அன்பின் ஆழம் – 30.1

ஹரி விண்ணப்பித்திருந்த வீட்டுக்கடன் தொகை கிடைக்கவில்லை என்று தெரிந்த அடுத்த கணமே, மகேஷ் தன் மாமாவை அழைத்தான். அவரிடம் நிலமையை எடுத்து சொல்லி, ஆலோசனை கேட்டவனுக்கு, அவர் தன்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வதாக சொன்னார். மேலும் ஹரி, வீட்டை வாங்கி கொள்ளும் பட்சத்தில், தான் வாங்கிய விலைக்கே விற்கவும் தயாராக இருப்பதாய் தன் விருப்பத்தை தெரிவித்தார். அதை கேட்ட மகேஷ், உடனே அரவிந்தனை தொடர்பு கொண்டான். அவனும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹரிக்கு கடனாக கொடுக்க முன்வந்தான்.

அதன் அடிப்படையில் கணக்குகளை வரைந்த மகேஷ், எஞ்சியிருந்த தொகையை, ஹரிக்கு தானே கடனாக கொடுக்க முடிவு செய்தான்.

ஹரிக்கு ஒரு நண்பனாய், ராணிக்கு ஒரு சகோதரனாய் என்று அவர்களுக்கு உதவ மகேஷ் பாடுபட்டது உண்மைதான். ஆனால், அதில் அவன் சுயநலமும் கொஞ்சம் அடங்கி இருந்தது. பிரிந்தே இணைந்திருப்போம் என்று அவர்கள் வாழும் இடத்தை ஒரு அந்நியரோடு பங்குபோட அவனுக்கு மனமில்லை.

தன் மாமாவின் இக்கட்டான சூழ்நிலையை மனதில் கொண்டுதான், வீட்டை விற்க, வேறுவழி இல்லாமல் தன் சம்மதத்தை தெரிவித்தான் மகேஷ். ஹரி முன்வந்து வீட்டை தானே வாங்கி கொள்ளும் தன் விருப்பத்தை தெரிவித்ததும், அவனுக்கு ஈடுயிணையில்லா மகிழ்ச்சி. எப்படியாவது இது கைக்கூட வேண்டும் என்று ஆவலாய் இருந்தான். அதே சமயத்தில், இந்த சமரச பேச்சுக்கு எல்லாம் ஹரி செவிசாய்ப்பானா என்ற ஐயமும் அவனை வாட்டி எடுத்தது.

“மீரா!  ஆறு மணிக்கு, ஹரி கிட்ட வந்து லோன் விஷயமா பேச போறேன். நீயும் இரு, சரியா!” அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் சொன்னான் மகேஷ்.

“கண்டிப்பா டா!” சம்மதம் சொன்னவள், “பணம் எப்போ கிடைக்கும்? வீட்ட எப்போ ரெஜிஸ்டர் பண்ணலாம்?” உற்சாகமாய் வினவினாள்.

மாலையில், அரவிந்தனும், மாமாவும் தன்னுடன் வந்து ஹரியிடம் பேசுவதாக சொல்லி இருந்தார்கள். அதற்கு முன், எதையும் பகிர்ந்து கொள்ள விரும்பாத மகேஷ் அவள் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினான்.

“இன்னும் கொஞ்சம் பார்மாலிடீஸ்(Formalities) இருக்கு. அத பற்றி பேச தான் வரேன்னு சொன்னேன்.” மேலோட்டமாக சொல்ல,

“ஏதாவது பிரச்சனையா டா?” அடுத்த நொடி கவலைகொண்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல டி! வீடு உங்களுக்கு தான்!” நம்பிக்கை வார்த்தை கொடுத்தான். அதில் திருப்தி அடையாதவள், அடுத்த கேள்வி கேட்க வர, அதே சமயம், அவள் கைப்பேசியும் ஒலித்தது.

ஹரி எழுதிய புத்தகத்தை வாங்கிகொள்ள விரும்பி, தொடர்புகொண்ட ஒருவர் எதிர்முனையில் பேச, தன்னவன் புகழாரம் பாட தொடங்கியவள், இந்த பேச்சை மறந்தாள். எப்படியோ தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சுவிட்டு ஆக்சிலேட்டரை(Accelerator) அழுத்தியவன், அவள் பேசி முடிப்பதற்குள், வீட்டை வந்து அடைந்தான்.

“மீரா! இன்னும் வீட்டுக்கு கிளம்பாம என்ன செஞ்சிட்டு இருக்க?” உள்ளே நுழைந்தவன், லேப்டாப்பில் மூழ்கி இருந்தவளை வினவினான்.

வழக்கம்போல, கேலண்டரில் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தவள், “இன்னும் சரியா நாற்பத்தோரு நாள்தான் ஹரி! அப்புறம் காலையிலேந்து உன்கூடவே இருப்பேன் டா!” வங்கிக்கு திரும்பும் நாளை நினைவூட்ட,

அதற்கு தலையசைத்து சிரித்தவன், “சரி! சரி! நேரமாகுது! கிளம்பு!” என்று விரட்டினான்.

தான் சொன்னதை இரசிக்காது, விரட்டுவதிலேயே குறியாய் இருந்தவனின் அருகில் வந்தவள், “முசுடு எழுத்தாளர்! லோன் விஷயமா பேச, மகேஷ் ஆறு மணிக்கு வரான். என்னையும் இருக்க சொன்னான்!” காரணம் சொல்லி, அவன் கன்னத்தை கிள்ளினாள்.

“லோனா?” ஆர்வமாய் வினவியவன், மேலும் தகவல்கள் கேட்க,

“நான் சொன்னதுக்கு ஏதாவது ரியாக்ட் பண்ணையா…” உதட்டை சுழித்தவள், “சொல்லமாட்டேன் போ… அவனையே கேட்டுக்கோ!” என்று நகர்ந்தாள்.

அவள் செயல்களை இரசித்தவன், தன் அறைக்குள் செல்ல, ஏலக்காய் வாசம் காற்றில் பரவியது. தன் அலமாரியை திறந்தவன், அதில் ஒட்டியிருந்த நாள்காட்டி படத்தை வருடினான்.

‘தேவதை வரும் நாள்’ அவள் சொன்ன நாற்பத்தோராவது நாளில், தன் கைப்பட எழுதி இருந்ததை, மீரா மட்டும் கவனித்து இருந்தால்……

ஆறு மணிக்கு, மகேஷுடன் சேர்ந்து, அவன் மாமாவும், கூடவே அரவிந்தனும் வந்ததில் காதல் ஜோடிகளுக்கு குழப்பமாய் இருந்தது. உள்ளே நுழையும் போதே, தோழியை வம்பிழுக்கும் அரவிந்தன் முகத்தில் உற்சாகம் இல்லை. அவன் சுபாவத்திற்கு நேரெதிராக, அவ்வளவு அமைதியாக இருந்தான்.

குழப்பங்களை தள்ளி வைத்து, ஹரி அவர்களை அன்புடன் உள்ளே அழைத்தான். மீரா, அவர்களுக்கு பருக பழச்சாறு கொடுத்தாள். அப்போதும், அரவிந்தனிடம் அதே அமைதி. மகேஷ் அவளிடம் தெளிவாக பேசாதது, அரவிந்தன் அமைதி என்று அனைத்தையும் மனதில் அசைப்போட்டவளுக்கு, வீடு வாங்க எண்ணும் தங்கள் திட்டத்தில் ஏதோ பெரிய சிக்கல் உள்ளது என்று புரிந்தது.

மகேஷ், தன் கையில் இருந்த நீல நிற ஃபைலை ஹரியிடம் நீட்ட, அதை உடனே பிரித்து பார்த்தவனுக்கு, ஓரளவு நிலமை புரிந்தது. நண்பன் மனம் உடையும் முன், நம்பிக்கை வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்து, மகேஷ் பேசத் தொடங்கினான்.

“ஹரி… அது… அது… முழு லோன் அமௌண்ட் சான்க்க்ஷன் ஆகல டா…” முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன், ஹரி முகம் ஏமாற்றத்தில் வாடியது.

மகேஷ், பேசுவதை நிறுத்தாமல், “ஆனா, அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல ஹரி. மீதி பணத்துக்கு வழி சொல்ல தான், நாங்க உன்கிட்ட பேச வந்திருக்கோம்!” என்றவுடன், காதலர்களுக்கு அவர்கள் வந்த நோக்கம் புலப்பட்டது.

அதற்குள், படிவங்களை அலசியவன், “கேட்டதுல பாதி தொகை தான் சான்க்க்ஷன் ஆகிருக்கு… இன்னும் திரட்ட வேண்டிய தொகை நிறைய டா… என்னால சமாளிக்க முடியாது…” எதார்தத்தை சொல்லி, மறுத்து பேசின ஹரி, மாமாவிடம் திரும்பி, “மாமா! நீங்க வேற யாருக்காவது வீட்ட வித்துக்கோங்க!” தன் முடிவையே சொல்லி விட்டான்.

“அவசரப்படாத ஹரி! வீடு உனக்கு தான்! அத பற்றி பேச தான் நாங்க இங்க வந்திருக்கோம்!” அவர் பதில் சொன்னார்.

“அவனுக்கு தான் இப்போ நல்ல வருமானம் வருதே மகேஷ்! அப்படி இருந்தும், எதனால முழு லோன் கொடுக்க மறுக்கறாங்க?” மீரா வினவ, ஹரியும் அவனை ஆவலாய் பார்த்தான்.

“வருமானத்த பொறுத்த வரை எந்த குறையும் இல்ல மீரா… ஆனா எல்லாம் சமீப காலத்துல வந்தது… அதான் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிலையான வருமானம் இருக்கணும். ராயல்டி தொகை, சம்பள உயர்வு, எல்லாமே இந்த குறுகின காலத்துல வந்ததுனால, அதையெல்லாம் அடிப்படையா வெச்சு, அவன் கேட்ட கடன் தொகைய தர முடியல….”

அதை கேட்ட ஹரி விரக்தியில் சிரித்தான். “இது என்ன டா ஸிஸ்டம்… கடன் தொகைய கட்ட தகுதி இருக்கான்னு சோதிக்க தற்போதிய வருமானம் தானே முக்கியம். பழைய கணக்க பார்த்து என்ன பண்ண போறாங்க….” என்று கேட்க,

“அதானே மகேஷ்!” தன்னவனுடன் ஒத்தூதியவள், “அதுமட்டுமில்ல… நம்ம ஹரி பற்றி உனக்கு தெரியாதா டா… எந்தவித தாமதமும் இல்லாம, மாசாமாசம் ஈ.எம்.ஐ கட்டிடுவானே!” தன் ஆதங்கத்தை கொட்டினாள் மீரா.

வாடகை பணத்தில் கூட, எந்த சன்மானமும் எதிர்ப்பார்க்காதவனை பற்றி சொல்லித் தெரிய வேண்டுமா என்று தோன்றியது மகேஷுக்கு. அதே சமயத்தில், வங்கியில் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருந்த போதும், ஒரு சராசரி நபரை போல வெள்ளந்தியாய் கேள்வி கேட்கும் நண்பர்களை கண்ட மகேஷ் அவர்கள் வலியை உணர்ந்தான். அவன் பேச வார்த்தையின்றி போக, அரவிந்தன் பதில் சொன்னான்.

“அதெல்லாம் வங்கி விதிமுறைகள் மீரா. அத நம்ம மாற்றவும் முடியாது, கேள்வி கேட்கவும் முடியாது.” சொன்னவன், அருகில் இருக்கும் நண்பனை சேர்த்து அணைத்து, “நம்ம ஹரிய பற்றி, லோன் கொடுக்குற அதிகாரிக்கு என்ன தெரியும்.” ஹரி தோள்பட்டையில் தட்டிக்கொடுத்தவன், மேலும் பேசினான்.

“நண்பா! ஒரு நிர்வாகியா, நீ கேட்ட லோன் எங்களால வாங்கி தர முடியல டா; ஆனா, நண்பர்களா எங்களால அந்த பணத்த உனக்கு கொடுத்து உதவ முடியும்!” என்றவுடன் ஹரிக்கு அவர்கள் திட்டம் விளங்கியது.

அதுவும் அரவிந்தன், உதவுகிறேன் என்ற பெயரில், மொத்த சுமையும் தானே சுமப்பான் என்று நன்கு அறிந்தான்.

அவன் மறுத்து பேச நினைக்க, ராணியின் கணவர் முந்திக்கொண்டார். “ஆமாம் ஹரி! அரவிந்தன் சொல்றது சரி தான். உன்ன பற்றி எங்களுக்கு தெரியும். எனக்கும் நீ தான் இந்த வீட்ட வங்கிக்கணும்னு ஆசை. எனக்கு இதுல துளி கூட லாபம் வேண்டாம் டா. போட்ட பணம் திரும்ப கிடைச்சா போதும்….” சொன்னவரை ஆழமாய் பார்த்தான் ஹரி.

அவர் மேலும் பேசினார். “அதுமட்டுமில்ல ஹரி! நீ கொடுக்க போற மொத்த பணத்தையும், நான் வியாபரத்துல போட போறது இல்ல. நஷ்டம் கைமீறி போயிடக்கூடாதூன்னு தான் முன்னெச்சரிக்கையா இந்த வீட விற்கறேன். என்னோட தம்பி, அவனால முடிஞ்ச பணத்த எனக்கு அனுப்பி இருக்கான். உனக்கு தேவையான மீதி பணத்துக்கு, அத நான் கடனா தரேன். நீ அத எனக்கு மாசாமாசம் தந்தா போதும் டா!”

உதவுகிறேன் என்ற பெயரில், அன்பு செலுத்தவதில், ஒருவரை ஒருவர் மிஞ்சினர். இதையெல்லாம் கேட்ட மீரா, மனதில் ஒரு பதில் யோசித்தபோதும், ஹரி பேச காத்திருந்தாள்.

மறுப்பாய் தலையசைத்தவன், “இப்படி போட்டி போட்டு உதவ நினைக்கற உங்க எல்லாருடைய எண்ணமும் ரொம்ப உயர்ந்தது. ஆனா எனக்கு இதுல உடன்பாடு இல்ல…” சொல்லி முதலில் ராணியின் கணவரை பார்த்தான்.

“மாமா! லாபம் வேண்டாம்னு சொல்றது உங்க பெருந்தன்மை குணம். ஆனா அந்த லாபம், உங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டியது. என்னுடைய சூழ்நிலைக்காக அத நீங்க இழக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல…” பெருமூச்சுவிட்டவன்,

“இந்த வீட்ட வாங்கறவங்க கிட்ட முடிஞ்சா, எனக்கே வாடகைக்கு விட சொல்லுங்க… அது போதும்!” தெளிவாய் சொன்னவன், ஏக்கமாய், வீட்டை சுற்றி பார்த்தான்.

“வேணும்னா, மாமாவுக்கு கொடுக்க வேண்டிய லாபமும் சேர்த்து நான் தரேன் டா!” அரவிந்தன் குறிக்கிட,

கையால் வாயை பொத்தி ஜாடை காட்டியவன், “நீ உதவி செய்யறேன்ற பேருல என்ன செய்வன்னு எனக்கு தெரியாதா…” தீர்மானமாய் மறுத்தான் ஹரி.

“இல்ல ஹரி! இத கடனா தான் கொடுக்கபோறோம்… ஒப்பந்தம் போட்டுக்கலாம் டா… வட்டி கூட கொடு டா!” அரவிந்தன் யோசனை சொல்லிக்கொண்டே போக,

எதற்கும் மசியாதவன், “நோ வே நண்பா! உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு… ஏதாவது திடீர் செலவுகள் வரலாம்…” காரணங்கள் அடுக்கி திடமாய் மறுத்தான்.

“அதெல்லாம் யோசிக்காம பேசல டா….!” மகேஷ் தன் பங்குக்கு வாதம் செய்ய,

“இல்ல மகேஷ்! ஹரி சொல்றது தான் சரி! லோன் வாங்கறது வேற… நீங்க உதவுறது வேற!” குறுக்கிட்டாள் மீரா.

அவளும் ஹரியுடன் சேர்ந்து மறுப்பதாய் அனைவரும் நினைக்க, அவள் தனக்காக பேசியதை எண்ணி ஹரி நெகிழ்ந்தான். ஆனால் அவர்கள் எண்ணம் ஒரு நொடியில் மாறும் விதமாக இருந்தது, அவள் அடுத்த கேள்வி.

“மகேஷ்! அந்த லோன் என் பேருல எடுத்தா, முழுசா சான்க்க்ஷன் ஆகுமா டா?”

அவள் நோக்கம், அனைவரும் புரிந்துகொள்ள அரவிந்தன் முகமெல்லாம் புன்னகை.

“கண்டிப்பா மீரா!” மகேஷும் உற்சாகம் காட்ட,

“இல்ல மீரா! அது சரி வராது!” ஹரி தீர்கமாய் மறுத்தான்.

அவன் சொல்வதை சற்றும் பொருட்படுத்தாதவள், “மாமா! நான் ஹரி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். எங்க முடிவ ரெண்டு நாளுல சொன்னா போதுமா!” என்று கேட்டாள். அவரும் சரி என்று சம்மதம் சொல்ல, இவள் செயலில் கோபம் கொண்ட ஹரி,

“நீ என்ன தலைகீழ நின்னு அடம்பிடிச்சாலும், நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன் டி!” உறுதியாய் சொல்ல,

காதலர்கள் வாதத்தை பார்த்து மிரண்ட மாமா, புறப்பட எழுந்தார். அதை பார்த்து பழகின நண்பர்கள், ஹரி நிலமையை எண்ணி சிரித்து, அங்கிருந்து நகர்ந்தனர்.    

அவர்கள் கிளம்பியதும், வாயிற்கதவுக்கு தாளிட்டு வந்தவள், பழச்சாறு டம்ளர்களை சுத்தம் செய்ய எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். இவள் என்ன சொல்லி மடக்கினாலும், தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று, தனக்கு தானே சொல்லிக்கொண்டான் ஹரி. மனதை ஒருமுகப்படுத்தியவன் கண்கள் மட்டும் அவள் போகுமிடம் எல்லாம் தொடர்ந்தது.

வேலைகளை முடித்து ஹாலுக்கு வந்தவள், தன் பொருட்களை எடுத்து கொண்டு, “நாளைக்கு பார்க்கலாம் ஹரி!” மெல்லிய குரலில் சொல்லி புறப்பட்டாள். இவளிடம் பேசி ஜெயிப்பது ஒரு சவால் என்றால், பேசாமல் கோபம் கொள்ளும் இவளை சமாதானப்படுத்துவது அதைவிட கடினம் என்று உணர்ந்தவன், தழைந்து போக முடிவு செய்தான்.

“என்ன டி! கோவமா?” மெல்லிய குரலில் கேட்டான் ஹரி.

தன்னவனை திரும்பி பார்த்தவள், “இல்ல ஹரி! நேரமாகுது… வீட்டுக்கு போகணும்!” எதுவுமே நடக்காதது போல் பதிலளிக்க, அதில் பொறுமை இழந்தவன்,

“ஓ! மேடமுக்கு கோபம் வந்தா, பேசாம போறது தான் உங்க புது யுக்தியா!” கேட்டே விட்டான்.

அதை கேட்டு, அவனருகில் வந்தவள், “எழுத்தாளரே! கோபமும் கிடையாது, யுக்தியும் கிடையாது… நீங்க தானே சொன்னீங்க… நான் என்ன அடம்பிடிச்சாலும், உங்க மனச மாத்திக்க மாட்டேன்னு… அப்புறம் எதுக்கு வீணா உங்ககிட்ட வாக்குவாதம்…” நக்கலாய் பதிலளித்து நகர்ந்தாள்.

அவள் கையை அழுத்தி பிடித்து தன் பக்கம் திருப்பியவன், “இந்த வீடு இல்லேன்னா என்ன மீரா… நல்ல நிலமைக்கு வந்த உடன வேற வீடு வாங்கிக்கலாம் டி!” எதார்தத்தை எடுத்துரைக்க,

“வேற வீடு, இந்த வீட்டுக்கு ஈடாகுமா?” கேள்வியை திருப்பி, இந்த வீடு அவர்களுக்கு எவ்வளவு பொக்கிஷம் என்று நினைவூட்டினாள்.

அதற்கு பதில் சொல்ல தடுமாறியவன், “உண்மை தான் மீரா; ஆனா அதுக்காக நீ உன்ன வருத்திக்கிட்டு கடன் சுமை ஏத்துக்கறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல…” மனம் திறந்து பேசினான்.

“இது…இது… இது தான் ஹரி உன்கிட்ட பிரச்சனை. சந்தோஷத்த மட்டும் எனக்கு அள்ளி அள்ளி தர நினைக்கற… கஷ்டம்னு வரப்ப, மொத்தத்தையும் நீயே சுமக்கணும்னு நினைக்கற….” தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை கொட்டியவள், அவன் கன்னத்தை வருடி, “இது நம்ம வாழ்க்கை டா…எத்தனை முறை சொல்றது…நீ… நான்னு பிரிச்சு பார்க்காதன்னு…” மனம்நொந்து பேசினாள்.

அவள் பேசியதில் எவ்வளவு நியாயம் இருந்ததோ, தன் யூகத்திலும் அதே அளவிற்கு நியாயம் இருப்பதை புரியவைக்க நினைத்தான்.

“நான் அப்படி எல்லாம் பிரிச்சு பார்க்கல மீரா; உனக்கும் பணம் போட உரிமை உண்டு… அதான் டவுன்பேமென்ட் கட்ட உன் சேமிப்பும், லோன் நான் எடுக்கலாம்னும் நெனச்சேன்… ஆனா இப்போ….”

அவன் விளக்கும் முன், “இப்போவும் நீ தான் இந்த வீட்டுக்கடன் மொத்தமும் அடைக்கபோற!” அலட்டல் இல்லாமல் சொன்னவளின் விழிகளை ஆழமாய் பார்த்தான் ஹரி.

கையில் இருந்த பொருட்களை கீழே வைத்தவள், அவன் விரல்களை கோர்த்து, “ஆமாம் ஹரி! லோன் மட்டும் தான் என் பேருல இருக்கும். மற்றபடி ஈ.எம்.ஐ கட்ட என்னுடைய எழுத்தாளர், அவர் வருமானத்துலேந்து, நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டுக்கு மாசம் தவறாம பணம் போட்டுடணும்… சரியா!” குறும்பாய் கேட்க, அவள் உரிமை கொண்டாடுவதை எண்ணி, அவளை கண்சிமிட்டாமல் பார்த்தான்.  

அவன தோள்பட்டையை இறுக பிடித்து உலுக்கியவள், “சொல்லுடா… பணம் போடுவ தானே… ஈ.எம்.ஐ கட்டுவ தானே!” அப்பாவியாக முகம் வைத்து கேட்க, அதற்கு மெலிதாய் தலை மட்டும் அசைத்தான்.

“எழுத்தாளரே! உங்க முகத்துல ஒரு சுரத்தே இல்ல… நீங்க சரியான நேரத்துல பணம் போடலேன்னா, அப்புறம் வங்கி ஆளுங்க, உங்க ராஜகுமாரிய பிடிச்சு வெச்சுப்பாங்க…” முகத்தை அப்பாவியாக வைத்து பேச, அவனும் மனம் திறந்து சிரித்தான்.

“கட்டுவேன் டி!” சொல்லி அவளை குறும்பாய் பார்த்தவன், “ஆனா, நான் பணம் கட்டலேன்னாலும், இந்த ராஜகுமாரிய அவங்க பிடிச்சு எல்லாம் வெச்சுக்க மாட்டாங்க… அவங்களுக்கு ஹரி அளவுக்கு பொறுமை எல்லாம் இல்ல…” கிண்டல் செய்து கண்சிமிட்ட, அவளும் பொய்கோபம் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

“சரி கிளம்பு! நானும் உன்கூட வரேன்” என்றான்.

“பேசிகிட்டே நடக்க போறோமா எழுத்தாளரே!” கண்கள் அகல கேட்டாள்.“ம்ஹூம்!” மறுப்பாய் தலையசைத்தவன்

தொடர்ந்து படிக்க Click Here –> அன்பின் ஆழம் 30.2