உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 14

“என்னடி சொன்ன? அப்ப அவ்ளோ தானாடி என் மேல உனக்கு நம்பிக்கை? என்னடி ஃப்ரண்டு நீ?” எனக் கோபமாய் வேணி கத்த,

“நான் தான்டி உன்னை திட்டனும். இத்தனை நாளா ஃப்ரண்டுனு சொல்லிட்டு திடீர்னு சொல்லாம கொள்ளாம நிச்சயம் பண்ணிட்டு வந்தா நான் என்னனு நினைப்பேன்டி” என அவளும் எகிற,

“ஜஸ்ட் ஸ்டாப் இட் வாணி. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா என்ன செய்வேனே எனக்கு தெரியாது” எனக்  கண்ணில் நீர் தேங்கி நிற்க கர்ஜித்தவள் தன்னறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள் வேணி.

“என்னடி வாணி உனக்கு பிரச்சனை. அவ ஃப்ரண்ட்டை கல்யாணம் செஞ்சது பிரச்சனையா? இல்ல உன் கிட்ட சொல்லாம செஞ்சது பிரச்சனையா? நிச்சயம் முடிஞ்சு சந்தோஷமா வந்தவளை அழ வச்சிட்டு இருக்க நீ” என மஹா பேச,

“ஆமாடி நான் தான் இங்க எல்லாரையும் அழ வச்சிட்டு இருக்கேன்” எனக் கோபமாய் கூறிய வாணி தன் மெத்தையில் அமர்ந்துக் கொண்டாள்.

இவர்கள் இருவருக்குமிடையில் திண்டாடிய மஹா, “ஹைய்யோ இதுக்கே இப்படி… இன்னும் என் விஷயம் வேற தெரிஞ்சா என்ன செய்வாளோ தெரியலையே” என்றெண்ணிக் கொண்டாள்.

ஏனோ மனதில் பெருத்த ஏமாற்றத்தை உணர்த்தாள் வாணி. இதுவரை தான் ஏதும் தன் தோழியுடன் மறைக்காது தன் இன்ப துன்பங்கள் அனைத்தையும் பகிர்ந்த நிலையில் அவள் தன்னிடம் மறைத்து விட்டாளே என பெரும் ஏமாற்றமாய் உணர்ந்தாள் வாணி.

அம்மு காதலித்தாளென எண்ணவில்லை அவள். எனினும் ஒரு வாரம் முன்பே அவளின் நிச்சயம் பற்றி தெரிந்திருக்கும் தானே, அதை பற்றிக் கூட தன்னிடம் பகிர்த்துக்கொள்ளாமல் இருந்திட்டாளே… தான் அவளை எண்ணும் அளவுக்கு அவள் தன்னை நெருங்கிய தோழியாய் எண்ணவில்லையென்ற நினைப்பு வந்த நொடி மனதில் வலி ஏற்பட கண்ணில் நீர்க்கட்டியது வாணிக்கு.

தன்னை நன்கறிந்த தோழியே தன்னை புரியாது காதலென்றெண்ணி விட்டாளே என கரைந்துக் கொண்டிருந்தாள் வேணி.

இருவரும் மனம் விட்டு பேசினால் தீரும் விஷயம், அவர்களின் மௌனப் போராட்டத்தால் நீண்டு கொண்டுப் போனது.

மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது காலை உணவும் உண்ணாது பணிக்கு சென்றனர் அன்று.

வேணி இளா மற்றும் வாணி ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதால், அதுவும் வாணியும் வேணியும் ஒரே ப்ராஜக்ட் என்பதால் கேட்கும் கேள்விக்கு பதில் என்கின்ற அளவிற்கு பேசிக் கொண்டனர் இருவரும். மதிய உணவுக்கு இளாவும் இவர்கள் இருவருடன் சேர்ந்துக் கொள்ள இவர்களின் மௌனமே இவர்களுக்குள் ஊடலெனக் காண்பிக்க, எனினும் அவற்றை பற்றி அவனிடம் கூற மறுத்து விட்டனர் இருவரும்.

பேருந்துலிருந்து வந்த சுகமான மனநிலையுடன் இனி தினமும் வேணியிடம் கைப்பேசியில் பேச வேண்டுமென முடிவுச் செய்துக் கொண்டான் இளா.

தோழனாய் இருக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை என பேசிக் கொள்வர் இருவரும். இனி அவ்வாறல்லாது தினமும் பேசிக்கொள்ள வேண்டும் அவளின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துக் கொள்ள வேண்டுமென எண்ணினான் இளா. அவன் வேணியை தன்னவளாய் உணர்ந்ததை அந்த பேருந்தின் இனிய தருணத்தில் நன்றாகவே உணர்ந்துக் கொண்டான்.

இனி வரும் நாட்களில் ஒரு நாள் கூட அவளில்லாது அவளின் நினைவில்லாது அவளிடம் பேசாது இருக்க முடியாதென நன்கு உணர்ந்துக் கொண்டானவன்.

அத்தகைய ஒரு பரவச நிலையில் அவனின் மனம் பறந்துக் கொண்டிருந்தது. இப்போது இச்சிறு பிரச்சனையையும் அவள் கூற மறுக்க, அவள் இன்னும் தன்னை உணரவில்லையே என சிறிது மனம் சுணங்கினான் இளா.

இவ்வாறாய் இவர்களின் பனிப் போர் இரண்டு நாட்கள் தொடர்ந்த நிலையில், எந்த பிரச்சனையும் நீண்ட நாட்கள் நீடிக்க செய்யாது உடனே பேசி முடித்துவிடும் பழக்கமுடைய வேணி, அன்றிரவு தானே சென்று வாணியிடம் பேச அமர்ந்தாள்.

சரியாய் அச்சமயம் கைபேசியில் அழைத்து அவர்கள் வீட்டின் கீழ் கேட்டின் வாசலுக்கு வருமாறு அழைத்தாள் மஹா.

வாணியும் வேணியும் என்னவோ ஏதோவென எண்ணிக் கொண்டு வாசலுக்கு சென்றுப் பார்க்க, அங்கே மதியுடன் நின்றிருந்தாள் மஹா.

மதி இருப் பெண்களிடம் நலம் விசாரித்து விட்டு வரும் ஞாயிறு தனக்கும் மஹாக்கும் நிச்சயம் எனவும் அதற்கு பெண்கள் இருவரும் கண்டிப்பாக வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தான்.

அவன் கூறியதன் அர்த்தம் மூளைக்கு புரிந்த சமயம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர் இருப்பெண்களும்.

எனினும் மதியின் முன் எதுவும் காண்பிக்கும் எண்ணமில்லாது நல்லவிதமாய் பேசி வாழ்த்து கூறி தங்களினறைக்கு வந்து விட்டனர் இருவரும்.

வேணி மஹா இருவரும் தன்னை நெருங்கிய தோழியாய் எண்ணவேயில்லை என்ற எண்ணம் வலுவாய் வாணியின் மனதில் உரைக்க கண்ணில் விடாது நீர் வழிந்தது.

அச்சமயம் உள் நுழைந்தாள் மஹா.

இவ்விஷயத்தை இருவரும் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களென பயந்துக் கொண்டு உள்ளே வந்த மஹா, வாணியின் இந்த அழுகைப் பார்த்து மனம் கலங்கிப் போனாள்.

இருவரும் வாணியிடம் பேச முயல,
“நான் இது வரைக்கும் உங்ககிட்ட எதாவது மறைச்சிருக்கேனாடி? எனக்கு நடக்குற சின்ன சின்ன விஷயத்தையும் உங்க கிட்ட ஷேர் செஞ்சிருக்கேனேடி. ஆனா இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலைல. நான் தான் உங்களை பெஸ்ட் ஃப்ரண்டா நினைச்சிட்டிருக்கேன். நீங்க என்னை அப்படி நினைக்கலை தானே” துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே நா தழுதழுக்க வாணி கூற,

இருப் பெண்களின் நெஞ்சமுமே கனத்தது அவளின் அழுகையில்.

“அப்படிலாம் இல்ல வாணி” என வேணி கூற,

“யாரும் என்கிட்ட எதுவும் பேச வேண்டாம். நான் தனியா அழுகனும்” எனக் கூறிக் கொண்டே தன் மெத்தைக்கு சென்று படுத்துக்கொண்டாள் வாணி.

வேணி மற்றும் மஹா அவளை தேற்றும் வழித் தெரியாது கலங்கிப் போய் அமர்ந்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து அவளை சமாதானம் செய்யவென அவளின் மெத்தைக்கு செல்ல அழுகையால் வெளி வந்த தேம்பலுடனே உறங்கிக் கொண்டருந்தாள் வாணி.

அவளின் தலையை மென்மையாய் வருடிய வேணி, “இன்னும் சின்னப்பிள்ளத்தனமாவே யோசிச்சிட்டு அவளும் கஷ்டப்பட்டுக்கிட்டு நம்மளையும் கஷ்டபடுத்துறாளே” என வேணி மஹாவிடம் கூற,

வேணியை அமைதியாய் இருக்கும்படி செய்கை செய்த மஹா,

“வெளியே சென்று பேசலாம்… அவளின் தூக்கம் கலைந்துவிடப் போகிறதென” கூறி முகப்பறைக்கு அழைத்து வந்தாள் வேணியை.

“அவ ப்ரண்ட்ஸ்னு லைப்ல யாரையும் வச்சிக்கிட்டது இல்லடி. அதனால அவங்கவங்களுக்குனு பர்சனல் ஸ்பேஸ் இருக்கும்னு அவளுக்கு புரியலை. அவ ஓவர் இமோஷனல் அண்ட் சென்சிட்டிவ். க்ளோஸா இருக்கிறவங்க கிட்ட எல்லாத்தையும் ஷேர் செய்யாம அவளால இருக்க முடியாது. அது மாதிரி மத்தவங்களும் இருக்க மாட்டாங்கல” என மஹா தன் எண்ணங்களை கூற,

“ஆனா எங்கேஜ்மெண்ட் விஷயத்துல அவ நினைக்கிறது கரெக்ட் தான்டி. நேத்து என் கிட்ட ஆபிஸ்ல சொன்னா… நீ லவ் பண்ணிருப்பேனு நான் சந்தேகப்படல, ஆனா இப்படி இளாவை உனக்கு கட்டி வைக்க உங்க வீட்டுல நினைக்கிறாங்கிற மாதிரி ஒரு வார்த்தையாவது நீ சொல்லிருந்தா எனக்கு இவ்ளோ ஏமாற்றமா இருந்திருக்காதுனு சொல்லிட்டுப் போய்டா. எனக்கு ரொம்ப குற்றயுணர்ச்சியா போச்சுடி” என தன் மன வருத்தத்தை மஹாவிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தாள் வேணி.

திடீரென்று ஞாபகம் வந்தவளாய், “ஆமா நீ ஏன்டி சொல்லலை. மதி சொல்லும் போது சீரியஸா செம்ம ஷாக். வாணியோட நிலைமைய அப்ப என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது” என வேணி மஹாவை கேட்க,

“போன சண்டே தான்டி கன்பர்ம் ஆச்சு” என அன்று நடந்தவற்றை வேணியிடம் விளக்கினாள் மஹா.

“சரி வாணியை எப்படிடி சமாதானம் செய்றது” எனக் கவலையாய் வேணி கேட்க,

“அதெல்லாம் செஞ்சிடலாம். டோண்ட் வொர்ரி புதுப்பொண்ணு. நீ உன் கல்யாண கனவுல வலம் வரத விட்டுட்டு இப்படி ஃபீல் செஞ்சிட்டு இருக்க” என கேலி செய்து மனநிலையை மாற்றினாள் மஹா.

“மேடம் நீங்களும் ஒரு வாரத்துல புதுப்பொண்ணு ஆயிடுவீங்க. அப்புறம் ஒன்லி மதி ட்ரீம்ஸ் தான். எங்க ஞாபகமெல்லாம் வருமா என்ன?” என கண் சிமிட்டி வேணி கேட்க,

“போடி போடி போய் தூங்குற வழியப் பாரு” என அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள் மஹா.

மெத்தையில் படுத்து போர்வையால் தன்னை போர்த்திக் கொண்ட மஹா,

“குட் நைட் அம்மு. இளா ட்ரீம்ஸ்” என சிரித்துக் கொண்டே கூற,
கலகலவென சிரித்த வேணி,

“உனக்கும்டி. ஹேவ் எ ஸ்வீட் மதி ட்ரீம்ஸ்” என வாழ்த்தினாளவள்.

மறுநாள் எவரும் பெரியதாய் எதுவும் பேசாது அமைதியாய் கிளம்பிச் சென்றனர் அலுவலகத்திற்கு.

அலுவலகத்தில் காலை பதினொரு மணியளவில் ஆஷிக்கிற்கு கைபேசி அழைப்பு விடுத்தாள் வாணி.

அவன் அழைப்பை எடுத்ததும் “எனக்கு உன் கிட்ட கொஞ்சம் பேசனும் ஆஷிக். ஃபோரம் மால் வரியா இன்னிக்கு ஈவ்னிங்?” எனக் கேட்டாள் வாணி.

“ஹே என்ன விளையாடுறியா கேபி? எனக்கு நிறைய வேலை இருக்கு. ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்புவேனு எனக்கே தெரியாது” என ஆஷிக் கூற, இங்கே முகம் தொங்கிப் போனது வாணிக்கு.

“எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் யார்க்கிட்டயாவது பேசினா ரிலாக்ஸ் ஆகும்னு தான் உன்னை வர சொல்றேன்” என்றாள் வாணி.

“வேணும்னா நைட் டென் க்ளாக் மேல ஃபோன் பண்றேன். அப்ப பேசலாம். நேர்ல லாம் சான்ஸே இல்ல” என ஆஷிக் கூற,
“அப்ப நான் உனக்கு முக்கியமான பெர்ஸன் இல்ல. உன் வேலை தான் முக்கியம். அப்படி தானே” என்றாள் வாணி.

“நான் ஆபிஸ்ல இருக்கும் போது ரஹா ஃபோன் பண்ணாலே வேலை இருக்குனு எடுத்து பேச மாட்டேன். நீ என்ன ஜூஜூப்பி” என நக்கலாய் சிரித்துக் கொண்டே ஆஷிக் கூற,

வாணியின் கண்ணில் நீர் தேங்க,
“சரி நீ ஒன்னும் என் கிட்ட பேச வேண்டாம்” என ஃபோனை வைத்து விட்டாள்.

ஆஷிக் பேசியது நிதர்சனமும் கூட… எனினும் அவன் விளையாட்டாய் தான் கூறினான். ஆனால் இவளிருக்கும் மனநிலையில் அனைத்துமே இவளுக்கு தவறாய் பட்டது.

கண்களை துடைத்துக் கொண்டே வாணி ரெஸ்ட் ரூம் செல்ல, அதை பார்த்த வேணி அவளின் பின்னோடு சென்றாள்.

அங்கே வாணி கண்ணீரில் கரைவதைப் பார்த்தவள், “என்னடா வாணி. என்னாச்சு? எதுக்கு இந்த அழுகை?” என வேணி கேட்ட நொடி,

அவளை அணைத்து கதறவாரம்பித்தாள்.

“ஆஷிக் கூட என்னை க்ளோஸ் ஃப்ரண்டா நினைக்கல.” என தேம்பிக் கொண்டே அவள் கூற,

ஆஷிக் கூட என்ற வார்த்தையில் கோபம் கொண்ட வேணி, “நாங்க உன்னை க்ளோஸ் ஃப்ரண்டா நினைக்கலைனு சொன்னோமா? நீயா கற்பனை பண்ணிக்கிட்டா” என வேணி பேசிக் கொண்டிருந்த நேரம் வாணியின் கைபேசி அலறியது. ஆஷிக் தான் அழைத்திருந்தான் அவளுக்கு.

வாணி அழைப்பை ஏற்றதும்,
“ஹே கேபி லீட் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன். ஈவ்னிங் மீட் பண்ணலாம்” என கூறினான் ஆஷிக்.

“ஹ்ம்ம் சரி” என்று வாணி உரைத்ததும்

“அழுதியா கேபி?” எனக் கேட்டான் ஆஷிக்.

“ஆமா” என அழுகை தொனியிலேயே அவள் கூற,

“லூசா நீ? எதுக்கு இப்ப அழுத? நான் வர மாட்டேனு சொன்னதுக்கா? ஈவ்னிங் வா உன்னை கவனிச்சிக்கிறேன்” எனக் கோபத்துடனே மொழிந்து கைபேசியை வைத்துவிட்டான்.

வேணியிடம் தனியாய் பேச வேண்டுமென ஆபிஸ் உணவு விடுதிக்கு வரச் சொன்னான் இளா.

தற்போழுது அவனிடம் பேச நேரமில்லை எனவும் சாயங்காலம் ஃபோரம் மாலில் பேசலாமெனக் கூறினாள் வேணி.

மாலை ஃபோரம் மாலில் கேபி ஆஷிக் கீழ்தளத்திலுள்ள காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருக்க, இளா வேணி மேல் தளத்திலுள்ள ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர்.

“எதுக்கு அழுத கேபி?” அவனின் இக்கேள்வியிலேயே கண்களில் நீர் கட்டிக்கொள்ள,

திங்கட்கிழமை முதல் இன்று அவனுடன் கைபேசியில் பேசியது வரை கூறி முடித்தாள் வாணி.

“அறிவிருக்கா உனக்கு? உன்னை ஃபரண்டா நினைக்காம தான் இப்படி இருக்கிற வேலைய விட்டுட்டு என் லீட் கிட்ட கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கேனா?” என கோபமாய் ஆஷிக் கேட்க,

“அப்படி இல்ல ஆஷிக்” என வாணி ஏதோ கூற வர,

“பேசாத நீ” என அடிக்குரலில் சீறினான்.

“உன்னை கேபினு கூப்பிட்டா அதுப்போலவே சின்னப்பிள்ளத்தனமா நடந்துக்கிற நீ. உன் ஃப்ரண்ட்ஸ் சைட் என்ன நடந்துச்சுனு முதல்ல காது குடுத்து கேட்டியா நீ? எதனால அவங்க உன் கிட்ட சொல்லலைனு தெரியுமா உனக்கு?” என அவன் கேட்க,

இல்லையென இடம்வலமாய் தலையை ஆட்டினாள்.

“அப்பறம் நீயா நீங்க என்னை ஃப்ரண்டா நினைக்கலைனு சொல்லி அழுதீனா அது உன்னுடைய முட்டாள்தனம் தானே” என்றவன்,

“எனக்கு அம்மு அண்ட் மஹா சைட் என்ன நடந்துச்சுனு தெரியாது. ஸ்டில் அவங்க சைட் நியாயத்தை கேட்காமல் நீ முடிவு செஞ்சது தப்பு. முதல்ல இப்படி முகத்தை தூக்கி வச்சிக்காம அவங்க கிட்ட போய் மனசு விட்டு பேசு.” என்றதும் சரியென தலையாட்டினாள் வாணி.

“என்ன அமைதியாயிட்ட? மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு” என ஆஷிக் அவளை பேச சொல்லி உந்த,

“நிஜமாவே உங்க எல்லாருக்கும் என்னைய பிடிக்குமாடா?” எனக் கேட்டாள் வாணி.
அவள் மனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை எவ்வாறு இம்மூவரின் அன்பால் வெளியேறி இயல்பாய் அவளை இருக்க வைத்ததோ, அதுவே இவர்களின் இச்செயலால் மீண்டும் அவளின் மனதினில் உட்புகுந்து அவளை கரையச் செய்திருந்தது.

அவளின் கேள்வியில் தன்னருகே இருந்த பையை எடுத்து அவளை அடிப்பதுப் போல் கொண்டுச் சென்றவன்,

“மண்டைலயே போடப்போறேன் பாரு உன்னை” என்றான்.

அவளின் கேள்வியிலேயே அவளின் தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தவன்,

“யாரும் யாருக்கும் குறைஞ்சவங்களும் இல்ல. மேலானவங்களும் இல்ல கேபி. கடவுளின் பார்வைல எல்லாரும் ஒன்னு தான். அப்படி யாராவது உன்னை குறச்சி பேசினாங்கனா அவங்க தான் குறைவானங்கனு அர்த்தம். அதுக்கு நீ கூனிக் குறுகிப் போகத் தேவையில்லை. அப்படி ஒரு எண்ணம் உன் மனசுல வரும் போதெல்லாம் இது வரை நீ வாழ்க்கைல அச்சீவ் பண்ணதை யோசிச்சுப் பாரு. உனக்கு உன் மேலேயே கான்பிடன்ட் வரும்” என்றவன்,

“அப்புறம் எங்களுக்கு உன்னை பிடிக்குமாவா? பிடிக்காம தான் உன்னை இப்படி உட்கார வச்சி பேசிட்டு இருக்கேனா… இல்ல அம்முவும் மஹாவும் பிடிக்காம தான் இரண்டுநாளா உன்னை சமாதானம் செய்ய முயற்சி செய்றாங்களா? புரிஞ்சிக்கோடா கேபி”

“ரஹா வேற ஏதோ அர்ஜண்டா பேசனும்னு சொன்னா. உன்னை மீட் பண்ண போறேன் அப்பறம் வந்து பேசறேனு சொல்லிட்டேன்” என்றான் ஆஷிக்.

“அச்சோ எதாவது தப்பா நினைச்சிக்க போறாடா… முதல்ல அவக்கிட்ட பேசு” என வாணி கூற,

“அதெல்லாம் அவ ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டா. வயசுல சின்ன பொண்ணா இருந்தாலும் செம்ம மெச்சூரிட்டி அவளுக்கு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட என் தேவதை அவ” என முகம் பூரிப்பில் மின்ன ஆஷிக் கூற,

“ஹ்ம்ம ரஹாவ பத்தி பேசினாலே மூஞ்சில பல்ப் எறியுதே. அவளை உன் காதல்ல விழவைகிறேனு சொல்லி, நீ அவ காதல்ல இப்படி தொப்புகடீர்னு விழுந்துட்டியே ஆஷிக்கு” என வராதக் கண்ணீரை துடைத்துக் கொண்டு வாணி கூற, வாய் விட்டு சிரித்தனர் இருவரும்.

அங்கே அதே ஃபோரம் மாலில் மேல் தளத்திலுள்ள உணவிடத்தில் இளாவும் வேணியும் பேசிக் கொண்டிருந்தனர்.

“உனக்கும் வாணிக்கும் என்னப் பிரச்சனை அம்ஸ்?” என இளா கேட்க,

“அது ஒன்னுமில்ல இளா. சின்னப் பிரச்சனை தான் நாங்க பேசி சால்வ் பண்ணிடுவோம்” என்றாள் வேணி.

“உன் பிரச்சனைய என்கிட்ட ஷேர் செஞ்சிக்கிற அளவுக்கூட உன் மனசுல நான் இல்லையா அம்ஸ்” என வேதனைக் குரலில் இளா கேட்க,

“லூசு மாதிரி பேசாதடா. என் பிரச்சனைய உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட நான் சொல்ல போறேன்” எனக் கோபமாய் கூறியவள்,

“இதை சொன்னா நீ வருத்தப்படுவியேனு தான்டா சொல்லலை” என்றாள் வேணி.

“அப்படி என்ன பிரச்சனை?” அவன் மீண்டும் கேட்க, இன்று வரை நடந்ததை கூறினாள் வேணி.

“ஓ இது தான் பிரச்சனையா… நம்ம எங்கேஜ்மெண்ட் வச்சி இவ்ளோ பிரச்சனை ஆயிடுச்சா” என அவன் கவலையாய் கேட்க,

“பாத்தியா… இதுக்கு தான் நான் சொல்லல” என்றாள் வேணி.

“சரி இப்ப வாணி எங்க?” என்று கேட்டவன், அவள் கூறியதும் ஆஷிக் வாணி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

அங்கே வாணி ரஹானாவுடன் போனை ஸ்பீக்கரில் போட்டு ஆஷிக்கை வம்பிழுத்து ரஹானாவிடம் போட்டுக் கொடுத்து என கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளை அவ்வாறு கண்டதும் சற்று நிம்மதியடைந்தனர் இளாவும் வேணியும். பார்வையாலேயே ஆஷிக்கிற்கு நன்றி உரைத்தனர்.

பின்பு அவர்களுடன் அமர்ந்து இவர்களின் நிச்சயம் நிகழ்ந்த கதையை உரைத்தான் இளா. வேணி தான் வாணியிடம் கூறாததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.

பின் மஹா மதியுடனான நிச்சயம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டதென உரைத்தாள் வேணி.

வாணி இப்பொழுது மிகவும் தெளிந்திருந்தாள். அவளின் கவலைகள் மன சஞ்சலங்கள் அனைத்தும் இருந்த இடம் காணாமல் போயிற்று.

“இவ்வளவு அலப்பறை பண்ணி எங்களையெல்லாம் கதி கலங்க வச்ச வாணிக்கு பனிஷ்மெண்ட் தர வேண்டாமா?” என இளா வினவ,

“அய்யோ அண்ணா…. ஏன் இப்படி?” என அலறினாள் வாணி.

அது வரை இளா என பெயர் சொல்லி அழைத்தவள், தோழியின் கணவராகப் போகிறவரென்றதும் தன் சகோதரனாய் எண்ணி விளிக்கவாரம்பித்தாள் வாணி.

“சின்ன பனிஷ்மெண்ட் தான் வாணி. எங்க எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்துடு” என இளா கூறியதும்,

“ஹே சூப்பர் சூப்பர்… செம்ம இளா” எனக் கூறி இளாவுடன் கைகுலுக்கினாள் வேணி.

“சரி எங்கே எப்போ சொல்லுங்க” என வாணி கேட்க,

“வாணி காஞ்சுரிங்க் படம் போகலாம்டி. சூப்பரா இருக்காம். அதுவும் நைட் டைம்ல தியேட்டர்ல பேய் படம் பார்க்கனும்னு எனக்கு ரொம்ப ஆசைடி” என வேணி கூற,

“நைட் டைம்மாஆஆ… நோஓஓ… சேப் கிடையாது. பசங்களே கூட இருந்தாலும் நைட் டைம் மூவிஸ் நாட் அலௌடு.” என வாணி கறாராய் கூற,

“நைட் 9.30குள்ள வீட்டுக்கு வந்துட்டா ஓகேவா வாணி” என கேட்டான் இளா.

“ஹ்ம்ம் ஓகே தான் அண்ணா”

“இங்க ஃபோரம் மால்லயே கமிங் வீக்கெண்ட் சண்டே ஈவனிங் 7 க்ளாக் ஷோ இருக்கு. ஒன்பது மணிக்கு முடியும் ஒன்பதரைக்கு நீங்க வீட்டுக்குப் போய்டலாம்” என இளா தன் கைபேசியை பார்த்து ஐடியா கொடுக்க,

“வாவ் செம்ம. சோ ஸ்வீட் இளா” என ஆனந்தக் களிப்பில் இளாவின் கன்னத்தை வேணி கிள்ள,

“மச்சி இன்னிக்கு உன் காட்டுல மழை தான் போ” என எவருக்கும் கேட்காத வண்ணம் இளா பக்கமாய் சாய்ந்து மென்குரலில் கேலி செய்தான் ஆஷிக்.

“டேய் அவளே இப்ப தான் ஒரு ஃபார்ம்க்கு வந்திருக்கா. இடையில புகுந்து கெடுத்துடாதடா” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இளா கூற,
வாய்விட்டு சிரித்தான் ஆஷிக்.

“அங்கே நீங்க இரண்டு பேரு மட்டும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள் வாணி.

“என்னால வர முடியாது கேபி. அததான் இளாக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். நான் ஊருக்குப் போறேன்” என்றான் ஆஷிக்.

“உண்மையா நீங்க எல்லாரும் தான் எனக்கு ட்ரீட் வைக்கனும். உங்க எல்லாருக்கும் தான் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு” என வாணி கூற,

“அதெல்லாம் கொடுக்க வேண்டிய நேரத்துல நாங்க கொடுப்போம்” என்றான் ஆஷிக்.

“ஹே ஆஷிக் உனக்குமா? சொல்லவேயில்ல” ஆச்சரியமாய் கேட்டாள் வேணி.

“டேய் மச்சி சொல்லவேயில்ல?” எனக் கேட்டான் இளா.


இருவரும் ஒரு சேரக் கேட்க, தன் நிச்சயதார்த்தக் கதையை கூறினான் ஆஷிக்.

ஒருவாராய் வரும் ஞாயிறு அனைவரும் படம் பார்க்க செல்லலாமென முடிவு செய்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினர் அனைவரும்.

வீட்டை அடைந்ததும் வாணி, மஹா மற்றும் வேணியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

அடுத்து வந்த நாட்கள் இயல்பாய் சென்றாலும் தினமும் தன்னிடம் அவள் பேச வேண்டுமென்ற இளாவின் ஆசையை நிறைவேற்றத் தொடங்கியிருந்தாள் வேணி.

காலை வணக்கம் குறுஞ்செய்தி அனுப்புவது தொடங்கி இரவுணவு உண்டுவிட்டானா என்பது வரை அவனுடன் தொடர்பிலேயே இருப்பதுப் போல் பார்த்துக் கொண்டாள் வேணி.

ஆனால் இவையெல்லாம் இளாவை தன்னவனாய் தான் உணர்ந்ததால் தான் செய்கிறோமென புரியவில்லை வேணிக்கு.

ஞாயிறு இரவு 7 மணிக்கு ஃபோரம் மாலிலுள்ள பிவிஆர் சினிமாஸ்க்குள் நுழைந்தனர் இளா,வேணி மற்றும் வாணி.

மதியும் மஹாவும் அந்த வாரயிறுதி நாளில் தங்களின் நிச்சயத்திற்காக சென்னைக்கு செல்ல, வாணி வேணி மற்றும் இளா கான்சூரிங்க் படம் பார்க்கவென வந்திருந்தனர் வேணியின் பேய் படம் பார்க்கும் ஆசையினால்.

வேணி நடுவே உட்கார, அவளின் இரு பக்கமும் வாணி மற்றும் இளா அமர்ந்திருந்தனர்.

வேணி தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, “படம் ஆரம்பிக்கப் போகுது. என்னடி போன்ல பார்த்துட்டு இருக்க?” என்றுக் கேட்டாள் வாணி.

“நமக்கு தான் அவங்க பேசுற இங்கிலீஷே புரியாதே…. அப்புறம் படம் புரியலைனா என்ன பண்றது? அதான் படத்தோட கதைய ஒரு தடவை படிச்சி வச்சிக்கலாம்னு கூகுள் பண்றேன்” என்றுரைத்தாள் வேணி.

“ஹே சூப்பர்டி. நான் கூட இப்படி இங்கிலீஷ் படத்துல வந்து உட்கார வச்சிட்டியே. புரியாம அதுல என்னத்த பார்க்கிறதுனு நினைச்சேன். நல்ல ஐடியாடி” என்ற வாணி, வேணியுடன் சேர்ந்து அவளின் கைபேசியில் கதை படித்தாள்.

“அடப்பக்கிகளா…. படம் பாக்க முன்னாடியே கதை தெரிஞ்சா அதுல என்ன சுவாரசியம் இருக்கு… இதுக்கு எதுக்கு தியேட்டருக்கு வரணும்” எனக் கேட்டான் இளா.

“நீயெல்லாம் அடிக்கடி இங்கிலீஷ் படம் பார்க்குற ஆளு. அதனால உனக்கு எங்க கஷ்டம் புரியாது” என இளாவிற்கு பதிலுரைத்தாள் வேணி.

படம் திரையில் போடத் தொடங்கியதும் திரையை கவனிக்கத் தொடங்கினர் மூவரும்.

“ஹே இங்கிலீஷ்ல டைட்டில் போடுறான்டி. அப்பாடா தப்பிச்சோம்” என கையிலடித்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.
இவர்களைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான் இளா.

“நீங்களாம் ஐடில வேலை செய்ற சாப்ட்வேர் இன்ஜினியர்னு வெளில சொல்லிடாதீங்க” என மெல்லமாய் இவர்களுக்கு கேட்குமாறு இளாக் கூற,

“டேய் இவங்க நம்ம பேசுற மாதிரியாடா இங்கிலீஷ் பேசுறாங்க. நம்ம நாட்டு இங்கிலீஷ் எங்களுக்கு நல்லா புரியும். அவங்க தான் நம்மளுக்கு புரியாத மாதிரி பேசுறாங்க. சோ ஃபால்ட் எங்க மேல இல்ல. அவங்க மேல தான்” என நாட்டு இங்கிலீஷ்க்கு வக்காளத்து வாங்கினாள் வேணி.

“சரி சரி படம் போட்டாச்சு பாரு. அப்புறம் வக்காளத்து வாங்கலாம் உன் நாட்டு இங்கிலீஷ்க்கு” என்றான் இளா.

குண்டூசி போட்டாலும் சத்தம் வரும் அமைதியான சூழலில் படம் ஆரம்பித்த சில நொடியிலேயே வாணி மற்றும் வேணிக்கு பயம் கவ்விக் கொள்ள, பயம் தெரியாதிருக்க இருவரும் படத்தில் வரும் திகில் காட்சிகளையும் கிண்டலடித்துச் சிரித்துப் பேசியவாறு பார்த்துக் கொண்டிருந்த சில நிமடங்களில் கேட்டது அந்தக் குரல்.

“எக்ஸ்க்யூஸ் மீ. கேன் யூ பிளீஸ் பீ சைலண்ட்” எனக் கோபமாய் காட்டமாய் இவர்களின் முன் இருக்கையிலிருந்த ஒருவன் வாணியையும் வேணியையும் பார்த்துக் கூற,

“எவ அவ?” என்பதைப் போல் அவனை நோக்கியவர்கள்,

“சாரி” எனக்கூறி கப் சிப் என வாயை மூடிக் கொண்டனர் இருவரும்.
இவர்களை பார்த்து வாய் மூடி சிரித்தான் இளா.

அவனை முறைத்த வேணி அவனின் திருகிய மீசையை இவள் லேசாய் திருகி இழுக்க, ஆ வென மெலிதாய் அலறியவன் பட்டென அவள் கைகளில் ஒன்று வைத்தான்.

கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாளவள். தன்னவளின் முகத் திருப்பலை காணத் தாளவில்லை அவனுக்கு. அவளின் தாடையை பிடித்து அவன் திருப்ப, மீண்டும் திரும்பிக் கொண்டாளவள்.

ரசனையான அவள் செயலில் கோபம் கொண்ட அவனின் மீதே கோபம் வந்தது அவனுக்கு.

அவளின் வலக்கையை பிடித்தவன் தானே தன் மீசையினருகே அவளின் கையைக் கொண்டுச் செல்ல, சட்டென அவன் பக்கம் திரும்பியவள் முகம் மலர சிரித்து தானே மென்மையாய் அவனின் மீசையை முறுக்கி விட்டாள்.

அவனின் இதயத்தை மயிலறகால் வருடிய இதம் பரவ, இன்பமாய் சுகித்து அழகாய் சிரித்தானவன்.

“அச்சோ இந்த மீசைல செம்ம அழகுடா உன் சிரிப்பு” என எப்போதும் போல் வேணிக் கூற, இப்பொழுது வெட்கச் சிரிப்பு அவன் முகத்தில்.

தன்னவள் ரசிக்கிறாளே தன்னை.
அருவியின் சாரல் அவனின் மனதில். அவனின் இதயம் பாகாய் உருகி வழிந்தோடியது அவளிடத்தில்.

“என்ன நடக்குது இங்க?” என வேணியின் கையை சுரண்டினாள் வாணி.

“ஹ்ம்ம் பேய் நடக்குது” என்ற வேணி, “சைலண்ட்டா இருடி திரும்பவும் பேட்ட ராப் மாதிரி ஸ்டாப் இட்னு கூவப்போறான் அவன்” என்றாள்.

அதன்பின் அமைதியாய் படம் பார்த்தனர் மூவரும்.

இப்பொழுது பயத்தை போக்கிக் கொள்ளவென இருவரும் பேசிக்கொள்ளவும் முடியாத நிலை.

திரையில் திகில்காட்சிக்கான ஒலி வரும் போதெல்லாம் வாணி வேணியின் தோளில் முகம் புதைக்க, வேணி இளாவின் கைகளைப் பற்றி தோளில் முகம் புதைத்தாள்.

இளா அவளின் பயத்தை, அப்பயத்தால் விளைந்த அவள் முகப்பாவங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.

ஒருவழியாய் பயந்து பயந்து இதய துடிப்பு தாறுமாறாய் எகிறித் துடித்து பார்த்திருந்த அப்பேய் படம் நிறைவடைய, இரவுணவை அங்கேயே முடித்து விட்டு கிளம்பினர் மூவரும்.

“நாளைலருந்து எங்களுக்கு ஷிப்ட் ஸ்டார்ட் ஆகுது இளா” என்றாள் வேணி.

“என்ன ஷிப்ட் நாளைக்கு உங்களுக்கு” எனக் கேட்டான் இளா

“எனக்கு செகண்ட் ஷிப்ட் மதியம் ஒன்றைல இருந்து நைட் லெவன் வரைக்கும். வாணிக்கு மார்னிங் ஷிப்ட் காலைல ஆறரைல இருந்து நாலு மணி வரைக்கும். இந்த ப்ராஜக்ட் ரொடேஷன் ஷிப்ட் இளா. வாரவாரம் ஷிப்ட் மாறும். இது ரெண்டு இல்லாம நைட் ஷிப்ட் வேற. சோ டோட்டலா மூனு ஷிப்ட். ஷிப்ட்னால ஹெல்த் இஸ்யூஸ் வந்துடுமோனு பயமாயிருக்கு இளா” என வேணி கவலையாய் கூற,

“நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி எந்திருச்சு ஷிப்ட் போனீங்கனா. ஒன்னும் ஆகாது” எனக் கூறியவன்,

“அங்க நைட் ஷிப்ட்லாம் ஒன்னும் பயமில்லை. நிறைய பேரு ஷிப்ட்ல இருக்காங்க. சோ பயப்படாம போங்க” என்றுரைத்தான்.

வேணிக்கு இந்த சுழற்சி முறை ஷிப்ட் தன் உடலை பாதிப்படைய செய்திடுமோ என்கின்ற ஐயத்தை ஏற்படுத்த, வாணிக்கோ அனைத்து ஷிப்ட்டிலும் எவ்வாறு தன் பணியை சரிவர செய்ய போகிறோமென்ற எண்ணமே முதன்மையாய் இருக்க, உடல்நலம் பற்றிய ஐயம் இரண்டாம் பட்சமாகியது.

இளா வேணியிடம் பேசவென வாசலிலேயே நிற்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து வீட்டிற்குள் சென்றாள் வாணி.

“அப்ப நாளைக்கு மதியம் என் கூட சாப்பிட வரமாட்டியா அம்ஸ்” என அவன் கவலையாய் கேட்க,

அவனின் குரலிலுள்ள வருத்தத்தை உணர்ந்தவள்,

“இல்ல நான் அங்க வந்து தான் சாப்பிடுவேன். கேப் ஆபிஸ் வந்ததும் உனக்கு ஃபோன் பண்றேன். கேபிடேரியா வந்துடு. ஒண்ணா சேர்ந்தே சாப்பிடலாம்” என்றாள் வேணி.

அவனின் வருத்தம் தன்னை ஏன் வருந்த செய்கிறது? உணரவில்லை பெண்ணவள்.

“தேங்க்ஸ் அம்ஸ். சரி நான் கிளம்புறேன்” என அவளை விட்டு போக மனமில்லாது அவன் போக,

“இளா இளா” என அவன் பின்னே சென்றாள் வேணி,

“என்ன அம்ஸ்?” என்றவாறு அவன் திரும்பவும் இவள் அவனின் மீசையை இழுத்துவிட்டு ஒரே ஓட்டமாய் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் போட்டாள் வேணி.

வலியின் சுகம் உணர்ந்தான் அவன். உணர்த்திட்டாள் அவள். சுகவேதனை அவனுக்கு. அவனை ஸ்பரிசித்த சுகம் மட்டுமே அவளுக்கு.

“நாளைக்கு ஆபிஸ் வரவல. அப்ப கவனிச்சிக்கிறேன் உன்னை” என இளா கூறியது காற்றோடு கலந்து அவள் காதில் கேட்க,

“போடா நாளைக்கு நீ இப்படி ஆபிஸ்க்கு வச்சிட்டு வர மாட்ட… அதான் என் ஆசை தீர இன்னிக்கே இழுத்துட்டேன்” என கதவினிடுக்கில் முகத்தை மட்டும் வெளியில் நீட்டி கண் சிமிட்டி அவள் கூற,

அவளையும் அவளின் வார்த்தையையும் வெகுவாய் ரசித்தவன், இனி இவ்வாறு தான் மீசை வைத்துக் கொள்ள வேண்டுமென முடிவு செய்துக் கொண்டான்.

“பை அம்ஸ். குட் நைட்” என்றுரைத்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.

இளா அவளை தன் மனதில் உணரத் தொடங்கியிருந்த நிலையில், காதலாய் அவளை தனக்குள் அவன் பதிந்துவிட்ட நிலையில், அவளின் அருகாமையை வெகுவாய் ரசித்தானவன். ஆனால் வேணியோ இவை எதுவும் அறியாது… தான்  அவனை தன்னவனாய் உணர்வதையும் அறியாது அவனிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

காதலுற்றவர்களாய் அவனையும் அவளையும் அவளின் அடிமனம் உணர்வதை அறியாத பெண்ணுள்ளமோ அவளையும் மீறி அவனை ரசித்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அவளின் நேசத்தை
எப்பொழுது தான் உணர்வாளோ பேதையவளும்??

— தொடரும்