IIN 69

மூட் ஸ்டெபிளைசர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டி-டிப்ரசண்டுகளோடு சேர்த்து சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. பைபோலார் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு மூட் ஸ்டெபிளைசர்கள் மற்றும் ஆன்டி டிப்ரசண்டுகளை இணைத்து கொடுப்பார்கள் மனநல மருத்துவர்கள். அவர்களது பைபோலார் குறைபாடு மேனியாவாக மாறாமல் இவை தடுக்கும். லித்தியத்தை விட சிறந்த மூட் ஸ்டெபிளைசர்கள் மருந்துகளும் உள்ளன. ஆனால் அவற்றை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை மருத்துவர்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்து அவர்களது மருந்து அளவையும், பக்கவிளைவுகளின் தீவிரத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

                       -From the website of National Institute of Mental Health

இதன்யா பொன்மலை காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தாள். அவள் முன்னே வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள் கலிங்கராஜனின் சாந்திவனத்தில் முன்னர் பணியாற்றிய நான்கு ஊழியர்கள்.

அவர்களை ஏற்கெனவே மார்த்தாண்டனும் மகேந்திரனும் விசாரித்திருந்தார்கள். இருப்பினும் அவர்களிடம் சொல்லாத பாயிண்ட் ஏதாவது இருக்கலாம் என்ற ஊகத்தில் அன்று காவல் நிலையத்துக்கு வரச் சொல்லியிருந்தாள் அவள்.

“சோ நீங்க எல்லாரும் பாத்த வரைக்கும் இனியா காணாம போறதுக்குக் கொஞ்சநாள் முன்னாடி நவநீதமும் ஜானும் அடிக்கடி ஏகலைவன் வீட்டுப்பக்கம் போயிருக்காங்க.. ஆம் ஐ ரைட்?”

“ஆமாங்க மேடம்… எதுக்குனு கேட்டா உங்க வேலைய பாருங்கனு அதட்டுவாங்க… ஜானுக்கு முதலாளி கிட்ட ரொம்ப நல்ல பேர் இருந்துச்சு… அவனைப் பகைச்சுக்கிட்டா அங்க வேலை பாக்க முடியாதுங்கிற சூழ்நிலை இருந்துச்சு மேடம்… அதான் நாங்க வேர யார் கிட்டவும் அவங்களைப் பத்தி சொன்னதில்ல… கிளாராம்மாக்குக் கூட இதைப் பத்தி தெரியாது”

“கிளாரா அரெஸ்ட் ஆகுறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி எக்ஸாட்டா என்ன நடந்துச்சு?”

ஏற்கெனவே மார்த்தாண்டன் விசாரித்தபோது சொன்ன உண்மையைத் தான் அப்போதும் கூறினார்கள் அவர்கள்.

கிளாராவைக் கைது செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபால் செடிகளுக்கு மருந்து வாங்க தோட்டக்கலை அலுவலகத்துக்குச் செல்வதாகக் கூறிக்கொண்டு சாந்திவனத்தை விட்டுக் கிளம்பியிருக்கிறார். ஆனால் அவர் ஊர் எல்லையைத் தாண்டவில்லை. .

அவர் பைக்கை எடுத்துக்கொண்டு திருநெல்வேலிக்குச் செல்வதாகக் கூறிக்கொண்டு பொன்மலையிலேயே சுற்றியதை ஒரு ஊழியர் பார்த்திருக்கிறார். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து சாந்திவனத்துக்கு வந்தவரின் கையில் மருந்து வாங்க சென்றபோது கொண்டு போன பை இருந்திருக்கிறது.

தோட்டத்திற்கு தேவையான பொருட்கள், உபகரணங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வைப்பதற்கு சாந்திவனத்தில் ஒரு ஸ்டோர்ரூம் தனியாக உண்டு. அதில் தான் எப்போதும் செடிகளுக்குத் தேவையான மருந்தை வைப்பது வழக்கம். ஆனால் .அன்று அங்கே வைக்காமல் தோட்டத்தின் மறைவான மூலையை நோக்கி சென்றிருக்கிறார் கோபால்.

அங்கே குழி தோண்டி பையில் கொண்டு வந்த எதையோ புதைத்திருக்கிறார். அவரது பருத்த சரீரம் அவர் எதை புதைக்கிறார் என்பதை மறைத்துவிட்டது. அதை யாரும் பெரிதுபடுத்தாமல் மறந்தும் போய்விட்டார்கள்.

“அதுக்கு மறுநாள் நவநீதம் இருக்குல்ல, அது நம்ம ஃபாதர் வீட்டுல இருந்து ஒரு கட்டப்பையை வாங்கிட்டு வந்துச்சு… நான் பாத்து என்னனு கேட்டதுக்கு உன் வேலைய பாருய்யானு கத்திட்டுப் போயிடுச்சு… என் சம்சாரம் கலிங்கராஜன் ஐயாவோட வீட்டுக்கு அன்னைக்கு வந்திருந்தா… ஐயா கிட்ட என் மக படிப்புக்காக கொஞ்சம் பணம் வாங்கலாம்னு சொன்னா… எனக்குக் கேக்க தயக்கமா இருந்ததால் அவளை வரச் சொல்லியிருந்தேன்… ஐயாவும் பணம் குடுக்கச் சம்மதிச்சு கிளாராம்மா கிட்ட வாங்கிக்க சொன்னாங்க… அவ கிளாராம்மா ரூமுக்குப் போனப்ப அங்க நவநீதம் கட்டப்பையில இருந்து சீலை மாதிரி எதையோ எடுத்து கிளாராம்மாவோட கட்டிலுக்குக் கீழே உள்ள அறைல வச்சிட்டிருந்ததை பாத்ததா என் கிட்ட சொன்னா… கிளாராம்மவை நீங்க அரெஸ்ட் பண்ணுனப்ப அந்த சால்வையை எடுத்தது எனக்குத் தெரியாது… அன்னைக்கு நானும் என் சம்சாரமும் என் மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட பாளையங்கோட்டைக்குப் போயிட்டோம்… அப்புறம் அவங்க தான் இனியாம்மாவைக் கொலை பண்ணிட்டாங்கனு சொன்னாங்க… இந்த விசயத்தைப் போலீஸ் கிட்ட சொல பயந்துட்டு பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்குனு வாயை மூடிக்கிட்டு இருந்துட்டேன் மேடம்”

கிளாராவைக் கைது செய்ய காரணமாக இருந்தவர் கோபால். அவள் தான் கொலை செய்ய உதவியாக இருந்திருப்பாள் என்பதற்கு ஆதாரமாக இருந்தது நவநீதம் கொண்டு போய் மறைத்து வைத்ததாகச் சொல்லப்படும் அந்தச் சால்வை. இந்த இரண்டு காரணிகளுமே இப்போது ஜோடிக்கப்பட்டவையாகத் தோன்றின இதன்யாவுக்கு.

அவ்வளவு போராடியும் சிக்காத ஆதாரங்கள் திடுமென எங்கிருந்து முளைத்தன என்று யோசிக்காமல் கிடைத்தது ஆதாரம் என கிளாராவைக் கைது செய்தது பிழையோ?

அன்று கைது செய்கையில் கிளாரா பிழிய பிழிய அழுதது நாடகம் இல்லையா?

அவளுக்குள் எண்ணற்ற கேள்விகள்! விசாரித்து முடித்து அவர்களை அனுப்பிவைத்தவள் மார்த்தாண்டனிடம் அடுத்து செய்யவிருக்கும் காரியத்தைக் கூறினாள். அதற்கு மார்த்தாண்டனின் உதவியும் வேண்டும் என்றாள்.

“என்ன உதவி மேடம்?”

“நான் கிளாராவை மீட் பண்ணனும்… இதுக்கு மேல டிலே பண்ணுனா ரியல் கில்லர் தப்பிக்க வாய்ப்பு இருக்கு… ஹூ நோஸ், அந்தக் கில்லர் ஆல்ரெடி தப்பிக்க கூட செஞ்சிருக்கலாம்… அதுக்காக அப்பிடியே விட்டுட முடியாது இல்லையா?”

“மேடம் உங்க எண்ணம் எனக்குப் புரியுது? பட் இந்த முயற்சிக்கு அப்புறமும் உங்க உள்ளுணர்வோட உறுத்தல் அடங்கலனா?”

“அட்லீஸ்ட் நான் ஒரு தடவை முயற்சி பண்ணுனேன்ங்கிற திருப்தி எனக்கு இருக்கும் மார்த்தாண்டன் சார்”

“சரி மேடம்… நான் ஜெயிலர் கிட்ட பேசி இந்த வீக்கெண்ட் கிளாராவை மீட் பண்ண பெர்மிசன் வாங்குறேன்”

“தேங்க்யூ மார்த்தாண்டன் சார்” என்றவள் திடீரென எதையோ யோசித்தவளாக “ஃபாதர் பவுல், ராக்கி, ஏகலைவன் இந்த மூனு பேரையும் அவங்களுக்குத் தெரியாம கண்காணிக்கணும்… முடியுமா?” என்று கேட்க

“அதுல்லாம் சுலபமா செஞ்சிடலாம் மேடம்… அடுத்த வாரம் எலெக்சன் இருக்கு… அதை காரணமா வச்சு தாராளமா நம்ம எல்லாரையும் கண்காணிக்கலாம்… ஃபாதர் பவுல், ராக்கி ரெண்டு பேரும் ஓ.கே… ஆனா ஏகலைவனை ஏன் கண்காணிக்கணும்? உங்க கேஸ் விவகாரமாவா?” என்றார் அவர்.

“நோ! ஏகலைவன் அன்னைக்கு என் கிட்ட ஆர்கியூ பண்ணிடிட்ருந்தப்ப திடீர்னு தேவானு சொன்னான்… அது அவனோட லவ்வர் தேவசேனாவோட ஷார்ட் நேம்… திடீர்னு அந்தாளு ஏன் அப்பிடி சொன்னான்னு எனக்குப் புரியல… நான் தேவசேனாவைப் பத்தி தெரிஞ்சிக்கிட்ட வரை ஷீ வாஸ் அ ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட் பெர்சன்… அவங்களோட சர்வீஸ்ல முறைகேடா எந்த வேலையும் செஞ்சதில்ல… இன்ஃபேக்ட் அது தான் அவங்களோட டெத்துக்கும் காரணம்… மே பி, அந்த ஆர்கியூமெண்ட் டைம்ல என்னோட பேச்சு, நடத்தை ஏதோ ஒன்னும் அவங்களை அவனுக்கு ஞாபகப்படுத்திருக்கலாம்… அப்ப அவன் ஒரு சிரிப்பு சிரிச்சான்.. அது நார்மல் மனுசன் செய்யுற காரியம் இல்ல… கழுத்தைத் திருகிப் போடுற அளவுக்குக் கோவத்தோட வந்தவன் திடீர்னு என்னைப் பாத்து சிரிக்குறான்னா அவனோட மூட்ஸ் ஸ்டேபிளா இல்லனு அர்த்தம்… சீம்ஸ் டு பி அ சைக்கலாஜிக்கல் டிஸ்சார்டர்… சோ அவனைக் கண்காணிக்குறது ரொம்ப இம்ப்பார்ட்டெண்ட்”

இதன்யாவின் பேச்சைக் கேட்ட மகேந்திரன் “என்ன மேடம் இது? இந்தக் கேஸோட சம்பந்தப்பட்ட சஸ்பெக்ட்ல மேக்சிமம் ஆளுங்க சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் உள்ளவங்களா இருக்காங்க? சோ இனியா வாஸ் அசாசிணேட்டட் பை அ சைக்கோபாத் ஆர் அ க்ரூப் ஆப் சைக்கோபாத்ஸ்னு எடுத்துக்கலாமா?” என்று கேட்க

“நோ ஐடியா மகேந்திரன்… பட் யுவர் பாயிண்ட் இஸ் வேலிட்… இன்னொன்னு சொல்லட்டுமா? அன்றாட வாழ்க்கைல நம்ம சந்திக்குற நூத்துக்கு தொண்ணூறு ஆளுங்க ஏதோ ஒரு வகையில சைக்காலஜிக்கலி பாதிக்கப்பட்டவங்க தான்… என்ன ஒன்னு, அவங்களோட பாதிப்பு சட்டைய கிழிச்சிக்குற அளவுக்குப் பைத்தியமாவோ, கொடூரமா கொலை பண்ணுற அளவுக்கு சைக்கோவாவோ அவங்களை மாத்துற அளவுக்குத் தீவிரமானது கிடையாது… அவ்ளோ தான்” என்ற இதன்யா அங்கிருந்து முபீனாவை அழைத்துவர திருநெல்வேலிக்குக் கிளம்பினாள்.

அந்த வார ஞாயிறன்று மார்த்தாண்டன் கிளாராவைச் சந்திக்க அவளுக்கு அனுமதி வாங்கி கொடுத்துவிட்டார். அந்த வாரத்தில் விசிட்டர்கள் வருவதற்கான அனுமதி கிடையாது என்பதால் இதன்யாவுக்கு வெகு சுலபமாக அனுமதி கிடைத்துவிட்டது.

கிளாராவை அழைத்துவர பெண் காவலர் ஒருவர் சென்றிருக்க இதன்யா சந்திப்புக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அவளுக்காகக் காத்திருந்தாள்.

வெயிலில் வேரோடு பிடுங்கிப் போடப்பட்ட செடியைப் போல வாடி வதங்கிய தோற்றத்தோடு  வந்து நின்ற கிளாராவின் விழிகள் இதன்யாவைப்  பார்த்ததும் கோபத்தில் கொந்தளித்தன.

சீற்றத்தோடு நின்றவளை “உக்காரும்மா” என்று பெண் காவலர் அதட்டியதும் அமைதியாக அமர்ந்தாள்.

“ஹவ் ஆர் யூ கிளாரா?”

இதன்யா அமைதியாகத் தான் கேட்டாள். உடனே கோபம் வந்துவிட்டது அவளுக்கு.

“யூரோப் வெகேசனுக்கா வந்திருக்கேன் நானு? நல்லா இருக்கியானு குசலம் விசாரிக்குறிங்க… நான் என் குடும்பத்தைப் பிரிஞ்சு ஜெயில்ல இருக்குறேன்… அதுக்குக் காரணம் நீங்க” என்று வெடித்தாள் அவள்.

இவளை விட்டால் இன்னும் பேசிக்கொண்டே போவாள் என்பதால் கறாராகப் பேச தீர்மானித்தாள் இதன்யா.

“உன்னோட இந்த நிலமைக்கு நான் காரணமில்ல… உன்னோட தடுமாற்றம் தான் காரணம்… ஆதாரம் எல்லாம் உனக்கு எதிரா இருந்துச்சு’

“அதுக்குனு நான் வளத்த பொண்ணை நானே கொல்லுவேனா மேடம்?” இறங்கிப்போன குரலில் வினவினாள் கிளாரா.

“சட்டத்துக்கு ஆதாரம் தேவை… உன்னோட செண்டிமெண்ட்ஸ் பத்தி சட்டத்துக்கு எந்தக் கவலையும் இல்ல” என்றாள் இதன்யா.

கிளாரா அமைதியாகிவிட்டாள். இதன்யாவுக்கு அதுதானே வேண்டும். தான் வந்த நோக்கத்தைக் கூற ஆரம்பித்தாள்.

“உன் விவகாரத்துல ஏதோ தப்பு நடந்திருக்குனு எனக்குத்  தோணுது… நான் இங்க வந்தது உன் கிட்ட சில டீடெய்ல்சை வாங்குறதுக்கு… நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொன்னா மட்டும் போதும்”

கிளாரா நம்பாத பார்வை பார்த்தாள். தன்னிடம் விசாரணை நடத்தி மீண்டும் வேறு எந்தப் பிரச்சனையிலும் மாட்டிவிடுவாளோ என்ற பயம் அவளது பார்வையில் இருந்தது.

“பயப்படாம உண்மைய சொன்னா, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்குற துன்பம் இல்லாம நீ தப்பிப்ப” இதன்யா அழுத்தமாக உரைக்கவும் கிளாராவின் பயம் அகன்றது. இங்கிருந்து தப்பி பழையபடி குடும்பத்தோடு வாழ்ந்துவிடமாட்டோமா என்ற நப்பாசை அவளது விழிகளில் தெரிந்தது.

இதன்யா அதைக் கண்டுகொண்டாள். தனக்கு வேண்டிய விவரங்களை அவளிடம் சேகரிக்க ஆரம்பித்தாள்.

“உன்னை நான் அரெஸ்ட் பண்ணுற ரெண்டு நாளுக்கு முன்னாடி என்னென்ன நடந்துச்சு, உனக்கு ஞாபகம் இருக்குற எல்லா இன்சிடெண்ட்ஸையும் ஒரு வரி விடாம சொல்லு… போன தடவை விசாரிச்சப்ப கீறல் விழுந்த ரெக்கார்டர் மாதிரி நான் கொலை பண்ணலனு சொல்லாம உருப்படியா ஏதாச்சும் சொன்னா நல்லது”

கிளாரா சிறிது நேரம் யோசித்துவிட்டு அவளுக்கு ஞாபகம் இருந்ததை இதன்யாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“அந்த வாரம் வித்தியாசமா எதுவும் நடக்கல… நீங்க என்னை அரெஸ்ட் பண்ணுற நாளுக்கு முன்னாடி ஈவ்னிங் வீட்டுல வேலை பாக்குற சர்வெண்ட் ஒருத்தரோட குழந்தைக்குப் படிப்புச்செலவுக்குப் பணம் குடுக்கச் சொல்லி ராஜ் என் கிட்ட கொஞ்சம் அமவுண்ட் குடுத்துட்டுப் போனார்… நான் அவங்க வரட்டும்னு என் ரூம்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தேன்… ஒரு கட்டத்துக்கு மேல போரடிச்சதால குமாரி கூட பேச அவங்க ரூமுக்குப் போனேன்… அப்ப தான் அந்த சர்வெண்ட் என்னைக் கூப்பிட்டது கேட்டுச்சு… நான் என் ரூமுக்குப் போனப்ப அவரோட ஒய்ப் வெளிய நின்னுட்டிருந்தாங்க… நவநீதம் வழக்கம் போல லாண்ட்ரில இருந்து திரும்பி வந்த என்னோட சேரீஸை என் வார்ட்ரோப்ல அடுக்கிட்டிருந்தா… நான் பணம் குடுத்ததும் அந்த லேடி போயிட்டாங்க… இதை விட முக்கியமான விசயம் நைட் நடந்துச்சு… தோட்டத்துப்பக்கம் யாரோ ஒரு நாள் நடமாடுறதா நவநீதம் சொன்னா… அதனால நான் அங்க போனேன்… நான் போனப்ப யாரும் இல்ல… கோபால் வழக்கம் போல தோட்டத்தைச் செக் பண்ண வந்தார்… என்னை அந்நேரம் அங்க பாத்ததும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டார்… நான் அவர் கிட்ட இங்க வேற யாரும் வந்தாங்களானு கேட்டேன்… அவர் இல்லனதும் நான் வீட்டுக்குள்ள போயிட்டேன்… இது தான் அன்னைக்கு நைட் நடந்துச்சு… ஆனா அவர் உங்க கிட்ட நான் தோட்டத்துல எதையோ புதைச்சு வச்சதா சொல்லிருக்கார்… உண்மையா சொல்லணும்னா எனக்குத் தோட்டத்துல மண் தோண்டுறது, செடியை நடுறது, தண்ணி ஊத்துறதுலாம் சுத்தமா பிடிக்காது…. அதை செய்ய தான் சர்வென்ட்ஸ் இருக்காங்களேனு அவங்களை வச்சு வேலைய முடிப்பேன்… குழந்தைங்க மண்ணைத் தொட்டாலே என் கிட்ட வரவிடமாட்டேன்… ஏன்னா எனக்கு மண்ணுல வெறுங்காலோ கையோ பட்டாலோ ‘பிட்டட் கெரட்டோலிசிஸ்’ வந்துடும்… உள்ளங்கை உள்ளங்கால் எல்லாம் குட்டி குட்டியா ஹோல் விழுந்து அரிப்பு வரும்…. நான் போய் எப்பிடி குழி தோண்டி அந்த ஆதாரத்தைப் புதைப்பேன் மேடம்?”

இதன்யா அவள் சொன்ன பாயிண்டை குறித்துக்கொண்டாள்.

“உனக்கு மண்ணைத் தொட்டா ‘பிட்டட் கெரட்டோலிசிஸ்’ வரும்னு நான் எப்பிடி நம்புறது? அதுக்கு எதுவும் மெடிக்கல் ரிப்போர்ட் இருக்குதா?” என்று வினவினாள்.

கிளாரா சில நொடிகள் யோசித்துவிட்டு “ஹான் இருக்கு மேடம்… எனக்குச் சின்ன வயசுல இருந்தே இந்தப் பிரச்சனை  உண்டு… பட் ரொம்ப சிவியர் ஆனது நித்திலனை நான் ப்ரெக்னெண்டா இருந்தப்ப தான்… தோட்டத்துல செருப்பு இல்லாம வாக்கிங் போனப்ப ராஜ் சொன்னாரேனு ஒரு செடியை நட்டு வச்சேன்… அவ்ளோ தான், உள்ளங்கை உள்ளங்கால் எல்லாம் அரிப்பு ஓவராகி டாக்டர் கிட்ட போனேன்.. அப்ப என் கூட குமாரி அக்கா இருந்தாங்க… அந்த டைம்ல தான் டாக்டர் இந்த பிரச்சனைய பத்தி சொன்னாங்க… அந்த ரிப்போர்ட் நித்திலன் ப்ரெக்னென்சி ஃபைல்ல இருக்கு” என்றாள்.

மண்ணைத் தொட்டாலே அலர்ஜி வருபவளைத் தான் ஆதாரங்களைக் குழி தோண்டி புதைத்ததாக கோபால் கூறினார். எவ்வளவு மோசமான பொய் இது! கட்டாயம் இவள் ஆதாரத்தை மறைத்தவளாக இருக்க முடியாது.

இவளைக் கொலையாளியாகச் சித்தரிக்க யாரோ முயன்றார்கள். முயற்சியில் வெற்றியும் கண்டார்கள். அந்த முயற்சிக்கு உதவியவர்கள் கோபாலும் நவநீதமும்.

இனியும் தாமதித்தால் கொலையாளி தப்பிவிடுவான்.

“நான் கிளம்புறேன்… நீ எந்த தப்பும் செய்யலனு சட்டத்துக்குப் புரிய வைக்குறதுக்காக நான் உன்னைத் தேடி வரல கிளாரா… ஒரு அப்பாவிப்பொண்ணை இவ்ளோ கொடூரமா கொன்ன உண்மையான கொலையாளி தப்பிச்சிடக்கூடாதுங்கிற எண்ணம் தான் இப்ப மூளை முழுக்க நிறைஞ்சிருக்கு… அதுக்கு என்னால முடிஞ்ச எல்லா முயற்சியையும் செய்வேன்… என்ன ஒன்னு, இப்ப நீ சொன்னதை போன தடவை விசாரணைல சொல்லியிருந்தா இந்த கேஸ் வேற ஆங்கிள்ல போயிருக்கும்… எப்பவுமே உணர்ச்சிகளை நம்ம ஆளணுமே உணர்ச்சிகளை நம்மளை ஆளுறதுக்கு விடக்கூடாது… எனிஹவ், யூ மே கோ நவ்”

கிளாரா நம்பிக்கையோடு அங்கிருந்து செல்ல இதன்யாவோ பாளையங்கோட்டையிலிருக்கும் கலிங்கராஜனின் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தவளாகச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினாள்.