அவ(ன்)ள் 12

“உங்க அப்பா வரப்போறாரு சீக்கிரம் எடுத்து உள்ள வை” என்று தினேஷின் கரங்களில் ஒரு கவரை திணித்தார் பர்வதம்.

“அம்மா… இதுல நான் கேட்ட அமௌண்ட் இருக்குல்ல?”

அக்கம் பக்கம் பார்த்தபடி அதிகம் சத்தமில்லாமல் “இருக்குடா எடுத்து வை… உங்க அப்பா வந்தா என்ன ஏதுன்னுட்டு உயிரை எடுப்பாரு” என்று மகனை எச்சரிக்கை செய்ய,

“சரிம்மா…. ஆனா  உனக்கு எப்படி காசு வந்துச்சி?… அதுவும் 15லட்சம்…” தினேஷ் வியப்புடன் கேட்க

“உங்க அம்மாவை என்னன்னு நினைச்ச?…  என் சாமர்த்தியம் இல்லன்னா நாமமெல்லாம் உங்க அப்பாவுக்கு இருக்க பாசத்துக்கு நாமத்தை தான் போட்டு இருக்கனும்… அப்பப்போ எடுக்கறது சீட்டு போடுறது அப்படியே கைல  இருந்த காசு, அது இல்லாம என் நகைய ஒரு ஐந்து லட்சத்துக்கு வைச்சி கொடுத்து இருக்கேன்… ஜாக்கிரதையா தொழிலை பண்ணு உன் அப்பன் வாயை பிளந்து பாக்கறா மாதிரி வந்து காட்டு” என்று பிள்ளைக்கு வாழ்த்தை கூறினார்.

அதே நேரம் வீட்டிற்குள் வந்த வாசனை பார்த்ததும் “சரி சரி… நீ போ தினேசு… நாளைக்கு தானே ஊருக்கு கிளம்பனும் எல்லாத்தையும் எடுத்து வை” என்றபடி மகனை உள்ளே அனுப்ப முயன்றார் பர்வதம்.

“எங்க போறான் உன் புள்ள” என்றபடி வாசன் அமர

“ம் ஊருக்கு…. அவனுக்கு தான் காசை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்களே…. அவன் கைக்கொண்டு அவனே பொழைச்சிக்க போறான்” என்று கடுகடுத்தபடி உள்ளே சென்றார்.

‘இது எல்லாம் எங்க உருப்பட போகுது… தண்டமா இதுக்கு தொலைக்கறதுக்கு நாங்க பாடுபட்ட காசுதான் கிடைச்சிதா? போகட்டும் போகட்டும் கஷ்டம்னா என்னன்னு தெரிஞ்சிட்டு வரட்டும்…  அப்போதான் தெரியும்” என்று நினைத்த  வாசன் மனைவியின் முன் வாயை திறக்கவில்லை..

…..

“விஷ்ணு” என்று சத்தமில்லாமல் அழைத்தாள் பிருந்தா..

அவளுடன் மருத்துவமனை செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தவன் அதனை கவனியாமல் ஏதோ ஒரு பாடலை ஹம் செய்தபடி தலைவாரி கொண்டிருந்தான்.

“டேய்…”. என்று அழுத்தி அழைக்கவும் அக்கம் பக்கம் கீழே மேலே என எல்லா இடங்களிலும் பார்த்தவன் சமையலறை வாசலில் தன்னை முறைத்துக் கொண்டிருந்த பிருந்தாவை கண்டதும் நானா என்று தன்னை காட்டி  நீயா என்றான் அவளைப்போல் சத்தம் வராமல்

அவனை முறைத்தவள் “இங்க வாடா” என்றாள் பற்களை நறநறத்து

அவளுகே சென்றவன் “என்னக்கா இப்படி கூப்பிடுற?” என்றான்.

“ம்… வேண்டுதல்… ஏண்டா இந்த ஆறடி கூந்தலை எவ்வளவு நேரமா வாருவ?” என்றாள் கடுப்பாக

அவளை வினோதமாக பார்த்தவன் “இதில்  தங்களுக்கு என்ன பிரச்சனையோ?” என்றான் நக்கலாக

“டேய் அடங்கு… என்று பல் இடுக்கில் வார்ததையை வெளியிட்டவள் “அப்பா ரெண்டு நாளா சரியாவே சாப்பிடல கொஞ்சம் கூட இருந்து பரிமாறு” என்று சத்திமில்லாமல் கூறிட

படுத்திருந்த  தந்தையை ஒரு முறை பார்த்தான் விஷ்ணு. இரு நாட்களாக அவர் சரியாக சாப்பிடாதது அவர் முகதில் தெரியும் சோர்விலேயே தெரிந்தது “அக்கா நான் இருந்துட்டா நீ தனியா அம்மாவ கூட்டிட்டு போயிட்டு வந்துடுவியா?” என்றான் சந்தேகமாக

“அட பாத்துக்குறேன் டா அங்க போனா கிருஷ்ணா இல்ல கிரி இருப்பாங்க… போன் பண்ணா அஞ்சலியும் வந்துடுவா நான் பாத்துக்கறேன் நீ என்ன ஏதுன்னு அவரை பாரு”

“சரிக்கா…” என்றான் விஷ்ணு. அவன் பிருந்தாவிடம் எப்போழுதும் எதற்கும் வற்புறுத்தியது இல்லை அவள் மனம் அறிந்து நடந்துக்கொள்ளும் சகோதரன் கிடைத்தது அவளுக்கு வரமே 

“சரி நீயும் சாப்பிடு… எப்படியும் ஒரு இரெண்டு மணிக்குள்ள வந்துடுவேன் ஆப் டே பர்மிஷன் போட்டு இருக்கேன்” என்று தனது கை பையை எடுத்து வைத்தவள் அன்னையின் அறைக்குள் புகுந்தாள்.

“அம்மா கொஞ்சம் ஹால்ல வந்து உட்காறேன் கேப் இப்போ வந்துடும்”

“அ… அவர் போயிட்டாரா?” என்று மெல்லிய குரலில் விசாரித்தார் மகேஷ்வரி

“அவர் படுத்து இருக்கார் மா நீ வாயேன்” 

“இல்ல வேணா பிருந்தா… வண்டி வந்தா கூப்பிடு நான் இங்கயே இருக்கேன்”. என்று மறுத்துவிட

“சொல்றதை கேளும்மா… கொஞ்சம் வெளியே வந்து உட்காரு.. அவசர அவசரமா கீழே இறங்க முடியாது” என்று மகேஷ்வரியின் கையை  பிடித்தாள் பிருந்தா.

விருப்பமே இன்றி அறையை விட்டு வெளியே வந்த மகேஷ்வரி சோர்வுடன் படுத்திருக்கும் கணவனை கண்டு விட்டு முகத்தை திருப்பிக்கொண்டு  வெளியே  வந்து அமர்ந்தார். இதை கவனித்தும் கவனிக்காதது போல் அங்கும் இங்கும்  திரிந்தாள் பிருந்தா. 

மகேஷ்வரி வந்து அமர்ந்ததும் தவிப்பாக அவர் முகத்தையே பார்த்திருந்த பரசுவின் மேல் இறக்கம் பிறந்தாலும் அவர்களே பேசிக் கொள்ளட்டும் என்று அமைதியாய் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க திடீரென அவள் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தாள்.

கேப் வந்ததற்கான செய்தி வரவும் “விஷ்ணு கேப் வந்துடுச்சி நான் கிளம்புறேன் சொன்னது நியாபகம் இருக்கட்டும்” என்று கூறி தாய் இறங்க உதவி செய்தாள்.

“சரிக்கா நான் பாத்துக்கறேன் நீ போயிட்டு வா” என்றவன் உள்ளே வந்து தகப்பனுக்கு உணவு தட்டை எடுத்துக் கொண்டு அருகில் அமர்ந்தான்

“அப்பா… அப்பா…”

“என்ன விஷ்ணு…?”

“கொஞ்சம் சாப்பிடுங்க…”

“அப்படி வைச்சிடுப்பா அப்புறம் சாப்பிடுறேன்…”

“முதல்ல எழுந்திரிங்க… என்ன ஆச்சி உடம்பு ஏதாவது பண்ணுதா சொல்லுங்கப்பா ஆஸ்பிட்டல் போகலாமா” என்றான் அக்கரையாக

அவன் அக்கரையில் அகம் நெகிழ்வர் “எனக்கு ஒன்னுமில்லப்பா கொஞ்சம்  கால் வலி என்று திரும்பி படுக்க ஆ…” என்று வலியில் முனங்கினார்.

“என்னப்பா என்ன ஆச்சி?”

“ஒன்னுமில்லப்பா” என்று கால்களை காண்பிக்க மறுக்க

முதல்ல கையை எடுங்க என்றவன் பாதம் முழுவதும்  அங்கங்கே சிறு சிறு சிராய்ப்புக்கள் இருந்ததை பார்த்து அதிர்ந்தான்.

“என்னது இது? எப்படி ஆச்சி? எங்கேயாவது தெரியாம காலை வைச்சிட்டிங்களா??”  என்றான் பதற்றத்துடன்.

“இல்ல விஷ்ணு” என்று மறுப்பாய் கூறியவர் “நான் பண்ண பாவத்துக்கு  தண்டனை…” என்றதும் அவனுக்கு புரிய “இதுக்கு நீங்க அக்காகிட்டயும் அம்மாக்கிட்டயும் நேரடியா பேசி இருக்கலாம்பா…” என்றான் வருத்தமாய்.

“பேசி சரிசெய்யக் கூடிய தப்பையா நான் பண்ணி இருக்கேன் விஷ்ணு… என் குழந்தையோட வாழ்க்கையையே அதளபாதளத்துள தள்ளிட்டேனே” என்று அழுகையில் குலுங்கியவரை முடிந்தமட்டும் சமாதனப்படுத்த முயன்றான். 

அவனுக்கும் கோபம் இருக்கவே செய்தது… இருந்தும் அவரை வெறுத்தால் மட்டும் என்ன வந்துவிட போகிறது என்று தோன்றியதால் அவன் மட்டும் அவ்வப்போது பேசிக்கொண்டு இருக்கிறான்..

அவளுக்கு நல்ல  வாழ்க்கை கொடு இறைவா என்று மாதம் தோறும் செல்லும் திருவண்ணாமலை கிரிவலத்தை வெறும் காலுடன் சுற்றி வந்து இருக்க அதில் நடந்த சிராய்ப்புகள் தான் பாதங்களில்.

“அப்பா,அக்கா இப்போ  நார்மலதான் இருக்கு… நீங்களும் சாதாரணமா இருக்க முயற்சி பண்ணுங்க… அம்மா திட்டினா கூட பரவாயில்லை பேசுங்க…  அவங்களும் ஆதங்கத்தை கொட்டிட்டா சாந்தமா மாறிடுவாங்க…. அக்காவும் பேசும்…” என்றான் அவரை தெளிவிக்கும் பொருட்டு… 

ஏதோ மகனிடம் பேசியதில் மனதில் இருந்த பாரம் இறங்கியதை போல உணர “முயற்சி பண்றேன் விஷ்ணு” என்றார் கண்களில் சிறு நம்பிக்கையுடன்.

…..

காய்ந்ததும் மரங்களிலிருந்து உதிரும் சருகுகள் போல் காலம் எனும் காற்றடித்து நாட்களும் உதிர தொடங்கியிருந்தது… 

விளையாட்டாய் நான்கு மாதங்கள் ஓடியிருந்தன.  பிருந்தாவை தினமும் சந்திக்க‌ முடியாவிட்டாலும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஏதாவது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு  பத்து இருபது நிமிடங்களாவது அவளிடம் பேசும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்வான் கிருஷ்ணா. தினமும் குறுந்தகவல் மூலம் குட் மார்னிங் குட் நைட்‌ என்று ஆரம்பித்து மெல்ல மெல்ல வளர்ந்தது இப்போது அடிக்கடி போன் பேசும் நிலைக்கு வந்திருந்தது.

இன்றும் “மேடம் கால் பண்ணலாமா?” என்று குறுந்தகவலை அனுப்பிய கிருஷ்ணா அவளுக்காக காத்திருந்தான்.

பத்து நிமிடங்களில் பார்த்து விட்டதற்கான நீல நிற குறியீடு தெரிய அவள் பதிலுக்காக ஆவலாக காத்திருக்க பிருந்தாவே அழைத்தாள்.

“ஹலோ கிருஷ்ணா”

“ஹாய் பிருந்தா…” 

“வீட்டுக்கு போயிட்டியாமா?” என்றான் நேரம் கடந்திருந்ததை அறிந்தும் 

“ம்… இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேன் கிருஷ்ணா… நீங்க சாப்பிட்டிங்களா… டியூட்டில இருக்கிங்களா…இல்ல  வீட்டுக்கு போயிட்டிங்களா…” என்று படுக்கையை சரி செய்தபடியே பேசினாள்.

“டியூட்டில தான் இருக்கேன் பிருந்தா இன்னும் சாப்பிடல இனிதான் சாப்பிடனும்… இப்போ தான் ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வந்தேன்மா… மார்னிங் ஒரு ஆப்ரேஷன் இருக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமேன்னு தான் கால் பண்ணேன்”. என்று சுழலும் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடியபடியே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன சொல்றிங்க கிருஷ்ணா… இன்னும் சாப்பிடலையா??  மணி இப்போவே 9 ஆகுது இனி எப்போ சாப்பிடறது என்ன எடுத்துட்டு வந்திங்க?” என்றாள் சற்றே அதட்டும் த்வனியில்

“எதுவும் எடுத்துட்டு வரலமா…  ஏதாவது கேன்டீன்ல இருக்கான்னு பாக்கனும்…”  என்றவனது குரலில் சலிப்பு மட்டுமே நிறைந்திருந்தது

“டாக்டருக்கு ஏன் இப்படி குரல் டல்லடிக்குது…. ஏதாவது அப்சட்டா… நல்லா இருக்கிங்க தானே” என்று அக்கறையாக வினவிட

“ம் இருக்கேன் மா…  அது ஒன்னுமில்ல” என்றான்  குரலை சரிபடுத்தி… என் குரலை வைச்சே கண்டுபிடிக்கிறியே ஏஞ்சல்… நீ நிஜமாவே ஏஞ்சல் தான் உன் கிட்ட பேசிக்கிட்டே இருக்கலாம்னு தோனுது என்று அவளுடன் மனதில் பேச..

அதற்குள் இரண்டு மூன்று முறை அவன் பெயரை சொல்லி அழைக்க அவன் அமைதியை கண்டு கிருஷ்ணா என்று சற்று சத்தமாக அழைத்தாள்.

” சொல்லு மா ஏதோ நியாபகம் சாரி சாரி  என்னமா  கேட்ட” என்றான். கனவில் இருந்தவன் போல

“எதுக்கோ இத்தனை சாரி?… என்று உரிமையாக கடிந்தவள் “நீங்க பண்றது நல்லா இருக்கா கிருஷ்ணா?… டூயூட்டில எல்லாத்தையும் மறந்துடுறிங்க சரி…  சாப்பாடை கூட மறக்குறிங்க??” என்று கோபமாக கூறியவள் சட்டென “உங்களுக்கு சப்பாத்தி வெஜ் குருமா பிடிக்குமா?”  என்றாள் யோசனை வந்தவளாக.

“ரொம்ப பிடிக்கும்… ஆனா இப்போ எது இருக்கோ அது மட்டும் தான் சாப்பிட முடியும் மா”. என்றான் சோர்ந்த குரலில்

அவன் குரலின் சோர்வு அவளுக்கு வருத்ததை கொடுக்க “சரி ஒரு பதினைஞ்சு நிமிஷம் வைட் பண்ணுங்க நான் விஷ்ணு கிட்ட கொடுத்து விடுறேன்”.

“ஹேய்.. ஏன்மா விஷ்ணுவ எல்லாம் தொந்தரவு பண்ணிக்கிட்டு” என்றபோதே அவளிடமிருந்து  பறிக்கப்பட்ட போன் விஷ்ணுவிடம் கை மாறியிருந்தது…

“எனக்கு ஒரு தொந்தரவும் இல்ல கிருஷ்ணா சார்…  இதோ பத்தே நிமிஷத்துல உங்க முன்னாடி இருப்பேன்…” என்று கிருஷ்ணாவிடம் கூறியவன்

 “அக்கா நீ போய் எடுத்து வை நான் வறேன்” என்றான் பிருந்தாவிடம்.

“என்ன சொன்னாலும் நீயும்,  உங்க அக்காவும்  கேட்கமாட்டிங்க… வைட் பண்றேன் வந்துடு விஷ்ணு” என்று கூறிய கிருஷ்ணா சிரிப்புடன் அலைபேசியை அணைத்தான்.. 

பிருந்தாவிடம் பேசியது மனதை இதமாய் வருடியது அவன் பேசும் முன் இருந்த மனநிலைக்கும் தற்போது இருக்கும் மனநிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை மனம்.உணர்ந்தது.

மனதில் மட்டும் காலை செண்பகத்திடம் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது.

“என்னங்க கேளுங்க அவனை”

“என்ன பா… உன் அம்மா சொல்றதும் சரிதானே எத்தனை பொண்ணுங்களை பாக்காமலேயே வேண்டாம்னு சொல்லுவ?”

“எனக்கு இப்போ விருப்பம் இல்லப்பா… கொஞ்ச நாள் போகட்டுமே…” என்று தந்தையின் கேள்விக்கு பதிலை கொடுக்க

“இன்னும் எத்தனை நாளுன்னு கேளுங்க… அவனுக்கு இப்பவே வயசு முப்பது” என்றார் செண்பகம் ஆற்றமையுடன்

“முப்பது வயசுன்னா பொண்ணு கிடைக்காதுன்னு யாரும்மா  சொன்னாங்க… கொஞ்ச நாள் என் போக்குல விடுங்களேன். எனக்கு தோணும் போது சொல்றேன்” என்றான் எரிச்சல் மேலிட

“நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு தானே இருக்கேன்… முதல்ல மாமா பொண்ணை வேண்டாம்னு சொன்ன சரின்னு சொல்லி வேற இடம் பார்த்துட்டு இருந்தேன்… இப்போ கல்யாணமே வேண்டாம்னு சொன்னா எப்படி கேளுங்க அவனை??… இப்படியே எல்லாம் அவனை விட என்னால முடியாது…”

“என்னலயும் இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா” என்றான் பிடிவாதமாய்

“என்னங்க அவன் பேச பேச பாத்துக்கிட்டே இருக்கிங்க?” என்று கணவரை துணைக்கு அழைக்க

மனைவியிடமும் மகனிடமும் மாட்டிக்கொண்டார் நாதன் பிள்ளைக்காவும் பேச முடியாது மனைவிக்கவும்  பேச முடியாது தலையில் கை வைத்து விட்டார்.

“நாளைக்கு ஒரு பொண்ணை பாக்க போறேன் கிருஷ்ணா….  நீ வந்தாலும் சரி, வரலைனாலும் சரி அந்த சம்மந்தம் கூடி வந்தா பேசி முடிச்சிட வேண்டியது தான்” என்றார் செண்பகம் அதுதான் என் முடிவு என்பது போல

“இப்போ என்னம்மா எவளையாவது என் தலையில கட்டி வைச்சிட்டு நீங்க நிம்மதியா இருந்திடனும்…. நான் எப்படி போனாலும் பரவாயில்லை அவ்வளவு தானே… என் மனசை யாரும் பாக்கமாட்டிங்க அதுல என்ன இருக்குன்னு யாரும் யோசிக்க மாட்டிங்க…” என்று கோவமாக ஆரம்பித்து ஆதங்கமாக முடித்தவன் வேகமாக அங்கிருந்து மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான்.