அவ(ன்)ள் 3

பகுதி 3

மறுநாள் காலை வலுக்கட்டாயமாக தந்தையையும் தம்பியையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பிருந்தா ஐசியூ  வார்டின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்…. 

விஷ்ணுவின் மூலம் தந்தையை ஓரளவு திடப்படுத்தி இயல்பாக்கி சமாளித்தவளுக்கு விஷ்ணுவை சமாளிக்க முடியவில்லை… விஷயம் அறிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். பிருந்தாவின் கண்கள் எதையோ வெறித்தது. . நேற்று நடந்ததை நினைத்தவளுக்கு உள்ளம் குமுறியது…

பணம் சம்பந்தமாக கனகுவிடம் பேசிய பிருந்தா நிலம் அல்லது  வீட்டு பத்திரத்தை கேட்பதற்காக பெரியப்பா வாசனின் வீட்டிற்கு சென்றாள். வாசலில் இருந்தே வீட்டிற்குள் குரல் கொடுத்தாள்.

“பெரியப்பா… பெரியப்பா…”

பிருந்தாவின் குரலை கேட்டதும் முன்னேறிய வாசனின் கால்கள் மனைவியை கண்டதும் பின்நகர்ந்து விட வெளியே வந்தார் பர்வதம். 

“வாம்மா வா… உன் தம்பி அப்படி என்னை எடுத்தெறிஞ்சி பேசும் போது, சும்மா இருந்துட்டு இப்போ எங்க வந்த?” என்றார்  கோபத்துடன்

அவர் பேசியதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவள் “பெரியப்பா இல்லையா பெரியம்மா?” என்றாள் நலிந்தக் குரலில்.

“க்கூம்… என்று அதில் ஒரு க்கு வைத்தவர் “அவருக்கு முடியல படுத்து இருக்காரு நீ என்ன சொல்லனுமோ அதை என்கிட்ட சொல்லிட்டு போ” என்றார் முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்டு 

சாதரணமாக பேச வந்ததற்கே இந்த குதி குதிப்பவரிடம் பத்திரத்தை கேட்டால் என்ன செய்வாரோ என்று எண்ணியவள் 

“நான் பெரியப்பாவை பாக்கணும்” என்று கூறியதும் அதற்கு மேல் உள்ளே இருக்க முடியாமல் வெளியே வந்த  வாசன் 

“என்ன பிருந்தா?” என்றார் அணுசரனையாக

“பெரியப்பா அம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்ய 10 லட்சம் ஆகும்னு ஆஸ்பிட்டல்ல சொல்லிட்டாங்க… பணத்துக்கு கனகு மாமாகிட்ட கேட்டேன்… நிலத்து பத்திரம் கொண்டு வந்தா, வாங்கி தர்றேன்னு சொல்றார் அதான் நம்ம வீட்டோட  பத்திரத்தை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்” என்றாள். 

அதற்குள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்ட பர்வதம் “நல்லா இருக்கு நீ கேக்குறது… உன் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே இந்த சொத்துன்னு நினைச்சியா? முதல்ல கல்யாணம்னு அங்க இங்க பீறாஞ்சி அவன் இவன்னு கைலகால்ல விழுந்து உனக்கு நகை நட்டு பண்ட பாத்திரம் சீருன்னு தண்டம் அழுதது போதாதுன்னு, இப்போ பத்திரம் வைக்கிற அளவுக்கு வந்தாச்சா?? நானும் ரெண்டு புள்ளைங்கள பெத்து வைச்சிருக்கேன்… இப்போ வைச்சிட்டா எப்படி மூட்டுவிங்க  இந்த மனுஷனுக்கோ வயசாகிடுச்சி யாரை நம்பி நான் இருப்பேன்” என்று ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டார் பர்வதம்.

“பெரியம்மா நானும் தம்பியும் மீட்டுடுவோம்”  என்று அவள் உத்திரவாதம் கொடுக்க 

அதை எல்லாம் ஏற்க மறுத்த பர்வதம் “வேற ஏதாவது வழியிருக்கான்னு போயி பாரு… பத்திரம் எல்லாம் கொடுக்க முடியாது” என்று கறாராய் கூறியதும் விழிகளில் நீரோடு வாசனை பார்த்தாள் பிருந்தா அவரும் பர்வதத்தின் ஆட்டத்தில் கைகளை பிசைய தோய்ந்துப் போய் மருத்துவமனைக்கு வந்தாள்.

இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை கட்ட வேண்டும் என்று மருத்துவமனையில் கூறிவிட பணத்தை எப்படி புரட்ட போகிறோம் என்ற நினைப்பே மலைப்பாய் இருத்தது. 

இதய நோய் பிரிவில் நோயாளிகளை பரிசோதித்த கிருஷ்ணா மீண்டும் தன் அறைக்கு செல்ல இருந்தான்.  ஏதேச்சையாக ஐசியூ வார்டின் வெளியே போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்த  பிருந்தாவின் நலிந்த தோற்றம் அவனை உறுத்தியது. 

அருகில் செல்லலாமா, வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவன் அவள் கண்கள் நீரில் பளப்பளப்பதை பார்த்து அருகில் சென்றான்.

“ஹலோ பிருந்தா….”

மெல்ல தலையை உயர்த்தியவள் அவனை கண்டதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள். 

“என்ன பிருந்தா சாப்பிட்டிங்களா?” என்றதும் பிருந்தா சன்னமாக தலை அசைக்க,

அதில் மெல்ல இதழ் விரித்தவன் “நீங்க சொல்றதுலையே தெரியுது எப்படி சாப்பிடிங்கன்னு… சி பிருந்தா…  எதுக்கும் சாப்பிடாம இருந்தா தீர்வு கிடைச்சிடாது…  ஓகே… இப்போ என் கூட வாங்க” .

“எங்க டாக்டர்”. என்றதும்

“செல்றேன்…”  என்றவன் நர்ஸ் என்று அழைத்து  “அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பேஷண்டோட  ஹார்ட் பீட் பல்ஸ் ரேட் அண்ட் இசிஜி ரிப்போர்ட் செக்பண்ணி  எனக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்று கூறிவிட்டு பிருந்தாவை பார்த்து “என் கூட வாங்க” என்றான்..

சுற்றும் முற்றும் பார்த்தபடியே அவனைப் பின்தொடர்ந்தாள் பிருந்தா. கிருஷ்ணாவின் கால்கள் மருத்துவமனை கேண்டினை நோக்கி சென்றது. இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.

ஆவி பறக்க சாம்பாரில் நனைத்த இட்லி அவள் முன் இருந்தது “முதல்ல சாப்பிடுங்க பிருந்தா…  அப்பத்தான் அழ கூட உடம்புல தெம்பு இருக்கும்” என்றான் அக்கறையாக

அவளால் கிருஷ்ணாவின்  பேச்சை ஒதுக்க முடியவல்லை ஒரிரு நாட்களில் நல்ல நண்பனாக மாறியவனின் பேச்சை உதறித்தள்ள முடியாமல், பிடிக்கவில்லை என்றாலும் கடமையே என்று இரண்டு இட்லிகளை அரைமணி நேரமாக பிய்த்து சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கவும்  சூடான பாலை ஒரு கப்பில் கொண்டு வந்து அவள் முன் வைத்தான். கேள்வியாக அவனை பார்க்க “நீங்க தான் காபி டீ குடிக்க மாட்டிங்கன்னு சொன்னிங்க அதான் பால்… பால் குடிப்பிங்கல்ல?” என்றான் சந்தேகமாக 

ம் என்று தலை அசைத்தவள் எழுந்து கை கழுவிக்கொண்டு வந்து பாலை குடிக்க  தொடங்கினாள். 

“அம்மாவுக்கு ஆப்ரேஷனை நினைச்சி பயப்படுறிங்களா பிருந்தா?” என்றான்  அவள் கண்ணீர் எதற்கு என்பதை தெரிந்து கொள்வதற்காக

அவள் அமைதியாக இருக்கவும் “ம்… அது மட்டுமே உங்க கண்ணீருக்கு காரணம் இல்லைன்னு நினைக்கிறேன். ஆஸ் எ பிரெண்டா தான் நான் உங்கிட்ட பேசிக்கிட்டே இருக்கேன்… என்கிட்ட ஷேர் பண்ணா உங்களுக்கு ஸ்ட்ரெஸ் ப்ரீயா இருக்கும்னு நினைச்சிங்கன்னா சொல்லுங்க இல்லனாலும் பரவாயில்லை பட் இப்படி சோர்ந்து போறது நம்மோட செல்ப் கான்பிடண்டை உடைச்சிடும்” என்றான் தன்மையாகவே…

இதுவரை கிருஷ்ணாவிடமிருந்து ஒரு தப்பான பார்வையோ பேச்சோ இருந்ததில்லை மிகவும் மென்மையாக அவன் பேசுவதையும்  சூழலை கையாளும் விதத்தையும் பார்த்தவள் தானே…  இதோ இப்பவும் நண்பனாக தான் கேட்கிறான்… ஆனால் குடும்ப சூழ்நிலையை எப்படி கூறுவது என்ற கலக்கத்தில் இருந்தவளை “அம்மாடி பிருந்தா” என்று  பெரியப்பா வாசனின் குரல் கலைத்தது.

“பெரியப்பா” என்றவள் இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டாள்.

உறவினர் யாரோ அவளை  சந்திக்க வந்துள்ளனர் என்று  சூழ்நிலையை உணர்ந்த கிருஷ்ணா “ஓகே பிருந்தா நீங்க பேசிட்டு இருங்க அப்புறம் பார்க்கலாம்”… என்று கூறி எழுந்தான்.

“தேங்க்ஸ் டாக்டர்” என்று அவனுக்கு நன்றியை தெரிவித்து விடைக் கொடுத்தவள் பெரியப்பாவை பார்த்து “உட்காருங்க பெரியப்பா” என்றாள்..

“இருக்கட்டும்மா”… என்று நின்றபடியே “உன்னை பாக்கதாம்மா வந்தேன்.. அங்க நீ இல்ல ஒருவேலை இங்க வந்துருப்பியோன்னு தேடி வந்தேன்” என்றவர் அவசர அவசரமாக கைப்பையில் சுற்றி வைத்திருந்த பணக்கட்டை எடுத்து பிருந்தாவிடம் கொடுத்தார்.

“என்ன பெரியப்பா இது?” என்றாள் ஆச்சர்யமாக

“இதை வாங்கிக்கோம்மா இது தான் உன் பெரியப்பனால முடிஞ்சது… அவளை மீறி என்னால ஒன்னும் பண்ண முடியல… அங்க நான் ஏதாவது கேட்டிருந்தாலோ, சொல்லி இருந்தாலோ இன்னும் உன்னை தான் அவலா போட்டு மென்னு துப்பி இருப்பா அதான்டா பெரியப்பா பேசாம இருந்துட்டேன்’. என்று தன் நிலையை விளக்க “பெரியப்பா” என்று அவரின் தோள் சாய்ந்து அழுதாள் பிருந்தா….

“அழாதம்மா… அழாத… இந்தா இதுல இரண்டு லட்சம் இருக்கு மீதி எப்படியாவது புரட்டிடலாம் கவலைப்படாத” என்று அவளை தேற்றியவர்  தம்பி மனைவியையும் பார்த்துவிட்டு வந்த சுவடே தெரியாமல் வீட்டிற்கு சென்றார்.

…..

நோயாளிகளை பரிசோதித்து விட்டு அப்போதுதான் தனது அறைக்கு வந்து அமர்ந்தான் கிருஷ்ணா. 

பட்டென கதவு திறந்து “நான் தான் போவேன்…  நான் தான் போவேன்” என்று சண்டைப் போட்டுக்கொண்டு உள்ளே வந்த இருவரின் குரல் கேட்டு தலையை உயர்த்திய கிருஷ்ணா  

“உங்க ரெண்டு பேருக்கும் பொறுமைன்னா என்னன்னு தெரியாதா?” என்று உதட்டில் உறைந்த புன்னகையுடன்,  தனது எதிரே நின்றிருந்த நண்பர்களான கிரியையும் அஞ்சலியையும் பார்த்தான்.

“எப்பா அமைதியின் திருவுறுவமே அதுக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம் தான் … ஏணிய வைச்சாக் கூட எட்டாது…  ஆனாலும் நீ எப்புடிடா எங்களுக்கு பிரெண்ட் ஆன… முதல்ல உன்னை டைவர்ஸ் பண்ணனும்”. என்று அலுத்துக் கொண்ட கிரி அந்த மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவனாக பணிபுரிபவன். 

கிரியை பார்த்து “அடேய் நீ அவனா” என்று அஞ்சலி முகம் சுளித்தாள். 

அவளின் பேச்சில் கிரியின் முகம் போன போக்கை  பார்த்து தன் முத்துப் பற்கள் தெரிக்க கன்னம் குழி விழ சிரித்தான் கிருஷ்ணா.

‘சிரி டா…  நல்லா சிரி… எனக்கு வந்து வாய்ச்சிங்க பாருங்க நல்ல பிரெண்டுங்கடா” என்று அவர்களை கடிந்துக் கொண்டான் கிரி. 

“சரி சரி கூல் இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற… எப்பவும் கிண்டல் பண்றது தானே டா… புதுசா பண்ற மாதிரி கோவப்படுற…  சரி அதை விடு மச்சா பார்ட்டிய நல்லா என்ஜாய் பண்ணியா?” என்று கிருஷ்ணா அந்த பேச்சை மாற்றினான்.

“அதை சொல்லாத டா எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு”

“அதுக்குத்தான் அதிகமா குடிக்காதன்னு சொல்றது” என்று  குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு கூறிய அஞ்சலி  மகப்பேரு மருத்துவராக பணிபுரிகிறாள்.

“கேடி….கேடி.….  எப்படி ஒன்னுமே தெரியாத குழந்தை மாதிரி நடிக்கிற” என்று கிரி பல்லை கடித்தான்.

“அவ கரெக்ட்டா  தானேடா சொன்னா குடிச்சா வயித்தெரிச்சலா தானே இருக்கும்… இதுல என்ன நடிப்பை கண்ட” என்றான் கிருஷ்ணா புரியாமல்

“இவளா… இவளா… கேள்றா என்ன பண்ணான்னு…  பார்ட்டில ரெண்டே ரெண்டு ரவுண்டு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகிடுச்சி மாப்ள…..” 

“ம் அப்புறம்” என்றான் கிருஷ்ணா கதை கேட்கும் பாவனையில் அவன் ஆர்வத்தில் வெறியான கிரி “மாப்ள கதையாடா சொல்றேன்?? என் கஷ்டத்தை செல்றேன் டா!” என்றான் கடுப்பாக 

“சரி சரி  மச்சா… மேல சொல்றா…” 

“மாப்ள…மப்புல நான் பண்ணதையெல்லாம் லைவ்வா என் அப்பாவுக்கு வீடியோ கால்ல டெலிக்காஸ்ட் பண்ணியிருக்காடா இவ…  அந்த மனுஷனும் காலைலல போன் பண்ணி காச்சி மூச்சின்னு கத்தராரு கல்யாணத்துல இருந்து வீட்டுக்கு கூட போகாம  இதோ நேரா இங்க வந்து நிக்குறேன்” என்று அஞ்சலியை பார்த்து முறைக்கவும்

“நீயே சொல்லு கிருஷ்ணா… நான் செஞ்சது தப்பான்னு… இவன்கிட்ட  டேய் அப்பா கால்பண்றாரு டா பேசவான்னு கேட்டேன்… பேசுன்னு அவன் தான் சொன்னான் அதான் பேசினேன்….” என்று அவள் இருகை விரித்து கூறவும்,

“அடியேய் அப்பான்னு சொன்னியே உங்கப்பாவா எங்கப்பாவன்னு தெளிவா சொன்னியா?” என்றான் கிரி  பற்களை நறநறத்து…

அதில் விழுந்து விழுந்து சிரித்த கிருஷ்ணா “எப்போடா ரெண்டு பேரும் வளருவிங்க நீங்க டாக்டர்ஸ்டா  ஸ்கூல் பசங்க மாதிரி எப்ப பார்த்தாலும் அடிச்சிக்கிட்டு சுத்தறீங்க” என்றான் சிரிப்பை மறைத்தபடி

“அது ஜென்மத்துக்கும் நடக்காது டா மச்சா இதெல்லாம் வளரவே வளறாத கேஸ்”  என்று கிரி அஞ்சலியின் தலையில் கொட்டியதும்,

“அடேய் கட்டைய்யா கொட்டாதடா” என்று அவனை திட்டியவள் “சொல்ல  வந்துட்டான் வானத்துக்கும் பூமிக்கும் வளந்து கெட்டவன்” என்று அவனை வாரினாள் அஞ்சலி.

பத்து வருட நட்பு… கல்லூரி காலம் தொட்டு இன்று வரையிலும் மூவரும் அதை தொடர்கின்றனர். கிருஷ்ணா அமைதி என்றாள் கிரியும் அஞ்சலியும் ஆர்பாட்டத்திற்கு சொந்தக்காரர்கள்… இவர்கள் இருக்கும் இடம் எப்பவுமே சலசலத்தபடி இருக்கும்…  இன்றும் அப்படித்தான் அவர்கள் சென்ற கல்யாணத்தில் அடித்த கூத்தை கிருஷ்ணாவிடம் புகாராக வாசித்துக் கொண்டிருந்தனர்.

கேட்டுக் கொண்டிருந்தவனோ நேரத்தை பார்க்க “அடேய் அடங்குங்கடா டைம் ஆச்சி… நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து அப்புறம் உங்க பஞ்சாயத்தை கேக்குறேன்” என்று கூறி அறையை விட்டு வெளியேறியதும், கிரி அஞ்சலியை தீயாய் முறைத்தான். 

‘என்னடா முறைப்பே டெரரா இருக்கு… ஒரு வேளை அடிப்பானோ  அடேய்… தடி தாண்டவராயா விட்டுட்டு போறியே டா’ என்று எண்ணியவள் 

“ஹேய் கிருஷ்ணா…. நில்லு நில்லு நானும் வறேன்…  இவன்கிட்ட விட்டுட்டு போகாதே” என்று அவன் பின்னோடே சிட்டாய் பறந்து விட்டாள்.

“உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன் பெருச்சாளி” என்று கிரி உறுமிவிட்டு” தனது பணியை பார்க்க சென்றான்.

தன்னுடன் நடக்கும் அஞ்சலியிடம்  “எதுக்கு எலி அவன்கிட்ட வம்பு பண்ற?.. பாவம் பையன் எப்படி புலம்புறான் பாரு” என்று கேட்டதும்

“எனக்கும் பொழுது போக வேண்டாமா கிருஷ்ணா” என்று சிரித்தபடி அவன் பெயரை அழுத்தி கூறிய அஞ்சலியின் இதழ்கள் தூரத்தில் தெரிந்த பிருந்தாவை கண்டதும் சத்தமின்றி பிந்து என்று அழைத்தது.