அவ(ன்)ள் 4

பகுதி 4

அஞ்சலியின்  மென் இதழ்கள் சத்தமின்றி உச்சரித்த பெயருக்கு சொந்தமானவளோ தமையனின் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். 

கிருஷ்ணாவை விட்டு வேகமாக சென்று பிருந்தாவின் முன் நின்ற அஞ்சலி  “ஹேய் நீ… பிந்து பிந்து அப்பளம்… தானே…”   என்று கேட்டதும்

அஞ்சலியை கண்டுக் கொண்ட பிருந்தாவின் கண்கள் பளிச்சிட “ஹேய் அஞ்சு நீ.. நீ … இங்கதான் இருக்கியா…” என்று பல வருடங்கள் கழித்து சந்திக்கும் தன் தோழியை கட்டிக் கொண்டாள் பிருந்தா…

“ஆமா பிந்து… நான் இங்க தான் வொர்க் பண்றேன்… நீ என்ன பண்ற…? எப்படி இருக்க…?  இங்க என்ன பண்ற?” என்று அடுக்கடுக்காக பல கேள்விகளுடன் பிருந்தாவை  விசாரித்தாள் அஞ்சலி.

தன் வாழ்க்கையை நினைத்ததும் உதட்டில் ஊடுருவிய வறட்டு புன்னகையுடன் “நல்லா இருக்கேன் அஞ்சு… அம்மாவுக்கு தான்  உடம்புக்கு முடியலை …   இங்க தான் சேர்த்து இருக்கேன்…”  என்று வருத்தமாக கூறியவள் “நீ எப்படி இருக்க அஞ்சு?…” என்றாள்.

அதற்குள் அவர்களை சமீபித்திருந்த கிருஷ்ணா இருவரும் பேசுவதை பார்த்து விழிகள் வினா தொடுக்க 

“அஞ்சலி உனக்கு இவங்கள முன்னாடியே தெரியுமா?” 

அஞ்சலியின் இதழ்கள் சிரிப்பில் நெளிய  “இவ என் ஸ்கூல் மேட் கிருஷ்ணா… ப்ளஸ் டூ வரையும் ஒன்னாதான் படிச்சோம்…. இடையில் சில வருஷங்கள் காண்டாக்ட்ல  இல்ல” என்று அவனிடம் தங்களை பற்றி விவரித்தவள் 

“இன்னைக்கு உன்னை இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல பிந்து” என்றாள்  வியப்பும், சிரிப்புமாய்…

“ஓகே.. ஓகே… பிரெண்டை பார்த்ததும் எக்ஸைட்டடா  இருக்கன்னு  தெரியுது… பாவம் அவங்களையும் கொஞ்சம் பேச விடு அஞ்சலி…” என்று தோழியை கிண்டல் செய்தவன்… “பேசிட்டு இருங்க  நான் பேஷண்டை பார்த்துட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டு அறையினுள் சென்றான்.

பிருந்தாவின் தாய் மகேஷ்வரியின் ரிப்போர்ட்டுகளை முழவதுமாக பார்த்தவன் செவிலியரிடம்  சில மருத்துவ குறிப்புக்களை மாற்றி கொடுத்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.

அதற்குள் பிருந்தா தாயின் நிலையை பற்றி அஞ்சலியிடம்  கூறியிருக்க கவலை தோய்ந்த முகத்துடன் “ஆண்டி இப்போ எப்படி இருக்காங்க கிருஷ்ணா” என்றாள்…

தான் கூறப் போகும் வார்த்தைக்காக தவிப்புடன் காத்திருக்கும் பிருந்தாவின் கண்களை பார்த்த கிருஷ்ணாவிற்கு மனம் ஏனோ பிசைந்தது… கடைசியில் தான் கூற வந்த வார்த்தைகளை விடுத்து 

“நத்திங் டு வொரி அஞ்சலி… அவங்க குணமாகிடுவாங்க”…  என்று அவளுக்கு ஆறுதலை அளிக்கும் நல்வார்த்தையை உதிர்த்துவிட்டு அடுத்த பேஷண்டை பார்க்க சென்றான்…

“பயப்படாத பிந்து கிருஷ்ணா பார்த்துப்பான்… அவன் இதுல பேமஸ் சர்ஜன்” என்று அவளுக்கு தைரியத்தை கொடுத்த அஞ்சலி  “சரி டா… நானும் டியூட்டிக்கு கிளம்புறேன்…  ப்ரி டைம்ல உன்னை வந்து பாக்குறேன்…” என்று தன் பணியை தொடர சென்றாள்.

…..

இன்று பிருந்தாவின் கண்களில் தெரிந்த தவிப்பு கிருஷ்ணாவின் இதயத்தில் சிறு பாதிப்பை நிகழ்த்தி இருக்க கிருஷ்ணாவின் கை உணவினை அலைந்தது.

‘எல்லோர்கிட்டயும் பேஷண்டோட உண்மைய நிலையை சொல்றா மாதிரி ஏன் பிருந்தா கிட்ட என்னால சொல்ல முடியல??.. அவங்க கண்ணுல தெரிஞ்ச தவிப்புல ஏன் உண்மைய சொல்லாம மாத்தி சொல்லிட்டு வந்தேன்…?’ என்று சுயசிந்தனையில் இருந்தான்.

“கிருஷ்ணா… என்னப்பா சாப்பிடாமா எங்கேயோ பார்த்துக்கிட்டு இருக்க…?” என்று அருகில் வந்து சட்னியை பறிமாறினார் செண்பகம்.

“இல்லம்மா… போதும்”

“என்னப்பா சரியாவே சாப்பிடல?”

“ஒன்னுமில்லமா… ஒரு பேஷண்டை பத்தி நினைச்சிட்டு இருந்தேன்….” என்னும் மகனை ஆச்சர்யமாய் பார்த்த செண்பகம் 

“என்ன கிருஷ்ணா இது புதுசா!… பேஷண்டை பத்தியெல்லாம் வீட்டுல பேசுற! எப்பவும் இப்படியெல்லாம் யோசிக்க மாட்டியே?” என்றார் மகனின் போக்கு புரியாது.

“என் பிரெண்டோட அம்மா மா… அவங்க கண்டிஷன் கொஞ்சம் சீரியஸ்… அதான் எப்படி அவங்ககிட்ட சொல்றதுன்னு  யோசனைப் பண்ணிட்டு இருந்தேன்…” என்றான் தாயிடம் மறைக்காது.

மகேஷ்வரிக்காக வருத்தப்பட்ட செண்பகம்… “நீ அவங்கள காப்பத்திடுவ கிருஷ்ணா… உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… எதையும் யோசிக்காம சாப்பிடுப்பா…” என்றார் மகன் மேல் கொண்ட அக்கறையில்

 உண்டு முடித்து அறைக்கு திரும்பியவனை நிறுத்திய செண்பகம்… 

“கிருஷ்ணா நாளைக்கு உன் மாமா வர்றார்”  என்றார்.

“என்னம்மா திடீர்னு?”

“நீ கல்யாணத்துக்கு சரின்னு சொன்னல்ல  அதான் லட்டு ஜாதகத்தை கொண்டு வர சொன்னேன்”.

“அதுக்கு எதுக்கும்மா லட்டுவோட ஜாதகம்…?”

“கிருஷ்ணா புரியாமத்தான் கேக்குறியா?” என்ற செண்பகம் மகனின் கேள்வியில் கலவரமானார்

“சத்தியமா புரியலமா… அதான் கேக்குறேன்” என்றான் கிருஷ்ணா அமைதியின் மறு உருவமாய்

லட்டு என்ற செல்ல பெயரை விடுத்து “அஷ்வினியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தான் கிருஷ்ணா” என்றவரின்   வார்த்தைகள் ஒன்றோடுன்று  தந்தியடித்தது.

தாயின் முகம் கலக்கமாவதை பார்த்து அருகில் வந்த கிருஷ்ணா அவரை அழைத்து வந்து நீள் இருக்கையில் அமரவைத்து அன்னையின் கரங்களை பற்றிக் கொண்டான்.

“அம்மா… சொல்றதை கோவப்படாம பொறுமையா கேளுங்க… டென்ஷன் ஆகக்கூடாது” என்றதும் மகனின் செய்கைகளில் அவருக்கு இதயம் தாளம் தப்பி அடித்து கொண்டது ….

“மாமாவுக்கு தான் தெரியல…. உங்களுக்குமா  தெரியல… லட்டு சின்னப்பொண்ணு மா… படிக்கிற வயசு… இப்போ போய் கல்யாணம் குடும்பம்னு அவ லைப்பை ஸ்பாயில் பண்ண பாக்குறிங்க?…”

“இன்பேக்ட் எனக்கு  லட்டுவை அந்த மாதிரி ஒரு எண்ணத்துல பாக்கவே முடியாது… என்னைக்குமே அஷ்வினி எனக்கு குழந்தை மாதிரி தான்…” என்று தன்மையாகவே தாய்க்கு எடுத்து கூற

“என்ன கிருஷ்ணா மாமா எவ்வளவு. ஆசையா இருக்காரு தெரியுமா?” என்றார் உள்சென்ற குரலில்.

“அவர் ஆசைக்கு எல்லாம் இந்த கல்யாணம் நடக்காதும்மா…  லட்டுக்கு இன்னும் பதினெட்டு  கூட முடியல அதுக்குள்ள கல்யாணத்துக்கு அவசரப்படுறிங்க…”

“சட்டமே இருக்குமா பெண்ணோட கல்யணா வயசு 21 ன்னு… இதுல நான் டாக்டர் வேற, தூக்கி குடும்பமா உள்ள வச்சிடுவாங்க” என்று சிரித்தபடியே அன்னைக்கு விளக்கம் அளித்தவன் அறைக்கு சென்று விட கவலையுடன் கணவருக்காக காத்திருந்தார் செண்பகம.

கடையை அடைத்துவிட்டு இரவு வீடு திருப்பிய சுவாமிநாதன் மனைவியின் கவலை முகம் பார்த்து என்னவென்று விசாரித்தார்”

“லட்டுவ கிருஷ்ணாவுக்கு கொடுக்க என் அண்ணன் எவ்வளவு ஆசையா இருந்தாருன்னு உங்களுக்கே தெரியுமில்லிங்க…?”

“ம் தெரியும்  செண்பகம்… இப்போ  என்ன நடந்தது அதை சொல்லு முதல்ல”

“கிருஷ்ணா… அஷ்வினிய கட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்று வருத்தமாய் கூறிட

“செண்பகம் அவ படிச்ச புள்ள அவனுக்கு தெரியாதது இல்ல… அவன் மனசுக்கு எது புடுச்சிருக்கோ அதைதான் செய்வான் கட்டயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சா அது நமக்குத்தான் சங்கடமா முடியும்… அவனுக்கு ஏத்தா மாதிரி வேற பொண்ணை பாரு…”   என்று மனைவிக்கு  புத்திமதியை கூறிவர் இரவு உணவை முடித்து உறங்க சென்று விட்டார்.

செண்பகத்துக்கு தான் அண்ணனுக்கு என்ன பதிலை கூறுவது என  வருத்தமாய் இருந்தது.

….

“அக்கா நீ வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கா… அம்மாவை நான் பாத்துக்குறேன்”. என்று பிருந்தாவை வீட்டிற்கு அனுப்ப முற்பட்டான் விஷ்ணு… 

“பரவாயில்லை விஷ்ணு உனக்கு தான் காலேஜ் இருக்குல்ல அம்மாவை நான் பாத்துக்குறேன் டா” என்று பிருந்தா மறுத்தாள்.

“நான் எங்க எச் ஓடிக்கிட்ட பேசிட்டேன் நம்ம பேமிலி சிச்சிவேஷன் அவருக்கு நல்லா தெரியும்… சார் அட்டனெஸ் பாத்துக்குறேன்னு சொல்லிட்டார் நீ போ கா… வந்ததுல இருந்து நீதான் இங்க இருக்க… இன்னைக்கு நான் பார்த்துக்கிறேன்”  என்றான் அவளுக்கு ஆதரவாக

பிருந்தாவிற்கும் பணம் புரட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், தன் கல்யாணத்திற்கு போட்ட நகைகளை விற்று விடுவது என்று முடிவு செய்தவள் “சரி விஷ்ணு நான் வீட்டுக்கு போயிட்டு வறேன் எனக்கும் வெளியே வேலை இருக்கு… நீ அம்மாவை பாத்துக்க…” என்று கூறிவிட்டு புறப்பட்டாள்.

எப்போழுதும் போல் இன்றும் இதயநோய் பிரிவு நோயாளிகளை பரிசோதனை செய்ய ரவுண்ட்ஸ் வந்த கிருஷ்ணாவிற்கு அங்கு விஷ்ணுவை பார்த்ததும் தன்னிச்சையாக விழிகள் பிருந்தாவை தேடியது…  இதுநாள் வரை அவளை பார்த்து பழக்கப்பட்ட கண்கள் அவள் இல்லாது போனதால் ஏமாற்றம் கொண்டது.

தன் விழிகளின் தேடலை உணராத கிருஷ்ணவோ… அறைக்குள் நுழைந்து மகேஸ்வரியின் ரிப்போர்ட்டுகளை சரி பார்த்து விட்டு, அங்கே நின்றிருந்த விஷ்ணுவிடம் பிருந்தா வந்ததும் தன்னை வந்து பார்க்குமாறு கூறிவிட்டு சென்றான்.

……

“என்ன கிருஷ்ணா பேசணும்னு வர சொல்லிட்டு அமைதியா இருக்க… என்ன விஷயம்? என்றாள் அவன் எதிரே அமர்ந்திருந்த அஞ்சலி

“விஷயம் கொஞ்சம் சீரியஸ்  அஞ்சலி… பிருந்தாவை வரச்சொல்லி இருக்கேன்… அவங்கிட்ட விஷயத்தை  சொல்லும் போது, நீ கூட இருந்தா அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் அதான் உன்னை வரச் சொன்னேன்” என்றான்.

“ஏன் கிருஷ்ணா ஆண்டிக்கு ஏதாவது” என்று அவள் கேட்கவும்

ம் என்று தலையாட்டிய கிருஷ்ணா “நேத்தே நீ கேட்கும் போது சொல்லி இருப்பேன் அஞ்சலி… பிருந்தாவோட கண்ணுல தெரிஞ்ச தவிப்பை பார்த்ததும் என்னால எதுவும் சொல்ல முடியல” என்றிட அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

பிருந்தாவிற்காக யோசிக்கும் இந்த கிருஷ்ணா அவளுக்கு  புதிதாக தெரிய தொண்டை குழி வரையும் வந்த வார்த்தைகள்  “மே ஐ கமின் டாக்டர்?…” என்று கதவை தட்டிய தோழியின் குரல் கேட்டு தடைபட்டு நின்றது.

“எஸ் பிருந்தா உள்ள வாங்க” என்று அவளை அழைத்து அமர  சொல்லி இருக்கையை காட்டிய கிருஷ்ணாவை பார்த்தவள்

“டாக்டர்…  வரச் சொன்னிங்களாம்… “

“ம்… ஆமா உங்களை வரச்சொல்லி இருந்தேன்…  அது வந்து… பேசனும்” 

“சொல்லுங்க டாக்டர்”.

“அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் நாளுக்கு நாள் சீரியஸ் ஆகிட்டே இருக்கு பிருந்தா.. . இன்னும் வெய்ட் பண்றது அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்…  அவங்க  ஸ்டேபிலா இருக்கும் போதே ஆப்ரேஷன் பண்ணிடறது நல்லது”  என்றான் தயக்கமாக

“என்ன சார் சொல்றிங்க” என்றவளது குரல் அழுகையுடன் ஒலித்தது.

“அழாதிங்க பிருந்தா” என்றவன் அஞ்சலிக்கு கண்ணை காட்ட சட்டென தோழியின் கரம் பற்றிய அஞ்சலி 

“பிந்து அழாத டா” என்று அவளை தோளோடு சாய்த்துக் கொண்டவள்  “கிருஷ்ணா தான் சொல்றானே பிந்து ஆப்ரேஷன் பண்ணிட்டா குணப்படுத்திடலாம்னு தைரியமா இரு டா” என்று அவளை தேற்ற முயன்றாள்.

“அப்ரேஷனே நடக்கும்மான்னு சந்தேகமா இருக்கே அஞ்சு அப்புறம் எப்படி என்னால தைரியமா இருக்க முடியும்” என்று கண்களில் நீரோ அஞ்சலியின் தோளில் சாய்ந்தாள் பிருந்தா.

“என்ன சொல்றிங்க பிருந்தா”  என்றவனின் குரல் கரிசனமாக ஒலிக்க,

“ஆமா டாக்டர் பணத்துக்கு எங்கெங்கேயோ கேட்டு பாத்துட்டேன் ஆறு லட்சத்துக்கு மேல புரட்ட முடியல எங்க சுத்தினாலும் சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பி வரும்போது  என்ன பண்றதுன்னு தெரியல”… என்று அழுபவளின் கண்ணீர் அவனை சுட்டதோ என்னவோ

“அஞ்சலி அவங்கள கூட்டிட்டு போ நான் பத்து நிமிஷத்துல வந்து பாக்குறேன்”  என்றவன்  அறையை விட்டு வெளியேறும் முன் “நாளைக்கு காலைல பத்து மணிக்கு ஆப்ரேஷன் பிருந்தா… தைரியமா இருங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.