அன்பின் ஆழம் – 15

ஆஃபிஸுக்கு நேரமாகுதே ஹரி! இதெல்லாம் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் செய்யலாமே!” ஊரிலிருந்து கொண்டுவந்த பொருட்களை ஏறக்கட்டி கொண்டிருந்த மகனிடம் வினவினாள் வாசுகி.

“இல்லம்மா! நான் இன்னைக்கு ஆஃபிஸுக்கு போகல… வெளிய முக்கியமான வேல இருக்கு!” எதையோ மும்முறமாக தேடிக்கொண்டே பதில் சொல்ல,

“ஆஃபிஸ் லீவு போட்டுட்டு அவளோட ஊர் சுத்த போற… அதானே!” தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல், வாசுகி முகம் சுளித்தாள்.

வாதத்தை வளர்க்க விரும்பாதவன், எழுந்து, அவளருகே நடந்தான். அவள் தோள்களை இறுக பிடித்து, “ப்ளீஸ் மா!” என்று கெஞ்சலாக தொடங்க, அவனை ஆழ்ந்து பார்த்தாள் வாசுகி.

“என் கதை பதிப்பிக்கும் விஷயமா, முதல் முதலா ஒருத்தர சந்திக்க போறேன். உனக்கு இதுல உடன்பாடு இல்லன்னு எனக்கு தெரியும்… நீ என்ன வாழ்த்தலன்னாலும் பரவாயில்ல… தயவு செய்து மனச காயப்படுத்தறா மாதிரி எதுவுமே சொல்லிடாத…” விரக்தியாக பேச, அவள் சிலை போல நின்றாள்.

அவனே மேலும் பேசினான், “நம்பு மா! உன்ன எதிர்த்து நான் எதையும் செய்ய மாட்டேன். ஒரேவொரு சந்தர்ப்பம் கொடு… உன் ஆசியில்லாம என்னால எதையும் சாதிக்க முடியாது….” அவள் நல்வார்த்தை சொல்லமாட்டாளா என்று ஏங்கினான். பிடிவாதமாய் வாசுகி நிற்க, மனம்விட்டாவது பேசினேனே என்ற திருப்தியில், ஹரி நகர்ந்தான்.

இரண்டு மணி நேரம் அவரவர்கள் பணியில் மூழ்க, வீட்டில் மௌனம் நிலவியது. மீரா கொடுத்த சட்டையை அணிந்து பதிப்பாளரை சந்திக்க தயாராகி வந்தான்; அப்பா நிழற்படம் முன் கண்மூடி வேண்ட, அவன் நெற்றியில் ஒரு தீண்டலை உணர்ந்தான்.

கண்கள் திறந்து பார்க்க, “நல்லபடியா போயிட்டு வா! உன் மனம் போல் எல்லாம் நடக்கட்டும்.” மென் குரலில், வாழ்த்தி, நெற்றியில் திருநீறிட்டாள் வாசுகி. வெற்றியின் உச்சத்தையே தொட்ட மனநிறைவில், அவளை ஆறத்தழுவி புறப்பட்டான் ஹரி.

பதினோறு மணியளவில், பதிப்பாளரின் அலுவலகத்தில் அமர்ந்து சுற்றி முற்றி பார்த்தவன் பெருமூச்சுவிட்டான். பல இடங்களுக்கு, கதை எழுதும் தன் விருப்பத்தை பற்றி விண்ணப்பித்திருந்தான். இவர்கள் அந்தளவுக்கு பிரபலமானவர்களாக இல்லாத போதும், தனக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தவர்கள் என்ற மரியாதை அவனுக்கு இருந்தது. பேரும், புகழும் யாருக்கும் ஒரே நாளில் வருவதில்லை என்ற நிதர்சனத்தை புரிந்துகொண்டிருந்தான். மற்றபடி, அவர்கள் சொல்லும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் ஒத்துப்போனால், இவர்கள் மூலமாக தன் கதைகளை பதிவிடுவதில், எந்தவித தயக்கமும் இல்லை என்றும் தெளிவாக இருந்தான்.

“வாங்க மிஸ்டர் ஹரி!” சிரித்த முகமாக கைகுலுக்கி அழைத்தார் ஸ்ரீராம். அவனும் பதிலுக்கு வணக்கம் சொல்ல, அவனை தன் பிரதானமான அலுவலக அறைக்கு வரும் படி அழைத்தார்.

“எங்க பப்ளிகேஷன் மூலமா, உங்க கதைகளை பதிப்பிக்க நினைக்கறீங்களே… மிக்க மகிழ்ச்சி!” என்று தொடங்கியவர், கதை எழுதும் அவன் ஆர்வத்தை பற்றியும், இத்தனை கதைகள் எழுதியும், நீண்ட காலமாக பதிபிக்காத காரணங்களை பற்றியும் வினவினார்.

உண்மை காரணங்களை சொல்ல, அவன் பேச்சில் இருந்த நேர்மையை மெச்சியவர், தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.

“இந்த நிறுவனம் தொடங்கி நாங்கு வருடங்கள் ஆகுது. கைவிட்டு எண்ணுகிற அளவுக்கு தான் ஊழியர்கள். பெரும்பாலான வேலைகளை நானே பார்த்துக்கறேன். இது வர ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கோம்.” விளக்கி, சுழல் நாற்காலியில், சாய்ந்து உட்கார்ந்தவர், மேலும் பேசினார்,

“பெருமைக்கு சொல்றேன்னு நினைக்காதிங்க…. எல்லாமே மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்றது… இன்னும் சொல்லபோனா, அதுல மூன்று கதைகள் திரைபடமா கூட வந்திருக்கு; ஏழு புத்தகங்கள், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தின்னு மொழிபெயர்ப்பும் செய்திருக்கோம்.” நிறுவனத்தின் அருமைபெருமைகளை எடுத்துரைத்தார்.

அனைத்தையும், பணிவுடன் முகத்தில் மென் சிரிப்புடன் உள்வாங்கினான் ஹரி.

“முழு கதையோட நகல் கேட்டிருந்தேனே! கொண்டு வந்திருக்கீங்களா?” என்றதும், முகத்தில் பூரிப்புடன், ஹரி, அவர் முன் நீட்டினான்.

கவனமாக அதை கையில் வாங்கியவர், கண்ணில் ஒற்றி கொண்டு, கடவுளை பிரார்தித்து, முதல் பக்கத்தை திருப்பினார். மனதை கவரும் விதமாக தொடங்கிய கதையின், மேலும் சில பக்கங்களை புரட்டி பார்த்துவிட்டு, ஹரியை நோக்கினார்.

“நீங்க அனுப்பின நாலு கதையோட கதை சுருக்கமும் நல்லா இருந்துது. ஆனா புது முகமோ, பிரபலமான முகமோ, நாங்க ஒவ்வொரு கதையா தான் பதிபிப்போம். இந்த கதை ரொம்ப நல்லாயிருந்துனால, இதுலேந்து தொடங்கலாம்னு யோசிச்சேன். இதுல உங்களுக்கு சம்மதமா?” என்று வினவினார்.

‘இது எனக்கும் ரொம்ப ஸ்பெஷல் ஆச்சே! அம்மா-பாட்டி உறவை பற்றியது; மீரா, தேவதையாக என் வாழ்க்கையில் நுழைய காரணமான கதை’ மனதில் நினைத்தவன், “பரிபூரண சம்மதம்!” என்று நெகிழ்ந்தான்.

“நல்லது!” என்று தலையசைத்தவர், வலதுபுறம் இருந்த டிராவிலிருந்து, ஒரு ஃபைலை எடுத்து, ஹரியிடம் நீட்டினார்.

“உங்க புத்தகம் பதிப்பிக்கும் சம்பந்தமான ஒப்பந்தத்தோட நகல் இதோ!” என்றதும், அவனும் அதை பணிவாக வாங்கி கொண்டான். அவன் அதன் பக்கங்களை ஆராய,

“எடிடிங்க், ராயல்டி, பிரிண்டிங்க், விளம்பரம், ரைட்ஸ் போன்ற எல்லாம் முக்கியமான தகவல்களும் அடங்கியிருக்கு. வீட்டுக்கு போய் நிதானமா படிச்சு பாருங்க, உங்களுக்கு சரின்னு பட்டா, அடுத்த வாரமே கையொப்பம் இடலாம்;” என்று சொல்லி, “புத்தக அட்டையும், உங்க புகைப்படமும் தயாரா இருந்தா, விளம்பரம் செய்ய வசதியா இருக்கும்?” யோசனை சொன்னார்.

“ம்…ஏற்பாடு செய்யறேன். அடுத்த வாரம் வரப்ப எடுத்துட்டு வரேன்.” சொல்லி எழுந்துவன், நன்றி தெரிவித்து கைக்குலுக்கினான்.

மதியம், நேராக அலுவலகம் சென்றவன், நண்பர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டான். ஒப்பந்தத்தை, அவர்களுடன் விவரமாக கலந்தாலோசிக்க நினைத்தான்.

“அரவிந்தா! சாயங்காலம், உங்க வீட்டுல சந்திச்சு, இந்த ஒப்பந்தம் பற்றி பேசலாமா டா?” கேட்டான் ஹரி. தன் வீட்டிற்கு மீராவை அழைத்து செல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ஹரி இருப்பதை புரிந்து கொண்டு,

“இதெல்லாம் என்ன கேட்கணுமா டா!” உரிமையோடு வா என்றான். மகேஷும், அவன் நிலமையை புரிந்துகொண்டு, வீட்டில் வேலை இருப்பதாக சொல்லி தட்டிக்கழித்தான்.

மாலை பணியிலிருந்து திரும்பிய மூவரும், அகிலா தயாரித்த மசாலா டீயும், பஜ்ஜியையும் விழுங்கி கொண்டே, பால்கனியில், ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த நிபந்தனைகளை பற்றி பேசினர். காதலர்களை தனிமையில் விடும் பொருட்டு, ஏதோ ஒரு சாக்கு சொல்லி, அரவிந்தன் அவ்வப்போது நழுவினான். நான்காவது முறையாக, அவன் அப்படி செய்ய, அதை கவனித்துவிட்டாள் மீரா. எழுந்தவன் கையை பிடித்து இழுத்தவள்,

“டேய் நில்லு! அதிகாரமாய் தடுத்து, “நாங்க என்ன, இங்க காதலிக்கவா வந்திருக்கோம். ஆனாவூனா எஸ்கேப்பாகுற.” முகம் சுருக்கி அவனை பார்த்தாள். அதற்கு ஹரி சிரிக்க, அரவிந்தன் அவள் பக்கம் திரும்பி,

“ஓ… ஆசையபாரு…என்ன வேண்டாம்னு சொல்லி கயட்டிவிட்ட உனக்கு, நான் இதெல்லாம் வேற செய்யணுமா… நான் இந்த டீ கப்பெல்லாம் எடுத்துட்டு போக எழுந்தேன்.” என்று அவளை வம்பிழுக்க, அவன் கையிலிருந்த தட்டை பிடுங்கிகொண்டு,

“அதையெல்லாம் நான் எடுத்துட்டு போறேன்… நீ ஹரிக்கு உதவு” பொய்யாக கழுத்தை நொடித்தவள், பொறுப்பை அவனிடம் விட்டாள். விளையாட்டாக போனவள், அகிலாவுடன் மெய்மறந்து அரட்டை அடித்துவிட்டு, சாவகாசமாக திரும்பினாள்.

அதற்குள் நண்பர்கள் பத்திரத்தை விளக்கமாக அலசிவிட்டனர். “பெரும்பாலான விஷயங்கள் சரியா இருக்கு டா. இதெல்லாம் மட்டும் கேட்கலாம்னு இருக்கேன்” ஹரி, அரவிந்தனிடம் சுட்டிகாட்ட, அங்கு மீரா வருவதை கண்டு, “எதுக்கும் உன்னோட நிதி அமைச்சரை கேட்டுக்கோ!” இதழோர சிரிப்புடன், அவளை சீண்டினான்.

“நீ தாரளமா செலவு செய் ஹரி, கஜானா காலியானா, நிரப்ப, எனக்கொரு பணக்கார நண்பன் இருக்கான்!” அவளும் அவனை விடாமல் வம்பிழுக்க,

“போதும் டி! உங்க விளையாட்டு பேச்சுக்கு அளவே இல்ல!” ஹரி அவர்களை தடுத்து, “சரி, மீரா! நீ வீட்டுக்கு கிளம்பு;” என்றான். அரவிந்தனிடம் திரும்பி, “டேய், நீ ஃப்ரீயா இருந்தேன்னா, என்னோட ஃபோட்டோ ஸ்டுடியோக்கு வா.” புத்தகத்தில் போட நிழற்படம் கேட்டதை சொன்னான்.

“வரேன் டா! ஆனா இந்த சட்டைலையா ஃபோட்டோ எடுக்க போற?” மீரா வாங்கிகொடுத்ததாகவே இருந்தாலும், பளிர் நிறமாக இருப்பதை உணர்த்தினான்.

“ஏன்… ஏன்… ஏன்? இதுக்கென்ன குறைச்சல்?” அவள் எத்தனிக்க,

“அய்யோ! அவனுக்கு எடுப்பா இல்லடி… நீல நீறம் அவனுக்கு அழகூட்டும்!” உண்மையை புரியவைக்க,

“அவன் என் கண்ணுக்கு மட்டும் அழகாயிருந்தா போதும்! தர்க்கம் செய்து, ஹரியிடம், “நீ அவன் பேச்ச கேட்காத டா!” என்றாள். அவனும் அசடுவழிய, அரவிந்தன் தோள்களை குலுக்கி, வாதாடுவதை கைவிட்டான்.

ஹரி முகம் கழுவி கொண்டுவருவதாக சொல்லி நகர, இவர்கள் அவனுக்காக வாசற்கதவருகில் காத்திருந்தனர்.

“எப்படி டி, இவ்வளவு தாஜா பண்ணி வெச்சுருக்க… இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டறான்.” ஆச்சரியத்தில் வினவ, அவன் காதோரம் இரகசியம் சொல்வது போல் வந்தவள், “ம்ம்…உன் மனைவிக்கு அந்த இரகசியத்த சொல்லிகொடுக்கறேன்” என்று கிசுகிசுத்தாள்.

“கொழுப்பு! உடம்பெல்லாம் கொழுப்பு!” அவன் உதடுகள் ஏசினாலும், உள்ளம், அவர்கள் அன்யூனியத்தை மெச்சியது.

வீட்டிற்கு திரும்பியவன், அன்னையிடம், பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்ததை பற்றியும், பதிப்பிக்கும் விவரங்களை, முடிந்தளவுக்கு எளிமையாகவும் விளக்கினான். பேசும் போது, அவன் முகத்திலிருந்த பூரிப்பை கவனிக்க மறக்கவில்லை அவள் கண்கள்.

உடன்பாடு இல்லை என்று அவமதித்த போதும், தன்னிடம் மகன் பகிர்ந்துகொள்வதில் அவளுக்கு சந்தோஷம். அனாவசியமாக வெளியே எங்கும் ஊர் சுற்றாமல், தன்னுடன் அதிக நேரம் செலவிட்டது அதைவிட சந்தோஷம். மீராவை பற்றி எதுவும் பேசாமல் இருந்தது, பேரானந்தம். இரண்டு நாட்கள் மட்டுமே தங்குவேன் என்று சொன்னவள், இரண்டு வாரங்கள் மகிழ்ச்சியாக மகனுடன் தங்கினாள். அடிக்கடி வந்துபோவதாகவும், உறுதியளித்தாள். மீரா, தாயுடன் நேரம் செலவிட சொல்லி வற்புறுத்தியது எவ்வளவு சரியென்று ஹரி நெகிழ்ந்தான்.

இதற்கிடையில், அம்மா வரைந்து சில ஓவியங்களை அலுவலகம் எடுத்து சென்று, மீராவிடம் காட்டினான். அதிலொன்றை, தன் புத்தக அட்டைக்கு தேர்வு செய்ய சொன்னான். வாசுகியின் வேலைப்பாட்டில் அசந்து போனவள், ஒன்றை தேர்ந்தெடுத்தாள். அவள் முடிவில் ஹரிக்கும் மனப்பூர்வ சம்மதம்.

 ஒரு வாரத்தில், ஒப்பந்தம் கையெழுத்திட ஸ்ரீராமை சந்தித்தான். ஒரு சில விஷயங்களை எதிர்கால நிகழ்வுகளின் அடிப்படையில் மாற்றலாமா என்று அவன் கேட்க, அவரும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். இருவருக்கும் தொழில்ரீதியாக நல்ல பரஸ்பர புரிதல் உருவானது.

அம்மா ஊருக்கு கிளம்பியவுடன், மீராவை வீட்டிற்கு அழைக்க நினைத்தானேயொழிய, அதை செயல்படுத்த முடியவில்லை. உணவு இடைவேளையை தாண்டியே, அவர்கள் சந்திப்பதென்பது அரிதாக இருந்தது. இதற்கிடையில், மகேஷ் தலைமையில் இருந்த குழு, தவிர்க்க முடியாத காரணங்களால், கிண்டியில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு ஒரு மாதத்தில் மாற வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அது அவனுக்கு வருத்தமாக இருந்தாலும், நண்பர்கள் அருகருகில் வசிப்பதை நினைக்கும் போது, மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. நாட்கள் அதன் போக்கில் உருண்டோடின.

வழக்கமான தினசரி இமெயில்களை பார்க்க, அரவிந்தனுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒன்று தென்பட்டது. அதை செயல்படுத்த, ஒரு மணி நேரத்தில் ஏற்பாடுகளை செய்தவன், மீராவையும், அவள் குழுவிலிருந்த ரவியையும் தன் அறைக்கு வரும்படி அழைத்தான்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நற்செய்தி!” முகத்தில் பெருமை ததும்ப, அரவிந்தன் தொடங்க, அவர்கள் அவனை ஆவலாய் பார்த்தனர்.

“முதல்ல, மிஸ்.மீரா!” என்று அவள் பக்கம் திரும்பியவன், “நீங்க கொடுத்த கோர் பாங்கிங் பற்றிய ப்ரெசென்டேஷன் பார்த்து, பிரபலமான, வங்கிகளுக்காக மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம்” என்று கையிலிருந்த பணி கடிதத்தை காட்டி, “உங்கள அவங்க அலுவலகத்துக்கு வந்து வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த வேலைகளில் பங்கெடுத்து கொள்ளும்படி கேட்டிருக்காங்க.” விளக்க,

அதை உற்று பார்த்தவளின் கண்களில் பட்டது, இரண்டே விஷயம் தான். இடமாற்றம்; ஓராண்டு காலம் ஒப்பந்தம்; மறுப்பாய் தலையசைத்தவள், “யோசிச்சு சொல்றேன், மிஸ்டர் அரவிந்த்!” பணிவாக பதிலளித்தாள்.

சரி என்று அவனும், ரவி பக்கம் திரும்பி, “அவங்க அங்க போகவேண்டியதுனால, நீங்க தான் கட்டண செயலாக்கம் குழுவ கண்காணிக்கணும்” என்றதும், அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் உடனே சம்மதம் சொல்ல, இந்த மாற்றங்களை கையாளுவதை பற்றி மேற்கொண்டு பேச, விரைவில் மீட்டிங்க் ஏற்பாடு செய்வதாக சொல்ல, இருவரும் வெளியேறினர்.

அரவிந்தனுக்கு வேறு சில முக்கியமான வேலைகள் இருந்ததால், மீராவிடம், அவள் தயக்கத்திற்கான காரணத்தை பற்றி கேட்கமுடியவில்லை. ஆனால், அவள் முகத்தை பார்த்ததிலேயே, அவளுக்கு, இதில் துளியும் விருப்பமில்லை என்று அறிந்தான்.  

“வா டா ஹரி சாப்பிடலாம்!” ஒரு மணியளவில் அரவிந்தன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவன்,

“இல்லடா! நானும் மீராவும் அடுத்த பிரேக்குல சாப்பிடுறோம்” வரவில்லை என்று சொல்ல, அரவிந்தன், எட்டடி தூரத்திலிருந்த மீராவின் இருக்கையை நோக்கி வேகமாக நடந்தான்.

“சாப்பிட வா மீரா!” அதிகாரமாய் அரவிந்தன் சொல்ல, ஹரி அவனை பின்தொடர்ந்தான்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்!” கணிணியிலிருந்து முகம் திருப்பாமல் அவள் பதில் சொல்ல, அதை பொய் என்று உணர்ந்தவனின், கோபம் தலைக்கேறியது.

 வேகமாக, அவள் சுழல் நாற்காலியை தன் பக்கம் திருப்பி, “ஒட்டுமொத்த ஆஃபிஸ் சர்வரும் டௌன்… இதுல உனக்கு மட்டும் அப்படியென்ன முக்கியமான வேல இருக்கு?” என்று மிரட்டினான்.

செய்வதெல்லாம் செய்துவிட்டு, என்னை கேள்வி கேட்கிறாயா, என்பது போல் நிமிர்ந்து பார்த்தவள், “தெரியுதுல்ல! நான் ஹரி கிட்ட தனியா பேசணும்; போதுமா!” கோபமும், சோகமும் பேச்சில் வெடித்தது.

“நீ ஹரியோட பேச போற விஷயத்துல எனக்கும் சம்பந்தம் இருக்கு!” ஆணவம் அவன் குரலில் ஓங்க,

“என்னடா ஆச்சு?” ஹரி குறுக்கிட்டான்.

அதற்கு பதிலளிக்காமல், “அவள முதல்ல சாப்பிட வர சொல்லு!” கண்களை இறுக மூடிக்கொண்டவன், நண்பனுக்கு கட்டளையிட, அவள் பக்கம் திரும்பி, “வா மீரா! சாப்பிடலாம்!” என்றான் ஹரி.

“மாட்டேன் டா! உன்கிட்ட நான் தனியா பேசணும்!” உறுதியாக மறுத்தவள், துக்கம் தொண்டையடைக்க, “அவன் முன்னாடி பேசினா, உன்ன குழப்பிடுவான் டா… ப்ளீஸ்” கண்ணீர் மல்க மன்றாடினாள்.

அருகிலிருந்த நாற்காலியை இழுத்து, அவள் எதிரே அமர்ந்தான் ஹரி. அவள் முகவாயை ஏந்தி, “எதுவாயிருந்தாலும் பரவாயில்ல, இப்போ வந்து பேசு!” திடமாய் சொல்லி, “அதையும் மீறி, என்கிட்ட தனியா பேசணும்னா, நம்ம சாயங்காலம், வீட்டுக்கு போறப்ப பேசலாம்… வழக்கமா நடந்து போவோமே…. அந்தமாதிரி!” பொறுமையாக விளக்க,

“அதான் சொல்லிட்டானே, உன் ரோமியோ… வா சாப்பிடலாம்!” அவள் பேச காத்திராமல், கைகளை பிடித்து, வலுக்கட்டாயமாக இழுத்தான், அரவிந்தன்.

உம்மென்ற முகத்தோடு, மனமில்லாதவளாய் அவர்களை பின்தொடர்ந்தாள். வழக்கமாக ஹரி அருகே உட்காருபவள், வேண்டுமென்றே, அவர்களுக்காக காத்திருக்கும் மகேஷ் அருகில் போய், இருக்கைக்கே வலிக்கும் அளவுக்கு பலமாக உட்கார்ந்தாள்.

“போயேன்… நான் இருக்கேன் என் நண்பனுக்கு!” அந்த கோபத்திலும், அவளை சீண்டி, அரவிந்தன் ஹரி அருகில் அமர்ந்தான். இவர்கள் தாமதமாக வந்தது, அரவிந்தன் ஜாடை பேச்சு எல்லாம் கவனித்த மகேஷ், விவாதம் களைகட்டும் என்று எண்ணி பெருமூச்சுவிட்டான்.

“சொல்லு மீரா! என்கிட்ட என்ன பேசணும்!” மென்மையாக ஹரி கேட்க,

“அத உன் நண்பன் கிட்டையே கேளு!” அரவிந்தனை முறைத்தவள், “அதான் அவனுக்கும் இதுல சம்பந்தம் இருக்குன்னு சொன்னான்ல” இடித்து காட்டினாள்.

அவள் பிடிவாதம் அறிந்தவன், அரவிந்தனிடம் திரும்பி, “நீயாவது சொல்லு டா! என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை” சலித்துக் கொண்டான்.

கண்கள் அவளை சுட்டெறிக்க, “நீயே சொல்லுடா ஹரி! இவளுக்கு நம்ம வங்கியின் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்துல ஒராண்டு காலம் வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சிருக்கு…. அனுபவம், அடையாளம், பதவி உயர்வுன்னு, “நன்மைகள அடுக்கிகிட்டே போகலாம்; அதுக்கு சரின்னு சொல்ல, மேடம் யோசிப்பாங்களாம் டா…” வத்திவைத்தான் அரவிந்தன்.

 ஹரி அவளுக்கு அறிவுரை சொல்லும் முன், மேலும் சில விஷயங்களை, அரவிந்தனிடமிருந்து தெளிவுபடுத்தி கொண்டான்.  

“எவ்வளவு சந்தோஷமான விஷயம் மீரா! இதுல என்ன இருக்கு யோசிக்க?” ஹரி அவளை கேட்க, மீண்டும், அணையை உடைத்து, பெருக்கெடுத்தது, வெள்ளம் அவள் கண்களிலிருந்து.

“புரிஞ்சுதான் பேசுறியா ஹரி? இந்த இடமாற்றத்தால, நம்ம சந்திக்கறது பாதிக்கும்னு உனக்கு தோணவேயில்லையா?” எப்படி மறந்தான் என்று அதிர்ந்தாள்.

வேறேதோ பெரியாதாக காரணம் சொல்லி மறுப்பாள் என்று நினைத்த அரவிந்தன் முகத்தில், சின்னதாய் ஒரு சிரிப்பு மலர, “உன் தயக்கத்துக்கு இதுதான் காரணமா.” ஒரு வழியாக சமாதானமாக பேச, அவனை பார்த்தாள் மீரா.

“உள்ளூருல தானே இருக்கப்போற…ஆஃபிஸ்ல இல்லென்னா என்ன… அவன வீட்டுல போய் பார்க்கலாம்…வெளிய சந்திச்சிக்கலாம்…” இதெல்லாம் ஒரு சாக்கா என்று சொல்ல,

கண்ணை துடைத்துகொண்டவள், தன்னவனை பார்வையால் வருடிய படி, “அப்படியே இவன் என்ன வெளிய சந்திச்சு, விழுந்து விழுந்து கா….” என்று தொடங்கி, “…பேசிட்டாலும்! என்று உதட்டை சுழித்தாள்.

அவள் முகபாவனையில் விழுந்தவன், “சரி! நான்தான் சொன்னேன்…. ஆஃபிஸ்ல பார்த்து பேசினா போதும்னு…. அதுக்காக சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி மாத்திக்க மாட்டேன்னு சொல்லலியே… இது என்ன சட்டமா மீறாம இருக்க! என்று கண்சிமிட்டினான்.

அதற்கெல்லாம் வசப்படாதவளாய், “அதெல்லாம் சரிப்படாது ஹரி; நான் ரொம்ப தூரம் போயிட்டு வரணும்…ஆஃபிஸ் டைம் வேறவேற… நம்ம சந்திக்கவே முடியாது.” மறுப்பாய் தலையசைத்தாள்.

இதுவரை அமைதியாக உணவை கூட அருந்தாமல், இவர்கள் பேசுவதை கவனித்த மகேஷ், “மீரா! இன்னும் கொஞ்ச நாளுல, நானும் அதே இடத்துக்குதான் வரணும்.  நீயும் என்னோட காருல வந்தா உனக்கு அலுப்பாயிருக்காது; நம்ம எப்படியும் சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவோம்; சாயங்காலம், அவன பார்த்துட்டு உங்க வீட்டுக்கு கிளம்பு!” சுலபமாய் தீர்வு சொல்ல, நண்பர்கள் அதை ஆமோதித்தனர்.

சந்திப்பது சின்ன பிரச்சனை என்றால், அவள் மனசுக்குள் வேறொரு கவலை ஒடிக்கொண்டிருந்தது. இனியும் அதை சொல்லாமல் இருக்க முடியாது என்று,

“அது… அது… “தயங்கியவள், “எனக்கு பதிலா வரும் ரவி… ரவி…இவன் இலட்சியத்த புரிஞ்சிக்காம நிறைய வேல வாங்கினாருனா…அதான்” அவள் சொல்லி முடிப்பதற்குள், மூவரும் வாய்விட்டு சிரித்தனர். அதிலும் அரவிந்தன், உரக்க பெருங்குரலில் குலுங்கி குலுங்கி சிரிக்க, அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

மற்ற இருவரும் கட்டுக்குள் வந்த போதும், அரவிந்தன், அவளை கேலியாக பார்த்து சிரித்துகொண்டிருந்தான். கண்கொட்டாமல், அவனை, அவள் முறைக்க,

“என்ன முறைக்கற?” அவளை செல்லமாக அதட்டி, “உன்னவிடவா ரவி, இவன்கிட்ட கடினமா நடந்துக்க போறாரு…. பெர்ஃபாமன்ஸ் அப்ரைசல்ல, நீங்க பிடிச்ச பிடிவாதம் மறந்துட்டீங்களா மிஸ்.மீரா.” அவளை ஓட்டினான்.

“உனக்கு எல்லாமே விளயாட்டுதான்!” வெறுத்து பேசினவள், வேகமாக எழுந்து நடந்தாள்.

அவள் கையை இறுக பிடித்து, நகர விடாமல் தடுத்தவன், “சும்மா விளையாட்டுக்கு தானே டி சொன்னேன். அவன் மேல எனக்கும் உன் அளவுக்கு அக்கறை இருக்கு” என்று சொல்லி, மறு கையால், நண்பன் தோளினை சுற்றி வளைத்தான்.

இத்தனை காலமாக நண்பன் கண்ட கனவு கரையாதிருக்க குடை பிடித்தவன், அவன் இலட்சிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் அலட்சியமாக இருந்துவிடுவானா என்று நிதானமாக யோசித்தாள்.  

சிந்தையில் கலந்தவளை, “பசிக்குது டி! சாப்பிடலாம்!” என்று அரவிந்த் உலுக்க, சுயத்துக்கு வந்தவள்,

“எழுந்திரு! அங்க போய் உட்காரு!” அரவிந்தனை அதிகாரமாய் சொல்லி, தன்னவன் அருகில் உரிமையோடு அமர்ந்தாள். நண்பர்கள் அவள் இயல்பு நிலைக்கு திரும்பியதில் மகிழ்ந்தனர்.

சிறிது நேரத்தில் உணவு அருந்த, “இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் மீரா!” என்று ஹரி திடமாய் சொல்ல, அனைவரும், அவனை ஆழ்ந்து பார்த்தனர்.

“என் கனவுகள் நனவாக்குறது மட்டும் உன் வேல இல்ல…. உன்னுடையதுக்கும் அதே அளவு முக்கியதுவம் கொடுக்கணும் சரியா!” என்று பக்குவமாய் சொல்ல, சிறுபிள்ளை போல் வலமும் புறமும் தலையசைத்தாள். அவள் சாந்தமாக இருக்க, ஹரி மேலும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினான்.

“இன்னொரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ! அன்பும் அக்கறையும் வெளிபடுத்த தினமும் சந்திகணும், பேசணும்னு எல்லாம் அவசியமில்ல… மனசுல இருந்தா போதும்.” என்றதும், அதற்கும் தலையசைத்தாள்.

‘இவன விட்டா, பார்க்காமல், பேசாமல் காதலிப்பது எப்படின்னு புத்தகம் எழுதுவான் போல’ என்று சலித்துபோனவன்,

“ஒரு உண்மைய சொல்றேன் மீரா!” அவனை போலவே திடமாய் தொடங்கினான் அரவிந்தன். இவன் பங்குக்கு என்ன சொல்ல போகிறான் என்று மகேஷும் மீராவும் பெருமூச்சுவிட,

“உன் அளவுக்கு அவன யாரும் பிழுஞ்சு வேல வாங்க மாட்டாங்க… அதனால ஹரி, உன் தொல்லை இல்லாம, சந்தோஷமா, இன்னும் அதிக உற்சாகமா, தைரியமா வேலை செய்வான்” என்றதும், மகேஷ் அதிரடியாக சிரித்தான்.

“அப்படியா ஹரி?”கேட்டு, இமைக்கும் நொடியில், அவன் பக்கம் மீரா திரும்ப, ஹரி, எந்த நண்பர் பக்கம் சாய்வது என்று தடுமாறினான்.

சர்வர் டௌன் என்பதால், நண்பர்கள், மேலும் சில நிமிடங்கள் அரட்டை அடித்துவிட்டு, பணிக்கு திரும்பினர்.

பிரிவுகள் எல்லாம் பிரிவு அல்ல,

ப்ரியமானவள்(ன்) நினைவுகளில் கலந்திருக்கும் போது!

தூரங்கள் எல்லாம் தூரம் அல்ல,

தோதான கனவுகள் சந்திக்க வழிவகுக்கும் போது!

இடைவெளிகள் எல்லாம் இடைவெளி அல்ல,

இடர்களை தாண்டி இதயங்கள் இணைந்திருக்கும் போது!

காத்திருப்பதும் இவர்களுக்கு கடினம் அல்ல,

காலமெல்லாம் சேர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கை நிலையாக இருக்கும் போது!

இலட்சியம் என்ற இரயில் இலக்கை அடையும் வரை,

தளராது தவழும் தண்டவாளமாய்

பிரிந்தே இணைந்திருப்போம் என்று

பக்குவமாய் இசைத்தது – அவர்கள்

ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்….