்.

கார் அருகில் நின்றிருந்த வாணியின் தந்தையை பார்த்துக் கொண்டே வந்த ஆஷிக், “ஹப்பா பார்க்க எவ்ளோ டெரரா இருக்காரு இவரு.! இவருக்கெல்லாம் பொண்ணு இருந்திதுனா ரொம்ப பாவம் அந்த பொண்ணு. இவருக்கு பயந்தே அந்த பொண்ணுக்கிட்ட எந்த பையனும் பேச மாட்டான். நம்மளும் இவர் பொண்ணு இங்க வேலை செஞ்சிட்டு இருந்துதுனா பேச்சு வச்சிக்க கூடாதுபா. தேவையில்லாம ஊர் வம்பு எதுவும் வளர்த்துக்க கூடாது” என மனதுக்குள் அவரைப் பற்றி எண்ணிக்கொண்டே அந்நிறுவனத்தை பார்த்தான்.

அங்கே வாணி நின்றிருக்க,
“யாருடா இந்த குட்டிப்பொண்ணு. ஐ.டில கூடவா சைல்ட் லேபர் வச்சி வேலை வாங்குறாங்க” என்றெண்ணியவாறே அவளிடம் சென்றான்.

“எக்ஸ்க்யூஸ்மீ குட்டிப்பொண்ணு” என வாணியை அழைத்தான் ஆஷிக்

‘ஹான்… யாரு குட்டிப்பொண்ணு’ என வாணி மனதில் நினைத்துக்கொண்டே அவனை முறைத்துப் பார்க்க,

“இங்கே நான் புதுசா வேலைக்கு சேர வந்திருக்கேன். நீங்க இங்க என்ன பண்றீங்க குட்டிப்பொண்ணு. நீங்க ஸ்கூல் தானே படிக்கிறீங்க” எனக் கேட்டான் ஆஷிக்

ஆஷிக் இவ்வாறு கூறக் காரணம் வாணியின் தோற்றம். அவள் ஐந்தடிக்கும் சிறிது குறைவாக ஒல்லியாக இருப்பாள். காண்பவர்கள் அவளை பள்ளி படிக்கும் பெண்ணெனவே எண்ணுவர். இவனும் அவ்வாறாக எண்ணிவிட்டான் அவளை.

“நான் ஒன்னும் குட்டிப்பொண்ணு இல்ல.  நானும் உங்களை மாதிரி இங்க வேலைக்கு சேரத்தான் வந்திருக்கேன்” என்று வாணிக் கூற,

அதே நேரம் “மதும்மா, இங்க வா” என்றழைத்தார் வாணியின் தந்தை செல்வம்.

அவ்வார்த்தையில் அந்த பக்கம் அவள் பார்க்க, அதே சமயம் இவனும் பார்க்க அந்த டெரர் மனிதனின் பெண்ணிவள் என்பதை உணர்ந்தவன், “ஆஹா, நல்லது பண்றேனு தானா எலி வலைக்குள்ள போய் விழுந்துட்டியே ஆஷிக்கு. யாருக்கிட்ட பேசக்கூடாதுனு நினைச்சியோ அவரோட பொண்ணுக்கிட்டயே பேசி வச்சிருக்கியே” என மைண்ட் வாய்ஸில் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த சில பல நிமிடங்களுக்குள்….

“தம்பி, இங்க வாங்க” என்றழைத்தார் வாணியின் தந்தை.

“அய்யய்யோ, அந்த குட்டிப்பொண்ணு நம்மளை பத்தி எதாவது போட்டுக்குடுத்துடுச்சா?” என்றெண்ணியவாறே அவரிடம் சென்றவன்,

அவர் வாய் திறப்பதற்குள், “அங்கிள் இனி மது எனக்கு கூடப் பிறக்காத தங்கச்சி அங்கிள். அவளுக்கு ஆபிஸ்க்குள்ள… இல்ல இல்ல இந்த ஊருக்குள்ளேயே கூட என்ன பிரச்சனைனாலும் நான் பார்த்துக்கிறேன் அங்கிள். நீங்க கவலைப்படாதீங்க” என்று தானாகவே சரண்டராக, வாணி வாய்க்குள்ளேயே தன் சிரிப்பை அடக்க,

அவனை முறைத்துப் பார்த்தவர், “என் பொண்ணுக்கு அவளை பாத்துக்க அவளுக்கு தெரியும். இருந்தாலும் நம்ம ஊருலருந்து வேலைக்குனு வேற ஊருக்கு பொண்ணுங்க வந்திருக்காங்க. என் பொண்ணுனு இல்ல நம்மூரு பிள்ளைங்களுக்கு எந்த பொண்ணுங்களுக்கு என்ன பிரச்சனைனாலும் பார்த்துக்கோங்க தம்பி” என்றுரைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்.

ஆஷிக்கின் தந்தையுடன் வாணியின் தந்தை செல்வம் சிறிது நேரம் பேசியதால் வந்த தெளிவு இது.

இந்நிகழ்வு நடைப்பெற்றிருந்த நேரம், அந்நிறுவனத்தின் வாசல் அன்றைக்குப் பணிக்கு சேர வந்திருந்த மக்களால் நிரம்பி வழிந்தது. அதில் நம் அம்சவேணியும் மஹாலட்சுமியும் அடக்கம்.
ஆஷிக் அந்த பக்கம் சென்றதும், வாணியிடம் திரும்பிய அவளின் தந்தை,

“மதும்மா, எந்த பசங்களையும் என்னிக்கும் நம்ப முடியாதுமா. நம்பவும் கூடாதுமா. அதனால எப்பவும் போல ஃப்ரண்ட்ஸ்னுலாம் வச்சிக்காம உன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருக்கணும். புரிஞ்சிதாடா” எனக் கூற

“தெரியும்பா. என்னிக்குமே உங்க மனசு கஷ்டபடுற மாதிரி நடந்துக்க மாட்டேன்பா” என்றுரைத்தாள் வாணி.

அப்பொழுது வாணியுமே அறிந்திருக்கவில்லை வரும் நாட்களில் தானே தன் தந்தையை வருந்த வைக்கப் போகிறோமென.

அனைவரும் உள்ளே நுழைய தாய் தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு தானும் அந்நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாள் வாணி.

ஐடி சம்ரதாயப்படி வேலை சேர்ந்த முதல் இரு நாட்களுக்கு இண்டக்க்ஷன் டிரைனிங் வைத்திருந்தனர் இவர்களுக்கு.

அனைவரையும் ஆல்ஃபபெடிக்கல் வரிசையில் அமரச் செய்தனர்.

மதுரவாணியின் வலப்புறம் நெடு உயரமான அழகு மங்கையான மஹாலட்சுமி அமர்ந்தருக்க, இடப்புறம் மைதா மாவு பளீர் நிறத்தில் அழகு சிலையென தமிழ் தெரியாத வடதேசத்து பெண் அமர்ந்திருக்க,

வாணியின் மனதில் எங்கோ மூளையில் இவள் ஒதுக்கி வைத்திருந்த தான் அழகில்லை என்கின்ற தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

“அழகில்லை என்றால் என்ன? அறிவு இருக்கிறதே! அது போதுமே இங்கே வேலை செய்ய. என்னைக்குமே தாழ்வு பான்மை உன் தன்னம்பிக்கையை சிதைச்சிடும் மது. அதை உனக்குள்ள என்னிக்கும் கொண்டு வராத. யூ ஆர் த பெஸ்ட்” என என்றைக்கும் தன்னை அவள் தேற்றிக் கொள்ளச் சொல்லும் மந்திரத்தை மனதுக்குள் உருபோட்டுக் கொண்டு நிமிர்வாய் அமர்ந்தாள் வாணி.

இரண்டு நாட்கள் 500 பேருக்கு நடைபெற்ற புகுமுக பயிற்சி் (induction training) முடிவடைந்த நிலையில் 30 நபர்கள் ஒரு குழுவென குழுக்களாய் பிரித்து, அனைத்து குழுக்களையும் டெக்னாலஜிக்கு ஏற்ப வெவ்வேறு அலுவலகத்திற்கு அனுப்பினர் வேலைக்கான மூன்று மாத பயிற்சிக்காக.

இதில் வாணியின் பயிற்சி அலுவலகம் பெங்களூர் இந்திரா நகரில் இருக்க, இந்த இரண்டு நாட்களில் வாணி எவரிடமும் பரிச்சயமாகாத நிலையில்,
அவளை அப்புது அலுவலகத்திற்கு அழைத்து சென்று,
அதனருகிலேயே அவளுக்கேற்ற பி.ஜி (Paying Guest) யை பார்த்து தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தனர் அவளின் பெற்றோர்.

ஒரு நாள் பயிற்சி இவ்வலுவலகத்தில் இவள் முடித்து வந்ததும், அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு அன்றிரவு சென்னைக் கிளம்பி விடலாம் என முடிவு செய்தனர் வாணியின் பெற்றோர்.

முதல் நாள் பயிற்சி வகுப்பிற்குள் நுழைய, அங்கு அவளுக்கு பரிச்சயமானவளாய் இருந்தது மஹா லட்சுமி மட்டுமே. அவளருகில் அமர்ந்துக் கொண்டாள் மதுர வாணி. சிநேகப் புன்னகையை பரிமாறிக் கொண்டனர் இருவரும்.

மஹாவினருகில் அமர்ந்திருந்தாள் அம்சவேணி. புகுமுக பயிற்சியிலேயே மஹாவும் வேணியும் பரிச்சயமாகி சிநேகிதிகளாகியிருக்க தாங்கள் ஒன்றாய் தங்குவதற்கு பி.ஜி தேடிக் கொண்டிருந்தனர் இருவரும்.

அப்பொழுது வாணி தன் பிஜியில் தன்னறையிலேயே இரு படுக்கைகள் காலியாய் இருப்பதாகவும், அதில் அவர்களை தங்கிக் கொள்ளுமாறும் பணித்தாள்.

அந்நேரம் கேட்டது அவனின் குரல்.

“ஹே கேபி! நீயும் நம்ம ஜாவா பேட்ச் தானா? அங்கிள் ஆன்டி ஊருக்கு போய்ட்டாங்களா?” என முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் இருக்கையின் அருகில் வந்து நின்று பேச ஆரம்பித்தான் ஆஷிக்.

அதென்ன கேபி என மனதில் எண்ணிக்கொண்டே, “ம்ம்ம். இன்னிக்கு நைட் கிளம்புறாங்க”

இவனின் கேபி என்ற விளிப்பும், அங்கிள் ஆன்டி என்கின்ற உரிமையான பேச்சும் வகுப்பிலிருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மேல் பதிய வைக்க, சங்கடமாய் பதிலுரைத்தாள் வாணி.

“ஹோ அப்படியா… அப்ப நான் அங்கிள் கிளம்பும் போது வந்து செண்ட் ஆப் பண்றேன். எங்க தங்கியிருக்க நீ?” – ஆஷிக்

“அய்யய்யோ… ஃப்ரண்டே வேண்டாம்னு சொல்ற அப்பாகிட்ட முதல் நாளே ஃப்ரண்டா வந்து வழியனுப்ப போறானாமா? இவன் நம்ம வேலைக்கே உலை வச்சிடுவான் போலயே… எப்படியா இவனை சமாளிக்கிறது” என பதிலுரைக்காது இவள் திருதிருவென முழிக்க,

அவளின் அமைதியை வைத்து தன் மீது நம்பிக்கை இல்லாது இருப்பிடம் உரைக்க இவள் யோசிப்பதாய் எண்ணியவனுக்கு கோபம் உச்சத்திற்கு ஏற,

“சரி வாணி. நான் வரல… நீ இப்படி நம்பிக்கை இல்லாம என் கிட்ட ஒன்னும் பேச வேண்டாம்” என உறுமலாய் உரைத்து அவனிடத்திற்கு சென்று அமர்ந்துக்கொண்டான்.

“அச்சோ தப்பா புரிஞ்சிக்கிட்டு ஹர்ட் ஆயிட்டான் போலயே” என்றிவள் மனம் காயப்பட பதறித் திரும்பி அவனை அழைக்க எத்தனிக்கையில் தான் அவள் மூளை கூறியது, “நீ அவன் பேரை இன்னும் கேட்கவேயில்லையென”

அய்யோ பேரே தெரியாம எப்படி அவனைக் கூப்பிடுறது என்றவள் யோசித்திருந்த நேரம் அவளின் வகுப்பு பயிற்சியாளர் வகுப்புக்குள் நுழைந்து பேசத் தொடங்கினார்.

ஒரு வழியாய் அன்றைய நாள் வகுப்பு நிறைவுபெற மனம் கொள்ளா துக்கத்துடன் விழி நிறைத்த நீருடன் வந்து சேர்ந்தாள் வாணி அவளின் பிஜி அறைக்கு.

— தொடரும்