உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 15

மறுநாள் விடியற்காலை நான்கு மணியளவில் நிச்சயம் முடித்து பெங்களுர் வந்த மஹா தன்னிடமிருந்த சாவியால் பூட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

வாணியும் வேணியும் தங்களின் ஃபுளோர் பெட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, வாணியின் காலருகே இருந்த தனது படுக்கையில் படுத்த மஹாவின் கைபட்டு வாணியின் மீதிருந்த போர்வை சற்றாய் கீழே இழுக்கப்பட ஆஆஆஆ வென்ற வீறலுடன் அலறியடித்து எழுந்தாள் வாணி.

வாணியின் அலறலில் முழித்த வேணி தன் எதிரிலிருந்த மஹாவின் பெரிய டெட்டி பியரை பார்த்து காஞ்சுரிங்கில் வந்த பேய் பொம்மை என நினைத்து வீல்ல்ல்ல்ல் எனக் கத்தினாள்.

இவர்கள் இருவரின் அலறலில் பயந்த மஹா தன் பங்கிற்கு கத்த, அவ்வீடே இம்மூவரின் அலறலில் நிரம்பியது.

அலறலை விட்டு மஹாவிடம் வந்த வேணியும் வாணியும் மஹாவை அணைத்துக் கொண்டனர்.

இவர்களின் வீடு கடைசி போர்ஷன் என்பதாலும் வீட்டை நன்றாய் தாழ்பாள் போட்டு பூட்டயிருந்ததாலும் இவர்களின் அலறல் வெளியில் எவருக்கும் கேட்கவில்லை.

பேய் படம் பார்த்ததால் இருவரும் பேய் கனவு கண்டிருக்க அச்சமயம் படத்தில் வந்த பேய் தான் இவர்கள் இல்லத்திற்கு வந்துவிட்டதென எண்ணி அலறிவிட்டனர் இருவரும்.

நைட் பேய் படம் பார்க்காதீங்கனா கேட்குறீங்களா என இருவரையும் நன்றாய் வறுத்தெடுத்தாள் மஹா.

ஒருவழியாய் மஹாவும் வேணியும் உறக்கத்திற்கு செல்ல, விடிந்தும் விடியா அக்காலை பொழுதில் அலுவலகத்திற்கு காலை ஷிப்ட்டிற்காக கிளம்பிச் சென்றாள் வாணி.

அன்று மதிய ஷிப்டிற்கு ஆபிஸ் சென்ற வேணி, உணவு உண்பதற்காய் கேபிடேரியாவிற்கு இளாவை அழைத்தாள்.

அங்கிருந்த மேஜையிலமர்ந்து உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் முன் வந்து இளா அமர, அவனை பார்த்த நொடி

“வாவ் இளா” எனத் துள்ளிக்குதித்தாள் வேணி.

“என்ன திடீர்னு ஆபிஸ்க்கும் இப்டி மீசைய வச்சிட்டு வந்துட்ட?” என அவன் மீசைய இழுக்க பரபரத்த தன் கையை கட்டுக்குள் கொண்டு வந்து அவள் வினவ,

அழகாய் சிரித்து, “இனி எல்லாம் அப்படி தான்” என்றானவன்.

அவனிடம் பேசிக் கொண்டே அவனுக்கு உணவு பரிமாறியவள் திடீரென்று, “இல்ல இளா…. மேரேஜ் முன்னாடி இப்டி ஒன்னும் நீ ஆபிஸ்க்கு வச்சிட்டு வர வேண்டாம்” என்றாள்.

“ஏன் என்னாச்சு?” என நெற்றிச் சுருங்க கேள்வியாய் அவன் நோக்க,

“அது அப்படி தான்” என்றாள் அவளும்.
“நீ ரீசன் சொல்லாம நீ சொல்றதை நான் செய்ய மாட்டேன்” என்றான் அவனும் பிடிவாதமாய்.

அந்நேரம் இளாவின் டீமிலிருக்கும் அவனின் டீம் மெட் ஷில்பா அறை நாள் விடுப்பெடுத்து அப்பொழுது தான் ஆபிஸ் வந்தவள் இளாவை கேபிடேரியாவில் பார்த்து அவனருகே வந்தவள்,

“வாவ் இளா யூ ஆர் லுக்கிங் டிபெரண்ட் அண்ட் யூ ஆர் லுக்கிங் சோ மேன்லி டுடே. என்ன வித்தியாசமா தெரியுது?” எனக் கூறிக் கொண்டே அவன் முகத்தை ஆராய்ந்தவள்,

“ஹே காட் இட்… மீசை… சூப்பரா இருக்கு இளா. இந்த லுக் நல்லா இருக்கு” என்றுரைத்தவள் வேணியிடம் சில வினாடி பேசி விட்டே சென்றாள்.

அதுவரை வேணியை காணாது ஷில்பாவிடம் பார்வையை வைத்துப் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை தற்போது வேணியின் மீது பாய கடுகு போட்டால் பொறியுமளவிற்கு சூடாகியிருந்தது அவளின் முகம் கோபத்தில்.

எதற்காக இந்த கோபம் எனப் புரியாது முதலில் நெற்றியை தேய்த்தவன் புரிந்தப் பின், “ஓ மேடம்னு பொறாமையா? நம்ம மேல பொசசிவ்னஸ் வந்துடுச்சு போலயே” என மனதில் எண்ணிக் கொண்டு சிரித்தான்.

“எதுக்கு இப்படி சிரிக்கிற?” என கோபமாய் அவள் வினவ,

“நீ எதுக்கு இப்படி கோபமா என்னை முறைச்சிட்டு இருக்க?” என இளா கேட்க,

“நாளையிலிருந்து ஆபிஸ்க்கு இந்த மாதிரி மீசைய வச்சிட்டு வந்த உன்னை ஒரு வழிப் பண்ணிடுவேன் சொல்லிட்டேன்” என ஆத்திரமாய் உரைத்தவள்,

‘அவ நல்லா இருக்குனு சொன்னா இவனும் ஈனு இளிச்சிட்டு கேட்டுட்டு இருப்பானா?’ என மனதிற்குள் குமைந்தாள்.

“இதோ பாரு இளா… ஆயுசுக்கு இந்த மீசைக்கு சொந்தக்காரி நான் மட்டும் தான். அதை பத்தி பேச கூட யாருக்கும் உரிமை கிடையாது. அதுக்கு பங்கு போட்டு யாராவது வந்தா வெட்டிடுவேன் சொல்லிட்டேன்” எனக் கோபத்தில் அவன் மீதுள்ள பாசத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க  உரைத்தவள்,

“ஹே கூல் டௌன் அம்ஸ்” என்ற இளாவின் பேச்சையும் காதில் வாங்காது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

“ஹப்பாஆஆஆஆ… மேடம் நம்ம மேல செம்ம லவ்ஸ்ல இருக்காங்க போலயே… அது அந்த மரமண்டைக்கு புரிய மாட்டேங்குதே?” என வாய் விட்டு புலம்பியவன்,

“கல்யாணம் முடியட்டும் உனக்கு இந்த அத்தானோட லவ்ஸயும் சேர்த்து புரிய வைக்கிறேன்டி என் செல்லக்குட்டி” என சூளுரைத்து தன் பணியைத் தொடர சென்றான்.

அவனின் மனதில் பூத்திருந்த காதலை திருமணத்திற்கு முன் கூற மனமில்லை அவனுக்கு. இவனின் காதலை கூறி அவளை காதலிக்க செய்யவும் விருப்பமில்லை அவனுக்கு. அவள் மனதில் இயல்பாய் அவனின் மீது காதல் பூக்க வேண்டும். அதை அவள் உணரவேண்டுமென காத்திருந்தான் இளா.

இவனின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?

பூத்த காதலை உணர்வாளா அவள்?

உணர வைப்பானா அவன்?

அடுத்து வந்த நாட்களில் வாரம் தோறும் மாறும் ஷிப்டில் வாணியும் வேணியும் போய்க் கொண்டிருந்த சமயம், வாணி இரவு ஷிப்டிலும் வேணி காலை ஷிப்டிலும் இருந்த அந்த வாரத்தில் ஒரு நாள்…

இரவு ஷிப்ட் முடிந்து மதிய வேளையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வாணியிடமிருந்து போன் வந்தது வேணிக்கும் மஹாக்கும்.

அவர்களை கான்ஃபரன்ஸ் காலில் அழைத்தவள், “இரண்டு பேருமே ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டு உடனே ரூம் வந்து சேருறீங்க. இல்லனா இரண்டு பேரையும் என்ன செய்வேனு எனக்கே தெரியாது” என உச்சபச்ச கோபத்தில் கூறி அவர்கள் பேச இடமளிக்காது அழைப்பை துண்டித்தாள் வாணி. அவளின் கைபேசி தன் இயக்கத்தை நிறுத்தியுமிருந்தது.

இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் இருந்தவர்கள், எதற்காக அவள் அழைத்தாளென புரியாது எனினும் அவளின் பேச்சிற்கு கட்டுப்பட்டு மேனேஜரிடம் எமர்சென்ஸி எனக் கூறி கிளம்பினர் தங்களின் வீட்டிற்கு.

எனினும் இரண்டு மணி நேரம் ஆனது இருவரும் அவர்கள் இல்லத்தை அடைவதற்கு.

வீட்டை அடைந்தவர்கள் வீட்டின் கோலம் கண்டு திகைத்து நின்றனர்.

வீடு முழுவதும் அனைத்து அறைகளிலும் கனுக்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றது. அவர்கள் தரையில் வைத்திருந்த மெத்தை அவர்களின் பை போன்ற பொருட்கள் நீரில் மிதந்துக் கொண்டிருந்தது.

வாணி வீட்டிலிருந்த ஒற்றை நாற்காலியில் தனது கால்களை மடக்கிக் கொண்டு தலையில் கை வைத்து தூங்கி கொண்டிருந்தாள்.

“அடியேய் என்னடி ஆச்சு?” என உலுக்கினாள் மஹா.

ருத்ரமாய் மஹாவைப் பார்த்தவள், “எல்லாம் உங்களால தான்டி பக்கிகளா?” என வார்த்தையை கடித்து துப்பினாள் வாணி.

“இதுக்கு தான் மேரேஜ் ஃபிக்ஸ் ஆன பொண்ணுங்ககிட்ட சேரக்கூடாதுனு சொல்றது. எப்பவும் கனவு உலகத்துலயே சுத்திட்டு கூட இருக்கிறவங்களை மறந்துடுவாங்க. எங்க இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது. இனி உங்க கூட என்னால குப்ப கொட்ட முடியாதுடி” என ஆத்திரமாய் வாணி கூற,

அவள் கூறிய தினுசில் வாய் விட்டு சிரித்தனர் மஹாவும் வேணியும்.

சிரிக்கிறீங்களா கழுதைங்களா எனக் கூறி அந்த தரையிலிருந்த நீரில் அவர்களை தள்ளியவள் தானும் அவர்களுடன் சேர்ந்து அத்தண்ணீரில் உருண்டு புரண்டாள்.

“என்னனு சொல்லிட்டு அடிடி” என இருவரும் ஒரு சேரக் கத்த, எதையும் காதில் வாங்காது அவர்களுடன் மல்லுக்கு நின்றாள் வாணி.

ஒரு வழியாய் அனைவரும் சோர்வாகி அந்நீர் நிறைந்த தரையிலேயே எழுந்து அமர்ந்தனர்.

“எப்படி இப்படி ஆச்சு?” என வேணி கேட்க,
“எல்லாம் உங்களால தான்” என மீண்டும் வாணி கூற,

“அடியேய் திரும்பவுமா… வேண்டாம் அழுதுடுவேன்” என வேணி பாவமாய் கூற,
நிகழ்ந்ததை உரைத்தாள் வாணி.

வாணி இரவு ஷிப்ட் முடித்து காலை வந்தவள் மஹாவுடன் சேர்ந்து காலை உணவை உண்டுவிட்டு மஹா தன் அலுவலகத்திற்கு கிளம்பியதும் படுக்க சென்றாள். வேணி காலை ஷிப்ட் என்பதால் விடியற் காலையே சென்றுவிட்டாள் அலுவலகத்திற்கு.

தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த வாணி தன் மீது நீரின் ஸ்பரிசத்தை உணர்த்து முழித்துப் பார்க்க, அவளை அவளிருந்த அந்த ரூமை சூழ்ந்திருந்தது தண்ணீர். அவள் படுத்திருந்த மெத்தை நனைந்து அவளும் முழுவதுமாய் நனைந்திருந்தாள்.

எவ்வாறு தண்ணீர் வந்ததென அவள் சென்று பார்க்க, சமையலறை சிங்கில் பாத்திரங்கள் நிறைந்திருக்க, குழாய் மூடாத நிலையில் தண்ணீர் அந்த சிங்கை நிறைத்து அதிலிருந்து வழிந்து அனைத்து ரூமிற்கு நீர் பரவியிருக்கிறது.

இதைக் கேட்டதும் மஹாவை முறைத்த வேணி, “ஏன்டி உனக்கு காலைல மெசேஜ் செஞ்சேனே பாத்தியா இல்லையா?” என கேட்டாள்.

திருதிருவென முழித்தாள் மஹா.

காலை மதியின் குறுஞ்செய்தியை பார்த்து பூரித்திருந்த மஹா, வேணியின் குறுஞ்செய்தியைப் பார்க்க மறந்துவிட்டாள்.

காலை ஐந்து மணிக்கு வேணி அலுவலக வண்டி வருவதற்குள் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டுமென அவசர அவசரமாய் கிளம்பியவள், மஹாவிடம் கூற வேண்டிய விஷயங்களை குறுஞ்செய்தியாய் அனுப்புவித்திருந்தாள்.

அன்று காலையே மின்சாரம் இல்லாததால் டேங்கில் தண்ணீரும் ஏற்ற முடியாத நிலையில் கீழிருந்த கிணற்றிலிருந்து மேலே தண்ணீர் எடுத்து வந்து உபயோகித்துக் கொள்ளுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியதையும், தான் ஓரளவிற்கு தண்ணீர் எடுத்து வந்து வைத்து விட்டதாகவும், காலை கிளம்பும் முன் வீட்டிலுள்ள அனைத்து ஸ்விட்ச் மற்றும் தண்ணீர் குழாய்களை மூடிவிட்டு செல்ல வேண்டுமெனவும் மஹாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் வேணி.

காலை ஷிப்டிற்கு வேணி அலுவலகத்தில் நுழையும் நேரம் தவறாது அவளுக்கு அழைப்பு விடுத்து பேசுவான் இளா. அது வழக்கமாய் அவன் எழுந்திருக்கும் நேரம். சரியாய் அந்நேரம் தன் இடத்திலிருந்து மீதமிருக்கும் அன்றைய ப்ராஜக்ட் வேலைகளை அடுத்து ஷிப்ட் ஆளான வேணிக்கு உரைத்துவிட்டு கிளம்புவாள் வாணி.

இளாவிடம் போனில் காத்திருக்கச் சொல்லிவிட்டே வாணியிடம் தன் ஷிப்ட் வேலைகளை பேசி முடிப்பாள் வேணி. ஆக இத்தகைய நெருக்கடியால் வேணியால் வாணியிடம் நேரம் செலவிட முடியவில்லை.

அதுவுமில்லாது இளாவிடம் பேசும் சுவாரஸ்சியத்தில் வாணியிடம் அந்த மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சனைய கூற மறந்துவிட்டாள் வேணி.

ஆக இவர்கள் சிங்க் குழாயை திறந்து வைத்திருக்க, மின்சாரம் வந்ததும் டேங்கை நிரப்ப, மூடாத சிங்க் குழாயிலிருந்து தண்ணீர் வரவாரம்பித்திருக்கிறது. அத்தண்ணீர் செல்ல வழியில்லாத அளவு பாத்திரங்கள் நிரம்பியிருக்க, தண்ணீர் வெளியே வழிய ஆரம்பித்துள்ளது.

“ரொம்ப பொறுப்பா இருக்கீங்கடி. இதுல கல்யாணம் செஞ்சி மதி அண்ணாவும் இளா அண்ணாவும் என்னப் பாடுபட போறாங்களோ” என நொடித்துக் கொண்டாள் வாணி.

பின் மூவருமாய் சேர்த்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.

அன்று தாங்கள் செய்த வேலையை நினைத்து பின் வந்த நாட்களில் நிறையவே சிரித்துக் கொண்டனர் மூவரும்.

மதியும் இளாவும் இதையறிந்து மஹா மற்றும் வேணியை கிண்டலடித்து ஒரு வழியாக்கினர்.

செப்டம்பர் 2012

இளா வேணி திருமண நாளன்று…

இரு குடும்பத்தாரும் திருமண வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் முறுக்கிய மீசையுமாய் நெற்றியில் கீற்றாய் சந்தனமும் குங்குமுமாய் மாப்பிள்ளைக்குறிய அனைத்து அம்சங்களுடன் மணமேடையில் அமர்ந்து ஐயர் ஓதிய மந்திரங்களைக் கூறிக் கொண்டு வேணியின் வரவிற்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்தான் இளா.

இளா பெங்களுரிலிருந்து வந்த நாளிலிருந்து அவனுக்கு காட்சி அளிக்காது போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் வேணி.

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே சில அழகு நிலையம் வேலை இருப்பதாய் கூறி பெங்களூரிலிருந்து கிளம்பி வந்துவிட்டாளவள்.

இளா இரு நாட்கள் முன்பு தான் பெங்களுரிலிருந்து வந்தான். அவன் வந்த நாளிலிருந்து திருமணத்தின் முந்தைய நாள் இரவு வரை அவளைக் காண எண்ணிலடங்கா முயற்சி செய்தும் அதற்கு இடமளிக்காது அவனை காண விடாது இருந்து விட்டாள் வேணி.

திருமணத்திற்கு பின் வரவேற்பென முடிவு செய்திருந்தமையால் முந்தைய நாள் மாப்பிள்ளை பெண் சேர்ந்து செய்வதுப் போல் ஏதும் நிகழ்ச்சி இல்லாததாலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இனியதாய் நடந்தேறியது.

காதல் கொண்ட இளாவின் மனமோ அவளின் குரலைக் கேட்டாலும் காண வேண்டுமென கூக்குரலிட்டது. இந்த இரண்டு நாள் பாராமுகமே அவன் மனதை மிகவும் சோர்வுறச் செய்தது.

ஆகையால்  கல்யாண பூரிப்புமாய் அவளை காணப் போகிறோமென்ற ஆர்வமுமாய் அவள் வரவிற்காய் காத்துக் கொண்டிருந்தான் இளா.

ஐயர் பெண்ணை அழைத்து வரச் சொன்ன நிமிடம், வந்தாள் அவள்.

அவளைக் கண்டதும் வியப்பில் ஒளிர்ந்தது அவனின் முகம்.

புன்னகையில் விரிந்தது அவனின் இதழ்.

தன்னவள் என்கின்ற பெருமிதம் அவனின் உள்ளத்தில்.

காதல் காட்டாற்று வெள்ளமாய் கரை கடந்து வெளிப்பட்டது அவனின் கண்களில்.

இந்த வேணி புதிது அவனுக்கு.

நாணத்தால் நிலம் நோக்கும் வேணி மிகவும் புதிது.

இதுவரை அவளை இவ்வாறு கண்டதில்லை அவன்.

அவன் மனம் அனிச்சையாய் உரைத்தது அவனறியாது “என் செல்ல அம்முகுட்டி… செம்ம அழகுடா நீ”

அவனுக்காய் அவனின் பிடித்தத்திற்காய் தன்னை மாற்றிக் கொண்ட வேணி இவள்.

ஆம் அவனுக்காக தன் அழகிய நாசியில் மூக்குத்தி அணிந்திருந்தாள் அவள்.

அவனுக்காக அவனின் பிடித்தத்திற்காக மூக்கு குத்திக் கொண்டாள். நீளமாய் கூந்தலை வளர்த்திருந்தாள்.

இதை இன்ப அதிர்ச்சியாய் அவனுக்கு காண்பிக்கும் பொருட்டே இரு நாட்களாய் அவனை காண விடாது தவிக்கச் செய்தாள்.

தங்க சரிகை சேலையில் ஒற்றைக்கல் வைர மூக்குத்தி மினுமினுங்க காதில் ஜிமிக்கி கம்மல் அசைந்தாட  நீண்ட பின்னலிட்ட கூந்தல் இடை தழுவ மென்னடையிட்டு வந்தமர்ந்தாள் அவனருகில்.

அவளின் காதோரம் சரிந்தவன் கேட்டான், “எல்லாம் எனக்காகவா?”

நிமிர்ந்து அவனை நோக்கியவள் ஆமென கண்சிமிட்டினாள்.

அவனின் பார்வை அவளின் மூக்குத்தியில்… அவளின் பார்வை அவனின் மீசையில்.

“உன்னை அப்படியே கடிச்சி திங்கனும் போல இருக்குடி. அம்புட்டு அழகா இருக்க அம்முகுட்டி” மையலாய் அவளின் காதில் மென்மையாய் அவன் கூற,

“ஹான் கடிச்சி திங்க நான் என்ன கேரட்டா ஆப்பிள்ளா? போடா புடலங்காய்” என அவள் முகத்தை திருப்ப, வாய் விட்டு சிரித்தான் இளா.

இவர்களின் பேச்சில் கடுப்படைந்த ஐயர், “நான் இங்க என்ன பிரசங்கமா பண்ணிட்டு இருக்கேன். மந்திரத்தை கவனியுங்கோ” எனக் காட்டமாய் கூறி அவர்களை கனவுலக்திலிருந்து திருமண நிகழ்வுக்கு கொண்டு வந்தார்.

மங்கல இசை முழங்க மேள தாள நாதஸ்வர ஒலி இசைக்க, கையில் தாலியை எடுத்தவன் அவளின் கண்ணோடு கண் நோக்கி சம்மதமா என தலை அசைக்க இமைக்காது அவனை பார்த்துக் கொண்டிருந்தவளும் இசைந்தாள் அவனின் காதல் பார்வைக்கு. வேணியின் கழுத்தில் பொன் தாலி பூட்டினான் இளா.

அவளைச் சுற்றி தன் கையை கொண்டு வந்து அவளின் நெற்றியில் அவன் குங்குமம் வைக்க, அவன் ஸ்பரிசத்தின் விளைவால் சிறு அதிர்வு பெண்ணின் மனதில் சிறு நடுக்கம் அவளின் உடலில்.

அவளின் கன்னச் சிவப்பை கண்டவன் அவன் கைகளில் ஒட்டியிருந்த குங்குமத்தை சற்றாய் தேய்த்துவிட்டான் அவளின் கன்னத்திலும்.

“ம்ப்ச் என்ன விளையாட்டு இளா இது” என கன்னத்தை தேய்த்துக் கொண்டே அவனை அவள் முறைக்க,

“நீ வெட்கபடுறதை யாரும் கண்டுபிடிச்சிட கூடாதுல அம்ஸ்… அதான் உனக்கு ஹெல்ப் பண்ணேன்” என கண் சிமிட்டி அவன் கூற,

அய்யோ என தலையிலடித்துக் கொண்டாளவள்.

பின் மெட்டி அணிய குனிந்து அவளின் பாதத்தைப் பற்றிக் கொண்டு அவன் சிறு அடி எடுத்து வைக்க, நடக்க தடுமாறியவள் அவனின் தோளைப் பற்றிக்கொண்டு பின் பதறி கைகளை எடுக்க, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன்,

“இப்ப எதுக்கு பதறி கைய எடுத்த! ஒழுக்கா தோளை பிடிச்சிட்டு விழாம வா” எனக் கூறி அவளின் கையை தன் தோளில் வைத்தான்.

அம்மியில் அவள் கால் வைத்து அவன் மெட்டி அணிவித்த சமயம், ஒலித்தது அப்பாட்டு வாணியின் கைபேசியில்,

உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்.

உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்.

மாலை சூடி….

தோளில் ஆடி…

கைதொட்டு…

மெய்தொட்டு…

உன்னில் என்னைக் கரைப்பேன்….

அப்பாடலை கேட்ட நொடி சிலையென சமைந்தனர் இருவரும்.

மெட்டி அணிவித்து அவளருகே வந்தவன்,
“என் வாழ்நாள் முழுசுக்கும் உன்னை கண்ல வச்சி என் உசுரா பார்த்துப்பேன் அம்ஸ். ஐ லவ் யூ மை பொண்டாட்டி”
என கண்ணில் காதல் மின்ன பூரிப்பாய் அவன் உரைத்த நொடி, சட்டென தன் தலையை உயர்த்தி அவன் முகம் அவள் பார்க்க அழகாய் சிரித்து கண் சிமிட்டினான்.

“அய்யோ இப்படி சிரிச்சே கொல்றானே” என்றெண்ணியவள், அவனின் இந்த நேரடி காதல் தாக்குதலில் என்ன கூறவென அறியாது தடுமாறினாள்.

இந்த நிமிடம் அவளிடம் காதல் கூற வேண்டுமென எந்த முடிவும் செய்துவிட்டிருக்கவில்லை அவன்.

அவளை பார்த்த நொடியிலிருந்து மனதில் பொங்கி வந்த காதலை அடக்கப் பெரும்பாடு பட்டவனை இப்பாடல் உசுப்பிவிட தன்னையும் மீறி உரைத்து விட்டான் தன்னவள் மீதான தன் காதலை.

ஆனால் இத்தனை நாள் பேசும்போது சொல்லாத காதலை இப்பொழுது தான் கூறினான். திடீரென்று எப்படி அவனுக்கு காதல் வந்தது என அவன் கூறிய காதலை இவள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, இதற்குமேல் யோசிக்க விடாது திருமண வேலைகள் அவர்களை இழுத்துக் கொண்டது.

வாணி மற்றும் ஆஷிக் மட்டுமே இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தனர். வாணி தனது தாய் தந்தையுடன் குடும்பமாய் அவளின் திருமணத்திற்கு வந்திருந்தாள்.

மஹா மதிக்கு அடுத்து வரும் வாரம் திருமணம் என்பதால் அவர்களால் இத்திருமணத்தில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

ஆஷிக் மற்றும் வாணி தங்களது பிற பேட்ஜ் மக்களுடன் சேர்ந்து நன்றாய் கிண்டலடித்து கேக் வெட்ட செய்து அவர்கள் இருவரையும் ஊட்ட வைத்தென ஆரவாரமாய் கொண்டாடச் செய்தனர் அவர்களின் திருமணத்தை.

திருமணம் முடிந்து கோவிலில் சாமியை தரிசித்து விட்டு இளாவின் வீட்டிற்கு வேணியை அழைத்துச் சென்று விளக்கேத்த வைத்து ஓய்வெடுக்கச் செய்தனர்.

அன்றிரவு அவர்களினறையில், ஏதோ ஓர் அசௌகரிய உணர்வுடன் மனம் நிறைத்த பயத்துடன் கையை பிசைந்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் வேணி.

இளா பால்கனியில் நின்று தன் கைபேசியில் தன்னுடைய வேலை சம்பந்தமாய் தன் சகப்பணியாளரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

பேசி முடித்துவிட்டு உள் நுழைந்தவன், அவளின் முகத்தை நோக்கியவன், அவளருகில் அமர்ந்தான்.

அவளின் கையை தன் விரல்களுடன் கோர்த்துக் கொண்டு, “என்ன என் அம்முகுட்டி முகம் கோவக்காய் போல சிவந்து போயிருக்கு… கையெல்லாம் சில்லுனு இருக்கு… என்னை பார்த்து பயமா?” என்றவன் கேட்க,

அவனின் பயமா என்ற வார்த்தையில் கொதித்தெழுந்தவள், “இவ்ளோ நேரம் இருந்த டென்ஷன் கூட தாங்கிப்பேன்டா. ஆனா உன்னை பார்த்து பயமானு கேட்ட பார்த்தியா… அத தான்டா என்னால தாங்கிக்கவே முடியலே” என அவனின் புஜத்தில் நாலு அடி இவள் போட,

அவளின் அடியை வாங்கிக் கொண்டு சிரித்தவன் அவளை அருகிழுத்து தோளில் கை போட்டு தன் கை வளைக்குள் கொண்டு வந்தானவன்.

“நிஜமா சொல்லு அம்ஸ்… என் அம்ஸ்ஸ பத்தி எனக்கு தெரியும்… உன் கண்ணுல தெரிஞ்ச அந்த பயம்…. உன் பாடி லேங்குவேஷ்ல தெரிஞ்ச அந்த அன்கம்ஃபர்ட்… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? என்னை நீ நம்பலை. நான் உன் ஃபரண்ட்ங்கிறதை நீ மறந்துட்டனு தானே அம்ஸ்” என கவலையாய் அவன் உரைத்த நொடி,

அவனின் துக்கத்தை காணப்பொறுக்காது அவனின் வாயில் பட்டென்று ஒரு அடி வைத்தாள்.

“என்ன பேச்சு பேசுற நீ. அடி பின்னிடுவேன் ராஸ்கல்” என்றவள் கூற,

“அடிப்பாவி ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு புருஷனை அடிப்பேனு சொல்ற. அபச்சாரம் அபச்சாரம்” என அவன் தன் காதுகளை மூடிக் கொள்ள,

வாய்விட்டு சிரித்தவள், “பின்னே உன்னை நான் மறந்துட்டேனு சொன்னா கொஞ்சுவாங்களா?… இனி ஒரு தரம் இப்படி பேசுன நிஜமாவே உதை வாங்குவ. நீ எனக்கு முதல்ல ஃபரண்டுடா அதுக்கப்பறம் தான் மத்ததெல்லாம். என் இளாக்கிட்ட எனக்கென்ன பயம்?.. அது பொண்ணுங்களுக்கு நேசுரலா வர்ற பயம். உன்னை பார்தது வந்த பயம் இல்ல. அது சொன்னாலும் உனக்கு புரியாது. இவர் பெரிய பூச்சாண்டி இவரை பார்த்து பயப்படுறாங்களாம்” என முகத்தை சுளித்துக் கொண்டாள்.

அவளின் முகச்சுளிப்பில் மின்னிய மூக்குத்தியை கண்டவன், அவளின் முகமருகே சென்று “அம்முகுட்டி வித் யுவர் பர்மிஷன்” என்றவன்,

அழுந்த பதித்திருந்தான் தன் இதழை அவளின் மூக்குத்தியில்.

சிலீரென உடல் முழுதும் ஏதோ பரவ வேணியின் மூச்சு சீரற்று ஏறி இறங்க அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டிருந்தாளவள்.

கட்டிலின் மறுபுறம் விழுந்த நொடி தன் தவறை உணர்ந்தவன் அவளை இலகுவாக்கும் பொருட்டு, “ஒன்னுமில்லை அம்முகுட்டி ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட். இப்ப பயம் எல்லாம் காணாம போய்ருக்குமே” எனக் கூற,

“பயம் போச்சாஆஆஆஆ…. இப்ப தான்டா கை கால்லாம் உதறுது கோவக்காய்” என அவனின் தலையை பிடித்து உலுக்கவாரம்பித்தாள்.

“அடியேய் விடுடி வலிக்குது.” என்றவன் கதற,

அவனின் மீசையில் அவளின் பார்வையை பதிக்க, அய்யய்யோ மீசைய இழுக்கப் போறா என அவன் மனம் கூக்குரலிட அவளை கீழே தள்ளி அவளின் இரு கைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டானவன்.

“விடுடா கோவக்காய். என் மூக்குத்தி மேலேயே கண்ணு உனக்கு.”  என்றவள் மூச்சிறைக்க கூற,

“உனக்கு மட்டுமென்ன… என் மீசை மேலேயே தான் கண்ணு… இந்த மீசைக்கு இன்சுரன்ஸ் போட்டு வச்சிருக்க மாதிரி என்னமோ நான் தான் பாத்தியப்பட்டவனு டயலாக் வேற” என்றவன் கூற,

“கைய விடுடா. வலிக்குது” என வலியில் அவள் முகத்தை சுருக்க, கையை விட்டவன் வலி போக தடவிக் கொடுத்தான்.

பின் அவளருகில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தவன்,

“தாம்பத்தியம்ங்கிறது காதலால் கசிந்துருகி உன்னை தவிர வேறெவரும் இந்த உலகத்தில் தேவையேயில்லைங்கிற அந்த நூறு சதவீத அர்பணிப்புல இயல்பாய் நடக்கனும் அம்முகுட்டி. அந்த அளவுக்கு காதல் நம்ம இரண்டுபேர் மனசுலயும் வரனும்டா. நீ இல்லாம என்னால இருக்கவே முடியாதுனு தோணணும். அந்த உணர்வை தாங்கிக்க முடியாம உனக்கு நானும் எனக்கு நீயும் தஞ்சம்னு நம்ம ஃபீல் பண்ற அந்த தருணம் அப்ப ஆரம்பிக்கனும்டா நம்ம வாழ்க்கைய” என இளா தன் மனதிலுள்ளதை விவரித்துக் கூற,

“சோ ஸ்வீட் இளா. எவ்ளோ அழகா வாழ்க்கை காதல் தாம்பத்தியம்னு எல்லாத்தையும் சொல்லிட்ட. ஐம் புரவ்டு டு பீ யுவர் வைப் இளா” என அவனருகே படுத்திருந்தவள் தன் முகத்தை திருப்பி அவன் முகத்தை பார்த்துக் கொண்டே உரைத்தப்படி அவனை நெருங்கி வந்தவள் அவனின் மீசையை இழுத்திருந்தாள்.

சத்தம் போடாது கண்மூடி இந்நொடியை அவளின் இந்த அருகாமையை ரசித்திருந்தான் அவன்.

அவன் அலறுவான் என்றிவள் எண்ண, அவனின் இச்செயலில் அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாளவள்.

அவ்வாறு கண் மூடிய நிலையிலேயே, “நான் உனக்கு ப்ரபோஸ் பண்ணேன் இன்னிக்கு. அதுக்கு எதுவுமே சொல்லலையே அம்ஸ்” என முகத்தை திருப்பி அவள் விழி நோக்கி அவன் கேட்க,

அவளிடம் சிறு பதற்றம் தொற்றிக் கொள்ள, “ஹே ரிலாக்ஸ் அம்முகுட்டி. உன் மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு. ஏன் டென்ஷன் ஆகுற” என தன் தலையை ஒற்ற கையால் தாங்கி அவளை நோக்கி திரும்பிக் கொண்டு இவன் கூற,

“தெரியலை இளா. உன்னை லவ் பண்றேனானு தெரியலை. உன்னை ரசிக்குது மனசு. நீ பக்கத்துல வந்த மனசு குழையுது. நீ சங்கடப்பட்டா மனசு வலிக்குது. ஆனா இதெல்லாம் காதலானு தெரியலை. உன்னை எனக்கு ரொம்ப வருஷமா தெரியுமே. அதனால என்னால கண்டுபிடிக்க முடியலை. உன்னை ஃப்ரண்டாவே எனக்கு ரொம்ப பிடிக்குமே. அதனால இப்ப இருக்கற பிடித்தத்திற்கும் ஃப்ரண்டா இருந்தப்போ பிடிச்சதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியலை. மே பி அந்த வித்தியாசத்தை நான் உணரும் போது அது காதல்னு தோணுமோ என்னமோ” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு வேணிக் கூற,
அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்தவன், “போக போக தெரிய வரும் அம்ஸ். நீ உன் காதலை உணரும் போது என் கிட்ட சொன்னாபோதும். இப்ப நிம்மதியா தூங்கு” என்றுரைத்துவிட்டு விளக்கை அணைத்தான்.

திருமண களைப்பில் உடனே உறங்கிப் போயினர்.

இருவரும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ முடிவு செய்தனர். 

என்றுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழ முடியுமா?

எதிர்பார்ப்பு தானே மனச்சங்கடத்தை ஏற்படுத்தும்.

எதிர்பார்ப்பு இவர்களுக்குள் ஊடலை விளைவித்ததா? ஊடலின் பயன் கூடலானதா?

— தொடரும்