அன்பின் ஆழம் – 20.2

அலுவலகத்திலிருந்து திரும்பியவள், வீட்டை திறந்த அதே சமயம், எதிர் வீட்டிலிருந்து, ராணி தன் பிள்ளைகளுடன் வெளியே வந்தாள். அவள் உடுத்தி இருந்த காட்டன் புடவை, கையில் வைத்திருந்த பை எல்லாம் கவனித்தவள், 

“வெளியே கிளம்புறீங்க போல இருக்கு அக்கா!” வினவினாள் மீரா.

“வேற எங்க? சூப்பர் மார்கெட்டுக்கு தான்!” அவள் சலித்து கொள்ள, விதியே என்று கிளம்பிய பிள்ளைகள்,

“அம்மா! அம்மா! நாங்க மீரா அத்தையோட விளையாடிகிட்டு இருக்கோம்! கடையில ரொம்ப போரா இருக்கும்!” என்று அடம்பிடிக்க, அதை கண்டு சிரித்த மீரா,

“விட்டுட்டு போங்க அக்கா! நானும் ஹரி வர வரைக்கும் சும்மா தான் உட்கார்ந்துட்டு இருப்பேன்.” என்று சொல்ல, பிள்ளைகள் மகிழ்ச்சியில் துள்ளினர்.

ராணியும் வேறுவழியில்லாமல், தலையசைக்க, குழந்தைகள், வீட்டிற்குள் திரும்பி, கை நிறைய விளையாட்டு பொருட்களை அள்ளிவந்தனர்.

“அத்த! இது எனக்கு மகேஷ் மாமா வாங்கி கொடுத்த பரிசு…. இது நான் விளையாட்டு போட்டியில ஜெயிச்சது!” என்று பிள்ளைகள் மாறி மாறி கூக்குரலிட,

அதற்கு தலையாட்டி கொண்டே கதவை திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு, தன்னவன் தனக்கும் விளையாட ஒரு பரிசு பொருள் வாங்கி வைத்திருந்ததை கவனித்து பிரம்மித்து போனாள். சிறு பிள்ளை போல் விரைந்தோடியவள், குளுகுளுவென்று காற்று வீசும் ஃப்ரிட்ஜை திறந்து அதில் முகத்தை புதைத்து கண்மூடி குளிர் காய்ந்தாள். காய், பழம், பால் என்று நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்த பொருட்களை, நோக்கியவள், ஃப்ரிட்ஜின் கதவை மூட, அதில், அவளுக்கு பிடித்த பிள்ளையார் படம் பொருத்திய மேக்னெட்டை கண்டாள். அதன் கீழ்பகுதியில் தொங்கி கொண்டிருந்த காகிதத்தை, பிரித்து படித்தாள்.

‘சம்மதம்! நிபந்தனைகளுக்கு உட்பட்டு!’ அதே மூன்று வார்த்தைகள்….’முசுடு எழுத்தாளர்’ தன்னவனை செல்லமாக திட்டி, குழந்தைகளை நோக்கி நடந்தாள்.

அவள் விளையாட வருவதாய் எண்ணி, குழந்தைகள் ஆவலாய் பொம்மை நீட்ட, அதை வாங்கி கீழே வைத்தவள், “குட்டீஸ்! அத்தைக்கு ரொம்ப பசிக்குது டா!” கண்கள் சுருங்க, வயிற்றை தடவினாள். குழந்தைகளும் அந்த நடிப்பை நிஜமென நம்பி, அவளையே உற்று பார்த்தனர்.

“சொல்லுங்க! அத்த, என்ன இனிப்பு செய்யட்டும்?”

 “இனிப்பு வேண்டாம் அத்த… அது பல்லுக்கு நல்லது இல்லன்னு அம்மா சொல்லிருக்காங்க” மழலையாய் மறுத்து, “உங்களுக்கு நூடுல்ஸ் செய்ய தெரியுமா?” என்று மூத்தவள் கேட்க, மீரா, மென்மையான சிரிப்புடன், தெரியும் என்று தலையசைத்து சமையலறைக்குள் புகுந்தாள்.

அன்று பிறந்த நாள் விழாவிற்கு சமைக்க வாங்கியிருந்த, சேமியா, மற்றும் மசாலா பொடிகள் இருந்தன. ஹரி வாங்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து, அரை மணி நேரத்தில், சுட சுட உப்புமாவை தயாரித்தாள்.

“ஹரி மாமா, நூடுல்ஸ் வாங்கி வெக்கல… ஸோ, அத்த, சேமியாவுல நூடுல்ஸ் செஞ்சிருக்கேன்” என்று விளக்கி, அவர்களுக்கு வெஜிடபிள் உப்புமாவை பரிமாறினாள். அவர்களும் அதை கெட்சப்புடன் புசித்து,

“சூப்பரா இருக்கு அத்த!” என்று பாராட்டினர். கவனம் சாப்பிடுவதில் போக, விளையாடுவதை பற்றி மறந்தனர். ஹரி வர, இன்னும் அரை மணி நேரம் இருப்பதை உணர்ந்தவள், அவனுக்கு இரவு உணவு செய்ய ஆயத்தமானாள்.

ஒரு பக்கம் பருப்பு வெந்து குக்கர் ஓசை அடங்க, மற்றொரு அடுப்பில், கத்தரிக்காயும், முருங்கைக்காயும், புளி தண்ணீரில் கொதித்து, வீடெங்கும் அதன் வாசத்தை பரப்பின.

“ஹரி மாமா! ஹரி மாமா! பாருங்க அத்த நூடுல்ஸ் செஞ்சிருக்காங்க!” உள்ளே நுழைந்தவனிடம் கோஷம் போட, அவர்கள் குரலை கேட்டு, சமையலறை வாசலுக்கு ஓடி வந்தாள் மீரா.

குழந்தைகளை செல்லம் கொஞ்சிவிட்டு, சாப்பிட சொன்னவன், தன்னவளை பார்வையால் வருடியபடி, அவள் அருகே நடந்தான்.

“அதுக்குள்ள சமைக்க ஆரம்பிச்சிட்டியா? நான் இன்னும் என் நிபந்தனைகள சொல்லவே இல்லையே!” குறும்பாக கண்சிமிட்டினான்.

“அடப்போடா! நீயும் உன் நிபந்தனைகளும்!” அலுத்துகொண்டவள், “போ! போ! ட்ரெஸ் மாத்திட்டு வா!” கையில் இருந்த கரண்டியால், அவன் முழங்கையில் செல்லமாக அடித்து விரட்டினாள்.

பருப்பு சேர்த்து, ஒரு கொதி வந்த சாம்பாரை சுவை பார்த்து இறக்கி வைத்தாள். பிள்ளைகள், மேலும் கொஞ்சம் சாப்பிடுவதாக சொல்ல, அவர்களுக்கு பரிமாறியவள், தங்களுக்கு பருக ஏலக்காய் டீயும் எடுத்துவந்து அவர்கள் அருகில் அமர்ந்தாள்.

ஹரி வந்ததும், அவனை ஊட்டிவிட சொல்லி அடம்பிடித்து, அவன் மடியில் இளையவன் ஏறினான். அவனை ஒரு பக்கம் உட்கார வைத்து, ஸ்பூனால் ஊட்டிவிட்டு கொண்டே, டீயை பருகினான் ஹரி.

“என்னடா! ஃப்ரிட்ஜ் வாங்கி அசத்திட்ட?” கேட்டு, கொஞ்சம் டீயை பருகினாள்.

“பின்ன!” என்று சலித்து கொண்டவன், “வார நாட்களுல, நீ சமைக்க வருவ! சனியும், ஞாயிறும், வீட்டு சாப்பாடு சாப்பிட்டா தானே உடம்புக்கு நல்லது… அத நீ வெள்ளிகிழமையே சமைச்சு ஃப்ரிட்ஜுல வச்சிட்டு போவன்னு…” நக்கலாக பதிலளிக்க,

“இவ்வளவு ஆசைய வச்சுகிட்டு, சம்மதம் சொல்ல இழுத்தடிக்கற!” பொய்கோபம் கொண்டவள், அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.

“ஆ..ஆ… வலிக்குது டி!” அவன் அலற, மடியில் இருந்த பிள்ளை, அரண்டு போக, மீரா அருகில் இருந்த மூத்தவள், “அத்த! எதுக்கு மாமாவ கிள்ளறீங்க?” என்று கேட்டாள்.

“உம்… உங்க மாமா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல!” நமுட்டு சிரிப்புடன் சீண்டும் தன்னவனை முறைத்து கொண்டே சொன்னாள். அவன் இரண்டு நாட்களாக அவளுக்காக காத்திருந்த கதையை சொல்லி அவள் வாயை அடைத்தான்.

சில நிமிடங்களில், நால்வரும் பரமபதம் விளையாட, குழந்தைகள், ஏணியில் ஏறுவதும், பாம்புகளில் சறுகுவதுமென ஆட்டதில் மூழ்கியிருந்தனர். அதற்கிடையில், ஹரி, அரவிந்தனிடம் பேசியதை எல்லாம் சொல்ல,

அவன் அகிலாவை பற்றி சொன்னவை, அவளுக்கு பிரமிப்பாக இருந்த போதிலும், “நான் தான் அன்னைகே சொன்னேனே டா! அவங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருக்குன்னு…என் பேச்ச கேட்காம, நீ அவன எதுக்கு இப்படி எல்லாம் கேள்வி கேட்ட?” நண்பன் சங்கடபட்டிருப்பான் என்ற ஆதங்கத்தில் கேட்டாள்.

“நீயும் தான் என் பேச்ச கேட்காம, கீதா வீட்டுலேந்து கிளம்பின அடுத்த நிமிஷமே அஞ்சலிக்கு போன் செஞ்சிருக்க….” கண்ணை உருட்டி, அவள் அத்துமீரலை ஹரி சுட்டி காட்ட, 

அதற்கு அசடுவழிந்தவள்,” அதான், அவங்க சமாதானம் ஆயிட்டாங்களே!” கொஞ்சும் குரலில் பேசி, அவனை மயக்கினாள்.

அவள் முகபாவனையை இரசித்துகொண்டே, தாயத்தை உருட்ட, காயை நகர்த்திய இளையவன், “மாமா! நீங்க மறுபடியும் பாம்பு தலையில வழுக்கி விழுந்துடீங்க!” என்று கத்தினான்.

“நான் வழுக்கி விழுந்து ரொம்ப நாள் ஆச்சு!” தன்னவளை பார்த்து ஹரி கண்சிமிட்ட,

வெட்கத்தை காட்டிகொடுக்கும் முகத்தை தாழ்த்தி, ஆட்டதில் கவனம் செலுத்தினாள், மீரா.

ஆட்டம் சூடு பிடிக்க, நால்வரும் அதில் மூழ்கி இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த ராணி, “நல்லா காதலிக்கறீங்க!” அவர்கள் குழந்தைகளுடன் சரிசமமாக விளையாடுவதை கிண்டல் செய்தாள். பின்பு, பிள்ளைகளை வீட்டிற்கு அழைக்க, “ஹரி மாமா! நாளைக்கும் இதே போல விளையாடலாம். ஸ்னேக் அண்ட் லேடர்ஸ் இங்கையே இருக்கட்டும்” அதை வைத்துவிட்டு, மனமில்லாதவர்களாய் வீட்டிற்கு புறப்பட்டனர்.

குழந்தைகள் கொண்டு வந்த பொம்மைகளை, ஹரி எடுத்து வைக்க, மீரா அவனுக்கு சாப்பிட, ஒரு தட்டில், உப்புமா எடுத்து வந்தாள். அதை பெற்றுகொண்டவன், சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து சுவைத்தான்.

அவன் அருகில் அமர்ந்தவள், “பிடிச்சிருக்கா!” என்றாள் மெல்லிய குரலில்.

“உம்! உன் சமையலுக்கு என்ன….” பாராட்டி, தொடர்ந்து உண்டான்.

“அதுக்கில்ல டா! அரவிந்தனுக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரிஞ்ச அளவுக்கு, உன் விருப்பங்கள் எனக்கு தெரியலையே!” என்று வருந்த,

“ச்சீ போடி!” என்று அவள் கையை தட்டிகொடுத்தவன், “அவன் அளவுக்கு எனக்கு குறிப்பா, இது இது இப்படி இருக்கணுமுன்னு சொல்ல தெரியாது! அவ்வளவுதான்!” என்றான்.

இன்னும் சமாதானம் ஆகதவளாய், தரையை பார்த்து சிந்திக்க, “ஓய்! நல்லா இல்லாததுதனால தான், எனக்கு மட்டும் கொடுத்தியா!” அவளை சிரிக்க வைக்க சீண்டினான்.

அவளும் மென்மையான சிரிப்புடன், இல்லை என்று இடம் வலமாய் தலையசைக்க, “அப்போ! இந்தா, நீயும் சாப்பிடு!” என்றவனின், அன்புக்கு பணிந்து, கையை நீட்டினாள்.

நீட்டும் அவள் கரத்தை தடுத்து, அவனே ஊட்டிவிட்டான். அதை சற்றும் எதிர்பார்க்காதவள், நெகிழ்ந்து போக, “எழுத்தாளரே! இதெல்லாம் உங்களுக்கு காதலிக்குற பட்டியல்ல வராதா!” வம்பிழுத்தாள்.

எத்தனை நேரம், காத்திருந்தேன்…இவள் எழுத்தாளரே என்று அழைப்பதற்காக,’ என்று மனதில் நினைத்தவன், “அப்பாடா! இப்போதான் என் மீரா ஃபார்முக்கு வரா!” என்று சொல்லி அவளை மேலும் சீண்டினான்.

அவன் உரிமை கொண்டாடுவதை இரசித்தும், இரசிக்காதவளாய், “என் கேள்விக்கு பதில் சொல்லுங்க எழுத்தாளரே!” நச்சரித்தாள்.

மேலும் ஒரு வாய் அவளுக்கு வலுகட்டாயமாக ஊட்டி, “இதுல என்னடி இருக்கு. எத்தன முறை நம்ம ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்கோம்!” வழக்கமான ஒன்று தானே என்றான்.

“அது வேற ஹரி! இப்போ, நீ என் காதலன் டா! உன்னுடைய சின்ன சின்ன ஸ்பரிசமும், சிலிர்ப்ப கொடுக்குது… வார்த்தையால விவரிக்க முடியாத ஒரு வித உணர்ச்சிய தூண்டுது!” மெய்மறந்து அந்த உணர்வுகளை அவள் வர்ணிக்க,

“அடடா!” என்று பதறி, விலகி உட்கார்ந்தவன், “இனிமே இதெல்லாம் செய்ய மாட்டேன்” என்று பின் வாங்கி, தன் நிபந்தனைகளை சொல்வதாக சொல்லி, பேச்சை திசைதிருப்பினான்.

“ஒத்துக்க மாட்டீயே! ஒண்ணு, பேசி வாய் அடைக்கற; இல்ல ஊட்டிவிட்டு வாய் அடைக்கற!” புலம்பியவள், “ நீயே அதிசயமா ரொமான்டிக்கா ஏதாவது செஞ்சாலும், அத நான் பேசியே கெடுத்துடறேன்” என்று அவள் முணுமுணுக்க, அதை கண்டு சிரித்தான்.

அவள் முகத்தை கையில் ஏந்தியவன், “மிஸ்டர் வரதன் ஒரு வார்த்தை சொல்லட்டும்; அப்புறம் இந்த ஹரி உன்ன எப்படி காதலிக்கறான்னு பாரு!” கண்பார்த்து பேச, அவன் கையை ஒரு நொடியில் உதறியவள்,

“போடா! அது அது அந்தந்த காலத்துல செஞ்சாதான் மதிப்பு!” தர்க்கம் செய்தவள், “சரி! உங்க நிபந்தனைகளை சொல்லுங்க எழுத்தாளரே! நான் வீட்டுக்கு கிளம்பணும்” என்றாள்.

“வா! உன் வீடு வரைக்கும் நடந்துகிட்டே பேசலாம்!” என்றதும் அவள் கண்கள் மகிழ்ச்சியில் மிதந்தது. இரவு உணவுக்கு, அவள் சமைத்து வைத்ததை பற்றி, விவரங்கள் சொன்னவுடன் புறப்பட்டனர்.

என்னை அம்போன்னு விட்டுட்டு போறீயே மீரா!’ சன்னி புலம்புவதை, வழக்கம் போல, காதில் வாங்கிகொள்ளாமல், சாலையில் நடக்க துவங்கினர்.

“நீ எனக்காக சமைக்க நினைக்கறது சந்தோஷம் மீரா!” உடன்பாடு கருத்தோடு தொடங்கியவன், “நீயும் தினமும், அலுவலகத்துலேந்து அசதியா வருவ… அதனால எளிமையான உணவ மட்டுமே சமைச்சு வை…உன்னால முடியாத நாட்களுல, சமைக்கலேன்னாலும் பரவாயில்ல… உன்ன வருத்திக்கிட்டு எதுவும் செய்ய கூடாது, புரியுதா?” என்றதும், சரி என்று தலையசைத்தாள்.

“தினமும், நீ ஆறு மணிக்கு முன்னாடியே வீட்டுக்கு கிளம்பிடணும். எனக்காக காத்திருக்க கூடாது; உங்க வீட்டுல தான் நீ டின்னர் சாப்பிடணும்.” சொன்னவனுக்கு ஏனோ ஒரு தயக்கம், “வெள்ளி கிழமை ஒரு நாள் வேணுமுன்னா, என்னோட சாப்பிடு… அன்னைக்கு நம்ம ஒண்ணா சேர்ந்து சமைக்கலாம் சரியா!” என்றதும், அவள் முகத்தில் ஒரு புன்னகை.

“ஆனா, சனி, ஞாயிறு, இங்க அவசியமில்லாம வரவே கூடாது!” ஆள்காட்டி விரலை காட்டி மிரட்ட, அவள் முகத்திலிருந்த புன்னகை நீர்குமிழி போல உடைந்தது.

அவன் அடுத்த நிபந்தனையை தொடங்கும் முன், “எழுத்தாளரே! எனக்கு ஒரு சந்தேகம்!” என்று அவள் முந்திக்கொண்டாள்.

“உம்! சொல்லு!” என்று அவன் நடக்க, “நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும், இப்படி தான் தினமும் எங்க வீட்டுக்கு அனுப்பிடுவீங்களா!” முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு கேட்க, நடப்பதை நிறுத்தி அவளை முறைத்தான்.

“அதுகில்ல டா! அம்மா, அப்பாவோட நான் நேரம் செலவிடணுமுன்னு நீ யோசிக்கறதுனால, அப்படி கேட்டேன்.” விளையாட்டாக கேட்டதை, பக்குவமான தோரணையில் கேட்டு சமாளித்தாள்.

“அவனும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, “அதெல்லாம், எனக்கு சொல்ல தெரியல மீரா! ஆனா, கல்யாணம் செய்துகிட்டு, நீ மட்டும் என்னோட வரணுமுன்னு நினைக்கற அளவுக்கு நான் சுயநலவாதி இல்ல டி!”  அவள் முகம் பார்த்து சொல்ல, அவன் பதிலில் அவள் நெகிழ்ந்தாள்.

அவள் வீட்டின் வாயிலை நெருங்கிவிட்ட போதிலும், அவன் மனதிலிருந்த முக்கியமான ஒன்றை சொல்ல முடியாமல் தவித்தான். அவளும், அவனிடம் விடைபெறுவதாய் சொல்லி கதவை திறக்க,

“அப்புறம் மீரா!” என்று மெல்ல தொடங்கினான், ”எங்கம்மா…எங்கம்மா… இங்க வரப்ப, நீ… உன்னால… உன்னால வந்து சமைக்க முடியாது…” திக்கிதிணறி சொல்லி முடித்தான்.

முன்வாசற்கதவுக்கு வெளியே நின்றவனின் கைகளை, கம்பிகளின் இடுக்கில் பிடித்து கொண்டவள், “இதெல்லாம், நீ எனக்கு சொல்லி தெரியணுமா டா?”

ஹரி…” என்று மெல்லிய குரலில் அழைத்தவள், “நீ ஆரோக்கியமான வீட்டு சாப்பாடு சாப்பிடணும்…அதான் என் நோக்கம்… அத யாரு கையால சாப்பிட்டா என்ன…” பக்குவமாய் பேச,

“அது மீரா…” விளக்க முயன்றவனை குறுக்கிட்டு, “அவங்க உன் அம்மா டா! அவங்களுக்கு தான் முன்னுரிமை! எதையும் யோசிக்காம கிளம்பு” என்றாள்.

அவனும் சரி என்று சொல்லி, நகர, “எழுத்தாளரே! நான் வேணுமுன்னா, உங்களுக்கு வீடு வரைக்கும் துணைக்கு வரட்டுமா!” வம்பிழுத்து கண்சிமிட்டினாள்.

“ச்சீ போடி!” கன்னத்தில் குழிவிழ அவன் சிரிக்க பார்த்தவளுக்கு மனசு லேசானது.

கண்ணுகெட்டும் தூரம் வரை கதவருகில் நின்று அவள் பார்க்க,

சிந்தையெல்லாம் நிறைந்தவளின் நினைவுகளில் அவன் நடக்க,

இருவருக்கும் இடையே, பாதை நீண்ட போதும்,

இதயங்கள் பாசத்தால் நெருங்கிய மாயம் – அது

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…