உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 7

“அழனும்னா அழுதுடு கேபி. ஏன் இவ்ளோ சைலன்டா இருக்க. எனக்கு உன்னை பத்தி தெரியும்… ரொம்ப சென்சிடிவ் நீ… இந்நேரத்திற்கு அழுது கூப்பாடு போட்டிருக்கனும்” என அவன் எவ்வளவு கூறியும் அமைதியாகவே அவனுடன் பயணம் செய்து பிஜி வந்திருந்தாள்.
பிஜி வாசலில் அவளை விட்டதும்,

“இதுக்கப்புறம் உன்னை எப்ப மீட் செய்வேனு தெரியல கேபி. சோ ஆல் த பெஸ்ட். தைரியமா இரு. கண்டிப்பா உனக்கொரு நல்ல பிராஜக்ட் கிடைக்கும்” என்றான் ஆஷிக்.

“அப்ப நீ என்கிட்ட பேசமாட்டியா?” அந்த பிராஜக்ட் ரிசல்ட் கூறியப்பின் இதுவே அவள் பேசும் முதல் வார்த்தை.
அவள் திடுமெனக் கேட்டக் கேள்வியில், “ஓய் கேபி, இவ்ளோ நேரம் நான் தான் உன்கிட்ட பேசிட்டே வரேன். நீ தான் என்கிட்ட பேசாம வர” என்று ஆஷிக் கூற,

“நான் அதைக் கேட்கல… இதுக்கப்புறம் பார்க்க முடியுமா தெரியலைனு சொல்லி ஏதோ செண்ட் ஆஃப் பண்ற மாதிரி பேசிட்டு இருக்க… ஏன் போன்ல பேச மாட்டியா?மெசேஜ் பண்ணா ரிப்ளை செய்ய மாட்டியா?” என முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு வாணிக் கேட்க,

“என்னை பத்தி தான் உனக்கு தெரியும்ல… நான் ஒரு சோம்பேறி… மெசேஜ் லாம் பண்ண மாட்டேன்… சாட்ல பேசுறதுலாம் சுத்தமா பிடிக்காது… யாரு ஒவ்வொரு வார்த்தையா டைப் பண்ணி எனர்ஜிய வேஸ்ட் பண்றது… டைம் கூட வேஸ்ட்… இதுக்கு கால் செஞ்சி பேசிட்டு போய்டலாம்… சரி டைம் ஆச்சு… நான் கிளம்புறேன்… உனக்கு எந்த டைம்ல என்ன ஹெல்ப் வேணும்னாலும் கால் பண்ணு… பை” என்றவாறு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

பிஜியில் வேணியும் மஹாவும் அமர்ந்திருக்க, ஏற்கனவே ஆஷிக் மஹாவிடம் அங்கு நடந்தவற்றைக் கூறியதால் ஏதும் அவளிடம் கேட்காமல் அவளைச் சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டனர்.

“என்னடி வாணி, இனி உன் ஆள் கூட இப்படி டிராவல் செய்ய முடியாதுனு கவலையா?” என மஹா அவளை வம்பிழுக்க,

அவள் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் வெளி வந்தது.

“ஹே வாணி விளையாட்டா தான்டி கேட்டேன்… அதுக்கு ஏன்டி அழுற” என வாணியின் தோளில் கைப்போட்டு அவளருகில் அமர்ந்து மஹா அவளைத் தேற்ற,

வாணி அழுதுக்கொண்டே “ஆமா நிஜமாடி ஐம் கோயிங் டு மிஸ் ஹிம்” எனத் தேம்பி அழுதாள்.

“அச்சோ… இப்ப என்ன? ஆஷிக் மிஸ் பண்ணுவேனு தான ஃபீல் செய்ற… அவனை மிஸ் பண்ணும் போதெல்லாம் கால் பண்ணி பேசு… சிம்பிள். இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா?” என மஹா அவளைத் தேற்ற,

“பாருங்கடி இந்த பொண்ண!!! இன்டர்வியூ க்ளியர் பண்ணலைனு பீல் பண்ணாம… ஆஷிக்கை மிஸ் செய்வேனு ஃபீல் செய்யுது. எப்படி இருந்த பொண்ணை எப்படி மாத்தி வச்சிருக்கான் இந்த ஆஷிக் பையன்” என தாடையில் கை வைத்து கண்ணை உருட்டிக் கொண்டு வேணிப் பேச, கொள்ளென சிரித்து விட்டனர் இருவரும்.

“ஏய் விடுடி… அவளே இப்ப தான் நார்மல் ஆயிருக்கா… அவளைப் போய் வம்பிழுத்துக்கிட்டு” என வாணிக்காக வரிஞ்சிக்கட்டுக் கொண்டு மஹா பேச,

வாணியினருகினில் வந்த வேணி, “நீ சொல்லலைனாலும் அந்த இன்டர்வ்யூ ரிசல்ட் உன்னை பாதிச்சிருக்கும்னு தெரியும் வாணி… நீ அதை நினைச்சு கவலைப்படாத… நான் இன்னும் பென்ச்ல தானே இருக்கேன். உனக்காவது எதாவது ப்ராஜக்ட்ல மேப் பண்ணி இன்டர்வியூ அடண்ட் செய்ய வைக்கிறாங்க… என்னை இது வரைக்கும் ஒரு ப்ராஜக்ட்லயும் அஸைன் செய்யலை… பாத்துக்கலாம் விடு” என ஆறுதல் வார்த்தைக் கூறினாள்.

“ஆமா நான் சொல்லாமலே எப்படிடி உங்களுக்கு இன்டர்வியூ பத்தி தெரிஞ்சுது” கொஞ்சம் தெளிந்தப்பின் வாணி இருவரிடமும் கேள்வி எழுப்ப,

“ஹ்ம்ம்ம் உன் ஆளு தான் சொன்னான். முடிஞ்சா அவளை பேச வைங்க… இல்லனா சிரிக்க வையுங்க… அதுவும் முடியலைனா அவளை அழவாவது வைங்க… மேடம் மூட் அவுட்ல எதும் எக்ஸ்ப்ரஸ் செய்யாம இறுக்கமா இருக்காங்கனு சொன்னான்… ரொம்ப தான் படுத்திட்டப் போல அவனை. பயந்துட்டான் அவன்” என்றுரைத்தாள் மஹா.

இதழில் இளநகை ஒட்டிக்கொள்ள, “Thanks for everything you did for me till now” குறுஞ்செய்தி அனுப்பினாள் வாணி அவனுக்கு.

அச்சிரிப்புடனேயே உறங்கியும் போனாள்.
மறுநாள் வாணி, வேணி மற்றும் மஹாவுடன் தன் பழைய அலுவலகத்திற்கே சென்றாள்.

இப்பொழுது வாணி, வேணி, ராஜேஷ் மூவரும் பென்ச்சில் இருந்தனர்.

வெகுநாள் கழித்து ராஜேஷை அன்று தான் அவள் சந்திக்க, ஏற்கனவே வாணியின் கவலை பற்றி ஆஷிக் ராஜேஷிடம் கூறியிருந்ததால் ராஜேஷ் அன்று முழுவதுமே அவளிடம் கிண்டல் கேலியாகப் பேசி அவளை சிரித்த முகத்துடனேயே இருக்க வைத்தான்.

ராஜேஷ் மீதான நன்மதிப்பு அதிகரித்தது வாணிக்கு அன்று.

தன் தேவை என வரும் போது சுயநலமாய் மாறும் உலகில் எவரையும் வெளிப்பேச்சை வைத்து நம்பக்கூடாதென அறியாத வாணிக்கு  பெரும் பாடம் கற்றுக்கொடுக்க காத்திருந்தது அவளின் விதி.

அன்றைய வாரயிறுதி நாளில் சென்னைக்கு பயணமாக வாணி மற்றும் மஹா சாந்தி நகர் பேருந்து நிலையம் செல்ல, அவர்களுடன் பயணம் செல்ல அந்நிலையம் வந்து சேர்ந்தான் ஆஷிக்.

அவனைக் கண்டதும் வாணியின் முகம் சந்தோஷத்தில் பூரிக்க, “பார்ரா ஆளைப் பார்த்ததும் மூஞ்சுல பல்ப் எறியுதே” என மஹா அவளைக் கிண்டலடிக்க,
இவ்வாறாக வழக்கம்போல் கிண்டலும் கேலியுமாய் இனிமையாய் பயணத்தை மேற்கொண்டனர்.

சென்னை வந்தடைந்ததும் சனி ஞாயிறு இன்பமாய் கழிய, ஞாயிறு மாலை மீண்டும் பெங்களுர் பயணமாக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த வேளை பேசவென அழைத்தார் வாணியை அவளின் தந்தை செல்வம்.

வீட்டின் வெளித் தோட்டத்தில் வீசும் தென்றல் காற்றில் தன்னருகே அவளை அமரச் சொன்னவர் வாஞ்சையாய் அவளின் தலைக் கோதி,

“ஆஷிக் எப்படி இருக்கான்மா? எப்படி இருந்துச்சு அவன் கூட இரண்டு வாரம் முழுக்க ஆபிஸ் போய்ட்டு வந்தது மதும்மா?” என்றுக் கேட்டாரவர்.


“ஹ்ம்ம் சூப்பரா போச்சுப்பா… என்னைய ரொம்ப நல்லா கவனிச்சிக்கிட்டான்.

நானும் அவன் ப்ராஜக்ட்லயே செலக்ட் ஆகியிருந்தா அவன் கூடவே இப்டி டெய்லி ட்ராவல் பண்ணிட்டு இருந்திருக்கலாம். இல்லனாலும் என்ன அதான் வீக்கெண்ட் ஒன்னா ட்ராவல் பண்றோம்ல” என அவள் விழிகள் மின்ன பதிலுரைக்க,

அவளின் முகப்பாவமே சொல்லிற்று அவளுக்கு ஆஷிக்கை எந்தளவு பிடித்திருக்கிறதென்றும் அவனுடனான பயணத்தை எவ்வளவு ரசிக்கிறாளென்றும்.

“அப்பா உன்கிட்ட சொன்னது ஞாபகம் இருக்குல்லமா… ஆம்பளை பசங்க நட்பு என்னிக்கும் நமக்கு வேண்டாம்மா… அவன் உனக்கு ஹெல்ப் செஞ்சான்னா தேங்க்ஸ் சொல்லிட்டு வந்துடு. அவன் உன்கிட்ட ஹெல்ப் கேட்டான்னா நீயும் அவனுக்கு வேண்டியதை செய். ஆனா மனசுல எடுத்து வச்சிக்காதமா. போனவாரம் நீ அவன் கூட பஸ் ஸ்டாண்ட்ல பேசினதே அப்பா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா போச்சு. அப்பா சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன். பசங்களை எப்பவுமே தூர வச்சித் தான் பழகனும். பார்த்து இருந்துக்கோடா மதும்மா” என்றுக் கூறி அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த வாணியின் மனதில் குழப்ப ரேகைகள்.

தந்தை தன்னை குற்றம் சொல்லிவிட்டதாய் எண்ணி அவளின் கண்ணில் நீர் துளிர்த்தது. தன்னால் தந்தை மனம் கலங்கி விட்டாரென அவளின் மனம் வருந்தியது.

தான் அவனுடன் தேவைக்கு மட்டும் தானே பேசிக்கொள்கிறோம். பின் ஏன் தந்தை அவ்வாறுக் கூறினார்?

வேணியும் மஹாவும், இளா மற்றும் மதியிடம் உரிமையாய் பேசிப் பழகுவதைப்போல், தான் அவனிடம் உரிமையுடன் கூட பேசியதில்லையே.

அப்படியென்றால் வேணி மற்றும் மஹா செய்வது தவறா?

இவ்வாறாக பெரும் குழப்பத்தில் குழம்பித் தவித்தாள் வாணி.

அக்குழப்பத்துடனேயே பெங்களுர் பயணம் மேற்கொண்டாள் மஹா மற்றும் ஆஷிக்குடன்.

வாணியின் அமைதிக்கண்டு மஹாவும் ஆஷிக்குமே அமைதியாய் பயணித்தனர்.

திங்கட்கிழமை காலை வாணி, வேணி, ராஜேஷை அழைத்த ஹெச் ஆர் தேவ், அவர்களை எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகம் அன்றே செல்ல வேண்டுமெனவும் ப்ராஜக்டிற்காக நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் கூறினார்.

அவர்கள் மூவரும் கிளம்பி எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகம் சென்று அங்கே நேர்முகத் தேர்வில் கலந்துக்கொண்டு முடிவிற்காக காத்திருக்க, அவர்களை உண்டு விட்டு வருமாறு கூறி விட்டார் அப்பிராஜக்டின் மேனேஜர் வினித்.

மதிய உணவு உண்பதற்காய் கேபிடேரியாவிற்கு சென்று உணவு ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் அங்குள்ள மேஜையில் அமர்ந்திருக்க, திடீரென கண்ணீர் வழிய தேம்பித் தேம்பி அழவாரம்பித்தாள் வாணி.

இதைக் கண்டு ராஜேஷ் மற்றும் வேணி பதற, வேணி அவளருகில் சென்று,
“எதுக்குடி அழுற? இன்டர்வியூ நினைச்சு அழுறியா? நீ கண்டிப்பா செலக்ட் ஆகிடுவடீ… கவலைப்படாதே” என அவளைத் தேற்ற,

அதற்காக அழவில்லையென தனது தலையை ஆட்டி கூறியவள் தன் கட்டுக்குள் வர சிறிது நேரம் ஆகியது.

அவளின் தந்தை பேசியப்பின், தான் செய்வது தவறோ என்றொரு குற்றயுணர்ச்சி, ஆஷிக்கிடம் இனி மனம் விட்டு பேசக்கூடாது என முடிவெடுத்ததினால் வந்த கவலை…
இத்துடன் இந்த நேர்முகத்தேர்வும் இணைந்துக்கொள்ள இதிலும் தான் தோற்றுவிட்டாள் என்னாவது என்கின்ற அவமான உணர்வு இவையெல்லாம் சேர்த்து அவளின் மன அழுத்தத்தைக் கூட்ட அது பெரும் அழுகையாய் வெடித்தது இப்பொழுது.

ஒருவழியாய் அவளின் அழுகையைத் தேற்றி உண்ணவைத்து நேர்முகத் தேர்வு முடிவு அறிந்துக்கொள்ளவென வினித்தைப் பார்க்கச் சென்றுவிட்டனர் அவர்கள்.

மூவருமே அந்த ப்ராஜக்ட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாய் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

இதற்கும் கூட முழுமையாய் மகிழ முடியாமல் வாணி அமைதிக் காக்க, அவள் இந்நேரம் துள்ளிக் குதிக்காமல் அமைதியாய் இருப்பதைக் கண்ட வேணி, பிஜி சென்றதும் அவளின் கவலை என்னவென அறிந்துக் கொள்ளலாமென மனதில் நினைத்துக் கொண்டாள்.
ஆஷிக்கும் அந்த எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்தில் தானே வேலை செய்கிறான். எனவே ஆஷிக், ராஜேஷ், வாணி, வேணி ஆகிய நால்வரும் மாலை ஒன்றாய் கிளம்பினர் அலுவலகத்திலிருந்து.

இனி இந்த நால்வரும் இந்த எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்தில் தான் வேலை செய்யப் போகிறார்கள்.

ஆஷிக் ஒரு ப்ராஜக்ட், வாணி வேணி ராஜேஷ் ஒரு ப்ராஜக்ட்… மஹா மட்டும் பழைய அலுவலகத்தில் தோழமைகள் இல்லாது தனியாளாய் இருக்கும் நிலையானது.

நால்வரும் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை பேசிக் கொண்ட நடந்துக் கொண்டிருக்க,

வாணி எவரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாய் வந்தாள். ஆஷிக் ஜாடையில் வேணியிடம் வாணிக்கு என்னவாயிற்றென்றுக் கேட்க, இரவு குறுஞ்செய்தியில் கூறுவதாய் உரைத்துவிட்டாள்.

வேணி அவளுடன் இருப்பதால், வேணி வாணியைக் கவனித்துக் கொள்வாள் என்றெண்ணிய ஆஷிக் தன் நண்பன் ராஜேஷுடன் மட்டுமே பேசிக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

இரு பெண்கள் ஒன்றாய் செல்வதால் அவர்களின் பிஜி வரை செல்லவில்லை ஆஷிக். பேருந்து நிறுத்தத்திலேயே விடைப்பெற்றுக் கொண்டு தன் பிஜிக்குச் செல்லவென அடுத்தப் பேருந்தில் ஏறிக்கொண்டான் ராஜேஷுடன்.

அவனின் இச்செயல் வாணிக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

“தான் கவலையாய் இருந்தும் அவன் தன்னிடம் என்ன பிரச்சனையென வினவவில்லை… அப்போ என் மீது பாசமில்லை அவனுக்கு… தான் பாதுகாப்பாய் பயணிக்கிறேனாயென கவனியாமல் அவன் பாட்டிற்கு பேருந்தில் பின் இருக்கையில் ராஜேஷுடன் அமர்ந்துக் கொண்டான். அப்போ தன் மீது அக்கறையில்லை அவனுக்கு”

இவ்வாறாக தான் முன்பு அவனுடன் தனியாகப் பயணித்ததையும் இன்னறைய நாள் பயணத்தையும் ஒப்பிட்டு அவனுக்கு தன் மீது பாசமில்லை… அவன் தன்னை நெருக்கமான நட்பாய் ஏற்கவில்லையென அழுதது அவன் மீது பெரும் பாசம் வைத்த வாணியின் மனது.

ஏற்கனவே இருந்த மனதின் இறுக்கத்தில் இவளின் இவ்வெண்ணம் பெரும் பாரமாய்யேறிக் கொள்ள, மீண்டும் கண்ணில் நீர் துளிர்க்க, பிஜி சென்றதும் தன் மெத்தையில் படுத்துக் கொண்டு அழவாரம்பித்தாள் வாணி.

அலுவலகத்திலிருந்து ஏற்கனவே வந்திருந்த மஹா, வாணியின் அழுகையைக் கண்டதும் வேணியிடம் விசாரிக்க, அவளும் தனக்கு ஏதும் தெரியாதென உரைத்துவிட்டாள்.

பெரும்பாடுபட்டு வாணியை எழவைத்து, முகம் கழுவ வைத்து, உண்ண வைத்து அவளை சிறிது ஆசுவாசப்படுத்தியப்பின் அவளிடன் பேசவாரம்பித்தனர் மஹாவும் வேணியும்.

மஹா வாணியிடம் அவளுக்கு என்னப் பிரச்சனையென்றுக் கேட்க, முன் தினம் தன் தந்தையுடன் நிகழ்ந்த பேச்சு வார்த்தையை உரைத்தாள்.

“இதுக்காடி நீ இப்படி அழுதுட்டு இருக்க? சரி நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” என்ற மஹா,

“ஆஷிக்கை பிடிக்குமா உனக்கு??” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் ரொம்பப் பிடிக்கும்” என்றாள் வாணி

“ஆஷிக் உன்னை அவாய்டு செஞ்சா கவலைப்படுவியா?”

“அதான் இன்னிக்கு செஞ்சானே… ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு மஹா” என்றாள் வாணி.

“ஓ இதுவேற நடந்துச்சா?” என மஹா வியப்பாய் வேணியைப் பார்க்க,

“ஹே அவன் எங்கடி உன்னை அவாய்டு செஞ்சான். நான் உன் கூட இருக்கேனு கேர் பண்ணிக்கலை அவ்ளோதான். அதானே அவன் நேச்சரும் கூட. அதை அவனே சொல்லிருக்கான் தானே. அப்டியிருந்தும் நீ ஏன் கவலையா இருக்கனு என்கிட்ட கேட்டான். நான்  மெசேஜ் செய்றேனு சொல்லிருக்கேன்” என மூச்சுவிடாமல் வேணி பேச,

வாணி திரு திருவென முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அப்ப அவன் சின்னதாய் உன்னை அவாய்டு பண்ற மாதிரி தெரிஞ்சாலும் உனக்கு கவலையாயிருக்கு… ஓகே”
என வாணிக்கு சொல்வதைப் போல் தனக்குள் கூறிக்கொண்டே அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் மஹா.

“அவன்கிட்ட பேசினாலே மனசு சந்தோஷம் ஆயிடுதா வாணி”

“ஆமா ரொம்ப ரொம்ப… அவ்ளோ பாசம் வச்சிட்டேன் அவன் மேல” என்றாள் வாணி.

“இதெல்லாம் ஏன் இப்படி தோணுது. அதுவும் ஒரு பையன் கிட்ட நம்ம மனசு ஏன் இப்படி யோசிக்கிது. பையன் கிட்ட இப்டி மனசு உணர்வது தப்பில்லையா… இப்டிலாம் நினைச்சு குழம்பி ஃபீல் செய்றியாடா வாணிமா” எனக் கேட்டாள் மஹா.
மஹா கேட்ட இக்கேள்வியில் வாணி தாவி சென்று மஹாவை அணைத்து கதற ஆரம்பித்து விட்டாள்.

“ஆமாடி இது… இது தான்டி என் பிரச்சனை. இதை எப்படி சொல்லனு தெரியாம தான் முழிச்சிட்டு இருந்தேன். எனக்கே இது பிடிக்கலடி… அப்பா, உறவுக்கார அண்ணா தாண்டி மனசுல ஒரு பையன் மேல அன்பு வரனும்னா அது ஹஸ்பண்ட்டா தான் இருக்கனும்னு வளர்க்கப்பட்டவள் நான்… நானும் அதை தான் விரும்புறேன். ஆனா அந்த இடத்துல தோழனாக் கூட இப்டி ஒரு பையனை மனசுல ஏத்துக்கிறது எனக்கே பிடிக்கலை… ஆனாலும் ஆஷிக் மேல உள்ள பாசத்தை அந்த உணர்வை என்னால கண்ட்ரோல் செய்யவும் முடியலை… நான் செய்றது தப்பா சரியா எதுவும் தெரியாம குழம்பிப் போய் இருக்கேன்டி” என தேம்பிக் கொண்டே உரைத்தாள் வாணி.

“நீ ஆஷிக்கை லவ் பண்றோமோனு நினைக்கிறியா வாணி?”

“கண்டிப்பா இல்ல மஹா. அவன் என்னோட க்ளோஸ் ப்ரண்ட். அது மட்டும் தான். என்னோட காதல் முழுக்க என்னைக் கட்டிக்கப் போகும் என் கணவருக்கு மட்டும் தான். அதுவுமே அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனுக்கு தான்” என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாணி உரைக்க,

“அவ்ளோ தான். சோ சிம்பிள். நீயே இவ்ளோ தெளிவா இருக்கும் போது என்னடா பிரச்சனை” என மஹா கேட்க,

“ஆஷிக் யாரயாவது பொண்ணை லவ் பண்றேனு உன் கிட்ட சொன்னா. நீ என்னடி ரியாக்ட் செய்வ?” எனக் கேட்டாள் வேணி

“நல்ல பொண்ணா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்… வீட்டுல அப்பா அம்மா மனசு கஷ்டப்படாம பேசி மேரேஜ் செஞ்சிக்கோனு சொல்வேன்… அவனுக்காக அந்த பொண்ணுக்கிட்ட போய் பேச சொன்னாலும் பேசுவேன் அம்மு” என்றாள் வாணி

“இது தான் வாணி ப்ரண்ட்ஷிப்… பொண்ணுங்கனாலே நம்ம அன்பு வச்சிருக்கிறங்க கிட்ட கொஞ்சமா எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவோம். அந்த எதிரிபார்ப்பு தான் அவன் உன்னை கேர் பண்ணலை தெரிஞ்சதும் கோவமா அழுகையா வெளிபட்டுறுக்கு… எதுவும் எதிர்பார்க்காம அவன் உன்னை பாதுகாப்பாய் ஃபீல் பண்ண வச்சது உனக்கு அவன் மேல் பெரிய நல்ல ஃபீல் கொண்டு வந்திருக்கு. அதான் அவனை பார்த்ததும் உன் கண்ணுல வர்ற ஒளி மின்னல் எல்லாம். அவன் உன்னை அப்படியே அக்சப்ட் பண்ணிக்கிட்டு பேசுறான்… அதனால அவனைப் பார்த்ததும் மனசுல உள்ளதெல்லாம் கொட்டுற… அவ்ளோ தான்” என்றாள் வேணி.

வாணிக்கு தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி அவள் தோளில் கைப்போட்டு அமர்ந்து அவளை தேற்றிக்கொண்டிருந்தாள் வேணி.
தொடர்ந்தாள் மஹா.

“பொதுவாகவே ஒருத்தரை நம்ம மனசுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுனா அவங்க மேல நமக்கு இப்டி கேரிங் ஏற்படுறது, நம்மளை மீறி அவங்க மேல நாம அன்பு செலுத்துறது, அவங்க நம்மளை முக்கியமா நினைக்கும்னு நினைக்கிறது… இதெல்லாம் நம்ம மனசு எக்ஸ்பட் செய்யும். இது மனதின் இயல்பான செயல்பாடு. என்ன நம்ம மனசுல அவங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுத்து வைக்கும் போது நம் மனசு இப்படி செயல்படும். உன் வாழ்நாள் பயணத்துல இந்த வயசுனு இல்ல எந்த வயசுலனாலும் ஆணோ பெண்ணோ இப்படி யாருக்காவது உன் மனசுல நீ இடம் கொடுத்தீனா மனசு அவங்க கிட்ட தன்னுடைய இந்த இயல்புல செயல்பட ஆரம்பிச்சிடும்.

பதினைந்து வயதிலிருந்து திருமணமாகிற வயது வரை இந்த மாதிரி மனதின் இயல்பு ஆப்போசிட் ஜெண்டர் கிட்ட வேலை செய்யும் போது அதை ப்ரெண்ட்ஷிப் நினைக்காம லவ்னு நினைச்சு காதலில் விழுந்திடுறவங்க தான் அதிகம் இப்ப…” என்றாள் மஹா.

“ஆனா அந்த ஏஜ்ல லவ்வும் வரும் தானே… எல்லாத்தையுமே ப்ரண்ட்ஷிப்னு நினைச்சிக்கிட்டுப் போக முடியாதுல” எனக் கேட்டாள் வாணி.

“ஹ்ம்ம் கண்டிப்பா லவ்வும் வரும். நம்ம மனசுல ஒருத்தருக்கு இடம் கொடுக்குறனால பாசம் வைக்கிறனால அது காதல் ஆகிடாது… அது தோழனா அண்ணனா தம்பியா இப்படி எந்த மாதிரி ரிலேஷன்ஷிப்பா வேணாலும் இருக்கலாம். அது எப்ப லவ்னு தோணும்னா அவங்களை யாருக்காகவும் நம்மளால விட்டுக்கொடுக்க முடியாது… அவங்க இல்லாம நம்மளால வாழ முடியாதுனு எப்ப தோணுதோ அப்ப அது காதல்ங்கிற இடத்துல வந்திடும்…
இதுல நீ தெளிவா இருக்க வாணி… அப்பா அம்மா நம்ம மேல உள்ள அக்கறைல சொல்றாங்க… அப்பாக்கு புரியவை உன் வாழ்க்கைல மேரேஜ் அவங்க விருப்பப்படி தான் நடக்கும்.. ஆஷிக் என்னிக்குமே உனக்கு நண்பனா மட்டும் தான் இருப்பானு புரியவை.. அதுக்கப்புறம் உங்கப்பாவே நீ ஆஷிக்கிட்ட பழகவேண்டாம்னு சொல்ல மாட்டாரு.‌ அண்ட் ஆல்சோ யாருமே லைப் லாங் கூட வரப்போறதில்லை வாணி… எல்லாருமே பாஸிங் க்ளௌவ்ட்ஸ்(clouds) தான்… காலம் நம் மனசையும் பழசையும் மறக்க வைக்க வல்லமைக் கொண்டது… இந்த நாட்கள்லாம் ஸ்வீட் மெமரீஸா மட்டுமே மனசுல இருக்கும்.. அந்த சுவடு நம்ம மனசுல இனிமையை தரும்.. அவ்ளோ தான்”

ரொம்ப மொக்கை போட்டுடேனோ என நீர் அருந்திக் கொண்டே மஹா கேட்க,

“கண்டிப்பா இல்லடி. தெளிவா புரிய வச்சிட்டீங்க இரண்டு பேரும். என் கில்டி ஃபீல்லாம் போய்டுச்சு. நான் என்ன செய்யனும்ங்கிறதையும் புரிய வச்சிட்டீங்க. உங்களை மாதிரி ப்ரண்ட்ஸ் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்” என சிறு சிரிப்புடன் கண்கள் மின்ன உரைத்தாள் வாணி.

“நடுராத்திரி பண்ணிரெண்டு மணி ஆகுதுடி… நீங்க ஆத்து ஆத்துனு உரையாத்துனது போதும். லைட் ஆஃப் பண்ணுங்கடி தூங்கலாம்” என தூக்கக் கலகத்தில் கூறினாள் வேணி.

வாணியை தெளிவுப்படுத்திய மஹாவின் மனது தனக்கும் மதிக்குமான நட்பைப் பற்றிய ஆராய்ச்சியிலிறங்க, அதற்கு கிடைத்த பதிலில் தன் கட்டிலிலிருந்து பதறியெழுந்து அமர்ந்தாள் மஹா.


ஏப்ரல் 2012

பத்து மாதங்களான நிலையில், வாணி வேணி ஆஷிக் ராஜேஷ் நால்வரும் ஒரே அலுவலகம் என்பதால் உண்ணும் நேரமும் மாலை பயணிக்கும் நேரமும் ஒன்றாய் செல்வர் அனைவரும்.

ஆஷிக்கிற்கு வேலை பளு அதிகமாயிருக்கும் சமயத்தில் இவர்களுடன் செல்லாமல் தனியாய் உண்ணவும் இரவு நேரம் தாமதமாய் கிளம்பவும் செய்வான்.

வாணி தன் குழப்பங்கள் குற்றயுணர்வுகளெல்லாம் களைந்து இயல்பான நட்புணர்வுடன் ஆஷிக்கிடம் பழகினாள். ப்ராஜக்ட்டில் தங்களின் பணியை கற்றுணர்ந்து சிறப்பாய் இயங்கினர் அனைவரும்.

தன் தந்தையிடம் ஆஷிக்கும் தனக்குமான நட்பை பற்றிக் கூறி அவரையும் தெளிய வைத்திருந்தாள் வாணி. அவருமே தற்பொழுது வாணி ஆஷிக்குடன் தோழமையாய் பழக அனுமதித்திருந்தார். அவர்களின் நட்பை புரிந்திருந்தார்.

வாணி மற்றும் மஹா சென்னைக்கு இரயிலில் பயணம் செய்வது தங்களுக்கு வசதியாக இருப்பதாய் எண்ணியதால், வாரயிறுதி நாட்களில் ஆஷிக்குடனான அவர்களின் பேருந்து பயணம் வெகுவாய் குறைந்திருந்தது. ஆம் அவர்கள் வாரயிறுதி நாட்களில் இரயிலில் பயணம் மேற்கொள்ள பேருந்தில் பயணித்தானிவன் அதுவே தனக்கு பிடித்திருப்பதாய் உரைத்து.
இவ்வாறாக நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் மாலை இளாவின் கைபேசிக்கு அழைத்திருந்தாள் வேணி.

இரவு எட்டு மணி அளவில் அவள் அழைத்திருக்க, அவன் இன்னும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பாது ஆர்வமாய் வேலைப் பார்த்திருந்தான்.

அலைப்பேசியில் வேணியின் அழைப்பு என்றதும் அதை ஏற்று காதில் வைக்க, இளாவிற்கு கேட்டது வேணியின் அழுகைக்குரல்.

மறுப்பக்கத்தில் கேட்ட அவளின் அழுகைக்குரலில் பதட்டமடைந்த இளா,

“என்னாச்சு அம்ஸ்… எதுக்கு அழுற?” எனக் கேட்க,

“நீ உடனே மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் வா” என அவள் அழுதுக்கொண்டே உரைக்க,

தன் இருக்கையை விட்டே எழுந்து விட்டவன்,”போலீஸ் ஸ்டேஷன்கா? இந்த நேரத்துல அங்க எதுக்கு போன நீ? அங்கே என்ன பிரச்சனை? தனியாவா போய்ருகே நீ? லூசா நீ?” எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக,

அங்கே இன்ஸ்பெக்டர் அவளை அழைத்ததாய் கான்ஸ்டபிள் கூற,
“நேர்ல வா…நான் எல்லாத்தையும் சொல்றேன்” என கைபேசியை வைத்து விட்டாள்.

— தொடரும்