🖊️துளி 51👑 FINAL
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
நான்கு வருடங்களுக்குப் பிறகு….
காலை நேரச் சூரியனின் பொன்னிறக்கதிர் திரைச்சீலையையும் தாண்டி அந்த அறையினுள் நுழைந்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனை உசுப்பத் தொடங்க புரண்டுப் படுக்க எத்தனித்தவன் தன் மார்பில் பூக்குவியலாய் உறங்கிக் கொண்டிருந்த தேவதையைக் கண்டதும் அவனது இதழ்கள் புன்னகையில் வளையத் தொடங்கின.
உறக்கத்தில் களைந்த கூந்தலைச் சரி செய்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட அவள் மெதுவாக உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கினாள். அவளது தளிர்க்கரங்களால் அவன் முகத்தைத் தடவிக் கொடுக்க அந்த கரங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டபடி “அதிம்மா! எழுந்திரு பார்ப்போம்” என்றபடி அவளை எழுப்பத் தொடங்கினான் அபிமன்யூ.
அவனது தொடர்ந்த முயற்சியின் விளைவால் கண்ணைக் கசக்கிக் கொண்டு “ஏன் டாடி ஏர்லி மார்னிங்கே எழுப்புறிங்க?” என்றுச் சிணுங்கினாள் அவனது நான்கு வயது குட்டி தேவதை அதிதி.
அபிமன்யூ வழக்கம் போல மகளின் சிணுங்கலை ரசித்தபடி அவளை மடியிலமர்த்திக் கொண்டு “இன்னைக்கு அதி பாப்பாக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாமா?” என்று கேட்க அவள் கள்ளச்சிரிப்போடு “வேண்டாம்ப்பா! நம்ம டெடி வச்சு விளையாடுவோம்” என்றுச் சொல்ல அவன் செல்லமாக அவளின் நெற்றியில் முட்டியபடி அவளைக் கீழே இறக்கிவிட்டான்.
“சரி! ஆனா இப்போ இல்ல. ஈவினிங் அப்பாவும் அதி பாப்பாவும் சேர்ந்து டெடி கூட விளையாடுவாங்களாம். இப்போ அதி பாப்பா சமத்துப் பொண்ணா அப்பா கூட குளிக்க வருவாளாம்” என்றபடி மகளை டவலில் பொதிந்து கொண்டுச் சென்றான்.
அப்போது பக்கத்து அறையில் அஸ்வின் கத்தும் சத்தம் தெளிவாகக் கேட்டது. சுபத்ரா அவனைச் சமாதானம் செய்துவிட்டு கீழே செல்ல அஸ்வினை நோக்கி இடுப்பில் கைவைத்தபடி முறைத்துக் கொண்டு நின்றான் அவனது மூன்று வயது மகனான சூர்யா.
“டேய் அடம் பிடிக்காதேடா! பாட்டி சொன்ன மாதிரி நல்லப்பிள்ளையா யூனிஃபார்மை போடு” என்க அவனோ “முடியாது டாடி! நான் என்னோட ப்ளு சர்ட்டை தான் போடுவேன்” என்று அடம்பிடித்தபடி காலை தரையில் உதைத்து அழுகைக்குத் தயாரானான். அஸ்வின் அவனும் மேனகாவும் தம்பதி சமேதராய் இருக்கும் போட்டோவை முறைத்தவன் “இதுக்குலாம் நீ தான் காரணம்டி. பிள்ளைக்கு செல்லம் குடுத்து குடுத்து குட்டிச்சுவரா ஆக்கிட்ட” என்று அவளை வறுத்தெடுத்தான்.
பின்னர் மகனிடம் திரும்பியவன் “சூர்யா! அப்பாவை டென்சன் ஆக்காதடா செல்லக்குட்டி. இன்னைக்கு ஒன் டே மட்டும் யூனிஃபார்ம் போட்டுக்கோ. டுமாரோல இருந்து நீ கலர் டிரஸ்ல போகலாம்” என்று அவனை தாஜா செய்தபடி யூனிஃபார்மை மாட்டிவிட்டவன் வாய்க்குள்ளே “எல்.கே.ஜி படிக்கிற சில்வண்டுக்கெல்லாம் ஏன்டா யூனிஃபார்ம் குடுக்கிறிங்க” என்று புலம்பியபடியே அவனுக்கு யூனிஃபார்மை அணிவித்துக் கீழே அழைத்துச் சென்றான்.
அதற்குள் அபிமன்யூவும் அவன் மகளைத் தயார் செய்துவிட்டு அவனும் கண்ணாடி முன் நின்று தலை வாரியவனை நிமிர்ந்துப் பார்த்து அவன் கால்களைச் சுரண்டியவள் “டாடி நான் பண்ணுறேன்” என்று ஆசையாகச் சொல்ல அவன் மகளை டிரஸ்ஸிங் டேபிளின் மீது நிற்க வைத்துவிட்டு அவள் தலை வாருவதற்கு வாகாக முழங்காலிட்டு நிற்க அதிதி அவளுக்குத் தெரிந்த வித்தை முழுவதையும் அவன் சிகையில் காட்டி தலையை வாரி விட்டாள்.
அவள் தலையை வாரிமுடித்து “டாடி! நீங்க எப்போவும் போல இப்பிடி பண்ணுங்க” என்று அவளது தலையை கையால் சிலுப்பிவிட அது அழகான பாப் கட் என்பதால் களைந்தாலும் பழைய படி சீராகிவிட்டது. மகளின் ஆணைக்கிணங்க தந்தையும் தலையை கைகளால் சிலுப்பிக் களைத்துவிட அவனது அக்மார்க் ஹேர்ஸ்டைல் வந்துவிடவும் அதிதி அவனைக் கட்டிக் கொண்டபடி “டாடி நீங்க ஹீரோ மாதிரி இருக்கிங்க” என்றுச் சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அபிமன்யூவும் செல்ல மகளின் கன்னத்தில் முத்தமிட்டபடி அவளைத் தூக்கிக் கொண்டவன் இன்னொரு கையில் அவளது மினி ஸ்கூல் பேக்கைத் தூக்கி கொண்டபடி “அதி பாப்பா தான் டாடியோட ஹீரோயின்” என்று மகளிடம் பேசியபடி அறைக்கதவை அடைத்துவிட்டுக் கீழே இறங்கத் தொடங்கினான்.
அவனுக்கு முன் சகாதேவன், பார்த்திபனோடு அஸ்வினும் சூர்யாவும் அங்கே அமர்ந்திருக்க அதித்தியை டேபிள் மீது அமர வைத்துவிட்டுத் தந்தையிடமும் சித்தப்பாவிடமும் கட்சி விஷயங்களைப் பேசியபடி மகளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிடத் தொடங்கினான். அதிதியும் தந்தை சொல் மீறாப் பெண்ணாக அடம் பிடிக்காமல் சாப்பிட சூர்யா அஸ்வினிடம் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவும் சுபத்ராவின் கையால் சாப்பிடத் தொடங்கினான்.
அதற்குள் ஜனனியும் அவர்களுடன் இணைந்து கொள்ள அனைவரும் கலகலப்பாகப் பேசியபடி காலையுணவைச் சாப்பிடத் தொடங்கினர். சுபத்ரா மகன்களை கேலியாகப் பார்த்தவர் “இந்த உலகத்துலயே பத்து மணிக்கு மேல ஸ்கூலுக்குப் போறது நீங்க பெத்த புள்ளைங்க மட்டும் தான்டா” என்றுச் சொல்ல
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அபிமன்யூ “மா! அவங்க குழந்தைங்க. அதியாச்சும் யூ.கே.ஜி. பட் சூர்யா குட்டிக்கு இன்னும் பேச்சே திருந்தலை. அதுக்குள்ள எங்கப் பிள்ளைங்களை ஸ்கூல்ல சேர்த்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சவங்க நாங்களா? அதுக்கு காரணமானவங்களை விட்டுட்டு நீங்க எங்களைக் கிண்டல் பண்ணாதிங்க. நாங்க பத்து மணிக்கும் போவோம், பதினோரு மணிக்கும் போவோம்! இவ்ளோ ஏன் ஸ்கூலுக்குப் போகாமலே கூட இருப்போம்! இல்லடா கண்ணா?” என்று சூர்யாவின் வாயைத் துடைத்தபடி அவனிடம் கேட்க அவனும் தலையை ஆமென்று உருட்டினான்.
பார்த்திபன் மகனின் பேச்சைக் கேட்டதும் “இதை நீ அவங்க அம்மா முன்னாடி சொல்லிருக்கணும் அபி. அப்போ என் பையனும் தைரியசாலினு நான் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டிருப்பேன்” என்க அபிமன்யூ கடுப்புடன் “அவ கிட்ட எனக்கு என்ன பயம்? இன்னைக்குப் பொண்ணுக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். அது கூட அவளுக்கு நியாபகம் இருக்கோ என்னவோ? பத்து நாளா குழந்தை அம்மாவை நினைச்சு ஏங்குறா, ஆனா அம்மாக்கு பொண்ணு நியாபகமே இல்ல” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடியே அஸ்வினைப் பார்க்க அவன் நிலையும் அது தான்.
ஒரு வழியாக காலை நேர களேபரத்துக்குப் பிறகு இருவரும் குழந்தைகளைக் காரில் ஏற்றிவிட்டு அவர்களும் அமர குழந்தைகள் வழக்கம் போல “பாட்டி டாட்டா. தாத்தா சின்னதாத்தா அத்தை டாட்டா பை” என்றுக் கத்த நால்வரும் அவர்களை கையசைத்து வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் சென்றனர்.
அபிமன்யூ பள்ளியில் குழந்தைகளை இறக்கிவிடும் போது சூர்யா ஏக்கத்துடன் “பெரியப்பா ஐ மிஸ் மம்மி. இன்னைக்கு அவங்க வருவாங்களா?” என்றுக் கேட்க அவன் மனதுக்குள் கொதிநிலைக்குப் போனாலும் குழந்தையிடம் சிரித்த முகமாய் “கண்டிப்பா வருவாங்கடா செல்லக்குட்டி. அதி பாப்பா தம்பியை பத்திரமா பாத்துக்கணும். டாடி வர்றப்போ மம்மியையும், சித்தியையும் கூட்டிட்டு வருவேனாம். எங்கே ரெண்டு பேரும் கிஸ் பண்ணுங்க” என்று தன் கன்னத்தை காட்ட ஆளுக்கொரு புறம் முத்தமிட்டு விட்டு ஓட முயன்றவர்களைப் பிடித்துக் கொண்டான் அஸ்வின்.
“ஹேய் எங்கடா ஓடுறிங்க ரெண்டு பேரும்? நான் என்ன பாவம் பண்ணுனேன்? கிவ் மீ சம் ஸ்வீட் கிஸ்ஸஸ்” என்றுச் சொல்ல அவர்களும் சமத்துப்பிள்ளைகளாக முத்தமிட்டுவிட்டு இருவருக்கும் டாட்டா காண்பித்து விட்டு ஓட அபிமன்யூ கை முஷ்டி இறுக காரை அடித்தான்.
“அபி ரிலாக்ஸ்” என்று அஸ்வின் சமாதானப்படுத்த முயல அபிமன்யூ
“என்னடா ரிலாக்ஸ்? நேத்து அவ்ளோ சொல்லியும் இன்னைக்கு மார்னிங் ஆளையே காணும். குழந்தைங்களைப் பாரு. எவ்ளோ ஏங்கிப் போயிருக்காங்கன்னு? எல்லாம் நேரம்” என்றுச் சொல்லிவிட்டு மூச்சை இழுத்துவிட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
அஸ்வின் “ஓகேடா! எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். இப்போ இண்டர்வியூ குடுக்கிற டைம். சேனல்ல எல்லாரும் வெயிட்டிங்னு அப்போவே மெசேஜ் வந்துச்சு” என்றுச் சொல்ல அவன் பெருமூச்சுடன் காரை எடுத்தான். அவன் கைகள் தான் ஸ்டீரியங் வீலைப் பற்றியிருந்ததே தவிர அவன் சிந்தனை முழுவதும் நேற்றைய வாக்குவாதங்களில் தான் இருந்தது.
அவன் நிலை அவ்வாறு இருக்க அஸ்வினோ இதை எல்லாம் இலகுவாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டான். எனவே தான் என்னவோ அவனுக்கு முன் போல கோபம் வருவதில்லை. மூன்றரை வருட திருமண வாழ்க்கை அவனுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தையைக் கற்றுக் கொடுத்திருந்தது.
இவ்வாறு அலைக்கழிக்கப்பட்ட மனதுடன் சேனல் அலுவலக வளாகத்தினுள் நுழைந்தனர் இருவரும். அவர்களுக்காக காத்திருந்ததைப் போல சேனலில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் விஷ்ணு பிரகாஷ் மலர்க்கொத்துடன் இருவரையும் வரவேற்று அலுவலக அறையில் அமர வைத்துவிட்டு அவர்களிடம் அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேச ஆரம்பிக்க கதவு தட்டும் ஓசை கேட்டு “எஸ் கம் இன்” என்க புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள் பூர்வி.
“ஹலோ எவ்ரிபடி” என்றபடி வந்தவள் அனைவரையும் நோக்கிப் புன்னகைத்துவிட்டு விஷ்ணுவிடம் “விச்சு! எல்லாம் ரெடி. ஸ்டூடியோவுக்கு போயிடலாம்” என்க அபிமன்யூ மட்டும் எழுந்து கொண்டான். ஸ்டூடியோவுக்குள் நுழைந்தவனுக்கு ரகு அவனது சட்டையின் காலரின் மைக்கை மாட்டிவிட்டு அவனிடம் கேட்கப்படும் கேள்விகள் குறித்த விவரம் அடங்கிய டேபை கொடுத்துவிட்டுச் செல்ல அவன் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்கினான்.
அப்போது யாரோ வரும் அரவம் கேட்க அவனது பார்வை ஸ்டூடியோவின் வாயிலை நோக்க அங்கே கையில் டேபை ஏந்தியபடி சீராக மடித்துப் பின் குத்தப்பட்ட காட்டன் புடவையில் எளிமையில் மிளிரும் அழகுடன் வந்துச் சேர்ந்தாள் ஸ்ராவணி. வந்தவளின் பார்வை அவனை ஆராய டைரக்டர் மற்றும் கேமராமேனிடம் பேசிவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவா குத்தவா என்று பார்த்துக் கொண்டிருக்க அதே நேரம் விஷ்ணுவின் அறைக்கு அவனிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தாள் மேனகா. கதவைத் தட்டிவிட்டு நுழைந்தவள் அஸ்வினைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு விஷ்ணுவிடம் சந்தேகத்தைத் தெளிவுப்படுத்திவிட்டு அஸ்வினை கையோடு அழைத்துச் சென்றாள்.
இருவரும் நடந்து வருகையில் “என்ன சார் பயங்கரமான கோவத்துல இருக்கிங்க போல?” என்க அஸ்வின் கேலியாக “கோவமா? நானா? என்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டுனேனோ அன்னைக்கே கோவத்தை மூட்டைக் கட்டி வச்சிட்டேனே! இது ஒரு பையனோட அப்பாவா என்னோட நியாயமான ஆதங்கம். சொன்னா நீ அதை கோவம்னு சொல்லுவ. தேவையா?” என்று விரக்தியுடன் பேசிக் கொண்டுவந்தான். மேனகாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றாலும் அஸ்வினின் வாடிய முகம் அவளுக்கு வருத்தமளிக்க அவனைச் சமாதானப்படுத்த காஃபடேரியாவுக்கு அழைத்துச் சென்றாள் அவள்.
அங்கே இருந்த டிவியில் விவாத நிகழ்ச்சி ஆரம்பிக்க எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த ஸ்ராவணியும், அபிமன்யூவும் அவர்களின் பார்வையில் பட அவர்களின் கவனம் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குவிந்தது.
ஸ்ராவணி கேமராவை நோக்கிப் புன்னகைத்தபடி “வணக்கம்! இது ஜஸ்டிஸ் டுடேவின் விவாத அரங்கம்! இந்த விவாத அரங்கத்தில் இன்று ***** கட்சியின் இளைஞரணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அபிமன்யூ பார்த்திபனுடன் நான் உங்கள் ஸ்ராவணி சுப்பிரமணியம்! “என்றுச் சொல்லிவிட்டு அபிமன்யூவின் புறம் திரும்பி ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு கேள்விக்கணைகளைத் வீசத் தொடங்கினாள்.
அவனும் அவளின் கேள்வி அனைத்துக்கும் பதில்களைத் தயாராக வைத்திருக்க ஸ்ராவணி புன்னகையுடன் “கடந்த தேர்தலுக்கு முன்னாடி உங்களை பேட்டி எடுக்கிறப்போ உங்க முன்னாடி வைக்கப்பட்ட வாதம் வாரிசு அரசியல். அதை நீங்க ரொம்ப லாவகமா கையாண்டிங்க. கட்சியோட பெரிய தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில முழுக்கட்சியையும் உங்களோட கட்டுப்பாட்டுக்கு கீழே வச்சிக்கிறதுக்காக தான் நீங்க இந்த முறை தேர்தல்ல போட்டியிடலனு அரசியல் வட்டாரங்கள்ல ஒரு கருத்து நிலவுது. இதைப் பற்றி நீங்க என்ன சொல்ல நினைக்கிறிங்க?” என்றுக் கேட்க
அபிமன்யூ நிதானமாக “நான் இந்த முறை தேர்தல்ல போட்டியிடாததுக்கு முதல் காரணம் கடந்த முறை என் மேல வைக்கப்பட்ட அரசியல் அனுபவமில்லாத போட்டியாளர்ங்கிற விமர்சனம் தான். இந்த ஐந்து வருடங்கள்ல மட்டும் என்னோட அரசியல் அறிவு பெருகியிருக்கும்னு என்னால உறுதியாச் சொல்ல முடியாத காரணத்தால அந்த அனுபவ அறிவு எனக்குக் கிடைக்கிற வரைக்கும் நான் கட்சியோட சாதாரண இளைஞரணி தலைவரா மட்டுமே பொறுப்பு வகிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இது என்னோட முடிவு மட்டும் இல்ல, கட்சித் தலைமையோட முடிவும் இது தான்” என்று பிசிறின்றி அவளது கேள்விக்குப் பதிலளித்தவாறே ஸ்ராவணி அடுத்த கேள்விக்குத் தயாரானாள்.
“உங்களோட பதவிக்காலத்துல உங்க தொகுதிக்கு நீங்க செஞ்ச நலத்திட்டங்களால பயனடைஞ்சவங்க வெறும் 40 சதவீதம் பேர் தானு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. இதைப் பத்தி உங்க கருத்து என்ன?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க
அவன் “ஒரு எம்.எல்.ஏவா எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை நான் சரியான முறையில பயன்படுத்திருக்கேன் மேடம். என்னோட வரையறுக்கப்படாத நிதியிலிருந்து நான் செஞ்ச நலத்திட்டங்கள் எதுவும் அந்த 40 சதவீதத்துல அடங்காது. அது மட்டுமில்லாம மொத்த தமிழ்நாட்டிலயும் இது வெறும் 20 சதவீதம் தான். ஆனா என்னோட ஒரு தொகுதியில மட்டுமே வரையறுக்கப்பட்ட நிதியிலிருந்துச் செய்யப்பட்ட நலத்திட்டங்களால பயனடைஞ்சவங்க 40 சதவீதம் பேர்ங்கிறது எனக்குப் பெருமையான விஷயம் தான்.
நீங்க கேக்கலாம் ஏன் நூறு சதவீதமா அதைச் செய்ய முடியலனு. ஒரு சட்ட மன்ற உறுப்பினரா என்னால அதற்கான நிதியை சட்டமன்றத்துல பேசி வாங்கித் தர முடியும், ஆனா அதை மக்கள் கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கிற இடத்துல அரசு அதிகாரிகள் தான் இருக்கிறாங்க. அவங்க முழுவீச்சா செயல்பட்டிருந்தா நூறு சதவீதம் மக்களும் பயனடைஞ்சிருப்பாங்க” என்று மிகத் திறமையாக பதிலளிக்க
ஸ்ராவணி கேலியாக “ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறி மாறி பழி சுமத்திக்கிறதால பாதிக்கப்படுறது என்னவோ பொது மக்கள் தானே சார்?” என்க அவன் அதற்கும் பதிலளிக்க வழக்கம் போல இவர்களின் விவாத நிகழ்ச்சி அனைவருக்கும் பார்ப்பதற்கு ஒரு வார்த்தைப் போர் போலவே தோற்றமளித்தது.
காஃபடேரியா டிவியில் இதை பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் “எனக்கு என்னமோ இவங்க சொந்தப் பிரச்சனையை மனசுல வச்சிட்டுப் பேசுற மாதிரியே இருக்கு” என்று தன்னுடையச் சந்தேகத்தை வெளியிட
மேனகா தலையைச் சிலுப்பி அதை மறுத்தவளாக “நோ வே! என்னோட வனி பெர்சனல் லைஃபையும் புரஃபசனல் லைஃபையும் ஒன்னாப் போட்டுக் குழப்பிக்கிற ஆள் இல்ல. உங்க எக்ஸ் எம்.எல்.ஏ என்ன வேலை பண்ணி வச்சிருக்கிறாரோ?” என்று அஸ்வினைக் கேலி செய்தாள் பதிலுக்கு.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஒரு வழியாக விவாத நிகழ்ச்சி முடிந்து அபிமன்யூவும் ஸ்ராவணியும் ஸ்டூடியோவை விட்டு வெளியே வர அபிமன்யூ ஸ்ராவணியிடம் “அதி ஸ்கூல்ல இன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங். உன்னால அதுக்காச்சும் வர முடியுமா? இல்ல எப்போவும் போல வர முடியாதுங்கிறதுக்கு எதாச்சும் காரணம் வச்சிருக்கியா?” என்று குற்றம் சாட்டும் குரலில் கேட்க அந்த குரல் ஸ்ராவணியைச் சீண்டிவிட்டதில் அவள் பொங்கி விட்டாள்.
“நான் ஒன்னும் வராம அவாய்ட் பண்ண ரீசன் கண்டுபிடிக்கல அபி. நீ ஏன் எப்போவும் என் கிட்ட குத்தம் கண்டுபிடிக்கிறதையே வழக்கமா வச்சிருக்க?”
“நான் குத்தம் கண்டுபிடிக்கிறேனா? ஏய் உனக்கு ஒரு பெண்குழந்தை இருக்குங்கிற நியாயபகம் இருக்கா இல்லையா? எப்போவும் போல இன்னைக்கும் அவளை நான் தான் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனேன். சூர்யா வாய் விட்டு அவங்க அம்மாவை மிஸ் பண்ணுறேனு சொன்னான். ஆனா என்னோட அதி பாவம், அவ கண்ணுல அவ உன்னை எவ்ளோ மிஸ் பண்ணுறானு தெரியுது. ஆனா வாய் விட்டு ஒரு வார்த்தை கேக்கல”
“இப்போ என்ன சொல்ல வர்ற? என் பொண்ணு மேல எனக்கு அக்கறை இல்லன்னா? உனக்கே தெரியும் இந்த டென் டேய்ஸ்ல எனக்கு எவ்ளோ ஒர்க் பர்டன் இருந்துச்சுனு. ஆனா நீ புரிஞ்சுக்க மாட்ட. நானே நினைச்சாலும் இதுக்கு மேல நான் இங்க கண்டினியூ பண்ண சீஃப் அலோ பண்ண மாட்டாரு. இது என்னோட ஃபைனல் இண்டர்வியூ. அதை பெஸ்டா குடுக்கணும்னு நினைச்சு தான் இந்த டென் டேய்ஸ் நான் ஹார்ட் ஒர்க் பண்ணுனேன். ஒரு பத்து நாள் உன்னால குழந்தையைப் பார்த்துக்க முடியாதா அபி?”
“லிசன் வனி எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. இது ஒன்னும் ஃபர்ஸ்ட் டைம் இல்ல நீ இப்பிடி நடந்துக்கிறது”
“இன்னும் நான் என்ன செய்யணும் மிஸ்டர் அபிமன்யூ? உனக்காக தான் எனக்குப் பிடிச்ச இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசமை ஒதுக்கிட்டு நான் ஆங்கரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். முன்ன மாதிரி நான் நேரம் காலம் இல்லாம வேலை வேலைனு சுத்தல. எட்டு மணி நேர வேலையை நான் முழு மனசோட செய்யணும்னு நினைச்சேன். அது தப்பா? நல்லா கேட்டுக்கோ நீ ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சாலும் சரி. உன்னோட காரணம் இல்லாத கோவத்தை நான் சட்டைப் பண்ணவே போறது இல்ல” என்றுச் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவள் புடவையின் கொசுவம் தடுக்கி கீழே விழப் போக அதற்குள் அவளை வேகமாக ஓடிச் சென்று தன் கைகளில் தாங்கிக் கொண்டான் அபிமன்யூ.
அவளை நேராக நிறுத்திவிட்டு “பார்த்துப் போடி. இங்க இருக்கிறது என்னோட பையன். அவனைப் பத்திரமா பெத்துக் குடுக்கணும்கிற ஐடியா இருக்கா இல்லையா?” என்றுச் சொல்லிவிட்டு அவளது மேடிட்ட வயிற்றைப் பாசத்துடன் தடவிக் கொடுக்க
ஸ்ராவணி கிண்டலாக “அடேங்கப்பா! பிள்ளை மேல எவ்ளோ பாசம்! அதுல கொஞ்சமாச்சும் பொண்டாட்டி மேலயும் வைங்க” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேனகாவும் அஸ்வினும் காஃபடேரியாவிலிருந்து திரும்பி விட்டிருந்தனர்.
மேனகா ஸ்ராவணியைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டபடி “கலக்கிட்ட வனி. உன்னோட அடுத்த புரோகிராமுக்காம இன்னும் ஏழு மாசம் வெயிட் பண்ணனுமா?” என்று பெருமூச்சுடன் உரைக்க அஸ்வின் “அட்லீஸ்ட் இப்போவாச்சும் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். நீ எதுக்கு இருக்க? அவங்க வேலையையும் சேர்த்து உன் கிட்ட வாங்கச் சொல்லி நான் உன் சீஃப் கிட்டச் சொல்லிட்டுப் போறேன்” என்று கேலி செய்தபடி அவளின் கண்ணாடியை சரியாக மாட்டிவிட்டான்.
அந்த நேரம் பார்த்து விஷ்ணுவும் வந்துவிட அஸ்வின் அதை அவனிடம் சொல்ல “மேகியை பத்தி உங்களுக்குச் சரியா தெரியல. அவளால முடியாத விஷயமே இல்ல” என்று சொல்ல மேனகா இல்லாத காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டாள்
விஷ்ணு ஸ்ராவணியிடம் வந்தவன் “மை டியர் ஸ்டார் ரிப்போர்ட்டர்! இன்னும் ஏழு மாசத்துக்கு ரொம்ப கஷ்டப்படுத்திக்காம ரெஸ்ட் எடு. பையன் பிறந்ததும் அபி சார் கிட்ட குடுத்துட்டு ஆபிஸ்க்கு வந்துடு” என்றுச் சொல்ல அவள் “போங்க சீஃப். நான் ஹெல்தியா தான் இருக்கேன். நீங்க தான் நான் கட்டாயம் லீவ் எடுத்தே ஆகணும்னு சொல்லிட்டிங்க” என்க விஷ்ணு பரிதாபமாக அனுராதாவுடன் பேசிக் கொண்டிருந்த பூர்வியைக் காட்டினான்.
ஸ்ராவணி “இது எல்லாத்துக்கும் மதர் இந்தியா தான் காரணமா?” என்று வாய்விட்டுப் புலம்ப பூர்வியும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்தாள்.
அபிமன்யூவிடம் “அப்புறம் சார் எங்க வனியை கவனமா பார்த்துக்குங்க. உங்க லிட்டில் மாஸ்டர் பிறந்ததும் அவ எங்க ஆபிஸ்ல இருக்கணும்” என்று செல்லமாக மிரட்ட அவன் சிரித்தபடி தலையாட்டினான்.
பின்னர் “இன்னைக்குப் பசங்களுக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு.வீ ஹேவ் டு கோ” என்றுச் சொல்ல இரண்டாவது பிரசவத்துக்காக ஏழுமாத விடுப்பில் செல்லும் ஸ்ராவணியை அந்த அலுவலகமே சேர்ந்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தது.
ஸ்ராவணி செல்வதற்கு முன் சுலைகாவிடம் “இன்னைக்கு ஈவினிங் கொஞ்சம் வா சுகா. உன் கிட்ட சில மேட்டர்ஸ் டிஸ்கஸ் பண்ணனும்” என்றுச் சொல்லிவிட்டு அனுராதாவையும் ரகுவையும் பார்த்து “டேய் சீக்கிரமா ஒரு நல்ல நாளா பாருங்கடா. நான் வேணும்னா வேற ஜோசியர் நம்பர் தர்றேன்” என்று அவர்களின் திருமண தேதி அறிவிப்பு தள்ளி போவதைச் சுட்டிக் காட்டிவிட்டு அவர்களுக்கு டாட்டா காண்பித்து விட்டு காரில் அமர அவளுடன் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் மேனகா.
அஸ்வின் காரை தானே ஓட்டுவதாகச் சொல்ல அபிமன்யூ முன் இருக்கையில் இருந்தபடி ஸ்ராவணியைத் திரும்பி பார்த்தபடி அவளின் கையைப் பிடிக்க வர அவள் “டோன்ட் டச் மீ. தொட்டனு வையேன் கொன்னுடுவேன். என்ன பேச்சு பேசுன நீ? கடைசில பையன் நியாபகம் வந்ததும் சார் சமாதானம் ஆயிட்டாராம். போடா” என்க
அபிமன்யூ “சாரி வனிம்மா! நான் ஏதோ டென்சன்ல பேசிட்டேன்” என்று காதைப் பிடித்து மன்னிப்பு கேட்க அஸ்வின் தலையிலடித்தபடி “டேய் மானத்தை வாங்காதடா! கெத்தை மெயிண்டெயின் பண்ணு” என்றுச் சொல்லிவிட்டு சாலையில் கண் பதித்தான்.
மேனகா கேலியாக “ஆமா! இவரு என் கிட்ட பேசுறப்போ கெத்து மெயிண்டெயின் பண்ணுவாருல அந்த மாதிரி ப்ரோ” என்று அவன் காலை வாரிவிட அவர்களின் கலகலப்பான உரையாடல் முடியும் போது பள்ளியும் வந்துவிட்டது.
பள்ளியில் இறங்கியவர்கள் நேரே பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று அதில் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேர மீட்டிங்குக்கு பிறகு அவரவர் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியர்களிடம் அவர்களின் பிராகிரஸ் கார்டை வாங்கிக் கொள்ளுமாறு கூற மேனகா அஸ்வினுடன் எல்.கே.ஜிக்கு செல்ல ஸ்ராவணியும் அபிமன்யூவும் அதிதியின் யூ.கே.ஜி வகுப்பை நோக்கிச் சென்றனர்.
சூர்யா மேனகாவைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொள்ள அவனது செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்று அஸ்வின் அவன் வகுப்பாசிரியையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அதன் பின் பள்ளிநேரம் முடிந்துவிட்டதால் சூரியாவையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு வெளியேறினர் இருவரும்.
அதே நேரம் அதிதியின் வகுப்பில் அவளது கார்டில் அவளது செயல்பாடுகள் அனைத்தும் ‘ஓ’ கிரேட் வாங்கியிருக்க நேரம் தவறாமையில் மட்டும் அவளது கிரேட் அதளபாதாலத்தில் இருந்தது. அதன் காரணத்தை புரிந்து கொண்டவள் வகுப்பாசிரியையிடம் இனி இவ்வாறு நடக்காது என்றுச் சொல்லிவிட்டு மகளை கணவன் வசம் ஒப்படைத்துவிட்டு நடந்தாள் ஸ்ராவணி.
அங்கே ஏற்கெனவே மேனகாவிடம் அஸ்வின் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.
“அப்போ நீ தான் அவன் கிட்ட யூனிஃபார்ம் வேண்டானு சொல்லி அந்த புளூ சேர்ட்டை போட சொன்னியா?” என்றவனுக்கு ஆமாம் என்று பதிலுறுத்தவள் மகனைக் கொஞ்ச அஸ்வின் கடுப்புடன் “நீ செல்லம் குடுத்து குடுத்து அவன் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறான் மேகி” என்றுச் சொல்ல அவளும் சூரியாவும் அவனை சிரிக்க வைக்க முயன்றனர்.
அதே நேரம் ஸ்ராவணி கடுப்புடன் “பத்து நாள் டைமுக்கு குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர முடியல. பார்த்தியா அவ பிராகிரஸ் கார்ட்ல பங்சுவாலிட்டி சுத்தமா இல்லனு போட்டுருக்காங்க” என்று அபிமன்யூவை கடிந்து கொள்ள அவனோ அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அதிதியிடம் விளையாடிக் கொண்டிருந்தான்.
“அதிம்மா! நீ போய் சித்தி கூட கார்ல உக்காரு” என்றுச் சொல்லி மகளுக்கு முத்தமிட்டு விட்டு கணவனின் புறம் திரும்பினாள் ஸ்ராவணி. அவன் ஸ்டைலாக தலையைச் சிலுப்பி விடவே அவள் “ஆமா ஒரு பிள்ளைக்கு அப்பா ஆயாச்சு. ஆனா இந்த ஸ்டைலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்றாள் கடுப்புடன்.
அபிமன்யூ இலகுவாக “சில் வனி! ஏன் டென்சன் ஆகுற? இவ்ளோ கோவப்பட்டா என் பையனும் கோவக்காரனா தான் பிறப்பான்” என்க அவள் கடுப்புடன் அவன் தலையைக் கலைத்துவிட்டாள்.
“சரி அதை விடு! உண்மையா நீ ஏன் எலக்சன்ல நிக்கல?” என்றுக் கேட்ட ஸ்ராவணியை கூரியவிழிகளால் அளவிட்டவன் “என்ன பண்ணுறதும்மா? அஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு என் கிட்ட ‘டேய் உன்னை நாற்காலியில உக்கார விடாம பண்ண தான் நான் பிறந்துருக்கேனு’ சொல்லுச்சு. என் நேரம் நான் அவளையே கல்யாணமும் பண்ணி அவளை மாதிரி இன்னொரு குட்டி தேவதைக்கு அப்பாவும் ஆயிட்டேன். மறுபடி எலக்சன்ல நின்னு குடும்பம், குழந்தை, பொண்டாட்டியை மிஸ் பண்ண நான் விரும்பல” என்றுச் சொல்ல ஸ்ராவணி மறுப்பாக தலையசைத்தாள்.
“நீ நல்லா சமாளிக்கிற. உன்னோட லாங் டேர்ம் பாலிட்டிக்ஸ்காக நீ ஒரு தடவை எலக்சன்ல நிக்கிறதை தியாகம் பண்ணியிருக்க! அவ்ளோ தான். கட்சியை உன் கைக்குள்ள கொண்டு வர தானே இந்த பிளான்” என்றாள் அவனுள் இருக்கும் அரசியல்வாதியின் திட்டங்களைப் புரிந்து கொண்டவளாக.
அபிமன்யூ அவளைத் தோளோடு அணைத்தபடி “நீ இவ்ளோ புத்திசாலியா பிறந்திருக்க வேண்டாம்” என்றுச் சொல்ல அவளோ “நீயும் இவ்ளோ கேடி பொலிடீசியனா இருந்திருக்க வேண்டாம்” என்றபடி அவனுடன் நடந்தாள்.
அதற்குள் சூரியா அங்கே மேனகாவிடம் “மார்னிங் தான் பெரியப்பா சொன்னாங்க! நாங்க எங்க இஷ்டத்துக்கு ஸ்கூலுக்கு வரலாம்னு” என்றுச் சொல்லிக் கொண்டிருக்க அது தவறாமல் ஸ்ராவணியின் காதில் விழுந்து அவள் அபிமன்யூவை செல்லமாக முறைத்தபடி அவர்கள் அருகில் சென்றாள்.
சூரியாவிடம் குனிந்தவள் “இன்னும் என்னடா சொன்னாரு உங்க பெரியப்பா?” என்க அவன் “பெரியம்மா…” என்று ஆரம்பிக்கும் போதே இதற்கு மேல் ஸ்ராவணியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது என்று உணர்ந்த அபிமன்யூ அவனைத் தூக்கிக் காரில் அமரவைத்துவிட்டான். சூரியா காருக்குள் இருந்தபடி அதிதியுடன் சேர்ந்து “வீட்டுக்கு வாங்க! பெரியப்பா சொன்ன எல்லாத்தையும் சொல்லுறேன் பெரியம்மா” என்க ஸ்ராவணி, அபிமன்யூவோடு சேர்ந்து அஸ்வினும் சத்தமாக நகைத்தனர்.
அபிமன்யூ அஸ்வினிடம் “டேய் அச்சு! உன் சீமந்தப்புத்திரனால எனக்கு ரெண்டாவது தடவையும் டிவோர்ஸ் ஆயிடும் போல” என்க ஸ்ராவணி அவன் முதுகில் செல்லமாக வைக்க நால்வரும் சிரித்தபடியே காரில் அமர்ந்து வீட்டை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த வாழ்க்கைப் பயணம் இன்னும் இனிய நினைவுகளோடும், செல்லச் சண்டைகளோடும், மென்மையான மோதல்களோடும், என்றும் தீரா காதலோடும் அழகாகத் தொடரும்….
முடிவுற்றது!