அத்தியாயம் – 02

தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்காக அருணகிரிநாதர் அவர்களால் இசைப்பாடல்களாக இயற்றிய திருப்புகழ், பல்வேறு ராகத்தில் அவ்வீடு முழுவதிலும் இசைந்துக் கொண்டிருக்க, அதற்குப் போட்டியாக தசாங்க மணமும் ஊதுபத்தியின் சுகந்தமும் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்து.

நகரின் முக்கிய இடமான தில்லை நகரில் அக்கால பாணியிலும் தற்போதைய மாடன் வசதிகளும் கலந்தவாறு செட்டிநாட்டு வகையில் சற்று பெரிதாகவே காணப்பட்டது அவ்வீடு.

இரண்டடுக்கு கொண்டு, சுற்றிலும் தோட்டமும், பக்கவாட்டில் விஸ்தாரமான கார் ஷெட்டும், பின்புறம் மாட்டு கொட்டகையும் துவைக்கும் இடமும் என அத்தனை அழகான அமைத்திருந்தனர். அதை பராமரிப்பு செய்யவே நான்கு வேலையாட்களும் இருந்தனர்.

வீட்டின் முன்புறம், நடுநாயகமாக இருந்த துளசி மடத்திற்கு அதிகாலையிலேயே பூஜை முடித்த சுவடு தெரிந்த.

மூன்று படிகள் ஏறி செட்டிநாட்டு மரக்கதவைத் தாண்டி உள்ளே சென்றால், கூடத்தில் இருந்த அனைத்து பொருட்களும் பழமையும் புதுமையும் கலந்தவாறே காணப்பட்டது.

அதிலும் மரப்பாச்சி பொம்மைகளின் குடும்ப அமைப்பும், வெங்கல சிலைகளும் தொங்கும் விளக்குகளும் அதன் தொன்மையையும் விலையையும் சொல்லாமல் சொல்லியது.

கேரளத்து கோவில்களின் பாணி பூஜையறையில் மணியடிக்கும் சப்தம் கூட அலாரம் போல் தான் இன்றளவும் விளங்குகின்றது அந்த வீட்டில்.

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு விழித்துவிடும் வீட்டினரிடம் முக்கியமாய் நடக்கும் நிகழ்வானது என்னவோ முருகப் பெருமானின் திருப்புகழை கேட்பதே ஆகும்.

சின்னஞ்சிறு குழந்தை கூட இரண்டு திருப்புகழையாவது சுவாமியின் முன்பு சொல்லியே ஆகவேண்டும் என்பது மூத்தவரின் கட்டளை.

அதன்படி, அரக்க பரக்க எழுந்து குளித்து ஒன்றன் பின் ஒருவராக பூஜையறை வாயில் வந்து நிற்கவும் நாற்பது திருபுகழ் பாடல்கள் முடியவும் சரியாக இருந்தது.

மிகப் பெரும் பூஜை அறையில் முருகனின் அறுபடை வீடுத்தளங்களில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் கண்கவர் படங்கள் சூழ, மூன்றடியில் வெங்கலத்தில் ஆன செந்தூர் வடிவேலனின் அழகு முகம் ராஜ அலங்காரத்தில் இன்று அத்தனை அற்புதமாக விளக்கின் ஒளியால் ஜொலித்தது.

முருகனின் அலங்காரம் துவங்கி பிரசாதம் வரை, பூஜை முடிந்த பின் அலங்காரம் கலைப்பது துவங்கி சிறு பிரசாதம் வைத்து, அவரை சுத்தம் செய்வது வரை அனைத்தையும் செய்வது என்னவோ வீட்டின் மூத்தவர் தான்.

தோல் சுருங்கி, நரையெய்தி, ஒல்லியான உடல்வாகுடன் கண்களின் தீட்சன்ய பார்வையூடு நெற்றி, கைகளில் விபூதி பட்டையும் இடையில் கட்டிய துண்டு சகிதம் ஆரத்தி எடுத்து முடித்தவர் அதை அனைவருக்கும் காட்டும் சமயம் பின்னணியில் ஒளித்த பாடலால் அவர் உடல் விரைத்தது!

‘செங்கலச… முலையார்பால் சிந்தைபல… தடுமாறி, அங்கமிக… மெலியாதே, அன்புருக… அருள்வாயே செங்கைபிடி… கொடியோனே!செஞ்சொல்தெரி… புலவோனே!மங்கையுமை… தருசேயே! மன்றுள்வளர்… பெருமாளே!’

(பாடல் விளக்கம் முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை படித்த பின்னர், தொடர்ந்து படிக்கவும் 🙂)

அவருக்கு மிகப் பிடித்த அமிர்தவர்ஷினி ராகத்தில் அப்பாடலை பாடியவர் கசிந்துருகிட, இங்கு மூத்தவரின் முகம் கறுத்து இறுதியது.

எப்போதும் அந்த வரிகள் அவரை மிகவும் பாதிக்கும். அஃதே இன்றும் நடக்க, சில பெருமூச்சுக்களும் சில கோபமுகங்களும் ஒருவனை சுட்டெரித்தது.

அதன்பின்பு, முருகனிடம் மனதுருகி வேண்டிய பின்னர் அவர் வெளியே வர அரை மணிப்பொழுதானது.

“சாரங்கா” என்று வெங்கல குரல் கேட்டவுடனே,

“பெரிம்மா, தாத்தா வந்தாச்சு. மோர் கொண்டுவாங்க” என்ற சுருதி மூத்தவரின் காலில் விழுந்தெழுந்தாள்.

“ஷேமமா இரு, சுருதி” என்று வாழ்த்தியவர் பத்து ரூபாய் தாளை அவளிடம் கொடுத்தவர்,

“என் ஆஞாவ கோவில்ல போய் பார்த்துட்டு போ” என்றவர் சொல்லுக்கு தலையசைத்தவள், வீட்டினரிடமிருந்து விடை பெற்றாள்.

தில்லை நகர். ராஜா மாணிக்கம் பிள்ளை, எழுபதை தொட்ட வயதுக்காரரை திருச்சியில் தெரியாதவர்கள் இல்லை எனலாம்.

முக்கியஸ்தர் என்பதை விட தீவிர முருக பக்தர். அதைவிட, ‘ஸ்கந்தகுரு ஹார்ட்வேர் கார்போரேஷன்’ என்ற மிகப் பெரும் நிறுவனத்தின் நிறுவனர்.

ஹார்ட்வேர் துவங்கி, ஆட்டோமொபைல், பெயிண்ட், கட்டுமான பொருள்களின் மொத்த விலை வியாபாரம் என்று அவர் கால் ஊன்றிய இடத்தில் அவரின் முருகனின் அருளால் தனக்கென்றே தனி அடையாளத்துடன் திருச்சியில் பெரும் புள்ளியாக இருக்கிறார்.

தன் இனத்தின் மீது தனி கர்வம் கொண்டவர் மிகவும் பழைமைவாதியே. வயதிற்கு ஏற்ற பக்குவம் இருப்பினும் சில பழக்க வழக்கங்கள் எல்லாம் இரத்தில் ஊறி இருக்கும் தானே.

இனத்தை, தொழிலை, பக்தியை கடந்து மாணிக்கம் பிள்ளையின் ஆதிக்கம் இருக்கும் இடம் சங்கீதம். அதுவும் கர்நாடக சங்கீதம் என்றால் அவரின் முருகனுக்கு அடுத்தபடி.

முறையாய் சமஸ்கிருதம் பயின்று, சங்கீதம் கற்று, இளம் வயதில் கச்சேரிகள் பல செய்திருக்கிறார். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு எண்பதுகளிலேயே கச்சேரியும் செய்திருக்கிறார்.

‘ராஜாஸ் அகாடமி’ என்று சங்கீத பாட சாலை கூட இக்காலத்து பாட்டு முறையும் சேர்த்து கற்பித்து வருகிறாள் அவரின் கடைசி பெயர்த்தி, சுருதி மகாலட்சுமி.

நல்ல மனிதர், கோபக்காரர், தேர்ந்த வியாபாரி, சங்கீத வல்லுநர் என்றெல்லாம் அவரை பற்றி கேட்டிருந்தாலும் அவரின் பழைமைவாத குணமும் பிடிவாத தனமும் இந்த வயதிலும் ஏற்புடையதாக இருக்கவில்லை.

சங்கரத்தம்மாள், மாணிக்கத்தின் துணைவி. அவருக்கு ஏற்றவராக இருந்தவர் பத்து வருடங்களாக இந்த வயதில் பிரிந்து வாழ்கின்றனர்!

பதினேழு வயதில் சங்கரத்தம்மாளை மணந்தவருக்கு நான்கு பிள்ளைகளும், எட்டு பெயரப்பிள்ளைகளும், இரண்டு கொள்ளு பெயரர்களும் இருந்தாலும் மனைவியின் செயலால் இன்னமும் முறுக்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

“அப்பா, கூப்டீங்களாமே” என்று வந்தார் சாரங்கன், அவரின் மூத்த மகன்.

“அந்த பைய எங்க இருக்கான்னு கேளு” என்றவர் முகத்தில் அத்தனை கோபம்.

முகம் கடுகடுக்க, அவரின் வெளுத்த மேனி சிவந்து காணப்படவுமே வீட்டினர் உசார் நிலையில் இருந்தனர்.

நடு கூடத்தில், பெரிய மயில் வேலைபாடு கொண்ட மர ஊஞ்சலில் தான் அவர் நாளின் பெரும் பகுதியை கழிப்பார். இன்று அந்த ஊஞ்சலில் அவர் வேகவேகமாக ஆடுவது கூட அவரின் கோபத்தின் வெளிப்பாடாகவே கருதப்பட்டது.

“மாமா, மோர்” என்று வந்து நின்ற மூத்த மருமகள் கவிதாவிடம் கோபத்தை காட்டாது அடக்கியவாறு அதை எடுத்து பருகினார்.

“என்ன ஆஞா, இத்தன நேரமா கேட்க” என்று பொறுமையின்றி அவர் சப்தமிட, அவரின் குரலுக்கும் ஊஞ்சல் சங்கிலியின் சப்தத்திற்கும் வீரிட்டு அழுதாள் ப்ருந்தாவணி, சாரங்கனின் பெயர்த்தி.

“பூஜா, பாப்பாவ எடுத்துட்டு தோட்டத்து பக்கம் போ” என்று கவிதா மருமகளிடம் சற்று சப்தமாகவே சொல்லிட, அதுவும் ஒரு குற்றமாகவே பார்க்கப்பட்டது ராஜா மாணிக்கத்தின் பார்வையில்.

அவர் மகனை முறைக்க, அவர் எங்கே தந்தையைப் பார்த்தார்!

“இருந்தாலும் எங்க அம்மாவுக்கு இருக்க தில்ல பாரேன்” என்று மென்மையாய் குசுகுசுத்த வனஸ்பதியின் தலையில் ஒரு கொட்டு வைத்த யமுனா,

“அது தில்லு இல்ல பல நாள் கோபம்” என்று திருத்தினாள்.

சாரங்கன் – கவிதா இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் யமுனா கல்யாணி அடுத்து இரட்டைகள் வனஸ்பதி – சம்பூர்ணன்.

யமுனாவிற்கு திருமணம் முடிந்து மூன்று வயதில் ஒரு மகனும், சம்பூர்ணனிற்கு பூஜா என்ற மனைவியும் பத்து மாத குழந்தையான ப்ருந்தாவனியும் உள்ளனர். வனஸ்பதி, தலை பிரசவத்திற்காக அப்பா விட்டில் தற்போது அடைக்கலம்.

சாரங்கன் விசாரித்த பின் சற்று தயக்கத்துடனும் மனதில் இருந்த கோபமும் சேர்த்து ஒருவித பிரித்தரிய முடியா குரலில், “அப்பா, மனோ ஶ்ரீரங்கம்..” என்றவர் முடிக்கும் முன்பே,

“மனோகரா” என்று வீடே அதிரும்படியாக கத்தியிருந்தார் மாணிக்கம்.

“என்னடா பிள்ளைய வளர்த்து வெச்சிருக்க? என்னோட ஒத்த சொல்லுக்கு அடங்காதவன் எல்லாம் என்ன.. என்ன.. ” என்றவர் அடுத்து என்ன பேசியிருப்பாரோ, செல்வியின் “மாமா” என்ற சொல் அவரை தடுத்தது.

“மனோவ நாங்க ஒன்னும் வளர்த்த நியாபகம் இல்லையே மாமா. வீட்டோட ஆண் வாரிசுன்னு சொல்லி தூக்கி வளர்த்தவர் நீங்களும் அத்தையும் தானே” என்று அவரிடம் கேட்ட செல்வியை எதிர்கொள்ளத் தான் முடியவில்லை மாணிக்கத்திற்கு.

பிரபல குழந்தைகள் நல மருத்துவரான மாணிக்கத்தின் இரண்டாம் மருமகள் தான் செல்வி தேவமனோகர். அதைவிட இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், மனோரஞ்சன், சுருதியின் தாய் என்பதே சரி.

“அவன் என்ன பண்ணுறான், எங்க போறான்னு பெரிய மாமாவுக்கு நல்லாவே தெரியும். இன்னிக்கு மட்டும் என் புள்ளையோட நிம்மதி தயவு செய்து கெடுத்துவிடாதீங்க. அவன் வாழ்க்கை தான் தப்பா போன சிக்கு கோலாம் போல ஆகிடுச்சு, அத அவனே சரி பண்ணிக்கட்டும். உங்க நாட்டாமைய எங்க எல்லார் கிட்டவும் காட்டுற மாதிரி அவன் வாழ்க்கையில நீங்க இனி எதுவும் செய்யாம இருந்தா போரும்” என்று அத்தனை வருட ஆதங்கமும் கோபமும் எல்லாம் சேர்ந்து கொண்டு தன் தாய்மாமனை விளாசியிருந்தார் செல்வி.

‘அவள் பேசுவது சரியே’ என்றபடி தான் நின்றிருந்தார் தேவமனோகர், மாணிக்கத்தின் இரண்டாம் மகன்.

ஆனால், “அப்பா கிட்ட இப்படியா செல்வி பேசுவா? கோபமா இருந்தாலும் ஒரு வரைமுற வேண்டாம்” என்று சாரங்கன் கோபத்துடன் கத்திவிட,

“மனோ அண்ணா இடத்துல நான் இருந்தாலும் நீங்க இப்படி தான் கூலா இருப்பீங்களா அப்பா” என்று கேட்ட சம்பூர்ணனின் பேச்சால் வீக்கித் தான் போனார் சாரங்கன்.

“பூர்ணா” என்று அதிர்ந்து அவனைப் பார்த்த மாணிக்கம்,

“என்ன தாத்தா, பூர்ணா தான். ஆனா நீங்க பண்ணுற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டுற மனோ கிடையாது. அதுனால தான அண்ணா இப்படி ஆனான்.” என்று வேதனையூடு அவன் சொல்ல, செல்விக்கு கண் கலங்கிவிட்டது.

“நான் கிளம்பறேன்” என்று யாரையும் பார்க்காது சென்றவர் மனதில் தான் அவர் பிள்ளையின் கலையிழந்த, கேள்விக்குறியான வாழ்க்கையை நினைத்து வேதனை மண்டியிருந்தது.

“இத்தன வருஷமா நான் எதுவும் கேட்கல, நீங்க எது பண்ணினாலும் அது சரியா தான் இருக்கும் நானும் நம்பினேன். ஆனா என் புள்ளையோட வாழ்க்கையே இப்படி தலைகீழா மாறும், அதை நீங்க இப்படி மாத்துவீங்கன்னு நான் நினச்சு கூட பார்க்க ப்பா” என்று தேவமனோகரும் சென்றுவிட, வீடே ஒளியிழந்தது போல் ஆனாது.

கோபம், வருத்தம், ஆதங்கம், இயலாமை என்று ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அவரின் நிலை இருந்தாலும் அது அனைத்திலும் பிரதானமாக இருந்தது என்னவோ மனோரஞ்சன் ஒருவனே.

தளர்ந்து போய் ஊஞ்சலில் மாணிக்கம் அமர்ந்துவிட, எதிரே முருகனின் முகம் ஏதோ அவரை கேள்வி கேட்பது போல் தெரிந்தது அவருக்கு.

“முருகைய்யா” என்று கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை அவர் பற்றிக்கொள்ள, அவரின் மனது அமைதி இழந்து காணப்பட்டது.

அதேபோல் தான் அங்கு சங்கரத்தம்மாளும் தன் பெயர்த்தி பூர்வியின் மங்கள முகத்தை பார்த்து அமைதியற்று இருந்தார்.

“இந்த வயசுலையே வாழமா இருக்கியே ராஜாத்தி” என்று கண்ணீர் உகுத்தபடி அவர் பூர்வியின் முகம் பற்ற,

“அம்மா, என்ன இது காலங்காத்தால நல்லாநா அதுவுமா அழுதுட்டு” என்று அதட்டினார் மோகினி, மாணிக்கத்தின் ஒற்றை கடைக்குட்டி மகள்.

“பாட்டீ, நீ அழுது ஒன்னும் ஆகப்போறதில்லை. எல்லாம் இவ கொழுப்பு எப்போ குறையுதோ அப்போ தான் இவ சரியாவா.” என்று பல்லை கடித்தபடி முராரியின் சொல்லுக்கு,

“அத குறைக்க தான் மனோ இருக்கானே! பாரு அவனும் பொறுமையா இருக்கான். இவ ஆடுற ஆட்டத்துக்கு எப்போ அவன் இறுக்கறானோ அப்போ இருக்க சங்கதி” என்று பூர்வியின் தலையில் நறுக்கென்று ஜாதி முல்லையை வைத்தபடி சொன்னார், மோகினி.

ஆனால் எதற்கும் மறுமொழியே இல்லாது பிடித்த பிள்ளையார் போல் அமர்ந்திருந்தவளுக்கு, அந்த பிள்ளையாரின் தோழனே இன்னும் சற்று நேரத்தில் அவளை அதிர வைப்பான் என்று சற்றும் தெரியாது தான் போனது‌.

கீர்த்தனங்கள் தொடரும்..