அன்பின் ஆழம் – 10

‘வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;

வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக

மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;

விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க….’

எம். எஸ்.அம்மாவின் குரலில் விநாயகர் கவசமும், இதமான சாம்பிராணி வாசமும், அதிகாலை பொழுதை பக்தியில் நிரப்பியது. சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் நிர்மலா மூழ்கியிருந்தாள். பூஜை அறையில், மஞ்சள் பொடியில் பிடித்த பிள்ளையாரை மாக்கோலம் இட்ட மேடையில் வைத்து, சுற்றி, அருகம்புல்லால் அலங்கரித்தாள். நறுமணம் கமழும் மல்லிகைச் சரத்தை, சிறு சிறு துண்டுகளாக்கி, பிள்ளையாருக்கும், மற்ற விக்ரஹங்களுக்கும் சாற்றினாள்.

“அம்மா! எனக்கு தலையில வெச்சுக்க, கொஞ்சம் பூ தா!” கேட்டுக் கொண்டே, மீரா பின்னால் வந்து நின்றாள்.

அரக்கு நிற மைசூர் பட்டில் தேவதையாக நின்ற மகளை பார்த்து நெகிழ்ந்தாள். மகேஷ் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு புறப்பட தயாரகி வந்தாள் மீரா. ஒரு வாரமாய் எதிலும் ஆர்வம் காட்டாத மகள், இன்று உற்சாகமாய் கிளம்புவதை கண்டவளுக்கு பேரானந்தம். விரதம் தொடங்கும் முன்னரே பலன் கிட்டியது போல் ஒரு உணர்வு.

“அம்மா! பூ கேட்டு எவ்வளவு நேரமாச்சு!” மீரா மீண்டும் சொல்ல, சுயத்துக்கு வந்தாள் நிர்மலா.

“இங்க உட்காரு; நானே வெச்சுவிடறேன்” அன்பாய் அழைக்க, அவளும் அருகில் வந்து அமர்ந்தாள். சுற்றி இருக்கும் பூஜை பொருட்களை எல்லாம் நோட்டம் விட்டவள், “இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தியா மா?” என்று வினவினாள்.

நிர்மலாவும் “ஆம்” என்று சொல்ல, வெடுக்கென்று அன்னை முகம் பார்க்க திரும்பியவள், “அப்போ கொழுக்கட்டை செய்றியா?” கண்கள் விரித்து கேட்டாள்.

அதற்கும் நிர்மலா தலையசைக்க, “சரி! ஒரு டப்பால போட்டு தா! அரவிந்தனுக்கு ரொம்ப பிடிக்கும்.” என்றாள்.

“பூஜை முடிய நேரமாகும் மீரா. வேணும்னா, நீ சாயங்காலம் அவன் வீட்டுக்கு போய் கொடு.” ஆலோசனை சொல்ல, அன்னையை ஆழமாய் பார்த்தாள்.

ஹரியை காதலிப்பதாய் சொல்லியும், அவன் இருக்கும் இடத்துக்கு போக அனுமதி கொடுக்கும் அவள் பரந்த மனப்பான்மையை எண்ணி வியந்தாள். திகைத்து நிற்கும் மகளின் தோள்களை உலுக்கி,

“நேரமாகுதுல்ல! கிளம்பு. அப்பா கிட்ட சொல்லிட்டு கிளம்பு.” பேச்சோடு பேச்சாக சொல்ல, அடுத்த கணமே மீராவின் முகம் சுருங்கியது. ஒரு வாரமாய் தந்தையிடம் பேச மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தாள் மீரா.

“நீயே அவர்கிட்ட சொல்லிக்க!” மறுத்து பேசி நகர்ந்தாள்.

“நில்லு டி” அதிகாரமாய் அவளை தடுத்து, “காதலிக்கிறவன் வந்து பேசினதும், மனச மாத்திப்ப; பெத்த அப்பாகிட்ட முகத்த காட்டுவியா?” ஒப்பிட்டு பேச,

“அவர் என்ன….” என்று வாதம் செய்ய முயன்ற மகளை, கை உயர்த்தி காட்டி, தடுத்தாள் நிர்மலா.

“அவர் என்ன சொன்னாலும், பேசி புரிய வைக்கணுமே தவிர இப்படி முரடு பிடிக்க கூடாது.” தீர்மானமாக சொல்ல, அவள் சிந்தித்தாள். சந்தோஷமாக வெளியே புறப்படும் மகள் வருந்த கூடாது என்று, அருகில் வந்து மென்மையாய் பேசினாள் நிர்மலா.

“இங்க பாரு மீரா…. ஹரி நல்லவன்னு எனக்கு தெரியும்; உனக்கு உன் காதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு என் கணவர் எடுக்கற முடிவு எனக்கு முக்கியம். அவருக்கு பேசி புரிய வெப்பியோ, இல்ல அவர் சொல் படி நடப்பையோ…. அது உன் இஷ்டம்…. ஆனா அவருக்கு மரியாதை கொடு” திட்டவட்டமாக சொன்னாள்.

அம்மா கடிந்து பேசினாலும், அப்பா அளவுக்கு ஹரியை வெறுக்கவில்லை என்று புரிந்துகொண்டாள். அன்னை சொற்படி நடந்தாள் மீரா. தந்தை, மகளிடையே இருந்த இடைவெளியை சிறிதளவாவது குறைக்க முடிந்ததை எண்ணி பெருமிதம் கொண்டவள் மனநிறைவோடு கடவுளுக்கு பூஜை செய்தாள்.

மகேஷ் மறுவடிவமைத்து கட்டிய வீடு, மீரா வீட்டிற்கு மிக அருகில் இருந்தது. மறுவடிவமைப்பு செய்யும் முன் கூட்டுக்குடும்பமாக மகேஷ் அங்கு தான் வசித்தான். கீதாவும், வெளியூரில் இருந்து பணிக்கு வந்ததால், திருமணமாகும் வரை அதே பகுதியில், ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தாள். அலுவலகத்தில் சந்திப்பிதை தாண்டி, நண்பர்கள் அருகருகே வசித்ததாலும், அவர்களிடையே நெருக்கம் அதிகமானது.

மீண்டும் மகேஷ் அருகில் குடித்தனம் வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. ஐந்தே நிமிடத்தில் சன்னியில் சல்லென்று பறந்து சென்றாள்.

அடையாளம் தெரியாத அளவுக்கு பிரம்மாண்டமாய் மறுவடிவமைப்பு செய்ய பட்டிருந்தது, மகேஷ் வீடு. அகலமான நுழைவாயில், நாலைந்து கார்விடும் அளவுக்கு விசாலமான பார்க்கிங், ஒரு புறம் குழந்தைகள் விளையாட இடம் என்று கட்டிடத்தின் அடித்தளம் அமைந்திருந்தது.

இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்துக்கு படிக்கட்டுகள் மட்டுமே இருந்தது. மின்தூக்கி எதுவும் இல்லை. உள்ளே நுழைந்ததும், வலது புறம் ஒரு பிள்ளையார் சன்னதி பிரதிஷ்டை செய்திருந்தது. கும்பிடு போட அருகில் சென்றாள் மீரா. அளவான அலங்காரத்துடன் அழகாய் காட்சி அளித்தார் பிள்ளையார். தன்னையும் மறந்து அங்கேயே சில நிமிடங்கள் நின்றாள்.

“ஓய்!” செல்லமாக பின்னாலிருந்து தட்டி, “பிள்ளையார எங்க பார்த்தாலும், அப்படியே நின்னுடுவியா!” கிண்டல் செய்தான் அரவிந்தன். அவனும் ஹரியும், வந்தது கூட தெரியாமல், பிள்ளையாருக்கு ஜோடியாய் சிலையாய் நின்று கொண்டிருந்தாள் மீரா.

“இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தி டா! நெனச்ச காரியம் கைக்கூடும்.” அப்பாவியாக முகம் வைத்து விளக்க,

“அடிப்போடி! அவருக்கு ஓரவஞ்சனை! உன் வேண்டுதல்கள் மட்டும் தான் நிறைவேற்றுவாரு.” பொய்யாக சலித்துக்கொண்டான்.

“ஏன் டா அப்படி சொல்ற?” புருவத்தை சுருக்கினாள்.

“பின்ன என்ன…. உன் காதலுக்கு பச்சை கொடி காட்டினாரு; என் காதல காத்துல பறக்க விட்டுட்டாரு.” முகத்தை இறுக வைத்து சொல்ல, அவன் வேடிக்கை பேச்சை இரசித்தான் ஹரி. மீரா அவனுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறாள் என்று, அவளை ஆவலாய் பார்த்தான்.

இதெல்லாம் ஒரு கேள்வியா என்பது போல், அவள் பேசினாள். “நீ சரியா வேண்டிக்காம, பிள்ளையார குறை சொல்றியா.” என்றதும், இருவரும் முழித்தனர்.

“எனக்கு ஹரி கணவனா வரணும்னு நான் வேண்டிண்டேன்; என் கல்யாணத்துனால, நம்ம நட்புக்கு பங்கம் வர கூடாதூன்னு நீ வேண்டிக்கிட்ட; அவர் நம்ம ரெண்டு பேருக்கும் தான் வரம் கொடுத்திருக்காரு” சுலபமாக விளக்கம் சொல்ல, நண்பர்கள் இருவரும் சிரித்தனர்.

“நல்லா பொழச்சிப்படி;” அவளை பாராட்டி, ஹரியிடம் திரும்பி, “டேய்…உன் கதைக்கு இவள வசனம் எழுத சொல்லு…. விற்பனை அள்ளும்,” கிண்டல் செய்ய,

“போதும் டா! வாங்க உள்ள போலாம்!” என்று அழைத்தான் ஹரி.

இரண்டடி நடந்தவள், அரவிந்தனை வழிமறித்து, “இன்னைக்கு விழாவிற்கு வரா மாதிரி ட்ரெஸ் பண்ணிருக்கேனா?” கேட்டு பொம்மை போல் இடமும், வலமும் அசைந்தாள்.

அவனும் மேலிருந்து கீழ் வரை பார்த்து, “உன்ன பார்த்தா வைரல் ஃபீவர் வந்த பொண்ணு மாதிரியே தெரியலையே…. ஒரு வேள, என் கண்ணுல மண்ண தூவிட்டு ரெண்டு பேரும் எங்கையாவது ஊர் சுத்தினீங்களா….” நக்கலாய் கேட்க,

உடனே உதட்டை சுழித்தவள், “யாரு…. இவன் கூடவா…. முசுடு எழுத்தாளர்…. “முணுமுணுத்து கொண்டு தன்னவனை பார்வையால் விழுங்கினாள்.

அதற்கும் ஹரி சிரித்து மழுப்ப, அரவிந்தன், “என்ன ரிஜெக்ட் பண்ணல்ல…. நல்லா அனுபவி” மேலும் ஓட்டி, அவள் மொத்துவதற்கு முன் ஒரே தாவலில், படிக்கட்டுகளை ஏறினான்.

இவர்கள் வீட்டிற்குள் வருவதை கண்டு, மகேஷ் ஓடி வந்து ஆரத்தழுவினான். அவனை பின் தொடர்ந்த மைதிலி, மீராவின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, “வாடி புது பொண்ணு!” என்று அவர்கள் காதலுக்கு வாழ்த்து சொன்னாள். காதல் ஜோடிகளும், தங்களுக்குள் நடந்த கருத்து வேறுபாடுகளின் சுவடு கூட தெரியாத அளவுக்கு அத்தனை அன்யூனியமாக பழகிக்கொண்டனர்.

மகேஷ் குடும்பத்தினரை சந்தித்து பேசி நலன்விசாரித்தனர். முதல் தளத்தில் சடங்குகள் நடக்க, இரண்டாம் தளத்தில், உணவு பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. விழாவிற்கு வந்த மற்ற உறவினர்கள், நண்பர்கள் பற்றி அதிகம் தெரியாததால், இவர்கள் மூவரும், புது வீட்டை சுற்றி பார்த்தும் விமர்சித்து கொண்டும் நேரம் செலவழித்தனர். அவ்வப்போது, மகேஷ் குழந்தைகளும், அவன் அக்கா ராணியின் குழந்தைகளும் இவர்களிடம் மாமா, அத்தை என்று செல்லம் கொஞ்சிவிட்டு சென்றனர். விழாவும், ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நிகழ்ந்தது.

பெரும்பாலான விருந்தினர்கள் புறப்பட்ட பிறகு, மகேஷுக்கு ஒத்தாசையாய், ஹரியும், அரவிந்தனும் உதவி செய்தனர். மைதிலி, மீராவை வலுக்கட்டாயமாக தங்களுடன் உணவு அருந்த அழைத்து சென்றாள்.

நண்பர்கள் வேலை எல்லாம் முடித்துவிட்டு பசியோடு வர, ராணி அவர்களுக்கு உணவு பரிமாற தயாரானாள். அவளுடன் இருந்த மீரா,

“அக்கா! நானும் பரிமாறுறேன்!” என்று முன் வந்தாள்.

மூவருக்கும் இலை போட்டு, சாதம், பருப்பு, சாம்பார், பச்சடி, பொறியல் என்று வகை வகையாய் உபசரித்த பிறகு, மீரா ஜாங்கிரி எடுத்து வந்தாள். ஹரிக்கும், மகேஷுக்கும் இலைக்கு ஒன்று என்று வைத்தவள், அரவிந்தனுக்கு மட்டும் மூன்று, நான்கு என்று அடுக்கி கொண்டே போனாள்.

“போதும்! போதும்! மீரா! இவ்வளவு ஜாங்கிரி சாப்பிட்டா, மத்தத எல்லாம் சாப்பிட வயிற்றில் இடம் இருக்காது மா!” கெஞ்சலாய் சொல்லி கையால் தடுத்தான்.

“கண்ணு தெரியலையா மீரா! உன் ஆளு, இங்க இருக்கான்!” கண்ணால் ஹரி தன் அருகில் இருப்பதை காட்டி, கேலியாக வம்பிழுத்தான் மகேஷ்.

“எல்லாம் எனக்கு தெரியும்!” நீட்டிச் சொல்லி, கழுத்தை நொடித்தாள்.

கேலியும், கிண்டலுமாக விருந்து சாப்பாடு ஒரு முடிவுக்கு வந்தது. அரவிந்தன் அரை நாள் தான் பர்மிஷன் போட்டதாக சொல்ல, மைதிலி அதை ஏற்பதாகவே இல்லை. இன்னும் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டாள். பத்து நிமடத்தில் வருவதாக கூறி, மறுபடியும் மூவரையும் தனியே விட்டு சென்றாள்.

“என்ன ஹரி! மீரா என்ன மட்டும் தனியா கவனிச்சான்னு, உனக்கு பொறாமையா இருக்கா?” குறும்பாக வம்பிழுத்தான் அரவிந்தன்.

“அதான் உனக்கு ஜாங்கிரி பிடிக்கும்னு ஊருக்கே தெரியுமே!” ஹரி பெரிதும் கண்டு கொள்ளாதவன் போல் பதில் சொல்ல, அரவிந்தன் அவனை மேலும் சீண்டினான்.

“இல்லையே! உதடு தான் அப்படி சொல்லுது; கண்ணுல லைட்டா கோபம் எட்டி பாக்குதே!” ராகமாய் இழுத்துச் சொல்லி, “மீரா மா! பிள்ளையார் எனக்கு கொடுத்த வரம் பலிக்காது போல தெரியுதே!” என்று அவளையும் சேர்த்து வம்பிழுத்தான்.

அவன் வேண்டுமென்றே இருவரையும் ஓட்டுவதை உணர்ந்தவள், “ஹரி ஒரு போதும் அப்படி நினைக்கமாட்டான்; முதல்ல நட்பு; அப்புறம் தான் காதல், கல்யாணம் எல்லாம்.” விட்டுகொடுக்காமல் பேசி செல்லமாக அவன் தோளில் தட்டினாள்.

“இருந்தாலும், நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு ஜாங்கிரியா சாப்பிடுவீங்க?” இருவரையும் பார்த்து விரப்பாக கேட்டான் ஹரி.

மகேஷ் அப்போது அங்கு வந்தான். திட்டுவாங்கி கொண்டிருக்கும் நண்பர்களின் கையில், ஆளுக்கொரு பையை நீட்டி, “வீட்டுக்கு எடுத்துட்டு போக ஜாங்கிரி பார்சல்.” என்று துள்ளலாய் சொல்ல, அவர்கள் ஹரியை பார்த்தபடி அசடு வழிந்தனர்.

ஹரி, அவர்களை முறைப்பதை கவனித்த மகேஷ், “நீ தான் எந்த இனிப்பையும் விரும்பி சாப்பிட மாட்ட; அவங்க சாப்பிட்டா என்னடா?” என்று மிரட்ட,

வெடுக்கென்று மீராவின் கையில் இருந்த கவரை பிடுங்கியவன், “அதுக்குன்னு, இப்படியா அளவில்லாம….” சொல்லி, கவரை உயர்த்தி காட்டினான்.

அவர்கள் செல்ல சண்டையை கவனித்த மைதிலியும், ராணியும் கூட சேர்ந்து அரட்டை அடிக்க வந்தார்கள்.

“பார்த்துகோ மீரா! உங்க கல்யாண சாப்பாடுல, அது வேண்டாம், இது வேண்டாம்னு, ஹரி சொல்லிட போறான்!” மீரா அருகில் அமர்ந்த மைதிலி கிண்டல் செய்ய,

 “அதெல்லாம் சரி! கல்யாணம் எப்போ?” என்று எதிரே அமர்ந்த ராணி வினவினாள்.

“அடுத்த வருஷம் செஞ்சிக்கலாம்னு இருக்கோம் அக்கா!” வெட்கம் கலந்து மீரா பதில் சொல்ல,

“எதுக்குடி அத்தனை நாள் தள்ளி போடறீங்க?” அக்கறையாய் விசாரித்தாள்.

ஒரு கணம் ஹரி முகத்தை பார்த்தவள், “வேறென்ன, ஜாலியா லவ் பண்ணலாம்னு தான்….” என்று மழுப்பினாள்.

நண்பர்களின் இரகசிய விழி பரிமாற்றத்தை கவனித்த அரவிந்தன், “அக்கா! மாமா வீட்ட ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காரு. நீங்க எந்த வீட்டுல குடியேற போறிங்க?” ராணியின் கவனத்தை திசை திருப்பினான்.

கணவன் பெயர் எடுத்ததும், முகத்தில் பெருமை பொங்கிவழிய, “நன்றி டா அரவிந்தா! நாங்க முதல் மாடியிலேயும், தம்பிங்க, அப்பா அம்மா எல்லாம் ரெண்டாவது மாடியிலேயும் இருக்க போறோம்.” என்றாள்.

ராணியின் கணவர் தானே கட்டிடம் கட்டும் தொழில் செய்து வந்ததால், இந்த மறுவடிவமைப்பு பொறுப்பு முழுவதும் அவரே ஏற்று கொண்டார். கணவன் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் ஜோரில், ஹரி-மீரா கல்யாண பேச்சை மறந்தாள் ராணி.

அதை சாதகமாக்கி கொண்டவன், “முதல் மாடியில ரெண்டு வீடு இருக்கே! மாமா அத அலுவலக வேலைக்கு உபயோகிக்க போறாரா?” மேலும் வினவினான் அரவிந்தன்.

“அத ஏண்டா கேக்குற!” என்று அவள் இழுக்க, அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.

 பிளாஸ்டிக் நாற்காலியில் கால்களை மடக்கி அமர்ந்து விளக்கினாள் ராணி. “சொத்த நாலா பிரிச்சு, அப்பா எங்க மூணு பேருக்கும், ஆளுக்கொரு பங்கு கொடுத்தாரு. நாலாவது பங்குக்கு, என் வீட்டுக்காரு, அப்பாகிட்ட பணம் கொடுத்து, அவர் தம்பிக்காக வாங்கிக்கிட்டாரு. அவருக்கும் ஒரே தம்பி தான். அதனால, பிற்காலத்துல எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்னு தான் வாங்கினோம். ஆனா…. “பேசுவதை நிறுத்தி, தன் தம்பி மகேஷை பார்த்தாள்.

“நல்ல திட்டம் தானே அக்கா!” இதில் என்ன பிரச்சனை இருக்க போவது என்பது போல், கேள்வியாய் அரவிந்தன் காத்திருக்க, மகேஷ் பேசினான்.

“அவன் அமெரிக்காவுல இருக்கான் டா. ரெண்டு வருஷம் படிப்ப முடிச்சிட்டு தான் வருவான். அப்படி வரப்ப, வீட்ட உபயோகிகட்டும்னு நானும் மாமாவும் சொல்லறோம்; ஆனா அக்கா, பூட்டி வெச்ச வீடு பாழாகும்னு, வாடகைக்கு விட சொல்றாங்க.” அவள் முறைத்ததற்கு காரணம் சொல்லி, “நீயே சொல்லுடா அரவிந்தா…. நாங்க கூட்டு குடும்பமா இருக்கோம்; வெளி ஆளுங்களுக்கு வாடகைக்கு விட்டா சரி வருமா?” நண்பனை கேட்டான்.

இரு தரப்பிலும் யோசித்தவன், “நீங்களே மாறி மாறி இருக்க வேண்டியது தானே அக்கா!” சுலபமான வழி ஒன்று சொல்ல, அதற்கு விரக்தியில் சிரித்தவள்,

“ஒரு வீட்ட பராமரிக்கிறதே ரொம்ப கஷ்டம்; இதுல அவர் பாதி நாள் வேல விஷயமா ஊருக்கு போயிடுவாரு; மாமியாரும் மாமனாரும் இங்க கொஞ்ச நாளு, அங்க கொஞ்ச நாளுன்னு இருப்பாங்க. வாடகைக்கு விட்டா எனக்கும் பக்கத்துல ஆளு இருப்பாங்கல்ல” தன் தரப்பு நியாங்களை எடுத்துரைத்தாள் ராணி.

“அக்கா சொல்றது சரி தானே மகேஷ்!” ராணிக்கு பரிந்து பேசினாள் மீரா.

“அப்படியில்ல மீரா; யாருன்னு தெரியாம வாடகைக்கு விடுறது ஒரு தலவலின்னா, நம்ம நெனச்சப்ப காலியும் செஞ்சி தரமாட்டாங்க.” பல பிரச்சனைகள் உண்டு என்று மகேஷ் விளக்க,

“ஹரிக்கு வாடகைக்கு விடுறியா டா மகேஷ்?” இமைக்கும் நொடியில் கேட்டான் அரவிந்தன்.

எந்த நோக்கத்தில் அப்படி கேட்டான் என்று அத்தனை பேரும் அவனை புதிராய் பார்க்க, “எனக்கு என்ன அவசியம் இருக்கு டா? நம்ம இப்போ இருக்க வீடே வசதியாதானே இருக்கு.” மறுத்தான் ஹரி.

“வசதியாதான் இருக்கு டா! ஆனா நம்ம ஹௌஸ் ஓனர் பற்றி கொஞ்சம் யோசிச்சு பாரு. ஏற்கனவே பேச்சுலர்ஸ்னு நம்மள கண்கொத்தி பாம்பா பார்த்துட்டு இருக்கிறவரு, நாளைக்கு மீரா வந்து போனா என்ன சொல்லுவாரு…. அவருக்கு பயந்துட்டு, நீங்களும் பொழுதுக்கும், ஆஃபிஸ்லையும், வெளியிலையும் மட்டும் சந்திக்க முடியுமா?” காரணங்கள் அடுக்க,

“சரியா சொன்ன அரவிந்த்! எனக்கு இதுல டபுள் ஓ. கே டா!” ராணி சம்மதம் சொன்னாள்.

“இல்ல இல்ல! இது சரி வராது!” ஹரி தீர்மானமாய் இருந்தான்.

“மீரா! நீ சொன்னாதான், உன் ஆளு கேட்பான் போல,” மைதிலி அவளை இழுத்துவிட,

“அவனுக்கு எது சரின்னு படுதோ, அதையே செய்யட்டும்,” முடிவை அவனிடமே விட்டாள்.

“என்ன தன்னடக்கம்! உன் முகத்துக்கு கொஞ்சம் கூட பொருந்தல டி!” அரவிந்தன் அவளை கேலி செய்ய, அவள் முகம் சுளித்தாள்.

“நாங்க எல்லாம் சுத்தி இங்க இருக்குறப்ப தனியா எங்க காதலிக்குறதுன்னு யோசிக்கறா போல….” மேலும் கிண்டல் செய்து மைதிலி செல்லமாக அவள் தோளில் தட்டினாள்.

“அப்படியெல்லாம் இல்ல மைதிலி….” மீரா தொடங்க, ஹரி குறுக்கிட்டான்.

“உங்க வீட்டுல இருக்க எனக்கென்ன கஷ்டம். என் பட்ஜெட்டுக்குள்ள வராது; அதான் வேண்டாம்னு சொன்னேன். அதனால தான் மீராவும் இதுல தலையிடல” வெளிப்படையாய் ஹரி சொல்ல,

“என்ன பெரிய பட்ஜெட்; உன்னால முடிஞ்சத கொடு. நீயும் எனக்கு தம்பி தான் டா ஹரி; அக்கா, மாமான்னு உறவுமுறையில நீ கூப்பிடறது எல்லாம் வெறும் சம்பிரதாயத்துக்காக வா? பேச்சில் உரிமையோங்க கேட்டாள் ராணி.

 “உண்மையான பாசம் தான் அக்கா! பாசத்த சாதகமாக்கிக்க கூடாதூன்னு நினைக்கறேன்.” பணிவாய் சொல்ல, மகேஷ் தொடர்ந்து பேசினான்.

“உன்னால எங்களுக்கும் ஆதாயம் தான் டா. அக்காவுக்கு ஒரு பாதுகாப்பா இருக்குமே, மறந்துட்டியா…. சரின்னு சொல்லு டா ஹரி” அவன் கெஞ்ச,

“அவன இன்னும் என்ன கேட்டுக்கிட்டு…. ஹரி! நீ இங்க வர! அவ்வளவுதான்!” திட்டவட்டமாக சொன்னாள் ராணி.

இன்னும் அதை ஏற்க மனமில்லாதவனாய், “அரவிந்தா! ரெண்டு பேரும் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணலாம் சொல்லிட்டு, இப்போ என்ன கழட்டிவிட்டா என்ன அர்த்தம்?’ தர்க்கம் செய்ய,

“அட! நானும் உன்னோட இருக்க போறேன்னுல்ல நெனச்சிட்டு இருக்கேன். அப்போ நீ எனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டியா?” அப்பாவியாக முகம் வைத்து கேட்டு, “என்ன மீரா! என்னோட சேர வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லி வெச்சுருக்கியா.” அவளையும் சேர்த்து வம்பிழுத்தான்.

“அப்படியே நான் சொல்லி அவன் கேட்டுட்டாலும்…. “அவளும் அவனை சீண்ட,

“இது…. இது தான் ஒரிஜனல் மீரா.” அரவிந்தனும் திருப்பி சீண்டினான்.

“டேய்! நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துட்டா, உங்க புண்ணியத்தால நானும் அப்பப்ப பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுவேன் டா!” மகேஷ் சொல்ல, மைதிலி பார்வையாலேயே அவனை சுட்டெறித்தாள்.

இவர்கள் வேடிக்கை பேச்சிலும் ஆரவாரத்திலும், ஹரியின் வாதம் கண்காணாமல் போனது.

அரவிந்தன் இந்த பேச்சை, ஹரியின் நன்மை கருதி எடுத்திருந்தாலும், அவன் சுயநலமும் அதில் அடங்கி இருந்தது. ஹரி வீடு மாறுவதற்குள், வெகு நாட்களாக காத்திருக்கும் தன் பெற்றோரை அழைத்துவரலாம் என்று யோசித்தான் அரவிந்தன்.

மகேஷும், தன் அளவுக்கு ஹரி மீது அக்கறையாய் இருப்பான் என்றும், எதையும் அவனிடம் வெளிப்படையாய் பேசலாம் என்பதும் அரவிந்தன் நன்கு அறிந்த உண்மை.  

மீரா மீண்டும் பணிக்கு வர, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் இருந்தது.  புதன்கிழமை அன்று, பாராட்டு விழாவில் பங்கெடுத்து கொண்ட நண்பர்களுக்கு பெரும் ஆச்சரியம்.

ஹெட் ஆஃபிஸில், பாராட்டு விழா என்றதும், விருந்து, ஆட்டம் பாட்டம் என்று மட்டுமே எதிர்பார்த்து போனவர்களை, பெரும் அளவிற்கு கௌரவ படுத்தினார்கள். அவர்கள் கொடுத்த சொற்பொழிவுக்கு எதிர்பார்த்தது போல் கோப்பையும், சான்றிதழும் வழங்கினர்.

அவர்கள் வடிவமைத்த திட்டங்களை, ஒரு முன்னுதாரணமாக தன் கிளையிலேயே செயல்படுத்தியதற்கும், ஓராண்டு காலமாக, கிளையை சிறப்பாக இயக்கியதற்கும், ‘மக்கள் சேவையில் சிறந்த கிளை’ விருதை அரவிந்தனுக்கு வழங்கினார்கள்.

மீரா தன் துறை சார்ந்த ஆராய்ச்சி ஆய்வுகளை சில மாதங்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தாள். ஊதியத்தொகையில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் பெர்க்ஸ் (Perks) எனப்படும் சலுகைகளை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தாள். தன் ஆராய்ச்சியில், பணியாளர்களுக்கும், வியாபரிகளுக்கும் பயனளிக்கும் வகையில், இந்த சலுகைகளை எப்படி வழங்கலாம் என்று பல திட்டங்களை விளக்கியிருந்தாள். புதிய திட்டங்களை சிறப்பாக விவரித்ததற்கு, பணமாகவும், பொருளாகவும் சன்மானம் பெற்றாள்.

விழா முடிந்து, இருவரும் மனநிறைவுடன் அவரவர் வீட்டிற்கு திரும்பினர். அம்மாவிடம் பூரிப்புடன், பரிசு பொருட்களை காட்டினாள் மீரா. மகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்தவள், அப்பாவிடமும் காட்ட சொல்லி வற்புறுத்தினாள்.

“அப்பா! எனக்கு வங்கியில இந்த பரிசு எல்லாம் கொடுத்திருக்காங்க!” மெல்லமாக சொல்லி, ஒவ்வொன்றாய் காட்டினாள்.”

அவரும், நிதானமாக, அவற்றை கையில் வாங்கி பார்த்தார். சன்மானமாய் குறிப்பிட்டிருந்த பணத்தொகையை பார்த்து, “இப்படி உன் திறமைய, சரியான இடத்துல காட்டு; வாழ்க்கையிலும் சாமர்த்தியமா முடிவு எடுக்க பழகு.” ஜாடையாக அறிவுருத்தினார்.

அந்த சன்மான தொகையில், தன்னவனுக்கு என்ன பரிசு வாங்கி கொடுக்கலாம் என்று சிந்தையில் கலந்தவளின் செவிகளுக்கே அவர் பேசியது கேட்காத போது, மூளைக்கு எட்டிவிடுமா என்ன?

பொருட்களை எல்லாம் குவித்து கொண்டு, தன் அறைக்குள், வந்தவள், முதல் காரியமாக, ஹரியை அழைத்தாள். அவனும் அதற்குள், அரவிந்தனிடம் பேசியதில், நடந்ததை பற்றி எல்லாம் தெரிந்துகொண்டிருந்தான். இருந்தும், அவள் வாயால் நடந்ததை எல்லாம் பூரிப்புடன் சொல்லி முடிக்க,

“இத்தனை புகழையும், பாராட்டையும் வேண்டாம்னு சொல்லி அடம்பிடிச்சியே…. பைத்தியகாரி!” அவள் அலுவலகம் வர மாட்டேன் என்று முரடு பிடித்ததை செல்லமாக சுட்டி காட்டினான்.

“ம்ம்…. என்ன செய்ய; ஒரு எழுத்தாளார் மேல இருக்குற கண்மூடி தனமான பைத்தியத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல தெரியுமா?” என்று நிஜத்தை சொல்லி, அவன் வாயடைத்தாள்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு, அரவிந்தனும், அவனும், வார இறுதியில் ஊருக்கு போய்வருவது பற்றி திட்டமிட்டதை அவளிடம் பகிர்ந்து கொண்டான். அதை அறிந்ததும், அவள் முதல் கேள்வி,

“உங்க அம்மா கிட்ட நம்ம விஷயத்த சொல்ல போறியா ஹரி?” அதிலேதும் சிக்கல் வருமோ என்று பயந்து கேட்டாள்.

“தெரியல மீரா! ஆனா எதையும் சமாளிக்கனும்னு புரிஞ்சிகிட்டேன்?” அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பதில் சொல்ல, அதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

அரவிந்தன், பெற்றோரை சந்தித்து, விரைவில் அவர்களை சென்னைக்கு அழைத்து வருவதை பற்றி கலந்தாலோசிக்க, ஊருக்கு போக திட்டமிட்டான்.

ஹரி, மீராவிடம் பிடிகொடுக்காமல் பேசிய போதும், ஊருக்கு போய் செய்ய வேண்டிய பல விஷயங்களை தெளிவாக திட்டமிட்டிருந்தான்.

அதை பற்றி ஊரில் இருக்கும் அவன் தாய்மாமாவிடம் கூட பேசி அவர் சம்மதமும் பெற்றான்.

ஊருக்கு போய்விட்டு திரும்பும் காதலனின் செயலுக்கு உடன்படுவாளா; உணர்ச்சிவச படுவாளா இல்லை உக்கிர தாண்டவம் ஆடுவாளா மீரா…. பதில் சொல்லும், அவள், அவன் மீது வைத்த அன்பின் ஆழம்…..